கற்றல் என்பது தாயின் கருவறையிலிருக்கும் போது இருந்தே ஆரம்பித்து விடுகிறது. வயிற்றில் இருக்கும் போதே குழந்தை சத்தங்களை உணர்ந்து கொள்கிறது.
திருமணம் செய்து குடும்பம் என்று ஆனவுடன் கணவன், குழந்தைகள் என்று அவர்களுக்காக வாழ்ந்த அம்மா, அவர்களுக்கு எல்லாம் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்துவிட்ட பின் தன்னைக் கொஞ்சம் பார்க்க ஆரம்பிக்கிறாள். குழந்தைகள் எல்லாம் இப்போது பக்கத்தில் வைத்துக் கொள்ள முடியாத காலச்சூழ்நிலை. முதலில் அதை அம்மா ஏற்றுக் கொள்கிறாள். குழந்தைகளை நாம் பார்க்க முடியாதே, நமக்கு உடம்புக்கு ஏதாவது வந்தால் உடனே வந்து பார்க்க முடியாதே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்காமல் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் நன்றாக வாழவேண்டும், நம் பாசத்தால் அவர்களைக் கட்டிப் போடக்கூடாது என்பதில் இப்போது உள்ள தாய்மார்கள் உறுதியாக இருக்கிறார்கள். நாம் நன்றாக இருந்தால் தாம் தூரத்தில் இருக்கும் நம் குழந்தைகள் நிம்மதியாக வேலைப்பார்க்கலாம், அவர்களுக்கு நிம்மதியைக் கொடுக்க தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள் (மாற்றி யோசி) . தங்களை சுறு சுறுப்பாய் வைத்துக் கொள்ள ஏதாவது படிக்க ஆசைப்படுகிறார்கள். முன்பு படிக்க முடியாமல் போனதைப் படிக்கிறார்கள். எந்த வயதிலும் படிக்கலாம், மனம் இருந்தால் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்கள்.
நம்மிடம் கற்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எல்லாம் முடியும் என்ற தன்னம்பிக்கை வருகிறது. கற்கும் ஆசை உள்ள தாய்மார்களுக்கு குருவாக குழந்தைகள், பேரன், பேத்திகள் சொல்லித்தரத்தயாராய் இருக்கிறார்கள். இவர்களிடம் என்ன படிப்பது என்று எண்ணத்தை தள்ளி வைத்துவிட்டு மாணாக்கர்களாய் சேர்ந்து நிறையக் கற்றுக் கொள்கிறார்கள்.முதலில் கணினி இயக்க கற்றுக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் மிக அவசியமான தேவைகளில் கணினிப் படிப்பும் ஒன்று என்று ஆகி விட்டது. வெளி நாட்டில், வெளியூரில் வாழும் குழந்தைகளை முதலில் நேரில் பார்த்துப் பேச, அவர்கள் நம்மைப் பார்க்க, கணினி இன்றியமையாத தேவை ஆகிறது. பிறரை எதிர்பார்த்துக் கொண்டு இருக்காமல் தாமே கற்றுக்கொண்டு அதை இயக்கி அவர்களுடன் உரையாடுகிறார்கள்.
இப்போது யாரும் கடிதம் எழுதுவது இல்லை. ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுத வீட்டு முகவரி வாங்கிக் கொண்ட காலம் மாறி, உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள் என்று கேட்டு வாங்கும் காலம் ஆகி விட்டது. அதனால் நமக்கு என்று மின்னஞ்சல் முகவரி வைத்துக் கொண்டு வீட்டுப்பண்டிகைகளில் எடுத்த படங்கள், உறவினர் வீடுகளுக்கு சென்று வந்தபோது அவர்களுடன் எடுத்த படங்கள் என்று தங்கள் பிள்ளைகளுடன் பகிரும் போது அவர்களுக்கும் உறவினர்களிடம் உள்ள நெருக்கம் அதிகமாவதை உணர்கிறார்கள். இதை உண்மை என உணர்த்தும் அம்பாளடியாள் எழுதிய கவிதை
உறவெல்லாம் வலைத்தளத்தில்
ஒளிந்திருக்கு ஆச்சி இனிமேல்
உனக்கும் தான் இது தேவைப்படும்
ஒவ்வொன்றாய்க் கற்றுக் கொள்ளு ஆச்சி !.....
மலருக்கு கலியாணம் அது
நடந்திடுச்சு ஆச்சி இப்போ
மணமக்களின் புகைப்படத்தை
இப்படிப் பார்க்க வேண்டும் ஆச்சி
மருமகனின் பெயரோடு உன்
பேத்தி பெயரைச் சேர்த்து
முகப் புத்தகக் கணக்கினுள்ளே
அந்த முகவரியைத் தேடு
நட்புக்கு அழைப்பொன்று
நீ கொடுத்தால் போதும்
நாங்கள் எல்லாம் அவர்களுடன்
நின்ற படம் தோன்றும் !....
மறக்காமல் லைக்கு மட்டும்
போட்டு விடு ஆச்சி அதையே
மற்ற எங்கள் சொந்தங்களுக்கும்
நீயே கற்றுக் கொடு ஆச்சி...........!!!//
http://rupika-rupika.blogspot. com/ ஆச்சிக்கு பேத்தி கற்றுக் கொடுத்து ஆச்சி தன் சொந்தங்களை இணையத்தில் பார்த்து மகிழப் பேத்தி சொல்லித் தருகிறாள். மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கச் சொல்கிறாள். கருத்து சொல்ல நேரம் இல்லாமல் லைக் மட்டும் போட்டுவிட்டு ஓடும் காலத்தை அழகாய் தன் கவிதையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
சமீப காலமாய் பெண்களின் திறமைகளை வெளிக் கொண்டுவவரப் பத்திரிக்கைகள் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு பெண்களுக்கு போட்டிகள் எல்லாம்
நடத்துகிறார்கள் வயது வித்தியாசம் இன்றி கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டுகிறார்கள். வயதானவர்கள் கூட ,ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். வினாடி வினாவிற்கு பதில் சொல்கிறார்கள். வெற்றி கீரிடம் அணிந்து கொள்கிறார்கள். எல்லாத்
துறையிலும் இப்போது முதியவர்களும் வெற்றிக் கொடி நாட்டுகிறார்கள். வயதானவர்களுக்கு எப்போதெல்லாம் சாதிக்கும் கனவு வருகிறதோ அப்போதெல்லாம் முடித்துக் காட்டுகிறார்கள். அதற்கு அவர்களின் முயற்சியே கை கொடுக்கிறது. முதுமையை நினைத்து மூலையில் ஒதுங்காமல் தன்னாலும் முடியும் என்று சாதித்துக் காட்டுகிறார்கள். இணைய வழி நிறைய கற்றுக் கொள்கிறார்கள். எல்லாத் துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள் . பத்திரிக்கை, தொலைக்காட்சி முதலியவற்றில் சாதனைப் பெண்களின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்படுகிறது. அவர்கள் எப்படி சாதித்தார்கள் என்பதை எல்லாம் அறியும்போது பெண்களுக்குத் தன்னம்பிக்கையும் உற்சாகமும் ஏற்படுகிறது.
வயதானவர்கள் நிறைய எழுதுகிறார்கள், இணையத்தில். வயது ஆக ஆக ”மெமரி லாஸ் ” பிரச்சனை வரும் என்கிறார்கள் மருத்துவர்கள் அதற்கு நிறைய புத்தகங்கள் படிக்கச் சொல்கிறார்கள். நாளைடைவில் இந்த பிரச்சனை சரியாகி விடும் என்கிறார்கள் அதற்கு இணையம் கை கொடுக்கும், அவர்களுடம் பேச ஆள் இல்லை என்றால் அதற்கு இணையம் ஒரு நல்ல துணை. ஏதாவது கதை,கட்டுரை தன் வாழ்க்கையில் கிடைத்த அனுபவம், தனக்குத் தெரிந்த சமையல் கலை, தையல் கலை, மற்றும் தனக்குப் பிடித்த புத்தகங்கள், சினிமா விமர்சனம் , பயணக்கட்டுரை எல்லாம் எழுதுகிறார்கள். அதைப் படித்து கருத்து சொல்பவர்கள் நண்பர்கள் ஆகிறார்கள். பாராட்டு ஒரு நல்ல டானிக். அது அவர்களை நாள் முழுவதும் உற்சாகத்தோடும் மனபலத்தோடும் வாழவைக்கும் மருந்து ஆகிறது. மெமரி லாஸும் போய் சிறு வயது நினைவுகள் எல்லாம் வருகிறது. பலருடன் தன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்வாய் இருக்கிறார்கள். நண்பர்களிடமிருந்து நாள்தோறும் ஏதாவது புதிதாய்க் கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். தன் உடல் குறையையே எப்போதும் கூறிக் கொண்டு இருக்காமல் குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார்கள், தனக்கு தெரிந்த கைவைத்தியம், உடலோம்பல் முறைகள் எல்லாம் எல்லோருக்கும் சொல்கிறார்கள். பிறர் சொல்வதைக் கேட்கிறார்கள்.
இப்போது உடல் ஆரோக்கியத்திலும் விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது பெண்களிடம். வீட்டில் எல்லாம் இயந்திரமயமாய் போய் விட்டதால் உடல் உழைப்பு அதிகம் இல்லை. பயன்படுத்தபடாதபொருள் துருபிடித்து போவது போல் நம் உடலுக்கு ஏற்ற அசைவுகள் இல்லாத போது அந்த உறுப்புகளில் ஒரு இறுக்கம் ஏற்பட்டு அங்கு இரத்தஓட்டம், வெப்பஓட்டம், காற்றோட்டம் குறைகிறது. வலி ஏற்படுகிறது அந்த வலி நாளைடைவில் பெரிதாகி வியாதியாக மாறுகிறது மருத்துவரிடம் போனால் எலும்பு தேய்மானம் என்கிறார். உடற்பயிற்சிகள் செய்யுங்கள் என்கிறார். அதனால் இப்போது எளிய முறை உடல் பயிற்சிகள், உடலுக்கும், மனதை நன்றாக வைத்துக் கொள்ள தியானமும் கற்றுக் கொள்கிறார்கள்.
பயிற்சிகள் உடலை ஆரோக்கியமாய் வைக்கிறது நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது. ஒரு செயலை கவனத்துடன் செய்யும் போது அதை நாம் மறப்பது இல்லை மனம் ஒன்றாமல் செய்யும் செயல் நம் நினைவில் நிற்பது இல்லை..உடற்பயிற்சிகள் செய்யும் போதும் தியானம் செய்யும் போதும் கவனத்துடன் செய்கிறோம் மனம் அதில் ஒன்றும் போது நலம்பல விளைகிறது. எந்த வேலை செய்தாலும் அதில் முழுமனசோட இருந்தால்
அதில் வெற்றியும் மகிழ்ச்சியும் வந்து சேரும் என்பத நன்கு உணர்ந்து வருகிறார்கள்.சிந்தனை ஒருமுகப்படும் போது மன இறுக்கங்கள் மறைந்து எந்தவேலை எடுத்துக் கொண்டாலும் சிறப்பாக செய்ய முடிகிறது.
தான் கற்றதை அதனால கிடைத்த நன்மைகளை பிறருக்கு சொல்லும் போது அவர்களும் பயன் பெறுகிறார்கள். நாம் சொல்லி அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியுடன் தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்கு பயிற்றுவைக்கும் ஆசிரியர்களாய் மாறுகிறார்கள். தோற்றத்தில் இளமையாக இருக்க வேண்டும் என்பதைவிட மனதில் இளமையாக இருக்கவேண்டும். இளமையாக இருக்க வேண்டும் என்றால் நாள்தோறும் ஏதாவது புதிதாக கற்க வேண்டும், அல்லது கேட்க வேண்டும்.அது வாழ்கையை நல்லபடியாக நடத்தி செல்ல உதவும்.நல்ல மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சி அலைகளை பரப்பிவரும் பெண்களே எல்லோராலும் விரும்பபடுகிறார்கள். இந்தக்கலாத்தில் பொன்நகை அணிந்து போகாமல் புன்னகை அணிந்து போவது மிகவும் நல்லது என்பதையும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் பெண்கள்.
கடந்து போனகாலம் இனி மறுபடியும் வாராது இருக்கும் கணங்கள் தான் நமக்கு முக்கியம் இதை நழுவ விடாமல் நாள்தோறும் நம்மை புதுபித்துக் கொள்ளலாம். கற்றலும், கேட்டலும் நம் வாழ்வை வளம் பெறச் செய்யும் முதுமைத் துன்பம், உடல் துன்பம் எதுவும் இருக்காது. முதுமையிலும் இன்பம் காணலாம்.
சித்திரை முதல் நாளில் ’ பண்புடன் ’ இணைய இதழுக்காக நான் எழுதிய கட்டுரை.
நன்றி சிறப்பாசிரியர் முத்துலெட்சுமி.
பண்புடன்
சித்திரை முதல் நாளில் ’ பண்புடன் ’ இணைய இதழுக்காக நான் எழுதிய கட்டுரை.
நன்றி சிறப்பாசிரியர் முத்துலெட்சுமி.
பண்புடன்