Quantcast
Channel: திருமதி பக்கங்கள்
Viewing all 789 articles
Browse latest View live

மன்னன் மாளிகை மண்மேடு ஆனாலும் !

$
0
0

                             

இது  மன்னர் இராஜேந்திர சோழன் மாளிகை இருந்த இடம் !
"மாளிகைமேடு "என்று இந்த இடத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

மன்னன் ராஜேந்திரன் சோழன் இருந்த மாளிகை  மண்ணாகிப் போனபின் அதை ’மாளிகைமேடு’ என்று இப்போது அழைக்கிறார்கள். கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து  2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு போய் இருந்தோம்.

            அருள்மிகு பிரகதீஸ்வரர்ஆலயம், கங்கைகொண்ட சோழபுரம். 

மன்னனின் மாளிகை மண்மேடு ஆனாலும் மகேசனின் வீடு காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாக மன்னன் புகழ்பாடுதே! 

மன்னர்கள், தன் மாளிகையைவிட மகேசன் வீட்டை அப்படி அழகாய் அற்புதமாய் காலத்தால் அழிக்கமுடியாதபடி கட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.  அவற்றைப் பராமரிக்க நிலங்கள், அளித்திருக்கிறார்கள். அந்நியப்படையெடுப்புகளால் சீர் குலைந்தாலும் இன்றும் மன்னரின் பெருமையைப் பேசிக் கொண்டு இருக்கிறது கோவில்.

இப்போது மன்னன் ராஜேந்திரன் அரியணை ஏறிய நாளை விழாவாக கொண்டாடினார்கள். எல்லோரும் அதைப்பற்றி எழுதி விட்டார்கள்.

நாங்கள் ஜனவரி 1ம் தேதி கங்கைகொண்டசோழபுரம் போவது என்று வைத்துக் கொண்டு ஆண்டுதோறும் போய் வருவோம்.அப்படி உறவுகளுடனும், நட்புகளுடனும் கங்கை கொண்டசோழபுரம் சென்றதைப் பற்றி  என் மலரும் நினைவுகளைப் பற்றி  கொஞ்சம்  பகிர்கிறேன். 

 நாங்கள் கார் வாங்குவதற்கு முன்பு  மாயவரத்திலிருந்து இரும்புலிகுறிச்சி செல்லும் பேருந்தில் கங்கைகொண்டசோழபுரம் போவோம். காலை 8.30க்கு கிளம்பினால் 9.30க்கு கங்கை கொண்டசோழபுரம் போகும். காலை உணவை கையில் எடுத்துக் கொள்வோம்.  அங்கு போய் சாமி தரிசனம் ஆனபின் உணவை முடித்துக் கொண்டு மீண்டும் 12.30க்கு   இரும்புலிகுறிச்சிப் பேருந்து திரும்பி வரும்போது அதில் ஏறி  மாயவரம் வந்து விடுவோம்.

மகன் எங்களுடன் வந்தாலும், அடிக்கடி தன் நண்பர்களுடன் சென்றுவருவார். பக்கத்து வீட்டுக்குழந்தைகள், அவர்களுடன் உடன் படிப்பவர்கள் எல்லாம்  எங்களுடன் கங்கைகொண்டசோழபுரத்திற்கு வருவார்கள். மகிழ்ச்சியான குதூகலமான காலம் அவை. இப்போது அவர்கள் எல்லாம் வெளிநாட்டிலும், வெளியூரிலும் இருக்கிறார்கள். ஜனவரி 1ம் தேதி போன் செய்து வாழ்த்து சொல்லிவிட்டு,  சேர்ந்து கங்கைகொண்டசோழபுரம் போன நினைவுகளை பேசுவார்கள். "மறுபடியும் நாம் சேர்ந்து ஒரு நாள் அங்கு போவோம்"என்பார்கள். 

அப்போது  எல்லாம் கோவிலின் மேல்தளத்திற்குப் போய்ப் பார்க்கலாம். ஒரு நபருக்கு இவ்வளவு(இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன்) என்று கட்டணம்  உண்டு.  அழைத்துச் செல்ல கோவில் சிப்பந்தி உண்டு அவர் நம்மை மேல்தளத்திற்கு அழைத்துச் சென்று காட்டுவார்.  கோவிலின் உள் வாசல் பக்கத்தில் படிகள் இருக்கும். சதுரம் சதுரமாய் உயர உயரமாய் படிகள் இருக்கும். அதில் ஏறி மேல்தளத்திற்குச் சென்றால், அதன் சேதமுற்றிருந்த தரைப்பகுதியின் வழியாக, கீழே கருவறையில் உள்ள பிரகதீஸ்வரர் திருவுருவத்தின் உச்சிப் பகுதி தெரியும்.  

மொட்டைக்கோபுர வாசலில் உள்ள  படிவழியாக அதன் மேல்தளம் எல்லாம் பார்க்க அனுமதி உண்டு. இப்போது அதற்கு கம்பிகேட் போட்டு மூடி விட்டார்கள் .மேல்தள அனுமதி இல்லை.  

கீழே ஸ்வாமி இருக்கும் கருவறையைச்  சுற்றி ஒரு சிறிய பிரகாரம் உள்ளது. அங்கு ஒரே இருட்டாக இருக்கும்.முன்பெல்லாம் சுற்றி வரலாம். அழைத்து செல்லும் பணியாள்  டார்ச் வெளிச்சத்தில் அழைத்து செல்வார், அப்போது சிறிது நேரம் அந்த விளக்கை அணைத்து விட்டுச் சொன்னார்,"இருட்டு எப்படி இருக்கிறது? பிரளய காலத்தில் எங்கும் இருட்டு இப்படித்தான் இருந்ததாம் அதை உணர்த்தவே விளக்கு எதுவும் போடவில்லை"என்பார். 

இப்போது அங்கு விளக்குகள் போட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இப்போது பிரதோஷ காலம், மற்றும் விழாக்கள், ஜனவரி 1ம் தேதி ஆகிய் நேரங்களில் மட்டும் தான்  உள் பிரகாரம் சுற்றி வரலாம். மற்ற நாட்கள் கிடையாது அடைத்து வைத்து இருப்பார்கள், பாதுகாப்பு கருதி. இலிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் வைத்து இருப்பதால் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் மிதவெப்பத்தையும் கொடுக்கும் என்றும் சொன்னார். அதை உணர முடியும்.

இப்போது உணவைக் கொண்டுபோய் சாப்பிடவும் கூடாது.  மக்கள் கூட்டம் அதிகமாய் வர வர கட்டுப்பாடுகள் அதிகமாய் இருக்கிறது.  மக்கள் அங்குள்ள பெரிய கிணற்றில்  குப்பைகளைப் போட்டு விடுகிறார்கள் அதை முன்பு ஒரு பதிவில் படம் எடுத்துப் போட்டு இருக்கிறேன்.சாப்பிட்டு விட்டு  அவற்றையும் சுத்தம் செய்யாமல் அப்படி அப்படியே போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள் அதனால் இப்போது அதற்கு தடை.  இப்போது கோவில் வளாகம் சுத்தமாய் இருக்கிறது. புற்களையும் செடி கொடிகளையும் வளர்த்துப் பராமரிக்கிறார்கள். குருக்களிடம் சொல்லி விளக்கு போடச் சொல்லிப் பார்த்தால்தான் லிங்கத்திற்கு மேலே கங்கை நீர், செம்புப் பாத்திரத்திலிருந்து சொட்டு ச்சொட்டாய் விழுவது தெரியும். அல்லது தீபாராதனை நேரம் உற்றுப்பார்க்க வேண்டும்


மாளிகை மேட்டில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிற்பங்களை  கம்பி தடுப்புக்குள் வைத்து இருக்கிறார்கள். அருங்காட்சியத்திலும் சிலவற்றை வைத்து இருக்கிறார்கள். பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் அருங்காட்சியகம் இருக்கிறது. அரசு விடுமுறை நாள் எல்லாம் இதற்கும் விடுமுறை. வேலை நாள் போனால் தான் அருங்காட்சியகம் பார்க்க முடியும்.
விஷ்ணு
நடராஜர்,  சிவகாமி அன்னையால் தன்னைப் போல ஆடமுடியாது என்று சிரிப்பது போல் இல்லை?
அஷ்டபுஜதுர்க்கை
தவறு செய்பவர்களுக்கு என் காலுக்கு அடியில் இருப்பவன் கதிதான் என்று கைவிரலை  கீழ் நோக்கி காட்டுகிறார் இறைவன்.
பிரம்மா, தன் துணைவிகளுடன்
சரஸ்வதி  தாமரை மலரில்.
எதிர்ப் பக்கம் லட்சுமி  தாமரை மலரில்அமைத்து உள்ளார்கள்.
பைரவர்- கீழ்ப்பீடம் முடிவடையவில்லை
வெளிப்புறத்தில் நடைபாதையின் இருமருங்கிலும் மரங்களும் புற்களும் அழகுறப் பராமரிக்கப்படுகின்றன.

முன் மண்டபத்தில் இறைவன் இல்லா சந்நிதி - அதன்பின் புறம் பெரிய விநாயகர் இருக்கும்  சந்நிதி.
ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு புறா -எனக்கும் இங்கு இடம் உண்டு என்று சொல்கிறது.
போரிடும் வீரர்கள்- சிற்பம்
மேலே உள்ள படம் -புதிப்பிப்பதற்கு முன் இருந்த தோற்றம்
கீழே உள்ள படம் -புதுப்பித்த பின் இப்போது உள்ள தோற்றம்

ஸ்வாமி சந்நிதிக்கு ஏறும் படிக்கு மேலே தெரியும் மேல் விதானத்தில் அழகிய வேலைப்பாட்டில் பிள்ளையார்
அம்மன்  - பெரிய நாயகி சந்நிதி


தலவிருட்சம் வன்னி அதன் வளைந்த  கிளையில் முன்பு குழந்தைகள் ஊஞ்சல் ஆடுவார்கள்., இப்போது அந்த கிளைக்குமுட்டுக் கொடுத்து அதில் விளையாட முடியாதபடி முட்கள் சுற்றி உள்ளார்கள். புன்னை மரமும் தலவிருட்சம் என்கிறார்கள். சண்டேஸ்வரர் சந்நதி பக்கம் அந்த மரம் இருக்கிறது.

முருகன்- மயில் வாகனத்தில், பிள்ளையார் -தன் மூஞ்சூறு வாகனத்தில்

கோபுரத்தின் பக்கவாட்டில் இருக்கும் தெருப்பக்கத்தில் இருந்து எடுத்தபடம்

        
மொட்டைக் கோபுர மேல்தளம் செல்லும் படிக்கட்டுகள்-  எதிர்புறப் படியிலிருந்து எடுக்கப்பட்ட படம் .அங்கும் படிகள் உண்டு.

இப்போது கம்பிக் கதவு போட்டுப்பூட்டிவிட்டார்கள்.
ஸ்வாமி சந்நிதி செல்ல இருபக்கமும் துவாரபாலகர் இருக்கும் அழகிய வாசல்படி     
நாவல் மரத்தில் உள்ள  நாவல் கனியை முதலைமேல் அமர்ந்து பறிக்கும் குரங்கு. குரங்கும், முதலையும்  கதை தெரியும் தானே !  எல்லோருக்கும்.

வானுயர்ந்த கோபுரமும் தட்சிணாமூர்த்தியும்


மரம் செடிகள் இடையே கோபுரக் காட்சி
இறைவனின் ஆனந்த நடனம்

எங்கு இருந்து படம் எடுத்தாலும் அலுக்காத கோபுர தரிசனம்

பழைய படங்கள் -பின்பு வருகின்றன. 

                                                         கோபுர மேல்தளம்

                                      உள்  கோபுர மேல்தளம் செல்லும் படிகளில்
                                   
                                               கோபுரத்தின் மேல் தளம்
                                 கோபுர மேல்தளத்திலிருந்து எடுத்த படம்

                                      மொட்டை கோபுரத்தின் மேல் தளம்

கோவிலுக்கு செல்லும் மக்களை ஆசீர்வாதம் செய்ய வந்திருக்கும் யானையார்



பல வருடங்கள்  கங்கைகொண்ட சோழபுரம் சென்ற போது எடுத்த  படங்களை இங்கு பகிர்ந்து உள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும் போதும் வெவ்வெறு தோற்றத்தில் மனதை வசப்படுத்தும் கோவில். மனதுக்கு உற்சாகம் தரும் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
                           நந்தி அருகில் உள்ள நாகலிங்கமரத்தில் நாகலிங்கப்பூ.

நாம் இந்த பூவை மனதால் இறைவனுக்கு சமர்ப்பித்து இறைவனின் அருளைப் பெற்று வாழ்வில் எல்லா நலங்களும் பெற்று வாழ்வோம்.

                                                      வாழ்க வளமுடன்
                                                           ----------------------

காட்டுமன்னார்குடி வீரநாராயணப்பெருமாள்

$
0
0
ஜுலை 5ம் தேதி(5/7/2014) நாங்கள் காட்டுமன்னார்குடியில் இருக்கும் வீரநாராயணப்பெருமாள் கோவிலுக்குச்  சென்றிருந்தோம். 

வீரநாரயணபுர சதுர்வேதிமங்கலமென்று கல்வெட்டுகளில் உள்ளது.  வீரநாராயணன் என்ற விருது பேர்பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26 கி. மீ தூரத்தில் இருக்கிறது. 
காட்டுமன்னர்கோவில் அருகில் வீராணம் ஏரி இருக்கிறது.

முன்பு இது வீரநாராயண ஏரி என்று குறிப்பிடப்பட்டது. சரித்திரப் புகழ்பெற்ற நாவல்  அமரர் கல்கி எழுதிய  'பொன்னியின் செல்வன்’ நாவலில்  இந்த ஏரி குறிப்பிடப்படும். ஆடி, ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியில் நீர் நிரம்பி ததும்பி இருக்கும் என்று இந்த ஏரியைப்பற்றி அதில் வரும்.

//ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறி பிரயாணம் செய்து கொண்டிருந்தான்// 

என்று வரும். இந்த கதையைப் படித்தவர்கள்  அந்தவாலிப  வீரர் பேரை சொல்லுங்களேன் !

நாங்கள் வீரநாராயணப் பெருமாள் கோவில் போனபோது ,  ஆனி மாத 10 நாள் திருவிழா கோவிலில் நடந்து கொண்டு இருந்தது. 

இந்தக்கோயிலில்,

பெருமாள் பெயர்-வீரநாராயணப்பெருமாள்,
உற்சவர்-                 ஸ்ரீ ராஜகோபாலன் சுந்தரகோபாலன், ஸ்ரீனிவாசர்.
தாயார் -                   மஹாலக்ஷ்மி, மரகதவல்லி.
தீர்த்தம்-                  வேதபுஷ்கரணி, காவேரி நதி
தலவிருட்சம்-       நந்தியாவட்டை.

கோவில் விஷேசம்:-

 ஸ்ரீமத் நாதமுனிகள் ,அவரது பேரர் யமுனைத்துறைவர் என்று அழைக்கப்பட்ட  ஸ்ரீ ஆளவந்தார் ஆகிய இருவரும் அவதாரம் செய்த  தலம் இது. 


(ஸ்ரீமதநாதமுனிகள் திருவரசுஎன்று நாதமுனிகளைப்பற்றியும் , அவர் பேரர் ஸ்ரீ ஆளவந்தார் பற்றியும் எழுதி இருக்கிறேன் முன்பு.)

”லக்ஷ்மி நாத சமாரம்பாம்” என்ற தனியன் ஏற்பட்ட ஸ்தலம் என்பார்கள்

நாங்கள் சென்றிருந்த சமயம் ஸ்ரீமத் நாதமுனிகளுக்கு அபிஷேக ஆராதனை விழா நடந்து கொண்டு இருந்தது. திவ்யபிரபந்தம் பாடி முடிந்தவுடன் பூஜை ஆனது.  பின் தயிர்சாதம்  பிரசாதமாய் கொடுத்தார்கள்.

அதன்பின்தான் பூட்டி இருந்த வீரநாராயணப் பெருமாள் சந்நதியைத் திறந்து காட்டினார்கள். ”பூஜை பார்த்துவிட்டு போகிறீர்களா? அல்லது ஆரத்தி மட்டும் போதுமா” என்று பட்டர் கேட்டார்கள். நாங்கள் அடுத்து திருநாரையூர் போக வேண்டி இருந்ததால் ஆரத்தி. சடாரி, தீர்த்தம், துளசி பெற்றுக்கொண்டோம்.
பெருமாள் சன்னதியின் வலது புறம் யோக நரசிம்மர் இருக்கிறார். அவரையும் தரிசித்து  வந்தோம்.

              முதலில் அருள்மிகு அனுக்கிரஹ ஆஞ்சநேயர் சன்னதி.


அனுமன்,  எதிரில்இருக்கும்  பெருமாளைத் தரிசனம் செய்து கொண்டு இருக்கிறார்.

இறைநம்பிக்கை எனும் துடுப்பைக் கொண்டு வாழ்க்கைப் படகை நடத்திச் செல்லலாம் என்று  உணர்த்தும் வண்ணம் காட்சி அளிக்கிறது -தெப்பக்குளத்தில் உள்ள படகு.

தாரகம் என்றால் கடத்துவிப்பது, படகிலே வைத்து ஓட்டிக் கொண்டு போய் அக்கரை சேர்ப்பது என்று அர்த்தம்.ப்ரணவத்தையும், ராமநாமாவையும் தாரகமந்திரம் என்று சொல்வது வழக்கம். “தாரகநாமா” என்று தியாகராஜர்கூட ராமசந்திர மூர்த்தியை தாபத்தோடு பாடியிருக்கிறார்.ஸம்சாரக்கடலில் விழுந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிற நம்மைப் படகிலே தூக்கிப் போட்டுக்கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் தாரக மந்திரம்.
அருள்வாக்கு:-
----ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள்.


10 நாள் திருவிழாவில் ஒருநாள் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு

                                              பெருமாள் கோபுர தரிசனம்


                                              கொடிமரமும் கருடாழ்வார் சன்னதியும்


                                                   பெருமாள் சன்னதி விமானம்

கோவில் பற்றிய கல்வெட்டும், அருகில் ராமர் சீதையும் அனுமனும் உள்ளனர் , எதிரில் ராமர் சன்னதி உள்ளது.
ஸ்ரீமதங்க மகரிஷி சன்னதி

ஸ்ரீ விஷ்ணு பாதம்
பெருமாளும் ஸ்ரீமதங்க மகரிஷியும் , பின்புறம்  பெருமாளும், ஆண்டாளும்

ஆண்டாள் சன்னதி விமானம்
ஸ்ரீஆண்டாள்அருளிசெய்த திருப்பாவை- ஆண்டாள் சன்னதியில்
ஸ்ரீ மதங்கமகரிஷி நேர் எதிரே அழகிய தூண்களுட்ன் கூடிய தீர்த்தக்கிணறு
தாயார் சன்னதி
தாயார் சன்னதியில்  நல்ல கருத்து உள்ள  வாசகம்
தாயார் சன்னதி விமானம்
 , முன் மண்டபம் அபிஷேக மண்டபம்.  பின்புறம் ஸ்ரீ ஆளவந்தார் சன்னதி

ஸ்ரீமத் நாதமுனிகள் சன்னதி விமானம்

நைவேத்தியத்துக்கு நித்தியபடி கட்டளைக்காரர் பற்றிய குறிப்புள்ள கல்வெட்டு


                                      பெருமாள் எழுந்தருளும் பல்லாக்கு.

பின்வரும் படங்கள் விஜய் தொலைக்காட்சியில் ’தரிசனம் காணவாருங்கள்’ என்ற நிகழ்ச்சியில் காட்டுமன்னார்குடி பற்றி வைத்தபோது டிவியிலிருந்து எடுத்த படங்கள், இந்த பதிவில் பகிரலாம் என்று எடுக்கப்பட்டது, நன்றி  விஜய் தொலைக்காட்சிக்கு. 

ஸ்ரீராஜகோபாலன்
ஸ்ரீராஜகோபாலன் மஹாலக்ஷ்மி, மரகதவல்லி
ஸ்ரீமத் நாதமுனிகள், ஆளவந்தார்

அலங்கார தோற்றம்

அலங்கார பூஜை  நாதமுனிகளுக்கும், ஆளவந்தாருக்கும்
அலங்காரத்தில் சுந்தரகோபாலனாகக் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

வாழ்க வளமுடன்.
---------------------------------

வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்.

$
0
0
ஆடித்திருநாள்  நாளை  ஊர் மக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் நம் பகுதிக்கு வருமா? ( என்று மக்கள் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். மக்கள் கவலைப்பட்டது போலவே மயிலாடுதுறைக்குத் தண்ணீர் வரவில்லை. ஆடி மாதத்தில் காவேரி அன்னையை வணங்க முடியவில்லையே! என்று வருந்திக்கொண்டு  இருந்தவர்களுக்கு. காவேரி முழுக்குத் துறையில் செயற்கைக் குட்டை செய்து அதில் மக்கள் விழா கொண்டாடினார்கள் என்று செய்தியில் சொன்னார்கள்.
 நாங்கள் புகழ்பெற்ற வீரநாராயண ஏரியை(வீராணம்) பார்க்கப்போய் விட்டோம்.


எங்கள் ஊர் காவேரி,- தண்ணீர் இல்லை- தண்ணீர் வரவை எதிர்பார்த்து நிற்கிறது இரு கரையும்.

மாரியம்மன் கோவில் பக்தர்கள் மஞ்சளாடை அணிந்து அங்குள்ள அடிகுழாயில் தீர்த்தம்   எடுக்க வந்திருக்கிறார்கள். காவேரியில் நீர் இருந்தால் அதில் எடுத்துச்சென்றிருப்பார்கள்..

திரு இந்தளூர் பெருமாள் வந்து திருமஞ்சனம் ஆடும் மண்டபம்.
ஆடிப்பெருக்கிற்கு ஆற்றிற்கு செல்ல  சிறு தேர் செய்யும் சிறுவர்கள்.
கொள்ளிடத்தில் நீர் வரப்போவதால் அதைத் தூர்வாருகிறார்கள்.
அணக்கரை செல்லும் வழியில் உள்ள கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு விட்டது
காடுமாதிரி புதர் மண்டிவிட்டதால்  இயந்திரம்தான் விரைவாகச் சுத்தம் செய்யும், மனிதனை விட

அணைக்கரை (கீழ்அணைக்கட்டு)
கொஞ்சமாகப் போகும் தண்ணீரில் மக்கள் பூஜை செய்கிறார்கள்
வழியெல்லாம் ஆட்டை வெட்டிக் கொண்டு இருந்தார்கள், மக்கள் வாங்கிப் போய்க் கொண்டு இருந்தார்கள். இங்கு ஒரு ஆடு  மக்களுடன் நோன்பு கும்பிடுகிறது. அது அடுத்த நோன்புக்கு இருக்குமோ என்னவோ!
அணைக்கரைப் பாலத்தின்  அருகில் வாகனங்கள் நிறைய நிற்கிறது. விழாக் கடைகள் போட்டு இருக்கிறார்கள்
வீராணம் மதகடியில் ஆடிப்பெருக்குக்குப் படைக்க வந்த பெண்கள் கூட்டம். ”அதோ பாருடி நம்மைப் படம் எடுக்கிறார்கள் , எங்கள் படம் நாளை பேப்பரில் வருமா ?” என்று கேட்டார்கள், என்னிடம்  மலர்ந்த  முகத்துடன் இந்தப் பெண்கள்.என் சிறிய காமிராவைப் பார்த்தே இப்படிக் கேட்கிறார்களே, வெள்ளை உள்ளம் கொண்ட இந்தப் பெண்கள்!

கண்ணுக்கு இமைபோன்ற கண்ணாளன் கண்களில் தூசியா? விரைந்து போக்கும் அன்புக் கைகள்.(ஏரிக்கரையோரம் கிடைத்த பொக்கிஷம்)
வீரநாராயண ஏரி(வீராணம் ஏரி) அணைக்கட்டுக்குச் செல்லும் வழி இன்று திறந்து இருக்கும். தண்ணீர் திறந்துவிடும்போது பூட்டி விடுவார்கள் என்றார்கள்.



அணைக்கட்டிலிருந்து எடுத்த ஏரியின் காட்சி
 பூஜையை முடித்து விட்டு  அணைக்கட்டைப் பார்க்க வரும் மக்கள்.

கல்யாணமாலையை ஏரியில் விடும் பெண்ணும் மாப்பிள்ளையும்
கல்யாணமாலை
இந்த அம்மாதான் காப்பரிசி, வெல்லம் கலந்த அவல்பொரி கொடுத்தார்கள் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டார்கள் நாங்கள் மயிலாடுதுறையிலிருந்து வருகிறோம் என்றவுடன் ஏரி பார்க்க வாந்தீர்களா? நான் சின்னபிள்ளையாக இருக்கும் போது ஏரியின் உச்சி வரை தண்ணீர் இருக்கும் நாங்கள் மேலே நின்றே படைத்து விட்டுப் போவோம் என்றார்கள்.  
அவர்கள் கொடுத்த காவேரி அன்னைக்குப் படைத்த பிரசாதம்

வீரநாராயண ஏரியில்  படகு விடும் காட்சியைப் பார்த்தால்  கோடிக்கரை பூங்குழலி நினைவுக்கு வருதா?  

அலைகடல் போல் விரிந்து பரந்த வீரநாராயண ஏரியக் காணொளி எடுத்தேன் ஆனால் அது இங்கு ஏறமாட்டேன்  என்று அடம் பிடிக்கிறது. இன்னொரு நாள் அதற்கு மனசு வரும் போது இங்கு உங்கள் பார்வைக்கு வரும்.
கீழே உள்ள வேதா அவர்களின் ஓவியத்தில் உள்ளதுபோல் பறவைகள் கறுப்பாய்ப் பறக்கிறதா? (ஏரிக்கரையில் பறவைகளின்  குதுகலம் அடுத்த பதிவில் வரும்.)

வெள்ளை நுரையுடன் அலை அடிக்கிறது
ஆசையே அலை போல ! நாம் எல்லாம் அதன்மேலே - ஓடம் போல
வீராண குழாய்கள்- ஆனால் இது புதுக் குழாயாக இருக்கிறது. பழையது மிக பெரிதாக இருக்கும். அதன் உள்ளே  வீடு இல்லாதவர்கள் குடித்தனம் நடத்தினர் என்று வரும்.

 கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில்  காவேரி ஆற்றையும் அதன் கரைகளின் அழகையும், நாட்டின் செழிப்பையும் சொல்கிறார். எல்லோரும் படித்து இருப்பீர்கள், மறுபடி படிக்க வசதியாக பொன்னியின் செல்வன் கதை மீண்டும் கல்கியில்  வருகிறது.  ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை ப்பொழுதில் தொடங்குகிறது கதை அதற்கு பொருத்தமாய்  3/8/2014 முதல் வந்துவிட்டது..

கல்கி அவர்களின் அழகான கற்பனை:-

ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரர் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீரச் சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச்சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியதேவன் என்பது அவன் பெயர்.நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக் களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த வீரநாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருக்கிறது.

ஆடிப் பதினெட்டாம்பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும் தொட்டுக் கொண்டு  ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பி கரையில்  உச்சியைதொட்டுக் கொண்டு அலை மோதிக் கொண்டிருப்பது  வழக்கம்
.
                 

ஓவியர் வேதாவின் கைவண்ணத்தில் வீரநாராயண ஏரிக்கு ஆடிக்குப் படைக்க வரும் பெண்கள் , ஆண்கள், சிறுவர்கள்
பூஜை சாமான்களை மூடி எடுத்து வரும் பெண்கள், சிறுதேர் உருட்டி வரும் சிறுவர்கள்,  பறவைகள் பறந்து வரும் அழகு!

வந்தியதேவன்  குதிரையில் போய்கொண்டே ரசித்த காட்சி:-

// அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து , தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக்கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும், பெண்களும் குழந்தைகளும், வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து வித விதமான அலங்காரங்கள்  செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, இருவாட்சி, செண்பகம், முதலிய மலர்கள் கொத்து கொத்தாய் அலங்கரித்தன். கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில்  தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு , சித்திரான்னம் முதலியவற்றைக்கமுகு மட்டையில் போட்டுக்கொண்டு உண்டார்கள்.இன்னும் சில தயிரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளை கணவாய்களின்   ஓரமாக  எறிய, மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக் கரைக்கு வெளியே விழுந்தடித்து  ஓடி வருவதைக் கண்டு கைகொட்டி சிரித்தார்கள்.ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களைஅவர்கள் அறியாமல் கணவாய் ஓரத்தில்விட்டு ஏரிக்கரைக்கு மறுபக்கத்தில் அவை ஓடிவருவதை கண்டு மகிழ்ந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிதுநேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப்பாட்டும் கும்மியும், சிந்தும் பாடினார்கள்.

வடவாறு பொங்கி வருது
வந்து பாருங்கள்
வெள்ளாறு விரைந்து வருது
வேடிக்கைபாருங்கள் தோழியரே!
காவேரி புரண்டு வருது
காணவாருங்கள், பாங்கியரே!”

என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத் தேவன் செவிகளில்  இன்ப வெள்ளமாக பாய்ந்தன.//


//வட காவேரி என்று பக்தர்களாலும், கொள்ளிடம் என்று பொதுமக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீரநாராயணஏரியில்  பாய்ந்து அதை பொங்கும் கடலாக ஆக்கி இருக்கிறது.அந்த ஏரியின் எழுபத்து நான்கு  கண்வாய்களின் வழியாகவும் தண்ணீர் குமு குமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்திற்கு நீர் வளத்தை  அளித்துக் கொண்டிருந்தது.//

இப்படி அந்த காலத்தில் நீர்வளம் நன்றாக இருந்து வளப்படுத்தியதாகச் சொல்கிறார் கல்கி. நீர்வளம் குறைவாக மழை தப்பி போனாலும் ஏரியின் நீர் பாசனம் வளத்தை அள்ளி தந்திருக்கிறது இந்த ஊருக்கு.

காட்டுமன்னர்குடி வீரநாராயணபெருமாள்பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம்.

போனமாதம் வீரநாராயணபுரம் சென்ற போது  எடுத்த படங்கள் பின் வருவன

காலைவேளையில் வயல்வெளி, கதிரவன் வரவுக்கு முன் புல்மேல் பனித்துளி
                                               பாதைகளுக்கு மரக்கூடாரம்

இரு பக்க மரமும் சேர்ந்து பாதைக்குக் கூடாரம் அமைக்கிறது

வீரநாரயாணப்பெருமாள் கோவில் பிரகாரத்தில் மதிலுக்கு  அப்பால்  குலை குலையாய்க் காய்த்துத் தொங்கும் மாங்கனி
மலர்கள் பூத்துக்குலுங்கும் காட்சி. வசந்த காலம் வந்து விட்டது என்று சொல்கிறது.மரங்களில் தேனிக்களின் கூடு நிறைய இருந்தது. காரில் போய்க் கொண்டிருக்கும்போது சிலவற்றை எடுக்கமுடியவில்லை. மயில்கள் அடர்ந்த மரக் கூட்டத்தின் நடுவே இருந்து அகவியது அதின் நீண்ட தோகையை மட்டும் காட்டி மறைந்தது. 
 வந்தியதேவன் குதிரையில் வீரநாராயண ஏரிக்கரையின் மேல் ஏரியின் அழகை  ரசித்துக்கொண்டு சென்றதுபோல் நாங்கள் அவ்வழியில் காரில் ரசித்துக்கொண்டே சென்றோம். கட்டுரை அடுத்த பதிவில் தொடரும்.

                                                      வாழ்க வளமுடன்.
                                                                 ----------------

வீரநாராயண ஏரியும் பறவைகளும்

$
0
0
ஆடிப்பெருக்குக்கு நாங்கள் வீரநாராயணபுர ஏரிக்குச் சென்றோம்.அங்கு  செல்ல கொள்ளிட ஆற்றின் தெற்கு ”லைன் கரை” வழியாக சென்றபோது இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே சென்றோம். இருபுறமும் அழகான மரம்,செடிகொடிகள்  இருந்தன.  கீழே இறங்கிப்  படம் எடுக்க முடியாது. பாதை மிகவும் குறுகலாக இருந்தது. பாதையின் ஒருபுறம் கொள்ளிடம்; இன்னொரு புறம் கொள்ளிட வாய்க்கால். எதிரில்  வேறு வாகனம் வந்தால் ஒதுங்க இடம் கிடையாது. 15கி.மீ தூரத்திற்கு அணைக்கரை வரை இப்படியாக பாதை இருந்தது.   
                     ஒருபுறம் கொள்ளிடம் வாய்க்கால் தூர் வாரப்படுகிறது.
                                                       மறுபுறம் கொள்ளிடம் 



 அப்படி இந்த பாதையில் போகும் போது என் கணவர், "அந்த பனைமரத்தை பார் !"என்றார்கள் பார்த்தால் அழகாய் தூக்கணாங்குருவி கூடு நிறைய தொங்கிக் கொண்டு இருந்தது. "கொஞ்சம் நிறுத்துங்களேன், கொஞ்சம் போட்டோ எடுத்துக் கொள்கிறேன்"என்றேன். "சீக்கிரம் எடு! கீழே இறங்காமல்.  எதிரில் வண்டி வருமுன் இந்த பாதையை கடக்க வேண்டும்"என்று அவர்கள் அவசரத்தில் இருந்தார்கள். அவசரம் அவசரமாய் போட்டோ எடுத்தேன். காற்றில் கூடுகள் பறந்து கொண்டே (ஊஞ்சல் ஆடுவது போல்) இருந்தது. போட்டோ எடுப்பது சிரமமாய் இருந்தது. குருவியும்  இந்த மரத்தில் இருந்தால் என்று நினைக்கும் போது ஒரு குருவி கூட்டிலிருந்து வேகமாய் பறந்து வந்து பனைமரத்தின் உச்சிக் கிளையில் நுனியில் அமர்ந்தது. அதுவும் காற்றில் ஊஞ்சல்  ஆடியது.


இந்தபடத்தில் முதலில் இருக்கும்கூடு முடியும் தருவாயில் உள்ளது. அடுத்தகூடு ஒரு அறை முடிந்து இருக்கிறது , அடுத்தகூடு இரண்டாவது அறைகட்டிக் கொண்டு இருக்கிறது.

பச்சைப்புற்களால் கட்டிய கூடு - இரண்டு வாசல் போல் இரண்டு துவாரம் இருக்கிறது பாருங்கள்.    அறைகள் வைத்து கட்டுகிறது போலும் தோற்றத்தை கொடுத்தாலும் ஒரு அறையில் முட்டையும் மற்றொரு அறை கூட்டுக்குள் போகும் பாதை.என்ன அழகாய் கட்டிக் கொண்டு இருக்கிறது! கடைசியில் நீண்ட குழாய் போன்ற அமைப்புடன் முடிகிறது கூட்டின் வாயில், பிற உயிரினங்களிடமிருந்து தன் குஞ்சை காப்பாற்ற அதற்கு அறிவை கொடுத்து இருக்கிறார் கடவுள். எதிரிகளை கண்டு அச்சம் அடைவதால் அவை கூட்டமாக அருகருகே  கூடுகள் கட்டிக் கொண்டு வாழுமாம்.

காய்ந்த கூடு மஞ்சளாக இருக்கிறது.  பனைமரத்தில் காய்க்காத மரம் பார்த்துக் கூடு கட்டும் போல இருக்கிறது.  இதில் காய்களே இல்லை.  மரத்தைப் பின்னிப் படர்ந்து இருக்கிறது ஒரு கொடி.

                               
கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மூங்கில் மரத்திலும் தூக்கணாங்குருவிக் கூடு இருந்தது . கார் போய்க் கொண்டு இருக்கும் போது எடுத்தது . காற்றில் ஆடுகிறது மரம்.
                                            
முக்குளிப்பான் என்று சொல்லப்படும் பறவை முக்குளிக்கும் அழகை பாருங்கள். வீராணம் ஏரியில்.
வீரநாராயண ஏரியில் நீரின் அலைகள்   கடல்அலைகள் போல்  கரையில் வந்து மோதும் காட்சி,  -பறவைகளின் கூட்டம்.
                                          முக்குளிப்பான் பறவைகள்


எல்லோரும் சேர்ந்து செல்லும்போது நீ மட்டும் ஏன் தனியா போறே கண்ணம்மா ?

நாரையும் தன் கூட்டத்தை விட்டு வந்த காரணம் கேட்கப் போனாயா கண்ணம்மா? 
நாரைகள் அங்குள்ள மரங்களிலும் புற்களிலும் ஆற்றிலும் நிறைய அமர்ந்து இருந்தன.
அணைக்கரை செல்லும் சாலையில் வித்தியாசமான பறவை எதையோ கொத்திக் கொண்டு இருந்தது , கொஞ்சம் சிறு கோழிக் குஞ்சு போல் இருந்தது . என்ன பறவை என்று  இணையத்தில் கூகுளாரிடம் கேட்டால் அது,"தாமிரக் கோழி என்ற பறவை. நீர் நிலைகளில் இருக்கும்."என்று சொல்லியது.  எப்படியோ கோழி மாதிரி இருக்கு  என்று சரியாக யோசித்து இருக்கோம் இருவரும்.  தாமிரக் கோழி நீர்நிலையை விட்டு சாலைக்கு வந்து ஏதோ சாப்பிட்டது.  பின் எங்கள் கார் சத்தம் கேட்டு குடு குடு என்று ஓடிப் புதர்களில் மறைந்து விட்டது .
ஆட்டின் மேல் இளைப்பாறும் கருங்குருவி
மாட்டின் மேல் இளைப்பாறும் கருங்குருவி. ஆடும், மாடும் முகம் காட்டவில்லை என்று நினைக்கிறீகளா? நீ இந்த பதிவில் பறவைகள்  மட்டும்தான் போடுகிறாய் நாங்கள் என்னத்துக்கு என்று சொல்லிவிட்டன.

ஆடும் மாடும் காரில் போகும் போது கார் ஜன்னல் வழியாக எடுக்கப்பட்டது  கீழே குனிந்து மேய்ந்து கொண்டு இருக்கின்றன.அதனால் முகம் தெரியவில்லை.

ரசித்தீர்களா?-வீரநாராயண ஏரிக்குச் செல்லும் பாதையில் உள்ள பறவைகளை.

 'கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு விழா'- அடுத்தபதிவில்.
                                            
                                                                  வாழ்க வளமுடன்.
                                                                            -------------



கொள்ளிடக்கரையில்(வல்லம்படுகை) ஆடிப்பெருக்கு விழா

$
0
0
இயற்கையைப் போற்றி வணங்குதல் நன்மைதரும். இதை  உணர்ந்த மக்கள் காலம் காலமாய்ப் போற்றி வந்திருக்கிறார்கள். இயற்கையைக் கடவுளாக நினைத்த நம் முன்னோர்கள் ஆறு, குளம், ஏரி, கிணறு ஆகிய நீர்நிலைகளையும்  வணங்கினர். இப்போது நீர்வளங்களைத் தரும் ஆறு, குளம், ஏரி, கிணறு எல்லாம் வற்றி வருகின்றன.  அதனால்  ஆடிப்பெருக்குப் பண்டிகை கொண்டாடுவதில் பழைய உற்சாகம் இல்லை என்றாலும் ஆடிப்பெருவிழா  ஆங்காங்கு நடைபெற்று வருகிறது.    ஆடிப்பெருக்கு விழாவைக் கொள்ளிடக்கரையில் கொண்டாடியதைப் பார்த்து எழுதிய பதிவு இது.

கொள்ளிடக்கரையில் (வல்லம்படுகை) ஆடிப்பெருக்கு விழாவைப்  பார்க்க போனோம். கொள்ளிடம் பாலம் விழா கோலம் பூண்டு இருந்தது. தென்னை ஓலை, குறுத்தோலை, கலர் பேப்பர்களால் அலங்காரம் என்று  பாலம், கார்கள், பஸ்கள், வேன்கள் என ஜே ஜே என்று  இருந்தது.


கொள்ளிடக்கரை போகும் வழி எல்லாம் கடைகள்  இருந்தன,
ஆற்றுக்குப் போகும் பாதையில் வரவேற்புக்கு வாழைமரத்தோரண வாயில்
குழந்தைகளுக்குப் பலூன் 
ஆலமரத்தின் நிழலில் குடைராட்டினம் 

பலூன், ஐஸ்கிரீம், பழங்கள் , (வரலக்ஷ்மி பூஜைக்கு) முறம் விற்பவர்கள்.
எங்கும் குதூகலம்! கோலாகலம்!
பூஜைப் பொருட்கள், கறுப்பு, சிவப்புக்கயிறுகள்  விற்பனை
மாங்காய், தேங்காய்  பட்டாணி சுண்டல் , கொண்டைக்கடலை சுண்டல்
அழகிய  பீங்கான் பொம்மைகள், ஜாடிகள், பூத்தட்டு ,சின்ன உரல்  என்று விற்பனைப் பொருட்கள்
குல்பி ஐஸ்
போகும் வழி எங்கும் வேப்பமரம்- சித்ரான்னங்களை அங்கு வைத்து சாப்பிடுகிறார்கள்
பஞ்சுமிட்டாய்  
ஆற்றுக்குப் படைக்கவருபவர்களை ஆசீர்வாதம் செய்ய மினி வேனில் வந்த தச்சக்குள மாரியம்மன்.
எல்லோரும் மங்கலமாக இருக்கவும், ஊர் செழிக்கவும் மழை வேண்டியும் வேண்டிக் கொண்டோம்.
ஆற்று மண் எடுத்து காவேரி அம்மனாக பிடித்து வைத்து  காப்பரிசி, மாவிளக்கு, கனிவகைகள், காதோலை, கருவளையல், மஞ்சள் கயிறு, பூக்கள் வைத்து வழிபடுகிறார்கள்.
வழிபட்டபின் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறுகள் கட்டிக் கொள்கிறார்கள்.
படைத்து  ஆற்றில் விட்ட காசு  போன்ற பொருட்களை எடுக்கும் சிறுவர்கள் 
தூரத்தில் கொள்ளிடம் ரயில் பாலம்

இன்னொரு புறம் -கொள்ளிடம்    சாலைப்போக்குவரத்துப்  பாலம்

புனிதநீராடும் பக்தர்கள், 

அந்தக்காலத்தில் ஆடிப்பெருக்கு சமயத்தில் நீர் நிலைகளில் தண்ணீர் நிறைந்து காணப்படும் . மரங்கள் செடிகள் எல்லாம் பூத்துக்குலுங்கும்.  சிறியவர்கள், பெரியவர்கள் எல்லாம் மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடி மகிழ்வார்கள் . ஆற்றில், அருவியில் குளித்தால் நல்ல பசி எடுக்கும் . அப்போது கொண்டுவந்திருக்கும் கட்டுசாதம், சித்ரான்னங்களை குடும்பத்துடனும் நட்புகளுடனும் சாப்பிட்டுக் களித்து இருப்பர். ஆடி மாதம் நல்ல காற்று வீசி உடலுக்கும், உள்ளத்திற்கும் மகிழ்ச்சி அளிக்கும்.  

 ஆனால் இப்போது மரங்கள் குறைந்து மழை குறைந்து வளம் குன்றிக் காணப்படுகிறது.  ”ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்” என்பார்கள். இப்போது இருக்கும் கொஞ்சநஞ்ச மரங்களும் அசையவேமாட்டேன் என்கிறது . ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் காற்று வேகமாய் வீசும் என்பார்கள்.மீண்டும் அந்தக்காலம் வரவேண்டும். ஆறுகள் நிறைய வேண்டும்.

ஆடிப் பட்டம் தேடி விதை என்று மரங்களும் செடிகளும் நட்டு  வளப்படுத்த வேண்டும்.

’நீரின்றமையாது உலகு’ என்பது போல் அந்தக்காலத்தில் கனவுகளின் பலன்களிலும்  ஆறு, குளம் இடம் பெற்று இருக்கிறது அவற்றில் சில:-

 ‘ஆற்றில் ஓடி வருகின்ற நீரைஅதில் வெள்ளமாகக் கண்டாலும் நன்மை உண்டாகும்.”

“குளங்கள், கிணறுகள், ஆறுகள்  முதலியவை வற்றிப்போகுமாறு கனவு கண்டால் வறுமை வந்து சேரும் . 

“ஆறுபெருகிக் கரைகளை உடைத்துச்சென்றால் வெகுவிரைவில் நாட்டின் மீது பகைவர் படையெடுப்பர் ’

கடலைத் தாண்டுதல், ஆற்றைத் தாண்டுதல்  போல் கனவு கண்டால் நினைத்த காரியம் முடியும்

இப்படி அந்தக் காலத்தில் நீர் நிலைகளைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கை பின்னப்பட்டு இருந்தது..

அக்காலத்திலும் காவிரி நதி பாயும் சோழநாட்டில் கடும் பஞ்சம் வந்த போது திருநனிபள்ளி என்ற ஊர் பாலை நிலமாக் இருந்தது என்றும், அதை மருதநிலமாக மாற்றினார் திருஞானசம்பந்தர் என்றும் புராணங்கள் மூலம் அறிகிறோம்.  இந்தக்காலத்திலும் அப்படி மாற்றம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைப்பு வருகிறது.

ஆறு, குளங்களில் நீர் இல்லை இப்போது.  ஆடி பெருக்குவிழாவை  மக்கள் மழை வேண்டியும் குடும்ப நலம் வேண்டியும் வணங்கி வருகிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், காவேரி அன்னை! கருணை மழை பொழிய வேண்டும்! 
வாழ்க வளமுடன்!
-------------------

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள் !
-------------------------

விருது வரும் நேரம்

$
0
0
”THE VERSATILE BLOGGER AWARD ”

இந்த  விருதை மூன்று  அன்பு உள்ளங்கள் எனக்கு  அளித்து 

இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த விருதைச் சிலவருடங்களுக்கு முன் 

 தெய்வீக பதிவுகளை மணிராஜ் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் 

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களிடமிருந்துபெற்றுக்கொண்டு 

இருக்கிறேன். வல்லி அக்கா என்று நான் அன்புடன் அழைக்கும் 

திருமதி. வல்லி சிம்ஹன்  அவர்கள்,  திருமதி . துளசி கோபால் அவர்கள்,


திருமதி. கீதாசாம்பசிவம் அவர்கள், திருமதி. ராமலக்ஷ்மிஅவர்கள், திருமதி.

 ஹுஸைனம்மா அவர்கள், திருமதி. சித்ரா அவர்களுடன்  விருதைப் பகிர்ந்து 

கொண்டு இருக்கிறேன்.


அரட்டை என்று தன் தளத்திற்கு  பேர் வைத்து  நம்மை அவர் தளத்திற்கு 

அன்புடன்  அரட்டைக்கு  அழைக்கும் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்,

 பல்சுவை பதிவுகளை எழுதுவார் குறிப்பாக  நல்ல நகைச்சுவை எழுத்தாளர். 

இரண்டு வலைத்தளம் வைத்து இருக்கிறார். தன்பதிவுகளை மின்னூல் ஆக்கி

 இருக்கிறார்.திறமைவாய்ந்தவர் . உங்கள்எல்லோருக்கும் தெரியும் 

அவரை. அவர்கள் அளித்த இந்த விருதுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.



காலையில் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் விருது கொடுத்தார்கள்.

 தஞ்சையம்பதி  என்று வலைத்தளம் வைத்து இருக்கும் 

 திரு.துரைசெல்வராஜூ அவர்கள் மாலையில் இந்த விருதை எனக்கு 

அளித்தார்கள்.  தன் தளத்தில்   ஆன்மீகப் பதிவுகள் பதிந்து  வருவது 

 எல்லோருக்கும்தெரியும் தானே!  சார் எனக்கு அளித்த  விருதுக்கு நன்றி.

 வாழ்த்துக்கள்.



இருவருக்கும் நன்றிகள்! இந்த விருதைத் துவக்கி வைத்த திருமதி. ரஞ்சனி 

நாராயணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்,  நன்றிகள்.



ஒரு சமயத்தில் நிறைய விருதுகள்  அடுத்தடுத்து ஒருவருக்கு ஒருவர்

 கொடுத்துக் கொண்டார்கள்.  எல்லாவற்றிலும் சாதனை படைக்கும் 

 திரு. வை.கோபாலகிருஷ்ணன் சார், விருதுகள் கொடுப்பதிலும் சாதனை 

படைத்தார். எனக்கு ஒரே  நேரத்தில் மூன்று விருதுகள் கொடுத்தார். அவற்றை

வலைத்தளமுகப்பின் ஓரத்தில் போட்டுகொண்டுள்ளேன், நன்றி சொல்லி.

 எல்லோர் கொடுத்த விருதுகளும் அதில் இடம்பெறுகிறது.



விருது கொடுப்பது நல்லதுதான். எழுதுவதில் தொய்வு ஏற்படும்போது 

 உற்சாகம் தந்து மீண்டும்எழுத வைக்கும்

திருமதி . ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் கொடுத்த விருது

 

திரு. துரைசெல்வராஜூ அவர்கள் கொடுத்த விருது
எனனைப் பற்றி  ஏழு விஷயங்கள்.:-

1. எனக்கு நல்ல இசையைக் கேட்கப் பிடிக்கும்.
2. எனக்கு சினிமா பாடல்கள் பழைய பாடல்கள் கேட்கப் பிடிக்கும்.
    புதுப் பாடலும் நல்ல பாடலாய் இருந்தால் பிடிக்கும்.
3. இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்.
4. நல்ல புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்.
5. கள்ளமில்லா குழந்தைகளோடு விளையாடப் பிடிக்கும்.
6 .இறைவனைத் துதிக்கப் பிடிக்கும்.
7. தொலைக்காட்சி, இணையம் , பாடல், புத்தகங்கள் என்று இவற்றோடும்,
   உறவினர்கள் மற்றும் நண்பர்களோடும் உரையாடியபடி இருக்கவேண்டும்.

எனக்கு திருமதி. ராஜலக்ஷ்மி அவர்கள் கொடுத்த விருதை   இவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


பன்முக திறமைகள் உடையவர்கள்:-

”சமையல் அட்டகாசம்” என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்  திருமதி. ஜலீலா அவர்கள் 

”அடிசில்” என்ற வலைத்தளத்தில் அம்மாவின் கைவண்ணம் என்று வைத்து இருக்கிறார், திருமதி சுந்தராமுத்து அவர்கள்.

”காகிதப்பூக்கள்” என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி. ஏஞ்சலின்  அவர்கள் .

தோழி பூவிழி , “பூவிழி” என்ற வலைத்தளம்  வைத்து கவிதை, பொன்மொழி விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதியவர் மீண்டும் எழுத வரவேண்டும். ஒருவருடமாய் அவர்களிடமிருந்து பதிவுகள் இல்லை.
திரு. தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னது போல் முகநூலில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள் போலும்.

திருமதி. விஜி பார்த்திபன்அவர்கள், விஜிபார்த்தி என்ற வலைத்தளத்தில்  சமையல் குறிப்பு, கைவேலைகள், (பின்னல், தையல்கலை)நல்ல கட்டுரைகள் என்று எழுதுவார்.

அடுத்து எனக்கு  திரு. துரைசெல்வராஜூ அவர்கள்  கொடுத்த விருதை  இவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பன்முக திறமைகள் உடையவர்கள்:-

முருகானந்தம் சுப்பிரமணியன் அவர்கள் , தன் வலைப்பூவை ஆனந்த தாண்டவநடராஜமூர்த்திக்கு  அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ என்கிறார்.
ஆன்மீக யாத்திரை போக விரும்புவர்கள் இவரது வலைத்தளத்தைப் படித்துப் பயன்பெறலாம்.

கற்கை நன்றே, கபீரின் கனிமொழிகள் என்ற வலைத்தளங்கள் வைத்து அருமையான ஆன்மீக பதிவுகளை எழுதி வரும் கபீரன்பன் அவர்கள்

வடுவூர் குமார்  தன் மடவிளாகம் என்னும் வலைப்பூவில் அவர்கள்  பலதரப்பட்ட பதிவுகளை எழுதி வருகிறார். தன் தொழில் சார்ந்த பதிவுகளும் வரும் என்று எச்சரிக்கிறார்.

குறள் காட்டும் பாதை,  இன்றையபழமொழி,,  பயனுள்ள கட்டுரைகள் என்று  தன் அந்திமாலை என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார்.  இ.சொ.லிங்கதாசன் அவர்கள். 


”எல்லாப்புகழும் இறைவனுக்கே! ”என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திருமதி ஸாதிகா அவர்கள், பலவகையான பதிவுகளை எல்லோரும் விரும்பும் வண்ணம் எழுதுவதில் வல்லவர்.

இன்று காலை இரண்டு பேர் கொடுத்த இரண்டு விருதுகளுக்கு நன்றி சொல்லி பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் போது  ரூபன் அவர்கள்இரண்டு விருதுகளை கொடுத்து பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்.  ரூபனின் எழுத்து படைப்புகள் என்று கவிதைகள் , கட்டுரைகள், கதைகள் எல்லாம் எழுதி வருகிறார். தன் தளத்தில் கவிதை போட்டிகள் எல்லாம் நடத்தி வருகிறார்.

அவர் கொடுத்த விருதை பெற்றுக் கொண்டேன் இத்தளத்தில்  பதித்து விட்டேன். ரூபன் அவர்களின் அன்புக்கு நன்றி. என் பதிவுகள் வலைச்சரத்தில் இடம்பெறும் போதெல்லாம் முதலில் வந்து  வாழ்த்து தெரிவித்துவிடுவார். அவரைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

உடனே பதிவு போட்டு இருந்தால் நான் இந்த விருதை வாங்கியது தெரிந்து இருக்கும். மறுபடியும் கொடுத்து இருக்க மாட்டார்கள்.

ரூபன் அவர்களின் விருதுகளை  வலைத்தளத்தில் எழுதி வரும் அனைவரும். ஏற்றுக் கொள்ளுங்கள்.

                                        ரூபன் அவர்கள் கொடுத்த  இரண்டு விருதுகள்.





                                                        வாழ்க வளமுடன்

யானை ! யானை!

$
0
0
யானை என்றால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி தானே!
யானை வரும் முன்னே! மணி ஓசை வரும் பின்னே !என்பார்கள்.

யானை நடந்து வரும் போது தாளலயத்தோடு அதன்மேல் தொங்கவிடப்பட்டு இருக்கும் மணியோசை கேட்கும். அதைக் கேட்டு வீட்டிலிருந்து ”யானை வருது யானை வருது ” என்று எல்லோரும் விழுந்தடித்து ஓடி வருவோம் பார்க்க. பெரியவர்கள் வெல்லம், பச்சரிசி முறத்தில் எடுத்து வருவார்கள். சிறியவர்களை யானை மேல் வைத்து சிறிது தூரம் நடத்திச் சென்று காசு வாங்குவார், யானைப்பாகன். பயந்த குழந்தைக்கு யானைத் துதிக்கையால் மூச்சை வேகமாய் வெளியே விடச்சொல்வார்கள்,  அப்படி, பன்னீர் தெளிப்பது போல் தெளிக்க வைத்தால் பயம் போய்விடும் என்று இன்றும் நம்பப்படுகிறது.

அந்தக்காலத்தில் குழந்தைகளை அட்சராப்பியாசம் செய்து வைக்கும் போது யானை மேல் வைத்து ஊர்வலம் போய் ,அப்புறம் வீட்டில் நல்ல வாத்தியார் வைத்து   அட்சராப்பியாசம் நடைபெறும். என் அப்பா, பெரியப்பாவிற்கு அப்படி நடந்ததாக என் பாட்டி சொல்வார்கள்.

மாப்பிள்ளைஅழைப்பு, , பெரியமனிதர்கள் வரவேற்பில் எல்லாம் யானை மாலையிட்டு வரவேற்கும்.  கோவில் விழாக்களில் தீர்த்தவாரிக்கு, யானைமேல் ஸ்வாமி ஆற்றங்கரைக்குப் போவார். திருவிழாக்களில் யானை மேல் இறைவனுக்கு மாலை மரியாதைகள் வரும்.


 திருச்சி  காவேரி ஆற்றங்கரைக்கு அம்மாமண்டபத்திற்கு வந்து செல்கிறது  ஸ்ரீரங்கத்து யானை

மைசூர் தசரா யானைகளை ராமலக்ஷ்மி அழகாய் படம்பிடித்துக் காட்டி இருப்பார்கள்.

திருச்சூர்  பூரத்திருவிழாவிற்கு யானைகள் அணிவகுப்பு பார்த்து இருப்பீர்கள்.

புராண இதிகாசங்களில் யானை இடம்பெறுகிறது. முருகப்பெருமான் வள்ளியை மணக்க உதவியாக ,விநாயகப் பெருமான் யானையாக வருகிறார்
.
தவமுனிவர் துர்வாசர் கொடுத்த மாலையை, இந்திரன் செருக்கால்  தன் வெள்ளை யானை ஐராவதத்திற்கு அளிக்க, அது அதைக் காலில் போட்டு மிதிக்க, துர்வாசர்  கோபம் கொண்டு  இந்திரனின் செல்வங்கள் அனைத்தும் கடலுக்கு அடியில் போக சாபம் கொடுத்த கதை, அப்புறம் பாற்கடல் கடையப்பட்டது ,செல்வங்கள் எல்லாம் வந்த கதை தெரியும்தானே!

யானைக்கு நினைவாற்றல் அதிகம் என்பதைச்சொல்லும், பழிவாங்கும் கதையை, நாம் சின்னவயதில் பள்ளியில் படித்திருக்கிறோம். ”யானையும், தையல்காரானும்” கதை நினைவு இருக்கும் எல்லோருக்கும்.

யானை, ”ஆதிமூலமே! ”என்று அழைத்தபோது பெருமாள்,  கருடன் மீது பறந்து வந்து யானையைக் காப்பாற்றிய கதை அறிவோம்.

  பெரியபுராணத்தில் இடம்பெற்ற கதை:- புகழ்ச்சோழநாயனாரின் பட்டத்து யானை, சிவகாமி ஆண்டார் எனும் முதிய சிவனடியாரின் பூக்குடலையைப் பறித்து அதில் உள்ள மலர்களை சிதைக்க, யானையின் துதிக்கையை வெட்டி கொன்றார்,எறிபத்தநாயனார்., . தடுத்தபாகர் முதலியோரையும் கொன்றார். எறிபத்தர். சிவனடியார்களுக்கு இடையூறு நேர்ந்தால் அதனைத் தீர்க்கும் பரசு போன்ற ஆயுதம் கொண்டவர் என்பதால் எறிபத்தர் என்ற பெயர் பெற்றார்.

வாரிசு இல்லாத இராஜ்ஜியத்தை ஆள ஆள் இல்லாவிட்டால் பட்டத்து யானையின் கையில் மாலையைக் கொடுத்து நகர்வலம் போக வைத்து யானை யார் கழுத்தில் மாலையைப்  போடுகிறதோ, அவர் அரசராக தேர்ந்து எடுக்கப்படும் நிலையும் சொல்லப்படுகிறது.

இப்படி, சொல்லிக் கொண்டே போகலாம். யானையைப் பற்றி.

//யானை யானை அம்பாரி யானை
குட்டி யானைக்கு கொம்பு முளைத்ததாம்
பட்டணம் எல்லாம் பறந்து போச்சாம்//




இப்படிச் சொல்லி குழந்தைகளை தன் மேல் ஏற்றி மகிழ்ச்சியாக யானை நடை நடந்து குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தாதவர்கள் இருக்க மாட்டார்கள்.


.
நான் எடுத்த யானை புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த ஜூலை மாதம் சிதம்பரத்தில்  பன்னிருதிருமுறை உரை, பதினான்கு  சாத்திரஉரை, திருக்குறள் உரைவளம், ஆகியவற்றை அரங்கேற்றி வெளியிட்ட விழாவில்,  விழாவிற்கு வரும் விருந்தினரை வரவேற்க வந்திருந்த யானைகள் சிதம்பரம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 
வைத்திருக்கும் குடிநீர்க்குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்தது, பாகன் தண்ணீரைப் பிடித்துக் குளிப்பாட்டினார்.  அதன் படங்கள் கீழே:-



யானை ஆனந்தமாய் குளிப்பதைப் பார்க்கும் பள்ளிச் சிறுவன்

யானைக்கு சிறிய கப்பில் எடுத்து ஊற்றினால் அதன் குளியல் ஆசை நிறைவு பெறுமா?

நீராடியபின் ஒரு யானைக்கு திருநீற்றுப் பட்டை அலங்காரம்
மற்றொரு யானைக்கு ஓம் என்றும், அங்குசம் போன்றும் வரைந்து அலங்காரம்
ஆயிரம்கால் மண்டபத்தின் வாசலில் இரண்டு யானைகளும்  அலங்கரிக்கப்பட்டு வருபவரை  வரவேற்க எதிர் எதிராக நிறுத்தப்பட்டன.
பட்டை போட்ட யானை ஓம் போட்ட யானையைப் பார்த்து பிளிறிய ஒலி பக்கத்தில் இருக்கும் ஒலிபெருக்கியில் கோவில் வளாகம் முழுவதும் எதிரொலித்தது.

இரண்டும் போடும் சத்தம் கேட்டு, ஒருவர் காதை அடைத்துக் கொள்கிறார் பாருங்கள்.


யானையின் முதுகில் இடப்பட்டுள்ள இரண்டு மணிகளும் அதன் நடைக்கேற்ற மாதிரி அழகாய் தாளலயத்தோடு ஒலி எழுப்பியது.

திருக்கடையூரில் முன்பு மணிவிழா செய்பவர்கள், கோபூஜை, கஜபூஜை செய்வார்கள் திருமணத்திற்கு முன்பு. திருமணத்திற்கு வரும் தம்பதியர்களை யானை கோபுர வாசலிருந்து வரவேற்று, கோவிலுக்கு உள்ளே கூட்டிப்போகும். இப்போது இல்லை. அந்த யானை ’அபிராமி’ இறந்து விட்டது. இப்போது கோவிலில் யானை இல்லை.

யானை அபிராமி

போனமாதம் பேரூரில்(கோவை) எங்கள் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு போய் இருந்தோம். அங்கு உள்ள யானையைப் பெரிய தண்ணீர்த் தொட்டியில் படுக்க வைத்து உடல் தேய்த்துக் குளிப்பாட்டிக்கொண்டு இருந்தார்கள்.

அம்மன் சன்னதி எதிரில் அதன் குளியல் தொட்டி இருந்தது நான் அம்மன் சன்னதி வாசலில் இருந்து(தூரத்தில் இருந்து) எடுத்தேன்.
பக்கத்திலிருந்து எடுக்கலாம் என்று போனபோது குளிப்பதை எடுக்கக் கூடாது என்று செல்போனில் எடுப்பவர்களிடம்  சொல்லிக் கொண்டு இருந்தார் கோவிலைச் சுத்தம் செய்யும் பணியாளர்.   அதனால்  பக்கத்தில் எடுக்கவில்லை. யானை மேல் ’கரட்டு கரட்டு; என்று தேய்த்துக் கொண்டு இருந்தார்கள். யானை தன் காதுகளை ஆட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக கொடுத்துக் கொண்டு இருந்தது . யானையை ஆற்றிற்குக் கூட்டிப் போய் உடம்பு தேய்த்துக் குளிப்பாட்டி வருவார்கள்,  முன்பு.  இப்போது  ஆற்றில் தண்ணீர் இல்லை .அதனால் மோட்டார் போட்டுத் தொட்டியில் தண்ணீர் நிரப்பிக் குளிப்பாட்டுகிறார்கள். யானை  ஆற்றுத் தண்ணீரில் குளித்தபின் ஆற்று மணலை உடல் முழுவதும் தூற்றிக் கொள்ளும்,ஆனந்தமாய்.



என் மாமியார் அவர்கள், சிறுமியாக இருக்கும்போது பின்னிய யானை படம் இது. அவர்கள் மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது  பின்னியதாம். (80 வருடங்களுக்கு முன்) காட்போர்ட் என்ற அட்டையில் ஓட்டை ஓட்டையாக இருக்கும். அதில் கம்பிளி நூலால் பின்னியது. மண்டபம் பின்னி அதில் சரஸ்வதி படம் வைத்து இருப்பார்கள். என் அம்மாவும் இதுபோல் கன்னியாகுமரி, தாஜ்மஹால் எல்லாம் பின்னி இருப்பார்கள். அது தம்பியிடம் இருக்கிறது. அவற்றைப் பின்னர் காணத்தருகிறேன் .





மார்கழி மாதம் நான் வரைந்த யானைக்கோலம் (சிரிக்க வேண்டாம்)
இந்த யானை படம் ஒரு மஞ்சப்பையில் இருந்தது. அதைப் பார்த்துக் கோலம் வரைந்தேன்.

யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில் 
தன்னம்பிக்கையுடன் வாழ்வோம். வளம் பெறுவோம்.
வாழ்க வளமுடன்.

தேவி கொலுவிருக்கும் வீடு

$
0
0

இந்தப் படம் சுமார் 58 வருடங்களுக்கு முன்பு வாங்கிய ஒரு காலண்டரில் இருந்ததாம். என் அத்தை வீட்டில் பெருங்காயம் வாங்கியபோது அதற்கு அந்தக் காலண்டரைக் கொடுத்தார்களாம்.. அதை அத்தை வீட்டில் பிரேம் செய்து வைத்து இருந்தார்கள். அதை இப்போது நகல் எடுத்துக் கொண்டோம். 

பெருங்காயக் கம்பெனி பெயர்

வரைந்த ஓவியர் பெயர்(ராஜம் )

அந்தக் காலத்தில் வியாபாரத்தில் கூட இறைபக்தியை வளர்த்து இருக்கிறார்கள்.

அத்தை அவர்கள் பின்னிய மண்டபத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதி

இந்த முறை கொலு இல்லை . அதனால் படங்கள் மட்டுமே!


2006 ஆம் வருடம் எடுத்த படம்


  2005ஆம் ஆண்டு நவராத்திரி கொலு அம்மன் அலங்காரம் ஒருபுறம்.          குழந்தைகளின் கைவண்ணம் ஒருபுறம்.

 நவராத்திரி என்றால் குழந்தைகளுக்கு விதவிதமாக அலங்காரம் செய்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துவரச் செய்வோம். வீட்டை அழகுபடுத்தி, வாசலில் விதவிதமாய் அழகிய கோலங்கள் போட்டு  ஒன்பது நாளும் உறவினர், நண்பர்கள் என்று மகிழ்ச்சியாக உறவாடி மகிழ்வோம்.

ஒன்பது நாளும்  மூன்று தேவிகளை வழிபட, பாடல்கள் பாடலாம் அல்லது பாடல்களைக் கேசட்டுகள் அல்லது சிடி போட்டுக் கேட்கலாம்.

நம் தேசியகவி அவர்களின் நவராத்திரி பாட்டு கேட்போம்:-

                  நவராத்திரி பாட்டு

உஜ்ஜயினீ நித்யகல்யாணி!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி    (உஜ்ஜயினீ)
உஜ்ஜய் காரண் சங்கர தேவீ
உமா ஸரஸ்வதி ஸ்ரீமாதா ஸா                   (உஜ்ஜயினீ)
வாழி புனைந்து மஹேசுவர தேவன்,
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம். (உஜ்ஜயினீ)
ஸ்த்ய் யுகத்தை அகத்தி லிருத்தித்
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)

                                     பாரசக்தி    (மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)

மாதா பராசக்தி வையமெலா நீ நிறைந்தாய்
ஆதார முன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய், எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப் பணிந்து வாழ்வோமே.

                                       வாணி

வாணிகலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப்போலே அறிவுமுத்து மாலையினள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

                                        
                                       ஸ்ரீ தேவி

பொன்னரசி , நாரணனார்தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிருபொற்றாளே சரண் புகுநது வாழ்வோமே.

                                               பார்வதி

மலையிலே தான் பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்
நிலையிலுயர்த்திடுவாள், நேரே அவள் பாதம்
தலையிலே தரணிமிசை வாழ்வோமே .

நவராத்திரி நாயகியான அம்பிக்கைக்கு ‘சர்வக்ருக ரூபிணி’ என்ற பெயரும் உண்டு சந்திரன், சூரியன் போன்ற நவக்ரகங்களும் அம்பிகையின் உருவம் என்பதால் நவக்கிரக வழிபாடு மூலமும் அம்பிகையை வழி  படலாம். 

தேவிபாகவத்தைக் கேட்பதாலும் , பாராயணம் செய்வதாலும் ஐஸ்வர்யம், ஆயுள், ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, சுகம், விருப்பங்கள் நிறைவேறுதல், துயரம் நீங்குதல் ஆகிய நற்பயன்கள் கிடைக்கும். அதிலும் நவராத்திரி நேரத்தில் தேவி பாகவதம் படிப்பது விசேஷம்.

ஞான சக்தியான சரஸ்வதி, க்ரியாசக்தியான லட்சுமி, இச்சா சக்தியான மகாகாளி   மூவரையும் வணங்கி நலம் பெறுவோம்.

அன்னை, அருள் வடிவானவள். நவராத்திரி நாளில் வழிபட்டு அன்னையின் அருள் பெறுவோம்!

                                                             வாழ்க வளமுடன்!
                                                                       --------------

ஆலயங்களில் நவராத்திரி விழா

$
0
0
நவராத்திரியில் நிறைய பாடல்கள் பாடி மகிழ்வோம். நம் தேசியக் கவி பாடிய பாடலையும்  பாடி மகிழலாம்.

லக்ஷ்மி பிரார்த்தனை

மலரின் மேவு திருவே-- உன் மேல்
மையல் பொங்கி நின்றேன்;
நிலவுசெய்யும் முகமும் -காண்பார்
நினைவழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும்-தெய்வக்
களிதுலங்கு நகையும்
இலகு செல்வவடிவும்- கண்டுன்
இன்பம் வேண்டுகின்றேன்

திருமகளை சரண் புகுதல்

பொன்னிலும் மணிகளிலும்- நறும்
பூவிலும் சாந்திலும்  விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் -செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்,
முன்னிய துணிவினிலும் -மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற்  புகழ்பாடி- அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.

சரஸ்வதி தேவியின் புகழ்

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.                                    (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.

காளி    ஸ்தோத்திரம்

யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதிசக்தி,தாயே!-என் மீ-தருள் புரிந்து காப்பாய்.

எந்த நாளும் நின்மேல்-தாயே!இசைகள் பாடி வாழ்வேன்;
கந்த னைப்ப யந்தாய்,-தாயே!கருணை வெள்ள மானாய்!
மந்த மாரு தத்தில்-வானில்-மலையி னுச்சி மீதில்,
சிந்தை யெங்கு செல்லும்-அங்குன்-செம்மை தோன்று மன்றே

கர்ம் யோக மொன்றே-உலகில்-காக்கு மென்னும் வேதம்;
தர்ம நீதி சிறிதும்-இங்கே-தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம்-நின்தன்-மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-தேசு கூட வேண்டும்.    

   
நவராத்திரி விழா சில நினைவுகள்:-

ஆலயங்களில் கொலு வைத்து  அம்மன் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரத்தில் கொலுவீற்று இருப்பாள். கோவிலில்  கொலு10 நாட்கள் நடைபெறும்
எங்கள் ஊரில் இருக்கும் புனுகீஸ்வரர்  கோவிலுக்கு கொலு பார்க்க நாங்கள் தினமும் குழந்தைகளுடன் போவோம். அங்கு அழகாய் கொலு பொம்மைகள் இருக்கும்.
பின் அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் சாரங்கபாணி கோவில் செல்வோம். அங்கும் கொலு பார்த்துவிட்டு அதன் அருகில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவில் போவோம். அங்கும் கொலு வைத்து இருப்பார்கள் .தினம் பார்த்தாலும் புதிதாகப் பார்ப்பது போல்,”அந்த பொம்மையைப் பார், இந்த பொம்மையைப் பார் ”என்று பிள்ளைகள் பேசி மகிழ்வார்கள். மயூரநாதர் கோவிலிலும் கொலு நன்றாக இருக்கும். கோவில் கோவிலாக குழந்தைகளுக்காக் கொலு பார்க்கச் சென்ற நினைவுகள் மனதில் மலர்கிறது.

நாங்கள் திருவெண்காட்டில் இருந்தபோது, ஸ்வேதாரண்யர் கோவிலில் நவராத்திரி கொலு மிகச் சிறப்பாக நடைபெறும். கொலு பொம்மைகளை வைத்து தினம் கதைகள் சொல்வார்கள் .ஒருநாள் கைலாயக் காட்சி என்றால் இன்னொருநாள் வைகுண்ட வாசல், ஏழுகதவுகள் திறக்கும்.கடைசி கதவு திறக்கும் போது பாற்கடலில் பரந்தாமன் காட்சி அளிப்பார்.  பெரிய பெரிய பொம்மைகள் அதை மாற்றி மாற்றி வைத்துக் காட்சி அமைப்பார்கள். வெகு அழகாய் இருக்கும். கச்சேரிகளும் உண்டு.பெரிய பெரிய பிரபலமானவர்களின் கச்சேரிகள் நடக்கும். இப்போது அப்படி நடப்பதில்லை.

வீட்டில் கொலு வைத்து இருக்கும்போது இறைவன் புகழைப் பாடி மகிழ்வார்கள். ஆடல்கலையால் இறைவன் புகழை ஆடியும்  மகிழ்வார்கள். தங்களுக்கு வித்தை சொல்லிக் கொடுத்த குருவிற்கு விஜய தசமி அன்று குரு காணிக்கை அளித்து மகிழ்வார்கள். எடுத்தக் காரியத்தில் வெற்றி பெற இறைவன் அருளும் குருவருளும் மிகவும் முக்கியம்  இல்லையா?

இந்த ஒன்பது நாளும் தங்களுக்கு இருக்கும் பலகலைகளையும் வெளிப்படுத்தக் கிடைத்த நல்ல வாய்ப்பாக குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு மகிழ்ச்சியும் ஆனந்தமும் இந்த விழாக்கள் மூலம் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் இவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பாகவும் இருக்கிறது.

இந்த விழா மட்டும்  தான் சாதி மதம் பாராமல் அனைவரும் அவர்கள் தொழில் செய்யும் இடத்தைக் கோவிலாக நினைத்து கொண்டாடும் விழாவாக இருக்கிறது. தொழில் புரிபவர்கள்  தாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் சுத்தமாகத் துடைத்து அதற்குப் பொட்டு வைத்துப் பூஜை போடும் நாள்.

கொலுவிற்கு அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் மகிழ்வாய் வந்து கலந்து கொண்டு மகிழ்வதால்  நவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்த விழா.

கோவிலோ வீடோ எல்லோரும் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சியால்தான் விழாக்களை சிறப்பாக செய்யமுடியும். ஒருவர் மட்டும் செய்தால் அதில் அலுப்பும், சலிப்பும் வந்து விடும்.  கூட்டுமுயற்சிக்கு ஒரு விழா நவராத்திரி.

விழா முடிந்த பின் கொலுவை எடுத்து வைத்தவுடன் கோவிலும், வீடும் கொலுவீற்றிருந்த இடம் வெறிச்சோடி இருக்கும். அடுத்த வருடம் வரும் வரை இந்தப் பத்து நாட்களின் மகிழ்ச்சி மனதில் ஓடிக் கொண்டே இருக்கும்.

           
மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள அருள்மிகு புனுகீஸ்வரர் சமேத சாந்தநாயகி கோவிலில் அம்மன் சாந்தநாயகி.

நவராத்திரி முதல் நாள் சாந்தநாயகி கொலுவீற்றிருக்கும் அழகு
கொலுமண்டபம்
படியில் கொலு பொம்மைகள் அணி வகுப்பு
தெப்பகுளம் அமைத்து அதில் மீன்கள் விடப்பட்டு இருக்கிறது
சாந்தநாயகி - நவராத்திரி இரண்டாம் நாள்


நவராத்திரி மூன்றாம் நாள் - சாந்த நாயகி
காமாட்சி கோவில் கொலு
 (இரு மனைவியருடன் கல்யாண மாப்பிள்ளை ) கல்யாணத்தில் பாட்டுக்கச்சேரி (சாரங்கபாணிகோவில் கொலு)
சாரங்கபாணி  கோவில் கொலு
சாரங்கபாணி கோவிலில் நவராத்திரி விழா   _தாயார் கலசத்தில் இருக்கிறார்
திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் கலைமகள் அலங்காரம்

அன்னையின் புகழ் பாடும் நாட்டிய நாடகம்

மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலில் நடந்த நவராத்திரி விழாவில்  குழந்தைகள் அம்மன் அலங்காரத்தில் (ந்ன்றி ராஜ் டி.வி)

நவராத்திரி கொலுவில் மும்மூர்த்திகள்
நவராத்திரியில் அன்னையின் புகழ்பாடும் சிறுமியர்

சென்ற வருடம் நவராத்திரி அமெரிக்காவில் - அப்போது அங்கு   மகன் வீட்டில்  என் கணவர் செய்த சரஸ்வதி அம்மன்.


ஆதாரம்  சக்தி யென்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்
துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்; யாவுமவள் தருவாள்.
நம்பினார் கெடுவதில்லை ; நான்கு மறைத்தீர்ப்பு;
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.

வாழக வளமுடன்
----------------

நவராத்திரி வாழ்த்துக்கள்.

$
0
0
 சகலகலாவல்லி மாலை :-

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளம் தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக, உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!

நாடும் சொற் சுவை பொருட் சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடுங்கொலோ உளம்கொண்டு
தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!

 தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

 பஞ்சு அப்பு, இதம் தரும், செய்ய, பொற்பாத பங்கேருகம் என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும், அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி உன்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகலகலாவல்லியே!

சொற்விற்பன்னமும்,  அவதானமும், கல்வி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலா வல்லியே!

மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்ட மன்னரும், என்
பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும், விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலா வல்லியே!

                                                          -குமரகுருபரசுவாமிகள்
காமாட்சி அலங்காரம்
கஜலக்ஷ்மி அலங்காரம்

சரஸ்வதி அலங்காரம்

கொலுவில் தேச பிதா, பாரதமாதா, நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள், இந்தியமக்கள்

                           வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டில் எல்லாம்
                          தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
                                   பாழ்பட்டு நின்ற தாம் ஓர் பாரத தேசம் தன்னை
                          வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க வாழ்க!

                           அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
                                                         வாழ்க வளமுடன்.
                                                                   ==========

தீபாவளி வாழ்த்துக்கள்

$
0
0
தீபாவளி என்றாலே மகிழ்ச்சி, ஆனந்தம் !   பொதுவாக, சிறுவயதில் தான் நிறைய தீபாவளி எதிர்பார்ப்புகள்   இருக்கும்.  அந்தக் கால நினைவுகளில் கொஞ்சம்  பார்ப்போம்.

சிறுவர் சிறுமியாக இருக்கும்போது புத்தாடை எதிர்பார்ப்பு,  வாண வேடிக்கைக்கு என்ன புது மாதிரி மார்க்கட்டுக்கு வந்து இருக்கிறது என்று பார்த்து வாங்குவது என்று ஆண்டு தோறும் தீபாவளி வருவதற்கு முந்திய மாதமே ஏற்பாடுகள் நடக்கும். சக வயது தோழி, தோழர்களிடம் நான் அது வாங்கப் போகிறேன், இது வாங்கப் போகிறேன் என்று சொல்லிக் கொள்வது. கேப் வெடிக்க புது மாதிரி துப்பாக்கி , தூக்கத்திலும் கனவில் அதைப்பற்றிய நினைவுதான்.

பத்திரிக்கைகளில் தீபாவளி சமயத்தில் வரும் சிரிப்புகளில் முக்கியம், ”சட்டையைக் கொஞ்சம் பெரிதாகத் தையுங்கள் . வளரும் பிள்ளைகள் !”என்று தையல்காரர்களிடம் சொல்வது தான். எங்கள் வீட்டில் அப்படிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  பெரியவளுக்குப்  பத்தாமல்  போனால் சின்னவள் போட்டுக் கொள்ளலாம்., பெரியவனுக்குப் பத்தாமல்  போனால் சின்னவன் போட்டுக் கொள்ளலாம். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அப்பா பொருத்தமான  அளவில் தான் வாங்குவார்கள் எல்லோருக்கும். வித விதமாக ரெடிமேட் உடைகள் தான் வாங்குவார்கள்.பாவாடை, தாவணி போடும்போது மட்டும் தைக்கப்பட்டது. அதை அக்கா அழகாய்த் தைத்துத் தருவார்கள். இப்போது அதுவும் ரெடிமேட் கிடைக்கிறது.

 இப்போது போல் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு இல்லை என்றாலும்  வார, மாத இதழ், தீபாவளி  சிறப்பிதழ்  மூலம் நமக்குக் கிடைத்து விடும். வானொலியிலும் தீபாவளிச் சிறப்புத் தேன் கிண்ணம், தீபாவளிப் பாடல்கள் என்று  தீபாவளிக் கொண்டாட்டங்களைக் கேட்கலாம்.

இப்போது மாதிரி எப்போது வேண்டுமென்றாலும் (நினைத்தபோது எல்லாம்) துணி எடுக்கும் வழக்கம் எல்லாம் அப்போது இல்லை. தீபாவளி, பிறந்தநாள், பொங்கல் மட்டும்தான்.  ஏதாவது துணி அதிகப்படியாக எடுத்தது இருந்தால் அது கார்த்திகைக்கும் கிடைக்கும். அதுபோல் தான் வெடிகள் மத்தாப்பு, மற்றும் பூச்சட்டி எனும் புஸ்வாணம், இதைக் கொஞ்சம் கார்த்திகை தீபத்திற்கு என்று பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள் அம்மா.( எல்லாவ்ற்றையும் ஒரே நாளில்கொளுத்திக் கரியாக்காதீர்கள் என்பது அம்மாவின் கருத்து) அப்பா,” குழந்தைகளை திருப்தியாக வெடிக்க விடு! கார்த்திகைக்கு வேறு வாங்கிக் கொள்ளலாம் ”என்பார்கள். பூஜையின் போது சரவெடி வெடிக்கப்படும்.

 10 நாட்களுக்கு முன்பே பலகாரங்கள் தயார் செய்வார்கள் அம்மா. பிஸ்கட் டின்கள், மற்றும் பித்தளை, எவர்சில்வர் டிரம்களில் பலகாரம் செய்து வைத்திருப்பார்கள்.

தீபாவளிக்கு முன்பே ,தினமும் பலகாரங்கள் சாப்பிடுவது, தீபாவளிக்கு வாங்கிய துணிமணிகளை  வீட்டுக்கு வந்தவர்களிடமும், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும் காட்டி மகிழ்வது என்று மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது தீபாவளித் திருநாள்.

தீபாவளி அன்று வீட்டில் சாமி கும்பிட்டபின் புத்தாடைகளைக்கட்டிக் கொண்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு, உறவினர்களுக்கு என்று பலகாரம் கொடுத்து வரச் சொல்வார்கள் அம்மா . இந்த வெடிகளை வெடித்து விட்டு கொஞ்சநேரம் கழித்துச் செல்கிறோம் என்றால் விட மாட்டார்கள் . ”முதலில் கொடுத்து விட்டு வந்து, சாப்பிட்டு விட்டு,அப்புறம் போய் நிதானமாய் வெடிகளை வெடிக்கலாம் ”என்பார்கள்.

சுத்தியல் மாதிரி அமைப்பில், கந்தகம் வைத்துத் தரையில் ஓங்கி அடித்து அண்ணன் வெடிப்பான். அப்பா திட்டுவார்கள்,” விதவிதமாய் வெடிகள் வாங்கிக் கொடுத்து இருக்கிறேன், இதை எங்கு இருந்து வாங்கினான்? காதை அடைக்கிறது” என்று. அப்போதெல்லாம்  எல்லாப் பையன்களும் அப்படி வெடிப்பார்கள். அப்புறம் அது தடை செய்யப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

 வட்டமாய் நட்டு போன்ற அமைப்பில் பொட்டுவெடிகளை வைத்து, தரையில் ஓங்கி அடிக்கும் உத்தி வந்தது. ஓலை வெடியை தனித் தனியாகப் பொருத்திப் போட, ஆளுக்கு ஒரு பாக்கெட் உண்டு.  ஊசி வெடியும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உண்டு.. அதுவும் ஆளுக்கு ஒரு பாக்கெட்,

பட்டர்பிளை, பாம்புமாத்திரை, என்று தனித்தனியாக எடுத்துக் கொண்டு அவரவர்களுடைய  நண்பர்களுடன் கதைகள் பேசி மகிழ்ந்து வெடிப்போம்.  ஒன்று ஒன்றாக வெடிக்கச் சோம்பல்பட்டும் சத்தம் அதிகமாய் கேட்க ஆசைப்பட்டும் ஆறு ஏழு ஊசி வெடியின் திரிகளை  ஒன்றாகச் சுற்றி வைத்து வெடித்து  மகிழ்வோம்.

ராக்கெட் விட, பாட்டில்கள் தயார் செய்து வைத்துக் கொள்வோம். சரம் வைக்கும் போதும், லட்சுமி வெடி வைக்கும் போதும், ”திரியைக் கிள்ளி வை !இல்லையென்றால் வெடிக்காது”என்று அண்ணன் சொல்வதைக் கேளாமல், பற்ற வைத்து விட்டுஓடி வருவேன். ”நுனியில் கொஞ்சம் தீக்கொழுந்து
கனன்று வரும் போது தான் ஓடி வரவேண்டும்” என்று அண்ணன் சொல்லித் தந்தான்.  வைத்து விட்டு வெடி பற்றுவதற்கு  முன்பே ஓடிவந்தால் ஒரே சிரிப்பு.  சில நேரம் திரியில் தீப்பொறி வரவில்லை என்று பக்கத்தில் பார்க்கப் போனால் டபாரென்று வெடித்து நம்மைப் பயமுறுத்தும்.அவை எல்லாம் அற்புதமான நேரங்கள். திரும்பி வராத காலங்கள்.

பெரிய வெடிகள், லட்சுமிவெடி, பெரிய சரம் , தரை சக்கரம், புஸ்வாணம் எல்லாம்  அப்பா பக்கத்தில் இருக்கும் போது தான் வெடிக்க வேண்டும் என்பது கட்டளை. அது எல்லாம் இரவுதான். எல்லோரும் பார்த்து ரசிப்பதற்கும் பாதுகாப்பை உத்தேசித்தும்.

’பார்த்தால் நிறைய பகிர்ந்தால்  கொஞ்சம் ’என்பது போல்  அம்மா செய்த பலகாரங்கள்  மட மட என்று குறைந்து விடும், டின்களில்,  ”என்னம்மா! பலகாரம் கொஞ்சம் தான் இருக்கு போல”  என்றால், ”மறுபடியும் செய்துகொள்ளலாம்.” என்பார்கள் . கொஞ்சத்தை வேறு பாத்திரத்தில் முன்னதாகவே எடுத்து வைத்து இருப்பார்கள் . டின்களில் உள்ளதை காலி செய்தபின் அவை வெளியே வரும்.  கார்த்திகை வரை இந்த பலகாரம் ஓடும் அடுத்து கார்த்திகைக்கு அவல்பொரி, நெல்பொரி, அரிசி பொரி உருண்டைகள் அப்பம் என்று வந்து விடும்.

அக்கா, தம்பி, தங்கைகளுடன் ஆனந்தமாகக் கொண்டாடிய தீபாவளி
எப்போதும் மனதை விட்டு நீங்காத மகிழ்ச்சியான தருணங்கள்.. இப்போதும் தம்பி, தங்கைகள் கூப்பிட்டார்கள் ,”  உங்களுக்கு இந்த வருடம் தீபாவளி கிடையாதே! இங்கு  வாருங்கள்  எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம்” என்று.

திருமணம் ஆனவுடன், தலை தீபாவளியைப் புகுந்த வீட்டில் கொண்டாடியதும் மகிழ்ச்சியை கொடுத்தது. எங்கள் பக்கம் பண்டிகை விழாக்கள் எல்லாம் கணவன் வீட்டில் தான்!  பெண்வீட்டார் , வரிசைகளைக் புகுந்த வீட்டில் கொண்டுவந்து கொடுத்துச் செல்வார்கள்.

என் அப்பா தீபாவளிக்கு முன் கோவைக்கு என் மாமனார் வீட்டுக்கு வந்து, சீர் கொண்டு வந்து கொடுத்தார்கள்.. வைலட் கலரில் இளம் மஞ்சள் கலர் பார்டர்-  உடல் முழுவதும் நட்சத்திர ஜரிகை வேலைப்பாடு- கொண்ட பட்டுப்புடவை மற்றும் தேன்குழல், நெய் உருண்டை, காரசேவ், சோமாசி எல்லாம் கொடுத்து விட்டிருந்தார்கள் அம்மா.

எங்கள் மாமனார் வீட்டில் ஒவ்வொரு தீபாவளிக்கும் போட்டோ ஸ்டுடியோவுக்குச்  சென்று குடும்பப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம்.
அதை மனதில் வைத்துக் கொண்டு  சீர் கொடுக்க வந்த அப்பாவிடம் நான்,
”தீபாவளிக்கு அம்மாவுக்கு என்ன புடவை எடுத்தீர்கள்?  நீங்களும் அம்மாவும் போட்டோ  எடுத்து அனுப்பி வையுங்கள்” என்று சொல்லி அவர்களை ஊருக்கு வழி  அனுப்பி வைத்தேன்.  (அப்பா என் கண்ணில் இருந்து மறையும் வரை
பார்த்துக் கொண்டு இருந்தேன். அது தான் அவர்களைக் கடைசியாக நான் பார்ப்பது என்று அப்போது தெரியாது ,) அப்பாவும் ஊருக்குப் போய்  போட்டோ எடுத்து அனுப்பினார்கள். கார்த்திகை சோமவாரத்தில் இறந்து போனார்கள் அப்போது  அவர்களுக்கு வயது 51. தீபாவளி வரும் போதெல்லாம் அப்பாவின் வருகையும் நினைவுக்கு வரும்.
                            

இப்போது ஒரு வெடி டப்பாவில் இருந்து பலவெடிகள் வெடித்துக் கொண்டே இருப்பது போல், எங்கள் தலைதீபாவளியின் போது   ’டபுள்ஷாட் "எனும் வெடிகள் வந்திருந்தது. கணவர் அதை வாங்கி வந்தார்கள். கீழே ஒரு வெடி வெடித்து விட்டு, மேலே போய் இன்னொரு வெடி வெடிக்கும். இலட்சுமி வெடி, சரவெடிகள், அணுகுண்டுகள், ராக்கெட், சாட்டை, பென்சில், வித வித  மத்தாப்புகள்,  என்று வாங்கிவந்தார்கள்.

இப்படி தீபாவளிக்கு வெடித்து  வந்ததில் ஒரு மாற்றம்- நானும் அம்மா ஆனவுடன். குழந்தைகள் நிறைய வெடிக்க வேண்டும் என்பதால் நான் வெடிப்பதைக் குறைத்துக்கொண்டேன்.  அவர்கள் வெடிப்பதைப் பார்த்து ஆனந்தம் அடைவதுடன் நிறுத்திக் கொண்டேன். இருந்தாலும் என் பிள்ளைகள் கொஞ்சமாவது என்னை வெடிக்க வைப்பார்கள்.

:”வெடி ரோக்கா ”(வெடியின் பெயர், விலை விபரம் உள்ள சீட்டு) வாங்கி வந்து ,
என்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று குறித்துக் கொண்டு அப்பாவும் மகனும், மகளும் கடைக்குப் போவார்கள்.  அதன்படி வாங்கி வருவார்கள்.
இப்போது தங்கள் ஊரில் வெடிக்க முடியாது என்பதால், மகன் இங்கு தீபாவளிக்கு வந்தால் இஷ்டம் போல் விதவிதமாய் வெடிகள் வாங்கி வெடித்து மகிழ்வான்.

சிறுவயதில், எங்கள் மகன் பகலில் சாட்டை வைக்க வேண்டும் என்று
”சாட்டை! சாட்டை” என்று அழுதான். அவனது அழுகையைக்  டேப் செய்ய ஆசைப் பட்டு சாட்டையை கொடுக்காமல் பகலில் சாட்டை வைக்க கூடாது என்று சொல்லி மேலும் அழ வைத்து டேப் செய்தார்கள். எல்லோரும் எதுக்கு அழுகிறாய் என்று கேட்டால் மறுபடியும் ஆரம்பிப்பான் ”சாட்டை சாட்டை” என்று  இப்படி அவனை எல்லோரும் சேர்ந்து கலாட்டா செய்ததை  டேப்பில் பதிவு செய்து வைத்து இருந்தோம்.   அடிக்கடி போட்டுக் கேட்டு மகிழ்வோம்.

என் மகன் வெகு நாட்களுக்கு அப்பா மாதிரி சட்டை தான் வேண்டும் என்பான். இருவருக்கும் ஒரே மாதிரி சட்டை எடுத்துத் தைக்கக் கொடுப்போம். கல்லூரி சென்றபின் தான் ”அப்பாவுக்கு வேறு வாங்க வேண்டும். எனக்கு வேறு வாங்க வேண்டும். அப்போதுதான்  இரண்டு சட்டைகளையும் நான்  போடலாம்” என்பான்.

என் பெண்ணுக்கு நான் எடுத்துக் கொடுக்கும் துணிகள் பிடிக்கும். அம்மா
செலக்ட் செய்தால் மிக அருமையாக இருக்கும் என்பாள். இப்போது காலம் மாறுது கருத்துகளும் மாறுது . இப்போது சேலை மட்டும் தான் என் தேர்வு. மகள் மருமகளுக்கு எல்லாம்,   மாடல் உடைகள் அவர்கள் தேர்வு.

அத்தையும் அம்மாவைப் போலவே ருசியாக  நிறைய பலகாரங்கள் செய்வார்கள்.  கை முறுக்கு, தட்டை,  மைசூர்பாக், பாதாம் ஸ்வீட் , நெய் உருண்டை என்று எல்லாம்  செய்வார்கள்..

அம்மாவைப் போல நானும் தீபாவளி சமயம்  பலகாரங்கள் நிறைய செய்தகாலம் உண்டு. இப்போது  ஏதோ கொஞ்சம் செய்கிறேன்.  புதிது புதிதாக
செய்த  ஆர்வம் இப்போது இல்லை.  முன்பெல்லாம் தீபாவளி அன்று புதுவகையான இனிப்புதான் ஒவ்வொரு வருடமும். இறைவன் அருளால் அது நன்றாக அமைத்து விடும்.

ஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு  என்ற பதிவில் எங்கள் வீட்டுத் தீபாவளிக் கொண்டாட்டங்கள் பற்றி ஆதவன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருப்பேன்.  எங்கள் வீட்டுத் தீபாவளி எப்படி இருக்கும் என்பதை படிக்க விரும்பினால் படிக்கலாம்.

புத்தகத்தில் படித்த  தீபாவளி கருத்துக்கள்  :-

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. துலாமாத மகாத்மியத்தில் தீபாவளியைப் பற்றி குறிப்பிடும் போது “தையலே லட்சுமி! ஜல கங்கா” என்றுவருகிறது.அன்று எந்த இடத்தில்   குளித்தாலும்  கங்கையில் குளித்த பலன் என்று சொல்லப்படுகிறது. ஆதிகாலத்தில் தீபாவளியை ”எண்ணெய்த் திருவிழா ”என்றே குறிப்பிட்டார்களாம்.

தீப ஒளி வழிபாடு நம் பண்பாடு, இறைவன் இசையால் மகிழ்பவன். இசையின் மூலம் ஒலி  இசையாக மாற்றாமல் ஒலியையே இறைவனுக்கு சமர்ப்பிப்பது வெடி வழிபாடு. ஒளி வழிபாட்டோடு  ஒலி வழிபாடும் இறைவனுக்கு உகந்ததே! கோவில் திருவிழாக்களில் வெடி வெடித்தும் பல்வண்ண வாணவேடிக்கைகளும் இடம்பெறும்.

தீபாவளி என்பது இறைவனுக்கு நாம் செய்யும் ஒளி, ஒலி வழிபாடு. எண்ணெய்க் குளியல், புத்தாடை, பலவித பக்ஷணங்கள், பெரியவர்களிடம்
 ஆசி பெறுதல், வெடி வெடித்தல், மத்தாப்பு கொளுத்துதல், ஆலயம், செல்லுதல், அனைத்தும் தீபாவளி கொண்டாட்டங்களில் இருப்பதால் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் பண்டிகை..

பெரியவர்களிடம் ஆசி பெறுதல் எனும்போது என் மாமனார் அவர்களின்  நினைவு வந்து விட்டது.  முன்பு எல்லாம் அவர்கள் கடிதம் எழுதும் போது ”தீபாவளிக்கு முன்னதாக  வந்து சேருங்கள் ”என்று எழுதுவார்கள். போன தீபாவளிக்கு மகனுடன் அவனது ஊரில் கொண்டாடியதால்  கோவையில்  இருக்கும் மாமாவிடம் ஸ்கைப் மூலம்  ஆசி பெற்றோம். இந்த வருடம் தெய்வமாக இருந்து அனைவருக்கும் ஆசி வழங்குவார்கள். அவர்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் மாமா கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்து இருக்கிறேன்.


மகன், மருமகள் பேரனுடன் கொண்டாடடிய போன தீபாவளியை நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம் இப்போது.   குழந்தைகள் வரும் நாளே தீபாவளிப் பண்டிகை  போல் மகிழ்ச்சி தரும் நாள்.

காலையில் இறைவனை வழிபட்டு,  தீபாவளி மருந்து சாப்பிட்டு விட்டு,  பின் பலகாரங்கள் சாப்பிட்டு,  வாணங்களைக் கவனமாய்  வெடித்து, மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடி மகிழுங்கள்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

                                                         வாழ்க வளமுடன்!

                                                                    -----------------

படம் இங்கே ! பதில் அங்கே!

$
0
0

சும்மா என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்  திருமதி . தேனம்மை அவர்கள்  தன் வலைத்தளத்தில்  ’சாட்டர்டே ஜாலி கார்னர்’ என்று ஒரு பதிவர் பேட்டியை பகிர்ந்து கொள்கிறார். இந்தமுறை என்னை அழைத்து இருந்தார்.  

 கோலங்கள் போடுதல் தொடர்பான உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். என்றும்,

 உங்களுக்குப் பேர்வாங்கித்தந்த கோலம் எது. ?///; இரண்டு கேள்விகள் கேட்டு இருந்தார். கோலங்களும் சில அனுப்பி வைக்க சொல்லி இருந்தார். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை. அவரது தளத்தில் என் கோலங்கள் தெரியவில்லை.


 ரோல் காமிராவில் எடுத்து இருந்த பழைய படங்களை ஆல்பத்திலிருந்து டிஜிடல் காமிரா மூலம் எடுத்து அனுப்பினேன்.

 இப்போது படங்களை இங்கு அனுப்பிப் பார்த்தேன் வருகிறது. படங்கள் இங்கே பதில்கள் அங்கே. தேனம்மைஅவர்களின் தளத்திற்குப்   போய்ப் படித்து பார்த்துக் கருத்துகளை அங்கு  சொல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                               









                                
                                                             வாழ்க வளமுடன்.
                                                                       ------------------------

பாப்பா பாடும் பாட்டு ! கேட்டு தலையை ஆட்டு!

$
0
0
குழந்தைகள் தினம் இன்று.  குழந்தைகளால் நேரு மாமா என்று அன்புடன்  அழைக்கப்படும் நம் முதல் பிரதமர் திரு. பண்டித ஜவகர்லால்நேரு அவர்களின் பிறந்த நாள்,  125 வது பிறந்த நாள் .

குழந்தைகள் நலமே நாட்டின் நலம். குழந்தைகளுக்கு நாம் தரும் அன்பும்   அர்வணைப்பும் அவர்களை நல்லவர்களாக நல்ல மனிதர்களாக வாழ வைக்கும்.

குழந்தைகளுடன் நேரம் செலவிட்டால் நமக்குக் கிடைப்பது உற்சாகம் .’டானிக்’’சாப்பிட்ட தெம்பு தரும். 

எனக்கு குழந்தைகளுடன் பேச பிடிக்கும், விளையாடப் பிடிக்கும். ரயிலில் வரும்போது முன்பெல்லாம் ஒருத்தருடன் ஒருத்தர் பேசி வருவோம். இப்போது எல்லாம் அவர்கள் ஆளுக்கு ஒரு செல்போன் அல்லது லேப்டாப், என்று வைத்துக் கொண்டு அதில் ஆழந்து விடுகிறார்கள். ரயில் சிநேகம் குறைந்து வருகிறது.  கோவைக்கு ரயிலில் போனபோது ஒரு குழந்தை எனக்கு சிநேகம் ஆனாள். அந்த குழந்தை என்னிடம் பாடல்கள் பாடிக் காட்டினாள். அந்த பாடல்களை இன்று குழந்தைகள் தினத்தில் கேட்டு மகிழலாம்.  மழலை பாடல் கேட்க இனிமை.







குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு ஓவியப் போட்டிகள் நடத்திப் பரிசு கொடுக்கிறார்கள்.

என் பேரன் வரைந்த ஓவியங்கள், அவன் பள்ளியில் செய்த கைவேலைகள் எல்லாம் கீழே காணலாம்.

                               


                                  

                                     
                           

ஓடி விளையாடு பாப்பா  என்று பாரதி சொன்னது போல், ஓடி விளையாடு தாத்தா, பாட்டி என்று பேரக் குழந்தைகள் தாத்தா, பாட்டிகளை விளையாட வைத்து அவர்களை ஆரோக்கியமாய் வைத்து இருக்கிறார்கள்.
மழலைச் செல்வங்கள் வாழக! வளர்க!

                                                               வாழக வளமுடன்.
                                                               ==================

குங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக.

$
0
0





குங்குமம் தோழியில் வந்த இந்த பேட்டியை மேலும்  முழுமையாக குங்குமம் தோழி இணையதளத்தில்   படிக்கலாம்.
 வீடு, பள்ளி, பிளாஸ்டிக் பயன்பாடு, மறுசுழற்சிக்கு என் கணவர் வரைந்த  ஓவியங்களும் அதில் இடம் பெற்று உள்ளது.

                                           குங்குமம் தோழிக்கு நன்றி.

                                                  வாழ்க வளமுடன்.
                                                                  ---------

மெல்ல விடியும் பொழுது

$
0
0
கார்த்திகை பனி மூட்டத்தில்  சூரியன் எழுவது கடலலையின் மேல் சூரியன் காட்சி அளிப்பது போல் இல்லே!

ப்றவையும், மரமும், சூரியனும் 

மேக மூட்டத்தில் நிலவை போல் காட்சி அளிக்கும் சூரியன்


நிலவோ! சூரியனோ!

பனியை விலக்கி வெளி கிளம்பும் சூரியன்

உணவும் தண்ணீரும் எடுக்க வரும் பறவைகள்







உணவு உண்ணும் மைனா
                                       
                                             இது என்ன பறவை கண்டு பிடியுங்கள்?

                                                            வாழ்க வளமுடன்.

அன்று மனிதர்கள் வாழ்ந்த வீடு! இன்று மரங்கள் வளரும் வீடு!

$
0
0

                                                                    கதைகள் சொல்லும் வீடு

பழைய வீட்டின் மீது நாலு மரம் வளர்த்து இருக்கிறது. முருங்கை மரம், ஆலமரம், அரசமரம், புங்கமரம் வளர்ந்து இருக்கிறது.காலத்தின் சுவடுகளை தாங்கி நிற்கும் இந்த வீட்டில் எத்தனை கதைகள் இருக்கும் !

கடை முழுக்கு சமயம் படித்துறைக்குப் போன போது அதன் அருகில் இருந்த இந்த பழைய வீடு கண்ணில் பட்டது. புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தேன் நேற்று. அதற்கு  அழகாய் இன்று கவிதை வடித்து விட்டார்கள் கீதமஞ்சரி.

 கீதமஞ்சரியின் அருமையான கவிதையை நீங்களும் படிக்க இங்கு  :-

சந்தடியற்று என்னை அநாதையாக்கிப் போனவர்களின்
எச்சங்கள் இப்போது எங்கோ வெகுதொலைவில்!
எங்கிருந்தோ தொலைதூரத்திலிருந்து வந்த
பறவைகளின் எச்சங்கள் இதோ பத்திரமாய் என் தலையில்!
பழகிய உயிர்மூச்சுகளின் பிரிவெண்ணி 
பாழ்நினைவுகளால் தடுமாறிடும் பொழுதுகளிலெல்லாம்
வருடிக்கொடுகின்றன இலைக்கரங்களால் கிளைகள்!
சுவர்பிளந்து உள்ளேகுகின்றன வேர்க்கால்கள்!
நானிருந்த இடத்தில் நாளையிருக்கலாம்
ஆலும் அரசும் புங்கையும் முருங்கையும்!
ஆனாலும் என்னை நீங்கள் அடையாளம் காணலாம்
வந்தமரும் பட்சிகளின் ஆரவார ஒத்திசைவில்!


நன்றி கீதமஞ்சரி.

கேட்டீர்களா? வீடு பாடும் கவிதையை.


                                                              வாழ்க வளமுடன்.
-                                                                         ------------------

மழையும் , சூரியனும்

$
0
0







காலைமுதல் வானம் மேக மூட்டத்துடன் மழை வர பார்த்தது சூரியன் மறைந்து மறைந்து காட்சி தந்தார். தீடிரென்று மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. மழை, சூரியன் காட்சிகளை பாருங்களேன். மழை பார்க்க அலுக்காத ஒன்றுதான் ஆனால் விடாது பெய்யும் பெருமழை அனைவருக்கும் கஷ்டம் தான்.
                       ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய!
                        மாரி அளவாய் பொழிய மக்கள் வளமாய் வாழ!

                                வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

அச்சரப்பாக்கம் சிவன் கோவில்

$
0
0


பொன்திரண் டன்ன புரிசடை புரளப்
           பொருகடல் பவளமொ டழல்நிறம் புரையக்
குன்றிரண் டன்ன தோளுடை ய்கலம்
           குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்திரண் டன்ன  நுண்ணிடை யரிவை
          மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
அன்றிரண் டுருவ மாய்வெம் மடிகள்
         அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே
                                                                         -திருஞானசம்பந்தர் தேவாரம்

அச்சரப்பாக்கம் கோவிலுக்குப் போன மாதம் 10 தேதி சென்றோம்.  சென்னைக்கு உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்று  இருந்தோம்.   .தேவாரத்தில் இது அச்சிறுபாக்கம் என்று கூறப்படுகிறது.

 நாங்கள் போன அன்று சங்கடஹரசதுர்த்தி. இந்தக் கோவிலில் விநாயகர் மிக முக்கியமானவர். அன்று எதிர்பாராமல் சங்கடஹர சதுர்த்தி அமைந்து விட்டது. கோபுர வாயிலுக்குள் நுழையும் போதே வெல்லக் கொழுக்கட்டை
 பிரசாதம் தந்தார்கள். விநாயகரின் அருள் கிடைத்த மகிழ்ச்சி.

இக் கோவில் மதுராந்தகத்திலிருந்து தெற்கே 16 கி.மீ . தொலைவில் உள்ளது.
இராஜகோபுரத்துடன்  இரண்டு பிரகாரங்கள்   கொண்ட கோவில். இரண்டு சிவலிங்கங்கள், இரண்டு அம்பாள்கள் இருக்கிறார்கள்.

ஸ்வாமி பேர் எமையாட்சீசர், அம்மன் சுந்தரநாயகி. (பாலசுகாம்பிகை  எனும் இளங்கிளியம்மை என்பன வேறு பெயர்கள்.)

பாண்டிய மன்னன் பிரதிஷ்டை செய்த ஸ்வாமிக்கு உமையாட்சீசர், அம்மன் மெல்லியலாள்.

எமையாட்சீசர் பழமையானவர் ,சுயம்பு மூர்த்தி. பாண்டிய மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட  உமையாட்சீசர் பின்னர் வந்தவர்.

கண்ணுவமுனிவர், கெளதமமுனிவர்,பூஜித்த தலம்.

                                   





       கொடிமரமும் நந்தியும் கோபுரவாயிலுக்கு நேரே இல்லாமல் சற்றுத் தள்ளி உள்ளன.
                                        


ஊரின் பெயர்க் காரணம்:-

1. சிவபெருமான் திரிபுர தகனத்தின் போது பிள்ளையாரை வணங்காமல் போனதால் அவர் ஏறிச் சென்ற தேரின் அச்சு முறிந்தாகவும், பின்
சிவபெருமான் விநாயகரை நினைத்தபின் அச்சு சரியானதாகவும் சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறிந்த இடம் என்பதால் இத்தலம்  அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது.





2.சிவபெருமான் திரிபுரதகனம் செய்யும் பொருட்டுத் தேரில் ஏறிச்சென்ற போது தேர்வடிவாக தேவர்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவனுக்கு துணைசெய்வதை எண்ணி  அகந்தை கொண்டதால்  இறைவன் அச்சுமுறியச் செய்தார்.  அதனால்  இத்தலம் அச்சிறுபாக்கம் என்றும் கூறப்படுகிறது.

3. பாண்டிய மன்னன்  தனது நாட்டில் திருக்கோவில் பிரதிஷ்டைக்கு வேண்டிய பொருட்கள்,  கங்கை மணல்  ஆகியவற்றை ஏற்றி வரும் போது இத்தலத்தின் இடத்தில் அச்சுகள் முறிந்தன. மன்னன் இறைவனது அசரீரி வாக்கினைக் கேட்டு, இத்தலத்தில் திருப்பணிகள் செய்து தன் நாடு திரும்பினார் என்ற வரலாறும் உண்டு.  வண்டிகள் அச்சுமுறிந்த இடம் இவ்வூருக்கு அருகில் உள்ள வண்டிக்குப்பம்.


கருவறையில் சுவாமியும் அம்பாளும் சிலைவடிவில் இருக்கிறார்கள்
முன் இருப்பது - எமையாட்சீசர்  பழமையான மூர்த்தி

வெளிப் பிரகாரம்

அரசும் வேம்பும் இணைந்து இருக்கும் இடத்தில் பிள்ளையார், நாகங்கள்


அம்மன் சன்னதியில் ஓரத்தில் உள்ள சாஸ்தா
திருஞானசம்பந்தர் பாடல்கள்
உள் கோபுர வாயில்

தீர்த்தம்:-தேவ,பானு சங்கு தீர்த்தங்கள். பானுதீர்த்தம் கோவிலுக்கு எதிரில் உள்ளது.


கோவில் அருகில் ஒரு தேரும், கோவில் எதிரில் ஒரு தேரும் உள்ளது

அச்சு முறிந்த சக்கரங்கள்( இவை பிற்காலத்தில் முறிந்த சக்கரங்கள்)
தலமரம் - கொன்றை. தலவிருட்சத்தின்  அடியில் சுவாமி, அம்மன், திருஞானசம்பந்தர், நந்தி
கோபுர வாசல் அருகில் உள்ள இளங்கிளிஅம்மன்

 இத்தலம் இராஜேந்திர சோழ வளநாட்டைச் சேர்ந்ததாகக் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு கூறுகிறது. இறைவன் பெயர் அக்ஷேஸ்வரர் , அச்சுக் கொண்டருளிய தேவர் என்று பொறிக்கப்பட்டுள்ளது.

நான்கு காலபூஜை, 10நாட்கள் சித்திரை மாதத்தில் திருவிழா நடக்கிறது.

உள்ளே இருக்கும் ஸ்வாமி சன்னதிக்கு, வெளியே பெருமாளும் இருக்கிறார்
அலுமேலுத் தாயார்

மூன்று தேவியர்-  நவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுமாம்.



சித்திரைத் திருவிழா நடைபெறும்போது சுவாமி எழுந்தருளும் வாகனங்கள்.
                     
 ஓதுவார் ஞானப்பிரகாசம் அவர்கள் தேவாரங்கள் பாடி, கோவில் வரலாற்றைச்  சொன்னார். அவர், ”தினமும் நமச்சிவாயமந்திரம் சொல்லுங்க நலம் அடைவீர்கள் ”என்றார் .

மனநிறைவுடன் அவரிடம் விடைபெற்றுப்  பின் சென்னை வரும் வழியில் மேல்மருவத்தூர் அம்மனை  நன்றாகத் தரிசனம் செய்து சென்னை வந்து சேர்ந்தோம்.
                                                              =====================
                                                                     வாழ்க வளமுடன்.

கனவில் வந்த காந்திஜி

$
0
0
                                                       

 தேவகோட்டை கில்லர்ஜிஅவர்கள் கனவில் தேசபிதா வந்து இருக்கிறார் . வந்து 10 கேள்விகளை கேட்டு இருக்கிறார். அவர் அதற்கு அழகான பதில்களை சொல்லி விட்டு  மேலும் ஒரு பத்து பேர்களிடம் அதே கேள்விகளை கேட்டு பதில் சொல்ல சொல்லி இருக்கிறார். அப்படி அவர் அழைத்தவர்களில் ஒருவர் தஞ்சையம்பதி என்ற வலைத்தளம் வைத்து ஆன்மீக பதிவுகளை அளித்து வரும்   திரு .துரைசெல்வாராஜூ அவர்கள்.  என்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள். அவர் அழைப்பை ஏற்று  கேள்விகளுக்கு எனக்கு தெரிந்தவரை பதில் அளிக்கிறேன்.

இப்படி அழைப்பார்கள் என்று தெரிந்தோ என்னவோ, நான் ஒரு முறை காந்திஅடிகளோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன் போலும்!அது தான் இந்த படம்.(இது அமெரிக்காவில் வாக்ஸ் மியூசியத்தில் எடுத்தபடம்)

1. நீ மறுபிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?
வணக்கம் காந்திஜி , வாழ்க வளமுடன்.
நான் இருக்கும் வீட்டை சுற்றி கணபதி இருக்கிறார்.  அவரை வணங்கினால்  துன்பம், கர்மவினைகள், மீண்டும், மீண்டும் பிறந்து துன்புறுவது  எல்லாம் கிடையாது  என்று   விவேக சிந்தாமணி நூல் கூறுகிறது.அதனால் அவரை தினம் வணங்குவதால்   காந்திஜி! எனக்கு மறுபிறவி கிடையாது.

அல்லல்போம் வல்வினைபோ மன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்- நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துச் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.

2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால் ? சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கிறதா?

முதலில் கொடுத்துப் பாருங்கள், என்ன திட்டம் என்பதைப் பிறகு சொல்கிறேன்.

3.இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ? என்ன செய்வாய்?

நம் நாட்டுக்கு நலம்பயக்கும் அந்த திட்டத்தை அவர்கள் எதற்கு எதிர்க்கிறார்கள். நல்ல திட்டத்தால் அவர்களே இங்கு வந்து விடுவார்கள்.

4.முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
முதியோர்கள் எல்லாம் ஏதாவது, பேஸ்புக் மற்றும் வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் ஏதாவது எழுதிக் கொண்டு படித்துக் கொண்டு இருந்தால்  நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள். அவர்களில் ஏழை முதியோர்கள்,
 ஆதரவற்ற முதியோர்கள் தனியாக இருக்க கூடாது என்று அரசாங்கமே  அவர்களை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க  உணவு, உடை, மருத்துவ வசதி,  அன்பாக பேசி உரையாட ஆட்கள் என்று அளித்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். அவர்களின் திறமைகளை அறிந்து நாட்டின் நன்மைக்கு அவர்களது ஆலோசனைகளை பயன்படுத்திக் கொள்ளும்.


5.அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?
அரசியல்வாதிகள் எல்லாம் மனிதநேயப்பண்பு, சேவை மனப்பான்மை  எளிமை, இனிமை  கொண்டிருக்கவேண்டும்.அவர்கள் மட்டுமே தேர்தலில் ஈடுபடப் புதிய திட்டம் போடப்படும்.

6.மதிப்பெண்கள் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்கு போனால்?
அவர் அவர் தகுதி அவரவர்களுக்கு தெரியும். சரியான மதிப்பெண்கள் வரவில்லை என்றால் மேல் நீதி மன்றம் போவதற்கு உரிமை தேவை.

7.விஞ்ஞானிகளுக்கென்று  ஏதும் இருக்கிறதா?
மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்  இணைந்த வாழ்க்கை தான் வாழ்கிறோம், அதனால் விஞ்ஞானிகளிடம் வாழ்வின் முன்னேற்றத்திற்கும், வாழ்வின் சிறப்புக்கும், ஏற்றவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும், விளைநிலங்கள் முழுவதும் வீட்டுமனை ஆகி வருகிறது. அதனால் வருங்காலத்தில் விளைநிலங்கள் இல்லாமல் உணவு பயிர்களை  விளைவிக்கும் வித்தை அல்லது உணவு இல்லாமல் உடலைப்பேணி வளர்க்கும் விஞ்ஞானத்தை  உடனே கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொள்வேன். கண்டுபிடிப்புக்கு வேண்டிய வசதிகளை விஞ்ஞானிகளுக்கு செய்து கொடுக்கும், அரசாங்கம்.

8. இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?,

 நலத்திட்டங்களை முந்திய அரசு செய்தவற்றைப், பிறகு வரும் எந்த அரசும் மறுக்க முடியாது . மறுத்தால் தோல்வி நிச்சயம். வேண்டும் என்றால் விஞ்ஞானிகளை  இன்னும் அதிகப்படியாக  இரண்டு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க உத்தரவு இடும்.


9.மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக? 

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாமை இல்லாத நிலை வேண்டும். பணக்கார நாடாக இருந்தாலும் வீடு இழந்தோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆட்சிக்கு  வரும் அனைவரும், சொல்லி ஓட்டு கேட்பது ஏழ்மையை ஒழிப்போம், கல்லாதவர்களே இருக்க மாட்டார்கள் என்பது தான்.
அதை நடைமுறைக்கு கொண்டு வந்தாலே புதுமை செய்தமாதிரிதான்.
மற்ற நாடுகள் ஏற்கனவே நம் மக்களின் அறிவுத் திறமையைக் கண்டு வியக்கிறது,   இல்லாமை, கல்லாமை இரண்டையும்  ஒழித்த புதுமையைச் செய்து விட்டால் எல்லா நாடுகளும் நம் புதுமை கண்டு வியக்கும்.


10.எல்லாமே  சரியாகச் சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாக பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய் உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன  பிறவி வேண்டுமென
இறைவன் கேட்டால்?

காந்திஜி ! முதல்கேள்வியிலேயே சொல்லிவிட்டேன் , எனக்கு மறுபிறவி கிடையாது என்று . அப்படியும் இறைவன் கொடுத்தால் அவன் விருப்பம்.  என்னை எப்படி படைக்கவேண்டுமோ அப்படிப் படைத்துக் கொள்ளட்டும்.

இந்த தொடர் பதிவை அனைவரும் எழுதி இருப்பார்கள் நான் காலதாமதமாய் எழுதுவதால் எழுத அன்பர்கள் இருந்தால், விருப்பம் இருந்தால் எழுதலாம்.
                                                                      ---------------
                                                           வாழ்க வளமுடன்.




.

கலைமகளும் சில நினைவலைகளும்

$
0
0

இன்று கி.வா.ஜ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் கி.வா.ஜகந்தாதன்  அவர்கள்.  போனமாதம் 4ம் தேதி அவரின் நினைவு நாள்.
முன்பு நாங்கள் கலைமகள் பத்திரிக்கை  வாங்குவோம். அவற்றில் சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றைப் போட்டு விட்டோம்.
கி.வா ஜ  அவர்கள் எழுதிய  ’ஆலமரத்துச் சாமியார்’ கதை நன்றாக இருக்கும். படித்திருப்பீர்கள், மறுபடியும் படித்துப் பாருங்களேன்.



                   

         
                 
கதையை மட்டும் கிழித்து வைத்து இருந்து இருக்கிறேன். 1983 ஆம் வருடம்     கலைமகளில் வந்த கி.வா.ஜ அவர்களின் ஆலமரத்துச் சாமியார்  கதை, அவர் நல்ல நகைச்சுவை உணர்வு உடையவர் என்பதைக் காட்டும்.

கலைமகளில் வந்த  அமரர் ராமரத்னம் நினைவுப் பரிசு பெற்ற   குறுநாவல்   புத்தகங்கள் சில வைத்து இருக்கிறேன்.







என் மாமியாரின் தகப்பனார்  திரு. நாறும்பூநாததேசிகர் அவர்கள் தென்காசி போர்டு உயர்நிலைபள்ளியில் தமிழாசிரியராக இருந்தார்கள். அவர்கள் 1932 ல் கலைமகள் பத்திரிக்கையின் முதல் இதழ் வெளிவந்தபோது,அப்போது தன்னிடம் படித்த மாணவர்களைக் கலைமகள் புத்தகம் படிக்கச்சொல்லி கூறியதாகப் பிரபல எழுத்தாளர் மாயாவி அவர்கள்  1983 ல் வந்த கலைமகளில் சொல்லி இருந்தார். அப்போது நாங்கள் சர்க்குலேசன் புத்தகம் வாங்கிப் படிப்போம். அனைத்து புத்தகங்களும் கொண்டு வந்து கொடுப்பார், சிலவற்றை புதிதாகக் கொடுப்பார், சிலபுத்தகம் கொஞ்சம் பழசாய் வரும். அப்படி இரண்டு வாரம் கழித்து கொடுத்த கலைமகளில் தாத்தாவைப் பற்றி மாயாவி குறிப்பட்டது இருந்தது.  என் கணவர் கடையில் போய் கேட்டுப் பார்த்தார்கள் கிடைக்கவில்லை. அப்போது அந்த சர்க்குலேசன் புத்தகம் தருபவரிடம்  எல்லோரும் படித்தவுடன் என்னிடம் கொடுங்கள் என்று கேட்டு இருக்கலாம், அப்படி கேட்க அப்போது தெரியவில்லை, அவசர அவசரமாக அதை என் டைரியில் எழுதிக் கொண்டு கொடுத்து விட்டேன் அவரிடம். அவசரம் இல்லாமல் மெதுவாக எழுதினால் கொஞ்சம் எழுத்து பார்க்கும்படி இருக்கும் அவசரமாய் எழுதினால் எழுத்து கோழிக்கால்தான் !

அந்த டைரியில் பத்திரிக்கைகளில் வந்த  கோலம், சமையல் குறிப்புகள் எல்லாம்   இருக்கும். என் எழுத்து சரியாக புரியவில்லை என்றாலும். அதை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.





                                                          
                                                            திரு.  நாறும்பூநாத தேசிகர்

மாயாவி அவர்கள் சொன்னது:-
//எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்பொழுது நான் தென்காசியில் போர்டு உயர்நிலைப்பள்ளியில் நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்தேன், என் விருப்பப் பாடம் தமிழ். எங்களுக்குத்தமிழ்ப்பண்டிதராக இருந்தவர் திரு. நாறும்பூநாததேசிகர் என்பவர்.   மாணவர்கள் நாவல்களையும் பத்திரிக்கைகளையும் படித்துக்கெட்டுப் போகின்றனர் என்ற கருத்துடையவர்
அவர். இவ்வளவுக்கும் அன்று பத்திரிக்கைகள் என்று சொல்லும் ஒரு சிலவே வெளிவந்தன.

அப்படிப் பட்டவர்  ஒருநாள் தமிழ் வகுப்பில் “நான் இதுவரை உங்களிடம் பத்திரிக்கைகளைப் படிக்காதீர்கள் என்று சொல்லிவந்தேன், ஆனால்  அதே நான் இப்போது இந்த பத்திரிக்கையைத் தவறாமல் வாங்கிப் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.” என்று தம்மிடமிருந்த மஞ்சள் அட்டையிட்ட கலைமகளின் முதலாவது இதழைக் காட்டினார். பிறகு விளக்கமும் தந்தார்.
ஏனென்றால் மற்ற பத்திரிக்கைகளிலிருந்து மாறுபட்டு இருக்கிறது. இலக்கணப் பிழையற்ற நல்ல தமிழில் இதில் விஷயதானம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்ச்சான்றோர் பலர் இதில் தொடர்ந்து எழுதுவார்கள் என்று முதல் இதழ் கூறுகிறது. இலக்கியம் விஞ்ஞானம் பொழுதுபோக்கு கட்டுரைகள் கதைகள், முதலிய யாவரும் படிக்கும் முறையில் வெளியாகும்.
“ஆம், யாவரும் படிக்கும் முறையில்” என்று திரு. நாறும்பூநாத தேசிகர் அன்று கூறியது இன்றளவும் கலைமளின் குறிக்கோளாக இருந்து வருவதை யார்தான் மறுக்க முடியும்? . //

என் எழுத்தைப் படிக்க முடியாதவர்கள் டைப் செய்த  இந்த அழகான எழுத்தில் படிக்கலாம்.
                             
இப்படி எல்லாம்  குறித்து வைத்துக் கொண்டு புத்தகங்களை வாங்கிப் படித்து இருக்கிறேன். தொடர்கதைகள் விட்டுப்போகாமல் இருக்க.

அமெரிக்கா போய் இருந்த போது கி.வா,ஜவின் பேத்தியை (மூத்த மகன் அவர்களின் மகள்) வித்யாசுவாமிநாதன் அவர்களை  சந்தித்தேன்.(குடும்ப நண்பர்)அவர்கள் வீட்டுக்கு உணவு உண்ண அழைத்து இருந்தார்கள், அவர்களிடம் கி.வா.ஜவின் நினைவுகளைப்பற்றி சொல்லுங்கள் என்றேன் அவர்கள், கி.வா.ஜ அவர்களை சந்திக்க,  பெரிய தமிழ் அறிஞர்கள் வருவார்கள் என்றும், சிரிக்க சிரிக்க இலக்கியம் சார்ந்த கலந்துரையாடலாக அது இருக்கும். நான் அப்போது சிறுமி இதன் பெருமைகளை உணர்ந்து இருக்கவில்லை. இப்போது தான் என் தாத்தா எவ்வளவு பெரிய மனிதர் என்று தெரிகிறது என்று கூறினார்கள்.
நானும் என் கணவரின் தாத்தா தன் மாணவர்களைக் கலைமகள் படிக்கச் சொன்ன நிகழ்ச்சியை அவரிடம் பகிர்ந்துகொண்டேன்
கி.வா.ஜ அவர்களும்  துணைவியாரும் சேர்ந்த படம், தனியாக அவர் படம் எல்லாம் காட்டினார்கள். உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போதும் தன் புத்தக அலமாரி அருகில் தான்  படுக்கை.அவரது  புத்தக அலமாரியில் எவ்வளவு புத்தகங்கள் ! அத்தனையும் படித்து முடித்தவுடன் திரும்பவும் அழகாய் புத்தக அலமாரியில் அடுக்கி வைப்பராம்.
 தன் பாட்டி அவரை நன்கு கவனித்துக் கொண்டதாகச் சொன்னார். கி.வா.ஜ முருக பக்தர் என்பதால்,  அவரது நினைவு நாளில் அஞ்சலி செலுத்தியபோது அவர்விரும்பிய  முருகனும் அவர் அண்ணனும்  கி.வா.ஜ  அருகில் இருக்கிறார்கள்.



                                               

கலைமகளில்” தலையில் சூடிய மலர்” என்று நவம்பர் 2014 கலைமகளில் கி.வா.ஜ பற்றி கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் சொன்னது.:-

ஒருமுறை தீபாவளி மலரை எடுத்துக் கொண்டு கலைமகள் அதிபர் ஆர். நாராயணஸ்வாமி கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. இருவரும் வட இந்தியா பக்கம் போனார்கள். காஞ்சிப் பெரியவர் முகாம் இட்டிருந்த அந்த ஊரை அடைந்து அவரிடம் சமர்ப்பணம் செய்தார்கள்.

பொதுவாக எந்த ஒரு நூலை வாங்கிக் கொண்டாலும் காஞ்சிப் பெரியவர் அதனைப் புரட்டுவது வழக்கம். படிப்பதும் வழக்கம். மங்கலப் பிரசாதங்களை அந்த நூல் மேல் வைத்து எழுதியவருக்கும் வந்தவர்களுக்கும் கொடுப்பதும் வழக்கம். கலைமகள் தீபாவளி மலரைக் கையில் எடுத்து அதனைத் தலையில் வைத்துக் கொண்டார்கள். உடனே அதனை எடுத்து உதவியாளரிடம் கொடுத்துவிட்டார். கலைமகள் அதிபரிடமோ ஆசிரியரிடமோ எதுவும் பேசவில்லை!

கி.வா.ஜ. அவர்களுக்கு மனவருத்தம். என்னடா பெரியவர் தலையில் வைத்துப் பாரத்தை இறக்குவதைப் போல இறக்கி வைத்துவிட்டாரே என்று எண்ணினார். கூட்டம் கலைந்த பின்பு அதிபர் நாராயணஸ்வாமி சொன்னார்.
"இப்போ பெரியவாளை போய்ப் பார்ப்போம். உத்தரவு மற்றும் பிரசாதம் பெற்றுக் கொண்டு கிளம்புவோம்'என்று.

தங்கியிருந்த வீட்டின் பின்புறம் சாக்குகளின் மேல் அமர்ந்து கொண்டு கலைமகள் தீபாவளி மலரைப் படித்துக் கொண்டிருந்தார் பெரியவர்.
அப்பாடா'என்று பெருமூச்சு விட்டனர் அதிபர் நாராயணஸ்வாமியும், கி.வா.ஜ.வும். அருகில் அழைத்தார்! "என்ன விஷயம்? மலர் நன்றாக வந்திருக்கிறது. இந்தாங்கோ பிரசாதம் எடுத்துக்குங்கோ' - பெரியவர் சொன்ன பிறகு மனதுக்குள் ஆனந்தம் பிறந்தது என்கிறார் இப்போது எங்களுக்குப் பதிப்பாளராகவும் கலைமகள் இலக்கியக் குடும்பத் தலைவராகவும் இருக்கும் ஆர். நாராயணஸ்வாமி.

"பெரியவா நமஸ்காரம். நாங்கள் தீபாவளி மலரைச் சமர்ப்பித்ததும் தலையில் வைத்துக் கொண்டீர்களே? - ஏன்?'இது கி.வா.ஜ. கேள்வி.

"மலர்கள் சூடவேண்டிய இடம் எது'இது பெரியவாளின் பதில்.
"தலையில்தான் மலரைச் சூட வேண்டும்' - இது கி.வா.ஜ. குரல்.

"ஒப்பற்ற மலரைத் தந்துள்ளீர்கள். தலையில் சூடினேன். இது ஓர் அறிவுப் பெட்டகம். அறிவார்ந்த விஷயங்களும் தலைக்கு உள்ளே போக வேண்டியது தானே வாஸ்துவம்'இது பெரியவா!

ஆஹா எப்பேர்ப்பட்ட மரியாதையை எப்பேர்ப்பட்ட அபிப்பிராயத்தை கலைமகள் மீது பெரியவர் கொண்டு உள்ளார்கள் என்று உணர்ந்து கி.வா.ஜ.வும், ஆர். நாராயணஸ்வாமியும் நமஸ்கரித்துப் பிரசாதங்கள் பெற்று விடைபெற்றார்களாம்.

இன்று கி,வா.ஜ  அவர்கள் பற்றிய நினைவுகளையும், என் மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டேன்.
                                                               வாழ்க வளமுடன்!

----------------------


Viewing all 789 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>