Quantcast
Channel: திருமதி பக்கங்கள்
Viewing all 789 articles
Browse latest View live

திருக்கண்ணபுரப் பெருந்திருவிழா

$
0
0
         //மன்னுபுகழ்க்  கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
         தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
         கன்னிநன்மா  மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே
         என்னுடைய இன்னமுதே இராகவனே தாலே தாலேலோ//
                                                                      
                                                                                     - குலசேகராழ்வார்

     
                               
                                  

                                 
                               
9.2.2014 ஆம்தேதி திருக்கண்ணபுரம் சென்று இருந்தோம். அன்று அங்கு கருட சேவை, அரையர் சேவை  நடைபெற்றது. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது.

திருக்கண்ணபுரம் போக நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் போகும் பஸ்ஸில் திருப்புகலூர் என்ற இடத்தில் இறங்கி 2, கி,மீ போக வேண்டும்.நன்னிலம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 7 கி,மீ தூரம். மாயவரத்திலிருந்து சன்னா நல்லூர்வழியாக திருப்புகலூர் வரலாம்.குடவாசலிருந்தும் பஸ் வசதி உண்டு.

மூலவர்: நீலமேகப் பெருமாள், செளரிராஜன்,
                   நின்ற திருக்கோலம்
உத்ஸ்வர் : செளரிராஜ பெருமாள்.
தாயார் : கண்ணபுர நாயகி (ஸ்ரீ தேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி)
                  தனிக்கோயிலில் நாச்சியார் இருக்கிறார்.
தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி  
விமானம் : உத்பலாவதக  விமானம்.
கண்வமுனிவர், கருடன், தண்டக மஹரிஷிஆகியோருக்கு காட்சி கொடுத்து இருக்கிறார் இத தலத்தில்.

இத்தலப் பெருமாள் கையில் சக்கரம் , இடது புறம் ஆண்டாள், வலதுபுறம் பெருமாள் மணந்து கொண்ட பத்மாவதி தாயார் என்ற செம்படவ அரசகுமாரியும்  உள்ளனர்.  உற்சவ பெருமாள் கன்யாதானம் வாங்க கையேந்திய நிலையில் காட்சி அளிக்கிறார்.

கோயிலின் பெருமைகள் ;

  1.ஸ்ரீமந் நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்தக்ஷேத்திரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால் இந்த ஸ்தலம் “ஸ்ரீமத்ஷ்டாக்ஷர மஹா மந்தரஸித்தி க்ஷேத்திரம்” என்று பெயர் பெற்றது.

2. திருமங்கையாழ்வாருக்கு  திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட ஸ்தலம்.

3.  ரங்கபட்டர் என்கிற அர்ச்சகர் சோழ அரசனுக்கு . பெருமாளுக்கு கேசம் வளர்ந்ததை  காட்டுவதாக வாக்களித்ததைக் காப்பாற்ற, பெருமாள் தன் திருமுடியில் திருக்குழல் கற்றையை வளர்த்துக் கேசத்தைக் காட்டியருளியதால் செளரிராஜன் என்று அழைக்கப்பட்டார்.

4. விபீஷண ஆழ்வாருக்கு, ஸ்ரீ ரங்கநாதர் அருளியபடி அமாவாசை தினத்தன்று
பகவான் நடை அழகை காட்டியருளிய ஸ்தலம்.

5.பெருமாள் தன் சக்ராயுத்தால் விகடாக்ஷன் என்ற துஷ்டாசுரனை நிக்ரஹம் செய்தார்.  மஹரிஷிகளின்  பிரார்த்தனைப்படி சக்ரப்பிரயோகம் செய்த  கோலத்தில். மூலவர் காட்சி அளிக்கிறார்.

6.  முனையதரையர் என்ற மஹாபக்திமான் தம்முடைய மனைவி சமைத்த  பொங்கலை அர்த்தஜாமத்திற்குப் பிறகு கோயிலுக்குள் போக முடியாமல் மானஸீகமாக பக்தியுடன் ஸமர்ப்பித்தார்.பகவான் அதை ஏற்றுக் கொண்டார். மூடிய கோயிலில் மணி ஓசை கேட்டு பட்டர்கள் பார்த்த போது  மூலஸ்தானத்தில்  வெண்பொங்கல்  வாசனை நிரம்பி இருந்தது. அது முதல் அர்த்தஜாமப் பொங்கல் நிவேதனத்திற்கு “முனியோதரம் பொங்கல்” என்ற பெயர். தினந்தோறும் வெண்ணெய் உருக்கி, பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்வது விசேஷம் .

மங்களாசாஸனம்:            பாசுரங்கள்
பெரியாழ்வார் -                   71
ஆண்டாள்         -                   535
குலசேகராழ்வார் -            719- 729
திருமங்கையாழ்வார் _    1648-1747- 2067- 2078- 2673  (72)
நம்மாழ்வார்                   -     3656-3666
மொத்தம்                               128 பாசுரங்கள்.

’திருக்கண்ணபுரத்தில் பெருந்திருவிழா நடக்கிறது, ஒரு நாள் போய் வருவோம்’ என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள் என் கணவர். ஜெயா தொலைக்காட்சியில் திருவரங்கம் 100 என்று  பேசிக்கொண்டு இருக்கிறார் (அது மறு ஒலிபரப்பு)திரு. வேளுக்குடி திரு.கிருஷ்ணன் அவர்கள் . அவர் பேசிக் கொண்டு இருக்கும் போது இடையில் கண்ணபுரத்தில்  விழாவில் மாலை 4.30 6.30 வரை பேசுகிறார் என்ற செய்தியைச் சொன்னார்கள். கருட சேவை நிகழ்ச்சி,கிருஷ்ணன் அவர்களின் பேச்சு இரண்டையும்  பார்த்து விடலாம் என்று அங்கு போய் வந்தோம்.
                               

                                          


                             
முதலில் கோவில் வாசலில் உள்ள புனித புஷ்கரணியைப் படம் எடுத்துக் கொண்டோம்.
 திருக்குளத்துக்குஅருகில் தசாவதார மண்டபம் ஒருபக்கம் ராமர் பட்டாபிஷேகம்-  மறு பக்கம் அனுமன் ராமரை வணங்கும் காட்சி- சித்திரம் வரையப்பட்டு இருக்கிறது.
                                       
                                                               ராஜகோபுர வாயில்
                               
                                       

                                      
ஆண்டாள் சந்நதி- இங்கு தான் திரு. கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம்  நடந்தது

ஆண்டாள் சந்நதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த திரு.கிருஷ்ணன் அவர்களின் பேச்சைக் கேட்க அமர்ந்து விட்டோம் . அவர் பேச ஆரம்பித்து விட்டார். ’திருக்கோளூர் பெண் பிள்ளை  வார்த்தைகள்’ என்ற தலைப்பில்  பேசினார்.உபன்யாசத்தில் இருந்து நிறைய செய்திகள் தெரிந்துகொண்டோம்.

திருக்கோளூர்  பெண்பிள்ளை வரலாறு

திருக்கோளூர்  என்ற ஊருக்கு   இராமானுஜர் சென்ற போது அங்கிருந்து ஒரு பெண் பிள்ளை ஊரை விட்டு வெளியேறிக் கொண்டு இருந்தார். இராமானுஜர் , ’தாயே !நான் ஊருக்குள் வரும் போது நீங்கள் வெளியேறக்  காரணம் என்ன ? ’என்றபோது.  ’காலம் தோறும் தோன்றிய திருமாலடியார்கள் சாதித்தது
போல் நான் சாதிக்கவில்லை’,  என்று கூறி அவர்கள் செய்த செயல்களைப் பட்டியலிட்டு கூறினார். இராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஆழ்வார்களின் வரலாறுகள் ஆகியவற்றிலிருந்து   சான்றோர்கள் செய்த 81  அருஞ்செயலகளை   கவிதையாக  வடிவில் கூறினார்.

இராமானுஜரும், திருக்கோளூர் சான்றோர்களும் அந்த பெண் பிள்ளை பணிவையும், ஞானத்தையும் கண்டு வியந்து அவர் திருமாலடியார்களைப் பற்றி பாடிய கவிதைகளை ”திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்” என்று குறிப்பிடுகிறார்கள் . அந்த 81  பாடல்கள் பற்றித் தான் தொடர் சொற்பொழிவு செய்து கொண்டு இருந்தார்.

 முந்தின நாள்  தான் பேசியதின் தொடர்ச்சியாக  29 வது  கேள்வியிலிருந்து பேச ஆரம்பித்தார். தங்குதடையற்ற அருவி போன்ற பேச்சு. 44 வது கேள்வியுடன் முடித்துக் கொண்டார், மற்றவை நாளை என்று.

நாங்கள் போன அன்று பேசிய பெண்பிள்ளையின் கேள்விகள் இவை
:
29. கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே!
30.கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையாரைப் போலே!
31,குடை முதலானதானேனோ அனந்தாழ்வான் போலே!
32.கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!
33. இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே!
34, இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
35. இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே!
36,இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார்போலே!
37,அவனுரைக்கப்  பெற்றேனோ திருக்கச்சியார் போலே!
38. அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!
39. அனுப்பி வையுமேன்றேனோ வசிஷ்டரைப் போலே!
40. அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே!
41.மண்பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே!
42.மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே!
43. பூசக்கொடுத்தேனோ கூனியைப் போலே!
44.பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!

4.30மணியிலிருந்து 6.30 வரை இரண்டு மணி நேரம் மிக அருமையாக பேசினார். நேரம் போனதே தெரியவில்லை. குறிப்புகள் எடுத்துக்கொண்டேன் அவற்றையும் பகிர்ந்தால் இன்னும் பதிவு பெரிதாகி விடும்.
 இவ்வளவு நாளாய் அவர் பேசிய சொற்பொழிவுகளைத்  தொலைக்காட்சிகளில் (விஜய், ஜெயா, பொதிகை)   கேட்டு மகிழ்ந்த நாங்கள் நேரில் கேட்டு மகிழ்ந்தோம்.
                                     

இறைவன் புகழ் பாடிய அவரை அனைவரும்பெரியவர், சின்னவரென்று பேதம் இல்லாமல் எல்லோரும் பாதம் பணிந்து வணங்கினர்.
                                 

                                  


பிறகு கோவில் உள்ளே போய் செளரிராஜப்பெருமாளைச் சேவித்தோம். அவருக்கு மலர் கிரீடம், மலரில் ஆடை அணிந்து இருந்தார்கள். அவ்வளவு அழகு. கையில்  தீயவரை அழிக்க  தயாராக வீசும்  நிலையில் சக்கரம். அதை பட்டர் அழகாய் தீப ஒளியில் ஒவ்வொருவருக்கும் பொறுமையாய் கதை சொல்லி, காட்டுகிறார்.  ஒரு வயதான அம்மா எல்லோரும் பொறுமையாக உள்ளே போங்கள் பொறுமையாய் பாருங்கள் அவசரம் வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். நிம்மதியாக  பொறுமையாக பெருமாளை தரிசித்தோம்.

அடுத்து தாயார் சந்நதி சாந்தமும் மகிழ்ச்சியும் ததும்பிய முக பாவத்துடன் கண்ணபுர நாயகி தன் கருணை பொருந்திய கண்களால் எல்லோர்க்கும் அருள்மழை பொழிந்து கொண்டு இருக்கிறார்.

                                

கருட சேவை:

 அலங்காரம் செய்து அழகாய் காட்சி அளித்தார் செளரிராஜ பெருமாள். அவருக்கு எதிரில் கருடன் இருந்தார். தனியாக பார்த்தோம். கருடன் மேல் இன்னும் வைக்கவில்லை.
                            

                                      
                                    


அரையர் சேவை:

  ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்த அரையர்சேவை சாதிக்க  ஒருவர் மட்டும் வந்து இருந்தார்.அவர் அழகாய் பாசுரங்களை   அபிநயம் செய்தும், தாளத்தை இடை இடையே  இட்டும் பாடினார். மிக  மென்மையான குரல். அழகிய தோற்றம்.

அது முடிந்த பின் இரண்டு பெண் குழந்தைகள் பரதநாட்டியம் ஆட அமர்ந்து இருந்தனர்.ஆனால் வெகு நேரம் ஆகி விடும் என்பதால் இருந்து பார்க்கவில்லை.இரவு கார் ஓட்டி வர சிரமம் என்பதால் கிளம்பி வந்து விட்டோம். தங்கும் இடம் இருக்கிறது. கோவில் வாளகத்தில் விசாரித்த போது  இடம் இல்லை என்றார்கள். அறைகள் கோபுர வாசல் பக்கமே இருக்கிறது.

                                                           தங்கும் அறைகள்


சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின்  பாடல் எப்போதும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்

”திருக்கண்ணபுரம் செல்வேன்,
கவலை எல்லாம் மறப்பேன். 
கண்ணனின் சந்நிதியில் 
எந்நேரமும் இருப்பேன்.”

 அது போல் அமைதியான கோவில் அழகான பெருமாள், எந்நேரமும் அங்கு இருக்க ஆசைதான்.

                                                             வாழ்க வளமுடன்

                                                                 =============

          

அன்பும் பண்பும் நிறைந்த மாமாஅவர்களுக்கு அஞ்சலி!

$
0
0
பிப்ரவரி 17ஆம் தேதி கோவை பயணம். ஒரு பத்து நாட்கள் மாமனார், மாமியாருடன் இருந்து வரலாம் என்று போய் இருந்தோம்.



105 வயது நிரம்பி விட்டதால் மாமா எங்கும் வெளியில் செல்வது இல்லை . அத்தைஅவர்கள் மாமாவை ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல் பார்த்துக் கொள்வார்கள்.

அத்தை அவர்கள் எப்போதும் சொல்வது ”எல்லோரும் சுமங்கலியாய் போக வேண்டும் என்பார்கள் , ஆனால்  என்னைப் பொறுத்தவரை அவர்களுக்குப் பின் தான் நான் போக வேண்டும் ”என்பார்கள். அவர்கள் விருப்பம் போல் மாமாவிற்குக் கடைசி வரை தன் பணிவிடைகளைச் செய்தார்கள்.

மாமா அவர்கள் 23 ம் தேதி ஞாயிறு காலை திடீரென்று இறைவனடி
சேர்ந்தார்கள். அதற்கு முதல் நாள்   நான்கு அன்பர்கள் வந்து 105 வயதான
அவர்களை வந்து பார்த்து மாலை, மற்றும் பொன்னாடை போர்த்தி ஆசி
பெற்று சென்றார்கள். அவர்களை வாழ்க வாழ்க என்று வாழ்த்தினார்கள்.
”அவர்கள் போவதற்கு வெளி வாசல் இருட்டி விட்டது லைட் போடு ”என்று
என் கணவரிடம் பேசினார்கள்.பேரன் பேத்திகள் பூட்டன், பூட்டிகளை ஸ்கைப்பில் பார்த்து மகிழ்ந்தார்கள் லேப்டாப்பில் தெரிந்த படத்தை தடவி மகிழ்ந்தார்கள்.






ஞாயிறு அன்று மாமாவைப் பார்த்துக் கொள்ளும்  நண்பரிடம் அவர் பேரன்,
பேத்திகளைப் பற்றி விசாரித்து கொண்டார்கள் . வழக்கம் போல் குளித்து
இறைவனை வணங்கி விபூதி அணிந்து சன் தொலைக்காட்சியில்
திருக்கோவில்கள் உலாவை பார்த்து கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அத்தை இட்லியைக்கரைத்து கொடுத்தார்கள் . அவர்கள் கையால் உணவு சிறிது அருந்திவிட்டு இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

மாமா அவர்கள் 102   வயது வரை சிவபூஜை செய்தவர்கள்,   அவர்களை கஷ்டப்படுத்தாமல்இறைவன் நொடியில் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

மாமா தினமும்   பள்ளியில் தமிழாசிரியர்  பணியை  முடித்து வந்த பின் மாலையில் பேட்டைஈஸ்வரன்  கோவிலில் , “மருதநாயக முதலியார் அன்னபூரணி அம்மாள் தேவாரப் பாடசாலை”யில்   தேவாரம்
சொல்லித்தருவார்கள். 80ஆம் வயது வரை அந்த பணியை பேட்டைஈஸ்வரன்கோவிலில் சிறப்பாக  ஆற்றினார்கள். நாற்பத்தைந்து ஆண்டுகள் தேவார ஆசிரியராக இருந்தார்கள், மேலும் இத்திருக்கோயிலில் கந்தபுராணம் மற்றும் பெரியபுராணம் சொற்பொழிவு ஆற்றுவார்கள்.

அதன் பின் வயது அதிகம் ஆகி விட்டது அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என்று தன் பிள்ளைகள் சொன்னதை ஏற்று தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் அருள் விநாயகர் கோவிலில் சிறு குழந்தைகளுக்கு தேவாரம் சொல்லி தந்தார்கள்.

கோவை ஆர் எஸ் புரம் இரத்தின விநாயகர் கோவிலில் பல ஆண்டுகள் கந்தபுராணம் மற்றும் பெரியபுராண தொடர் சொற்பொழிவு ஆற்றி உள்ளார்கள்.

கேரள மாநிலம் திருவஞ்சைக்களத்தில் கோவை சேக்கிழார், திருக்கூட்டத்தினர்களால் நடத்தப்படும் சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜைகளில் சேக்கிழார் திருக்கூட்டத்தின் பொருளாளர் என்ற முறையில் சுமார் 50 ஆண்டுகள் சேவைபுரிந்தார்கள்.

கோவைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து பல அரிய சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளார்கள். இச்சங்கத்தில் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்கள்.



மாமா அவர்கள் ’அன்புவெள்ளம்’ என்ற நூலினை எழுதினார்கள் . அதைக் கலைமகள் காரியாலயத்தினர் வெளியிட்டனர், இந்நூல் சேரமான்பெருமான் நாயனார், மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் பற்றியது. இந்நூல் நகராட்சி பள்ளிகளில் பாடப்புத்தகமாய் இருமுறை வைக்கப்பட்டது. மேலும் இவர்கள் தலைமையில் தமிழ்ப்பாடநூல்கள் தொகுக்கப்பட்டு நகராட்சி பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டது.கோவை நகராட்சிப்பாடப்புத்தகத் தேர்வுகுழு உறுப்பினராக இருந்தார்கள்.

கோவை சிவக்கவிமணி திரு. சி.கே. சுப்பிரமணிமுதலியார் அவர்கள் இவர்களுக்கு “திருமுறைச் செல்வர்” எனற பட்டத்தினை அளித்து சான்றிதழ் அளித்தார்கள்.

பேரூர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அவர்கள் முன்னிலையில் தொண்டை மண்டல ஆதீனம் அவர்களால் “பண்ணிசைச் செல்வர்” என்ற பட்டம் அளிக்கப்பட்டது.

கோவை சைவப் பெருமக்கள் பேரவையில் இவர்களுக்கு  “சைவப்பெருந்தகை” என்ற பட்டம் அளித்தார்கள்.
மணிவிழா, முத்துவிழா, கனகாபிஷேகவிழா, நூற்றாண்டு விழா என விழாக்களை  அவர்களின் ஐந்து மகன்களும்  மற்றும் பேரன், பேத்திகள் குடும்பத்தினர் நடத்தி அவர்களிடம் ஆசி பெற்றார்கள்.

பேட்டைஈஸ்வரன் கோவிலில்  மாமாவிடம் கற்றுக் கொண்ட  மாணவர்கள் வந்து  இரண்டு நாளும்   தேவாரம், திருவாசகம் படித்து அவர்களின் இறுதி சடங்குகளை மிக சிறப்பாக செய்தார்கள். 16 தினங்களும் யாராவது மாணவர்கள் வந்து மாமா படத்தின் முன் வந்து உட்கார்ந்து தேவாரத்தை இசைத்து சென்றார்கள்.



16ம் நாள் திருமுறை செல்வர், சைவப்பெருந்தகை மாமா அவர்களுக்கு கோவை புரந்தரதாசர் அரங்கத்தில்   படத்திறப்புவிழா செய்து நினைவு அஞ்சலி கூட்டம் நடத்தி தங்கள் ஆசிரியருக்கு சிறப்பு செய்தார்கள்.

சிரவை ஆதீனம் சீர் வளர் சீர் குமரகுருபர சுவாமிகள் அவர்கள் தலைமை  தாங்க  12 அன்பர்கள் பேசினார்கள். மற்றும் தேவார பாடசாலை அன்பர்கள் போற்றித்திருத்தாண்டகம் படித்து மலர் அஞ்சலி செய்தார்கள்.

நிறைவான வாழ்க்கை வாழ்ந்து அனைவரிடமும் அன்பு உள்ளம் கொண்ட அவர்கள் இறைவனிடம் செல்லும் போதும் எந்த தொந்தரவும் யாருக்கும் கொடுக்காமல் அமைதியாக தூங்குவது போல் தூங்கி விட்டார்கள்.

//வையத்து வாழ்வாங்கு வாழ்பவர்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்//

இப்படி வள்ளுவர் சொன்ன குறள் படி வாழ்ந்து எங்கள் குடும்பத்தை வாழவைக்கும் தெய்வம் ஆனார்கள்.
                                                                     
படத்திறப்புவிழா படம்

தம்பி மகன் அவர்கள் தன் பெரியப்பாபற்றிய செய்திகளை நினைவுகூர்கிறார்கள்
கணவரின் அண்ணன் அவர்கள் தன் அப்பாவின் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.
தேவார மாணவர்கள் போற்றி திருத்தாண்டகம் படிக்கிறார்கள்.
வந்தவர்கள் அனைவரும் மலர் அஞ்சலி செய்கிறார்கள்.

மாமா அவர்கள் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்கள் . அதில் என் கணவரைப்பற்றி எழுதியது.
                                                                     -------------------

சிட்டுக்குருவியைத் தேடித் தேடி

$
0
0
சிட்டுக்குருவிகள் நான் இருக்கும் மயிலாடுதுறையில் இல்லை.   வேறு ஊர்களில் சிட்டுக்குருவிகளை பார்த்துவிட்டால் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளும்.என் மகன் ஊரில், மகள் ஊரில் எல்லாம் இருக்கிறது. அங்கு போகும் போது எல்லாம்சிட்டுக்குருவிகள் உல்லாசமாய் கீச் கீச்  என்று  ஒலி எழுப்பி செல்லும்போது ஒரு சிறுமியின் உற்சாகத்துடன் மகிழ்ந்து பார்ப்பேன்.

                                          
கூட்டின் மீது உட்கார்ந்து இருக்கும் பறவை சிட்டுக்குருவி இல்லை
                                           ஏங்கிரிபேர்டு (சிவப்பு பறவை)

நியூஜெர்சி போனபோது மகன் வீட்டுத்தோட்டத்தில் குருவிகள் வருவதைப்பார்த்து சிட்டுக்குருவிக்கு வீடு (கூடு) வாங்கி வைத்தார்கள் என் கணவர் . குருவி அதன் மேல் வந்து  வந்து உட்கார்ந்து பார்க்கும். ஆனால் உள்ளே போகாது. கூட்டிற்கு வாசல் சரியில்லை என்று நினைக்கிறேன். கூட்டின் வாசலில்  முதலில் வந்து உட்கார்ந்து அங்கும், இங்கும் பார்த்து பின் தான் உள்ளே போகும் குருவி . இவர்கள் வாங்கிய வீட்டில் அப்படி இல்லை   சிறு வட்டம் போல்மட்டும் வாசல் இருக்கிறது. அதில் அது உட்கார்ந்து பார்க்க வசதி இல்லாத காரணத்தால் வரவில்லை போலும்.


சிட்டுக்குருவிகள் தினம் அல்லவா இன்று ! நான் சேமித்து வைத்து இருக்கும் படங்கள் கிடங்கில் தேடித் தேடி சிட்டுக்குருவியை எடுத்துப் பகிர்ந்து இருக்கிறேன். இன்னும் இருக்கு குருவி படங்கள் - அடுத்த முறை.  இன்னும் தேடினால்  சிட்டுக்குருவிகள் தினம் முடிந்துவிடும்.


இரண்டு சிட்டுக்குருவிகள் பேசுவது என்ன?





பேசி முடித்து எங்கு போகிறது?
உறவுகளை அழைத்துவரப்போனதா?
உறவோடு உறவாடி மகிழ்வோம் உணவுகளை பகிர்ந்து உண்போம்.
சிட்டுக்குருவியில் இது ஒரு வகை
இறக்கை விரித்து பறக்க ஆயத்தம்
சிவப்பு கலர்  உள்ள சிட்டுக்குருவி
சாம்பல் நிறக்குருவி


’பின் பக்கம் ஒளிந்து இருக்கிறேன் பாருங்கள்.’
’இதோ வந்து விட்டேனே!’



நான் பகிர்ந்த சிட்டுக்குருவிகளைக் கண்டு மகிழ்ந்தீர்களா!
                                                             வாழ்க வளமுடன்!
                                                  ----------------------------------------------

இயற்கையைப் போற்றுதும்!

$
0
0
இன்று :”உலக காடுகள் மற்றும் மரநாள்.”.  

 அந்தக் காலத்தில்  காடுகள் அதிகமாய் இருந்தன. இப்போது மக்கள் பெருக்கத்தின் காரணமாய் காடுகள் குறைந்து வருகிறது. மக்கள் வசிக்க வீடுகள் தேவை. அதற்கு காட்டை அழித்து தன் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறான். 

மரங்களை வெட்டிக்கொண்டே போனால் மழை எப்படி வரும்? மழை வேண்டும் என்றால் மரம் வேண்டும். ”மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!” என்று சிலப்பதிகாரத்தில் வரும். அந்த மாமழை எப்படி வரும் ?மரங்கள் நிறைய இருந்தால் தான் மாமழை வரும்.

நமக்கு எப்போதும் இயற்கையை ரசிக்கப் பிடிக்கும். விடுமுறை கிடைத்தால் இயற்கை சார்ந்த இடங்களுக்கு சென்று வருவோம். ஆறு ,கடல், அருவி,  என்று பார்ப்பதில் ஆனந்தம். அது மனதுக்கும் உடலுக்கும் மகிழ்ச்சியை அள்ளி த்தரும். 
புஷ்கில் பால்ஸ்(Bushkill Falls)
The Niagara of pennsyluvania -19 வளைவுகள் உள்ள மரப்படி- அருவி வரை பக்கத்தில் போய்ப் பார்க்கலாம்.
                                                    
                                அருவியைபபார்க்க நுழைவு கட்டணம் உண்டு.  

வைத்தியர் சில நோய்களுக்கு சிறிதுகாலம் இயற்கை சூழ்ந்த இடத்தில் ஓய்வு எடுத்தாலே போதும், புத்துணர்வு கிடைக்கும் என்று சொல்லுவார். அதற்கு நம் மக்கள் ஊட்டி, கொடைக்கானலென்று ஓய்வு எடுத்து வருவார்கள்.

ஆனால் இயற்கை  வனங்களில் இலவசமாய் நமக்கு கிடைப்பது,அங்கு உள்ள மூலிகை மரங்களில் மோதி வரும் காற்று. அது  நம் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும்.  அங்கு உள்ள சுனைநீரில் குளித்தால் உடலுக்கு ஆரோக்கியம். குற்றால அருவியில் குளித்தால்  உடல்வலி போவதுடன் நன்கு பசிக்கும்.  கொண்டு போன உணவு நொடியில் காலியாகிவிடும். அங்கு கிடைக்கும் பழங்களில் சுவை அதிகம். 

காடுகளில், மரங்களின் ஊடே தெரியும் சூரியஒளி, சந்திர ஒளி மனதை மயக்கும்.  நம் நாட்டில் அப்படிப் பட்ட இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்கள் நிறைய இருக்கிறது .

ஆதி காலத்தில் மனிதன் மரங்களை வழிபட்டான்.  இப்போதும் மதுரையில் ஒரு வகுப்பைச்சார்ந்த மக்கள் தன் வீட்டுக்கு முன் மரத்தை வளர்த்து அதற்கு அதிகாலையில் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடுவார்கள். அது அவர்கள் நித்தியகடன்.  கோவில்களில் ஸ்தலவிருட்சமாய்  மரம் இருக்கும். அதற்கு வழிபாடு உண்டு. ஆற்று ஓரத்தில் ஒரு அரசமரம் அதன் அருகில் 
பிள்ளையாரை வைத்து  சுற்றி வந்து வணங்க வைத்தார்கள். எதற்கு? அரச மரக்காற்று உடலுக்கு நல்லது என்றுதான். 

குலதெய்வங்கள் பெரும்பாலும் வனங்களில் ஏரி ஓரம்  இயற்கை சூழ்ந்த இடத்தில் இருக்கும். அப்போது வருடத்திற்கு ஒருமுறையாவது போய் மக்கள் பொங்கல்வைத்து  வணங்கி வருவார்கள், தங்கள் குடும்பத்தினர்களுடன் . அங்கு உள்ள மரங்களின் சல சலப்பு, ஏரியிலிருந்து வரும் சில் என்ற காற்று, அங்கு சுற்றிலும் இருக்கும் வயல்களில் உள்ள நறுமணம் எல்லாம் ஒருவகையான இன்பத்தைத் தரும்.

மயிலாடுதுறை அருகில் பெருஞ்சேரி என்ற இடத்தில் ஒரு கோவில் இருக்கிறது. அதில் 27 நட்சத்திரங்களுக்கும்  மரம் வைத்து இருக்கிறார்கள் .கோவில் வளாகத்தைச் சுற்றி. அந்த அந்த நட்சத்திரக்காரர்கள் வந்துஅந்த மரத்தின் முன் விளக்கேற்றி பின் கோவிலில் உள்ள இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். இதுவும் ஒரு நன்மைதான் .மக்கள்  தன் நட்சத்திரம் உள்ள மரத்தையாவது வெட்டாமல் இருப்பார்களே! அந்த கோவில் பற்றிய விவரங்களை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

ஆனால் இங்கு பகிர்ந்து உள்ள இயற்கைக்காட்சிப்படங்கள் அமெரிக்காவில் நாங்கள் போய் இருந்தபோது எடுத்தவை.  அங்குள்ளவர்கள் சனி ஞாயிறு விடுமுறைகளில் கண்டிப்பாய் இது போன்ற இடங்களுக்கு சென்று தங்கள் வேலைப் பளுவை மறந்து களித்து இருப்பார்கள் . அங்கு வாழும் என் மகனும் எங்களை விடுமுறைகளில் அழைத்து சென்றபோது   அருவி, ஏரியில் எடுத்த இயற்கை   காட்சிகள் இங்கு உங்கள் பார்வைக்கு.




 வனத்தில் அந்தக் காட்சியை எடுத்தாயா உன் காமிராவில் ?
வனத்தில் ஒளிரும் நிலா

படகுத்துறையில்  சூரிய ஒளி
ஆறு
இலை உதிர்காலத்தில்  இலைகள் நிறமாறி  பலவண்ணங்களில் தோற்றம் 
இலைகளை உதிர்க்கும் போதும் கண்களுக்கு விருந்து அளிக்கும் மரங்கள். 
இயற்கை வளம் சூழந்த மாட்டுப் பண்ணை
                        பழுதடைந்த மரத்தை தாங்கும் அழகிய மரத்தூண்கள்.

                                      மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!
                                                 
                                                          வாழ்க வளமுடன்!
                                                                        ----------

வால்ட் விட்மன் நினைவில்லம்

$
0
0
நாங்கள் நியூஜெர்சியில் இருந்தபோது கேம்டனில் உள்ள வால்ட் விட்மனின் நினைவில்லத்திற்குச் சென்றிருந்தோம். 

நாளை 26/03/2014 அன்று கவிஞர் வால்ட்விட்மனின் (WALT WHITMAN) நினைவு நாளாகும்.

அதையொட்டி சில நினைவுகளைப் பகிர விரும்புகிறேன்.

மவுண்ட் லாரலில் உள்ள பொது நூலகத்திற்கு நாங்கள் அடிக்கடி செல்வது வழக்கம். 

 இணையத்தில் வேண்டிய பாடக் குறிப்புகளை எடுத்துப்போகும் மாணவர்கள்.
மவுண்ட் லாரல் -பொதுநூலகம்
ஒருமுறை அங்கு சென்றபோது என் கணவர் கவிஞர் வால்ட் விட்மனைப் பற்றி வால்டர் டெல்லர் எழுதிய நூலைப் படித்தார்கள். 
மவுண்ட் லாரல் -பொதுநூலகம் இங்கு இருந்து எவ்வளவு புத்தகம் வேண்டும் என்றாலும் எடுத்து வரலாம் படிக்க ,இரண்டு நாட்களுக்கு ஒருமுறை  புத்தகங்கள் -பேரனுக்கு கார்ட்டூன் சிடிகள், கதைப்புத்தகங்கள் எடுத்து வருவோம்.
வால்ட்விட்மனைப்பற்றி வால்டர்டெல்லெர் எழுதிய புத்தகம்

அருகில் உள்ள கேம்டனில் விட்மனின் நினைவில்லம் அமைந்திருப்பதை அந்நூலின் மூலம் அறியமுடிந்தது. 

மகாகவி பாரதியார் போன்றவர்கள் புதுக்கவிதைகள் எழுதுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மன் (மே 31, 1819 – மார்ச் 26, 1892)என்பார்கள்.

எனவே அங்கு சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் என் கணவருக்கு ஏற்படவே அதுபற்றி மகனிடம் கூற , அவன் அதற்கு ஏற்பாடு செய்தான். அங்கு செல்ல முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். 28/09/2013 அன்று காலையில்  மகன், மருமகள், பேரனுடன் நாங்கள் எல்லோரும் காரில் சென்றோம். முக்கால் மணி நேரப்பயணம். டெலாவேர் ஆற்றங்கரையில் கேம்டன் நீர் முகப்புக்கு (Camden Water Front) அருகில் உள்ளது.கேம்டனின் போக்குவரத்து அதிகமில்லாத ஓரிடத்தில் கார்பார்க்கிங்க் வசதியோடு கூடியஅமைதியான ஒருசூழலில் இல்லம் அமைந்திருந்தது. 
மிக்கிள் சாலை- விட்மன் வாழ்ந்தபோது
மிக்கிள் சாலை= இப்போது.


எங்கள் வருகைக்காக நினவில்லத்தின் கியூரேட்டர் வாசலில் தயாராகக் காத்திருந்தார்.  ’எங்கிருந்து வருகிறீர்கள்  ஏன்  அவர் வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?’  என்றெல்லாம் எங்களின் ஆர்வத்தைக் கேட்டறிந்தார்.  பின் மகிழ்ச்சியுடன் உள்ளே அழைத்துச் சென்றார்.
விட்மனின் இல்லம்-அப்போது


உள்ளே புகைப்படம் எடுக்கக்கூடாது என்று முதலிலேயே கூறிவிட்டார்.
இல்லத்தில் உள்ளே உள்ளவைகளைப் பற்றிய படங்கள் அங்கு கொடுத்த ’கான்வர்சேஷன்’ பத்திரிகை, டெல்லரின் புத்தகம், ஆகியவற்றிலிருந்து  எடுத்தது.
விட்மனின் இல்லம்-இப்போது
           
இல்லத்தின் முன்புறம்
                                                                 
                                                  
வால்ட் விட்மன் வாழ்ந்த  அந்த    இல்லத்தை பார்க்கப்போகிறோம் என்ற பெருமிதத்துடன் நுழைந்தோம்.  இல்லத்தை பார்த்துக் கொள்ளும் கியூரேட்டர் இல்லத்தைச் சுற்றிக்காண்பித்துக்கொண்டே செய்திகளைத் தொகுத்துக்கூறிய வண்ணம் இருந்தார்.
நினைவில்லத்தின் கியூரேட்டர். தன்னை படம் எடுக்க வேண்டாம் என்றார், ஆனால் தோட்ட்டத்தை எடுக்கும் போது அவரும் அதில் வந்து விட்டார்.
விட்மன் அமெரிக்காவில் லாங் ஐலண்ட் என்ற இடத்தில் பிறந்தார். அடிமை முறையை எதிர்த்தார். சமத்துவத்தை ஆதரித்தார். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது பாசறைகளில் காயமுற்றோருக்குத் தொண்டுகள் புரிந்தார். 

‘புல்லின் இதழ்கள் ’என்னும் இவரது கவிதைத் தொகுப்பு நூல் உலகப்புகழ்பெற்றது. எவரும் இதனைப்பதிப்பிக்க முன்வராத நிலையில் தானே அந்நூலை அச்சிட்டு வெளியிட்டார்.1855-ல் முதலில் அவர் தனது செலவில்  பதிப்பித்த புல்லின் இத்ழ்கள் நூலின் படிகளின் எண்ணிக்கை 795. முதலில் அவற்றில் ஒன்றுகூட விற்பனையாகவில்லை

1882-ல் புல்லின் இதழ்களில் மேலும் பல கவிதைகளை இணத்து மறுபதிப்புச் செய்தபோது பெரிய வெற்றி தந்தது

இந்நூலை விற்பனை செய்ததில் கிடைத்த இலாபத்தில் நியூஜெர்சி மாநிலத்தில் கேம்டன் நகரில் மிக்கல் தெருவில் 1884ல் ஒரு வீட்டினை 1750 டாலர் விலைக்கு வாங்கினார். 1892-ல் தமது 72 வயதில் இறக்கும் வரை இங்கு வாழ்ந்தார்.

’பிராங்க்லின் இவான்ஸ்’ என்னும் நாவலையும் இவர்எழுதியுள்ளார்.

ரிச்சர்ட் புக்( Richard buke )என்ற அவரது நண்பர் ’வால்ட்விட்மன்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.

புகழ்பெற்ற எழுத்தாளர்களான சார்லஸ் டிக்கன்ஸ், வில்லியம் தாக்கரே, ஆஸ்கார் வைல்டு ஆகியோர் இவரைக்காண இங்கு வருகை புரிந்தனர்.

கப்பல் தளபதியாக இருந்த  தன் கணவரை இழந்த மேரி ஓ டேவிஸ் என்பவர் விட்மனின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கேயே வாடகையின்றித் தங்கி அவரது வீட்டின் பாதுகாவலராக இருந்தார். அவரை விட்மன் தனது நண்பர் என்றே குறிப்பிடுவார்.

.*நினைவில்லத்தின் உள்ளே
இல்லத்தின் உட்புறம்

                                   
வெள்ளை வளையத்துள் இருப்பது சர் தாமஸ் மூர் என்ற சமய, தத்துவ, மனிதநேயப் பெரியாரின் படம்.

அவரது இல்லத்தில் விட்மனின் புகைப்படமும் அதன் வலது புறம் தந்தையாரின் படமும் இடது புறம் அவரது தாயாரின் படமும் இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனுடன் அவர் எடுத்துக்கொண்ட படமும் உள்ளது.அவர் முதலில் வெளியிட்ட ’புல்லின் இதழ்கள்’ என்ற புத்தகப்பிரதி அங்கு உள்ளது.
அவர் அச்சிட்ட புத்தகப் பிரதி

அவரது கட்டில் படுக்கை விரிப்புடன் அழகாய் காட்சி அளிக்கிறது. கட்டிலுக்கு கீழ் அவர் குளிக்கப் பயன்படுத்திய பித்தளைத் தொட்டி இருக்கிறது.  கட்டிலுக்கு அருகில் உள்ள  மர அலமாரியில் அவர்  உடல் நிலை சரி இல்லாத போது அருந்திய இருமல் மருந்து பாட்டில்கள்  (ரப்பர் கார்க் அடைத்த கண்ணாடி மருந்து குப்பிகள் ) இருந்தன.

வால்ட் விட்மன் எழுதிய கடிதங்கள், 
அவருடைய உடைமைகள்,
அவர் இறக்கும்போது படுத்திருந்த படுக்கை, 
இறுதிக்காலத்தில் அவர் படுத்திருந்த கட்டில்

புகைப்படத் தொகுப்பு, 
ஆடும் மர நாற்காலிகள்-2,
சுவரோடு அமைந்த கணப்பு அடுப்பு,
அவர் பயன்படுத்திய காலணிகள்,
அவர் பயன்படுத்திய வட்ட சின்ன மேஜை, 
அதில் அவர் தொட்டு எழுதிய பேனா, மைகுப்பி, நிறைய நிப்கள்
எழுதிய புத்தகங்கள்

ஹார்ப்பெர்ஸ் வீக்லி மாகசின்
ஸ்க்ரிப்னர் மந்த்லி மாகசின்
அவரது  பயன்படுத்திய பத்திரிகைகளில் ஒன்று ஹார்ப்பர்ஸ் வீக்லி

குட்டி நாற்காலிகள். 
தேவையற்ற  காகிதங்களைப் போடும் பிரம்புக் கூடை. 
அவரின் கைத்தடி, 
முதலியவற்றை அழகாய் வைத்து இருக்கிறார்கள்

பித்தளை கிளிக்கூண்டு ஒன்று அழகாய் இருக்கிறது. குயில் ஒன்று
நிஜக்குயில் போல கண்ணாடி ஜாடியில் இருக்கிறது.

வீட்டைப்பாதுகாத்த அந்த பெண்மணியின் அறை அருகில் உள்ளது.

 மாடியிலுள்ள அறையில் அவரது கடைசிக்காலம் கழிந்தது.
அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது உதவிக்கு கைத்தடியைத் தட்டிக் கீழே இருப்பவர்களை உதவிக்கு அழைப்பாராம். 

வீட்டின் சுவரில் பூவேலைப்பாடு உள்ள  பேப்பர் ஒட்டப்பட்டு அழகாய் இருக்கிறது. 

கீழ்த்தளத்தில் இரண்டு மூன்று மர அலமாரிகள் . ஏசுநாதரின் ’லாஸ்ட் சப்பர்’ என்ற  புகழ் பெற்ற  ஓவியம்  பெரிதாய் மாட்டப்பட்டு இருக்கிறது.
அவர் இறந்த போது அவர் இறந்து விட்டார் என்று அவரை கவனித்துக் கொள்ளும் மருத்துவர் அவர் கைப்பட எழுதிக் கொடுத்த  இறப்புச் சான்றிதழ்க் கடிதம் மரச்சட்டத்திற்குள் அடைக்கப்பட்டு இருக்கிறது.

(விட்மனின் கல்லறை கேம்டனில் வேறு பகுதியில் இருக்கிறது.)

*அவரது உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்
(நன்றி: வால்டர் டெல்லரின் நூல்)
அறிவுரை கூறுவது பற்றிக் கூறியது:-                     
“ Iam always telling you not to take advice.I mean it – every word of it. But that don’t mean you are to yourself or take your own advice” may 27 1888.

 தனது படைப்புகள் பற்றி  :-                              
’My writngs has been clear from the start- almost from boyhood: not beautiful;but legible”  july 21 1888.
                                       
 இலக்கியவாதிகள் பற்றி
“Literary men learn so little from life – borrow so much from the borrowers” april 24 1888.p.103

* ’புல்லின் இதழ்க’ளில் இருந்து ஒரு புதுக்கவிதை.
(வானசாஸ்திரிகளின் பிரசங்கம் வால்ட் விட்மனிடம் ஏற்படுத்திய விளைவுகளைக் கூறுகிறது:-)

When I heard the learn’d astronomer;
When the proofs, the figures,were ranged in columns before me;
When I was shown the charts and the diagrams,to add,divide,and measure them;
When I, sitting, heard the astronomer,where he lectured with much applause in the lecture-room,
How soon, unaccountable, I became tired and sick;
Till rising and gliding out, I wander’d off by myself,
In the mystical moist night-air, and from time to time,
Look’d up in perfect silence at the stars.

போரினால் ஏற்படும் துயரங்களைத் தனது பல கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
அவற்றில் ஒன்று:-

"When lilacs last in the dooryard bloom'd,
And the great star early droop'd in the Western sky 
in the night,
I mourned and yet shall mourn with 
ever returning spring .
Ever -returning spring , trinity  sure to me you bring,
Lilac blooming perennial and drooping  star
in the west,
And thought of him I love..."
                                             --Leaves of Grass

இன்று விட்மனின் இல்லம் தேசிய வரலாற்றுச்சின்னமாக விளங்குகிறது.உலகெங்குமிருந்து மக்கள் அவரது நினைவில்லத்தைக் காண வருகிறார்கள்

வால்ட்விட்மன் அசோசியேஷன்’  நிறுவனத்தினர், கான்வெர்சேஷன்
(conversation)என்னும் இதழை வெளியிட்டுவருகின்றனர்.

கேம்டன் நகரின் அருகில் உள்ள ஆற்றுப்பாலத்திற்கு ’விட்மன் பாலம்’ என்ப்பெயர் இடப்படுள்ளது.


*சில தகவல்கள்:

அமைந்திருக்கும் இடம்:328,மிக்கிள் சாலை கேம்டென், நியூஜெர்சி

திறந்திருக்கும் கிழமை-செவ்வாயிலிருந்து ஞாயிறு வரை.

தனியாகவோ குழுவாகவோ வருவோர் தங்கள் வருகையை தொலைபேசி மூலம் உறுதிசெய்து கொள்வது நல்லது.

தகவல் தொடர்புக்கு: (609)964-5383)

கவிஞரின் வீட்டுக்குள் போகும் போது நமக்கு இந்த கையேட்டைத் தருகிறார்.பத்திரிக்கையில் காணப்படுவது வால்ட் விட்மன் பாலம்.


விட்மன் இல்லத்தின் பின்புறத்தோட்டம்

இப்படி வால்ட்விட்மனின் இல்லத்தை பாதுகாத்து வருபவர்  நமக்கு அவரைப் ப்ற்றிய செய்திகளை அழகாய் சொல்லி  நம்மை  மலர்ந்த முகத்துடன் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.  
வாழ்க வால்ட்விட்மனின் புகழ்!
வளர்க மனிதநேய இலக்கியங்கள்!
----------------------------------------

நட்சத்திர மரக்கோயில் - பகுதி- 1

$
0
0
நட்சத்திரமரக் கோயில்-பகுதி-1

அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கண்காணாதீஸ்வரர் திருக்கோயில்,பெருஞ்சேரி.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும்வழியில் வழுவூர்ப் பிரிவைக்கடந்து தொடர்ந்து சாவடி என்னும் இடத்தில் கிழக்கு நோக்கித் திரும்பவேண்டும். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ளது.

இக்கோயிலின் பிரகாரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய மரம் வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ,தங்களுக்குரிய மரத்தை மாலையில் விளக்கு வைத்து வழிபடுகிறார்கள். நன்மை பெறுகிறார்கள்.(பஞ்சாங்கங்களில் 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களின் பெயர்களைக் காண்லாம்.)




  
விநாயகர்
லிங்கோத்பவர்
முருகன்



இத் திருக்கோயிலுக்கு 5/6/2009-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுவாமி சந்நிதி
அம்மன் சந்நிதி
பிரதோஷ வேளை


நந்திக்கு அபிஷேகம்

நந்தி தீபாராதனை
அறங்காவலர் திரு.பாஸ்கரன்
திரு.சாம்பசிவக்குருக்கள்
விருட்சத்துக்கு இட்ட  வேண்டுதல் விளக்கு
ஸ்வர்ண பைரவர்
மார்சு 22ம் தேதி  ”உலக காடுகள்  மற்றும் மரநாள் ”அன்று ”இயற்கையைப்போற்றுதும்” என்ற பதிவு போட்டு இருந்தேன்.
அப்போது அதில் மரங்களை வழிபடுவது பற்றியும் மரங்கள் கோவில் ஸ்தலவிருடசமாய் வணங்கப்படுவதையும் குறிப்பிட்டு இருந்தேன்.
பெருஞ்சேரி எனும் ஊரில் 27 நட்சத்திரங்களுக்கும் ஒரு கோவில் இருப்பதை கூறி இருந்தேன்.  அவரவர் நட்சத்திரங்களுக்கு வணங்க வேண்டிய மரங்களாவது வெட்டப்படாமல் இருக்கும் என்று எழுதி இருந்தேன்.
சகோதரர் துரை செல்வராஜூஅவர்கள் அந்த ஊரைப்பற்றி  விரைவில் பதிவிடுங்கள் என்று கேட்டு இருந்தார். இதோ பதிவிட்டுவிட்டேன்.

பெருஞ்சேரி என்னும் ஊரில் உள்ள நட்சத்திர கோவிலுக்குப் போனோம். அன்று பிரதோஷம். அதனால் மாலை ஐந்துமணிக்கே சென்றோம். சிறிய கோவில்தான். ஆனால் மரங்களால் சிறப்பு பெற்று இருக்கிறது. மாலை குருக்கள் வந்தபோது நாங்களும் இன்னும் இரண்டு பேர்கள்தான் இருந்தோம், அதனால் இன்னொரு கோவில் அவருக்கு இருக்கிறதாம். அந்த கோவில் பூஜையை முடித்துவிட்டு வருவதாய்ப் போய் விட்டார். இரண்டு மூன்று பெண்கள், அவர்களின் குழந்தைகள், இரண்டு வயதான ஆட்கள் இவ்வளவு பேர்தான் பிரதோஷ பூஜைக்கு இருந்தவர்கள்.

நாங்கள் பால், பன்னீர் அபிஷேகத்திற்கு கொண்டு போய் இருந்தோம். ஒரு பெண், பள்ளியில் ஆசிரியர்பணியில் இருப்பவர். பிரதோஷவிரதம் இருப்பவராம்.  அவர் ஸ்வாமிக்கு பொங்கல் பிரசாதம் எடுத்துவந்திருந்தார், மற்றொருவர் கொண்டைக்கடலை சுண்டல்(வெள்ளை) செய்து கொண்டு வந்திருந்தார். மற்றொரு பெண்,  வெல்லம் கலந்த அரிசியும் பஞ்சாமிர்த சாமான்களும் , கொண்டுவந்து  அதை தயார் செய்தார். குழந்தைகள் அபிஷேகசாமான்களை அதன்அதன் பாத்திரங்களில்  பிரித்துக் கொட்டி உதவிசெய்தார்கள். இடை இடையே குழந்தைகளுக்கே உள்ள விளையாட்டு  என்று கோவிலைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டு இருந்தார்கள். அங்கு கொட்டிக்கிடந்த மணலில் மகிழ்ச்சியாக விளையாடினார்கள். ஒரு  சிறுவன் பள்ளியில் நடக்கும் திருவருட்பா ஒப்பித்தல்  போட்டியில் கலந்துகொள்கிறானாம், அதைத் தன் அம்மாவிடம் ஒப்பித்தான். நன்றாகச் சொன்னான்.  வெற்றிபெற வாழ்த்தினோம் நாங்கள்.
1.அசுவினி
ராசி-மேஷம்
தெய்வீகமரம்- எட்டி
பிரார்த்தனை தெய்வம்-விசாலாட்சி,
சித்திரகுப்தன்

2. பரணி
ராசி-மேஷம்
மரம்- நெல்லி
தெய்வம்- வல்லபகணபதி,விஷ்ணு

3.கார்த்திகை
மேஷம்,ரிஷபம்
அத்திமரம்
சூரியன்,முருகன்



4.ரோகிணிநாவல்மரம்
கண்ணன்

5.மிருகசீரிஷம்-
கருங்காலி
முருகன்
6.திருவாதிரை
செங்கருங்காலி
நடராஜர்,துர்க்கை
                                                          
7.புனர்பூசம்
மூங்கில்
ராமர்
                                                              மனித தெய்வங்கள்                                                          
8.பூசம்
அரசமரம்
பெருமாள்,லட்சுமி,சனீச்வரர்
9.ஆயில்யம்
புன்னை,
விஷ்ணு
10.மகம்
ஆலமரம்
விநாயகர்
நாங்கள் இருட்டுவதற்குள் நட்சத்திர மரங்களைப் படம்பிடித்துக் கொண்டு எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின்  நட்சத்திர மரங்களுக்கு  விளக்கு வைத்து வழிபட்டோம்.

சற்று நேரம்கழித்து சாம்பசிவக்குருக்கள் வந்தார், வயதாகி விட்டாலும் சுறு சுறுப்பாய் அனைவரிடமும் அன்பாய்ப் பேசிக் கொண்டே   நந்தி, அம்மன், சுவாமிக்கு விரைவாய் அபிஷேகம் செய்து பூஜைகளை நிறைவு செய்து அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கினார்.

 ஆத்மார்த்தமாய் தங்கள் வீடுகளிலிருந்து பிரசாதங்கள் கொண்டுவந்து  பக்தியுடன்  அளித்து  சந்தோஷமாய் அங்கிருந்த அன்பர்களுக்கு கொடுத்து விரதங்களை முடித்தார்கள். 

அறங்காவலர் பாஸ்கர் அவர்களும் குருக்கள் வருமுன் அபிஷேகத்திற்கு நீர் எடுத்துவைத்து உதவிகள் செய்தார், சிவன் ராத்திரிக்கு வரும்படி எங்களை அழைத்தார். 

நடசத்திர மரங்கள் 10  பகிர்ந்து இருக்கிறேன், மீதி அடுத்த பதிவில் .
                                                            வாழ்க வளமுடன்.
                                                           -----------------------------

நட்சத்திர மரக்கோயில் பகுதி - 2

$
0
0
நட்சத்திர மரக்கோயில்என்ற முதல் பதிவின் தொடர்ச்சி. இந்த பதிவு.

வசந்தகாலம் என்பது மிகவும் ரம்மியமாய் பூத்து செழித்து விளங்கும் காலம். மனம்  எங்கும் பசுமையை கண்டு மகிழ்ச்சி அடையும்.  நம் இருதயமாகிய பூந்தோட்டம்   இறைவனை நினைத்து செய்யும் தியானத்தால் நிகழும் அற்புதத்தை  சொல்கிறார் சங்கரர்:-

இருதயமாகிய பூந்தோட்டம்.

//சிவத்தியானம் என்னும் வஸந்த ருதுவின் சேர்க்கையால் இருதயமாகிற 
பூந்தோட்டத்தில் பாபமாகிற பழுத்த இலைகள் உதிர்ந்துபோகின்றன . 
பக்தியாகிற கொடியின் சமூகங்கள்  அழகாகப் பிரகாசிக்கின்றன. 
புண்ணியமெனும் துளிர்கள் தோன்றுகின்றன. நற்குணங்கள் எனும் 
அரும்புகளும் ஜபமந்திரங்களாகிற  புஷ்பங்களும் நன்மையாகிற வாசனையும் ஞான ஆனந்தமாகிற அமுதமெனும் தேனின் பெருக்கும் 
ஞானானுபவமாகிற பழத்தின் உயர்வும் பிரகாசிக்கின்றன.//
                                                                                                        --சிவானந்த லஹரீ.
இப்படி சிவத்தியானம் வஸந்தருதுவைப்போல இன்பமளிக்கிறது என்கிறார் 
ஆதிசங்கரர்.


கந்தபுராணத்தில் சூரபத்மன் மாமரமாய் மாறி மாயங்கள் செய்தான், 
கந்தனுடன் போர் புரியும் போது. இதைக் கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் 
சொல்லும் போது ஒரு பாட்டில், ’முருகனின் வேல் இருகூறாய் பிளக்க 
மாவை(மாமரம்) போல நாம் இல்லையே என மற்ற மரங்கள் ஏங்கின’ என்று சொல்கிறார்.

அந்தப் பாடல் :

அத்தியின் அரசு பேர ஆலமும் தரிக்கில் ஏங்க
மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற வீரை யாவுந்
தத்தம திருப்பை நீங்கத் தாதவிழ் நீபத் தாரோன்
உய்த்திடு தனிவேல் முன்னர்  ஒருதனி மாவாய் நின்றான்.
---கந்தபுராணம்.

இந்திரன் சூரபத்பனுக்குப் பயந்து சீர்காழியில் மூங்கில் மரக்காட்டில் 
மூங்கிலோடு மூங்கிலாக வசித்து வந்தார் என்றும்,

முருகப்பெருமான்  வள்ளியிடம் காதல் மொழி பேசிக் 
கொண்டு இருக்க, அப்போது வள்ளியின் தந்தை வர முருகன்
வேங்கைமரமாய் உருமாறினார் என்றும் கந்தபுராணம் கூறுகிறது.

திருவிளையாடல் புராணத்தில் மாணிக்கவாசகருக்கு குருந்தமரத்தின் 
அடியில் சிவபெருமான் உபதேசம் செய்தார் என்று கூறப்படுகிறது.

திருவிளையாடல் புராணத்தில் திருமணத்திற்கு சாட்சியாக வன்னிமரம் 
இருந்து இருக்கிறது. திருஞானசம்பந்தரின் சொற்படி ஒரு வணிகர் வன்னிமரம், கிணறு, இலிங்கம் ஆகியவற்றைச் சாட்சியாக வைத்து தன் அம்மான் மகளை மணம்புரிந்து சென்றார்.  அந்த பெண்ணுக்கு இடர் வந்த போது சோமசுந்தரப் பெருமானது திருவருளால் மீண்டும் அவை வந்து சாட்சியாகத் தோன்றின.  

பட்டினத்தாருக்காகத் திருவிடைமருதூரில் மருதமரத்திற்கு கீழ் குழந்தையாக வந்தார். (குழந்தைக்கு பெயர் மருதவாணர்)

ஒளவைக்கு நாவல் மரத்தில் முருகன் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து 
சுட்டபழம் வேண்டுமா? சுடாதபழம் வேண்டுமா? என்று கேட்டார்.

அத்தி மரத்தில் வரதராஜ பெருமாள்  - காஞ்சிபுரத்தில்

கோழிகுத்தியில் உள்ள வானமுட்டி பெருமாள் -அத்திமரத்தில் வந்தவர். 
இங்கு பெருமாளின் காலின் அடியில் வேர்கள் இருப்பதாய் சொல்கிறார்கள்.

புராணங்களில், வரலாறுகளில் மரம் நிறைய இடம் பெற்று இருக்கிறது.
வரலாறு பாடத்தில் சாலையில் இருமருங்கும் அசோகர்  மரம் நட்டதை 
படித்துக் கொண்டு இருக்கிறோம். 

நமக்கு சந்திரனை காட்டி சோறு ஊட்டும் அன்னை நிலவில் மரம்- 
அதனடியில் பாட்டி வடை சுட்ட கதையின் காட்சி இருப்பதைச் சொல்லி 
இருக்கிறார்கள்.

துர்வாசர் சாபத்தால் கடல் அடியில் சென்ற - கேட்பதை எல்லாம் தரும் 
கற்பகவிருட்சம்-  பாற்கடலை கடையும்போது வந்த கதை நமக்கு தெரியும்.
விண்ணுலகத்தில் உள்ள ஐந்து மரங்கள் சந்தானம், அரிசந்தனம், மந்தாரம், 
பாரிசாதம், கற்பகம் என்பன.

இப்படி மரங்களின் பெருமையைக் காலம் காலமாக புராணங்களில் உணர்த்தி வந்துள்ளனர்,அதை உணர்ந்து நாம் மரங்களை வெட்டாமல் 
வளர்த்து வளம் பெறுவோம்!

11.பூரம்
தெய்வீக மரம்-பலாசம்
பிரார்த்தனை தெய்வம்-அம்பிகை
12.உத்திரம்
ஆத்தி
சிவன்,சக்தி
13.ஹஸ்தம்
அத்தி
சந்திரன்

14. சித்திரை
வில்வம்
முருகன்,வள்ளி,தெய்வயானை
15.சுவாதி
மருது
சரஸ்வதி
16.விசாகம்
விளா
பைரவர்
சாஸ்தா

அனுஷம்
மகிழமரம்
சனீஸ்வரன்,
அனுமான்
கேட்டை
பராய்
குபேரலட்சுமி


19.மூலம்

மா
விநாயகர்
                                                                                          20பூராடம்
                                                                                               வஞ்சி
                                                                                            அம்பிகை

21.உத்திராடம்
பலா
சிவன்,சக்தி
22.திருவோணம்
எருக்கு
பார்வதி
23.அவிட்டம்
வன்னி
ராஜ அலங்கார முருகன்
24 சதயம்
கடம்பு
துர்க்கை
25.பூரட்டாதி
தேவா
தெக்ஷ்ணாமூர்த்தி
உத்திரட்டாதிக்குரிய படம் சரியாக அமையாததால் அப்படம் இடம் பெறவில்லை.
                                                                   26.உத்திரட்டாதி
                                                                                                 மலைவேம்பு
                                                                                          விநாயகர்,பெருமாள்
27. ரேவதி
இலுப்பை
திருமால்

அவரவர் நட்சத்திர மரங்களை நட்டு வணங்கலாம். முடிந்தவர்கள் அதுபோல் செய்யலாம். ஆனால் நாம் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செய்ய முடியாது. அதனால் கோவில்களில் நட்டு வளர்த்து வழிபட்டும் அதை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளலாம். சில கோவில்களில் நந்தவனங்களை வங்கிகள் அமைத்து பராமரித்து வருகிறார்கள்.

இறை நம்பிக்கையை வளர்க்கவும்,  இயற்கையை பாதுகாக்கவும் நம் முன்னோர்கள் இப்படி மரம் நட்டு வளர்க்க சொல்லி இருக்கலாம்.

நாம் இந்த சமுதாயத்திற்கு செய்யும் தொண்டு  முடிந்த அளவு மரத்தை வெட்டாமல் வளர்த்து பராமரித்தால் போதும் நாடு நலம் பெறும்.

இந்த கோவில் அறங்காவலர்  திரு பாஸ்கரன் அவர்களின் போன் நம்பர்--- 
9715352496 .
கோவில் சாம்பசிவக் குருக்களின் நம்பர் -  9443392 176.

உங்களை அவ்வூர் வரும்படி அழைக்கிறது!


                                              வாழ்க வளமுடன்!
-----------------------------------------

கல்யாணமே வைபோகமே!

$
0
0
பயணங்கள் முடிவதில்லை என்பது போல் என்பயணங்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மதுரை, கோவில்பட்டி, வானரமுட்டி,  கழுகுமலை, கோவை என்று பயணம்  சென்று வந்து இருக்கிறேன்.
ஒவ்வொரு ஊரிலும் என் கணவர் உறவினர்கள், என் உறவினர்கள் என்று
உறவுகளுடன் உறவாடி, கல்யாணங்களில் கலந்துகொண்டு,  கோவை போய் கொஞ்சநாள் அத்தையுடன் இருந்து வந்தோம்.

மறுபடியும் போக வேண்டும் பயணம். அதற்குள் கொஞ்சம் உங்களுடன் உரையாடல்.

கல்யாணங்களில் வெகு நாட்களுக்கு(பல ஆண்டுகள் முன் பார்த்த) முன் பார்த்த என் அத்தை பெண், சித்தப்பா  மகள்கள், மகன்கள், பெரியப்பா மகன்கள், என்று சகோதர சகோதரிகளைப்  பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அப்பா இருந்த போது எப்போதும் உறவினர் வருகை ஜே ஜே என்று இருக்கும்.  அதன் பின் அம்மா இருந்த போது அதன் பின்  சிறிது சிறிதாக குறைந்து,  இப்போது விசேஷங்களில் சந்திக்கும் நிகழ்வுகள் நடக்கிறது.

மாமா பெண் மதுரையில் இருப்பதால் அடிக்கடி பார்க்க முடிகிறது. மாமாவும் தன் அக்காகுழந்தைகள் வீட்டு விசேஷங்களுக்கு, தன் வயதையும் பொருட்படுத்தாமல்  திருவனந்தபுரத்திலிருந்து  வந்து ஒருகுழந்தையின் மகிழ்ச்சியுடன்  கலந்துகொள்வார்கள்.

மதுரையில் என் தங்கை பெண் திருமணம், கோவில்பட்டியில் சித்தப்பா பேரன் திருமணம், கழுகுமலையில் தங்கைபெண் மறுவீடு, என்று பயணங்கள்.

திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் அழைப்புஎன்ற  கதையில் இப்படி குறிப்பிடுகிறார்: --

//இந்த காலத்தில் பணம் மட்டும் கையில் இருந்தால், கல்யாணம் செய்வது அவ்வளவு ஒன்றும் கஷ்டமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பெண்ணைப் பெற்றவரோ, பிள்ளையைப் பெற்றவரோ, யாராக இருந்தாலும் எல்லாவற்றிற்குமே காண்ட்ராக்ட்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு விடுவதால், யாருக்கும் அந்தக்காலம் போல அதிக சிரமம் இல்லாமல் எல்லாம் நல்லபடியாகவே முடிந்து விடுகிறது. //

சார் சொல்வது  சரிதான். சார் சொல்வது போல் காண்ட்ராக்ட்காரர்களிடம் விட வில்லை என்றால் கல்யாணத்திற்கு வேண்டிய சாமான்கள் அது இது என்று கடை கடையாக ஏறி இறங்கி வாங்கி பத்திரப்படுத்தி யாராவது சாமான் அறையில் பொறுப்பாய் சமையல் செய்பவருக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும்.

முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு, மறுநாள் கல்யாணம், அதற்கு அடுத்த நாள்  காலை பலகார பந்தி, மதியம் சொதியுடன் அடைபிரதமன், இஞ்சி துவையல்,  உருளைக்கிழங்கு காரக்கறி, வாழைக்காய் சிப்ஸ்,  வடை, இன்னும் பல ஸ்பெஷல் அயிட்டங்களுடன் மறுவீட்டு சாப்பாடு முடித்து  மாப்பிள்ளை வீட்டாரை கட்டுசாதக் கூடை, பலகாரக் கூடையுடன் ,அனுப்பும் வரை நல்லபடியாக பார்த்து பார்த்துச் செய்ய வேண்டும்.  கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூலப் பைகள், சொந்தங்களுக்கு பலகாரப் பைகள் எல்லாம் தயார் செய்ய வேண்டும்.

இப்போது காண்ட்ராட்காரரிடம் மூன்று நாள் சாப்பாட்டு மெனு கொடுத்து விட்டால் போதும். அதன் பின் மண்டப அலங்காரம், பெண், பிள்ளை வீட்டு பெண்களுக்கு தலைக்கு வைக்கும் பூ, கல்யாணமாலை,  நலுங்கு மாலை,  தேங்காய் உருட்டி விளையாடியதும் நலுங்கில் பூப்பந்து உருட்டி விளையாட  பூப்பந்து,   அப்பளம் தட்டி விளையாட சுட்ட அப்பளம், குத்துவிளக்கிற்கு மாலை , மற்றும்  சாமி பட மாலைகள்,  வாசலில் வரவேற்புத்தட்டில் வைக்க  பூக்கள், அவப்போது ஆரத்தி எடுக்க ஆரத்தி கரைத்து மொத்தமாக மேடையில் வைத்தல், மணமேடைக் கோலம், வாசல் கோலம்  ஆகிய எல்லாவற்றுக்கும்   ஆள் ஏற்பாடு செய்துவிடுகிறார்கள்.

மாப்பிள்ளை வீட்டாரர் தங்கி இருக்கும் இடத்திற்கு அதிகாலையில்  காப்பி, பால், சப்ளை, அன்பான விசாரிப்பு என்ன வேண்டும் ஏது வேண்டும் என்று கேட்டுக் கொள்வது என்று அனைத்தும்  அருமையாக செய்கிறார்கள். அதனுடன் நாமும் மாப்பிள்ளை வீட்டாரை உபசரித்தால்  அவர்களுக்கு மகிழ்ச்சிதான்.

.அந்த காண்ட்ராக்ட்காரர் எனது பெரிய தங்கை குடும்பம், அண்ணன் குடும்பத்திற்கு எல்லாம் திருமணத்திற்கு செய்து கொடுத்தவர்.  தெய்வ பக்தி நிறைந்தவர்.  செய்யும் தொழிலை அனுபவித்து ரசித்து ரசித்து செய்பவர். அவர் பேர் S, பாபு. அவரிடம் வேலை பார்ப்பவர்களும் அவர் போலவே . ஒவ்வொரு கல்யாணத்திற்கும் வரவேற்பில் புதுமை செய்வார்கள். இந்த முறை கடலைமாவால் இனிப்பில் செய்யப்பட்ட வாழைப்பழ சீப்பு, தேங்காய், குட்டி ஆப்பிள், வெற்றிலை பாக்கு வைத்த தாம்பாளத்தை  செய்து இருந்தார். புடவை , ஜாக்கெட்துணி போல் பால்கோவாவால் செய்து இருந்தார். மயில் கண் வேஷ்டி, நேரியலை  பாதம்ஸ்வீட்டால் செய்து இருந்தார். கிருஷ்ணா ஸ்வீட்காரர்கள் முன்பே  இப்படி செய்து இருக்கிறார்கள்.

மண்டபத்திற்கு போகும் முன் வீட்டில் பூஜை செய்தல்.

  
ஒருதங்கை அன்னையின் பக்தை -தன் தங்கை மகள் திருமணம் நன்கு நடை பெற அன்னைக்கு நவதானியங்களால் அரவிந்தர் அன்னை  சின்னத்தை அலங்கரித்து  இருந்தாள்.

இனிப்பு பலகாரம் தான்= வாழை, தேங்காய், வெற்றிலை
ஆப்பிள் எல்லாம்
பால்கோவா சேலை

பால்கோவா ஜாக்கெட்
பாதாம் வேஷ்டி
பாதாம்நேரியல்

தங்கை செய்த அலங்காரத் தட்டுக்கள்
மாப்பிள்ளை  அழைப்பு அன்று மேடை  அலங்காரம் 
மாப்பிள்ளை அழைப்புக்கு ஒரு அலங்காரம் செய்தவர்கள்  மறு நாள் திருமணத்திற்கு பூ ஜோடனை செய்கிறார்கள்.
எத்தனைபேரின் உழைப்பு!
சரியாக இரும்பு சட்டத்தில் உட்கார்ந்து விட்டதில் மகிழ்ச்சி.
மாங்கல்யம் அணிவித்தவுடன்  அட்சதை மழை பொழிகிறது.
நீங்களும் வாழ்த்துங்கள் மணமக்களை.
//மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்//

நலுங்கில் மணபெண்ணின் சித்தப்பா குழந்தைகள், பெரியப்பா பேத்தி குட்டி பெண்ணும்  ஆட்டம் 

பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் மியூசிக்கல் சேர் விளையாட்டு.

எல்லோரும் மகிழ்ச்சியாக கலந்து உரையாடி மகிழ்ந்து இருப்பதற்கே இந்த விழாக்கள் உதவுகிறது. மனக்குறைகளை களைந்து நம்மால் திருமண விழாவில் என்ன உதவி செய்ய முடியுமோ செய்து நாமும் மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி மணமக்களை வாழ்த்தி மகிழ்வோம்.

அடுத்து அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயிலில் நடந்த பங்குனி உத்திரத் திருவிழா, மிளகாய்ப்பழ சித்தர் சமாதி, வெயிலோடு விளையாடும் சிறுவர்கள் என்று பதிவு  --வந்துவிடுங்கள் மறக்காமல்.

                                                             வாழ்க வளமுடன்.




கழுகுமலைத் திருக்கோயில்

$
0
0

திருநெல்வேலிக்கு  அருகே உள்ள கோவில்பட்டியிலிருந்து  சங்கரன் கோவிலுக்குச் செல்லும் வழியில் இருபது கி.மீ தூரத்தில் இவ்வூர் உள்ளது.

கழுகுமலையில் முக்கியமாகப் பார்க்கவேண்டியவை:-


1. அருள்மிகு கழுகாசலமூர்த்தி  திருக்கோயில்

2.வெட்டுவான் கோயில் என்று கூறப்படும் குடைவரைக் கோயில்


3. சமணதீர்த்தங்கரர்களினசிற்பங்கள்,சமணர்கல்வெட்டுக்கள் .


கழுகுமலையைப்பற்றி முன்பே பதிவு போட்டு இருக்கிறேன். 2013ல் எழுதிய பதிவில் வெட்டுவான் கோயில், குடைவரைக்கோயில், சமணதீர்த்தங்கரர்களின் சிற்பங்கள், சமணர்கல்வெட்டுக்கள் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். படிக்கவில்லையென்றால் படிக்கலாம். 

இந்தப் பதிவில் கழுகாசலமூர்த்தி திருக்கோயிலைப் பற்றி எழுதியுள்ளேன், அக்கோயிலில் வரைந்து இருந்த ஓவியங்களையும், காமதேனு, மயில் வாகனங்களையும், அங்கு உள்ள முருகனின் உற்சவ மூர்த்தியையும் எடுத்த படங்களைப் பகிர்ந்து இருக்கிறேன் .

இவ்வூர், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய ஸ்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் பற்றி மூன்று திருப்புகழ்ப் பாடல்கள் உள்ளன. முத்துசுவாமி தீட்சிதர் அவர்களும் கழுகாசலமூர்த்தி மீது கீர்த்தனை இயற்றி இருக்கிறார்.

 அண்ணாமலை ரெட்டியார்   காவடிசிந்து பாடி இருக்கிறார். கோவில்பட்டி நீலமணி அவர்கள் ’கழுகுமலை கந்த கவசம்’ பாடி இருக்கிறார்.
கழுகுமலை முருகனுக்கு  ஒரு விளக்கம் சொல்லி இருக்கிறார் புலவர் கீரன் அவர்கள் :-  

ஒருமுகமும் ஆறு கைகளும்
கைகள் இரண்டில் சக்தியும்
ஏனையகைகளில் அட்சமாலை
வரதம் அபயம் சின் முத்திரை
விளங்க, சிவன்(இங்கு அகத்தியர் என்பது நியதி)
எதிரில் மாணவராகக்
கைகட்டி வாய் புதைத்து
நிற்க, பிரணவஉபதேசம்
செய்பவர்.

அருணகிரிநாதரின்  திருப்புகழில் இருந்து  இரண்டு வரிகள் மட்டும் பகிர்ந்து இருக்கிறேன்:-

“வேண்டும் அடியர், புலவர் வேண்ட அரிய பொருளை
 வேண்டும் அளவில் உதவும் பெருமாளே”

1989 ல் கோவில்பட்டி நீலமணி எழுதிய கவசத்திலிருந்து  ஒரு பாடல்:-

வணங்கிடத் தலையும் தந்தாய்
வாழ்த்திட வாயும் தந்தாய்
இணங்கிட மனமும் தந்தாய்
இசைத்திட தமிழும் தந்தாய்
மணங்கமழ் மாலை கொஞ்சும்
மார்பனே ! காக்க காக்க
அணங்கொடு வந்தே காக்கும்
அழகனே! காக்க காக்க

கோவிலில் முருகன் சன்னதி முன் நல்ல கூட்டம் அபிஷேகம் முடிந்து அலங்காரம் அப்போதுதான் செய்து இருந்தார்கள் . கொஞ்சம் நகர்ந்து கொள்ளுங்கள் பார்த்து விட்டு போய்விடுகிறோம், என்று முன் இருப்பவர்களிடம் கேட்டுக்கொண்டு கழுகாசல மூர்த்தியைத் தரிசனம் செய்து வந்தோம்.

                           
                நுழைவு வாயில் கோபுரம் கிடையாது மலையே கோபுரம்


வண்ணத்தில் மின்னும் தூண், மேல் விதானக் காட்சி
பத்தாயம் எனும் நெற்குதிர் மேல் வைத்து இருக்கும் முரசு
மயில் வாகனம்
காமதேனுவின் ஜடை அழகு
கழுகாசலமூர்த்தி உற்சவர்
கோவிலைச் சுற்றி அழகான ஓவியங்கள்

இது கழுகரசன் சம்பாதி முக்தி பெற்ற திருத்தலம்

ஒரு முகமும் ஆறு கைகளும், இடதுபுறம் மயிலின் தலையும் அமைந்த  சிறப்பு அம்சம் , அருணகிரியார் கூப்பிய கைகளுடன்.

இது குடைவரைக் கோயில் - குகையை குடைந்து கோவில் கட்டப்பட்டுள்ளதால் கோவிலை சுற்றி வர ,கிரிவலம் வர வேண்டும்.
பெளர்ணமி கிரிவலம் மிகவும் விசேஷம்

கோவிலில் நடந்த திருமணவிழா ஒன்று - பாண்டு வாத்தியம்
பெண்ணும் மாப்பிள்ளையும்
வண்ணத்தாள் வாணவெடி மழை எனப் பொழியும் காட்சி

கோவிலில் இருந்து வெளியில் வரும்போது வாசலில் ஒரே ஆரவாரம் திருமண விழாவுக்கு  வெடி வெடித்து  பாண்ட் வாத்தியம்  முழங்க மணமக்கள் வாசலில் நின்று இருந்தார்கள்.

கோவிலில் கல்யாணம் கோவில் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் வரவேற்பு அந்தக்கால பாடல் ஸ்பீக்கரில் ,”மணமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா” என்று ஒலிக்க,பெண்ணை  ஆரத்தி எடுத்து  வரவேற்றார்கள். இன்னும்  இந்த ஊர்களில் இந்த பழைய பாடல் கல்யாணவீடுகளில் ஒலிப்பது   மகிழ்ச்சியாக இருந்தது. 

அதிகாலையில் நடந்த பங்குனி உத்திரத் தேர்
நிலையில் நிற்கும் தேர்

தேரோடும் வீதி
கிரிவலம் வந்த போது எடுத்தபடங்கள்




மலையுச்சியில் பிள்ளையார் கோயில்

போனமுறை  கந்தசஷ்டி சமயம் போனோம், இப்போது பங்குனி உத்திரம் சமயம் போனோம்.தங்கை மகளை புகுந்தவீட்டில் விட்டு விட்டு கழுகாசல மூர்த்தி தரிசனம் செய்து வந்தோம்.

உறவினர் வீட்டில் எடுத்த படம்:-


 குழந்தைகள் விளக்கைப் பிடித்து இழுத்துப் போட்டுவிடாமல் இருக்க விளக்கு மாடத்திற்கு அழி( கம்பிக் கதவு) எங்கள் பக்கத்தில் இப்படி எல்லோர் வீட்டிலும் இருக்கும்.  

பம்பரம் விடும் சிறுவர்கள்:-






அந்தக்காலம் போல் மரத்தில் அழகிய வண்ணத்தில் இருக்கும் பம்பரங்கள் இல்லை. பிளாஸ்டிக் பம்பரங்கள்! தேரோடும் வீதியில் வெயிலை பொருட்படுத்தாமல் நாலைந்து சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். ஒரு சிறுவனிடம் சென்று ”அபீட்” எடுத்துக்காட்டு என்ற உடன் எடுத்துக்காட்டினான். சிறுவனுக்கு நன்றி சொல்லிப்  படம் எடுத்தவுடன் மகிழ்ச்சி,

அவர்களுக்கும் எனக்கும்.

வாழ்கவளமுடன்.
-------------------

கழுகுமலை மிளகாய்பழ சித்தர் ஜீவசமாதி

$
0
0
நம் நாட்டில் சித்தர்கள் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள். சிலர் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து மறைந்தும் போகிறார்கள். சிலர்  காலம் காலமாய் பேசப்படுகிறார்கள். சிலர் நிறைய அற்புதங்களை ,   சித்து விளையாட்டுகளை செய்து காட்டுவார்கள். சிலர் அற்புதமான மருத்துவம் அறிந்தவர்களாய் இருப்பார்கள். சித்தர்கள் திருமூலர் போல்  கூடு விட்டுப் பாயும் கலை அறிந்தவர்களாக இருப்பார்கள். திருமூலருக்குத் திருவாவடுதுறையில் ஜீவசமாதி உள்ளது.  வருடம் ஒரு பாடலாய் மூவாயிரம் வருடம் வாழ்ந்து மூவாயிரம் பாடல் அடங்கிய திருமந்திரம் தந்தார் நமக்கு.

நமக்கு தெரிந்த சித்தர்கள் 18 . எங்கள் ஊரில்  பெரிய கோவிலில்(மயூரநாதர்) குதம்பைச் சித்தர் ஜீவசமாதியில் இருக்கிறார்.

நான் இங்கு சொல்லப்போகும் சித்தர் கழுகுமலையில் வாழ்ந்து சித்தியடைந்த மிளகாய்ப்பழசித்தர் பற்றி.

கிரிவலப்பாதையில் உள்ள அந்த சித்தரின் சமாதிக்கு சென்ற பங்குனி  உத்திரநாள் அன்று  (13/4/2014) போய் இருந்தோம்.

250 வருடத்திற்கு முன்பு அவர் ஜீவசமாதி அடைந்தார் என்கிறார்கள். புரட்டாசி அமாவாசை அன்று அவரது குருபூஜை கொண்டாடப்படுகிறது என்றார்கள்.
அவர் மேல் பக்தி உள்ளவர்களின்  கண்களுக்கு இன்னும் தெரிகிறார் என்றார்கள்.

கழுகாசல மூர்த்தி கோவில் யானை  , சித்தர் கோவிலின் வாசலின் அருகில் வரும் போது முட்டி போட்டு  வணங்கிவிட்டுத்தான் செல்லுமாம். அவர் மேல் நம்பிக்கை வைத்து  வேண்டுதல்களை வைத்து வணங்கிச் செல்பவர்கள் வேண்டுதல் நிறைவேறிய உடன் வந்து தன்னால் முடிந்த காணிக்கைகளை செய்வார்களாம்.

நோய் உற்ற போது மிளகாயொன்றை  எடுத்து சித்தரை மனதில் நினைத்துக் கொண்டு விபூதியை பூசிக் கொண்டு மிளகாயை தண்ணீரில் போட்டு விட்டு பின் மறுநாள்  சித்தரை மனதில் நினைத்து நோய் குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு குடித்தால் நோய் குண்மாகும் என்று சொல்கிறார்.
-இவை எல்லாம் கோவிலைப்பார்த்துக் கொள்ளும் அம்மா சொன்னவை.

சித்தருக்குப் பூஜை செய்கிறார்கள்
விளக்கின் ஒளி வெள்ளத்தில் சித்தர்
தலைமுறை தலைமுறையாக இவர்கள் குடும்பம் தான் கோவிலைப் பார்த்துக் கொள்கிறார்களாம் ,  அம்மா சித்தரைப்பற்றி சொல்கிறார்கள்.
கோவிலைப்பற்றி விபரங்களை சொல்லும் தாயும் மகனும்

உள் வாசலில் வாகனங்களை வைக்காதீர்கள் என்று கொட்டை எழுத்தில் எழுதினாலும் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.(பூசாரியின் வாகனம் போலிருக்கிறது)
ஜீவசமாதியின் முகப்பு வாசல்

பூவரசம் பூ 
வானைத் தொடும் வேப்பமரம், பூவரசு மரம்- சமாதி அருகில்
வேப்பமர நிழலில் கல் மண்டபம்  - இன்றும் இந்த மண்டபத்தில் சித்தர் வந்து அமர்வதையும் அதன் பக்கத்தில் நடந்து போவதையும் பார்த்ததாய் கோவிலைப்பார்த்துக் கொள்ளும் அம்மா சொல்கிறார்கள்.

மிளகாய்ப் பழ சித்தர் கழுகுமலைப்பகுதியில் வாழ்ந்து இருக்கிறார் . அவருடைய உணவு மிளகாய்ப் பழங்கள் மட்டும் தானாம். தினம் காடுகளில் மலைகளில் சுற்றி வருவாராம் மிளகாய்ப் பழம் சாப்பிட்டு விட்டு தவத்தில் அமர்ந்து இருப்பாராம்.

சிறுவயதில் வீட்டில் மிளகாய்ப் பழம் சாப்பிடுவாராம். சித்தரின் பெற்றோர்கள் ஏன் இப்படி சாப்பிடுகிறாய் என்று கேட்டவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாராம். அது முதல், மலைதான் அவரின் வீடாய் மாறி விட்டது.
சித்தர் சமாதியைப் பார்த்துக் கொள்ளும் வயதான பெண்மணி கூறிய செய்திகள் இவை. அவரும் அவர்மகனும் நமக்கு செய்திகள் சொன்னார்கள்.  விபூதி, மிளகாய் பிரசாதமாய் கொடுக்கப்பட்டது.

கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் வாங்கி கொடுங்கள் என்றார்கள் . நாங்கள் எண்ணெய் வாங்க கடைக்கு போக வேண்டுமே அதனால் அவர்களிடம் பணம் கொடுத்து விட்டோம்.

உங்கள் வேண்டுதல்களை சொல்லிச் செல்லுங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி வைப்பார் மிளகாய்ப்பழ சித்தர். அடுத்தமுறை வரும் போது உங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு மகிழ்ச்சியாக வந்து வணங்கி செல்லுங்கள் என்றார்கள். எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?    என்று கேட்டுக் கொண்டார்கள். எல்லோர் நலனுக்கும் சித்தரிடம் சொல்லி பூஜை செய்தார்கள்.
நாங்களும் எல்லோரும் நலமாக இருக்க வேண்டி வந்தோம்.

                                                  வாழ்க வளமுடன்
                                                   ---------------------------

அம்மா என்றால் அன்பு

$
0
0
                    

அம்மா என்றால் அன்பு.   அன்பு என்றால் அம்மா. சொல்லச் சொல்ல இனிக்கும், அம்மா என்னும் அழைப்பு. அவரவர்களின் அம்மா அவரவர்களுக்கு என்றுமே சிறப்புதான்.(உயர்த்திதான்)

மே 8 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

 முன்பு எல்லாம் அன்னையர் தினம் என்று கொண்டாடி அம்மாவுக்கு வாழ்த்து சொன்னது இல்லை. என் அம்மாவுக்கு இப்போது வாழ்த்து சொல்கிறேன்:-

 ”அம்மா! அன்னையர் தின வாழ்த்துக்கள்  அம்மா!. உங்கள் அன்புக் குழந்தைகளுக்கும், ஆசைப் பேரக்குழந்தைகளுக்கும் வாழ்த்துச் சொல்லுங்க அம்மா! அவர்களை எப்போதும் ஆசீர்வாதம் செய்துகொண்டுதான் இருப்பீர்கள் என்றாலும் இப்போது உள்ள குழந்தைகள் அந்த அந்த நாள் வாழ்த்துக்களை விரும்புகிறார்களே! ”

சிறு குழந்தையாக இருக்கும்போது குழந்தையிடம் கேட்டுப்பாருங்கள். உனக்கு இதை யார் சொல்லிக் கொடுத்தா?  என்றால் - அம்மா. இவ்வளவு அழகாய் யார் தலைவாரி விட்டா? என்று கேட்டால் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்க ’அம்மா’ எனும் குழந்தை. யார் இந்த டிரஸ் வாங்கித் தந்தா? அழகாய்  இருக்கே! என்றால் ,’அம்மா’ என்று எதைக் கேட்டாலும் ’அம்மா’ என்று  குழந்தை   சொல்லும். திருமணத்திற்குப் பின்னும்,  ’எங்க அம்மாவீட்டில்’ என்று சொல்வதை விட முடியாது.  இப்படி அம்மா பெருமை பாடுவது காலம் முழுவதும் தொடரும்!

இப்போது விளம்பரங்கள் எல்லாம்  அம்மாவுக்குத்  தான் தெரியும்  குழந்தைகளைப் பற்றி என்று சொல்கிறது.

”எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
 மண்ணில் பிறக்கையிலே  
அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் 
அன்னை வளர்ப்பதிலே”

என்று அதிலும் அன்னைக்குத்தான் பெருமையும், சிறுமையும். குழந்தைகள் குற்றம் செய்தாலும் பெற்றோர்களை - குறிப்பாய் அம்மா வளர்ப்பைத் தான் குற்றம் சொல்லும் உலகம். ”மக்கள் குற்றம் பெற்றோர் தலைமேல் ”என்று. எவ்வளவு பெரிய விஷயத்தை ஒருசின்ன கருத்துப்படத்தின்  மூலம் விளக்கி விட்டார்கள் விகடன் பத்திரிக்கையில்.
அந்த கருத்துப்படத்தைப் பாருங்கள் கீழே . கருத்தின் மூலம்  பாடமும் சொல்லித் தருகிறது அன்றைய விகடன்  :--
(கீழே பகிர்ந்த படங்கள் எல்லாம் விகடன் பவழ விழா மலரில் இருந்து எடுத்த படங்கள்.  1926 - 2002)

                                           

தாய் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு தரும் அன்பு என்பது பொக்கிஷத்தில் சேமித்தவை போல வாழ்நாள் முழுமைக்கும் கிடைக்கும். அள்ள அள்ளக் குறையாதபொக்கிஷம் அது!

என் தாயின் நினைவுகள் சில:--

அதிகாலையில்  எழவேண்டும், கடவுளை வணங்க வேண்டும்
அந்த அந்த நேரத்தில் அந்த அந்த வேலையை முடிக்க வேண்டும். அதில் முக்கியமானது நேரத்திற்கு சாப்பிடுவது.  நேரத்திற்குச் சாப்பிட்டாலே உடலுக்கு ஆரோக்கியம். வீட்டுவேலைகளும் நேரத்திற்கு நடக்கும் என்பது அவர்களின் கருத்து. நேரம் தவறி உண்பவர்களைப் பார்த்தால் இந்த வயிற்றுக்கு தானே சம்பாதிக்கிறீர்கள் வயிற்றை காயப்போடலாமா இவ்வளவு நேரம் என்று கடிந்து கொள்வார்கள்.

 துணி காயப்போட்டால் காய்ந்தவுடன் மடித்து விட வேண்டும். கொடியிலிருந்து எடுத்தவுடன் மடித்தால் ஒரு அழகு, அதை அங்கே போட்டு இங்கே போட்டு மடித்தால் நன்றாக இருக்காது என்பார்கள்.
பீரோவில் அழகாய் துணிமணிகள் மடித்து இருக்க வேண்டும். இல்லையென்றால் பானையில் சுருட்டி வைத்த மாதிரி இருக்கு  என்பார்கள்.
மதியம் தூங்கக் கூடாது. பொழுதை வீணாய்க் கழிக்காமல் ஏதாவது கைவேலை செய்தல், நல்ல புத்தகம் படித்தல், சுவாமி புத்தகங்கள் படித்தல் என்று செய்து கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் படிக்கும் தோத்திர புத்தகங்களுக்கு அட்டை போட்டு சுத்தமாக வைத்து இருப்பார்கள் கொஞ்சம் கிழிந்து விட்டால்  கனமான அட்டை வைத்து   தைத்து  அட்டை போட்டு விடுவார்கள். எனக்கு பள்ளி நோட்டுக்கள், புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அம்மா தான் அட்டை போட்டுத் தருவார்கள், நான் செய்ததே இல்லை. (என் குழந்தைகளுக்கு என் கணவர் போட்டு கொடுப்பார்,அப்புறம் அவர்களே போட்டுக் கொண்டார்கள்.)

அம்மா வித விதமாய் ஜடை பின்னுவார்கள். என் மகள் , மற்றும் அண்ணன், தங்கை தம்பி  மகள்கள் எல்லாம்  ஆச்சியிடம் ஆசையாக பின்னிக் கொள்வார்கள்.

கண்கண்டால் கை செய்ய வேண்டும் என்பார்கள். பின்னல் கைவேலை எல்லாம் அந்த அந்த சீஸனுக்கு எது புதுசோ அதை செய்து விடுவார்கள் அவை ஒவ்வொரு கொலுவுக்கு வந்து விடும் எனக்கு.

கொலுவில்அம்மாவின் கைவேலைப்பாடுகள்  இடம்பெற்று அம்மாவின் நினைவுகளை தந்து கொண்டே இருக்கிறது.
புத்தகங்களில் தனக்குப் பிடித்தவற்றை பைண்ட் செய்தோ அல்லது கைப்பட எழுதியோ  வைத்துக் கொள்வார்கள். அவற்றை அம்மாவின் பொக்கிஷ பகிர்வுகள் என்று  முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.

ஆண்களுக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கும்.  பெண்களுக்கு ஓய்வே கிடைப்பது இல்லை (அவர்களே விருப்ப ஓய்வு பெற்றால்தான் உண்டு). அவர்கள் தன் குழந்தைகளுக்கு, தன் குழந்தைகளின் குழந்தைகளுக்கு, , மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் உழைக்கத் தயாராக இருக்கிறார்கள், அன்பு தரும் பலத்தால்.  அதை விகடனில்  பகிர்ந்து இருப்பார்கள்.
அவற்றைக் கீழே பார்த்து மகிழுங்கள்.:---



இப்படிப் பட்ட நினைப்பும் அன்பும் அரவணைப்பும் தான் அவர்களை நீண்ட நாள் வாழ வைக்கிறது. ”அணைத்து வளர்ப்பவளும் தாய் அல்லவா! அணைப்பில் அடங்குபவளும் அவள் அல்லவா!

அன்புக்கு ஏங்கும் பெற்றோர் நிறைய இருப்பார்கள். அவர்களுக்கு உங்கள் அன்பைத் தாருங்கள், அன்பாக அணைத்து அம்மா சாப்பிட்டாயா என கேட்டுப்பாருங்கள்  மகிழ்ந்து போவார்கள் வேறு ஒன்றும் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது இல்லை.

முன்பு நாலு நாளுக்கு ஒருமுறை நாலுவரி  கடிதம் எழுது என்று கேட்டார்கள் பெற்றோர்கள்.  -அப்புறம் தொலைபேசி வந்தபின் - அடிக்கடி போன் செய் என்றார்கள்.  இன்னும் தகவல் நுட்பம் வளர்ந்தபின் இணையத்தில்  இன்று என்ன சாப்பிட்டாய்?என்று நேரில் பார்த்துக் கொண்டே பேசும் வளர்ச்சி பெற்றபின் எதிர்பார்ப்புகள் அதிகம் ஆகிவிட்டது.

இப்போது அடிக்கடி ஸ்கைப்பில் வா உங்களைப் பார்க்க வேண்டும்  என்று தூரத்தில் இருக்கும் பிள்ளைகளிடம் பெற்றோர் கேட்கும் காலம் ஆகிவிட்டது.

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்  அவர்கள் எழுதிய  தினசரி தியானத்திலிருந்து ஒரு சிறு பகிர்வு:-

தாயின் உள்ளம்:-
தன் குழந்தையிடத்துக் குற்றம் ஒன்றும் காணாது குணமே காணும் பாங்குடையவள் தாய். என் தாயே, உனதருளாலன்றி உய்யும் ஆறு நான் அறிகிலேன்.

கடவுளை நோக்கி நாம் ஒரு அடி சென்றால் அவர் நம்மை நோக்கிப் பத்து அடி வருகிறார்.. பெற்ற தாய் படைத்துள்ள  உள்ளக் கசிவு கடவுளின்கருணையேயாம். தாயின் உள்ளத்தை அறிபவன் கடவுளின்கருணையை அறிபவன் ஆகிறான்.

எத்தன்மைக் குற்றம்
இயற்றிடினுந் தாய்பொறுக்கும்
அத்தனமை நின்னருளும்
அன்றோ பராபரமே.
===================தாயுமானவர்

அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்! தாய்மை உணர்வு  உடைய அனைத்து  தாயுமானவர்களுக்கும்  வாழ்த்துக்கள்!


அன்னையர்தினம் , அன்பின் வழி , அம்மாவின் பொக்கிஷங்கள்,
-இவை நான் முன்பு எழுதிய பதிவுகள்.

வாழ்க வளமுடன்!
-------------

இறைவன் படைப்பில் அதிசயங்கள்!

$
0
0
எறும்பைப் பற்றி சிறு வயதில் படித்த கதை நினைவு இருக்கும் எல்லோருக்கும்.தண்ணீரில் தத்தளித்த எறும்புக்குப் புறா மரத்திலிருந்து இலையைப் பிய்த்துப் போட, எறும்பு அதைத் தெப்பமாய் உபயோகித்துத் தப்பித்தது.தப்பித்த எறும்பு புறாவை வேட்டையாட வந்த வேடன் காலில் கடித்து  புறாவைக் காப்பாற்றியது என்று கதை.. பிறருக்கு உதவும் மனப்பான்மைக்கும், செய்நன்றி மறவாமல் இருக்கவும் சொல்லப் பட்ட கதை. 

எறும்பு பூஜித்த கோவில் - எறும்பீஸ்வரர் கோவில் திருவெறும்பூரில் இருக்கிறது. 

இப்போது என்ன இந்த எறும்பு பற்றி சொல்கிறேன் என்றுபார்க்கிறீர்களா?

கோவையில் இந்தமுறை போன போது  எங்கள் வீட்டுஅருகில் இருந்த புங்கமரத்தில் வித்தியாசமாய் இருந்த காய்ந்த இலையின் மொத்த சேகரிப்பை பார்த்தேன் . அது என்ன என்று பார்க்கும்போது தான் தெரிந்தது, அவை எறும்புக் கூடு என்று . பின் எப்படி கட்டுகிறது என்று தினம் தினம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.  அதைப் படிப்படியாக எடுத்து இங்கு கொடுத்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் அருகில் உள்ள வேப்ப மரம். மற்றும் தூங்குமூஞ்சி மரத்திலும் கூடு கட்டி உள்ளது   எறும்பு.
 
                          என்னைக் கவர்ந்த காய்ந்த இலையின் சேகரிப்பு.

ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்த ஓர்ப்படியின் பேத்தியும்(சிறுமி) என்னுடன் வெகு ஆர்வமாய்  எறும்பு ஆராய்ச்சி செய்ய உதவினாள். தூங்குமூஞ்சி மரத்தில் இருக்கும் கூட்டை அவள்தான் மொட்டைமாடியில் போய் பார்த்து வந்து ,’ காமிராவை எடுத்துக் கொண்டு வா ஆச்சி வந்து பார் இங்கும் கூடு கட்டி இருக்கு’ என்றாள்,போய்ப்  பார்த்தால் அதுவும் எறும்புக் கூடுதான் அதுவும்  புங்க மரத்தில் இலையால் கூடு கட்டிய அதே எறும்பு  வகை தான். பின் வேப்பமரத்தை பார்த்தால் அதிலும் கட்டி இருப்பது தெரிந்து கொண்டேன்.

தரையில் நிமிசமாய் மண்ணைக் குவித்து வைக்கும் எறும்புப் புற்றையும், செடிகளில் வெண் பஞ்சாய் கூடு வைத்து செடியை சாகடிக்கும் எறும்புகளை பார்த்து இருக்கிறேன். இப்படி இலைகளை மடித்து கூடு கட்டும் எறும்பை இப்போது தான் பார்த்தேன்.

அமெரிக்கா போனபோது ஒரு படகுத் துறைக்கு அருகில் இருந்த மரத்தில் குளவி இலைகளால் கூடு கட்டியதை பார்த்தேன். அதை என் மருமகள் எடுத்த படம் கீழே பகிர்ந்து இருக்கிறேன் .



என்  சின்னக் காமிராவில் எடுத்த படம்

                 
           குளவி கூடு கட்டி உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் பரிதியின் ஒளி  

கோவையில் எடுத்த எறும்பு கூடு உருவாகும் படங்கள் பின் வருவது. இது நான் எடுத்த படங்கள்.
                   



               ஒன்றுக்கு ஒன்று பேசிக்கொண்டு வேலை பார்க்கும் அழகு.

இறைவன் ஒவ்வொரு உயிருக்கும் எவ்வளவு அறிவைக் கொடுத்து இருக்கிறான் என்று வியந்து பார்க்க வைக்கும் காட்சி
மடித்துத் தைக்கும் அழகு. தையல் குருவி இரண்டு இலைகளை தைக்குமே அது போல்
இலைகளில் மடிப்பு இடையே வெண் இழைகள்

பஞ்சு போன்ற இழைகளால்  இலைகளை மடித்து பொட்டலம் போல் கட்டும் விந்தை
புங்கமரத்து இலைகளையும்  கிளைகளையும்இணைத்து கட்டும் எறும்புகள்

தூங்குமூஞ்சிப் பூவின் காய்ந்த கொப்பை சேர்த்த்து இழை பின்னி , பின் இலைகளை இணைக்கிறது கூடாய்



தூங்கு மூஞ்சி மரத்தின் பூ, இலைகள் மாலையில் மூடிக் கொண்டாலும் விழித்து இருக்கும் பூ.
வேப்பமரத்தில் வேப்பமர இலைகளால் கட்டிய கூடு
என் பேரன் அடிக்கடி பார்க்கும் அனிமேஷன்  படம்- ’Bug's life ’  நானும் அதை அவனுடன் விரும்பிப் பார்ப்பேன். எறும்பு சுறு சுறுப்பு என்றுதான் தெரியும் ஆனால் அதன் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது,  பிற உயிரினங்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள எவ்வளவு கஷ்டப்படுகிறது,  உணவை சேகரிக்க எத்தனை பாடு படுகிறது என்று எல்லாம் அழகாய் காட்டும் படம்.

அது போல் புங்க மரத்தில் கூடு கட்டும் எறும்புகளின் உழைப்பைப் பார்த்தேன். இலைகளில் விலக்கி, சரியாக பார்க்க முற்பட்ட போது அவை அங்கும் இங்கும் கலைந்து பின் மறுபடியும் தன் வேலையில் கண்ணும் கருத்துமானதை பார்க்கும் போது எறும்புகளின் மேல் தனிப் பாசமே வந்து விட்டது.
நம்மிடம் எறும்புகள் போல் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால்    எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். சின்ன வேலையில் இடைஞ்சல் வந்தால் எவ்வளவு கோபம், எவ்வளவு மனத்துயர் படுகிறோம். எறும்பு போல் விடாமுயற்சியும், சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களின்    வாழ்வில் வெற்றி நிச்சயம்! 

                                                         வாழ்க வளமுடன்!



என் கேள்விக்கென்ன பதில்?

$
0
0
அம்பாளடியாள் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள்.  10 கேள்விகள் அதற்கு பதில் அளிக்க வேண்டும். மதுரைத் தமிழன் அவர்கள் அம்பாளடியாளை அழைத்து இருந்தார்கள். அம்பாளடியாள் கேள்விகளுக்கு மிக அழகாய் பதில் அளித்து இருந்தார்கள்.


இப்போது  என் பதில்களை  படித்துப்பாருங்கள்.

1.உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

100 வது பிறந்த நாளை  கொண்டாட வேண்டுமென்றால் அந்த சமயத்தில் என் உடல் நலம், மனநலம், குடும்ப நலம் எல்லாம் நலமாக இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லி  மகிழ்ச்சியாக 100 வது பிறந்த நாளை கொண்டாடுவேன்.

 என் மாமனார் 105 வயதுவரை வாழ்ந்தார்கள் 100வது பிறந்த நாளை மிக மகிழ்ச்சியாக  உற்றம், சுற்றத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.


2.என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் ?

வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம், பிறரிடம் பேச, பழக.  விழிப்புணர்வுடன் இல்லையென்றால் மிகவும் கஷ்டம்.
இந்தக் கால கட்டத்தில்  இணைய பயன்பாடு, ஐபோன், ஸ்மார்ட் போன்,  கற்றுக் கொள்ள வேண்டியகாலமாய் உள்ளது.  விஞ்ஞானம் வளர வளர அடுத்து அடுத்து நிறைய கற்றுக் கொள்ள  தேவைகள் ஏற்படுகிறது.
இப்போது இணையத்தில்,  அலைபேசியில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது, வாட்ஸ் அப், பேஸ்டைம் என்று.  பேச போட்டோ அனுப்ப கற்றுக் கொண்டேன் இப்போது. என் குழந்தைகள், பேரக்குழந்தைகள் கற்றுக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்-  கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அவர்களிடம்.


3.கடைசியாக  நீங்கள்  சிரித்தது எப்போது ,எதற்காக ?....

என் பேரன் போனவாரம் தன் வேடிக்கைப் பேச்சால் சிரிப்புமூட்டினான். அவன் நல்ல நடிகன் திறம்பட நடித்து நம்மை ஏமாற்றுவான் அப்போது சிரித்தேன்.   குழந்தைகளிடம் விளையாடும் போது நானும் குழந்தையாகி போவேன்.எல்லோரும் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.  வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பார்கள். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்.


4..  24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன ?....

புத்தகம், படிப்பேன்,, டிரான்ஸ்சிஸ்டரில் பாடல்கள் கேட்பேன்.
அந்தநாளும் வந்ததே!என்று மின்வெட்டு சமயம் மின்வெட்டால் என்ன என்ன நன்மை என்று எழுதி இருக்கிறேன். பழையகாலம் போல்  மொட்டைமாடியில் குடும்பத்தினருடன் வானத்து நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக உரையாடி(பழங்கதை பேசி)மகிழ்ச்சியாக இருப்பேன்.    தொலைக்காட்சி பெட்டி, கணிப்பொறி வந்தபின் நம் பொழுதுகள் அதில் போய்விட்டதே!

5.உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன ?....

இன்றுபோல் என்றும் வாழ்க!  ஒருவரை  ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, மனம் ஒத்து வாழுங்கள் என்று சொல்வேன். இருபக்க குடும்ப உறவினர்களிடமும் அன்பாய் இருங்கள் என்று சொல்லி இருக்கிறேன் அது போல் என் குழந்தைகள் நடந்து வருகிறார்கள்.


6. உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள் ?...

உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு  மூல காரணம் என்ன  என்று ஆராய்ந்தால், மக்கள் தொகைப் பெருக்கத்தால்  உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் இருக்கும் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப் பட வேண்டும் முதலில்.  அவர்களின் பசிபிணியை போக்கி,  கல்வி அறிவை மேம்படுத்தி, அவர்கள் மனம் நலம் காத்தால்  உலகத்தில் பிரச்சனைகள் ஏற்படாது என்பது என் எண்ணம்.

7. உங்களுக்கு ஒரு பிரச்சனை அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க விரும்புவீர்கள் ?...

என் கணவரிடம்.(கணவரே பிரச்சனையாக இருந்தால் பிள்ளைகளிடம் ! )

8. உங்களைப்பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார் அதைக்கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?..
.
உண்மையான பதில் வேண்டும் என்றால்  முதலில் மனம் வருந்துவேன் என்பது தான், பிறகு போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என்று நாம் அந்த தவறை செய்ய வில்லை- பின் ஏன் வருந்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டு  ’இன்னல் புரிவோர், எதிரிகளாக இருப்பினும் அவர்களும் மனம் திருந்தி வாழ வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி இருப்பேன்.

9 .உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

பிறருக்கு துக்கம் என்றால் அவர்களுக்கு ஆறுதல் சொல்வது நம் பண்புதானே!

அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் சொல்லி அவர்களை தைரிய படுத்துவேன். அவர்கள் எங்கும் போக வில்லை உங்களுடன் தான் இருக்கிறார்கள் கவலை படாதீர்கள்  என்று. முன்பு நம் பெரியவர்கள் பேசிக் கொள்வார்கள் எண்ணெய் முந்தியா? திரி முந்தியா என்று  யார் முந்தி செல்வார்கள் யார் பிந்தி செல்வார்கள் என்று தெரியாது. இறைவன் எப்போது நாம் இந்த உலகத்திற்கு வர வேண்டும், எப்போது அவனிடம் வரவேண்டும் என்பதை முன்பே முடிவு செய்து விடுகிறார்.  இருக்கும் வரை அவர் நினைவுகளுடன் வாழுங்கள் என்று ஆற்றுப்படுத்துவேன்.

10.உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?..

தனியாக இருந்தால்  பாடல் கேட்பது பிடிக்கும்,  அதுவும் நல்ல பாடல்களை கேட்பது மிகவும் பிடிக்கும்.  தொலைக்காட்சியில் நல்ல நிகழ்ச்சிகள், அதில் பாடல்கள்,  கேட்பேன் தனிமையை இனிமை ஆக்குவது இசைதான். மன அமைதி தருவது இசை. தனிமையை போக்குவது இசைதான். எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் பாடல்கள் கேட்டுக் கொண்டு செய்வது எனக்கு பிடித்த ஒன்று.

அப்பா! எப்படியோ கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டேன்.
அம்பாளடியாள் அழைப்புக்கு நன்றி.
அம்பாளடியாள் அழைத்த போது நான் ஊரில் இல்லை நேற்றுத்தான்  வந்தேன் ஊரிலிருந்து.

நிறைய பேர் எழுதி விட்டார்கள் . அதனால் எழுத விருப்பப்படுபவர்கள் எழுதலாம். திண்டுக்கல் தனபாலன், கீதமஞ்சரி, எழுதிய பதிவுகளைப் படித்தேன் அசத்தி இருக்கிறார்கள். சூரி சார் கேள்வி கேட்க , மீனாட்சி அக்கா பதில் அளிக்கும்  காணொளி மிக அருமை.

                                                     வாழ்க வளமுடன்.

மாணிக்கவாசகர் பிறந்த ஊர்

$
0
0

மே மாதம் 29ம் தேதி மதுரைக்குப் போனபோது  சில கோவில்களுக்குப் போய் இருந்தோம் (மடப்புரம் ,திருப்பூவணம், திருமோகூர், ஆனமலை நரசிம்மர் கோவில், திருவாதவூர்.)

 மதுரை மேலூருக்கு தெற்கே 9 கிலோ மீட்டர்தொலைவில் திருவாதவூர் உள்ளது. 
                                    
                           
   
மாணிக்கவாசகரின் அவதாரத்தலமாகிய திருவாதவூரில் அருள்மிகு திருமறைநாயகி உடனுறை திருமறைநாதர் திருக்கோவில் உள்ளது.
இக் கோவில் மாணிக்கவாசகருக்கு சிலம்பொலிஒலிக்க செய்த இடம். பழமை வாய்ந்த கோவில். இப்போது புது பொலிவுடன் இருக்கிறது, மிக அழகாய்.
                                 
                      திருமறைநாதர், திருமறைநாயகி, மாணிக்கவாசகர்


                                   
                                                                 பைரவ தீர்த்தம்
                                     
                                                               தலவிருட்சம் மகிழமரம்
                                     
    மகிழமரம் வேலி போட்டு கம்புகள் முட்டுக் கொடுத்து பாதுகாக்கப்படுகிறது
                                    
            வானரங்களும் யாரும் மரத்தை தொடாமல் பார்த்துக் கொள்கிறது.
                                     
கோவிலுக்கு உள் நுழையும்  போது முதலில் அழகாய் மண்டபம் - பழுது பார்க்கப்படுகிறது.          
                                     
ஸ்வாமி சன்னதி  உள் நுழைவாயிலில்,  குருந்த மரம் அடியில் மாணிக்க வாசகருக்கு  தீட்சை கொடுக்கும் காட்சி சித்தரிக்கப் பட்டு இருக்கிறது.
சிவன் இக் கோவிலில் சுயம்பு ரூபமாய் இருக்கிறார். அவரது தலையில் பசுவின் கால்தடம் இருக்குமாம்.


உள் பிரகாரத்தில் மாணிக்க வாசகருக்கு தனி சன்னதி
மாணிக்கவாசகர்

தட்சிணாமூர்த்தி சன்னதி
இறைவனுக்கு சந்தனம் அரைக்கும் இடம் 
சந்தனம் அரைத்து எடுத்தபின் அதை கழுவிவிட வசதியாக துவாரம் 

உட்பிரகாரம்
அம்மன் சன்னதி செல்லும் வழி

அம்மன் சன்னதி

அம்மன் சன்னதி அருகில் பசுமடம்.
அம்மன் சன்னதி கோடியில்  சிவலிங்கம்


                                     
                                                  தேர் மண்டபம் அருகில் தேர்.
                                         
வைகாசி மாதம் நடக்கும் பிரமோற்சவத்தில் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில்  ஒன்பதாம் திருநாள் திருத்தேர் உலா.

இக் கோவிலில் மாசி மாதம் மகாசிவராத்திரி சிறப்பாக நடைபெறும். வைகாசி, , ஆனி உற்சவம்., ஆவணிமாத மூலத்திருவிழா , திருக்கார்த்திகை  உற்சவம் எல்லாம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இங்கு சனிபகவான், பைரவர் வழிபாடும் சிறப்பாம். வாதநோய்கள் நீங்குவதாகவும் மற்றும் பக்தர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்  என்ற நம்பிக்கையும் இங்கு வரும் பக்தர்களுக்கு இருக்கிறதாம்.
                                         

     நாங்கள் போன போது ஆனி மக உற்சவத்திற்கு தயார் ஆகிறது கோவில்


திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்து வளர்ந்த இல்லம் ஊரின் தெற்குத் திசையில் ஒரு சிறுகோவிலாக விளங்குகிறது. அந்தக் கோவில் சில நேரம் திறந்து இருக்கும் சில நேரம் மூடி இருக்கும்.  மூடி இருந்தாலும் பரவாயில்லை வெளியிலிருந்தாவது அவரை வழிபடலாம் என்று போனோம். 


சிவபெருமானே குருவாய் குருந்தமரநிழலில் வீற்றிருந்து  இருந்து தீட்சை அளித்தகாட்சி கோபுரவாயிலில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

நால்வர் வழிபாடு :-

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
வாழிதிருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி.
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.  

நேற்று மாணிக்கவாசகரின் குருபூஜை.

பால்நினைந் தூட்டுந் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவதினியே.

வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்டமுழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்  கரியோய் நீ 
வேண்டிஎன்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும்அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்றுண்டென்னில் 
அதுவும்உன்றன் விருப்பன்றே.

நாமும் இறைவனை சிக்கென பிடித்துக் கொள்வோம். அவருக்கே தெரியும் நமக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்று. தாய்க்கு தானே தெரியும் குழந்தைக்கு எப்போது பசிக்கும், எப்போது எது  தேவை என்று.  தாயைப் போன்ற இறைவன் நமக்கு எல்லாம் அருள்வார்.

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி
அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்.

திருவாசகம்  அளித்த மாணிக்கவாசகர் திருத்தாள் போற்றி!

                                                          வாழ்க வளமுடன்.
                                                   ----------------------------------

திருப்பூவண உலா

$
0
0



வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில்வெண் குழையோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

                                                                  ----அப்பர் தேவாரம்


திருவுடை யார்திருமால் அயனாலும்
உருவுடை யார் உமையாளை ஓர் பாகம்
பரிவுடை   யார் அடைவார்வினை தீர்க்கும்
புரிவிடை  யார் உறை பூவணம் ஈதோ

                                                                 ---- சுந்தரர்.

மாடவீதி மன்னிலங்கை மன்னனை மாண்பழித்துக்
கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம்
பாடலோடும் ஆடலோங்கிப் பன்மணி  பொன்கொழித்து
ஓடநீரால் வைகை சூழும் உயர்திருப் பூவணமே.

                                                               ---திருஞானசம்பந்தர்.

தென்பாண்டி நாட்டுத் தேவாரத் தலங்களில் திருப்பூவணம் 11 வது தலம்.
மதுரையிலிருந்து கிழக்கே 19 கி,மீ தொலைவில் உள்ளது. இதைப் புஷ்பவனம் என்றும் கூறுவார்கள்..

மூலவர் சுயம்பு லிங்கமாய் இருக்கிறார்.
இறைவன் பெயர் -  புஷ்பவனநாதர் , பூவணநாதர், பாஸ்கரபுரீசர், பிதிர்மோக்ஷபுரீசர், பிரம்மபுரீசர் ,ஏகஸ்யசிதம்பரேசர், திருப்பூவணேசர்

அம்மன்-    செளந்தர நாயகி, வடிதம்மை, சுவர்ணவல்லி, அன்னபூரணி,அழகியநாயகி, அழகிய மின்னம்மை, மின்னாள் என்பன.
தனி சன்னதியில்  இருக்கிறார்.

தல விருட்சம் -  பலா.
தீர்த்தம் = மணிகர்ணிகை. வகைநதி., வசிட்ட இந்திர தீர்த்தங்கள்.

இத்தலத்திற்கு மறுபெயர்கள் -புஷ்பவனம், புஷ்பவனகாசி, புஷ்பபுரம், பாஸ்கரக்ஷேத்திரம். பிதிர்மோக்ஷபுரி, பிரம்மபுரி, ஏகசிய சிதம்பரம், பூவணம்,
பூவணக்காசி, பூவை என்பனவாம்.

தீர்த்தத்திற்கு மறு பெயர்கள்:-
வையை, மணிகர்ணிகை, அல்லது மணிகுண்டம், தேவிகுண்டம், பாபநாசம், பிரம்மதீர்த்தம், லக்ஷ்மிதீர்த்தம், மார்க்கண்டேயர் தீர்த்தம், நளதீர்த்தம், விஷ்ணுதீர்த்தம், ஆகியன .

 இத்தலத்தில் உமையம்மை வைத்து வளர்த்த மரம், கிருதயுகம் முதலிய நான்கு யுகங்களில் முறையே பாரிசாதம், வில்வம், வன்னி, பலா மரமாக இருக்கிறது. இப்போது பலாமரமாக இருக்கிறது.

திருவாசகத்தில் மாணிக்கவாசகர், “பூவணமதனில் பொலிந்தினிதருளித்,தூவணமேனி காட்டிய தொன்மையும்”
எனக் குறிப்பிடுகின்றார்.

கரூர்த்தேவர் பாடிய திருவிசைப்பாப் பதிகமும் உள்ளது, இக்கோவில் இறைவனுக்கு.

திருவிளையாடல் புராணத்தில்இரசவாதம் செய்த படலத்தில்  இத்தலம் குறிக்கப்படுகிறது.

அப்பர், சம்பந்தர். சுந்தரர், பாடிய தேவாரமும், கந்தசாமிப் புலவர் இயற்றிய திருப்பூவணநாதர் உலாவும்  பெற்ற சிறப்புத் தலம்.

இத்தலத்தில் எலும்பானது மலர் அல்லது சிலையாகும்(கல்லாகும்) என்பது ஐதீகமாம்.

அந்தக் காலத்திலும் வைகையில் தண்ணீர் இல்லை போலும்! அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரூம்  இறைவனை தரிசிக்க வரும் போது வைகை நதியிலுள்ள் மணல்கள் எல்லாம் சிவலிங்கமாய் தோன்றியதாம், அதனால் அதை மிதிக்க அஞ்சி இறைவனை தொழ இறைவன் அவர்களுக்காக நந்தியை சற்றே சாய்ந்து இருக்கும்படி சொன்னாராம் ,அதன்படி நந்தியும் சாய்ந்து வழிவிட , மூவரும் மறுகரையிலிருந்தே இறைவனை தரிசனம் செய்து தேவாரம் பாடினார்களாம்.

“ செப்பு மூவர் சொற்றமிழ்த்துதிக்க  விருப்போடு வந்து வையை மணற் சிவலிங்கமென மனத்தெண்ணி முன்பு வட கரைக் கவர் நின்று தமிழ் பாடும்பொழுதே இடப மாமுதுகு சாயும் வகையே செய்துமுன் மூவர் தரிசிக்க மகிழ்நேசர்’ எனக் கூறுகிறது தலவரலாறு.

திருவிளையாடற் புராணத்தில் உள்ள செய்திகள்:-

பொன்னனையாள் என்ற நாட்டியப் பெண் பொன்னால் இறைவர் உருவம் செய்ய விரும்பி, தன்னிடமிருந்த பொன் நகைகளை உருக்கி உருவம் செய்விக்கத் தொடங்கியபோது உருவம் செய்யப் போதுமான பொன் இல்லாத காரணத்தால் பாதியில் சிலை செய்வது நின்று போய்விட்டது. பொன்னனையாள், சிலை செய்யமுடியவில்லையே ! என்று வருந்திய போது சிவபெருமான் சித்தர் வேடத்தில் வந்து, பெண்ணே! உன் வீட்டில் இருக்கும் ஈயம், பித்தளை , இரும்பு முதலிய உலோகப்பொருட்களை கொண்டுவா தங்கமாக்கித் தருகிறேன்,  என்று சொல்லி அவற்றைப் பொன்னாக்கிக் கொடுக்க, தடைப்பட்ட இறைவன் திரு உரு முழுமை பெற்றது.அது மிகவும் அற்புதமாய் அமைந்து விட்டது.பொன்னனையாள் சிலையின் கன்னத்தைக் கிள்ளி அணைத்து முத்தமிட்டாள். இன்றும் அந்த முத்த,நகக்குறி உள்ளது என்று புராணம் கூறுகிறது.

கந்தசாமிப் புலவர் எழுதிய திருப்பூவணநாதர் உலாவில் உள்ள தலப் பெருமைகள் :-

சூரியன், நான்முகன், நாரதர், திருமால், திருமகள், நளமகராஜன், முடியுடைமூவேந்தர்கள், வழிபட்டுப் பேறு பெற்ற தலம்.

துர்வாசமுனிவரால்  ஒளியிழந்த சூரியன்  இங்குள்ள மணியோடையில் மூழ்கி, தன் ஒளியைப் பெற்றார்.

நான்முகன் கயிலையில் இறைவனை  வழிபடும் போது ஊர்வசி மேல் மையல் கொண்டதால் இறைவன்  அளித்த சாபம் இத்தல இறைவனை வணங்கியவுடன் நீங்கப்பெற்றார்.

திருமகள்   வாலகில்லிய முனிவரை அவமதித்த குற்றத்தால் திருமாலை பிரிய நேர்ந்தது. அக்குற்றம் நீங்கத் திருமகள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு திருமாலுடன் சேர்ந்தார்.

காளிகச்சோதிகள் நாரதர் சொற்படி இங்கு வந்து மணியோடையில் மூழ்கிப் பிதிர்க்கருமங்கள் செய்து அவர்களுக்கு வீடுபேறு பெற்றுத் தந்தார்.

கல்வெட்டு:-
கோனரின்மை கொண்டான் தனது எட்டாம் ஆட்சியாண்டில் திருப்பூவணநாதருக்கு கோயிலுக்கு நிலம் வழங்கியதும், குலசேகர தேவன் தனது 25 ஆம் ஆட்சியாண்டில் தினந்தோறும் 1008 வேதபாராயணஞ் செய்தவர்களுக்கு உணவிற்காக நிலம் அளித்த விபரமும் சொல்லப்படுகிறது.
ஒரு செப்பேடு ராஜகெம்பீர சதுர்வேதி மங்கல சபைக்கு 25 காசுகள் வழங்கியதை அறிவிக்கிறது.

திருவுலா நாயகருக்கு அருள்மிகு செளந்தர நாயகர் , அழகிய நாயகர் என்ற பெயர்கள் உள்ளன். அழகிய தோற்றத்தை கண்டு கன்னத்தை கிள்ளிக் கொஞ்சியதால் பொன்னையாளின் நகத்தழும்பை பெற்ற மூர்த்தி இவர்.

 பொன்னையாள் திருவுருவம் கோபுர வாயிலில்  உள்ளது. நல்ல பெரிய உருவமாய் உள்ளது.   எதிர்ப் பக்கத்தில் சிவகங்கை மன்னன் திருவுருவமும் உள்ளது.

(கோயிலுக்கு உள் போகும் போது இறைவனுக்கு பூஜையைப் பார்க்க வேகமாய் போனதால் போட்டோ எடுக்கவில்லை. வரும் போது அடுத்த கோவில் மாணிக்கவாசகர் பிறந்த ஊருக்கு செல்லும் அவசரத்தில் படம் எடுக்கவில்லை.)

  பொன்னனையாள் மடம் . பொன்னனையாள் மண்டபம் என்றும் இரண்டு கட்டிடங்கள் உள்ளன. இவை அம்மையார் சிவனடியார்களுக்கு உணவு அளித்த இடமும்,மதுரை சோமசுந்தர கடவுள் பொன்னையாள் பொருட்டு சித்தராக வந்து காட்சிக்  கொடுத்து ரசவாதம் செய்த இடமும் ஆகும்.. கோரக்க சித்தர் ஆலயம் இத்தலத்திலுள்ளது.



கோவில் ஸ்வாமி சன்னதியில் அருள்மிகு ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் செளந்தரநாயகி அம்மன் திருக்கல்யாண திருக்காட்சி படம் இருந்தது.
(சிவபெருமானது வார்த்தையை கேளாது தக்கன் யாகத்திற்கு சென்ற குற்றத்திற்காக உமையம்மை இறைவனை பிரிந்து திருப்பூவணம் அடைந்து தவம் செய்து சிவபெருமானை  மணக்கிறார்).

உள்பிரகாரத்தில் பாஸ்கர விநாயகர், சூரியன், சயனப்பெருமாள்,  நால்வர்,, 63 நாயன்மார்கள், சப்தமாதாக்கள், மகாலக்ஷ்மி, தட்சிணாமூர்த்தி,  நடராஜர், சந்திரன், நவக்கிரகம், முதலிய சன்னதிகள் உள்ளன. நடராஜர்
சன்னதி வாசலில் பதஞ்சலிமுனிவர், வியாக்ரபாதர்முனிவர் சிலைகள் உள்ளன.தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு மேல் விதானத்தில் நன்கு காற்று, வெளிச்சம்  வரும்படி சாளரங்கள்அமைக்கப்பட்டுள்ளன.
  


உள்பிரகாரம் பழுது பார்த்துக்கொண்டிருப்பதால் தட்சிணாமூர்த்தி சந்நிதியுடன் திரும்பவேண்டியுள்ளது.  உள்  பிரகாரம் தற்போது முழுவதுமாகச் சுற்றி வர முடியாது என்று போர்டு வைத்து இருக்கிறார்கள்.
                  
                        நடராஜர் சன்னதி வாசலில் ஒரு பக்கம்  பதஞ்சலி.

                                              மற்றொரு பக்கம் வியாக்ரபாதர்.

தூண்களில் அழகிய சிற்பங்கள்

இரவு சுவாமி பள்ளியறை போகும் பல்லாக்கு
அழகிய காமதேனு வாகனம் 
கைலாய வாகனம்
நந்தி வாகனம்

அம்மன் சன்னதியில் உள்ள தூணில் அழகிய ஏக பாதர் சிலை



அழகிய வானரம்
இரணியவதம்
கருடவாகனத்தில் விஷ்ணு
சுவாமி சன்னதி ,அம்மன் சன்னதி மதில் சுவர்களில் இப்படி அழகிய வாக்கியங்கள் எழுதப்பட்டு இருக்கிறது.
அம்மன் சன்னதியில் சிறு மண்டபத்தில் அழகிய வேலைப்பாடு.அழகிய இரு தூண்களின் வழியாக  என் கணவரின் விரல்கள்.

சுவாமி சன்னதிக்கு வெளியே இருக்கும் தூணில் இருக்கும் பைரவருக்கும் வழிபாடு நடக்கிறது.


                                                                 ஆலயமணி


                                         சுவாமி சன்னதி அருகில்   மணி மண்டபம்


கருவூர்த்தேவர் பாடிஅருளிய திருவிசைப்பாவில், இறைவன் பெருமையைக் காட்டிலும் பெரியதில்லை, அன்புடையோர் உள்ளத்தில் அவர் எளிமையாக வந்து தங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. இறையில்புகளைப்பற்றியும் பூவணத்தின் வளத்தைப்பற்றியும் அவர் சொல்கிறார்.

சம்பந்தர் இத்தலத்தில் மூவேந்தர் வழிபட்ட சிறப்பு, ஊரின் இயற்கை வளம்,மாடமாளிகை,தேரோடும் வீதி பற்றியும் கூறியுள்ளார்.இத்தலத்து இறைவனை வணங்க நன்மைகள் பெருகும்,இன்பம் உண்டாகும் என்கிறார்.

சுந்தரர் தம் தேவாரத்தில் இறைவனின் பெருமைகளை பலவாறு எடுத்துக்கூறி, பூவணம் ஈதோ உள்ளது சென்று வழிபட்டு நலம் பெறுக என்று கூறுகிறார்.

நாவுக்கரசர் இததலத்து இறைவனை  பாடியருளிய   திருத்தாண்டகம் மிக சிறப்பு வாய்ந்தது.  சிவபெருமானின் தனி அடையாளங்கள் இந்தப் பாட்டில் கூறப்படுகிறது. பாடல்கள் தோறும் அப்பெருமானை நினைக்க அவரது திருவுருவம்  நெஞ்சில் தோன்றுமென்று கூறுகிறார்.

                                                                   வாழ்க வளமுடன்!
                                                                 --------------------------------

கண்ணில் தோன்றும் காட்சி எல்லாம்!

$
0
0
பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்! என்பதுபோல்  பறவைகளின் படங்கள் எனக்குத் தெரிந்தவரை எடுத்து இருக்கிறேன்.  பாருங்கள். பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
  
ஏகாந்தம் இனிது

காகமும், குயிலும் 
பாடும் பெண் குயில் 
(ஆண் குயிலுக்கு உடம்பில் புள்ளிகள் இல்லை, பெண் குயில் போல் )


முகம் காட்ட மறுத்த குயில் 

ஆண் குயில்
மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன? 

இரைக்காகக் காத்து இருக்கிறது-(drongo) கருங்குருவி 
கிடைத்து விட்டது!
ஆனந்தம் ஆனந்தம்!

வாலாட்டிக் குருவி (பாடும் பறவை) (கருப்பு வெள்ளை ராபின் பறவை)

புளியமரத்தின் இலைகள் காய்ந்தாலும், 
பச்சைக்கிளி  பசுமை தருகிறது
என்னைப் படம் பிடிக்க முடியாதே!
நான் போறேன் போ!





 என் வீட்டுக்குள் வந்து மாட்டிக் கொண்டு வெளியே போக வழி தெரியாமல் மாட்டிக் கொண்ட தேன் சிட்டு

புறாவும்,  கொண்டைலாத்தி பறவையும்
மணிப்புறாவும், புல் புல் பறவையும்

மணிப்புறா

வீட்டு மொட்டைமாடியின் கொடிக்கம்பியில் உட்காரும் புல் புல்
என் வீட்டுக்கு அருகில் உள்ள மின்சாரக்கம்பியில் தினம்  காலை மாலை வந்து உட்காரும் மீன் கொத்தியின்  புகைப்படம் பாருங்கள்  - முதல் நாள்
இரண்டாம் நாள்
                                                                மூன்றாம் நாள்


இதை (hoopoe ) கொண்டைலாத்தி பறவை  என்கிறார்கள்  திரு.தெகாவும் , திருமதி. கீதாமதிவாணன் அவர்களும். இணையத்தில் சென்று பார்த்தேன்  இதன் உணவு பூக்களின் தேன், பூச்சிகள் என்கிறது. இருவருக்கும் நன்றி.

 தன் முகத்தை மறைத்துக் கொண்ட  பூச்சி பிடிப்பான் ( Bee Eater)-
 வயல்கள் அருகில் இருந்தது .
மறுபடியும் முகம் காட்டும், படம் பிடிக்கலாம் என்று காத்து இருந்தும் பயனில்லை.

உறவினர் வீட்டில்  கூண்டுக்குள் காதல் கிளிகள்

சுதந்திரமாய் பறந்து, நினைத்த இடத்தில் அமர்ந்து இளைப்பாறி மகிழ்விக்கும் பறவைகள் ஒருபுறம்! இப்படிக் கூண்டுக்குள் அடைபட்டு அந்த வீட்டினரை மகிழ்விக்கும்   பறவைகள் ஒருபுறம்! 

                                                          வாழ்க வளமுடன்.
                                                                     --------------

வானர விஜயம்!

$
0
0
கானகத்தை விட்டு வானரங்கள்  மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு வரும் காலம் ஆகி விட்டது, தண்ணீர்க்காவும், உணவுக்காவும் .

நாங்கள் போனமாதம் கோவை போயிருந்த போது  எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்தார்கள் இரண்டு குரங்கார். நாங்கள் பயந்து போய் கதவை அடைத்து விட்டோம். எங்கள் வீட்டு மதில் சுவர் மேல் உட்கார்ந்து கொண்டு இருந்த குரங்குகளை  நான் ஜன்னல் வழியாக போட்டோ எடுத்தேன்.  

         கதவை அடைத்து விட்டார்களே ! என்ன செய்வது என்று யோசிக்கிறது

எங்கள் வீட்டு மதில் மேல் ஏறிக்கொண்டு  பவளமல்லி மரத்தை உலுக்கி எடுத்துவிட்டது. 

                                                         மதில் மேல் என் ராஜாங்கம்
                                வேப்பமரத்தில் ஏறிக் கொண்டு சாகஸம் செய்தது.
   யார் ஜன்னலிலிருந்து என்னை படம் எடுப்பது ! 

அதற்கு உள்ளுணர்வு தோன்றியது போலும் ஜன்னல் பக்கம் உற்றுப் பார்த்தது.
    ஏய்! என்னை ஏன் படம் எடுக்கிறாய் ? என்று என்னைப்பார்த்து உர் என்றது.

நிழலுக்கு எங்கள் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைத்து இருந்த மினி வேனில் ஏறிக் கொண்டு  ஆராய்ச்சி செய்தது.

தெருவில் போகிறவர்கள் வருபவர்களை வேடிக்கை பார்த்தது

தெருவில் போகும் குழந்தைகள்  சத்தம் போட்டவுடன் ஒவ்வொரு மரமாகத் தாவித் தாவிப் போய் விட்டது.

நாங்கள் முன்பு திருவெண்காட்டில் இருந்தபோது ஊர்மக்கள் குரங்குகள் மிகவும் அட்டகாசம் செய்தது என்று மரத்தில் கூண்டு வைத்து அதில் பழங்கள், கடலை வைத்துப் பிடித்து  ஊருக்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.

மயிலாடுதுறையில் வீடுகளில் முன்பெல்லாம் தொலைக்காட்சி ஆண்டெனாக் குழாய்களில் குரங்குகள் ஏறி ஆட்டிக் கெடுத்துவிடும். அதனால் அந்தக் குழாய்களில் முள்கம்பிகளைச் சுற்றியிருப்பார்கள்.

மயிலாடுதுறையில் என் மகனும், மகளும் ஸ்வீட் கடைக்குப் போய் கடலை பக்கோடா வாங்கி கொண்டு பேசிக் கொண்டே கடலையைச் சாப்பிட்டு வரும் போது தெருவில்  வித்தை காட்டுபவர்  கையில் பிடித்து இருக்கும் குரங்கு பாய்ந்து  வந்து என் மகன் கையில் இருக்கும் பொட்டலத்தைப் பறித்ததில் மகன் கன்னத்தில் கையில் அதன் நகம் கீறி விட்டது.அவன் இரத்தக்களறியாக வந்த காட்சியை மறக்க முடியாது. டாக்டரிடம் அழைத்துச் சென்று ஊசி போடப்பட்டது. கண்ணில் அதன் நகம் படாமலும், முகத்தில் உடலில் குரங்கு கீறிய தடங்கள் இல்லாமலும்  கடவுள் காப்பாற்றினார்.

 வித்தைக்காரர் குரங்கின் இடுப்பில் கயிறு கட்டி  கையில்   பிடித்து இருந்தும்  குரங்கு பாய்ந்து வந்தது, கடலை ஆசையால். இப்போதும் குரங்கைப் பிடித்துக் கொண்டு வித்தைக்காரர்கள் போகும்போது எல்லாம், என்மகன் காயம் பட்டு வந்து நின்ற கோலம் நினைவுக்கு வந்து விடும்.

ஒருமுறை குடும்பத்துடன் பிருந்தாவனில் இருக்கும் பெருமாள் கோவில் பார்க்கப் போய் இருந்தோம். 12 மணிக்கு உச்சிகால பூஜை ஆனவுடன் நடை  அடைத்து விடுவார்கள். என்று வேகமாய்ப் போய்க்கொண்டு இருந்தோம், அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு குரங்கு, என் பெண்ணின் கண்ணாடியை பறித்துக் கொண்டு ஓட ஆரம்பித்து விட்டது.  கோவிலின் பக்கத்தில் இருந்த குடியிருப்பின் மாடி மீது தாவித் தாவி ஓடிக் கொண்டு இருந்தது . ஒரு பையன் ராதே சியாம், ராதே சியாம் என்று சொல்லிக் கொண்டே அதன் பின்னால் ஓடினான். ஏதோ ஒன்றைத் தூக்கிப் போட்டான் அதன் பின்  குரங்கும் தூக்கிப் போட்டது,கண்ணாடியை. (சிறுவயதில் படித்த குல்லாகதை நினைவுக்கு வருதா ? ) .  அந்த பையன் மிக அழகாய்க் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு வந்து தந்தான். ஆனால் பிரேம் வீணாகி விட்டது, லென்ஸ் நன்றாக இருந்தது. என் பெண்ணிற்கும் எந்த காயமும் படாமல் தப்பினாள். அப்புறம் பெருமாள் எங்களை அடுத்தமுறை வந்து பாருங்கள் என்று சொல்லிவிட்டார்.  வாசலிருந்து பெருமாளை வணங்கி வந்தோம .

இந்த சம்பவம் பற்றி என் மகளும் பதிவு எழுதி இருக்கிறாள்  “ஞானக்கண்ணால் கடவுள் தரிசனம்” படித்துப் பாருங்களேன்.

இப்போது சமீபத்தில் (ஜுன் மாதம்) விராலிமலை போய் இருந்தோம் பெண்ணும் வந்து இருந்தாள். கையில் தண்ணீர் பாட்டில் வைத்து இருந்தாள், மேலே படிஏறிக் கோவில் வாசல் போய்விட்டோம், என் மகள் கையிலிருந்து தண்ணீர் பாட்டிலை வெடுக்கென இழுத்தது. அவள் கெட்டியாகப் பிடித்து இருந்தாள், அப்புறம் பக்கத்தில் இருந்தவர்கள் அதை விரட்டி விட்டார்கள்.
கோவில் உள்ளேயும் பெரிய பெரிய குரங்குகள் நடமாடிக் கொண்டு இருந்தன. உள் பிரகாரம் முழுவதும்.நவக்கிரக சன்னதியை சுற்றி கும்பிடலாம் என்று மகள் முன்னாலும் நான் பின்னாலும் போய் கொண்டு இருந்தோம். ஒரு குரங்கு நவக்கிரக சன்னதியின் கம்பி தடுப்பில் உட்கார்ந்து கொண்டு என் மகள் முகத்துக்கு நேரே வந்து பயமுறுத்தியது. அவள் அலறிப் பின்னால் நகர்ந்து விட்டாள்.

காவல்காரரிடம், ’முன்பு எல்லாம் குரங்குகள் கோவிலுக்குள் வராதே! இப்போது  இப்படிக் கோவில் முழுவதும் குரங்குகள் இருந்தால் எப்படி இறைவனை வணங்குவது?’ என்றுகேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் ,’என்ன செய்வது? மக்கள் பழங்களைக் கொடுத்துப் பழக்கிவைத்து விட்டார்கள்’ என்று .

பிலடெல்பியாவில் இருக்கும் வனவிலங்கு பூங்காவிற்கு மகனுடன் போய் இருந்தோம். அங்கு பார்த்த சில வித்தியாசமான  குரங்குகள்  படம் கீழே:-
சிங்க மூஞ்சிக் குரங்கு

குரங்குகள் நன்கு இஷ்டம் போல் விளையாட அதற்கு தனியாக  நீண்ட குழாய் அமைப்பில் வலைத்தடுப்பு பூங்கா முழுவதும் அது செல்லும்படி அமைத்து இருந்தார்கள். அதில் சின்னது பெரியது என்று வித விதமான  குரங்குகள் விளையாடி மகிழ்ந்து கொண்டு இருந்தன.  மனித குரங்கும் உண்டு.



மனிதக்குரங்கு

கொரில்லா குரங்கு மூன்று இருந்தன, அதில் தலையில் வெயிலுக்கு பேப்பர் போட்டுக் கொண்டு அமர்ந்து இருக்கும்  குரங்கு இப்போது இல்லை.   இறந்து விட்டது என்று மகன் சொன்னான்.
வெள்ளை மூஞ்சிக் குரங்கு



                                                  கறுப்பு வெள்ளைக் குரங்கு
                    
   
கறுப்பு வெள்ளைக் குரங்கு. இதன் முகம் இதன் பின் பகுதி முழுவதும் வெள்ளை.


படத்தில் உள்ள குரங்குகள் தான் கீழே இருப்பது

முகம் காட்ட மறுத்து விட்டது. 

படம் எடுக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் ஓரமாய் உட்கார்ந்து கொண்டது. பக்கத்தில் வரவே இல்லை.

எல்லாம் கண்ணாடி தடுப்பின் வழியாகத்தான் எடுக்க முடியும். ஓரளவுதான் எடுக்க முடிந்தது.    யானையைப் பார்த்தால் விநாயகர் நினைவுக்கு வருவது போல் குரங்குகளைப் பார்த்தால் ராமருக்கு பாலம் கட்ட உதவிய வானரசேனைதான் நினைவுக்கு வரும் இல்லையா?

  கீதாசாம்பசிவம் அவர்கள் சமீபத்தில் அவர்கள் குடியிருப்புக்கு குரங்கு வந்து பயமுறுத்தியதை பகிர்ந்து இருந்தார்கள். உடனே எனக்கும் எங்கள் வீட்டுக்கு வந்த குரங்காரைப்பற்றியும்  வனவிலங்குப் பூங்காவில் பார்த்த சிலவகை   குரங்குகளையும் பகிர ஆசை வந்து விட்டது. கீதா அவர்களுக்கு நன்றி.

                                                             வாழ்க வளமுடன்
-----------------

தெரிந்தால் சொல்லுங்கள்!

$
0
0


ஒரே கொம்புதான் வீடு கட்டப்படும் இடம்.

ஒரு கொம்பைச் சுற்றி சுற்றிக் கட்டி முதலில் சிறிதாக ஆரம்பிக்கும் சுற்று ,வர வர குறுகி. சிறுதுவாரமாய் மாறுகிறது.  

                                  பாதாம் காய்கள் கொத்து கொத்தாய்

வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு ஓட்டலில் பாதாம் மரத்தில் இந்த கூடு இருந்தது. பச்சை நாரால் கட்டப்பட்டு இருந்தது கூடு இன்னும் முடிவடையவில்லை அங்கு இருந்த காவல்காரரிடம் கேட்டேன் இது எந்த பறவை கூடு கட்டுகிறது என்று பார்த்தீர்களா? என்று அவர்  தெரியாது அம்மா என்றார். அடுத்த பத்து நாள் கழித்து மறுபடியும் வைத்தீஸ்வரன் கோவில் போன போது இந்த கூட்டைப் பார்க்கவே அந்த ஓட்டல் போனோன் ஆனால் என்ன ஏமாற்றம் !  கூட்டைக் காணோம் ஒரு நாள் காற்று மழையில் கூடு கலைந்து போய் விட்டது .  ஐயோ! பறவைக் கூடு கலைந்து விட்டதே ! பறவையின் உழைப்பு அவ்வளவும் வீணாகி விட்டதே !என்று வருத்தமாய் இருந்தது.

  நான் நினைத்துப் போனது, எந்தப் பறவைக் கூடு கட்டி இருக்கிறதோ அது அங்கு வரும், அப்போது பார்த்து அதைப் படம் எடுத்து விட்டுச் சேர்த்து பதிவு போடலாம் என்று நினைத்த  நினைப்பு ஏமாற்றம் ஆனது.

உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் இது எந்த பறவையின் கூடு என்று. கூட்டின் அடியில் அதன் வாயிலை அமைத்து இருப்பதால் தூக்கணாங் குருவியாக இருக்குமோ என்ற  நினைப்பு.

                                                            வாழக வளமுடன்
                                                                  ------------------------

கண்டு கொண்டேன் !

$
0
0
தெரிந்தால் சொல்லுங்கள் என்ற எனது முந்திய பதிவில் பாதாம் மரத்தில் கட்டிய பறவையின்  கூடு முழுமை பெறவில்லை. அந்தக் கூடு எந்த பறவையின் கூடு என்று தெரியவில்லை,  தெரிந்தால் சொல்லுங்கள் என்று கேட்டு  இருந்தேன், நம்  வலைஉலகநட்புகளிடம்.

ஸ்ரீராம் அவர்கள் ராமலக்ஷ்மி சொல்லக்கூடும் என்று சொல்லி இருந்தார்கள் அவர்கள் நம்பிக்கையை ராமலக்ஷ்மி அவர்கள் மெய்ப்பித்து விட்டார்கள்.

//இது scaly breasted munia எனப்படும் குருவியின் கூடு. தங்கை வீட்டு மாடித் தோட்டத்தில் நான் எடுத்தபடம் இங்கே: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/4474531721///

என்று பதில் தந்து விட்டார்கள்.

 ராமலக்ஷ்மி கூடு படம் அனுப்பி, பறவையின் பேர் சொல்லி விட்டார்கள் .
ராமலக்ஷ்மிக்கு நன்றி.

உடனே பறவையைப் பார்க்க ஆசைப்பட்டு இணையத்தில் தேடினேன். கூகுள் ஆண்டவர்   ஏமாற்றம் அளிக்காமல் நிறைய தந்தார்,இந்த பறவையைப்பற்றி. அதில் எனக்கு பிடித்த காணொளி இது. புற்களை அழகாய் கொண்டு வந்து இணைந்து கூடு கட்டும் இணைப் பறவைகளைக்   கண்டு மகிழுங்கள். இந்த காணொளி தந்த திரு. அவினாஷ்  பதக் அவர்களுக்கு நன்றி. எவ்வளவு நேரம் காத்து இருந்து இதை எடுத்து இருப்பார்! பொறுமை, அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் தான் இப்படி எடுக்க முடியும்.


scaly breasted munia எனப்படும் குருவிகள் கூடு கட்டும் காணொளி


ஆடிக்கிருத்திகை அன்று  வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றோம். முருகன் தரிசனம் முடிந்த பின்  மறுபடியும் அந்தப் பறவை,  கூடு கட்டி இருக்கிறதா என்று பார்க்க ஓட்டலுக்கு சென்றோம். மற்றொரு உயரமான பாதாம் மரத்தில் உயரத்தில் உள்ள கிளையில் கூடுகட்டி இருந்தது ,ஆனால் பறவையைக் காணவில்லை.  புற்கள் எடுக்கப் போய் இருக்கும் . இந்த முறை காற்றில் கீழே விழுந்து விடாமல் இருக்க, பெரிய கிளையில் சொருகினால் போல் கட்டி இருந்தது .

//வேறொரு சந்தர்ப்பத்தில் இதே மாதிரியாக கூட்டின் அடியில் வாயிலை அமைத்திருக்கும் கூட்டையும், அதற்குச் சொந்தமான பறவையையும் ஒருசேரப் பார்க்கும் பொழுது பரவசமாய்த் தான் இருக்கும்.

அப்பொழுது கூடு- பறவை சேர்ந்த படம் பிடித்து இந்தப் பதிவுக்கு லிங்க் கொடுத்து விடுங்கள். //

இப்படி ஜீவிசார் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்கள்.  இப்போது அந்த சந்தர்ப்பம் காணொளி மூலம் கிடைத்து இருக்கிறது.





இந்த உயர்ந்த பாதாம் மரத்தில் தான் மத்தியில் கட்டிக்கொண்டு இருக்கிறது கூட்டை.
கொம்புகளுக்கு இடையில் சொருகி வைத்து இருக்கிறது

                               மேலே அகன்றும் அடிப்பகுதி குறுகியும் வருகிறது.
மூங்கில் மரத்தில் அட்டைப்பெட்டியில் கூடு செய்து வைத்து இருந்தார்கள். 

                              அதற்குள்ளும் இதே புற்கள்தான் இருந்தது.

ஒரு கால் இல்லையோ!  ஒரு காலில் தவமோ!
இல்லை இரண்டு காலும் இருக்கிறது
புற்கள் காலை மறைத்து இருந்தது

அந்த ஓட்டலில் தங்கும் அறைகளில் உள்ளவர்களின் குழந்தைகள்  ,  மற்றும் சாப்பிட வருபவர்கள்  குழந்தைகள் விளையாட  பின் பகுதியில் அமைத்து இருந்த இடத்தில் அன்னப்பறவைகள்  (வாத்துகள்). குழந்தைகள் விளையாடும் இடம் பற்றிய படங்கள் அடுத்த பகிர்வில்.
                                                        வாழ்க வளமுடன்
                                                        ------------------------------

இயற்கையைப் போற்றுதும்!

$
0
0
இன்று :”உலக காடுகள் மற்றும் மரநாள்.”.  

 அந்தக் காலத்தில்  காடுகள் அதிகமாய் இருந்தன. இப்போது மக்கள் பெருக்கத்தின் காரணமாய் காடுகள் குறைந்து வருகிறது. மக்கள் வசிக்க வீடுகள் தேவை. அதற்கு காட்டை அழித்து தன் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறான். 

மரங்களை வெட்டிக்கொண்டே போனால் மழை எப்படி வரும்? மழை வேண்டும் என்றால் மரம் வேண்டும். ”மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!” என்று சிலப்பதிகாரத்தில் வரும். அந்த மாமழை எப்படி வரும் ?மரங்கள் நிறைய இருந்தால் தான் மாமழை வரும்.

நமக்கு எப்போதும் இயற்கையை ரசிக்கப் பிடிக்கும். விடுமுறை கிடைத்தால் இயற்கை சார்ந்த இடங்களுக்கு சென்று வருவோம். ஆறு ,கடல், அருவி,  என்று பார்ப்பதில் ஆனந்தம். அது மனதுக்கும் உடலுக்கும் மகிழ்ச்சியை அள்ளி த்தரும். 
புஷ்கில் பால்ஸ்(Bushkill Falls)
The Niagara of pennsyluvania -19 வளைவுகள் உள்ள மரப்படி- அருவி வரை பக்கத்தில் போய்ப் பார்க்கலாம்.
                                                    
                                அருவியைபபார்க்க நுழைவு கட்டணம் உண்டு.  

வைத்தியர் சில நோய்களுக்கு சிறிதுகாலம் இயற்கை சூழ்ந்த இடத்தில் ஓய்வு எடுத்தாலே போதும், புத்துணர்வு கிடைக்கும் என்று சொல்லுவார். அதற்கு நம் மக்கள் ஊட்டி, கொடைக்கானலென்று ஓய்வு எடுத்து வருவார்கள்.

ஆனால் இயற்கை  வனங்களில் இலவசமாய் நமக்கு கிடைப்பது,அங்கு உள்ள மூலிகை மரங்களில் மோதி வரும் காற்று. அது  நம் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும்.  அங்கு உள்ள சுனைநீரில் குளித்தால் உடலுக்கு ஆரோக்கியம். குற்றால அருவியில் குளித்தால்  உடல்வலி போவதுடன் நன்கு பசிக்கும்.  கொண்டு போன உணவு நொடியில் காலியாகிவிடும். அங்கு கிடைக்கும் பழங்களில் சுவை அதிகம். 

காடுகளில், மரங்களின் ஊடே தெரியும் சூரியஒளி, சந்திர ஒளி மனதை மயக்கும்.  நம் நாட்டில் அப்படிப் பட்ட இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்கள் நிறைய இருக்கிறது .

ஆதி காலத்தில் மனிதன் மரங்களை வழிபட்டான்.  இப்போதும் மதுரையில் ஒரு வகுப்பைச்சார்ந்த மக்கள் தன் வீட்டுக்கு முன் மரத்தை வளர்த்து அதற்கு அதிகாலையில் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடுவார்கள். அது அவர்கள் நித்தியகடன்.  கோவில்களில் ஸ்தலவிருட்சமாய்  மரம் இருக்கும். அதற்கு வழிபாடு உண்டு. ஆற்று ஓரத்தில் ஒரு அரசமரம் அதன் அருகில் 
பிள்ளையாரை வைத்து  சுற்றி வந்து வணங்க வைத்தார்கள். எதற்கு? அரச மரக்காற்று உடலுக்கு நல்லது என்றுதான். 

குலதெய்வங்கள் பெரும்பாலும் வனங்களில் ஏரி ஓரம்  இயற்கை சூழ்ந்த இடத்தில் இருக்கும். அப்போது வருடத்திற்கு ஒருமுறையாவது போய் மக்கள் பொங்கல்வைத்து  வணங்கி வருவார்கள், தங்கள் குடும்பத்தினர்களுடன் . அங்கு உள்ள மரங்களின் சல சலப்பு, ஏரியிலிருந்து வரும் சில் என்ற காற்று, அங்கு சுற்றிலும் இருக்கும் வயல்களில் உள்ள நறுமணம் எல்லாம் ஒருவகையான இன்பத்தைத் தரும்.

மயிலாடுதுறை அருகில் பெருஞ்சேரி என்ற இடத்தில் ஒரு கோவில் இருக்கிறது. அதில் 27 நட்சத்திரங்களுக்கும்  மரம் வைத்து இருக்கிறார்கள் .கோவில் வளாகத்தைச் சுற்றி. அந்த அந்த நட்சத்திரக்காரர்கள் வந்துஅந்த மரத்தின் முன் விளக்கேற்றி பின் கோவிலில் உள்ள இறைவன், இறைவிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுச் செல்கிறார்கள். இதுவும் ஒரு நன்மைதான் .மக்கள்  தன் நட்சத்திரம் உள்ள மரத்தையாவது வெட்டாமல் இருப்பார்களே! அந்த கோவில் பற்றிய விவரங்களை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

ஆனால் இங்கு பகிர்ந்து உள்ள இயற்கைக்காட்சிப்படங்கள் அமெரிக்காவில் நாங்கள் போய் இருந்தபோது எடுத்தவை.  அங்குள்ளவர்கள் சனி ஞாயிறு விடுமுறைகளில் கண்டிப்பாய் இது போன்ற இடங்களுக்கு சென்று தங்கள் வேலைப் பளுவை மறந்து களித்து இருப்பார்கள் . அங்கு வாழும் என் மகனும் எங்களை விடுமுறைகளில் அழைத்து சென்றபோது   அருவி, ஏரியில் எடுத்த இயற்கை   காட்சிகள் இங்கு உங்கள் பார்வைக்கு.




 வனத்தில் அந்தக் காட்சியை எடுத்தாயா உன் காமிராவில் ?
வனத்தில் ஒளிரும் நிலா

படகுத்துறையில்  சூரிய ஒளி
ஆறு
இலை உதிர்காலத்தில்  இலைகள் நிறமாறி  பலவண்ணங்களில் தோற்றம் 
இலைகளை உதிர்க்கும் போதும் கண்களுக்கு விருந்து அளிக்கும் மரங்கள். 
இயற்கை வளம் சூழந்த மாட்டுப் பண்ணை
                        பழுதடைந்த மரத்தை தாங்கும் அழகிய மரத்தூண்கள்.

                                      மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!
                                                 
                                                          வாழ்க வளமுடன்!
                                                                        ----------
Viewing all 789 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>