Quantcast
Channel: திருமதி பக்கங்கள்
Viewing all 789 articles
Browse latest View live

மலர்த்தோட்டம்

$
0
0

      




 இறைவன் அமைத்த தோட்டத்தில்  மலர்களைக் கண்டுகளிக்கக் கண் அளித்த கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே  கண்டு மகிழலாம்.மலர்களிலே பல நிறம் . மலர்கள் பலவகை.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அழகு.  இறைவனுக்குப் பாமாலையும், பூமாலையும் கொண்டு அடியவர்கள் வணங்குகிறார்கள்.

நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே! நீ வா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப்
பூமாலை புனைந்து ஏத்திப் புகழந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
சங்கரா சயபோற்றிபோற்றிஎன்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே!
                                                                          --- திருநாவுக்கரசர்.

’முத்தான முத்துக்குமாரா’ என்று தொடங்கும் பாடலில்,
” அன்று பூத்த மலரால் உன்னை அர்ச்சிப்பேன் வருவாய் அப்பா, அன்பான மனதால் உன்னை அர்ச்சிப்பேன் வருவாய் அப்பா! ”
என்று இருக்கும்.  மனம் மலர்ந்து , மலர்ந்த மனதால் அர்ச்சிப்பது மிகவும் சிறப்பு.

ஒவ்வொரு கோவில் திருவிழாவிலும் ஒரு நாள் உற்சவம்  பூச்சொரிதல் உண்டு. பலவித மலர்களால் பூச்சொரிதல் செய்து மகிழ்வார்கள்.

புதுச்சேரி அரவிந்தர் ,அன்னை ஆசிரமத்தில் மலர் வழிபாடு மிக முக்கியம்.
ஆசிரமத்தில் அழகான தோட்டம் அமைத்து இருந்தார்கள் அன்னை.

‘மலர்கள் இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள்’ என்பது ஸ்ரீ 
அன்னையின் கருத்தாகும்.

ஒவ்வொரு பூவையும் பயன்படுத்தும் முறையின் மூலம் பலவித நற்காரிய சித்திகளை பெறும் வழி முறைகளை சித்தர்கள் அருளி உள்ளனர்.

அரவிந்த-அன்னை வழிபாட்டில் மலர் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. நம் கோரிக்கையை அரவிந்த அன்னையிடம் மலர்கள் கொண்டு சேர்க்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை
பக்தியில் ஆர்வம் பெருக - பவழமல்லி, 
தெளிவான மனதிற்கு மனோரஞ்சிதம்,  
உடல் நலம் பெற பூவரசம்பூ,  
ஆன்மிக சூழல் கிடைக்க வேப்பம்பூ, 
தைரியத்திற்கு எருக்கம்பூ, 
மனத்தூய்மைக்கு மல்லிகை, 
உடல் சக்திக்கு சாமந்தி... 

என்று அரவிந்த அன்னைக்கு சமர்ப்பித்துப் பலன் பெறுகிறார்கள். 

மனம் மலர்வது போல் நம் உள்ளமும் மலர வேண்டும்.

பென்சில்வேனியாவில் உள்ள ”லாங்வுட் கார்டன்”மலர்த்தோட்டத்தை
அடுத்த பதிவில் பார்க்கலாம் என்றேன் அல்லவா?
வித்தியாசமான மலர்கள் அடங்கிய தோட்டத்தைப்  பார்த்து மகிழலாம் வாருங்கள்.

மலர்களில் ராஜா =ரோஜா

ஊதா இங்க் தெளித்த  மாதிரி சிறு மலர்கள் 
ஆர்கிட் மலர்கள்

அலமண்டா பூ 

வெள்ளை \கேந்தி 
சூரிய காந்திப்பூ போல
நடுவில் ஐந்து வெள்ளை சிறு மலர்- வெளியில் நான்கு ஊதா இதழ்
சாமந்திப்பூ (செண்டுப்பூ)
டிசம்பர் போ போல


வெள்ளி மல்லி போல
அந்தி மந்தாரைப்பூப் போல
குட்டிமலர்
காகிதப் பூப் போல
தண்ணீர் இல்லை- தரையில் வளர்ந்த தாமரை
தண்ணீரின் அளவுக்கு ஏற்ப மேலே வரும் என்பதைப் பொய்யாக்கி மண்ணில் வளர்ந்து பெரிதாகி நிற்கிறது.
வெண்தாடித் தாத்தா   -பூ
வண்ணத்து பூச்சி பூ
குட்டி அகல் விளக்கு போல


முதலை போல
முதலையின் வால் அல்லது பாம்பு
யானைக் காதுச் செடி
இயற்கை அன்னை தந்த அழகிய பச்சைத் தாம்பாளம்



பச்சைத் தட்டுக்கள்

மிதக்கும் இலைதட்டுக்கள் 
அல்லி மலரும்   இலைத் தட்டும்
தட்டான் -அழகாய்  மொட்டில்
முகம் எல்லாம் தாடி வைத்த வயதானவர் போல் இல்லே!
கள்ளிகள்  நடுவில் அலங்கார விளக்கு போல ஒரு கள்ளி

போன்சாய்க் காடு
அழகாய் அடுக்கு தீபாராதனைத் தட்டு போல!
வாங்க வாங்க தாத்தா என்னைப் பிடிங்க
புல்வெளி எங்கும் இந்த சிறு மலர்ப் பந்து குதித்து கும்மாளம் இடுவது போல நமக்கும் குதித்து மகிழ ஆசைதான்.

அழகான தோட்டத்தை அமைத்து அனைவரும் விடுமுறை நாளில் வந்து கண்டு களிக்க   அழகாய் பாராமரித்து வருவது போற்றுதலுக்கு உரிய விஷயம் தான். மலர்த் தோட்டத்தையும், பச்சைப் பசேல் என்ற புல்வெளிகளிலும்  மக்கள் நிறைந்து காணப்பட்டாலும் தோட்டம் எங்கும் சுத்தமாய் காணப்பட்டது மனது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாய் இருந்தது.  மனதுக்கு மகிழ்ச்சி மட்டும் அல்ல புத்துணர்ச்சி, உற்சாகம் எல்லாம் கிடைக்கிறது.இந்த தோட்டத்தில் காய் கனிகளும் உண்டு.  வேறு சமயத்தில் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

                                                                     

தேச பிதா பிறந்த தினத்தில் அவரை  வணங்குவோம்.
மன மகிழ்ச்சி, மனவருத்தம் இதனால் மதுவை நாடுகிறார்கள் சிலர். உண்மையான  மகிழ்ச்சியை அடைய இயற்கையை ரசிக்கலாம்,  காந்தி தாத்தா போல் கள்ளமில்லாமல் சிரிக்கும் மழலையை கண்டும்  மகிழலாம்.

சிரிக்கும் மலர்களைக் கண்டும் மனம் ஆறுதல் அடையலாம்

                                                                                 
வாழ்க வளமுடன்!

நலங்கள் நல்கும் நவராத்திரி

$
0
0



நவராத்திரி வந்து விட்டது !
தேவி கொலு இருக்க வீடுகளுக்கு வந்துவிட்டாள் !

அம்பிகையைச் சிறப்பாக வழிபடுவதற்குரிய நாட்கள் நவராத்திரி. இது மாதந்தோறும் அமாவாசையை அடுத்துள்ள ஒன்பது நாட்களில் வந்தாலும், இரண்டு நவராத்திரிகளையே சிறப்பாக எடுத்துக்கூறுவார்கள் பெரியவர்கள்.

ஒன்று கோடைக்காலத்தில் வரும் பங்குனி அல்லது சித்திரையில் அமாவாசையை அடுத்துவரும் ஒன்பது நாட்களில் கொண்டாடப்படும்.
வசந்தருதுவில் வருவதால் இது வசந்த நவராத்திரி.

புரட்டாசி அமாவாசையை அடுத்து வரும் நவராத்திரி எல்லோரும் போற்றும் நவராத்திரி. இது சரத்(மழை) காலத்தில் வருவதால் சாரதா நவராத்திரி எனப்படும்.

வசந்த ருதுவும், சரத்ருதுவும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமானவை என்பார்கள். இவ்விரு காலங்களிலும்  வெம்மை மிகுதியால்  தண்மை மிகுதியாலும் அம்மை, காலரா முதலிய நோய்கள் பெருகி மக்கள் துன்படும் காலம். இக் காலங்களில் உலக மாதாவாக விளங்கும் அம்பிகையை வழிபடுவோர் அந்நோய்களினின்றும் நீங்கி அனைத்து நலங்களையும் பெறுவார்கள் என்பது  நம்பிக்கை.

கோடைகால உணவுகள், குளிர்கால உணவுகளை  அளவோடு உண்டு, நன்றாக உழைத்து ,உடல் நலத்தை காத்து கொள்ளச்செய்து இருக்கிறார்கள். வாழ்க்கையை நல்லபடியாக நடத்திச்செல்ல  இறை நம்பிக்கை !.  இறை நம்பிக்கை  இருந்தால் ஒழுக்கம், பண்புகள் தானாக வரும் என்பதால் முன்னோர்கள் விழாக்களை வகைப்படுத்திக்  கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள்.

முன் காலத்தில் போருக்குப் போகும்போது கொற்றவையை (மலைமகள்)  ,வழிபட்டு வெற்றியைப் பெற்று மகிழ்ந்தனர், திருமகளை வழிபட்டுச் செல்வம் பெற்றனர், கலைமகளை வழிபட்டுக் கல்வி பெற்றனர் என்று தொல்காப்பியம் போன்ற நூல்களில் சொல்லப்படுகிறது.

                                                                     * * *

எங்களுக்குப் போன வருட கொலு, மாயவரத்தில்.  மகன், மருமகள், பேரன் வந்து சிறப்பு செய்தார்கள். இந்த வருடம் இந்த சமயத்தில் நாங்கள் மகன் (நியூஜெர்சி  )வீட்டுக்கு வந்து இருக்கிறோம். இங்கு  வந்து விட்டதால் எங்கள்  ஊரில் வீட்டில் டிரங் பெட்டியில் இருக்கும் பொம்மைகளை மனதால் நினைத்து, கொலுப் படியில் எழுந்து அருளச்  செய்து வழிபட்டேன். இந்த வருடம் இப்படித்தான் மானசீக கொலு என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.

பேரனுடன் தினமும் அவனுடைய  விளையாட்டுச் சாமான்களுடன் கொலு மாதிரி வைத்து விளையாடிக் கொண்டு இருந்தேன். அவன் ,போன வருடம் ஊரில் வைத்தது போல் வை ஆச்சி! டெக்ரேட் செய் ஆச்சி! , நான் சந்தனம், பன்னீர் தெளித்து எல்லோரையும் வாங்கன்னு கூப்பிடுவேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.எல்லோரும் அதை கேட்டு சிரித்துக் கொண்டு இருந்தோம்..

மகனும், மருமகளும்,  வெள்ளிக்கிழமை (அமாவாசை அன்று) மாலையில், வாங்க கடைக்குப் போகலாம் என்று அழைத்து போனார்கள், காரில் போய் கொண்டே இருந்தோம், ரொம்ப தூரமா என்ன கடைக்கு என்ற  போது அங்கு வந்து பாருங்கள் தெரியும் என்று அழைத்துப் போனார்கள்,  எடிசன் என்ற இடத்தில் இருக்கும் ஒருவர் வீட்டுக்கு. அங்கு நிறைய பேர் அட்டைப்பெட்டியை எடுத்துக் கொண்டு காரில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள், வீடு மாதிரி இருக்கே1 என்ன கடை என்று உள்ளே போனால் - ஆச்சிரியம்! கொலு பொம்மைகள்!

”அம்மா! நம் வீட்டிலும் கொலு வைக்கலாம் ,பொம்மை பாருங்கள் ”என்றான் மகன் .அந்த வீட்டின் கார் ஷெட்டில் படி அமைத்து அழகாய் பொம்மைகள் அடுக்கி வைத்து இருந்தார் விற்பனைக்கு. கொஞ்சம் தான் சின்ன பொம்மைகள் .  மற்றவை எல்லாம் பெரிய பெரிய பொம்மைகள். ஒரு பொம்மையைத் தூக்கிப் பார்த்தால் கனமே இல்லை. ஆச்சரியமாய் இருந்தது அப்புறம் தெரிந்து கொண்டேன், பேப்பர் கூழ பொம்மைகள்! அழகாய் மண் பொம்மைகள் போலவே இருந்தது. அவருக்கு, கும்பகோணம், பண்ருட்டி, காரைக்குடியிலிருந்து பொம்மைகள் வருமாம்,மண் பொம்மையும் உண்டு நிறைய உடைந்து இருந்தது.கொலுவுக்கு ஒருவாரம் முன்பே வந்து விட வேண்டும், இப்போது விற்று விட்டது என்றார்.

நாங்கள் பிள்ளையார்,  பத்துமலைமுருகன்,(மலேஷியா) , வாழைமரத்தோடு இணைந்த கலச பொம்மை, மரப்பாச்சிப் பொம்மைகள் வாங்கினோம். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது மரப்பாச்சிப் பொம்மைகளைக் கொண்டு வைக்கும் பழக்கம் இருப்பதால் , முதன் முறை வைக்க போகிறீர்களா என்று கேட்டு விட்டு உள் இருந்து  மரப்பாச்சிப் பொம்மைகளைக் கொண்டுவந்து கொடுத்தார்,.

அழகிய யோக நரசிம்மர், பூவராகப் பெருமாள், உலகளந்த பெருமாள், கல்யாண, காதுகுத்து செட், திருக்கழுக்குன்ற   கழுகு  குருக்கள் செட், எல்லாம் அழகாய் இருந்தது, மதுரைவீரன், ஐயனார், வாஸ்து லட்சுமி,(மடிசார் கட்டிக் கொண்டு, கையில் விளக்கு வைத்து கொண்டு கதவை திறந்து உள் வருவது போனற சிலை வாஸ்து லட்சுமியாம்) கிரகலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, சுபலக்ஷ்மி, காசி விசாலாட்சி, பிள்ளையார்பட்டி பிள்ளையார் பொம்மைகள் இருந்தன. எல்லாம் மிகப் பெரியவை!

போட்டோ எடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்தபோது இரண்டு காரில் வந்த கூட்டம்  ஆண்களும், பெண்களுமாய் உள்ளே வந்து விட்டார்கள்.
‘சின்ன இடம்,  நாம் வாங்கி விட்டோம், இடைஞ்சல் செய்யக் கூடாது ,வெளியே வருவோம் ”என்று வந்து விட்டோம். வரும்வழி எல்லாம்,  ”எல்லாப் பொம்மைகளையும் வாங்க வில்லை என்றாலும் படமாவது எடுத்து இருக்கலாம்” என்று சொல்லிக் கொண்டு வந்தேன்.


தினமும் வேலை வேலை என்று இருந்த மகன் , சனிக்கிழமை குழந்தையாய்ச் சிரித்து மருமகளுடன் , மற்றும் எங்களுடன் சேர்ந்து படிகள் அமைத்தான்.
எனது மகன், எப்போதும் தன் அலுவலக் வேலையின் நினைவில், என்ன சாப்பிட்டோம், என்று தெரியாமலும், குழந்தையோடு விளையாடக்கூட நேரம் இல்லாமலும் தினமும்  இரவு வெகுநேரம் வேலை செய்துகொண்டு  இருந்தான்.  இரண்டு நாட்களாகக் கொலு வைக்கும் வேலையில், பழைய உற்சாகம் தொற்றிக் கொள்ள,  வேலைகளை மறந்து , மகிழ்ந்து இருந்ததைப் பார்க்கும் போது இது போல பண்டிகைகள் மனதைக் குதூகலப்படுத்தி  மேலும் தெம்பாய் வேலைகளை செய்ய வைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

                                                         பேரன் வைத்த கொலு

அவன் பார்க்கும் டாய்  ஸ்டோரி கதாபாத்திரங்கள்
                               என் பொம்மையும் கொலுவில் வையுங்கள் தட்டில்

சுண்டல் செய்ய மாடல் கிச்சன்  அடுப்பு 
கொலுவில் வைக்க பைக், கார், விளையாட்டு   சமையல் அறை, பந்துகள்
கார்ட்டூன் கதாபாத்திரங்கள்
                                           கார்கள் டிரக்கில் வந்து இறங்குகிறது.  

கொலு பொம்மைகளை வாங்கிவிட்டு வரும்போது பசியாற, எடிசனில் சரவணபவன் ஓட்டலுக்குப் போனோம்.  
அங்கு  தோசை செய்வதைக்  கண்ணாடித்  தடுப்பு வழியாகப் பார்க்கலாம். அதை போட்டோ எடுக்க அனுமதி பெற்று எடுத்த படம்;-

மசால் தோசைக்கு மசால்வைக்கிறார்.
அழகாய்ச் சுருட்டுகிறார்







கண்ணாடி ஜாடிக்குள் இருப்பது ,பைன் மரத்தின் காய்கள். அதைச் சேகரித்து மருமகள் கலர் செய்து  ஜாடிக்குள்  போட்டு  இருக்கிறாள்.மரத்தட்டில் கோலம் போட்டு  நடுவில் சிறிய விளக்கு வைத்து இருக்கிறாள்.

பொம்மைகள் இல்லை யென்றாலும், நம் வீட்டை அழகாய் சுத்தமாய் கலை நயத்தோடு வைத்துக் கொள்ளுதல், கைவேலைகள் செய்தவற்றை வைத்து அலங்கரிப்பது என்று தங்கள் எண்ணங்களை  பிரதிபலிக்க செய்ய நவராத்திரி விழா உதவுகிறது,  உடல் நலம், மனநலம் எல்லாம் இதனால் நன்றாக இருக்கிறது. மனதைக் குதூகலப்படுத்த உதவுகிறது. உறவுகள், நட்புகள் கலந்து பேச நேரம் ஒதுக்கும் நாளாகவும் இருக்கிறது. நாமும் விழாக்களைக் கொண்டாடி மகிழ்வோம்.

வாழ்க வளமுடன்!
                                                                        ----------

பொளைச்சுக் கிடந்தால் வரேன் தாயி!

$
0
0

நாங்கள் எந்த வருடத்திலிருந்து கொலுவை வைக்க  ஆரம்பித்தோம்  என்று பேசிக் கொண்டு இருந்தோம்.  முதலில் கொலு வைக்க  ஆரம்பித்தபோது திருவெண்காட்டில் இருந்தோம்.1980 ம் வருடம் ஆரம்பித்தோம்.

 பொம்மை கொண்டு வரும் தாத்தாவின் நினைவுகளை மருமகளிடம்  பகிர்ந்து கொண்டேன்.அதை நீங்களும் படித்துப் பாருங்களேன். ஒவ்வொரு கொலு சமயத்திலும் பொம்மை கொண்டு வரும் தாத்தா நினைவு வந்து விடும்.

ஒரு வயதான தாத்தா பண்ருட்டியிலிருந்து பொம்மைகள்
கொண்டு வருவார், அவரிடம் முதன் முதலில் பிள்ளையார்,  சிவலிங்கம்
நந்தி மூன்றும் 12 ரூபாய்க்கு வாங்கினேன்.


எங்கள் அம்மா வீட்டிலும் கொலு உண்டு, மாமியார் வீட்டிலும் கொலு
வைப்பது உண்டு.  விடுமுறை இல்லை என்று நவராத்திரிக்கு ஊருக்கு
வரமாட்டார்கள் என்னவர். குழந்தைகளுக்கு நவராத்திரி கொலுவைப் பற்றி
தெரிய வேண்டுமே! இப்போது போல் காமிராவில் கொலுவை படம் எடுத்து
உடனே அனுப்பும் வசதி எல்லாம் கிடையாதே!  கொலு வைக்க வேண்டும்
என்ற எண்ணம் திடீர் என்று தான் வந்தது.பக்கத்து வீட்டில் ஒரு மாமி  வீட்டில் முன் வாசலில் மண் கொட்டி வைத்து இருப்பார்கள். அதில் குழந்தைகளை விளையாட அழைத்து செல்வேன். அப்படி அவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கும்போது  பண்ருட்டி தாத்தா பொம்மைகளுடன் வந்தார். பொம்மை வேண்டுமா? கொலு பொம்மை என்று கேட்டு  மாமியின் வீட்டு திண்ணையில் ஓய்வாய் உட்கார்ந்து தண்ணீர் கேட்டு வாங்கி குடித்தார். அப்போது சும்மாதான்
பொம்மைகளைப் பார்வை இட்டேன். மாமி, தாத்தாவிடம் ’நாங்கள் கொலுவைப்பது இல்லை எங்களுக்கு வேண்டாம்’ என்றார்கள்.

 நான் ’எங்கள் அம்மா வீட்டில், அத்தை வீட்டில் எல்லாம் கொலு வைப்பார்கள்’ என்றவுடன்  மாமி,’ நீயும் தான் வையேன்’ என்றார்கள்.  உடனே ஆசை தொற்றிக் கொண்டது. மூன்று பொம்மைகளை எடுத்து வைத்து விட்டேன். என்
கணவரிடம் கேட்க வேண்டுமே! கொலு வைக்கலாமா  என்று கேட்க
வேண்டுமே என்ற தயக்கம் இருந்தாலும்   ஆசை வென்றது.என்ன சொல்லப்
போகிறார்கள் சம்மதித்து விடுவார்கள் என்று  எனக்கு நானே சமாதானம்
செய்துகொண்டு வாங்கிவிட்டேன்.

தாத்தாவும் ’மூன்று போதுமா ’என்று கேட்டார், ’அடுத்த வருடம் தான் இனி
வருவேன்’ என்றார். ’போதும் அடுத்தவருடம் வாங்கிக் கொள்கிறேன்’ என்று
சொல்லி விட்டேன், நிறைய வாங்கும் ஆசையை அடக்கிக் கொண்டு.

எல்லாப்பொம்மையுமே அழகு. ’என்னை வாங்கிக் கொள்’ என்றது.

மாலை கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த அப்பாவிடம், குழந்தைகள் அப்பா
கொலுபொம்மை  கொலுபொம்மை என்று குதித்து கும்மாளமிட்டனர். பெண்ணுக்கு விபரம் தெரியும்: பையனுக்கு விவரம் புரியாது  இருந்தாலும் அக்காவுடன் சேர்ந்து குதித்து மகிழ்ந்தான்.என் கணவர் பொம்மைகளைப் பார்த்துக் கேட்ட முதல் கேள்வி,’ இவ்வளவு பெரிதா?’என்றுதான்.

’எங்கள் வீட்டில் இவ்வளவு பெரிய பொம்மையே கிடையாது. நீ என்ன
இவ்வளவு பெரிதாக வாங்கி இருக்கிறாய்?’

  ’நாலு ரூபாய் தான் ஒரு பொம்மை’ என்றேன். ’நான் ரூபாய்க்கு சொல்லவில்லை இவ்வளவு பெரிதாக வாங்கிவிட்டாயே என்று தான் கேட்டேன்’ என்றார்கள்.

எப்படியோ  தாத்தாவும் ’பொளைச்சு கிடந்தால்  வரேன் தாயி அடுத்தவருடம் என்று சொல்லிச் சொல்லியே  வருட வருடம் பொம்மைகளை கொண்டு வந்து கொடுத்தார். நான்கு வருடங்கள்.

 ராமர், லக்ஷ்மணர்,சீதை,அனுமன்செட், மயில்பீலியுடன் பெரிய கிருஷ்ணர்(மயில்பீலியை தனியாக கழற்றி மாட்டலாம்)  தங்க கலரில் இரண்டு  பாவை விளக்குகள் , பெருமாள், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை , கடிகாரம், செட்டியார், புத்தர், வெங்காடஜலபதி என்று அவரிடம் வாங்கியது எல்லாம் மிக அழகு.

அப்புறம் நாங்கள் மாயவரம் வந்து விட்டோம்.அங்கு வந்த பின் கைலாய குடும்ப செட் -சிவன், பார்வதி, பிள்ளையார்,நாரதர் மாம்பழம்  கொடுக்கும் காட்சி.  மற்றும் மீனாட்சி வாங்கினேன். நால்வர் செட் வாங்கினேன்.
(அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்.)

முன்பு வாங்கிய சிவலிங்கம் மதுரை சொக்கநாதர் ஆனார். ஆமாம்! மீனாட்சி பொம்மை வாங்கி அதன் அருகிலே வைத்து மீனாட்சி சொக்கநாதர் ஆனார்.

என் கணவரின் அண்ணா வீட்டில் முன்பு கொலு வைக்க மாட்டார்கள்
அவர்கள் மூன்று வருடம் எங்கள் கொலுவுக்கு வந்தார்கள்( அப்புறம் அவர்கள் வீட்டிலும் கொலு  வைக்க ஆரம்பித்து விட்டதால் வரவில்லை) அவர்கள் வாங்கி தந்த அன்ன படகில் சரஸ்வதி, லட்சுமி, ராதாகிருஷ்ணர் ஊஞ்சல் ஆடும் காட்சி, நாதஸ்வர செட் இவைகளுடன்  பொம்மைக் குடும்பம் பெரிதானது.

அம்மா, தங்கைகள் ஒரு முறை வந்தார்கள் அவர்கள் சிவன், பார்வதி. ஆறு
முகர் ஆறு தாமரைகளில் இருக்கும்  பொம்மை, கார்த்திகை பெண்கள்
அறுவர் வாங்கி வந்தார்கள்.



மதுரை மீனாட்சி அம்மன் கோவில்  போன போது  நம் வீட்டில்  செட்டியார் மட்டும் இருக்கிறாரே! என்று செட்டியார் அம்மாவும் வாங்கினேன் பலவருடங்களுக்கு பிறகு செட்டியாருக்கு வாழ்க்கைத் துணை கிடைத்தார்.



தெரிந்தவர்கள் கொலுப் பார்க்க வரும்போது  குபேர பொம்மை,
பிள்ளையார், சரஸ்வதி, கிருஷ்ணர், பெரிய யானைகள் எல்லாம் வாங்கித்
தந்தார்கள்.  அவை  வாசலில் வரவேற்பது போல் நித்திய கொலுவானது.
அதை வைக்கப்  பெட்டியில் இடமில்லை. அந்த நித்தியகொலு படம் துளசி கோபால் அவர்கள் மாயவரம்  பதிவர் சந்திபைப் பற்றி  எழுதிய இடுகையில் இடம் பெற்றது.

இனி வருபவர்களிடம் தயவு செய்து வரும்போது பூ வாங்கி வாருங்கள்
போதும் பொம்மைகள் வேண்டாம் வைக்க இடமில்லை என்று அன்புக்
கட்டளை இட்டேன். அப்படியும் சிலர் ,’பெரிதாக வாங்கினால் தானே வைக்க
இடமில்லை சின்னதாக வாங்கி வருகிறோம் ’என்று வாங்கி வருவார்கள்.
நான் போகும் ஊர்களில் எல்லாம் கொலுவுக்கு என்று சேர்த்த கலைப்பொருட்கள் ஏராளம்.

நீ பொம்மை வாங்கி விடுகிறாய் அதை எடுத்து அடுக்குவது, படிகளை செட்
செய்வது, மீண்டும் அதை பேக் செய்வது எல்லாம் பெரிய வேலை என்று
வேலை அதிகமாகிறது என்று என் கணவர் அலுத்துக் கொண்டதால்
இப்போது வாங்குவது இல்லை. அப்படி வாங்கினாலும் கொலுவில்
பொம்மை கொஞ்சமாய் இருக்கும் வீடுகளுக்கு கொடுத்து விடுவது என்று
இருக்கிறேன்.

அம்மா   ஒயரில், கம்பளி நூலில் செய்த பொம்மைகள்  புதிதாக செய்து
கொடுப்பார்கள் வருட வருடம். அவை கொலுவில் இடம்பெற்று நெஞ்சில்
அவர்களின் நினைவை எப்போதும் தந்து கொண்டு இருக்கிறது .

மகனின் ஓவியங்கள், மருமகள், மகள், பேரன், பேத்திகள் என்று அவர்களின்
கைவேலைகள் கொலுவை அலங்கரிக்கிறது.

சென்ற வருடம்  மாயவரத்தில் மகன் மருமகள், பேரன் வந்து  உற்சாகமாக கொண்டாடிய கொலு படங்கள் இவை:-



                                    

                                              

                                              
  மகன் செய்த சாக்பீஸ் கோவில், அப்பா செய்த மலைக் கோவில்  அருவியுடன்.
                                       

                                             






மகன் , மருமகள் சேர்ந்து செய்த பூங்கா ரயில்
கணவர் செய்த சரஸ்வதி அம்மன்  
நவராத்திரியில் போட்ட கோலங்கள் 
பன்னீர் தெளித்து விட்டேன் . சந்தனம், குங்குமம் எடுத்துக் கொள்ளுங்கள் !

கொலுவுக்கு வந்து கொலு பார்த்தவர்களுக்கு ஜூஸ், பிஸ்கட் , எடுத்துக் கொள்ளுங்கள்.  மற்றும்  வெற்றிலைபாக்கு ,மஞ்சள் குங்குமம் கூடையில்.
பெற்றுக் கொள்ளுங்கள். எல்லோர் வீட்டிலும் சுண்டல் சாப்பிட்டு இருப்பீர்கள் அதனால் ஒரு மாறுதலுக்கு பிஸ்கட், மிட்டாய்  எடுத்துக் கொள்ளுங்கள்.

நியூஜெர்சியில் இன்று சரஸ்வதி பூஜை!
எல்லோருக்கும், சரஸ்வதிபூஜை,  விஜய தசமி வாழ்த்துக்கள்!
இன்று படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு கலைமகள்  கல்விச் செல்வத்தை அள்ளித் தர வாழ்த்துக்கள்!

                                                         வாழ்க வளமுடன்!

                                                                            ----------------

ஆலோவின் தினக்கொண்டாட்டம்.

$
0
0
நாங்கள்ஆலோவீன் கொண்டாட்டத்தை இந்த முறை மகனுடைய ஊரில் பார்க்கப் போகிறோம்.அக்டோபர் மாதம் கடைசிநாளன்று இது கொண்டாடப்படுகிறது. கிறித்தவ மதப்பெரியார்கள் ,தியாகிகள் மற்றும் இறைநம்பிக்கையாளர்களை வணங்கும் தினமாகச் சிலர் கருதுகிறார்கள். இந்நாளை ஆல் செயிண்ட்ஸ் டேயுடன் தொடர்பு படுத்திக்  கூறுகிறார்கள். (உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆல் செயின்ஸ்டேயும் மறுநாள் ஆல் சோல்ஸ்டேயும் கொண்டாடுகிறார்கள்)

(நியூஜெர்சி) ஊரே ஆலோவீன் கொண்டாட்டத்திற்கு தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. ஆலோவீன் காஸ்டீயூம் கடைகள்,  புதிதாக விளைந்த பறங்கிகாய்கள், காய்ந்த சோளத்தட்டைகள், வைக்கோல்கள் விற்பனை என்று எங்கும் கடைகள். இலை தெரியாமல் அழகாய் சிவந்தி மலர்கள் தொட்டிகள்  எல்லாம் ஆலோவீனை வரவேற்கக் காத்து இருக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் மலர் தொட்டிகள் பறங்கி காய்களை வித விதமாய் அழகாய் அடுக்கி வைத்து இருக்கிறார்கள்.

ஆலோவீன் என்றால் என்ன என்று பார்த்தேன் விக்கிப்பீடியாவில். உங்களுக்கு தெரிந்திருக்கும் . அதுபற்றி  கொஞ்சம் கீழே கொடுத்து இருக்கிறேன்.


//ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். 

இப்போது  இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.

சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.

ஆலோவீன் நாளில் பேய்க் கதைகளை சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன.//


நன்றி : விக்கிப்பீடியா.
                                                                         -------------

ஆலோவீனுக்கு எங்கள் வீட்டிலும், ஒரு சோளக்கொல்லை பொம்மை ஒன்றும் பெரிய  பறங்கிக்காயும்(உண்மையான பறங்கிகாய்) வைத்து இருக்கிறோம். சிறிய பறங்கிக்காய் அலங்கார விளக்கும் மாட்டி இருக்கிறோம். பேரனுக்கு டைனோசர் போல் வடிவு அமைக்கப்பட்ட ஆடை வாங்கி இருக்கிறது. வீடுகளுக்கு போய் சாக்லேட் வாங்கி வர ஆரஞ்சு கலர் பறங்கிக்காய் கூடை  வாங்கி உள்ளது. பேரனுக்கு உடை வாங்க கடைக்கு போனபோது கடைகளில் உள்ள பொம்மைகளை எடுத்த படங்கள் பின் வருகிறது , உங்கள் பார்வைக்கு.

                            
பறங்கி காய் பொம்மைகள்
பறங்கி காய் பொம்மைகள்

சோளக் கொல்லை பொம்மைகள்
மூகமூடிகள்
மிட்டாய் வாங்க எடுத்துச் செல்லும் கூடைகள்
வயதான பிச்சைக்காரர்
அவரின் பின் பக்கம்
வீட்டு வாசலில் தொங்கவிடும் பொம்மைகள்
கல்யாண மாப்பிள்ளை
தொங்கும் பூதம்
எலும்பு மாலைகள்,  எலும்புக்கூடு  ஆடைகள்
பேய்க் கைப்பை
வெட்டுப்பட்ட உடல்கள்
சூனியக்காரி
கல்யாண உடையில் எலும்புகூடுகள்
மண்டை ஓடு லாந்தர்
சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட எலும்புகூடு
ராட்சச வெளவால்
வைக்கோல் திணிக்கப்பட்ட பயங்கர பொம்மைகள்
மிட்டாய் வாங்கச் செல்லும் சிறுவன்
அழகாய், கட்டமாய் வெட்டப்பட்ட வைக்கோல் மஞ்சள் சிவந்தி மலர்த் தொட்டி, நிஜ பறங்கிகாய்
அழகிய பறங்கிக்காய் பொம்மைகள் மேல் எலும்பு கூடுகள்



சோளக்கொல்லை பொம்மைகள்

இலை தெரியாமல் பூத்து இருக்கும் ஆரஞ்சும் சிவந்திப் பூக்கள்


கடைகளில் ஆலோவின் உடைகள் , மண்டை ஓடு ஆடை, எலும்புகூடு ஆடை,சூனியக்காரி ஆடை, வெட்டுப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட உள்ள உருவங்கள்,கை, கால் தனியாக, தலை தனியாக இரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது. இரும்பு சங்கிலிகாளால் கட்டப்பட்ட நிலையில் இறந்தவர்களின் எலும்புகூடுகள் பெரியசிலந்திகள், பெரிய வெளவால்கள், திருமண உடையுடன் இறந்தவர்களின் எலும்புகூடுகள் என்றும், பிச்சைக்கார தோற்றம் கொண்டவை என்றும் அவர் அவர் விருப்பபடி நிறைய இருக்கிறது. 
பக்கத்துவீடுகளில் நிறைய பறங்கிக்காய்கள், மரத்தில் தொங்கும் எலும்புகூடு, கார்செட் கதவில் பெரிய சிலந்தி வலைகள் வைத்து இருக்கிறார்கள்.
சோளக்கதிர் காய்ந்தவை, கோதுமை வைக்கோல் எல்லாம் வைத்து பறங்கி காய்களும் வைத்து இருக்கிறார்கள். இந்த சம்யம் பறங்கிகாய், ஆப்பிள் நிறைய காய்க்குமாம். அதனால் அதில் இனிப்புகள், உணவுகள் செய்து உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பார்களாம்.

முன்னோர்களை வணங்கும் பழக்கம் எங்கும் இருப்பது நல்ல விஷயம் தானே!

வாழ்க வளமுடன்!
------

தீபாவளி வாழ்த்துக்கள்

$
0
0
(படம் வரைந்தது - என் கணவர் ) 
தீபாவளி என்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி,ஆனந்தம் அவர்களுக்கு பிடித்த ஆடைகள், அவர்களுக்கு பிடித்த பலகாரங்கள் எல்லாம் கிடைக்கும் நாள் அல்லவா! தீபாவளி.வாணவெடிகள்.குழந்தைகள் வெடிக்கும் போது பெற்றோர்கள் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் கவனமாய்.
தீபாவளி அன்று குழந்தைகள் வெடிக்கும் போது ஏழை, சிறுவர், சிறுமியர் ஏக்கமாய் வந்து பார்த்துக் கொண்டு இருந்தால் அவர்களுக்கும், இரண்டு மத்தாப்புக்களை கொடுக்க சொல்ல வேண்டும் குழந்தைகளை. அவர்கள் மலர்ந்து  மத்தாப்பாய் சிரிக்கும் போது  எல்லோருக்கும் ஆனந்தம் ஏற்படும்.குழந்தைகளுக்கும் பிறருக்கு உதவும் மனப்பான்மை வரும்.

 மலர்கள் ஏற்றிய மத்தாப்பு’என்ற பதிவில்  கற்கை நன்றே வலைத்தளம் வைத்து இருக்கும் கபீரன்பன் அவர்கள் வித்தியசமாய்  நாற்பது ஏழைச் சிறுவர், சிறுமியருடன் தீபாவளி பண்டிகையைக்   கொண்டாடியதையும் அவர்களின் உற்சாகத்தையும் எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள். இப்படி எல்லோரும் வித்தியாசமாய் ஒருமுறையேனும் கொண்டாட ஆசை வரும், படித்தால்.

 வயிற்றை கெடுக்காமல் பலகாரங்களை அளவோடு உண்ண வேண்டும்.  பலகாரங்களை  உறவு நட்புகளுக்கும்,மற்றும்  தீபாவளி அன்று நம்மை நாடி வரும் ஏழைகளுக்கும் கொடுத்து மகிழ வேண்டும்.

வலை உலக நட்புகள் எல்லோருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
                                                              
                                                               வாழ்க வளமுடன்!

                                                                       -----------------

மணக்குடி ஆருத்ரா தரிசனம்

$
0
0
வெகு நாட்களாய் காணவில்லையே! என தேடினீர்களா?
போனிலும், மெயில் மூலமாகவும் போஸ்ட் போடவில்லையா? நலமா? என விசாரித்த  அன்பு வலை உலக நட்புகளுக்கு நன்றி.

இந்த முறை ஊர்களில் நெட் இல்லாமல் இருந்து விட்டேன்.  இணைய பயன்பாடு இல்லாமல் பழைய காலம் போல் வானொலி கேட்டுக் கொண்டு, உறவுகளின் இன்ப, துன்ப நிகழ்வுகளில் பங்கு கொண்டு   இருந்தேன்.

போஸ்ட் போட செய்திகள் நிறைய உள்ளன.  ஒன்று ஒன்றாய் போட வேண்டும்.

நேற்று, கூட்டம் இல்லாத - ஆருத்ரா தரிசனம் சமயத்தில் மட்டுமே திறந்து இருக்கும்- ஒரு கோவிலுக்கு சென்று வந்தோம்.

மபிலாடுதுறையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணக்குடி என்ற கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தேரஸ்வரர் திருக்கோயிலுக்குப் போய் இருந்தோம்.

திருக்கோயிலின் கிழக்குவாயில்
1941க்கு பிறகு இந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகமே ஆகவில்லை போலும்!
கோவிலின் நிலையைப் பார்த்தால் மனதுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.

கோவில் குளம் மிக அழகாய் அல்லி மலர்கள் மலர்ந்து காணப்பட்டது. அழகிய படித்துறை உள்ளது. கிராமமக்கள் குளத்தை சுத்தமாக வைத்து இருக்கிறார்கள்.குளத்திற்கு தண்ணீர் வரும் வழிகள் அடைக்கப்படாமல் இருப்பதால் நிறைய தண்ணீர் இருக்கிறது குளத்தில்.
அழகிய படித்துறையுடன் கூடிய குளம்

அல்லி மலர்கள் நிறந்து இருக்கும் அழகிய திருக்குளம்

நாங்கள் போனபோது குருக்கள், கோவிலை சுத்தம் செய்பவர்கள், தென்னைமரத்தில்  இளநீர் பறிக்க வந்த ஆட்கள் மட்டும் இருந்தார்கள். இந்த கோவில் சிதிலம் அடைந்து பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் இந்தக்கோயிலுக்குரிய நடராசர் திருஉருவச்சிலை பக்கத்தில் உள்ள கருங்குயில்நாதன்பேட்டை, அருள்மிகு சக்திபுரீஸ்வரர் திருக்கோவிலில் பாதுகாப்பாக இருப்பதாக சொன்ன குருக்கள் இன்னும் சிறிது நேரத்தில் அங்கிருந்து நடராஜர் வருவார், இருந்து பார்த்து செல்லுங்கள்  என்றுசொல்லிப்போய் விட்டார். கோவில் திறந்து இருக்கிறதா ? என்று கேட்டால் திறந்து இருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். ஆனால் உள்ளே போனால் ஏமாற்றம். அம்மன் , சுவாமி சன்னதி பூட்டி இருந்தது.  மற்ற சன்னதிகள் கதவு இல்லாததால் திறந்து இருந்தது . பார்த்து விட்டோம். நாங்கள் காத்து இருக்க வேண்டுமே என்று நினைத்து அவர் சொன்ன சகதிபுரீஸ்வரர் கோவிலுக்கே போய் பார்த்துவிடலாம் என்று  போனபோது நடராசர்  வேறு பாதை வழியாக சுந்ரேஸ்வரர் கோவிலுக்கு வந்து விட்டார்.

 சக்திபுரீஸ்வரர் கோவிலைக் குருக்கள் திறந்து காண்பித்தார். அதுவும் மிகவும் பழுது அடைந்து இருந்தது. அதை அடுத்த முறை பகிர்கிறேன்
.
பின் மறுபடியும் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வந்தோம்.  தனியாக யாரும் இல்லாமல்  சுவாமியும், அம்பாளும் இப்போது அங்கே எழுந்தருளி இருந்தார்கள். எங்களுக்கே எங்களுக்கு மட்டும் காட்சி கொடுத்த மாதிரி இருந்தார்கள். நன்கு தரிசனம் செய்து விட்டு வந்தோம்.
நடராசரும் சிவகாமியும்
நடராசப்பெருமானின் திருவடிகளின் கீழே பஞ்சமுகவாத்தியம் வாசிக்கும்  உருவம்
பூதகணம்
அழகான நடராஜர்! அம்பாள்!  நடராஜரின்  திருவடி அருகில் இருபுறமும் அழகான சிவகணங்கள் இருந்தார்கள். ஒருவர் பஞ்சமுகவாத்தியம் வாசித்தார். இன்னொருவர் தாளம் வைத்து இருந்தார். பூமாலைகள் முதலிய அலங்காரங்கள் எதுவும் இல்லாதிருந்ததால் இவ்வுருவங்களைப் பார்க்கமுடிந்தது.

ஸ்வாமி சுற்றி வருவதற்காக கோவிலைச் சுற்றிலும் சுத்தம் செய்து இருந்தார்கள்.  சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி தவிர மற்றவை கதவுகள் இல்லாமல் இருந்ததால் நன்கு தரிசனம் செய்ய முடிந்தது. இரண்டு சுற்று மதில் சுவர்கள் உள்ள (உள்பிரகாரம்,வெளிப் பிரகாரம்) அழகிய கோவில், கவனிப்பு இல்லாமல் இருக்கிறது.

அருள்மிகு செளந்திரநாயகி அம்பாள் சந்நிதி
அருள்மிகு சுந்தரேஸ்வரர் சந்நிதி
தேவார மூவர்
மகாவிஷ்ணு, முருகன்,வள்ளி, தெய்வானை

இலக்குமி
தக்ஷ்ணாமூர்த்தி
பைரவரும் சூரியனும
பழங் கல்வெட்டு
சண்டேசுவரர்
புதிய கல்வெட்டு
கோவிலில் உள்ள சிறப்பை மக்களுக்கு எடுத்துச் சொன்னால் கோவிலுக்குக் கூட்டம் வரும்  ( இப்போது எல்லாம் எல்லாக் கோவில்களிலும்  அதன் சிறப்பை விளம்பரம் செய்கிறார்கள்) இந்த  தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான கோவிலின் பெருமை என்னவென்றால் ,இது பார்வதியை மணக்க இறைவன் கயிலையிலிருந்து வந்து தங்கிய இடம். அதனால்தான்  தான் மணக்குடி என்று இவ்வூருக்குப் பெயர் போலும்!  கன்னிப் பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வழிபட வேண்டிய இடம் என்று சொல்கிறார்கள் .


கோவிலில் இறைவனைத் தரிசனம் செய்து வீட்டுக்கு வந்த பின் அவருக்கு  பிடித்த களி படைத்து  களிப்பு அடைந்தேன்!

வாழக வளமுடன்
------------------

ஸ்ரீ சக்திபுரீஸ்வரர் கோவில்

$
0
0






சென்ற பதிவில் மணக்குடி ஆருத்ரா தரிசனம் பார்க்கப்போன போது அந்த கோவிலில் உள்ள  நடராஜர்,  பக்கத்து ஊர் கருங்குயில்நாதன் பேட்டையில் உள்ள சக்திபுரீஸ்வரர் கோவிலில்  பத்திரமாய் இருக்கிறது என்பதை அறிந்து அங்கு போய் வந்தோம் என்றும் ,அதை அடுத்த பதிவில்   பார்ப்போம் என்றும் கூறியிருந்தேன். இப்போது அக்கோயில் பற்றித் தெரிந்துகொள்வோம்.

இந்த கோவிலும் தருமபுரஆதீனத்தைச் சேர்ந்த கோவில்தான். மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர் தான் இக்கோயிலையும்  பார்த்துக் கொள்கிறார்.  வீடு பக்கத்தில் தான் இருக்கிறது. நாங்கள் போனபோது  திறந்து காண்பித்து பூஜை செய்து பிரசாதங்கள் கொடுத்தார். 

சுவாமிக்கு முன்பு உள்ள நந்தியம்பெருமானை வணங்கி உள்ளே ஸ்வாமியை தரிசிக்கச் சென்றோம். சுவாமி சன்னதிக்கு உள்ளே  பெரிய பிள்ளையார்  இடதுபுறம் இருக்கிறது. வலது புறம் வள்ளி, தெய்வானையுடன் முருகன். கருவறையில் சுவாமி பெரிதாக அழகாய் இருந்தார்  காலையில் திருப்பள்ளிஎழுச்சி பூஜைக்கு செய்த அலங்காரம் அழகாய் இருந்தது.

அடுத்து வெளிப்பிரகாரம் சுற்றி வந்தோம். அங்கு  தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும் அழகாய் எழுந்தருளி  இருந்தார்கள்.வேறு சந்நிதிகள் இல்லை. மூன்று படிகள் ஏறிப்போய் தட்சிணாமூர்த்திக்கு பூஜை செய்ய வேண்டும். தூண்கள் அழகிய வேலைபாடுகொண்டு இருந்தது.

                                         


மற்ற ஸ்வாமிகள் இருந்த மண்டபங்கள் பழுது அடைந்து புல், பூண்டு மண்டி கிடந்தது. அப்புறம் ஸ்வாமி பின்புறம் மதிலில் லிங்கோத்பவர் இருந்தார் அழகாய். 

வெளிப்பிரகாரம் சுற்றி வரும் போது வன்னிமரம் அழகாய் இருந்தது தலவிருட்சமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

அம்மன் சன்னதி வெளி விமானம் மிகவும் மரம் வளர்ந்து  மேலே உள்ள ஸ்வாமி சிலைகளை தள்ளப் பார்க்கிறது.   உள்ளே அம்மன் மிக அழகான அலங்காரத்தில் இருந்தார்.குருக்கள் செய்திருந்த அலங்காரத்தைப் பாராட்டியே ஆகவேண்டும்.  ஆனந்தவல்லி அம்மனைப் பார்க்கும் போது ஆனந்தமாய் இருக்கிறது.

கோவிலின் சிறப்பு:- இந்திரஜித்துக்கு காட்சிக் கொடுத்த இடம். தக்கனின் யாகத்தில் பார்வதி அவமானப்பட, கோபம் கொண்ட சிவன் வீரபத்ரரை அனுப்ப, பயந்த இந்திரன் குயில் வடிவெடுத்து வழிபட்டது. கருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் பேட்டை என்று பெயர் காரணம் தாங்கி இருக்கிறது.

சுவாமி சந்நிதி விமானம்- மரம் வளர்ந்து இருக்கிறது


ஸ்வாமி சந்நிதி மதில்- இடியும் நிலையில்

சக்திபுரீஸ்வரரும், ஆனந்தவல்லியும்  எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.
----------------------------

நாளை முதல் வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பு ஏற்க சீனா சார் அழைத்து இருக்கிறார். இங்கு என் வலைத்தளத்தில் வந்து படிப்பதுபோல் அங்கும் வந்து ஒருவாரம் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

ஆரம்பத்தில் நான் எழுதிய பதிவுகளை நாளை பகிர்ந்து கொள்கிறேன். வாருங்கள் வலைச்சரத்திற்கு,  பார்ப்போம் நாளை!

                                                      வாழ்க வளமுடன்.
                                                                =====
               

புத்தாண்டே வருக!

$
0
0



அன்பு வலைத்தள அனபர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 
உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்தினர்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
---------------------

அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர் !

$
0
0
என் மகன் வசிக்கும் நியூஜெர்சியில் மூன்றாம் தேதிஅன்று(3/1/2014)  பனிப் பொழிவு இருந்திருக்கிறது. அந்தப் பனிப்புயலுக்கு 'ஹெர்க்குலிஸ்’  என்று பெயர் இட்டு இருக்கிறார்கள்.   பனி விழுந்த சமயத்தில் என் மகன் அதைச் சேகரித்து , சிவலிங்க உருவம் செய்து, ’அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர்’ என்று பெயரிட்டு வழிபட்டான். போனமுறை பனிக்காலத்தில் பனி மனிதன் உருவமும், அதற்கு முந்தைய தடவை  ’பனிப்புயல் காத்த விநாயகர்’ உருவம் செய்து இருந்தான்.

’கைவலி, முதுகுவலி இரண்டும் வரும், இவற்றைச் செய்யும் போது. ஆனால் முடித்தபின் ஆனந்தமாய் இருக்கும்’ என்கிறான் அவன். நாம் இங்கு இருந்து கொண்டு, ’குழந்தைகளுக்கு குளிர் அதிகமாய் இருக்குமே!  பனி பெய்தால் அதை அவர்கள் சுத்தம் செய்ய வேண்டுமே’ என்று கவலைப்படுகிறோம். இந்தச் சமயத்தில் அங்கெல்லாம் காரை வெளியே எடுக்க அதன் வழி தடத்தை பனியை நீக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்.

  பனிப்புயல் காத்த விநாயகர்என்ற தலைப்பிட்ட எனது முந்தைய ஒரு பதிவில், மகன் முன்பு செய்த பனி விநாயகர் பற்றிப் பகிர்ந்து இருக்கிறேன். 
இந்த முறை ’அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர்’! 

 அங்கு உள்ள மக்களுக்கு ’ஹெர்க்குலிஸ் பனிப்புயல்’ எந்த விதப் பாதிப்பையும் தராமல் இருக்கப் பிரார்த்தனை செய்துகொண்டார்களாம். பிரசாதமாய் மருமகள் பிரட் அல்வா செய்தாளாம். 






அருள்மிகு ஹெர்க்குலேஸ்வரர்








இந்த முறை ஜனவரி முதல் தேதி அங்கு பிரிட்ஜ் வாட்டர் என்னும் இடத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் கூட்டமாம், நம் ஊர் போல  ’நகர்ந்து போங்கள், போங்கள்’ என்று சொல்லிக் கொண்டு இருந்தார்களாம்('keep going,keep going'). அதைப் பேரன் இப்போதும்  சொல்லிக் கொண்டே இருக்கிறான். இப்படி உலகம் முழுதும் புத்தாண்டு தினத்தன்று , அந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக, நலமாக இருக்கவேண்டுமென்று நம்பிக்கையுடன் வழிபடுகிறார்கள். நம்பிக்கை  நல்லதுதானே!

மற்றும் ஒரு  செய்தி. என் டெல்லிப் பேரன் சபரி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறான்.  சபரிக்கு  வாழ்த்துக்கள்! வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களும் பெற வாழ்த்துகிறோம். அவனுக்கு எங்கள்  வாழ்த்துக்களுடன் உங்கள் வாழ்த்துக்களும் இணைந்தால் மகிழ்வேன்.


                                   வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! !
                                                        ----------------------------

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு

$
0
0


தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மையறிவாரார்
அருளிச்செயலை அறிவாரார் அருள்பெற்ற
நாதமுனிமுதலாம் நந்தேசிகரையல்லால்
பேதைமனமே உண்டோபேசு   
                                          -உபதேசரத்னமாலை

ஒவ்வொரு ஆண்டும்  ஜனவரி 1ஆம் தேதி கங்கைகொண்ட சோழபுரம் போவதை நாங்கள் வழககமாய் வைத்திருக்கிறோம்..  அப்புறம்  அக்கோயிலின் அருகே உள்ள குருவாலப்பர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாளும் வருடா வருடம் எங்களை அங்கும் வரும்படி அழைத்து விட்டார். குருவாலப்பர் கோயில் (குருகை காவலப்பர்)பற்றி முன்பு பகிர்ந்திருக்கிறேன்.

இந்த முறை கங்கைகொண்டசோழபுரம், குறுவாலப்பர் கோயில் ஆகியவற்றை  வணங்கிவிட்டு வரும் போது  ”நாதமுனிகள் திருவரசு செல்லும் பாதை” என்ற  ஒரு புதிய அறிவிப்புப் பலகையைப் பார்த்தோம். .  ”இந்தப் பலகையை , இவ்வளவு வருடம் வருகிறோம், பார்த்தது இல்லையே ! போய் பார்ப்போம்’ என்றேன். கோவில் திறந்து இருக்குமா தெரியவில்லை அறிவிப்புப் பலகை அருகிலிருந்த கடையில் விசாரிக்கலாம் என்று விசாரித்துபோது   பட்டர் இருப்பார்   என்று சொல்லி  செல்லும் வழியைக்  காட்டித் தந்தார்.

மீன்சுருட்டி கூட்டுச் சாலையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் போகும் பாதையில் இடதுபுறம்  200மீட்டர் தூரத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு  அமைந்து இருக்கிறது. அந்த புனித இடத்திற்குப் பெயர் ’சொர்க்கப் பள்ளம்’.


திருவரசு’  என்பதற்கு விளக்கம்:-

“வேர் சூடுமவர்கள் மண் பற்றுக் கழற்றார்போலே ஞானியை விகரத்தோட ஆதரிக்கும்” என்பது ஸ்ரீபிள்ளை லோகாசாரியார் அருளிய ஸ்ரீவசனபூஷணத்தின் வாக்யம்.இதன்பொருள் என்னவென்றால் குளிர்ச்சிக்காகவும் வாசனைக்காவும் வெட்டிவேரை சூடும்போது வேரிலுள்ள மண்ணைக் கழுவி தனியாகப் பிரித்து எடுக்காமல் அப்படியே சூடிக் கொள்வார்கள். அது போல பகவான் ஸ்ரீமந் நாராயணன் ஞானிகளின் பிராக்ரதமான் திருமேனியை (நிலம், நீர், தீ காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களாலான மாறுதலுக்கு உட்பட்ட அழியக்கூடிய உடல்)விட்டுப் பிரியும் ஆத்மாவை (அனைத்துஆத்மாக்களும் அப்ரக்ரமானது, மிகநுண்ணியது, பிரகாசிக்கக்கூடியது, மாறுதலிலாதது மற்றும் அழிவில்லாத நிலை கொண்டது) மட்டும் தன்னுடனே வைத்துக் காப்பதோடல்லாமல் அந்தத் திருமேனியையும் உகந்து காக்கிறான் என்பதாகும். ஆகவே ஆழ்வார்கள்  ஆசாரியர்கள் திருமேனியைப் பள்ளிப் படுத்திய இடத்தில் அங்குள்ள ஞானிகளின் நல்லாட்சி என்ற நல் ஆசிகள் என்றும் நிலைத்து அரசாட்சி செய்வதால் அவவிடம் “திருவரசு” என்ற பெருமை பெறுகிறது. அங்கு தரிசிக்க செல்லும் அடியார்களின் வினைகளும் நீங்கி விண்ணகர் கிட்டும் என்பது திண்ணம் ”என்கிறார்கள்.


ஸ்ரீமந் நாதமுனிகளின் "திருவரசு ”அரியலூர்  மாவட்டம் ஜெயங் கொண்டம் வட்டத்திலுள்ள கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊருக்கு கிழக்கே 1கி.மீ தூரத்திலுள்ள சம்போடை என்ற ஊரின் தென்பகுதியில் அமைந்துள்ளது. ஜெயங்கொண்டத்திலிருந்து காட்டுமன்னார்குடி, சிதம்பரம் மார்க்கத்தில் 12 கி.மீ தூரத்திலுள்ளது சம்போடை கிராமம். கும்பகோணம் சென்னை மார்க்கத்தில் சுமார் 30கி.மீ தூரத்துலுள்ள  ஜெயங்கொண்டம் கூட்டுரோடு என்ற பிரிவிலிருந்து மேற்கே ஒரு கி.மீ சம்போடை கிராமம்.

நாங்கள் போனநேரம் காலை 11மணி . பட்டர் இருந்தார். கோவில் பாதுகாவலர். மற்றும் ஒரு அடியார் இருந்தார்.

கோவில்  சமீபகாலத்தில் (2013) கும்பாபிசேகம் ஆனதால் அழகாய் இருந்தது. ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத  ஸ்ரீநிவாச பெருமாள்  இருந்தார். பட்டர் ஆரத்தி காட்டி, கோவில் வரலாறு சொன்னார்.’ஸ்ரீமந் நாதமுனிகள் வைபவம்’என்ற புத்தகம் தந்தார்.

பன்னிரு ஆழ்வார்கள் அருளிய  நாலாயிரம் திவ்யப்பிரபந்தப் பாசுரங்கள் காலத்தால் மக்களிடமிருந்து மறைந்திருந்தன. அவற்றை மறுபடியும் மீட்டுக் கொடுத்த பெருமை ஸ்ரீமந் நாதமுனிகளேயே சாரும்.

திவ்யப்பிரபந்தைப் பகுத்து ராகம், தாளம் அமைத்த வரலாறு:-

’இவ்வாறு காட்டுமன்னார்குடி ஸ்ரீவீரநாராயணப் பெருமாளின் நியமனத்தால் திருமால் நெறியான ஸ்ரீவைஷ்ணவத்தை பார் எங்கும் பரப்பும் பொருட்டு நாலாயிரம் பாசுரங்களையும் தொகுத்து தன் மருமக்களான மேலையகத்தாழ்வான் மற்றும் கீழையகத்தாழ்வான்(அதாவது ஸ்ரீமந் நாதமுனிகள் வீட்டிற்கு மேற்கே மற்றும் கிழக்கே குடியிருந்த மருமகன்கள்) என்ற இருவரின் துணைகொண்டு ராகம் மற்றும் தாளங்கள் அமைத்து இயலும் இசையுமாக்கி அனைவரும் பாடும் வண்ணம் பகுத்துக் கொடுத்தார் .

 நாலாயிரம் பாசுரங்களை ராகத்துடனும் தாளத்துடனும் அபிநயத்துடனும் பாடிய இவர்களின் வழித்தோன்றல்களே “அரையர்கள்” என அழைக்கப்பட்டனர். “அரையர் ” என்ற சொல்லுக்கு  “தலைவர்” என்று பொருள். அவர்கள் செய்யும் திவயப்பிரபந்த சேவையே “அரையர்சேவை” என்று அழைக்கப்படுகிறது.ஜகத்காரண பூதரான ஸ்ரீமந் நாராயணனை திவ்யப்பிரபந்தப் பாசுரங்களைக் கொண்டு அபிநயத்துடன் பாடுவதில்
தலைசிறந்தவர்கள் என்பதைக் குறிக்கும் பொருட்டு “தலைவர்கள்” என்ற பொருள்படும்படி “அரையர்க்ள்” எனபட்டனர். ”

இயற்றிய நூல்கள்:-

யோக மார்க்கத்தை  பிரதானமாக ஸ்ரீமந் நாதமுனிகள்   நியாயதத்வம், புருஷ நிர்ணயம் மற்றும்  யோகரஹஸ்யம்  என்று மூன்று நூல்களை இயற்றினார். இவைகளை சீடர்களுக்கு உபதேசித்தார்.

அவர் சீடர்கள்களில் முக்கியமானவர்கள் :-

1.உய்யக்கொண்டார்(திருவெள்ளறை புண்டரிகாட்சன்)
2. குருகைக் காவலப்பன்
3.கீழையகத்தாழவான்
4.மேலையகத்தாழ்வான்
5. திருகண்ணமங்கையாண்டான்
6. பிள்ளை கருணாகரதாசர்
7.நம்பி கருணாகரதாசர்
8. ஏறுதிருவுடையார்
9 வானமாமலை தெய்வநாயக ஆண்டான்
10. உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை
 11.சோகத்தூர் ஆழ்வான் .

கம்ப இராமாயண அரங்கேற்றத்தில் தலைமை ஏற்றல்;-

இசையில் சிறந்தும் சோழமன்னனின் அன்புக்கும் பாத்திரமானவரான ஸ்ரீமந் நாதமுனிகளின் தலைமையில் கம்பர் ஸ்ரீராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் தாயார் சன்னதி எதிரிலுள்ள மணடபத்தில் அரங்கேற்றினார்.


இன்று திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்கள்  ”முததமிழ்விழா அரையர் சேவை” பற்றி எழுதி இருந்தார். அதைப் படித்தவுடன் நான் ஜனவரி 1ம் தேதி சென்ற  நாதமுனிகள் திருவரசு  கோவிலைப் பற்றி    எழுத எண்ணம் வந்து விட்டது.இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி.

ஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு நாளை  தொடரும்.

வாழ்க வளமுடன்.
--------------------

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு - பாகம்- 2

$
0
0
நேற்றைய பகிர்வு ஸ்ரீமந் நாதமுனிகள்திருவரசு படித்து இருப்பீர்கள்.

நாதமுனிகளின் அவதாரம்;-

ஸ்ரீமந் நாதமுனிகள் சோழநாட்டில் தற்போது கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்திலுள்ள  காட்டுமன்னார்குடி என்ற வீரநாராயணபுரத்தில்கி.பி 823ல் சோபகிருது வருடம் ஆனி மாதம் 7ம் தேதி புதன்கிழமை பெளர்ணமி திதி கூடிய அனுஷ நட்சத்திரத்தில்    அவதரித்தார். இவர், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நித்ய சூரியான “கஜாநநர்” என்னும் ஆனைமுகமுடையவரின் அம்சமானவர்.

இவருக்கு பெற்றோரிட்ட பெயர் ஸ்ரீரங்கநாதன். இவர் முனிவர் போன்று யோக மார்க்கத்தில் தலைசிறந்தவராக திகழ்ந்ததால் இவரை அனைவரும் “முனி” என்றும் ஸ்ரீரங்கநாத முனி என்றும் அழைத்தனர். அதுவே நாளடைவில் மருவி “நாதமுனி” என்றாகி விட்டது.

திருமணம்:-

ஸ்ரீமந் நாதமுனிகள் அரவிந்தப்பாவை என்ற உத்தமியை மணந்து கொண்டு காட்டுமன்னார்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீவீரநாராயணப் பெருமாளுக்கு நித்திய கைங்கர்யம் (தொண்டு) செய்து வந்தார்.

திவ்யதேசயாத்திரை:-

கிருஷ்ணபக்தியில் திளைத்த இவர் தன் குடும்பத்துடன், கண்ணன் அவதரித்து திருவிளையாடல்கள் புரிந்த  திருத்தலங்களுக்கு சென்று தரிசித்தார்.

ஆளவந்தாரின் அவதாரச்செய்தி:-
யமுனை ஆற்றங்கரையில் அவர் தியானத்தில் இருந்தபோது கண்ணபிரான் குழந்தையாக ஸ்ரீமத் நாதமுனிகளின் முன் தோன்றினான் , “என்னைப்போல் உமக்கு ஒரு பேரன் பிறப்பான், அவன் வேதாந்தத்தை நிலைநாட்டுவான்”
என்று சொன்னான்.

ஆளவந்தார் அவதாரம்:-

யமுனைத்துறைவனாகிய கண்ணபிரானது வாக்குபடி, ஸ்ரீமந் நாதமுனிகளின் மகன் ஈஸ்வர முனிக்கும்,  மருமகள் ஸ்ரீரங்கநாயகிக்கும் ,தாது வருடம் , ஆடிமாதம் , வெள்ளிக் கிழமை , பெளர்ணமி திதி கூடிய உத்ராட நட்சத்திரத்தில் , ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு
 “ யமுனைத்துறைவன்” என்று  பெயர் சூட்டி அழைத்தனர்.

யமுனைத்துறைவன், வித்யா கர்வமிக்க ஆக்கியாழ்வான் என்பவரை வேதாந்த வாதத்தில் வென்று, சோழ மன்னனிடம் பாதி இராஜ்யம்  பெற்று,
ஸ்ரீ ஆளவந்தார் என்று அழைக்கப்பட்டார்.

பின் ஸ்ரீமந் நாதமுனிகளின் நியமனத்தால் , அரசனாக இருந்து போக வாழ்க்கை நடத்தி வந்த இந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்ரீ மணக்கால் நம்பி என்ற ஆசாரியர் திருத்திப் பணிகொண்டார். மேலும் ஸ்ரீரங்கஸ்ரீயைக் காட்டிக் கொடுத்து துறவறம் மேற்கொள்ள செய்தார். ஸ்ரீ ஆளவந்தாரே ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் “முதல் ஜீயர்” ஆவார்.

நாதமுனிகள் திவ்யபிரபந்தங்களைப் பெற்ற வரலாறு:-

ஒரு முறை வீரநாராயணப்பெருமாளை தரிசிக்க தென்திசையிலிருந்து சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்திருந்தனர்.அவர்கள் ஸ்ரீகும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணிபெருமாளைக் குறித்த நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியான “ஆராவமுதே” என்று தொடங்கி பத்துப்பாசுரங்களைப் பாடினர்.  இதனைக் கேட்டு மகிழ்ந்த நாதமுனிகள், முடிவுப்பாசுரத்தில் “ஆயிரத்துள் இப்பத்தும்” என்ற சொற்கள்  வரக்கண்டு ஆயிரம் பாடல்களையும் பாட வேண்டினார்.பத்துப்பாடல்களை மட்டுமே தமக்குத் தெரியும் என்றனர். நாதமுனிகள்   குமபகோணம் சென்று ஸ்ரீ சாரங்கபாணியிடம் சென்று இது குறித்து விண்ணப்பித்தார்.இறைவன்  “ஆழ்வார்திருநகரி” என்ற ஊரில் புளியமரத்தின் அடியில் சிலைவடிவில் உள்ள  ஸ்ரீ சடகோபரிடம் பெற்றுக்கொள்ள சொல்லி மறைந்தார்.

ஸ்ரீமந் நாதமுனிகள்  ஆழவார் திருநகரி சென்று,   அந்த பத்து பாடல்களை  1200 முறை  திருப்புளியமரத்தின் அடியில் இருந்து பாடினார். அந்த பக்தியை மெச்சி காட்சி கொடுத்த சடகோபர், தான் பாடிய ஆயிரம் பாசுரங்களையும், மேலும் மற்ற பாசுரங்களையும் தேவகானமாய் இசைத்து அருளினார். ஸ்ரீவைணவ கோட்பாடுகளையும் நன்கு உபதேசித்தார்.

யோக பயிற்சியில் வல்லவரான் ஸ்ரீமந் நாதமுனிகள் “ஏகசந்தகிரகியாக” அனைத்து பாசுரங்களையும் பெற்றுக் கொண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.(ஏகசந்தகிரகி என்றால் ஒருவர் ஒன்றை ஒருமுறை கேட்ட அல்லது படித்த மாத்திரத்திலேயே மனதில் நிலைநிறுத்தும் தன்மை ஆகும்)

இப்படி நாலாயிரம் பாசுரங்களையும் பெற்றார் ஸ்ரீமந் நாதமுனிகள்,

ஸ்ரீஇராமானுஜரின் அவதாரச்செய்தி:-

ஆழ்வார் திருநகரிலேயே தங்கி, தன் ஆசாரியரான ஸ்ரீசடகோபருக்கும் ஸ்ரீ ஆதிநாதப்பெருமாளுக்கும் தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் காட்டுமன்னார்குடி ஸ்ரீ வீரநாராயணப்பெருமாள் அவரது கனவில் தோன்றி தம் இருப்பிடத்திற்கு வருமாறு அழைத்தார். ஸ்ரீ சடகோபரிடம் விடை பெறும் போது  சடகோபர் மறுபடி காட்சிக் கொடுத்து ஒரு விக்ரத்தைகொடுத்து, ”இவர் ஸ்ரீவைஷ்ணவத்தை வளர்க்க வரும் வருங்கால ஆசாரியர். கலியில் ’லோககுரு’ என்று எல்லாராலும் போற்றப்பட இருப்பவர். இந்த விக்ரகத்திற்கு நித்திய ஆராதனைகள் செய்துவருங்கால், உம்முடைய வழித்தோன்றல்களில் ஒருவர், இவரைக் காண்பார்” என்று  சடகோபர் கூறியருளினார்.

அவர் சொன்னது போல் பிற்காலத்தில் ,ஸ்ரீமந் நாதமுனிகளின் பேரன் ஸ்ரீஆளவந்தாரின் காலத்தில், அவருடைய திரு அவதாரம் நிகழ்ந்தது.

அந்த விக்ரகத்தில் உ:ள்ளவர் வேறு யாரும் அல்ல, அவர் தான் ஸ்ரீஇராமானுஜர்.

ஸ்ரீஆளவந்தார் ஸ்ரீஇராமானுஜரைக்காணல்:-

ஸ்ரீஆளவந்தார், காஞ்சிபுரத்தில் ஸ்ரீசடகோபர் சொன்னது போன்ற
 முகப்பொலிவுடன் ஒருவர் காஞ்சிபுரத்தில் இருப்பதை அறிந்து, காஞ்சி சென்று அவரைப் பார்த்தார்.  ”ஆம் முதல்வன்”  இவர்தான் விக்ரத்தில் உள்ளவர் ” என்று தீர்மானித்து காஞ்சி வரதராஜ பெருமாளிடம் வேண்டினார். அவரை ஸ்ரீ வைஷ்ணவம் வளர்க்க ஸ்ரீரங்கம் அனுப்பி வைக்க வேண்டும் என்று மனமுருக வேண்டிக் கொண்டு ஸ்ரீ ரங்கம் திரும்பினார்.

ஸ்ரீஇராமானுஜர் ஸ்ரீரங்கம் எழுந்தருளல்:-

காஞ்சி வரதருக்கு பிரியமான பகவத் இராமானுஜரை எப்படி ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வருவது என்று ஆலோசனை செய்து அனைவராலும்  தேர்ந்து எடுக்கப்பட்டவர்,ஆளவந்தாரின் மகன் ‘திருவரங்கப் பெருமாள் அரையர்’
அவர் காஞ்சிபுரம் சென்று வரதனை திவ்வியப்பிரபந்தங்களைஅபிநயத்துடன் பாடி வணங்கினார். அதற்கு மயங்கிமகிழ்ந்த   உமக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்றார்.  “நம் இராமானுசனை நமக்கு தந்தருள வேண்டும்” என்று  கேட்க ,அரையர் இசையில் மயங்கிய வரதன்,  பகவத் இராமானுஜரை ஸ்ரீரங்கம் அனுப்ப சம்மதித்தார்.

ஸ்ரீமந் நாராயணன் ஆதிகுருவாகவும், ஸ்ரீமந் நாதமுனிகளும், அவருடைய  திருப்பேரனார்  ஸ்ரீ ஆளவந்தார் என்ற யமுனாசார்யார் மத்தியிலுமாக  ஸ்ரீவைஷ்ண்வ குரு பரம்பரை அமைந்துள்ளது . இதையே பகவத் இராமானுஜரின் சீடரான ஸ்ரீகூரத்தாழ்வான் நமக்காக அருளியுள்ளார்.

“லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ,நாத யாமுந மத்யமாம்,
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.”

ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீமந் நாராயணன் திருவடியடைதல்:-

இப்படி பல பெருமைகளை பெற்ற ஸ்ரீமந் நாதமுனிகளை தன் இருப்பிடமான பரமபத்திற்கு அழைத்துக் கொள்ள எண்ணினான் நாராயணன்.
ஒருநாள் பெருமாளை சேவிக்க சன்னதிக்கு சென்றார் நாதமுனிகள். அப்போது வில்லுடன் இருவரும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு குரங்குடன் வந்து அவருடைய மகளிடம்,’ ஸ்ரீமந் நாதமுனிகள் எங்கே?’ என்று கேட்டனர்  அதற்கு அவள் தன் தகப்பனார் பெருமாளை சேவிக்க சென்றதாக சொன்னாள். வந்தவர்கள் சென்று விட்டனர்.

கோயிலுக்கு சென்று திரும்பியதும் நாதமுனிகளிடம் மகள் அவரைத் தேடிவந்தவர்களைப் பற்றிக்கூறினாள். ஸ்ரீமந் நாதமுனிகள் ,’சக்ரவர்த்தி திருமகனே தன்னை அழைக்க வந்திருப்பார். தன்னுடன் சேர்த்துக் கொள்ள பகவான் நடத்திய திருவிளையாடலே இது’  என்று சொல்லி  ’எனக்கு அவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே’என்று கதறியவாறு அவர்கள் சென்ற வழியைக் கேட்டு ஓடினார்.

இவ்வாறு ஓட்டமும் நடையுமாய் சென்றவர், வழியில் பூச்சரம் ஒன்றை கணடார். அதைக் கண்டவர், “ஆகா! இது சீதாபிராட்டி அணிந்திருந்த தல்லவா, விழுந்திருக்கிறது” என்று சொல்லியவாறு சென்றார். தற்பொழுது அந்த இடமே “பூவிழுந்த நல்லூர்”  என்று அழைக்கப்படுகிறது..

இன்னும் சிறிது தூரம் சென்றபின் ஒரு குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருந்ததைக் கண்டவர் ,  அவர்கள் இந்த வழியில் செல்கின்றனர்  என்று ஊர்ஜிதப்படுத்தினார். அந்த இடமே ’குரங்கடி’ என்று முன்பும் தற்பொழுது “குறுங்குடி” என்றும் அழைக்கப்படும். ஊர்.

இவ்வாறு பயணத்தை தொடர்ந்தவர் வழியில் எதிரே கண்டவர்களைப் பார்த்து தன்னைப் பார்க்கவந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி ”அவர்களை இந்த வழியில் கண்டீர்களா?” என்று கேட்டார். அவர்களும் “ஆம்! கண்டோம்! கண்டோம்! அவர்களின் தோற்றம் கம்பீரமாகவும், முகம் பிரகாசமாகவும் இருந்தது “ என்றனர் . அந்த இடமே தற்பொழுது இருக்கும்“கண்டமங்கலம்” என்ற ஊர்.

இவ்வாறு அவர்கள் சொன்ன உடன் மிக்க ஆர்வம் கொண்ட அவர் கங்கைகொண்ட சோழபுரத்தை நோக்கி சென்றார், இவ்வூருக்கு கிழக்கே சுமார் ஒரு கி.மீ தூரத்தில் சென்றவர் எதிரே வந்தர்களிடம் தன்னை காணவந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி “கண்டீர்களா? என்று கேட்டார் அவர்கள் கண்டிலோம் ! என்று சொன்னார்கள்.. தன்னை காண வந்த பரமாத்மாவை  தான் காணவில்லை என்ற ஏக்கத்தில்  இருந்தார்.

கடவுளிடம் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அந்த நிமிஷமே பகவான் அழைத்துக் கொள்வார் என்பதற்கு இணங்க , கொளுத்தும் வெயிலில் ஸ்ரீஇராமபிரானைத் தேடிச்சென்ற  ஸ்ரீமந் நாதமுனிகள் , அப்பொழுது ஆசாரியரைத் தேடிவந்த சீடர் ஸ்ரீ மணக்கால் நம்பிகள் என்ற ஸ்ரீராமமிஸ்ரர் மடியில் தலைசாய்த்து “என்னை சக்கரவர்த்தித் திருமகன் அழைக்கிறான், நான் புறப்படப் போகிறேன்” என்றவர், “எனக்கு ஒரு அபிலாஷை . பேரன் ஆளவந்தாரை எப்படியாவது அழைத்து வந்து நம் ’குலதனத்தை’ (திருவரங்கநாதரை) காண்பித்துவிடு” என்று கூறியவாறு எம்பெருமான்  திருவடிகளை அடைந்தார்.

ஸ்ரீராமனை தேடி போனவருக்கு  அவர் பெயர் தாங்கிய ஸ்ரீ இராமமிஸ்ரர் என்ற சீடரின் மடி கிடைத்தது.

ஸ்ரீமந் நாதமுனிகளின் சீடர்களான உய்யக் கொண்டார், குருகைக்காவலப்பன், ஆகியோர் அடங்கிய் சீடர்கள் குழாம் நாதமுனிகளின் திருக்குமாரர் ஈஸ்வரமுனியைக் கொண்டு இறுதிச் சடங்குகள் செய்தனர்.. பெருந்திரளான அடியார்கள் முன்னிலையில் அவ்விடத்திலேயே சரம விக்ரகத்தைப் பள்ளிப்படுத்தினர்.அவ்விடத்தில் “திருவரசு” அமைத்து அதன்மேல் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்ரங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தனர். அந்த இடம்தான் “சொர்க்கப்பள்ளம்”என்று இப்போது அழைக்கப்படுகிறது.

ஸ்ரீமத் நாதமுனிகள் ஸ்ரீவைஷ்ணவ  சம்ரதாயத்தின் வேர்.அவரில்லை என்றால் நாலாயிர திவயப்பிரபந்தம் கிடைத்திருக்காது. அவரது திருப்பேரன் ஸ்ரீ ஆளவந்தார் இல்லை என்றால், நம் இராமானுஜர் ஸ்ரீ வைஷ்ணவ தலைமைப்பீடம் ஏற்றிருக்க மாட்டார். எனவே “ நமக்குதிவ்யபிரபந்தங்களை  நல்கிய நம் நாதமுனிகளை நாளும் நாம் வணங்குவோம்.”

                 ஸ்ரீமந் நாதமுனிகள்  திருவடிகளே சரணம்!

                                             *                     *                   *

ஸ்ரீமத் நாதமுனிகள் வரலாறு பற்றி  கோவிலில் பட்டர் சொன்னாலும் விவரமாய் எழுத உதவியது பட்டர் கொடுத்த மு.வெ..இரா ரெங்கராஜ ராமானுஜதாசன் அவர்கள் எழுதிய “ஸ்ரீமந் நாதமுனிகள் வைபவம்” எனற நூலிருந்து  முக்கியமானதை மட்டும் தொகுத்து கொடுத்து இருக்கிறேன்.

பெருமாள் சந்நிதி விமானம்

ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள்




இப்போது கோவிலில் “திருவரசு” மேல் இருந்த ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீநிவாச பெருமாளைத் தனிக் கோவிலில் அமைத்து வைத்து இருக்கிறார்கள்.
திருவரசு மேல் கையில் தாள்முடன் நாதமுனிகள்


நாதமுனிகள் திருவரசின் மேல்,  தாளத்தை வைத்திருக்கும் தோற்றத்தில்  நாதமுனிகளின் சிலை உள்ளது. பீடத்திற்கு கீழே அவ்ரது ஆறு சீடர்களின் சிலை உள்ளது. அவரை சுற்றி வந்து வழி படலாம். பின் புறச் சுவரில் ஸ்ரீராமர்,சீதை, லட்சுமணர், அனுமன் சிலைகள் உள்ளன. இரு பக்க  சுவ்ற்றிலும்  ஆழ்வார்கள் சிலை உள்ளது.

பெருமாள் சன்னதியின் முன்புறம் நாதமுனிகளுக்கு தனியாக சந்நிதி உள்ளது. அங்கு சின் முத்திரையில் இருக்கும்படியான அவரது சிலை உள்ளது. அதைப் போன பதிவில் பகிர்ந்து இருந்தேன். பெருமாளுக்கு முன் புறம் கருடாழ்வார் கூப்பிய திருக்கரத்துடன் இருக்கிறார்.
                              

                                  
ஸ்ரீநிவாசப்பெருமாள் சந்நிதி


                          பெருமாள்                           நாதமுனிகள்                  


நாதமுனிகள் திருவரசு பணிகளில் இன்னும் சில பணிகள் முடிக்க வேண்டி உள்ளது. சுற்றுச்சுவர், கோசாலைக்கட்டிடம், மகாமண்டபம், நந்தவனம், மடப்பள்ளி , கிரில் கேட் எல்லாம் போட வேண்டுமாம். வரும் அடியார்கள் உதவினால் முடிக்கலாம் என்று பட்டர் சொன்னார்.

கோசாலை
பட்டர் எங்களுக்கு கேசரி பிரசாதம் கொடுத்தார்.  இனிப்பை  உண்டு எதிர்பாராமல் இந்த கோவில் தரிசனம் கிடைத்த அற்புதத்தை எண்ணி வியந்து போற்றி வந்தோம்.
-                                                          
                                                  வாழ்க வளமுடன்.
                                                              ___________




பொங்கல் வாழ்த்துக்கள்

$
0
0

தை பொறந்தா வழி பொறக்கும் 
தாரணியில் எல்லோருக்கும் 
கைமேலே பலன் கிடைக்கும்
அம்மா வீரம்மா--- எங்கும்
களஞ்சியமா நெரஞ்சிருக்கும்
ஆமா மருதம்மா 

- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் .


வலை உலக அன்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்! 

                                                   வாழ்க வளமுடன்!ல்

வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும்

$
0
0
சென்ற வைகுண்ட ஏகாதசி அன்று (11.01.2014) கார்த்திகையும் இருந்ததால் முதலில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வைத்தியநாதன், தையல் நாயகி, செல்வமுத்துகுமாரசாமியை தரிசனம் செய்தோம்.

பின் ஏகாதசி தரிசனம் ஆரம்பித்து விட்டது. முதலில் திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்) போனோம். திருநாங்கூரில் 11 கோவில்கள் உள்ளன. திருப்பதி பெருமாளுக்கு அண்ணன்  என்று இந்த திவ்யதேசத்தில் உள்ள  அண்ணன் பெருமாளைச் சொல்கிறார்கள்.அண்ணன் கோவிலில்  .  அலங்காரமாய் முத்தங்கி சேவையில் காட்சிக் கொடுத்தார் மூலவர்.  உற்சவரும் அலங்காரமாய் காட்சிக் கொடுத்தார். தரிசனம் முடிந்து வெளியில் வந்ததும்,  லட்டு பிரசாதம் தந்தார்கள்.  தாயாரை சேவித்து விட்டு  கோவிலை வலம் வந்தால்  108திவ்ய தேசங்களின் பெரிய  படங்கள் இருக்கும். அதைச் சேவித்தால் 108 திவ்ய தேசம் வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

திருவெள்ளக்குளம்  


இங்கு மூலவர் - ஸ்ரீநிவாஸன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்

தாயார் - அலமேல்மங்கை, (உற்சவர் பத்மாவதி, பூவார் திருமகள்.)

அண்ணன் கோவில்   தீர்த்தம்  - ஸ்வேத புஷ்கரிணி.

அல்லி மலர்கள் நிறைய பூத்து இருக்கிறது. நடுவில் உள்ள மண்டபத்தில் மடையான் காத்து இருக்கிறது  மீனுக்காக


திருத்தேவனார்தொகை

அடுத்து  திருத்தேவனார் தொகை (கீழச்சாலை)மாதவப்பெருமாள் கோவிலுக்குப் போனோம். அங்கு நாங்கள் போகும் போது மணி 11 . அப்போது தான் அங்கு பரமபத  வாசல் திறக்கும் வைபவம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சார்த்திய கதவுக்கு அருகில் காத்து இருந்தோம்.

வந்தார் மாதவன்


கருடாழ்வாரை சுற்றிவிட்டு எங்களை அழைத்துக்கொண்டு  பரமபத வாசலில் நுழைந்தார்.
எல்லோரும் நலமாய் இருக்க ஆசி வழங்கினார்.

கடல்மகள் நாச்சியார் -மாதவநாயகி அலங்காரமாய்.


மாதவப்பெருமாள் கோவிலில்  பிரசாதபாத்திரங்களை பளிச் என்று சுத்தமாய் துலக்கி வெயிலில் காய வைத்து இருக்கிறார்கள்.

அடுத்து வைகுந்தநாதபெருமாளை காணச்சென்றோம் . அந்தக் கோவிலில் திருப்பணி நடப்பதால்  வைகுந்தநாதர் அருகில் உள்ள வண் புருஷோத்தமர் கோவிலில் எழுந்தருளி இருக்கிறார் என்று சொல்லும்  அறிவிப்பு :- அது போல் புருஷோத்தமர் கோயிலில் அழகிய வேலைப்பாடு மிகுந்த கண்ணாடி மண்டபத்தில் வெகு அலங்காரத்துடன் இருந்தார். வண் புருஷோத்தமரும் முன் பக்க மண்டபத்தில் அழகாய் காட்சி கொடுத்தார் அவரது திருவடிகளில் திருமங்கை ஆழ்வார் சிறிய வடிவில் அழகிய தோற்றத்தில் இருந்தார்.  



வைகுந்தநாதர் கோவில் வாசல். 
இங்கு மூலவர் : வைகுந்த நாதன், 
தாயார் : வைகுந்தவல்லி  

வெளித்தோற்றம்.


தீர்த்தம் : லக்ஷ்மி புஷ்கரிணி, உதங்கபுஷ்கரிணி, விரஜாதீர்த்தம்.
நாங்கூரில்  வைகுண்டஏகாதசி திருவிழா  அதிகாலை மூன்று மணிக்கு நடைபெறும் கோவில்கள் பற்றிய விபரம்  அடங்கிய அறிவிப்புச் சுவரொட்டி. 
திருவண்புருடோத்தமம் 
இங்கு மூலவர் -ஸ்ரீவண்புருஷோத்தமப்பெருமாள், 
தாயார்-புருஷோத்தம நாயகி.


தீர்த்தம் - திருப்பாற்கடல்

 திருமணிமாடக் கோயில் 
மூலவர் :ஸ்ரீநாராயண பெருமாள்  
தாயார்: புண்டரீகவல்லித்தாயார்.



தீர்த்தம்: இந்திரபுஷ்கரணி, ருத்ர புஷ்கரணி.

திருமணிமாடக் கோயிலில் வரும் 31ம் தேதி கருடசேவை நடைபெறவிருக்கிறது .தை அமாவாசைக்கு மறுநாள்  11 திவ்யதேசத்துப் பெருமாள்களும் கருடவாஹனங்களில் எழுந்தருளுவார்கள். திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார் தன் மனைவி குமுதவல்லியுடன் வந்து மங்களாசாஸனம் செய்துஅருளுவார்.

2012 ல் திருமங்கையாழ்வார் மங்களாசாஸன  வைபவம் என்று பதிவு இட்டு  இருக்கிறேன். 

தரிசனம் தொடரும், அடுத்தபதிவில்.

வாழ்க வளமுடன்!
                                                      ----------------

திருவையாறு ஸ்ரீ தியாகப்பிரும்ம ஆராதனைவிழா

$
0
0

              


                             தியாகப்பிரம்மத்தின் 167 வது ஆராதனை விழா.

20.01.2014 திங்கள் அன்று நாங்கள் திருவையாறு  சென்று இருந்தோம். வெகு காலமாய் என் ஆசை திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று. அது  இப்போது தான் நிறைவேறியது.  ஒவ்வொன்றுக்கும் நேரம் காலம் வரவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது உண்மைதான். நான் பதிவு எழுத வருவதற்கு முன்பு அங்கு போயிருந்தால்  நான் மட்டும் மகிழ்ந்து கொள்ள முடியும். இப்போது  அங்கு போய்வந்ததைப்பற்றி உங்களுடன்  பகிர்ந்து கொண்டு  மகிழ முடிகிறது.

தியாகப்பிரம்மத்தின் சிறப்பு

தியாகராஜர் 1767 ஆம் ஆண்டு மே மாதம்  நான்காம் தேதி திருவாரூரில் பிறந்தார்.   ராமபிரம்மம், சீத்தம்மா ஆகியோர் இவருடைய பெற்றோர். இவருடைய தாத்தா வீணாகாளஹஸ்தி ஐயர் தஞ்சாவூர் சமஸ்தான வித்வானாயிருந்தார்.தியாகராஜரின்  தாயார் சிறந்த பாடகர்.தந்தையார் சிறந்த கல்விமான். அவர் , ராமநவமி உற்சவ காலங்களில் தஞ்சாவூர் அரண்மனையில்  ராமாயண உபன்யாசம் செய்து வந்தார்.  இதன் காரணமாக மகாராஜா இவருக்கு பசுபதி கோவில் என்ற இடத்தில் கொஞ்சம் நிலமும் திருவையாற்றில் ஒரு வீடும் தந்தார். 

தியாகராஜருக்கும் பாரம்பரியமாய் வந்த கந்தர்வ சாரீரம் இருந்தது. அவர் தம் குரு சொண்டி வீணா வெங்கட்ரமணா அவர்களிடம் இசை கற்றார்.

அவர் வாழ்ந்த காலத்தில் மேற்கத்திய நாடுகளில் பீத்தாவன், சோப்பின் , ஸ்கூபர்ட் ,வெபர், போன்ற இசைக்கலைஞர்கள்  புகழ்பெற்று இருந்தார்கள்.
தென்னிந்தியாவில் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமாசாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர், ஆகியோர் சிறப்புடன் விளங்கினர். 

தியாகராஜர் எளிய குடும்பத்தில் பிறந்தவராகையால் உஞ்சவிருத்தி மூலம் தன் குடும்பத்தையும்  தன் சீடர்களையும் பாதுகாத்து வந்தார். இவர் வீணை இசைப்பதிலும் வல்லவர். 

காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிதாஸ் என்பவருடைய வேண்டுகோளுக்கு இணங்க ராமநாமத்தை 96 கோடி முறை சொல்லி வந்தார்.  21 ஆண்டுகள்  விடாமல் சொல்லி வந்தார். அதனால்தான் அவருக்கு ராமருடைய அருள் கிடைத்தது  என்பார்கள்.

72 மேளகர்த்தா ராகத்திலும் பாடல்களை புனைந்துள்ளார். ’சங்கீதரத்னாகரம்’ முதலிய இசை நூல்களில் காணப்படாத  பகுதாரி, கருடத்வனி, ஜனரஞ்சனி, நவரசகன்னடா ஆகிய அபூர்வ ராகங்களில் பாடி உள்ளார்.

இவர்தன் இசையில்  சிறப்பான புதிய சங்கதிகளை புகுத்தி உள்ளார். 

1847ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் நாள் முக்தி அடைந்தார்.

இவருடைய பஞ்சரத்ன கீர்த்தனைகள் மிக சிறப்புடையது. இந்த பாடலை தான் அவர் நினைவு நாளில் பாடுகிறார்கள், இசைக்கலைஞர்கள். 

ஆராதனை விழாக்காட்சிகள்




                               
நாங்கள் திருவையாற்றிற்குப்போன போது காலை 10 மணி. தியாகராஜருக்கு அபிஷேகம் ஆகிக்கொண்டிருந்தது. நாதஸ்வர கலைஞர்கள் வாசித்துக் கொண்டு இருந்தார்கள். தியாக பிரம்மத்திற்கு முன் இருந்தவர்கள் ராமநாமத்தைச்சொல்லிக் கொண்டு இருந்தார்கள் பால் அபிஷேகம் ஆகிக் கொண்டு இருந்தது.  நான் படம் எடுக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டு எடுக்கவில்லை அப்புறம் எல்லோரும் எடுத்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தேன். அப்புறம் நான் எடுக்கும் போது பன்னீர் அபிஷேகம்  ஆகிக் கொண்டு இருந்தது.


                        

                        

                        

                        


                         

அவர் நினைவிடத்தில் ராமர் பட்டாபிஷேக சிலையின் முன் ராம நாம பாடல்களை பாடுவது போல் உள்ள தோற்றம்.

                        
 விழா மேடை அழகாய்ப் போட்டு இருந்தார்கள் ரசிகர்கள் அமர தரையில் புதுமணல் பரப்பியிருந்தார்கள். கீழே அமரும் இடத்தில் வயதான பெரியவர்கள், நடுவில் பிரித்து இருக்கும் மூங்கில் கம்பில் சாய்ந்து அமர்ந்து கொண்டு பாடல்களை ரசித்துக் கொண்டு இருந்தார்கள்.
இந்த இடத்தில்தான் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடுவார்கள்.அதே இடத்தில் அமர்ந்து பாடலை கேட்டு ரசித்து விட்டு தியாகபிரம்மத்திடம் என் பேரன் , பேத்திகள்  இசையில் நன்கு தேர்ச்சிபெற வேண்டும் என்று வேண்டி வந்தேன். என் பேரன் மிருதங்கம் கற்றுக் கொள்கிறான், பேத்தி வாய்ப்பாட்டு சில வருடங்களாய் கற்று வருகிறாள். சின்ன பேரனை (என் மகனின் மகன்) பாட்டுக் கற்றுக் கொடுக்க ஆசை ப்படுகிறார்கள் மகனும், மருமகளும். ஆனால் நான்கு வயது தான் ஆகிறது 7வயது ஆக வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் சொல்கிறார். 

 பின்பு நாங்கள் பாடகர்கள் பாடிய பாடல்களைக் கேட்க ஆரம்பித்தோம். அருகருகே இரண்டு மேடைகள் ஏற்பாடு செய்து இருந்தார்கள். ஒரு மேடையில் பாடகர் பாடிக் கொண்டு இருக்கும்போது,  அடுத்தமேடையில் பாடகர் , பக்கவாத்தியக்காரர்கள் அமர்ந்து தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

அடுத்த மேடையில் வந்து அமர்பவர்கள் வரத் தாமதம் ஆனால் பாடிக் கொண்டு இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம்! இன்னொரு பாடல் பாடுகிறார்கள். அவர்கள் சீக்கிரம் வந்து அமர்ந்துவிட்டால் இவர்களுக்கு ஒரு பாடல்தான். பாடிய குழந்தைகள் எல்லாம் மிகவும் அனுபவித்து பயபக்தியுடன் பாடினார்கள். அடுத்துப் பாட இருக்கும் குழந்தைகள் மிக ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உழைப்பும், கவனமும் வேண்டியது அல்லவா பாடுவதற்கு !

பக்க வாத்தியங்கள் வாசித்தவர்களும் நன்கு வாசித்தார்கள். வாழ்நாளில் ஒருமுறையாவது  இங்கு வந்து பாடவேண்டும் என்று நினைத்தவர்கள் கனவு நனவானது . பாடிய குழந்தைகள், மற்றும் பெரியவர்கள், சிறியவர்கள் எல்லோருக்கும் இந்த பேறு கிடைத்த மகிழ்ச்சி அவர்கள் நடையில் தெரிந்தது. 

வாய்ப்பாட்டு, மாண்டலின், வீணை, நாதஸ்வரம் என்று பல இசைக் கலைஞர்களின் கச்சேரிகளைக் கேட்டோம். 
                              
                               

                               

                              

                               
நாங்களும் எங்கள் காமிராவில் பாடல்களை பதிவு செய்தோம் , அபிஷேக காணொளி மட்டும் பகிர்ந்து இருக்கிறேன். 

டெல்லியில் பேத்தி தியாக பிரம்ம ஆராதனை விழாவில் கலந்துகொண்டு பஞ்சரத்ன கீர்த்தனை பாடியதைக்  கேட்டிருக்கிறேன்.   என் மகள் மாயவரத்தில் தியாக பிரம்ம ஆராதனைவிழாவில் வயலின் தனியாக வாசித்து இருக்கிறாள்.( இப்போது அவள் வாசிப்பது இல்லை . அவள் மீண்டும் வாசிக்க வேண்டும் என்று வேண்டி வந்தேன்)

                                       

           ஆல் இந்தியா ரேடியோவின் தற்காலிக ஒலிபரப்பு நிலையம்.

தொலைக்காட்சிகள் வருவதற்கு முன் சென்னை அகில இந்திய வானொலியில் கேட்டோம், இசைக் கச்சேரிகளை. இப்போதும் அது தன் சேவையை சிறப்பாய் செய்துகொண்டிருக்கிறது. சென்னை அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து  வந்து கச்சேரிகளை நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டு இருந்தார்கள். 

                      
பொதிகைத் தொலைக்காட்சியில் சிட்டியூனியன் பேங்க்  நேரடி ஒளிபரப்பை வழங்குகிறது.(ஸ்பான்ஸர்).  

 ’சென்னையில் திருவையாறு’ என்ற நிகழ்ச்சியை  விஜய் தொலைக்காட்சிவழங்குகிறது,  பொதிகையில் திருவையாறு நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு எல்லாம் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். இப்போது நேரடியாக கேட்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

பாடவந்த ஆண் குழந்தைகள், கலர் கலர் குர்த்தா, வேஷ்டி, வெள்ளைசட்டை, துண்டு எல்லாம் போட்டுக்கொண்டு அமர்க்களப்படுத்தினார்கள்.
                                   
                                           வளரும் இசைக் கலைஞர்

பெண் குழந்தைகள் பட்டுப்பாவாடை, நெற்றிச்சுட்டி,  பாவாடை, தாவணி என்று பாரம்பரிய உடையில் வந்து பாடி அசத்தினார்கள்.  அவர்கள் பாடப்போகும் முன் அவர்களின் குருமார்கள்  அறிவுரை சொல்லிக் கொண்டு இருந்தார்கள். சேர்ந்து பாடும் குழுவினர்களிடம்,’ ஓடாது, எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து பாட வேண்டும் ’என்று.  ’நான் தான் நல்லா பாடுவேன் என்று  ஓங்கி சத்தமாய் பாடக் கூடாது எல்லோரும் சமமாய் பாட வேண்டும் ’என்று அறிவுரை சொல்லிக் கொண்டு இருந்தார் .
                       

நான் என் கணவரை அலங்கார மண்டபத்தின்முன் போட்டோ எடுத்த போது, செருப்புகளைப் பாதுகாத்துக் கொண்டு  இருந்த ஒருபையன் ஆவலுடன் வந்து நின்றான். அந்த சிறுவனை நீ நில் உன்னை போட்டோ எடுக்கிறேன் என்றவுடன் வந்து போஸ் கொடுத்தான். அவனது அம்மாவிடம் எடுத்த போட்டோவைக் காட்டியதும் அந்த அம்மாவுக்கும் அவனுக்கும் மகிழ்ச்சி. 

                       

விழாவை முன்னிட்டு அங்கே கடைகள் போட்டு இருந்தார்கள் . வோடபோன் கடை, ராமராஜ் காட்டன் கடை, வேஷ்டி, ஜிப்பா, நேரியல்  கன ஜோராய் விற்பனை ஆகிக் கொண்டு இருந்தது. 


                          
இசைக்கருவிகளை விற்கும் கடைகள் இருந்தன. இசைக்கருவிகளுக்கான பிரத்யேக உறைகள்,   மிருதங்கத்திற்கு   தேவையான  தோல், அதைக்கட்டும் வார் முதலிய உதிரிபாகங்கள்,  சுதிப் பெட்டிகள் என்று சகலமும் அங்கே ஒரேஇடத்தில் கிடைக்கிறது. இசைக்கலைஞர்களின் குறுந்தகடுகள், புத்தகங்கள் விற்கப்பட்டன.நாங்கள் சிலவற்றை வாங்கினோம்.

கும்பகோண டிகிரி காப்பி கடைகள் இருந்தன . இதில் பித்தளை டபராடம்ளாரில் காப்பி கொடுக்கிறார்கள். லியோ காப்பி கடையில் இலவச காப்பி தந்து 200 கிராம் காப்பித்தூள் வாங்கினால் 50கிராம் காப்பித்தூள் இனாமாய் தருகிறார்கள்.  கூல்டிரிங் விற்கும் கடையில் தங்கும் வசதி கொண்ட ஓட்டல்களின் விளம்பர நோட்டிஸ்களும்,  போன் செய்து அறைகளைப் பதிவுசெய்ய விபர அட்டைகளும் எல்லோருக்கும் தந்து கொண்டு இருந்தார்கள்.

 மருத்துவ உதவிக்கு டாக்டர், நர்ஸ் கொண்ட குட்டி மருத்துவமனை, தீயணைப்புப் படை. கண்காணிப்புக்கு  காவல் துறைஅதிகாரிகள் இருந்தார்கள். 
                       

 சுகாதாரமாய் ஆண், பெண் இருபாலர்களுக்கும் தனித்தனியாய் தகரகொட்டகை  போட்ட  நவீனகழிப்பிடங்கள் என்று வசதிகள் செய்து இருந்தார்கள். 


                                   பழைய கைவினைப்பொருட்கள் கடை

 இதில்  தஞ்சை ஓவியம், மரத்தாலான மண்டபங்கள், அலங்கார வெற்றிலைப் பெட்டி, அந்தக்காலத்து கேரளா உருளி , அழகிய காமாட்சி விளக்குகள்  மரப்பெட்டிகள் என்று ஏராளமாய் வைத்து இருந்தார்கள்.





  கடைகளுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பெரியவர் அப்போதுதான் உஞ்சவிருத்திக்கு போய்வந்த கோலத்தில் கையில் அரிசிச் செம்புடன் அமர்ந்து இருந்தார். அவரைச் சுற்றி வேதியர்கள் அமர்ந்து பாடிக் கொண்டு இருந்தார்கள்.

கச்சேரிகளைக்கேட்ட மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினோம். திரும்பி வரும்போது திங்களூர், சுவாமிமலை சென்றுவந்தோம். அது பற்றிப் பிறகு பகிர்கிறேன்.
                                                           வாழ்க வளமுடன் !
                                                          _____________________

சின்னஞ்சிறு தோட்டம் சிங்காரத் தோட்டம்

$
0
0



நம் வீடுகளில் தோட்டம் போட்டால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சின்ன இடமாக இருந்தாலும் இரண்டு தொட்டி வாங்கி அதில் இரண்டு
பூச்செடிகளை வைத்தால் அதில்  நாம் வாங்கி வந்தபின் இரண்டு இலை
துளிர் வந்தாலே அதைப்பார்க்கும்போது  மகிழ்ச்சி ஏற்படும். மொட்டு விட்டு
விட்டால் அதைவிட மகிழ்ச்சி. மலர்ந்து விட்டால் அளவில்லா மகிழ்ச்சி.
நாம் அவ்வப்போது  கண்டு களிக்க வசதியாக பூச்செடிகளைக் கண்ணில்  படுவது போல்   வைத்து இருந்தால் சந்தோஷத்திற்கு கேட்கவே வேண்டாம்.
நம் தோட்டத்தில் பூத்த மலர்களால் இறைவனுக்கு அலங்காரம் செய்தால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.

இங்கு மகன் வீட்டில் சிறிய தோட்டம், புல்வெளி என்று அழகாய் அமைத்து
இருக்கிறான் சில பூச்செடிகள் தொட்டியில் வைத்து இருக்கிறான்.  தோட்டத்திற்கு போயும், வீட்டில் இருந்தே  கண்ணாடிக்கதவு வழியாகப்பார்க்கலாம், காலையில் மலர்களை மொய்க்கும் வண்டு வரும்.  சின்ன பட்டாம்பூச்சிகள் வரும். காய்ந்த புற்களை எடுத்துச் சென்று குளிர்காலத்துக்கு படுக்க மெத்தை அமைத்துக் கொள்ள மணிப்புறாக்கள், குருவிகள், அணில்கள்   வரும். தானியங்கள் போட்டு இருக்கும் தொங்கும்  கண்ணாடி  ஜாடியிலிருந்து தானியங்களை சாப்பிடப் பறவைகள்,அணில்கள் வரும்.  நாம் படம் எடுக்கப் பக்கம் போனால் கண்சிமிட்டும் நேரத்தில் சிட்டாய் பறந்து விடும் பறவைகள். அணில் குடுகுடு என்று ஓடி ஒளிந்து கொள்ளும்.

கன கம்பீரமாய், கறுப்புப் பூனையார், இளம் ஆரஞ்சும், வெள்ளையும் கலந்த பூனையார் எல்லாம் வருவார்கள். இரவு மின்மினிப் பூச்சிகள் வந்து அழகு சேர்ப்பார்கள் தோட்டத்தை.

மகன் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் இடையில் இருக்கும் தடுப்புத்  தட்டி பக்கத்தில், வைலட் கலரில் பூக்கும் ஒரு செடி இருந்தது. அதில் மஞ்சளும், கறுப்பும் கலந்த வண்ணத்துப் பூச்சி காலையிலிருந்து இரவு வரை தேன் குடிக்க வரும். பார்க்க அழகாய் இருக்கும்.  நாள் முழுவதும் அதைப்  பார்த்துக் கொண்டு இருந்தாலும் அலுக்கவே அலுக்காது.  ஊரிலிருந்து வந்த  நாட்களாக பார்த்து ரசித்த அந்தக்காட்சி இரண்டு நாட்களுக்கு முன் கலைக்கப்பட்டது. பக்கத்து வீட்டுக்குப் புதிதாக வந்து இருப்பவர்கள் தோட்டத்தை முற்றிலும் அழித்து விட்டார்கள். வண்ணத்துப்பூச்சி  சிறகடித்து பறக்கும் அழகைக் காணமுடியவில்லை. ஒரே ஏமாற்றம் தான்.  ஏதோ இவ்வளவு நாள் பழகிய நட்பைப் பிரியும் வேதனை.இதனால் தான் சித்தர்கள் ஆசை அறுமின் என்றார்களோ!

அக்டோபர் வரைதான் இந்த வசந்தம். அதன் பின் பனி விழுந்து மலர் வனம் இருக்காது. மரங்கள் இலைகளை உதிர்த்தும், வண்ணம் மாறியும் இருக்கும். வந்ததில் இருந்து பூக்களையும், வண்டுகளையும், வண்ணத்துப்பூச்சிகளையும் நிறைய படம்பிடித்து இருக்கிறேன். நீங்களும் கொஞ்சம் ரசியுங்கள்.


                     ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்

                                                          மலர்ந்தும் மலராமலும்


                                        மொட்டும்      இருமலர்களும்

                                                                   மூன்றானோம்



இறைவன் பாதத்தில் 




இலைகளே மலர்களாய்


கொடி மலர்
அடுக்குப் பூ
மழையில் நனைந்த கொடிமலர்
அரளி போல் இல்லே!


இந்த பூவில் மஞ்சள் இதழில் மட்டும் எப்போதும் தேன் குடிக்கிறது இந்த வண்டு

வாழை  -  பனிக்காலம் வருமுன் பலன் தருமா ?
குடைபிடித்து இருக்கும் காளான்
முடி வெட்டி அழகு செய்து கொண்டு இருக்கிறது
திராட்சைக்கொடி கூட இனிக்கிறது போல
பக்கத்து வீட்டுத் தோட்டத்திற்கு வந்த வண்ணத்து பூச்சி




தோட்டத்தை இந்த ஊஞ்சலில்  இருந்து  ரசிப்போம் தரையை என் மகனும்,மகளும் சேர்ந்து  வண்ணம் தீட்டி அழகுபடுத்தி இருக்கிறார்கள். மழை விடாமல் பெய்து கறுப்பாய் இருந்த தரையை அழகிய வண்ணத்தரைஆக்கி விட்டனர். பேரனுடன் விளையாடும் இடமும் இது தான். தோட்டத்தில் மணல் தொட்டி இருக்கிறது ,பேரன் விளையாடடுவான்   எங்களுடன்.

மலர்  கண்காட்சி எப்படி இருக்கிறது? தோட்டத்திற்கு வந்த  மற்ற விருந்தாளிகளை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

மலர்த் தோட்டம் போல் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருவோம்

அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்.

---------------------------------------------------------------------------------------------------------------------

வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும் - பகுதி - 2

$
0
0
வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும் என்று ஜனவரி 19ஆம் தேதி நான் இட்ட பதிவின் தொடர்ச்சி.

வைகுண்ட ஏகாதசி அன்று நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற தலம் திருத்தெற்றியம்பலம் (பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில்)






                             
                               திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)

மூலவர் செங்கண்மால் ரங்கநாதன், ஸ்ரீலக்ஷ்மீரங்கர் என்றதிருநாமங்கள், 
4 புஜங்கள், புஜங்கசயனத் திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்: செங்கமலவல்லி
தீர்த்தம்: சீரிய புஷ்கரிணி
விமானம்: வேத விமானம்
ப்ரத்யக்ஷ்ம்: நாச்சியார், அநந்தாழ்வார்.
மங்களாசாஸனம்: திருமங்கையாழ்வார் _ 10பாசுரங்கள்.

ஸ்ரீரங்கத்தில் உள்ளது போல் இங்கு பெருமாள் பள்ளிகொண்டு உள்ளார். பட்டர்,பெருமாளுக்கு  அழகாய் அலங்காரம் செய்து இருந்தார் . உற்சவர் பூப் பந்தல் அலங்காரத்தில் இருந்தார்.

                                                                 *     *     *

                                         
                                           திரு அரிமேய விண்ணகரம்
இதனை குடமாடும் கூத்தர் கோயில் என்றே அழைக்கின்றனர்.
மூலவர்                    : குடமாடும் கூத்தர்(தைலக்காப்பு திருமேனி)
                                    வீற்றிருக்கும் திருக்கோலம்(கிழக்கே திருமுக மண்டலம்)
உதஸவர்                 : சதுர்புஜகோபாலன்
தாயார்                      : அம்ருதவல்லி
தீர்த்தம்                     :கோடி தீர்த்தம், அம்ருத தீர்த்தம்
விமானம்                 : உச்சச்ருங்க விமானம்
 ப்ரத்யக்ஷம்             : உதங்க முனிவர்
மங்களாசாஸனம் : திருமங்கை ஆழ்வார்:  10 பாசுரம்.

நல்ல கம்பீரமான தோற்றத்தில் இடது காலை  குடத்தின் மேல் வைத்த தோற்றத்தில் மிக அழகாய் இருக்கிறார். பட்டர் கீழே பாத தரிசனம் செய்து வைக்கிறார். குடத்திற்கும் பாதங்களுக்கும் வெள்ளிக் கவசம் சார்த்தப்பட்டு இருக்கிறது. கோவில் சமீபத்தில் கும்பாபிஷேகம் ஆனதால் பளிச் என்று அழகாய் இருக்கிறது.

தாயார்  சன்னதி
உச்சச்ருங்க விமானம்

அமிர்தகடவல்லி





ஸ்வாமி விமானம்

***    ****
அடுத்தது - திருமணிக்கூடம்:-

திருமணிக்கூட வாசல்
திருமணிக்கூடம்
மூலவர்                      : வரதராஜப்பெருமாள்  (மணிக்கூடநாயகன்)
                                       நின்ற திருக்கோலம் , கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்                        : திருமாமகள் நாச்சியார்(ஸ்ரீதேவி), பூதேவி 
                                       தாயாருக்குத் தனிச்சந்நதி கிடையாது.
தீர்த்தம்                       :சந்திர புஷ்கரணி.
விமானம்                   : கனக விமானம்
 ப்ரத்யக்ஷ்ம்               : பெரிய திருவடி, சந்திரன்.
மங்களாசாஸனம்    :  திருமங்கை ஆழ்வார் : 10 பாசுரங்கள் 

                                                          ***     ***

திருச்செம்பொன்செய் கோயில்

மூலவர்                    :பேரருளாளன் , நின்ற திருக்கோலம், 
                                    கிழக்கே திருமுக மண்டலம் 
உத்ஸவர்                 : ஹேமரங்கர் , செம்பொன்னரங்கர்
தாயார்                      : அல்லிமாமலர் நாச்சியார்.
தீர்த்தம்                     : நித்யபுஷ்கரணி, கனகதீர்த்தம்
விமானம்                 : கனக விமானம்
ப்ரத்யக்ஷம்              : ருத்ரன்

மங்களாசாஸனம் : திருமங்கை ஆழ்வார் : 10 பாசுரங்கள்.



                     வைகுண்ட ஏகாதசிக்கு நான் போட்ட கோலம்.

இப்படி நாங்கள் தாமரை கண்ணனின் தாமரைப் பாதங்களை தரிசனம் செய்து வந்தோம்.
                                         
திருமணிமாடக் கோயிலில் வரும் ஜனவரி 31ஆம் தேதி கருடசேவை நடைபெறவிருக்கிறது .தை அமாவாசைக்கு மறுநாள்  11 திவ்யதேசத்துப் பெருமாள்களும் கருடவாஹனங்களில் எழுந்தருளுவார்கள். திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார் தன் மனைவி குமுதவல்லியுடன் வந்து மங்களாசாஸனம் செய்துஅருளுவார்.

பார்க்க வாய்ப்பு இருப்பவர்கள் பார்க்கத்தான் மறுபடியும் இந்த தகவல்.

                                               வாழ்க வளமுடன்!

                                            _______________________

சிங்காரத் தோட்டத்திற்கு வந்த விருந்தினர்

$
0
0
வீட்டுத்தோட்டம்  பற்றியும் அது அளிக்கும் இன்பத்தைப் பற்றியும்  போன பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.  வீட்டுத்தோட்டம் மனதுக்கு மகிழ்ச்சி உடலுக்கு ஆரோக்கியம் , இதய நோயைப் போக்கும்,  தோட்டத்தைப் பார்க்கும் போது உற்சாகம் தொற்றிக் கொள்கிறது என்று பின்னூட்டம் கொடுத்தவர்கள் எல்லாம்  மகிழ்ச்சியாக தங்கள் கருத்துக்களைப்  பகிர்ந்து இருக்கிறார்கள். இப்படி வீட்டுத்தோட்டம் , நலங்கள்  பல தருகிறது எனத் தெரிகிறது.

ஒரு பழைய  சினிமாப் பாடல் -குழந்தைகள் பாடுவது போல் இருக்கும்- சிறு வயதில் மணலில் வீடு கட்டி விளையாடும் போது கூட தோட்டம் அமைக்க வேண்டும் என்று குழந்தைகள் பாடுவார்கள்:

’ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி,
தோட்டம் இட்டு செடி வளர்த்து ஜோராக குடி இருப்போம்.

 அந்த வீட்டில் வந்தவர்களுக்கு எல்லாம் இடம் இருக்கும் என்று பாடுவார்கள்
வீட்டுக்கு வரும் எல்லோருக்கும் அந்த வீட்டில் இடம் இருக்குமாம் எவ்வளவு அழகாய் பாட்டு எழுதி இருப்பார்கள்!  சீனிவாஸ் அவர்களும், சுசீலா அவர்களும் நன்றாகப் பாடி இருப்பார்கள்.

  பாரதியாரும் ”அழகாய்   மாளிகை !  அதில்  தென்னைமரங்கள் !அதில் அமர்ந்து கீதம் இசைக்கும் குயிலை எல்லாம் ரசிக்க வேண்டும்!” என்கிறார். இப்படி இயற்கை சூழலில் இருந்தால் கவி பாடக்  கேட்க வேண்டுமா!


//காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.//

என்று அவர் பாடினார்


என்னுடைய போன பதிவைப்படிக்காதவர்கள் படிக்கலாம். அதன்சுட்டி
சின்னஞ்சிறு  தோட்டம்  சிங்காரத் தோட்டம்

மண்,மரம், மழைஎன்று வலைத்தளம் வைத்து இருக்கும்
திரு .வின்சென்ட் அவர்கள் ஆகஸ்ட்  தேதி 25  உலக வீட்டுத்தோட்டத்தினம்  என்று சொல்லி ஒரு சிறு பதிவு போட்டு இருக்கிறார் பாருங்கள்.

//பெருகி வரும் ஜனத்தொகை, குறைந்து வரும் அல்லது அழிவைத்தரும் மழையளவு, விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவது, அதிக இரசாயன பயன்பாடு, மரபணு மாற்ற விதைகள், தரமற்ற நிலத்தடி நீர், துரிதஉணவு முறை இவை அனைத்தும் மக்களின் ஆரோக்கிய வாழ்வையும், புரிந்துணர்வையும் கேள்விக் குறியாக்குவதோடு முறைகேடான விலைவாசி உயர்வையும், ஊழலையும் நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கு நம்மாலான  ஒரு மிகச் சிறிய வாய்ப்பு இந்த “வீட்டுத் தோட்டம்”
உலக வீட்டுத் தோட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம்  4 வது ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த  உலக வீட்டுத் தோட்ட தினத்தில் உங்கள் சிந்தையில் “வீட்டுத் தோட்டம்” என்னும் சிறு விதையை ஊன்றுங்கள் அது முளைத்து வளர்ந்து விருட்சமாகி உங்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் பயனளிக்கட்டும்.எனது வீட்டுத் தோட்டம் பற்றிய பழைய பதிவு:
http://maravalam.blogspot.in/2010/10/blog-post_26.html
வீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் இன்றைய காலத்தின் தேவை .//

 இந்தப் பதிவில் வீட்டுத்தோட்டம் அமைக்க இடம் இல்லை என்றால் மாடித்தோட்டம் அவசியம் என்கிறார்.

நான் என் போன பதிவில் என் தோட்டத்திற்கு வந்த விருந்தாளிகளைப்பற்றி அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் என்றேன் .அவர்களை நீங்களும் பாருங்களேன்.
                                          வித்தியாசமான வண்ணத்துப்பூச்சி

                                                தூரத்திலிருந்து எடுத்த மைனா


                                                           தேன் எடுக்கும் கரு வண்டு


                                           தூரத்திலிருந்து எடுத்த மணிப் புறா


தரையின் வண்ணம் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம் என்று வந்த வண்ணம் குறைந்த  வண்னத்துப் பூச்சி


கும்பிடு பூச்சி, இலை பூச்சி, குச்சி பூச்சி இப்படியும் சொல்லாம் தானே!

பூனையார் ஒளிந்து பார்க்கிறார்

பூ அழகா, நான் அழகா ?

                           சிட்டுக்குருவிகள் ,,  தவிட்டுக் குருவி

தானியங்களை கொறிக்க அணில் செய்யும் சாகசங்கள்
என் மகன் , மருமகள் இருவரும்  தங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு  வந்த விருந்தாளிகளை தங்கள்   காமிராவில் எடுத்து வைத்து இருந்தார்கள் . அந்த அணில், குருவி தொகுப்பை கொடுத்து  உதவினார்கள்.


நடனம் ஆடும் வண்ணத்து பூச்சி

இசை நீரூற்று



சமீபத்தில் பென்சில்வேனியாவில் உள்ள ”லாங்வுட் கார்டன்” என்ற  தோட்டம் போய் இருந்தோம். அதில்  இசை நீர் ஊற்று பார்த்தோம். அது போல் தாத்தாவிடம் வீட்டுத்தோட்டத்தில் நீரூற்று  செய்யவேண்டும் என்று பேரன் .
. சொல்ல அதேபோல் நீரூற்று செய்ய , அதற்கு பேரன் பாட்டுப் பாடுகிறான்.

 
உலக வீட்டுத்தோட்டநாளில்  நம்வீட்டுத்தோட்டத்தில்ஒருரோஜாசெடியாவது 
வைத்து மகிழ்வோம் .வாழ்க வளமுடன்.                                                                                                                       a

மாப்பிள்ளை வந்தார்! மாப்பிள்ளை வந்தார்!

$
0
0
1973ஆம்  வருடம் பிப்ரவரி 6 ஆம்  தேதி !

மதுரை ,திருப்பரங்குன்றம்  சாலையிலுள்ள “குமரக கல்யாண மண்டபத்தில்” இரவு 7மணிக்கு ஒரே பரபரப்பு!

‘என்ன இன்னும் மாப்பிள்ளை வரலை ! ’என்று ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டு இருந்தார்கள். ’கோவையிலிருந்து  எத்தனை மணிக்கு புறப்படுவதாய் சொன்னார்கள், மாப்பிள்ளை அழைக்கப் போனவர்கள்’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார்கள், பெண்ணின் அப்பாவிடம்.

கவலை தோய்ந்த முகத்துடன் கேள்வி கேட்கும் எல்லோருக்கும் நிதானமாய் உள்ளுக்குள் ஏற்பட்டு இருக்கும் பதட்டத்தை மறைத்துக் கொண்டு பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் பெண்ணின் அப்பா . பெண்ணின் அம்மா எல்லா தெய்வங்களையும் வேண்ட ஆரம்பித்து விட்டார்கள். இப்போது போல் அந்தக் காலத்தில் அலைபேசி வசதிகள் இல்லை. கல்யாணமண்டபத்தின் தொலைபேசிக்கு காலதாமதத்தின் காரணத்தை சொல்ல மறந்து விட்டனர், மாப்பிள்ளை அழைக்கச் சென்றவர்கள்.

மாப்பிள்ளை அழைப்புக்கு வந்த உறவினர்களும், நண்பர்களும்  தங்கள் மாப்பிள்ளை அழைப்பு எப்படி நடந்தது என்றும், வேறு ஊரில் எப்படி அசம்பாவிதங்கள் மாப்பிள்ளை அழைப்பின் போது நடந்தது என்றும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அதைக் கேட்ட பெண்ணின் பெற்றோர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்தது.

1973இல் பிப்ரவரி 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் பஸ் ஸ்டிரைக் வேறு. போக்குவரத்து இல்லை. அதனால் மிக நெருங்கிய உறவினர்கள் முன்பே வந்துவிட்டார்கள். மற்றவர்கள் ரயிலில் வந்துகொண்டு இருந்தார்கள் அவர்களை அழைக்க வேன், வாடகைக் கார் என்று ஏற்பாடு ஆகி இருந்தது.

வந்தவர்கள் எல்லாம் கேட்கும் கேள்வி - மாப்பிள்ளை வரவில்லையா? - என்பது தான். ஒரு வழியாக எல்லோர் பிரார்த்தனையின் பலனாய் நலமாக மாப்பிள்ளை வந்தார்.  வழியில் டயர் பழுது அடைந்து அதை மாற்றிவந்ததால் காலதாமதம். ( அந்தக்காலத்தில் 1973ல் நடந்த திருமணத்தில் மாப்பிள்ளை காலதாமதாய் வந்ததுபோல், 1997இல் நடந்த அவர்களின் மகளின் திருமணத்தின் போது மாப்பிள்ளை காலதாமதமாய் வந்தார்.  என்னே ஒற்றுமை! தஞசாவூரில் 1997-இல் பெரியகோயில் குடமுழுக்கு விழாவிற்கு முதல் நாள் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாய்ப் போக்குவரத்துப்பிரச்சினையால் அன்று அவர்கள் வருவது தாமதமானது. )

மாப்பிள்ளை வந்தார், மாப்பிள்ளை வந்தார். மாட்டு வண்டியிலே !
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!

என்று  அந்தக்காலப் பாட்டு உண்டு. அதுபோல் மாட்டு வண்டியில் வந்து இருந்தால் கூட வந்து இருக்கலாம் போல மாப்பிள்ளை.  அலங்கரித்த காரில் வந்தார் வந்தார் வந்தாரே!

மண்டபத்தின் அருகில் இருந்த பிள்ளயார் கோயிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு சிறப்பாக நடைபெற்றது.



மணமகன் வரவில்லை என்ற விபரம் எல்லாம் தெரியாமல் மணப்பெண் தன் அறையில் தன் மாமா பெண், அத்தை பெண், தன் பெரியப்பா, சித்தப்பா பெண்கள், அண்ணன், தம்பிகளுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருந்தாள்.

இன்று போல் அன்று மாப்பிள்ளை , பெண் சேர்ந்து அமர்ந்து வரவேற்பு நடக்காது . மாப்பிள்ளை அழைப்பின்போது  பெண் ஒளிந்து இருந்துதான் மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் .

மறுநாள்   மணமேடையில் எதிர் எதிராக  ஆசனம் போட்டு இருப்பார்கள். அதில் பெண்ணையும் , மாப்பிள்ளையையும் அமர வைத்து இருப்பார்கள். அப்போதுதான் இருவரும் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது பெண் ஊஞ்சலில் இருப்பாள், அப்போது மணமகன் பார்த்துக் கொள்வார்.

அப்புறம் மோதிரம் மாற்றி, மாலை மாற்றி - பின் தான் திருமணம்.

அந்த மணமக்கள் யார் என்று தெரிந்ததா?  தெரியவில்லையா? அவர்கள் நாங்கள் தான்.  எங்களுக்குத்தான் பிப்ரவரி 7-இல் திருமணம் ஆனது.
மோதிரம் மாற்றல்

 1973ஆம்  வருடம் பிப்ரவரி 6 ஆம்  தேதி !
மாப்பிள்ளை அழைப்பு இப்படியாக நடந்தது.

அன்றைய தினம்  நடந்த  வேறு சில நாட்டுநடப்புகள் - சுதேசமித்திரன் நாளிதழில் இருந்து:-      (40 ஆண்டுகளுக்கு முந்தைய நாளிதழ்)



(இப்போது சுதேசமித்திரன் வருவதில்லை)

எங்கள் திருமணத்தின்போது தங்கத்தின் விலை என்ன தெரியுமா?

1 கிராம் தங்கத்தின் விலை- ரூ25.25பை
அதாவது ஒரு பவுன் (22 காரட்) =ரூ202


வேறு செய்திகள்:-

மத்திய மந்திரிசபை விஸ்தரிப்பு




அப்போதும் தமிழகத்தில் மின்வெட்டு.
ஆலைத்தொழிலதிபர்களின் யோசனையைப் படித்துப்பாருங்கள்



அப்போதும் தெலுங்கானாப் போராட்டம்:-



அன்றைய ரேடியோ நிகழ்ச்சிகள்:-






சென்னையில் அன்று நடந்த சினிமாக்கள்:-




சுதேசமித்திரன் பதிப்பு நூல்கள் பற்றிய விளம்பரம்:-


வாழ்க வளமுடன்!
-------------

விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை!

$
0
0
                       விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
                      விளக்கினின் முன்னே வேதனை மாறும்
                      விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
                      விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.
                                                                                        -- திருமந்திரம். 1818.

தினமும் தான் விளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறோம். வெள்ளி என்றால் இன்னும் கொஞ்சம் விசேஷம். அதுவும் தைவெள்ளி, ஆடிவெள்ளி என்றால் மிக விசேஷம் கோவில்களில். வீடுகளிலும் வெள்ளி என்றால் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்வது, விளக்கு பூஜை செய்வது என்று இருக்கும்.

  என் அம்மாவுக்கு எல்லா வெள்ளிக்கிழமையும் விசேஷம் தான். . ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விளக்கு பூஜையில் லட்சுமி அஷ்டோத்திரம், விளக்கு போற்றி, துளசிமாதா ஸ்லோகம், திருவிளக்கு அர்ச்சனை எல்லாம் செய்யவேண்டும் - அதுவும் காலையில்.  முதலில் என் அக்கா - அக்காவுக்கு திருமணம் ஆனவுடன் - அடுத்து நான். எனக்குப் பிறகு என் தங்கைகள் செய்தார்கள். சிறுமியாக இருந்தபோது அதன் முக்கியத்துவம் தெரியவில்லை, அப்போது எல்லாம் அன்றைய நாளில் வரும் விகடனைப் படிக்கமுடியவில்லையே என்றுதான் இருக்கும். சீக்கிரம் பூஜை முடிக்க வேண்டும், விகடன் படிக்க வேண்டும் என்ற ஆவலை அடக்க முடியாது. ஆனால் இப்போது அம்மா சொல்லிக்கொடுத்த விளக்கு பூஜையின்  அருமையை  உணர்ந்தவள்.


 


எங்கள் குடும்பங்களில் பெண் கல்யாணத்திற்கு கொடுக்கும், வெள்ளிக்குத்து விளக்கு, வெண்கலக்குத்து விளக்கைப் புகுந்த வீட்டுக்குப் போனபின் முதல் முதலில் ஏற்றும்போது அதற்கு வடைமாலை சார்த்தி, பாயசம் வைத்து வணங்க வேண்டும்.  முன்பு எல்லாம் தினமும் விளக்கை விளக்கி அதற்கு பொட்டு வைத்து வணங்க வேண்டும். காலம் செல்லச்செல்ல, திங்கள்கிழமை, வியாழக்கிழமை மட்டும் விளக்குவது  வழக்கம் ஆகிவிட்டது.


தை கடைவெள்ளி அன்று (7/2/2014)எங்கள் ஊரில் உள்ள அருள்மிகு சாந்தநாயகி உடனுறை புனுகீஸ்வரர் கோயிலில் லட்சதீபம் நடைபெற்றது. கடந்த 20 வருடங்களாக நடத்தி வருகிறார்கள்.   இதனை   நடத்துபவர்கள்: - ஸ்ரீபுனுகீஸ்வரர் ஆலய உழவாரப் பணி மன்றம், சிவனடியார் திருக்கூட்டம், இந்துசமய தத்துவ விசாரணை மையம், மற்றும் ஸ்ரீபுனுகீஸ்வரர் ஆலயநிர்வாகம்.

வருடாவருடம் அதில் என் கணவர் திருவிளக்கு வழிபாட்டைப்பற்றிப் பேசுவார்கள். இறைவன் அருளால் 20 வருடங்களாகத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். புனுகீஸ்வரகோவிலில் நடக்கும் வார வழிபாட்டு மன்றம் நடத்தும் ஆண்டுவிழாவிலும் 30 வருடமாய் பேசிவருகிறார்கள். 

அன்று திருக்கயிலை பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குருமகா
சந்நிதானம் வந்து விளக்கேற்றி துவக்கி வைப்பார்கள். இந்த முறை
திருவாவடுதுறை தம்பிரான் சுவாமிகள் வந்து விளக்கேற்றி அருளுரை வழங்கினார்.

                                    

                                     
                                    
                                      

 கொடிமரத்திற்கு நேரே அழகாய்ப் பெரிய குத்துவிளக்கு
அலங்கரிக்கப்பட்டு இருந்தது அநத விளக்கை முதலில் ஏற்றி
இலட்சதீபத்தை  தம்பிரான் சுவாமிகள் துவக்கி வைக்க , கோவில் முழுவதும் மக்கள் ஆண்கள், பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் விளக்கு ஏற்றத்
தொடங்கினர்.சுமார் ஒருமணி நேரத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு, கோவில்

முழுவதும் ஜெகஜோதியாய் காட்சி அளித்தது.

எப்படி விளக்கு ஏற்றவேண்டும், எந்த உலோகங்களில் ஏற்றினால் நல்லது
என்ன எண்ணெய் ஊற்றி ஏற்றினால் நல்லது.  விளக்கை எப்படி துலக்குவது என்று எல்லாம் பேசினார்கள், பெரியபுராணத்தில் விளக்கு ஏற்றுவதால் ஏற்படும்நன்மைகளைக் கூறும் பாடல்கள், திருமந்திரத்தில் உள்ள பாடல்கள் என்றும்,பேசினார்கள் அதன் பின்  பேராசிரியர் பெருமக்கள் பேசினார்கள். முதலில்பேசிய பேராசிரியர் என் கணவர்.

                               

கோவிலில் விதவிதமாய்க் கோலங்கள் போட்டிருந்தார்கள் பெண்கள்.
தெய்வ உருவங்களை அழகாய் வரைந்து, அதைச் சுற்றிலும் விளக்கு வைத்து
இருந்தார்கள்.
                           
     

                                     

                                                                                                                            

                            
                                       

                                     

                                     
                                     
                                         

மக்களை மாலை நேரம்  கோவிலுக்கு வரவழைக்க இது போன்ற விழாக்களால் தான் முடியும் போல்! அவ்வளவு மக்கள் கூட்டம்.  விளக்கு எரிக்க எண்ணெய் இல்லாமல் எவ்வளவு கோவில் இருள் அடைந்து கிடக்கிறது. அங்கு எல்லாம் இப்படி இலட்சதீபம் ஏற்ற வாரீர் என்று போட்டு எண்ணெயை வாங்கிச் சேமித்து வைத்தால் ஆண்டு முழுவதும் ஏற்றலாம்.


(’தீபத் திருநாள் திருக்கார்த்திகை’ என்ற பதிவில்  திருவிளக்குப்பாடல்கள்,
நாயன்மார்களும், ஆழவார்களும், நம் முன்னோர்களும் பாடிய பாடல்கள்
தொகுப்பு உள்ளது.

ஜோதி வழிபாடு’என்ற பதிவில் விளக்கேற்றி அற்புதம் புரிந்தவர்களைப் பற்றிக்
குறிப்பிட்டு இருக்கிறேன். படிக்காதவர்கள் படித்துப்பார்த்து உங்கள்
கருத்துக்களை சொன்னால் மகிழ்வேன்.)
                                                        
குருக்கள் சாந்தநாயகிக்கு அழகாய் சந்தனக்காப்பு அலங்காரம் செய்து
இருந்தார்.

                                           

                                              புனுகு பூனை பூஜித்த புனுகீஸ்வரர்.

கோவில் கோபுரம் எல்லாம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அன்று நடந்த விழா சிறப்பு படங்கள் உங்கள் பார்வைக்கு:
 
     




அக இருளை விலக்கி, அங்கு ஒளி பொருந்திய இறைவனைக்
குடியேற்றினால் வாழ்வில் வளம் பெருகும்.

                                                                   வாழ்க வளமுடன்.
                                                                              ------------


காஞ்சி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

$
0
0
   


காஞ்சி விநாயகர் விமானம்

கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். பழைய கோவில்களைப்  பழமை மாறாமல் கும்பாபிஷேகம் செய்யலாம்.  அப்படி ஒரு சில கோவில்கள் தான்  பழமை மாறாமல் இருக்கிறது.

நம் வீடுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளை அடித்து பழுது அடைந்தவைகளை சரி செய்வது போல் கோவில்களுக்கும் 12 ஆண்டுக்கு ஒருமுறை  தெய்வசிலைகளுக்கு கீழ் உள்ள மருந்துகளைப் புதிதாக வைத்து, கலசங்களில் உள்ள தானியங்களை மாற்றி, கோபுரங்களில் உள்ள புல், செடிகளை களைந்து சுத்தம் செய்து மீண்டும் தெய்வங்களுக்கு  ஹோமம் எல்லாம் செய்து, சக்தியை மேம்படுத்துவது என்பார்கள் கும்பாபிஷேகத்தை.

எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள காஞ்சி விநாயகருக்கு 9 ம் தேதி கும்பாபிஷேகம் ஆனது.  6 -ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, , கணபதி ஹோமம், நவகிரஹக ஹோமம்,கோபூஜை,  கஜபூஜை, தன் பூஜை எல்லாம் நடைபெற்றது. 7 -ம் தேதி , 8 -தேதிகளில் தினம் யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்று 9-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் ஆனது.

                         
  யாகசாலையில்தங்ககவசத்தில்காஞ்சிவிநாயகரின் கடம் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.
                           
                          
                                                                    யாகசாலை
                          
                                                  யாகசாலையில்  பூஜை
                          
                       மருந்து வெண்ணெயுடன் சேர்த்து இடிக்கப்படுகிறது.
                             
யாகசாலையிலிருந்து மூலஸ்தான விநாயகருக்கு சக்தி ஊட்டப்படுகிறது.
                             
                                     யாகசாலை பூஜை நிறைவு பெறுகிறது
                           
                               விநாயகமூர்த்தி கடத்திற்கு பூஜை நடக்கிறது.
                              
                                                        கடம் புறப்பாடு
                            
                                  விநாயகர் விமானகலசத்திற்கு அபிஷேகம்
                            
                                    முன் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம்

கோவில் வரலாறு:

முன்பு ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் சைவ மரபில் தோன்றிய சாலிய பெருமக்கள் நெசவுத் தொழிலை முதன்மையாகக் கொண்டு வணிகம் செய்து வளமுடன் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் அவ்வூரை ஆண்ட மன்னனின் தீய எண்ணங்கண்டு , படையெடுப்புக்கு அஞ்சிய சாலிய மக்கள் ஒன்று கூடி காஞ்சிபுரத்தை விட்டு வேளியேற என்னும் போது அவர்கள் வணங்கி வந்த விநாயகர் பெருமான் தன்னையும் தங்களோடு அழைத்து செல்லுமாறு அவர்கள் கனவில் தோன்றி அசரீரி கூற்று மூலம் கூறவே அவர்களும் அவ்வூரைவிட்டு கிளம்பும் போது அவ்விநாயகர் பெருமானையும் தலையில் சுமந்து கொண்டு வந்தனர். வரும் வழியில் ஒருநாள் ஓரிடத்தில் இரவு விநாயகரை இறக்கி வைத்து விட்டுத் தங்கி மறுநாள் புறப்படும்போது விநாயகரை தூக்க முயன்ற போது அவ்விநாயகரை அசைக்க முடியவில்லை. விநாயகப்பெருமானே தமக்கென்று அவ்விடத்தைத்  தேர்வு செய்து கொண்டு ஸ்தாபிதம் ஆகி விட்டார். அந்த இடத்திலேயே சாலியப்பெருமக்கள் ஒன்று கூடி விநாயகருக்கு ஆலயம் எழுப்பி வணங்கி வந்தனர். (அந்த இடம் தான் தற்போது  மயிலாடுதுறை , கூறைநாடு பெரியசாலிய தெருவில் உள்ள ஸ்ரீ காஞ்சி விநாயகர் ஆலயம் ஆகும்,) 

சாலிய பெருமக்கள் ஆலயத்தை சுற்றிலும் தங்களுக்கு வீடு அமைத்துக் கொண்டு குடி அமர்ந்தனர். அந்த இடத்திலேயே சாலியபெருமக்கள் குலத்தொழிலான நெசவுத் தொழில் செய்து கூறைச் சேலைகளை உருவாக்கி வணிகம் செய்து பொருள் ஈட்டி சிறப்புடன் வாழ்ந்து வந்தனர் என்று வரலாற்று சான்றுகள் கூறுகிறது.

63 நாயன்மார்களில் ஒருவரான சிவநேசநாயனார் என்பவர் சாலிய குலத்திலே தோன்றியவர். இவர் சிரத்தையுடன் சிவத்தொண்டு புரிந்தவர். இவர் வழியில் வந்த சாலிய சமூகத்தினர்களுக்குச் சொந்தமான இவ் விநாயகர் காஞ்சிபுரத்திலிருந்து இங்கு வந்து கோயில் கொண்டுள்ளதால் ஸ்ரீ காஞ்சி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

-இதற்கு முன்பு நான் பகிர்ந்து கொண்ட
 ’விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை’ என்ற  பதிவில் இட்சதீபம் நடந்த  புனுகீஸ்வரர் கோவிலைப் பற்றி  சொன்னேன் அல்லவா? அதுவும் இவர்கள் கோயில் தான். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோயில் 1883 -ம் வருடம்  சிவநேசநாயனார் மரபு வழி வந்த கூறைநாடு சாலிய மகா சமூகத்தால் திருக்குடமுழுக்கு செய்யப்பட்டது என்று புனுகீஸ்வரர் கோவிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

 ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்லாரி மாவட்டத்தில் காம்பீலி வட்டம் காம்பீலி நகரத்தில் தோன்றிய நேசநாயனார் சாலிய மரபில் வந்தவர். சிவனையும் சிவ அடியார்களை நேசித்தபடியால் இவர் சிவநேசநாயனார் என்று அழைக்கப்பட்டார். அவர் புனுகீஸ்வரர் கோவிலில் காம்பீலியிலிருந்து எடுத்து வந்த விநாயகரையும், தண்டாயுதபாணியையும் பிரதிட்டை செய்தார் என சொல்லப்படுகிறது. ஆண்டு தோறும் பங்குனி ரோகிணியில் நேசநாயனாருக்கு இவர்கள் சிறப்பாக் குருபூஜை செய்கிறார்கள்.

சாலியர்களுக்கு சொந்தமான கோவில்கள்: 

1.முதன்மையான் கோவில் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வந்த விநாயகர் கோவில் ஸ்ரீ காஞ்சி விநாயகர் ஆலயம்
2.கீழஒத்தசரகு சித்தி புத்தி விநாயகர்
3.வடக்கு சாலிய தெரு ஸ்ரீ செல்வவிநாயகர்
4செங்கழுநீர் விநாயகர் ஆலயம்
5.ஸ்ரீ வெள்ளதாங்கி அய்யனார் ஆலயம்
6.கல்லக்குறிச்சி ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்
7.காவிரிக்கரை காசி விஸ்வநாதர் ஆலயம் (கூறைநாடு)
8.குருக்கள் பண்டாரத்தெரு, ஸ்ரீ கனக மாரியம்மன் ஆலயம்
9. தனியூர் சாலியதெரு தாமோதர விநாயகர் ஆலயம்
10. தெற்கு சாலியதெரு ஸ்ரீ வெற்றி விநாயகர்.

ஆண்டு தோறும் எல்லாக் கோயில்களிலும் விழாக்கள் நடக்கும்.


  காஞ்சி விநாயகர் கோவில் உட் பிரகாரத்தில் வரையப் பட்ட படங்கள்.
சிவக்குடும்பம்

வியாசபாரதம் எழுதும் பிள்ளையார்

அகத்தியரின்  கமண்டலத்தைக் கவிழ்க்கும் காக்கைப் பிள்ளையார்
ஒளவையிடம் மெதுவாய் நிதானமாய் பூஜை செய், உன்னைக் கயிலைக்கு என் துதிக்கையில் கொண்டு விடுகிறேன் என்று சொல்லும் பிள்ளையார்.

ஒளவையார் அருளிய அகவல்
கோயிலுக்குள் மேல் கூரையில் 63 நாயன்மார்கள் ஓவியம்.
மூன்று நாட்களும் தேவார இன்னிசைக் கச்சேரி சிறப்பாக நடந்தது. சிவக்குமார் ஓதுவார் குழுவினரால்.

மயிலாடுதுறை வந்ததிலிருந்து இந்த கோவில்களும் இந்த சமூகத்தை சேர்ந்த மக்களும் எங்கள் வாழ்க்கையில்  ஒரு அங்கமாய் விட்டனர். எங்களுக்கு, எங்கள் குழந்தைகளுக்கு எங்கள் பேரக்குழந்தைகளுக்கு என்று மூன்று தலைமுறை தொடர்ந்து இவர்களின் நட்பு நீடிக்கிறது. 

                                                                 வாழ்க வளமுடன்!


Viewing all 789 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>