Quantcast
Channel: திருமதி பக்கங்கள்
Viewing all 789 articles
Browse latest View live

சிக்கு புக்கு ரயிலே ரயிலே !

$
0
0
ரயில் விளையாட்டு விளையாடாத குழந்தை உண்டா? (நாமும் அந்த விளையாட்டு விளையாடி இருக்கிறோம் இல்லையா?) ரயில் எல்லோருக்கும் பிடித்த ஒன்று. பூங்காவில் குழந்தைகள் ரயிலில் பெரியவர்களும் சந்தோஷமாக பயணம் செய்வர். ரயிலில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு இயற்கையை ரசிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று.

என் கணவருக்கு  அவர்கள் பள்ளி விடுமுறையில் தென்காசியில் இருக்கும் தங்கள் அத்தையின் வீட்டுக்கு செல்வார்களாம். ரயில் நிலையம் அருகில் தான் அத்தை வீடு. அவர்கள் அத்தைக்கு அந்த ஊர்மக்கள் கொடுத்த பட்ட பெயர் ரயிலடி அத்தை,  ரயிலடிஆச்சி என்பது.  (அடையாளப் பெயர்)

 அவர்களின் அன்பைப் பற்றி தனிப் பதிவு போட வேண்டும்.

ரயிலைப் பார்ப்பது மிகவும் பிடித்த பொழுதுபோக்காம், அத்தையின் உறவினர் வீடு, சினிமா, குற்றாலம் என்று அழைத்து சென்று வந்த நேரம் போக ரயிலை ரசிப்பார்களாம்.

அமெரிக்கா போய் இருந்த சமயம்  என் மகன் பொழுதுபோக வேண்டுமே அப்பாவிற்கு என்று ஏதாவது வரையுங்கள் அப்பா என்றான்.  கான்வாஸில்
ஆயில் பெயிண்ட். செய்ய எல்லாம் வாங்கி தந்தான். இவர்கள் வரைந்த ஓவியம் என்ன தெரியுமா? அத்தைவீட்டிலிருந்து ரயில் நிலையத்தைப் பார்த்தகாட்சி தான். தன் மனதில் பசுமையாகப் பதிந்த காட்சியை வரைந்தார்கள்.

         
அத்தை வீட்டிலிருந்து ரயில் நிலையத்தின் காட்சி(1962 ல் இருந்தபடி)
                                                  கான்வாஸ் ஓவியம்     (21"x17")




                                   

நாங்கள் அமெரிக்காவில் பயணம் செய்த பழைய காலத்து ரயிலைப் பற்றி (விண்டேஜ் ரயில்!)இந்த பதிவு.
பழமைக் காலம் போலவே இந்த ரயில் நீராவி எஞ்சினால் இயக்கப்படுகிறது.
ரயில் நிலையம் பென்சில்வேனியாவில் வில்மிங்டன் என்ற இடத்தில் இருக்கிறது.

ரயில் நிலையம் மிகப் பழமையானது. 1915 இலிருந்து இந்த ரயில் நிலையம் இருக்கிறது. நடைபாதை, டிக்கட் கொடுக்கும் இடம் எல்லாம், அப்படியே இருக்கிறது பழமை மாறாமல்.  ரயில் டிக்கட் நாங்கள் இணையம் மூலம் முன் பதிவு செய்து கொண்டோம்., இங்கு போட்டோ ஸ்டியோ, ரயில் பொம்மை கடைகள் உள்ளன.

ரயிலில் தனித் தனியாக டிக்கட் எடுத்துக் கொள்ளலாம். ஒரு குடும்பம் முழுவதற்கும் எடுத்துக் கொள்ளலாம். முன்பே முன் பதிவு செய்து கொள்ளலாம்.

நாங்கள் சென்று இருந்த போது ஒரு குடும்பம் தங்கள் மகனின் பிறந்தநாளை கொண்டாடினார்கள். இரண்டு பெட்டிகளை அதற்கு எடுத்துக் கொண்டார்கள்.
தாத்தா, பாட்டி, மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என்று அந்த பையனின் பிறந்தநாளை கொண்டாடியதை பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுத்தியது.
நம் நாட்டைப் போல் அங்கும் குடும்ப உறவினர்களுடன் இன்பமாய் நேரத்தை
செலவிடுகிறார்கள்.





செம்டம்பர்  7, 8 தேதிகளில் இந்த ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு போர் காட்சி நடத்திக் காட்டப்படுகிறது.

மூன்று நாட்கள் விஷேசமாக சொல்லப்படுகிறது. ”ஈஸ்டர் பன்னி”  ஏப்ரல் மாதம் இயக்கப்படுகிறது.
இன்னொன்று ”டே அவுட் வித் தாமஸ்” என்று சொல்லப்படுகிறது. சில குறிப்பிட்ட நாட்களில்  மட்டும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
                                      
                         ரயில் மியூசியத்தில் தாமஸ் ரயில் மாதிரி அலமாரி

எல்லா சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களினாலும், குறிப்பிட்ட வெள்ளிக் கிழமைகளிலும் ரயில் இயக்கப்படுகிறது.

இதில் பணிபுரிபவர்கள் எல்லாம் தன்னார்வத் தொண்டர்கள். பொதுமக்களும் இதில் கலந்து கொள்ளலாம். இதில் வயதானவர்கள் நிறைய பேர் பணிபுரிந்தார்கள். மகிழ்ச்சியாக நம்மை வரவேற்று மகிழ்ச்சி அலையை நம்மைச் சுற்றிப் பரவவிடுகிறார்கள்.

                                                   
                                                      

இந்த ரயிலில் போகும் போது மிக அழகான பண்ணை வீடுகள், வயல்கள், ஆகியவற்றை ரசிக்கலாம்.
இங்குள்ள 1000 க்கும் மேலே உள்ள விவசாய நிலங்களை குதிரைகளைக் கொண்டு உழுவார்களாம். நாங்கள் போகும் போது அறுவடை முடிந்து வைக்கோல்கள் அழகாய் கட்டம் கட்டமாய் அடுக்கி வைத்து இருந்த காட்சியைக் கண்டோம்.





                                             
இயற்கைக் காட்சிகள், மற்றும்  நீரைத் தேக்கி வைத்து திறந்துவிடும்  மதகு எல்லாம் மிக அழகாய் இருக்கும். அங்கு சிறிது நேரம் அமர்ந்து இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். பிறகு ரயிலில் ஏறி மறுபடியும் நாம்  பழைய இடத்திற்கு வந்துவிடலாம்.
                                
45 நிமிசம் பயணம் . ஈஸ்ட் ஸ்டிராபர்க் ஸ்டேஷனிலிருந்து பாரடைஸ் என்ற இடம் வரை அழைத்துப் போகிறார்கள்.மீண்டும் திரும்பிக் கொண்டுவந்து புறப்பட்ட இடத்திலேயே விட்டுவிடுகிறார்கள்.

                                                    








ரயில் மியூசியத்தில்--நம்முடைய முகத்தை இந்த ஓவியத்தில் பொருத்திப்பார்க்கலாம்.




ரயிலில் போகும் போது கீழே  இருப்பவர்கள் மகிழ்ச்சியாக கை ஆட்டுகிறார்கள். 
டிக்கட் சரி பார்க்கிறார்
ரயிலில் தண்ணீர், சாக்லேட் விற்பனையும் உண்டு





வாழ்க வளமுடன்!
--------------

உறவுகள் - என்றும் தொடர்கதையே!

$
0
0
குடும்ப உறவுகள் பற்றி நிறைய பேசி இருந்தார்  உறவுகள்என்ற தன் பதிவில் திரு. ஜி.எம் .பாலசுப்பிரமணியம் சார். குடும்ப உறவுகளைப் பற்றி பெண்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று வேறு சொல்லி எங்களை அழைத்து இருக்கிறார்.

பேணுவது பெண். உறவுகளைக் காலம் காலமாய்ப் பேணி வருவது பெண் தான்.அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.  நடைமுறை வேறு,  அறிவுரை சொல்வது வேறு  என்று இல்லாமல்  குடும்பத்தில் பெரியோர் நடந்து காட்டிய பாதையில் நடந்து வருகிறோம்.
என் அப்பா குடும்பம் பெரிய குடும்பம்.  அண்ணன் தம்பிகள் எட்டு பேர், அக்காள், தங்கை மூன்று பேர்.  என் பெற்றோர்கள் அவர்களுடன் நல்லுறவுடன் இருந்து வந்தார்கள். இன்றும் என் தாய் தந்தையர் மறைந்த பின்னும் அப்பாவழி சொந்தங்கள் வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். நல்லது கெட்டதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். நாங்களும்  கலந்து கொள்கிறோம்.

என் அம்மா குடும்பம்   நான்கு பேர் அதில் , பெரியம்மா, பெரியமாமா எல்லாம் சிறு வயதில் நாங்கள் பிறக்கும் முன்பே இறந்து விட்டார்கள்.  பெரியமாமாவின் குழந்தைகளை என் அம்மாவும், சின்ன மாமாவும் பார்த்துக் கொண்டார்கள். சின்ன மாமா   இன்றும் எங்கள் குடும்பத்திற்கு உறவாய்  இருக்கிறார்கள். அவர்கள்  தன் அக்காளின் பேரக்குழந்தைகளின் கல்யாணத்திற்கும் திருவனந்தபுரத்திலிருந்து வந்து மகிழ்ச்சியாக கலந்து கொள்கிறார்கள். மாமாவின் மகள், மகள் வயிற்றுப் பிள்ளைகள் எல்லோரும் நட்புறவாய் இருக்கிறோம்.

முன்பு கடிதப் போக்குவரத்து , தொலைபேசி,  இப்போது விஞ்ஞானம் தந்த அருட் கொடையால், ஸ்கைப், வாட்ஸப்பில் உறவுகள் இன்னும் பலப்படுகிறது.   அப்பாவழி சொந்தங்களுக்கு ஒரு குரூப், அம்மாவழி சொந்தங்களுக்கு ஒரு குரூப் அமைத்துக் கொண்டு அவர்களிடம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறோம்.

எங்கள் பிள்ளைகளும் வெளி மாநிலத்திலும், வெளிநாட்டில் இருந்தாலும் அவர்களும் தங்கள் பெரியப்பா, சித்தப்பா, மாமா, சித்திகளுடனும், அவர்கள் குழந்தைகளுடனும் உறவாடி வருகிறார்கள். அவர்கள் வீட்டுத் திருமணங்களுக்கு வந்து செல்கிறார்கள். அவர்களும் வாட்ஸப்பில் குரூப் அமைத்துப் பேசிவருகிறார்கள். அவர்கள் ஊர்களுக்கு வரும் போது முடிந்தவரை அனைவரது வீட்டுக்கும் சென்று நலம் விசாரிக்கிறார்கள். அவர்கள் வரும் போது நடக்கும் விழாக்களில் கலந்து கொள்கிறர்கள். இதற்கு மேல் அவர்களிடம் நாம் எதிர்பார்க்கக் கூடாது.

என் கணவரின் கூடப்பிறந்தவர்கள் எல்லோரும் ஆண்கள் தான், ஆனால் சின்னமாமனார் வீட்டுப் பெண்குழந்தைகள் (நாத்தனார்)  அவர்களுடன் நல் உறவுடன் இருக்கிறோம்.  என் பிள்ளைகளும் சின்னதாத்தா வீட்டு பிள்ளைகள் சித்தப்பாக்கள், அத்தைகளுடன்  அவர்கள் பிள்ளைகளுடன் உறவாடி மகிழ்கிறார்கள்.

என் உடன்பிறந்தவர்கள் அக்கா, அண்ணன், தம்பி, தங்கைகள் என்று பெரிய குடும்பம். அவர்களுடன் நல் உறவுடன்  இருக்கிறோம்.

என் அம்மா சொல்வார்கள், முன் ஏர் போகும் பாதையில் பின் ஏர் போகும் என்று. நாம் எப்படியோ அப்படித்தான் நம் பிள்ளைகள் இருப்பார்கள்.
ஏர் பத்தி தெரியாதவர்களுக்கு இப்போது அடிக்கடி சொல்லும் வார்த்தை பெற்றோர்கள் ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்று.

 எங்கள் அப்பாவின்  வீட்டில் எல்லோரும் அரசாங்க உத்தியோகம், காவல்துறை, சுங்கதுறை, வக்கீல்கள்,என்று.  தாத்தாவும் காவல்துறையில்
உயர்பதவியிலிருந்து ஓய்வு பெற்று இறைவனடி சேர்ந்தார்கள்.  எல்லோரும் வேறு வேறு ஊர்களில் தான். சின்னப்பெரியப்பா மட்டும் சொந்தத் தொழில் என்பதால்  பாட்டியுடன் இருந்தார்கள். பாட்டி சாகும் வரை மகிழ்ச்சியாக எல்லா மகன் வீட்டுக்கும் வந்து போய்க்கொண்டு இருந்தார்கள். என் சித்தப்பாவீட்டில் இருந்தபோது  பாட்டி இறந்து போனார்கள்.

என்  மாமனார் .மாமியாருக்கு ஐந்து மகன்கள் . எல்லோரும் வெவ்வேறு ஊரில் வேலை பார்க்கிறார்கள். நாள் கிழமைகளில் எல்லோரும் மாமியார் வீட்டில் கூடிப் பண்டிகைகளையும்  கொண்டாடி மகிழ்வோம். இப்போது மாமனார் தன் 105 ஆவது வயதில் இறந்து போனார்கள் அத்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அனைவரும் மாற்றி  மாற்றிச் செய்து வருகிறோம்.

உறவுகள் பலப்பட முன்னோர் செய்த ஏற்பாடுகள்:-

ஒரு திருமணம் என்றால் மணப்பெண்ணின் சகோதரனுக்கு, மணமகனின் சகோதரிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எங்கள் பக்க வழக்கத்தின்படி  பெண்ணின் நாத்தனார்க்குச் சடங்குகளில் முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது, கல்யாணத்திற்கு முன் செய்யும் சடங்கிலும், திருமணத்திற்கு பெண்ணுக்கு முகூர்த்தப்புடவை கட்டி விடுவது , மூன்று முடிச்சில் ஒரு முடிச்சு போடுவது, அதன் பின் வரும் அனைத்து சடங்கிலும் அவள் பங்கு பெரிது.
சொந்தநாத்தனார் இல்லையென்றாலும், சின்னமாமனார் அல்லது பெரியமாமனாரின் பெண் அந்த சடங்குகளுக்கு வருவாள். மறுநாள் அவளுக்கு ’நாத்தனார் பலகாரம்’ என்று  தனியாகக் கொடுக்கப்படும். ஒவ்வொரு சடங்கையும் அவள் செய்யும் போது அவளுக்கு ’நாத்தனார் சுருள்’ என்று பெண்வீட்டாரால் பணம்  கொடுக்கப்படும்.

அது போல்  பெண்ணின் சகோதரனுக்கு மாப்பிள்ளை அழைத்து வருவது, கல்யாணப் பந்தலில் பொரி இடுவது, மற்றும் இரவு  நலுங்கு வைப்பது,மாப்பிள்ளைக்கு  மோதிரம் போடுவது என்ற சடங்குகள் உண்டு, அதற்கு மாப்பிள்ளை வீட்டில் துணிமணிகொடுத்து  மோதிரம் போடுவார்கள்.  பெண்ணிற்கு  உடன்பிறந்தவன் இல்லையென்றால், பெண்ணின் சித்தப்பா, பெரியப்பா  பிள்ளைகள் உதவுவார்கள். இதற்கு குடும்பம் ஒற்றுமையாக இருந்தால் தான் முடியும்.

அடுத்து,  குழந்தைப் பேறு.  இதில் முதல் உரிமை கணவனின்  சகோதரிக்கு. குழந்தைக்கு அத்தை காப்பிடவேண்டும். அப்புறம் தான் மற்ற உறவுகள் நகை அணிவிப்பார்கள்.

அதற்கு அடுத்து மொட்டையடித்து காது குத்துதல் . அதற்குப் பெண்ணின் சகோதரனுக்கு முதல் உரிமை.  அவனுடைய  மடியில் அமர்த்தித்தான் மொட்டையடித்தல், காது குத்துதல்.  அவனுக்குத்தான் முதல்மரியாதை. அப்புறம் தான் மற்றவர்கள்.

பின்.  பெண்குழந்தை பூப்பு அடையும் போது, கணவனின் சகோதரி முதல் தண்ணீர் விடுவாள், சடங்கின் போது மாமன் தரும் புடவை, அல்லது சிற்றாடையைத்  தான் முதலில் கட்டுவாள் . மாமன் சீர் முக்கியம். அத்தைமகள், அல்லது அத்தையை மாப்பிள்ளை மாதிரி பக்கத்தில் உட்கார்த்தி வைத்து  சடங்குகள் செய்வார்கள்.

பெண் பிறப்பு முதல் இறப்பு வரை இரு வீட்டு உறவுகளும் வேண்டும். அதன் படி தான் சடங்குகளை அமைத்து ஒற்றுமையாக இருக்க வைத்திருக்கிறார்கள். தன் அக்காள், தங்கைகளுக்கு பொங்கல், தீபாவளி , கார்த்திகை என்றும் செய்ய வேண்டும்.  அவளின் மாமனார், மாமியார் தவறிப் போனால் அவர்களுக்குச் சாவு வீட்டிலும் சடங்குகள் இருக்கிறது.  அவள் இறந்து போனாலும் பிறந்தவீட்டுக் கோடி போட்டபின் தான் மற்றவர்கள் போடலாம்.
இப்படிப் பிறப்பு முதல், இறப்பு வரை உறவுகளைப் பின்னிப் பிணைத்து வைத்தி ருக்கிறார்கள்.

நா. பார்த்தசாரதி அவர்கள்  ”வலம்புரிச்சங்கு” என்ற கதையை எழுதியிருக்கிறார், அந்தக் கதையில் கடலில் மூழ்கி  வலம்புரிச் சங்கு எடுப்பவர் ஆழமாக போகவேண்டும் .அதை எடுக்கப் போகும்
 ஆளின் வயிற்றில் கயிறைக் கட்டி கயிறின் மறுமுனையை மேல் இருக்கும்
 ஆளிடம் கொடுப்பார்களாம். அது யார் என்றால் சங்கு எடுக்கப்போயிருக்கும் ஆளின் மச்சினன் தான். தன் சகோதரியின் வாழ்வு அவன் கையில் தான் இருக்கிறது. சகோதரியின் வாழ்வை எண்ணி அவன் அதைப் பத்திரமாய் பிடித்துக்கொள்வான் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது.

விதிவிலக்குகள் இருக்கலாம், குடும்பத்தில் பகைமை பாராட்டிக் கொண்டு அண்ணன், தம்பி வரப்பு தகராறு, மாமன், மச்சான் சொத்து பிரச்சினை என்று
சகோதர சகோதரிகளுக்கு இடையில் உறவு சுமுகம் இல்லாமல்.  அதை ஏன் நாம் பேச வேண்டும்? அது மாதிரியான செய்திகள் மகாபாரத, இராமாயண காலத்திலும் உண்டு. ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் உறவுகளின் மேன்மையை புரிந்து கொள்வார்கள்.

இந்தக் காலத்தில் கூட்டுக் குடும்ப முறை சாத்தியம் இல்லை.  ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில் , ஒவ்வொரு நாட்டில் பணி நிமித்தமாய்
செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது.   நாள் கிழமைகளில் கூடிக் கொண்டு, நல்லது, கெட்டதுகளில் கலந்து கொண்டு அன்பாய் உறவாடி இருந்தாலே போதும்.

முதியோர்கள் தனியாகத்தான் இருக்க வேண்டி உள்ளது. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.  கூடவே தாய், தந்தையரை  வைத்துக் கொள்பவர்களாக  இருந்தாலும் இப்போது பெரும்பாலும் கணவன், மனைவி வேலைக்குப் போகிறார்கள். அவர்கள் தனியாக வீடுகளில் வயதான பெற்றோர்களை விட்டுப் போவதும் பாதுகாப்பற்றதாகும்.  அதற்கு அக்கம் பக்கத்தில் நல் உறவுடன் இருந்தால் பயமில்லை.இல்லையென்றால் அதுவும் பயம் தான்.

 எனக்குத் தெரிந்தவர் ஒருவர்  வசதியானவர், குழந்தைகள் உண்டு. ஆனால் மகளும், மருமகனும் வேலைக்குப் போகிறார்கள், பெரிய வீட்டில் தனியாக  இருக்க முடியாது என்று முதியோர் இல்லத்தில் சகல வசதிகளுடன் இருக்கிறார்கள். அவர்களை ஏன் இப்படி தனியாக இருக்க வேண்டும் ? என்று கேட்டால், ”தனியாக இல்லையே! நிறைய பேருடன் பயமில்லாமல் இருக்கிறேன், விடுமுறை நாளில் மகள் வந்து அழைத்து போவாள், அங்கு
 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக் இருந்து விட்டு பிறகு இங்கு வந்து விடுவேன் என்கிறார்கள்.  சில நேரங்களில் இது போன்ற புரிதலும் அவசியம்.

                                 

 கதம்பசரத்தில் கட்டப்படும்     ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு வாசனை உண்டு , தனித் தன்மை உண்டு.   அது போல் குடும்பம் ஒரு கதம்பம், ஒவ்வொரு மனிதர்களும் குணநலனில் வித்தியாசப்படுவார்கள். அவரவர்களுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. அப்படி எல்லோரையும் அன்பு என்ற நாரால் கட்டிவைக்க முயலவேண்டும். எல்லோரையும் அனுசரித்துக் கொண்டு , விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை  இருந்தால் குடும்ப உறவுகள் நலமாக இருக்கும்.

                                                         வாழ்க வளமுடன்.
                                                                    --------------

மார்கழி மாதமும் ,பாவை நோன்பும்

$
0
0


தமிழ் மொழியில் பாவைப் பிரபந்தங்கள் ஐந்துள்ளன. அவை 1. மணிவாசகர் அருளிய திருவெம்பாவை, 2. ஆண்டாள் அருளிய திருப்பாவை. 3.சமணமுனிவர் அருளிய பாவை
4.தத்துவராய சுவாமிகள் அருளிய பாவை இரண்டு. சமண முனிவர் அருளிய பாவை முழுநூல் கிடைக்க வில்லை. அதில் உள்ள பாட்டொன்று யாப்பருங்கல விருத்தி உரையில் இருக்கிறது. அந்தப்பாடல்:

“கோழியுங் கூவின குக்கி லழைத்தன
கோழியுங் கூவின குக்கி லழைத்தன
தாழியுணீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வைத் தறிவனடி யேத்திக்
கூழை நனைக் குடைந்து குளிர்புனல்
ஊழியுண் மன்னுவோ மென்றேலோ ரெம்பாவாய்”

திருப்பாவை வைணவர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. இது பாகவத வரலாற்றை ஒட்டி வருவது. கண்ணனை நாயகனாகப் பெறவேண்டும் என்ற வேட்கையும், நாடு செழிக்க மழை வேண்டும் என்ற விழைவும்,ஆக்கள் விருத்தியடைய வேண்டும் என்ற விருப்பமும் தன்னகத்தே கொண்டு மிளிர்வது இந்நூல். திருப்பாவையில் பாவை (மண்ணால்)அமைத்து வழிபாடு செய்யும் முறை குறிப்பிடப்படுகிறது. அதைக் காத்யாயனி விரதம் என்பார்கள்.

திருவாதவூரர் அருளிய திருவெம்பாவை, திருப்பெருந்துறையில் அருளப்பட்டது என திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் குறிக்கும்.திருவாதவூரடிகள் புராணம் அருளிய கடவுண்மா முனிவர் இதைத் திருவண்ணாமலையில் அருளியதாகக் கூறுகிறார். திருவாதவூரர் விருத்தியடைய வேண்டும் என்ற விருப்பமும் தன்னகத்தே கொண்டு மிளிர்வது இந்நூல். திருப்பாவையில் பாவை (மண்ணால்)அமைத்து வழிபாடு செய்யும் முறை குறிப்பிடப்படுகிறது. அதைக் காத்யாயனி விரதம் என்பார்கள்.

திருவாதவூரர் அருளிய திருவெம்பாவை, திருப்பெருந்துறையில் அருளப்பட்டது என திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் குறிக்கும்.திருவாதவூரடிகள் புராணம் அருளிய கடவுண்மா முனிவர் இதைத் திருவண்ணாமலையில் அருளியதாகக் கூறுகிறார்.

திருவாதவூரர் பாவையர்கள்  நீராடப்போவதைக் கண்டார்.அக்காட்சியின் பயனாக விளைந்தது திருவெம்பாவை என்னும் நூல் என்பார்கள்.

பாவையர் மழை வேண்டியும், நல்ல கணவரை அடைய வேண்டியும் பாவைப் பாடல்களைப் பாடினார்கள்.

மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்தால் மழை வளம் பெருகும். நல்ல இறை நம்பிக்கை உள்ள கணவன் கிடைப்பார். மழை வளம் இருந்தால் நாடு செழிப்பாய் இருக்கும். மக்கள் நலம் பெறுவர்.

நீராடுதல் தவமெனக் கருதப்படும். புற அழுக்கை நீக்குவது நீர், நம் அக அழுக்கை நீக்குவது இறைவன் திருநாமம்.

இளமை நோன்பில் மனதை நன்கு வைத்துக் கொண்டால் உடல் நலமாக இருக்கலாம். உடல் பிறக்கிறது, வளர்கிறது, நோய்வாய்ப்படுகிறது. ஆனால் உள்ளம் எந்நாளும் இளமையாக இருக்கலாம், உள்ளத்தைப் பண்பட்ட நிலையில் வைத்திருந்தால். தளர்வும் சோர்வும் சலிப்பும் இளமையைப் போக்கி முதுமையைத் தரும்.உறுதியும்,ஊக்கமும்,உழைப்பும் இளமையைப் பாதுகாக்கின்றன.

பாவை நோன்பில் காலையில் சுறுசுறுப்பாய் எழுந்து இறைவனைத் தொழுது பின் கடமைகளை ஆற்றும் போது உள்ளத்திற்குத் தளர்வு,சோர்வு,சலிப்பு இல்லை. உறுதியுடன்,ஊக்கத்துடன் உழைக்கும் போது உயர்வு நிச்சயம். இது ஆண் பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.

”சந்ததமும் இளமையோடு இருக்கலாம்,”- தாயுமானவர்.

மார்கழி மாதம் திருப்பாவை,திருவெம்பாவை பாடி உயர்வு பெறுவோம்.


வாழ்க வளமுடன்!
------------------------

வீரநாராயண ஏரியும் பறவைகளும்

$
0
0
ஆடிப்பெருக்குக்கு நாங்கள் வீரநாராயணபுர ஏரிக்குச் சென்றோம்.அங்கு  செல்ல கொள்ளிட ஆற்றின் தெற்கு ”லைன் கரை” வழியாக சென்றபோது இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே சென்றோம். இருபுறமும் அழகான மரம்,செடிகொடிகள்  இருந்தன.  கீழே இறங்கிப்  படம் எடுக்க முடியாது. பாதை மிகவும் குறுகலாக இருந்தது. பாதையின் ஒருபுறம் கொள்ளிடம்; இன்னொரு புறம் கொள்ளிட வாய்க்கால். எதிரில்  வேறு வாகனம் வந்தால் ஒதுங்க இடம் கிடையாது. 15கி.மீ தூரத்திற்கு அணைக்கரை வரை இப்படியாக பாதை இருந்தது.   
                     ஒருபுறம் கொள்ளிடம் வாய்க்கால் தூர் வாரப்படுகிறது.
                                                       மறுபுறம் கொள்ளிடம் 



 அப்படி இந்த பாதையில் போகும் போது என் கணவர், "அந்த பனைமரத்தை பார் !"என்றார்கள் பார்த்தால் அழகாய் தூக்கணாங்குருவி கூடு நிறைய தொங்கிக் கொண்டு இருந்தது. "கொஞ்சம் நிறுத்துங்களேன், கொஞ்சம் போட்டோ எடுத்துக் கொள்கிறேன்"என்றேன். "சீக்கிரம் எடு! கீழே இறங்காமல்.  எதிரில் வண்டி வருமுன் இந்த பாதையை கடக்க வேண்டும்"என்று அவர்கள் அவசரத்தில் இருந்தார்கள். அவசரம் அவசரமாய் போட்டோ எடுத்தேன். காற்றில் கூடுகள் பறந்து கொண்டே (ஊஞ்சல் ஆடுவது போல்) இருந்தது. போட்டோ எடுப்பது சிரமமாய் இருந்தது. குருவியும்  இந்த மரத்தில் இருந்தால் என்று நினைக்கும் போது ஒரு குருவி கூட்டிலிருந்து வேகமாய் பறந்து வந்து பனைமரத்தின் உச்சிக் கிளையில் நுனியில் அமர்ந்தது. அதுவும் காற்றில் ஊஞ்சல்  ஆடியது.


இந்தபடத்தில் முதலில் இருக்கும்கூடு முடியும் தருவாயில் உள்ளது. அடுத்தகூடு ஒரு அறை முடிந்து இருக்கிறது , அடுத்தகூடு இரண்டாவது அறைகட்டிக் கொண்டு இருக்கிறது.

பச்சைப்புற்களால் கட்டிய கூடு - இரண்டு வாசல் போல் இரண்டு துவாரம் இருக்கிறது பாருங்கள்.    அறைகள் வைத்து கட்டுகிறது போலும் தோற்றத்தை கொடுத்தாலும் ஒரு அறையில் முட்டையும் மற்றொரு அறை கூட்டுக்குள் போகும் பாதை.என்ன அழகாய் கட்டிக் கொண்டு இருக்கிறது! கடைசியில் நீண்ட குழாய் போன்ற அமைப்புடன் முடிகிறது கூட்டின் வாயில், பிற உயிரினங்களிடமிருந்து தன் குஞ்சை காப்பாற்ற அதற்கு அறிவை கொடுத்து இருக்கிறார் கடவுள். எதிரிகளை கண்டு அச்சம் அடைவதால் அவை கூட்டமாக அருகருகே  கூடுகள் கட்டிக் கொண்டு வாழுமாம்.

காய்ந்த கூடு மஞ்சளாக இருக்கிறது.  பனைமரத்தில் காய்க்காத மரம் பார்த்துக் கூடு கட்டும் போல இருக்கிறது.  இதில் காய்களே இல்லை.  மரத்தைப் பின்னிப் படர்ந்து இருக்கிறது ஒரு கொடி.

                               
கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் மூங்கில் மரத்திலும் தூக்கணாங்குருவிக் கூடு இருந்தது . கார் போய்க் கொண்டு இருக்கும் போது எடுத்தது . காற்றில் ஆடுகிறது மரம்.
                                            
முக்குளிப்பான் என்று சொல்லப்படும் பறவை முக்குளிக்கும் அழகை பாருங்கள். வீராணம் ஏரியில்.
வீரநாராயண ஏரியில் நீரின் அலைகள்   கடல்அலைகள் போல்  கரையில் வந்து மோதும் காட்சி,  -பறவைகளின் கூட்டம்.
                                          முக்குளிப்பான் பறவைகள்


எல்லோரும் சேர்ந்து செல்லும்போது நீ மட்டும் ஏன் தனியா போறே கண்ணம்மா ?

நாரையும் தன் கூட்டத்தை விட்டு வந்த காரணம் கேட்கப் போனாயா கண்ணம்மா? 
நாரைகள் அங்குள்ள மரங்களிலும் புற்களிலும் ஆற்றிலும் நிறைய அமர்ந்து இருந்தன.
அணைக்கரை செல்லும் சாலையில் வித்தியாசமான பறவை எதையோ கொத்திக் கொண்டு இருந்தது , கொஞ்சம் சிறு கோழிக் குஞ்சு போல் இருந்தது . என்ன பறவை என்று  இணையத்தில் கூகுளாரிடம் கேட்டால் அது,"தாமிரக் கோழி என்ற பறவை. நீர் நிலைகளில் இருக்கும்."என்று சொல்லியது.  எப்படியோ கோழி மாதிரி இருக்கு  என்று சரியாக யோசித்து இருக்கோம் இருவரும்.  தாமிரக் கோழி நீர்நிலையை விட்டு சாலைக்கு வந்து ஏதோ சாப்பிட்டது.  பின் எங்கள் கார் சத்தம் கேட்டு குடு குடு என்று ஓடிப் புதர்களில் மறைந்து விட்டது .
ஆட்டின் மேல் இளைப்பாறும் கருங்குருவி
மாட்டின் மேல் இளைப்பாறும் கருங்குருவி. ஆடும், மாடும் முகம் காட்டவில்லை என்று நினைக்கிறீகளா? நீ இந்த பதிவில் பறவைகள்  மட்டும்தான் போடுகிறாய் நாங்கள் என்னத்துக்கு என்று சொல்லிவிட்டன.

ஆடும் மாடும் காரில் போகும் போது கார் ஜன்னல் வழியாக எடுக்கப்பட்டது  கீழே குனிந்து மேய்ந்து கொண்டு இருக்கின்றன.அதனால் முகம் தெரியவில்லை.

ரசித்தீர்களா?-வீரநாராயண ஏரிக்குச் செல்லும் பாதையில் உள்ள பறவைகளை.

 'கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு விழா'- அடுத்தபதிவில்.
                                            
                                                                  வாழ்க வளமுடன்.
                                                                            -------------



அனந்தமங்கலம் ஸ்ரீ திரிநேத்திர தசபுஜவீர ஆஞ்சநேயர் திருக்கோயில்

$
0
0
மார்கழி மாதம் அமாவாசை - ஆஞ்சநேயர் பிறந்தநாள். 
திருக்கடையூரிலிருந்து 5 கி.மீட்டர் தூரத்தில் அனந்தமங்கலம் என்ற ஊரில் ஸ்ரீதிரிநேத்திர தசபுஜ ஆஞ்சநேயர் இருக்கிறார். அவரைத் தரிசனம் செய்யலாம்.



 கோயிலின் வரலாறு இதில் படிக்கலாம்.












முன்பக்கம் வெளியில் இருக்கும் மூலவர் ஆலயம்


                                                             வாழ்க வளமுடன்.
-                                                                   ----------------------

மார்கழி மாத நிகழ்வுகள்

$
0
0



படம் கூகுள்

படம் கூகுள்

மார்கழி வந்து விட்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி இறைவனை பூமாலையுடன், பாமாலையும் சேர்த்து சாற்றி வேண்டினால் வாழ்வில் எல்லா நலங்களும் பெறலாம். மனங்குளிர் மார்கழி என்று சொல்வது போல் உடம்பும் மனமும் குளிரக் குளிர குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். என் அம்மா குளிர்ந்த நீரில் தான் குளிப்பார்கள். எங்களுக்கு எல்லாம் வெந்நீர் போட்டு கொடுப்பார்கள். குளித்து, கோலம் போட்டு, காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு அப்பாவுக்குக் கொஞ்சம் 
எடுத்து வருவேன். அடியார்கள் பஜனை பாடிக்கொண்டு தெருவில் வருவார்கள். வீடுகள் தோறும் விளக்கேற்றி அவர்களை வரவேற்பார்கள். பாடத் தெரியாதவர்களையும் பாட வைக்கும் பஜனைப் பாடல்.இப்படி இளமைக் கால மார்கழி மாதம் அருமையானது. இப்போதும் காலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குப் போகிறேன். அம்மாவுடன் போன மாதிரி  இல்லை.

மார்கழி என்றால் இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும். இசையால் பாடகர்கள் வேள்வி செய்வார்கள்.மனித வாழ்வில் இசை நிறைய அற்புதங்களை செய்கிறது.

இசை வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் மனிதனின் உடலில் , மனதில் காணும் வலிகளை நீக்குவதற்கும், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

                                                                          படம் கூகுள்
மார்கழி மாதம் பஜனை பாடல்களை கையைத் தட்டி பாடும் போது குளிர் நம்மை விட்டு போய் விடும். இரத்த ஓட்டம் நன்கு நடை பெறும்.உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் ஏற்படும்.  சிவானந்த விஜயலட்சுமி அவர்கள் தன் சொற்பொழிவைத் தொடங்கும் முன் ஒரு பாட்டு பாடுவார்கள். ’கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா ’எனப் பாட்டு பாடுவார்கள் அதில் ”பாடக்கிடைத்த வாய் ஒன்று,தாளம் போடக்கிடைத்த கை ரெண்டு,”இரு கையாலே தாளங்கள் போடு;” என்று  ஐந்து புலன்கள் செய்யும் வேலைகளைச் சொல்லிப் பாடுவார்கள்.  இந்தப் பிறவியில் பாட வாய் கிடைத்திருக்கும்போது, பாடாமல் இருக்கலாமா ? என அர்த்தம் தோன்றும் பாடலைப் பாடுவார்கள். அந்த பாட்டு முழுமையாய் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நான் சிறுமியாய் இருக்கும் போது கேட்டது. அந்த பாடல் வலைத்தளத்தில் தேடியும் கிடைக்க வில்லை.
                                             
பால் தினகரன் அவர்கள் ’ காலையில் நீ எழுந்து கடவுளைத் துதி நன்று, காலதாமதம் நன்றன்று, என் மனமே!’ என்று பாடுவார்.

                                       
                                                               படம் கூகுள்
கிறிஸ்துமஸ் கீதங்கள்  அலங்கரிக்கப்பட்ட   வண்டிகளில் இரவு  பாட ஆரம்பித்து  காலை வரை பனியில் .பாடிவருவார்கள்.

                                   
                                               நான் வரைந்த கோலம்
எல்லா மதமும் காலையில் இறைவனைத் துதிப்பது நன்று என்று சொல்கிறது. பள்ளி வாசலில் 4.30க்கு பாங்கின் ஒலி இறைவனைத் தொழ வாருங்கள் என அழைக்கிறது.
                               
                                                                              படம் கூகுள்
ஐயப்ப பகதர்கள் காலையில் இந்த மார்கழிக் குளிரிலும் பச்சைத்தண்ணீரில் குளித்து ஐயப்பனை வேண்டிப் பாடுவார்கள்.

                              
                                                              படம் கூகுள்
 எல்லாக் கோவில்களிலும் காலை வழிபாடு மிகவும் சிறப்பாய் நடைபெறும்.

                
                                                               படம் கூகுள்
                           
                                                               படம் கூகுள்
மார்கழியில் இசை , நாட்டிய  விழா சிறப்பாய் நடைபெறும்.  தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மார்கழி மகா உற்சவம் நடத்துகிறார்கள். வானொலியும் இசை , நாட்டிய விருந்துகள் அளிக்கிறது.

கோலங்கள்:-

நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள், கோலத்தை அழிக்கும் கண்ணனைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:

வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட* வீதிவாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்றன்மேல்*
உள்ள மோடி யுருகல் அல்லால் உரோடம் ஒன்றுமிலோங் கண்டாய்*
கள்ளமாதவா! கேசவா! உன்முகத்தன கண்க ளல்லவே

’குடும்ப விளக்கில்’ கோலமிடும் பெண்ணைப் பற்றி பாரதிதாசன் இப்படிக் கூறுகிறார்:

//சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல்
துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச்
செங்காந் தள்நிகர் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க் கையில்
ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையடு,
முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும்,
கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை
மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி,
அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!//
 
                                        
                                                               படம் கூகுள் (நன்றி கூகுளுக்கு)
விடியல்காலையில் கோலம் போட்டு முடித்தபின் அவளுக்கு பரிசு அளிப்பது போல்  சூரியன் தன் பொன்னொளியை தருகிறார் என்று தன் பாடலில் சொல்கிறார்.

ஆனால் இன்று விடியல் காலையில் போட முடிவதில்லை சிலரால், இரவே போட்டு விடுகிறார்கள். சிலர் வீட்டு வாசல் தெருப்பக்கம் இருந்தால் வாசலில் அதிகாலையில்  திருடர் பயத்தால் கோலம் போடுவது   முடிவதில்லை. நன்கு விடிந்தபோது போடுகிறார்கள்.

  மார்கழி மாதம் கோலம் போட  ஒரு மாதம் முன்பே   மண்தரையை  , கல் நீக்கி வாசலை சீர்  செய்து சமப்படுத்தி வைப்பேன் .  பசுஞ் சாணம் தெளித்து கோலம் போடுவேன். ஆனால்  இன்று  அப்படி சீர் செய்யும் வேலை இல்லை. வாசலில்   சிமெண்ட் போட்டு விட்டார்கள்  எல்லோர் வீடுகளும் அப்படித்தான். அடுக்கு மாடி குடியிருப்பாக வேறு ஆகி விட்டது..

கோவிலில் அதிகாலையில் 4.30 லிருந்து 5 மணிக்குள்  பூஜை ஆகி கொண்டு இருந்தது. எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் இப்போது 7 மணிக்கு நடக்கிறது.  பல கோவிலுக்கு ஒரே அர்ச்சகர் .  மக்களுக்கும் இப்போது வசதியாக இருக்கிறது.

நான் கோவிலுக்கு போகும் வழியில் இரு வீடுகளுக்கு முன் போட்டு இருக்கும் கோலத்தையும் ,  நான் போகும் கோவில் படங்களையும் பகிர்ந்து இருக்கிறேன்.
 மண் தரை சிமெண்ட் தரை ஆனது, பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து பூ வைப்பது இப்போது இல்லை பூ மட்டும் வைக்கப்பட்டு இருக்கிறது.
                                       
              

நடுவில் பிள்ளையார் 
பிள்ளையாரின் வலது புறம் அனுமன்
இடது புறம் முருகன் - வள்ளிதெய்வானையுடன்

பால் அபிஷேகம் ஆகிறது துர்க்கைக்கு
அலங்காரத்தில் துர்க்கை

நவகிரகங்கள்.

இந்த மார்கழி மாதத்தில், பக்தியோடு இறைவனை வணங்கியும்,இசையைக் கேட்டு மகிழ்ந்தும்,கோலங்கள் இட்டுக் கொண்டாடியும் மகிழ்வோம்.
                                                     வாழ்க வளமுடன்!
                                                      --------------------------

பழைய கோலங்கள்

$
0
0
மார்கழி மாதம் வந்து விட்டால் கறுப்புப் பெட்டி திறக்கப்படும். அது என்ன கறுப்பு பெட்டி?   அதற்குள் என்ன இருக்கிறது?  என்று நினைக்கிறீர்களா? அந்த கறுப்பு சூட்கேஸ் நிறைய என் கோல  சேகரிப்புகள் இடம் பெற்று இருக்கிறது.

பொக்கிஷத்தை  பாதுகாப்பதுபோல் பெட்டியில் பாதுகாத்து வருகிறேன். நான் சின்ன வயதில்  கோலங்கள் போட்ட நோட்டு தொட்டாலே கிழிவது போல் உள்ளது.   வார மாத இதழ்களில் . வந்த கோலங்கள், தினமலர் பேப்பரில் வந்த கோலங்கள்  சேகரித்து வைத்து இருக்கிறேன்.

என் கோலநோட்டில் அம்மா வரைந்த சில கோலங்கள், என் மாமியார் வரைந்து தந்த சில கோலங்கள், என் கணவர் வரைந்த கோலங்கள்  என்று இருக்கிறது.  இப்போது  இணையத்தில் கோலங்களை பார்த்து  பிடித்த கோலத்தை போடுகிறேன்.

பழைய கோலங்கள் சேகரிப்பிலிருந்த சில உங்கள் பார்வைக்கு.:-





                               மாமியார் வரைந்து தந்த கோலங்கள்

 எங்கள் வீட்டுக்கு எனது மாமியார் வந்திருந்தபோது சில கோலங்கள் வரைந்துகொடுத்தார்கள்.  சர்க்குலேஷன் புத்தகத்தில் உள்ள கோலத்தை எனது கோலநோட்டில் வரைந்துகொண்டுவிட்டு மறுநாள் புத்தகத்தைத் திருப்பிக்கொடுக்க வேண்டும். அப்போது,”அதை நான் வரைந்து தருகிறேன்” என்று மாமியார் அதைப் பார்த்து வரைந்து தந்த கோலம். அவர்கள் அழகாய் சிக்கு கோலம் போடுவார்கள்.

சிக்குக் கோலம் போடுவது பெரிய விஷயமா? நானும் போடுவேன் என்று என்கணவர் ஸ்கேல் வைத்து அழகாய்  வரைந்து தந்த கோலம்.  

பெட்டிக்குள் இருக்கும் கோலநோட்டுக்கள், பத்திரிக்கை கோலங்கள் சேகரிப்பு


சிறு வயதில் நான் போட்ட கோலங்கள்

10 வயதில் கை பழக, அம்மா சொல்லிக் கொடுத்த கோலம் . ( பாலபாட கோலம்)
+ போட்டு அதை இணைக்கும் கோலம்.
எளிதான கோலங்களாய் சொல்லிக் கொடுத்து பின் சிக்கு கோலம் சொல்லிக் கொடுத்தார்கள், அதுவும் எளிதாக போடும் சிக்கு கோலம்.
 பள்ளிவாசல் கோலம் எனும் ஆறு  ஆறு புள்ளிகளாய் விரிவு படுத்தும்கோலம்

 சின்ன பூக் கோலம் - 5 பைசா கோலம் என்று இதற்கு பெயர்

மிக எளிதாக போடும் துளசி மாடம்
இதை சந்தன கும்பா என்பார்கள்.

தொட்டில், சோபா
அலங்காரக் கண்ணாடி
தொட்டில்

நாற்காலி (இன்னும் இரண்டு கால் எங்கே என்று கேட்காதீர்கள்?( நானும் அம்மாவிடம் கேட்டவள்தான்)
ஸ்வஸ்திக் கோலம்

கோலங்கள் வைத்துப் பாதுகாக்கும் பெட்டி
தினமலர் பத்திரிக்கை கோலங்கள்



 புலி நகக்கோலம், மாட்டுக்கொம்பு கோலம், கொடிமலர், முக்கண் கோலம், நட்சத்திர கோலம், கஷ்டமான துளசி மாடக் கோவில், ஸ்வஸ்திக் கோலதேர்க் கோலம், வரிக் கோலம்,  என்று வித விதமான கோலங்கள்.அம்மாவிடம் போட்டுக் காட்டுவேன். கொஞ்ச நாள் தான் சிக்கு கோலம் எல்லாம் போட்டேன். அப்புறம் எல்லாம் பூக் கோலம் தான். கேட்டால் குழந்தைகளுக்கு அது தான் பிடிக்கிறது என்று சாக்கு. சிக்கு கோலம் தப்பாய் போட்டு விட்டால் திருத்தி அமைப்பது கஷ்டம், பூக்கோலம் என்றால் சரி செய்து விடலாம்.

சித்திரமும் கைபழக்கம் என்பது போல் கோலம் போட போடத்தான் எனக்கு அழகாய் வர ஆரம்பித்தது.

என் மாமியாருக்கு சிக்கு கோலம்தான் பிடிக்கும். பொங்கலுக்கு வீடு முழுவதும் சிக்கு கோலம் போடுவார்கள். அம்மா வெள்ளிக்கிழமை படிக்கோலம், மனைக்கோலம்  என்று சொல்லும் வரைக் கோலங்கள் போடுவார்கள். சின்ன கட்டங்கள்  போட்டு அதை இணைக்கும் வரிக்  கோலம்  உண்டு.  
  
கஷ்டமான வரிக்கோலமும் எளிதான வரை கோலமும் இருக்கிறது.வரைக்கோலங்களுக்கு  காவி கட்டும் போது கோலம் அழகாய் இருக்கும். சனிக்கிழமைகளில்  சங்குக்கோலம் போடுவார்கள். தேர்த்திருவிழா அன்று தேர்க்கோலம், போடுவார்கள். இங்கும் வீதியில் தேர் வரும் போது அழகான தேர்க்கோலங்களை எல்லோர் வீடுகளிலும் போடுவார்கள்.
அம்மா போட்ட கோலங்கள் இப்போது என்தங்கையிடம் இருக்கிறது.  
பழைய கோலங்கள் தொடரும்.

வாழ்க வளமுடன்.

====================

கூடு செல்லும் பறவைகள்

$
0
0

மாலையில் கூடு திரும்பும் பறவைகள் பூங்காவில் உள்ள மரங்களில், ரயில்நிலையத்தில் உள்ள மரங்களில் எழுப்பும் ஒலியைக் கேட்டு இருப்பீர்கள் தானே! . 

                  
எங்கள் ஊர் ரயில்நிலையத்தில் உள்ள இந்த அரசமரத்தில் தான் பறவைகள் மாலையில் எழுப்பும் ஒலியை எடுத்தேன்.


கோயில் கோபுரங்கள், ஆலமரம், அரசமரம் இவைதாம் பெரும்பாலும் பறவைகளின் இருப்பிடம். 
வேப்பமரக் கிளி
தென்னைமரத்தில் புல் புல் பறவை
மாமரத்துக் கிளி
வேப்பமரக் கொக்கு

                                     

எங்கள் ஊர் ரயில் நிலைய அரசமரத்தில் மாலை நேரம் பறவைகள் எழுப்பிய ஒலியைத் தான் இப்போது இங்கு கொடுத்து இருக்கிறேன்.

வீடு திரும்பிவிட்டோம் என்று  மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஒலி எழுப்புகிறதா அல்லது,’என் இடம், உன் இடம்’ என்கிறதா? தெரியவில்லை. அமராமல் அங்கும் இங்கும் பறந்து கூச்சல் எழுப்புவதைப்பார்த்தால் அப்படி ஒரு சந்தேகம் வருகிறது.
                                                             வாழ்க வளமுடன்.
                                                                    ==============


மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து

$
0
0
நான் முதல் முதலில் வலைத்தளம் ஆரம்பித்த போது இந்த கிளிக்கோலம் போட்டு வேதாத்திரி மகரிஷி அவர்களின் ”மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து” என்ற கவிதை தொகுப்பிலிருந்து இரண்டு வரிகளை எழுதி என் பதிவுகளை ஆரம்பித்தேன். 

1953  ஆம் ஆண்டுமுதல் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் மனைவியின்  விருப்பப்படி, கோலத்தை சுற்றி எழுதுவதற்காக  எழுதிய கவிதைகளை  1958ல் சிறு நூலாக வெளியிட்டார்களாம், அந்த நூலின் முன்னுரையில் உள்ள அவருடைய கவிதைகள் :-

1’ மார்கழி மாதங்களிலே என் துணைவி
மாக்கோலம் காலையிலே தெருவிலிட்டு
ஆர்வமுடன் எனை நோக்கி அகம் பூரித்து
அக்கோலத்தைச் சுற்றி எழுதுவதற்கு 
ஓர் பாட்டு சொல்லும் என்பாள் அந்நேரத்தில்
உதிக்கும்சில சொற்றொடரை கோத்துச்சொல்வேன்
ஊர்ந்து செல்லும் அவளின்கை விரல்கள்மாவை
உதிர்த்தெழுத்தாய் மாற்றும் பலர் கண்பார்கள்.

அன்றன்று இந்தவிதம் தோற்றமான
அனுபவ ஆராய்ச்சிகளின் குறிப்பனைத்தும்
ஒன்றொன்றின் உட்கருத்தை விவாதம் செய்து
ஒத்துணர்ந்து உள்ளத்தில் நிறைவு பெற்று
என்றென்றும் பலர் படிக்க உதவுமென்று
எண்ணிஎழுதித் தொகுத்து அச்சிலிட்டு
இன்றுஇப்போ நாம் கண்டு இன்பம் காண
ஏற்றபடி இதைத்தந்தோர்க் கெனது நன்றி.


வித்தியாசமான கோலம்  என்று  ’எங்கள் Blog’ ல் பகிர்ந்து இருந்தார்கள். அதில் “மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து” என்ற கவிதை தொகுப்பிலிருந்து இரண்டு வரிகளை எழுதி  இருந்தார்கள் அதைப் பார்த்தவுடன் உங்களிடம் அதிலிருந்து சிலவற்றை பகிர ஆசை வந்து விட்டது.  எங்கள் Blogக் குழுமத்திற்கு  நன்றி.

 மார்கழி மாதங்களில் நான் கோலம் போடும்போது கோலங்களுக்கு கீழே அல்லது மேலே மகரிஷி அவர்களின்  அருளுரையிலிருந்து சில வாசகங்களை எழுதினேன். அந்தக் கோலங்களும் வாசகங்களும் இங்கே. (சில படங்களில் வாசகங்கள் போட்டோவுக்குள் அடங்கவில்லை).

இயற்கைச் சக்தியே விதி,
இதையறிந்த அளவே மதி 
உண்ணும் உணவு உனக்கு கிடைத்தவகை
 எண்ணி யுண்ணிடல்  என்றும் உன் கடன்.
உடையில் ஒழுக்கம் உள்ளத்தில் கருணை ,
 நடையில் கண்ணியம், நல்லோர் பண்பு

நினைவை யடக்க நினைத்தால் , நிலையா
நினைவை யறிய நினைத்தால் , நிலைக்கும்
உழைப்பினால் உடலும், உள்ளமும், 
உலகமும், பயன் பெறும் உணர்வீர். 
ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்து,
ஊக்கத்துடன் உழை, உயர்வு நிச்சயம் .
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் ,
நினைப்பதும் , செய்வதும் நித்தியகடன்.

அவனில் அணு, அணுவில் அவன் 
உன்னில் எல்லாம், நீ அறி உன்னை
எண்ணு , சொல், செய், 
எல்லோருக்கும் நன்மை தர,
எண்ணும்படி செய்,
செய்யும்படி எண்ணு>

                                                      உலகமே ஒரு பெரிய பள்ளி,
                                      ஒவ்வொருவருக்கும் தினம் புதிய பாடம்.
                                     பலகலைகள் கற்றோர்க்கும் பாமரர்க்கும்,
                                      பகிர்ந்து தரும் இன்பதுன்பம் எனும் பரிசு


வாங்கும் கடனும் , தேங்கும் பணமும்
 வளர வளர  வாழ்வை கெடுக்கும்
கண்ணாடிப் பார்க்கக் காணலாம் உருவநிலை
உண்ணாடிப் பார்க்க உணராலாம் உயிர்நிலை

                                        வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
                                                                 ---------------------

புதுவருட வாழ்த்துக்கள்!

$
0
0
என் கணவர் வரைந்த   புத்தாண்டு வாழ்த்து
நான் வரைந்த புத்தாண்டு கோலங்கள்








அன்னையின் அருள்மலர்களில் இருந்து சில சிந்தனைகள்.
கடமை:-
ஒருவர் தியானத்தின் மூலம் முன்னேற முடியும், ஆனால் நல்ல சரியான மனப்பான்மையுடன் கடமையைச் செய்வதன் மூலம்  அது போன்று பத்துமடங்கு முன்னேற முடியும்.

உங்கள் வாழ்க்கை:-

உங்கள் வாழ்வு பயனுள்ளதாக அமையட்டும்.

சரியானதைச் செய் :-
பிறரிடம் அன்பை எதிர்பார்க்கிறாயா? அன்புள்ளவனாய் இரு.
உண்மையை எதிர்ப்பார்க்கிறாயா? உண்மையாக இரு.

நோயை வெல்லும் மனத்திட்பம்:-

உன் உடல் நலக்குறைவை நேசிக்காதே, உடல் நலக்குறைவு உன்னை விட்டு விட்டுப் போய்விடும்.

நிகழ்காலம்:-
வாழ்க்கையில் நிகழ்காலம் ஒன்றே மிக முக்கியமான காலகட்டம் ஆகும்.

எதிர்காலம்:-

எதிர்காலம் கடந்த காலத்தை விடக் கண்டிப்பாகச் சிறப்பானது தான். நாம் தான் முன்னேறிச் செல்ல வேண்டும்.

எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் ,அதை இறையருளின் பொறுப்பிலே விட்டு விட்டு எது சரியானதோ  நல்லதோ அதை நாம் அமைதியாகச் செய்ய வேண்டும். என்று கேட்டுக்  கொள்கிறேன்.

கர்மயோகம்:-

நன்றியுணர்வும் கடமையுணர்வும் ஒன்றிணைந்து
நலம்விளைக்கும் செயல்களையே விளைவறிந்து ஆற்ற
ஒன்றுமதம் இது “கர்மயோகம்” எனும் வாழ்வாம்.
உயிர்கட்கு உறுதுணையாம் உலகுக்கும் அமைதி.
-= வேதாத்திரி மகரிஷி

அனைவருக்கும்   புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.!

                                        வாழ்க  வையகம்! வாழ்க வளமுடன்!
                                                           
                                                                    =============

உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.

$
0
0

பொங்கல் திருவிழா
வீசிய விதையின் வேரில் முளைத்த வியர்வைப் பூக்களின் இயற்கைத் திருவிழா


ஏர் உழுவது -இப்போது  டிராக்டர் உழுகிறது.


நாற்றுகள் நடத் தயாராக இருக்கிறது

நாற்றுகள் இடம் விட்டு இடம் விட்டு அழகாய்  நடும் பெண்கள்
மிஷின் மூலம் நாற்று நடுதல் -  சில இடங்களில் (ரயிலில் போகும் போது எடுத்த படங்கள்)


பச்சைக் கம்பளம் போல் வளர்ந்து நிற்கும் நாற்றுக்கள்

கதிர் வந்து விட்டதே!

உண்ணுங்கால் எண்ணு

உண்ணும் உணவு உனக்கு கிடைத்தவகை ,
எண்ணி யுண்ணிடல் என்றும் உன்கடன்.
--வேதாத்திரி மகரிஷி

எத்தனை பேர் உழைப்பால் நெல் மணியானது வீடு வந்து சேர்கிறது  என்பதை உணரும் போது உழவர்களுக்கும் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நாம் நன்றி சொல்லும் திருநாள்.

(நன்றி கூகுள்)


நான் வரைந்த பொங்கல் கோலம்
அறுவடை முடிந்து  கதிர் அடித்தபின் வைக்கோல் மாடுகளுக்குப் போகிறது.

வீட்டில் பொங்கல் திருவிழா:-

                
வெள்ளைப் பட்டை பக்கம் காவிப்பட்டையும் உண்டு வீட்டுக்குள் போட்டு இருப்பதால் காவிப் பட்டை போடவில்லை. இடது ஓரத்தில் சிறு வீடு வரைந்து இருக்கிறேன். மேலே வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும் வரைவோம்.

நான்கு பக்க வாசல் போலவும் சூரியன், சந்திரன் வரைந்து நான்கு பக்க வாசலுக்குள் கோலம் போட்டு அதில் தான் பொங்கல் வைப்பார்கள். வாசலுக்கு சுண்ணாம்பு, காவிப் பட்டை கொடுக்கப்படும். மண்ணால் செய்த பிள்ளையார் செம்மண் அடித்து அதன் மேல் சுண்ணம்புப் பட்டை போட்டு வைப்பார்கள். பின் இரட்டை வாழைஇலையில் நடுவில் குத்துவிளக்கு வைத்து  விளக்கின் ஒரு பக்கம் மஞ்சள் பிள்ளையார், ஒரு பக்கம் நிறைநாழி(நெல் வைத்துள்ளது) வைத்து காய்கறிகளையும் வைப்பார்கள். வெற்றிலைபாக்கு, பழங்கள், தேங்காய்,கரும்பு எல்லாம் வைத்து பொங்கல் கொண்டாடுவோம்.

பொங்கல் அன்று எல்லாக் காய்கறிகளையும் போட்டு சாம்பார், அவியல் எல்லாம் செய்வார்கள், தேங்காய்த் துவையலும் உண்டு.

 நான்கு தினப் பொங்கல் விழாவை ஒரே நாளில் செய்து விடுகிறோம்  இப்போது கணுப் பொங்கலை சிறுவீட்டுப் பொங்கலாகக் கொண்டாடுவோம்.  பசுஞ்சாணத்தில் மார்கழி மாதம் கோலம் போட்டு  பிள்ளையார் பிடித்து வைத்து அதன் தலையில் பூசணிப் பூ வைத்து இருப்பதை காலை 11மணிக்கு எடுத்துத் தட்டி வைத்து விடுவார்கள். 30 நாள்  இப்படி தட்டி வைத்த ராட்டிகளையும், பனை ஓலைகளையும் வைத்து முற்றத்தில், அல்லது வாசலில்  பொங்கல் வைப்பார்கள். 

சிறு பெண்கள் உள்ள வீட்டில்  சிறு வீட்டுப்பொங்கல் என்று அவர்களே சிறு வீடு வரைந்த அல்லது சின்னதாய் வீடு மாதிரி கட்டிய இடத்தில் பொங்கல் வைப்பார்கள்.   பின் அன்று வைத்த 9, 7, 11 அடிப்படையில் வைத்த   பசுஞ்சாணப் பிள்ளையாரையும் , அதே எண்ணிக்கையில்  இலையில்  வைத்த வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தேங்காய், வாழைப்பழம் எல்லாம் வைத்து ஆறு , ஏரிகளுக்கு குடும்பத்துடன்,  தோழிகளுடன் போய் கரைத்து வருவார்கள்.   சமைத்த  உணவுகளை அங்கு கொண்டு வைத்துச் சாப்பிட்டு மகிழ்வார்கள்.
                          
                          மாடிவீடுகளில் காஸ் அடுப்பில் தான் பொங்கல்.
                   பால் பொங்குது ”பொங்கலோ பொங்கல்!” சொல்லுங்கள்.
 சூரிய ஒளியால் விளைந்த காய்கறிகள்  அவருக்கே படைக்கப் படுகிறது.   ஒரு இலையில் உள்ளது காக்காவிற்கு.  இன்னொரு இலை ஆற்றில், குளத்தில் கரைப்பதற்கு . அதில் உள்ள ஜீவராசிகளுக்கு.
 உலக உயிர்கள் வாழ  ஆதரமான சூரியனுக்கு நன்றி சொல்லி பொங்கல் 

மாடியில் சூரியனுக்குப் பூஜை
                                                
                                             மாடுகளுக்கு நன்றி சொல்ல  - மாட்டுப்பொங்கல்

                                      
                                                             திருவள்ளுவர் தினம் ( நன்றி கூகுள்)
                                               
                                                       கணு பொங்கல், கன்னிப் பொங்கல்
                                                      
                                                                    சிறுவீட்டுப் பொங்கல்
                             அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
                                                                வாழ்க வளமுடன்.
                                                                    -----------------------

கீழச் சூரிய மூலை அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயம்

$
0
0
பொங்கல் திருநாள் அன்று (15/01/2015) நாங்கள் கீழச்சூரிய மூலை என்ற ஊரில் உள்ள அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று இருந்தோம்.,
இக் கோயில் கும்பகோணத்தில் இருந்து 15.கி.மீ தொலைவில் உள்ளது. சூரியனார் கோவிலுக்கு அருகே கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து இவ்வூர் அமைந்துள்ளது.

கீழச்சூரிய மூலை என்றகிராமத்தில் அருள்மிகு பவளக்கொடி அம்பிகை சமேத ஸ்ரீ சூரிய கோடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.




 தன் வாழ்நாளெல்லாம் தமிழுக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவரும் , ஓலைச்சுவடிகளிலிருந்து சங்க நூல்களையும் , காப்பியங்களையும் நூலாக அச்சிலேற்றி தமிழ் உலகுக்குத் தந்தவருமாகிய, தமிழ்த் தாத்தா டாக்டர் .உ.வே. சாமிநாதய்யர் பிறந்த ஊர் ,கீழச் சூரிய மூலையாகும். கோவிலில்  அவரின் ஓவியம் வரைந்து வைத்து இருக்கிறார்கள். அவர் வீடு இருந்த தெருவே இப்போது இல்லையாம்.

கீழச்சூரிய மூலைகோவிலின் சிறப்பு :--

கருவறையில் ஈச்வர லிங்கத்திற்கு மேல் ஓராயிரத்திற்கு மேலான “ஏகமுக”
ருத்திராட்சத்தினால் ஆன பந்தல் உள்ளது.
                அருள்மிகு  சூரிய கோடீஸ்வரர்                    
அருள்மிகு பவளக்கொடி அம்பிகை 
ஸ்வாமிக்கு நேரே  மண்டபத்தில் நந்தி இருக்கிறார்.

இங்குள்ள மூலவரை , காலை முதல் மாலைவரை சூரிய பகவான் தன் பொன்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கேற்ப சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை  மூலவரின் நிழல் சுவரில் தெரியுமாம். குருக்கள் கண்ணாடி வைத்து சூரிய ஒளியைக் காட்டினார். 


பிரதோஷ காலத்தில் சூரியன் இறைவனைத் தரிசிக்க அருள்புரிந்த ஸ்ரீ காலபைரவர்  மிகவும் விஷேசமானவர்.  இவர் சொர்ணபைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த பைரவருக்கு  தீபாராதனை காட்டும் போது அவரது கண்டத்தில் சிறிதாக  பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுகிறது. அது தீபாராதனையின் போது மெல்ல அசைவது போல் இருக்கும். இதைக் குருக்கள்  விவரித்து தீபாராதனை செய்து காட்டினார்.

இந்த பைரவரின் கண்டப்பகுதி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுவதும், பின் பழைய நிலையை அடைவதும் இததலத்தின் சிறப்பு. இத் தலத்தின் பைரவரை தரிசனம் செய்தால் பக்தர்களின் கண்டம் நீங்குமாம்.

பைரவரின் கழுத்தில் தெரியும் பவளமணியின் ஏழு ஒளிக் கிரணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய , சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும் , பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாம்.

தெற்கு கோஷ்டத்தில் ஆனந்த தட்சிணாமூர்த்தி புன்னைகைத்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு மேலே உள்ள சர்ப்பத்தின் ஒரு தலையில் ஆஞ்சநேயரின் முகம் தெரிகிறது
இங்கு உள்ள துர்க்கைக்கு ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களை அம்மன் வலது காலை முன் வைத்து எழுந்து வரவேற்கிறாளாம்.


கோயிலைச்சுற்றி வந்தபின் தான் குருக்கள் சொன்னார் துர்க்கையின் சிறப்பை .முன்பே சொல்லி இருந்தால் கால் விரலை குளோசப்பில் எடுத்து இருக்கலாம்.
வெளிப்பிரகாரத்தில் பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் முருகன், 






சுந்தர மஹாலக்ஷ்மி
சண்டேஸ்வரரின் கால் பகுதியில் சூரியஒளி

நவக்கிரகங்கள் தங்கள் வாகனத்துடன் இருக்கிறார்கள்








மேலும்  கோவிலின் சிறப்புகள்   ;-

ஸ்ரீ யாக்ஞவல்கியருடைய வேதமந்திர சக்திகளெல்லாம் ஸ்ரீ சூர்ய கோடீஸ்வரருடைய திருவடிகளிலே ஓர் அற்புத விருட்சமாய் மலர்ந்த
இலுப்பை  மரம்தான் இக்கோவிலின் தலவிருட்சமாகும்.

சூரிய தோஷம் , மனசஞ்சலம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்குமாம்.

பார்வைக்குறைகள், பலவிதமான கண் நோய் உடையவர்கள் பிரதோஷவழிபாட்டையும், ஞாயிற்றுக்கிழமை காலை 6-7 சூரிய ஹோரை நேரத்தில் பூஜையையும் செய்தால் கண்  நோய்களிலிருந்து தீர்வு பெறலாம் என்றும், அன்னதானம் செய்தால் நம் முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும் அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும் என்றும் குருக்கள் கூறினார்.

சுக்கிராச்சாரியார் தான் இழந்த கண்பார்வையை திரும்பவும் பெற, ஆதித்யஹ்ருதய  மந்திர ஹோம பூஜைகளைச் செய்த ஸ்தலம் இது.

ஸ்ரீராமர் தசரதருக்கு  ஈமக்கடன்களை ஆற்ற இயலாமற் போனதால் அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க 108 புனித விருட்சங்களின்  கீழ் ஸ்ரீராமர் தர்ப்பணம் செய்தார். அப்படி இலும்பை மரத்துக்கு கீழ் செய்த தலம் கீழச்சூரிய மூலையாகும்.

 இத்தலத்தில் பித்ரு தர்ப்பணம் செய்வதால் பித்ரு சாப நிவர்த்தி கிடைக்கும்.
இக்கோவிலில் ஆதித்ய ஹ்ருதய மந்திரங்களை ஓதி வழிபட்டால் சாந்தமும், மனநிம்மதியும் கிடைக்கும்  என்று தலவரலாறு கூறுகிறது என்று சொன்னார் குருக்கள்.

கும்பகோனத்திலிருந்து  திருலோகி செல்லும் டவுன் பஸ் 38ல்  கோவிலுக்கு செல்லலாம். ஆடுதுறை, திருப்பனந்தாளிலிருந்து ஆட்டோ, கார் வசதிகள் உண்டு. அம்பிகா சர்க்கரை ஆலையிலிருந்து 2கி.மீ வடக்கே உள்ளது.

                                                           வாழ்க வளமுடன்

                                      =================================


திருநாங்கூர் கருட சேவை -ஜனவரி 2015

$
0
0


அண்ணன் கோவில் (திருவெள்ளக்குளம்)
அண்ணன் கோவிலில் கருடாழ்வார் கிளம்புகிறார் நாராயணபெருமாள் கோவிலுக்கு
                                                                     மாதவப் பெருமாள்

                                           
மாதவப்பெருமாள் கோவில்              
                                         ஸ்ரீ வண்புருஷோத்தமப் பெருமாள் கோவில்
ஸ்ரீவண்புருஷோத்தமர்
                                                                     ஸ்ரீ  ராமானுஜர்

ஸ்ரீவண்புருஷோத்தமர் பின் அலங்காரம்







முன் அலங்காரம்
பின் அலங்காரம்

                                                            வைகுந்தநாதப் பெருமாள்

                                                             


                           குமுதவல்லியும்  திருமங்கையாழ்வாரும்

பஜனை பாடும் பெரியவர்களும் தாளத்திற்கு ஏற்ற மாதிரி ஆடும் சிறுவனும்
மணிமாடக் கோவில் நாராயணபெருமாள் கோவில்
கருடசேவை  திருவிழாக் கடைகள்
11 பெருமாள் குடைகள்
                                                            வாழ்க வளமுடன்.
                                                               ===============

அருள்மிகு குக்கி சுப்பிரமணியர் திருக்கோவில்

$
0
0


நாங்கள் திருவருள் துணையுடன்  அண்மையில் மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.

என் கணவர் பல வருடங்களாய் பாடல் பெற்ற சிவத்தலங்கள் பார்த்து வருகிறார்கள். அதில் அவர்கள் பார்க்க வேண்டிய இன்னும் இரண்டு தலங்கள் தான். அதில் ஒன்று கோகர்ணம் என்பதால் தான் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு ரயில் நிலையத்தில் எங்களை அழைத்துச் செல்ல மனோகர் டிராவல்ஸ் கைடு   ராஜா அவர்கள்  வந்து இருந்தார்,  எங்களுடன் மேலும் இருவர் ஈரோட்டிலிருந்து வந்தார்கள். நாங்கள் ஐவரும்  ஈரோட்டிலிருந்து மாலை 5 மணிக்கு  வெஸ்ட்கோஸ்ட் ரயிலில் மங்களூர் புறப்பட்டோம்.  திருப்பூரில் 11 பேர் , கோவையில் நான்கு பேர்  சேர்ந்து கொண்டார்கள்  சென்னையிலிருந்து ஒருவர் ஆக 21 பேர்  ஆன்மீகச் சுற்றுலாவிற்கு ரயிலில் பயணித்தோம். காலை மூன்று மணிக்கு போய் சேர்ந்தோம் மங்களூர். அங்கு எங்களைத் தங்கும் விடுதிக்கு அழைத்துச்செல்ல   21 பேர் அமரும் மினி பஸ் ஏற்பாடு செய்து இருந்தது . அதில் ஏறி விடுதிக்கு வந்து சற்று ஓய்வு எடுத்தோம்.
இப்படி சுடவைக்கப்பட்ட தண்ணீர் வெந்நீராக குழாய் மூலம் அறைகளுக்கு  வருகிறது. எல்லா ஓட்டல்களிலும் இப்படித்தான்  வெந்நீர் தயார் ஆகிறது. 
என் கணவரும், எங்களை அழைத்துச் சென்ற கைடு திரு. ராஜாவும்
தங்கும் விடுதி வாசலில் மலர்ந்த ரோஜா



பாக்கு மரங்கள் சூழ  நாங்கள் தங்கி இருந்த விடுதி


சுப்பிரமணியாகோவில் போகும் வழியில் தர்மஸ்தலாவில் உள்ள மணிக் கூண்டு

ஓட்டலில் போய் காலை உணவை முடித்துக் கொண்டு  சுப்பிரமணியா கோவில் தரிசனம் செய்ய சென்றோம். கர்நாடக மாநிலத்தில் குக்கி சுப்பிரமணியா கோவில் மிக சிறப்பு வாய்ந்தது. ஐந்து தலை நாகருடன் சுப்பிரமணியர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்; இங்கு கால பைரவர் இருக்கிறார். ராகு, கேது தோஷநிவர்த்தி தலம் என்கிறார்கள்.

              தேருக்குப் பின் புறம் தெரியும் கட்டிடம் தான் அன்னதானக் கூடம்.
                                        கோவிலின் முகப்புத் தோற்றம்.
கோவில் வாசலில்  அழகிய தேர்கள் இருந்தன.  வரிசையில் காத்திருந்து முருகனை வணங்கினோம். நம்மை கோகி , கோகி என்று விரட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.   வணங்கி வந்த பின்  எல்லோருக்கும் உணவு உண்டு.  கூட்டம், வரிசை அதற்கும்.

 நாக தோஷநிவர்த்தி கோவில் ,பிள்ளைப்பேறு வேண்டுவோர்க்கு வரமளிக்கும் சுவாமி. 

சகல பிரார்த்தனைகளும் நிறைவேறக் கட்டணம் கட்டி வழிபடுவோர்களுக்கே பிரசாதங்கள். மற்றவர்கள் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

தேங்காய், கல்கண்டு பிரசாதம்
                                          மூட்டை மூட்டையாகத் தேங்காய்கள்
                             குமாரதாரா நதியும், ஆதி சுப்பிரமணியா கோவிலும். 

ஆதி சுப்பிரமணியா என்று இந்த பெரிய கோவிலின் அருகில் குமாரதாரா எனும் நதி ஓடிக் கொண்டு இருக்க, அதன் அருகில் அழகான கேரள பாணியில் கோவில் இருக்கிற்து. கோவிலின் உட்பிரகாரத்தில்  ஒரு அழகிய கிணறு இருக்கிறது. கிணற்றைச் சுற்றி சுவர் எழுப்பி அதில் அழகான ஓவியங்கள் வரைந்து இருக்கிறார்கள்.


ஆதி சுப்பிரமணியா கோவில் வாசலில் இப்படி அறிவிப்பு பலகை வைத்து இருக்கிறார்கள்.

தலவரலாறு:-
சுப்பிரமணியருக்கு வாசுகி எனும் ஐந்து தலைப் பாம்பு  குடை பிடித்து இருப்பதற்கு சொல்லப்படும் கதை:- 
காசியப முனிவரின் மனைவிகளான  கத்ரு, வினதா ஆகிய இருவரும் குதிரைகளைப் பற்றிய சர்ச்சையில் ஈடுபட , யார் கருத்து சரியானதோ அவர் வெற்றிபெற்றவர் என்றும்,  தோற்பவர் வெற்றிபெற்றவருக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அப்படி தோற்று  அடிமையான கத்ருவின் குழந்தைகளான  நாகங்களுக்கு, வினதாவின் பிள்ளையாகிய கருடனால் தொந்திரவு ஏற்பட்டது,  அதனால் வருந்திய  பாம்புகள் வாசுகி என்ற பாம்பின் தலைமையில்  குமாரதாரா நதியின் அருகில் இருந்த குகையில் தங்கி. சிவபெருமானிடம்  தங்களைக் காக்கும்படி வேண்டின.   சிவபெருமான் அவர்களுக்கு காட்சி அளித்து  மகன் சுப்பிரமணியம் உங்களை காப்பாற்றுவார் என்று சொன்னார், நாகங்கள் குமராதாரா நதியில் நீராடி  சுப்பிரமணியரை வழிபட, பாம்புகளை  அவர் காப்பாற்றியதால் நன்றிக் கடனாக  வாசுகி என்ற ஐந்து தலைப் பாம்பு அவருக்குக் குடைவிரித்து இருக்கிறது. 

நாங்கள் போன போது தங்க கவசத்தில் ஐந்து தலைப் பாம்பும், முருகனும் தந்த அழகான காட்சி கண்டு மகிழ்ந்தோம்.
            கோவிலுக்கு வந்த பக்தர்களை  ஆசீர்வதிக்கும் கோவில் யானை
இது போல் தான் உள்ளே சுப்பிரமணியா இருப்பார்.

வாழக வளமுடன்.
----------------

பாப்பா பாடும் பாட்டு ! கேட்டு தலையை ஆட்டு!

$
0
0
குழந்தைகள் தினம் இன்று.  குழந்தைகளால் நேரு மாமா என்று அன்புடன்  அழைக்கப்படும் நம் முதல் பிரதமர் திரு. பண்டித ஜவகர்லால்நேரு அவர்களின் பிறந்த நாள்,  125 வது பிறந்த நாள் .

குழந்தைகள் நலமே நாட்டின் நலம். குழந்தைகளுக்கு நாம் தரும் அன்பும்   அர்வணைப்பும் அவர்களை நல்லவர்களாக நல்ல மனிதர்களாக வாழ வைக்கும்.

குழந்தைகளுடன் நேரம் செலவிட்டால் நமக்குக் கிடைப்பது உற்சாகம் .’டானிக்’’சாப்பிட்ட தெம்பு தரும். 

எனக்கு குழந்தைகளுடன் பேச பிடிக்கும், விளையாடப் பிடிக்கும். ரயிலில் வரும்போது முன்பெல்லாம் ஒருத்தருடன் ஒருத்தர் பேசி வருவோம். இப்போது எல்லாம் அவர்கள் ஆளுக்கு ஒரு செல்போன் அல்லது லேப்டாப், என்று வைத்துக் கொண்டு அதில் ஆழந்து விடுகிறார்கள். ரயில் சிநேகம் குறைந்து வருகிறது.  கோவைக்கு ரயிலில் போனபோது ஒரு குழந்தை எனக்கு சிநேகம் ஆனாள். அந்த குழந்தை என்னிடம் பாடல்கள் பாடிக் காட்டினாள். அந்த பாடல்களை இன்று குழந்தைகள் தினத்தில் கேட்டு மகிழலாம்.  மழலை பாடல் கேட்க இனிமை.







குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு ஓவியப் போட்டிகள் நடத்திப் பரிசு கொடுக்கிறார்கள்.

என் பேரன் வரைந்த ஓவியங்கள், அவன் பள்ளியில் செய்த கைவேலைகள் எல்லாம் கீழே காணலாம்.

                               


                                  

                                     
                           

ஓடி விளையாடு பாப்பா  என்று பாரதி சொன்னது போல், ஓடி விளையாடு தாத்தா, பாட்டி என்று பேரக் குழந்தைகள் தாத்தா, பாட்டிகளை விளையாட வைத்து அவர்களை ஆரோக்கியமாய் வைத்து இருக்கிறார்கள்.
மழலைச் செல்வங்கள் வாழக! வளர்க!

                                                               வாழக வளமுடன்.
                                                               ==================

மாற்றம் ஒன்றே மாறாதது

$
0
0
மதுரையில்  டெம்பிள் சிட்டி என்ற ஓட்டலில்,  காலம் மாறும்போது நம் உணவு  உண்ணும் முறை மாறியதை  வருடங்கள் போட்டுப்   படம் வரைந்து பிரேம் போட்டு  மாட்டி  வைத்து இருந்தார்கள்.

எளிமையாக இருந்த உணவு பரிமாறும் முறை, இப்போது ஆடம்பரமாய் மாறி விட்டது. நாளை என்ன, எப்படி இருக்கும் உணவுப் பழக்கம் என்ற  கேள்வியை  வேறு  முன் வைக்கிறது.

கீழே அமர்ந்து சம்மணம் இட்டு உணவு உண்ணும் முறை  இப்போது ஓட்டல், கல்யாண கூடங்கள் எங்கும் இல்லை. ஏன்?  வீடுகளிலும் இல்லை. எல்லாம் மேஜை, நாற்காலி தான். வாழ்க்கை முறை மாறி விட்டது. நகர்ந்து போய் எடுக்ககூட வேண்டாம் என்று சுழலும் மேஜை எல்லாம் வந்து விட்டது.

இந்த ஓட்டலில் 1975ல்  உணவு, மேஜைச்சாப்பாடாக மாறியது என்று சொல்கிறது. உண்மைதான் என்று நினைக்கிறேன். என் சகோதரிக்கு 1969ல்,  கீழே அமர்ந்துதான் விருந்து உண்ணல்.  எனக்கு 1973  பிப்ரவரி 7 ல் திருமணம்  நடந்த போதும் கீழே அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் தான் இருந்தது. 


மின்சாரம் இல்லை போலும் விசிறியைக் கொண்டு வீசும் இளம்பெண். கண்ணாடிக் கூட்டுக்குள்  விளக்கு 
மின்விசிறி, மேஜை, நாற்காலி சாப்பாடு
குளிர்சாதன வசதி  சொகுசு இருக்கைகள் 
 குடும்பத்தினர்களுக்கு மட்டும்  வசதியான  தனி அறை
தாங்களே தங்களுக்கு விருப்பமான உணவை மட்டும் எடுத்துக் கொள்ளும் வசதி.
அடுத்து என்ன மாற்றம் வரும்? சொல்லுங்களேன்.

கால்களை  தொங்க வைத்து  அமர்ந்து சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள் முதல் படத்தில் காட்டியது போல் கீழே அமர்ந்து சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிடுவதே சிறந்தது என்கிறார்கள்.
                                       
                               நல்ல கருத்துக்கள் சுவர்களை அலங்கரித்தன.
                                           
விழுந்தாலும் எழுந்து முயற்சி செய்ததால்   கிடைக்கும் வெற்றி  வாழ்க்கையில் உயர்வு தரும் .  விட்டுக் கொடுத்தலும்  வாழ்க்கைக்கு தேவையான ஒன்று தானே!.

                    ஓட்டலில் உள்ளே வந்து விட்டு சாப்பிடாமல் போனால் எப்படி?

                       
                                                 வடை, கேசரி, பூரி உருளைக்கிழங்கு 
                                                                                                                                                 
அடுத்து, தோசை வேண்டும் என்றால் அதற்கு சாம்பார்  வேண்டும் அல்லவா?

                                         மூன்று வகை சட்னி, மிளகாய்ப் பொடி


அப்புறம் மதுரையின் சிறப்புப் பானம்


                                                                 வாழ்க வளமுடன்.

                                        -------------------------------------------------------------



புழுதிப்பட்டி சத்திரம் பாலதண்டாயுதபாணி கோவில்

$
0
0
மலைக்கோவில்
இரண்டு பக்கம் நாகங்களுடன்   சித்தி விநாயகர்

பாலதண்டாயுதபாணி
ஆறு தாமரைகளில் ஆறு முருகன்
மூன்று தூவாரங்களிலும் குரங்கு எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்தது. நான்  போட்டோ எடுக்கப் போகும்போது ஒன்று மட்டும்- அதுவும் அந்தப் பக்கம் முகத்தைத் திருப்பி விட்டது.


மதுரைக்கு பஸ்ஸில் போகும் போதெல்லாம் இந்தக் கோவிலைப் பார்ப்போம்.
இந்த முறை காரில் மதுரை போனதால்  மதுரையிலிருந்து மயிலாடுதுறை திரும்பும் போது இறங்கி முருகனைக் கும்பிட்டு வந்தோம். 

40 படிகள் கொண்ட சிறிய கோவில். நடுவில் பாலதண்டாயுதபாணி, அவருக்கு வலது பக்கம்  சித்தி விநாயகர் இருக்கிறார். ஆள் நடமாட்டம் இல்லை குரங்குகளின் இருப்பிடமாய் இருக்கிறது. கோவிலுக்கு வெளியே அமர்ந்து இருப்பவரிடம் குரங்குகள் தொந்திரவு செய்யுமா? குச்சி ஏதாவது எடுத்துப் போக வேண்டுமா ? என்று  என் கணவர் கேட்டபோது, ஒன்றும் செய்யாது போங்கள் என்றார்.


படிகளில் அமர்ந்து இருந்த குட்டிக் குரங்கு ஒன்று நாங்கள் படி ஏறியதைப்பார்த்து  முறைத்து விட்டு  மதில் மேல் இருந்து உற்றுப்பார்த்தது. 

பூட்டிய கம்பிக் கதவுக்குள் முருகனைக் கண்டோம். கண்மலர் , ராஜகிரீடம் அணிந்து, எலுமிச்சை மாலையுடன் இருந்தார் சிறிய அழகிய முருகர்.  முந்திய நாள் தைப்பூசத்திற்குச் செய்த அலங்காரம் கலைக்கப்படாமல் இருந்தது. பக்கத்திலிருந்த  சித்திவிநாயகரையும்  பூட்டிய கம்பிக் கதவு வழியாகத் தரிசனம் செய்து விட்டு நிமிர்ந்தால்  தாயும் சேயும் இரண்டு குரங்குகள் கொஞ்சிக் கொண்டு இருந்தன. மல்லாந்த நிலையில் குட்டி, அதன் வயிற்றில் வாயை வைத்து அதைச் சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தது, தாய்க் குரங்கு.
 அழகிய காட்சி எடுக்கப் போனபோது கணவர், ”மேலே வந்து விழுந்து காமிராவைப் பிடுங்கப் போகிறது வா” என்று அழைத்தவுடன் வேகமாய் எடுத்த காரணத்தால் தெளிவில்லாத தாய், சேய் படம்.
என் கணவர் கூப்பிட்ட சத்தம் கேட்டு குட்டி குரங்கு என்னை திரும்பி பார்த்தது.

இருந்தாலும் அதையும் விடாமல்   பதிவில் இடம்பெறச் செய்து விட்டேன்.  விளையாடுவது அழகாய் இருக்கிறது அல்லவா?

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். இப்படி சிறிய குன்றில் முருகன் கோவில் கட்டியது மகிழ்ச்சியான விஷயம். அந்த மலை பிழைத்தது. இப்படி மலை மீது கோவிலை கட்டினால் மலைகள் கால காலமாய் இருக்கும். 
                                                             வாழ்க வளமுடன்.
--------------------------------------------------

தாய்மை

$
0
0
இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் தெரு நாய்  நான்கு குட்டிகள் ஈன்றது. அந்த குட்டிகளை போட்டோ எடுக்கச் சென்ற போது அழகான காட்சி கிடைத்தது , தன் நாக்கால் தன் குட்டிகளை நாவால் நக்கி அன்பு பாராட்டும் தாய்மை!
கண்களை மூடி உருகும் தாய்மை
அம்மாவைத் தொடரும் குட்டிகள்

வீதியில் செல்ல முயலும் குட்டியைத் தன் வாயால் கவ்வி  பாதுகாப்பாய் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லல்


நேற்று போட்டோ எடுக்க நாய் குட்டிகள் இருக்கும் சாலைஎதிர்புறத்திற்கு போய் நின்று கொண்டு எடுத்தேன். ஒரு நாய்க்குட்டி  சாலையைக் கடந்து என்னிடம் வந்து நின்றது,  அப்போது திடீரென்று சாலைக்கு நடுவில் நடக்க ஆரம்பித்தது குட்டி. இரண்டு பக்கமும் கார், ஆட்டோ வந்து விட நான் பதறி இரண்டு பக்கமும் கை காட்டி நிறுத்தி குட்டியைத் தூக்கி அதன் அம்மா அருகில் விட்டேன். சிறிது நேரத்தில் எனக்கு வேர்த்து விறுவிறுத்துப் போய் விட்டது.. காரோட்டி வந்தவரும், ஆட்டோ ஓட்டி வந்தவரும் சிரித்துக் கொண்டு கை அசைத்துச் சென்றார்கள். நாயும் தன் குட்டியை தூக்கிவிட்டாளே என்று என்னைக் குதறாமல் விட்டது.   உடனே தாய் நாய் வீதியில் சென்ற குட்டியை முதலில் சாக்கடையின் கீழ்ப்பகுதிக்குப் பாதுகாப்பாய் கொண்டு விட்டு வந்தது. அப்புறம் ஒவ்வொரு குட்டியாய் கொண்டு வைத்து விட்டது(மழை நீர் மட்டும் போகும் சாக்கடை- அதனால் அதில் தண்ணீர் இல்லை) மேலே வரப் பார்த்த குட்டிகளை இழுத்து உள்ளே வைத்துக் கொண்டது.   என் கணவரிடம் வந்து சொன்ன போது  நாய் உன்னை சும்மா விட்டது  பெரிய விஷயம் என்றார்கள். தாய் நாய்க்குத் தெரிந்து இருக்கும், நான் குட்டியை காப்பாற்றத்தான் தூக்கினேன் என்று.

வெவ்வேறு ஊர்களில் எடுத்த படங்கள். கீழே வருவது :-

எல்லோரும் சமத்தாய் பால் குடித்துவிட்டு விளையாடப் போவீர்களாம்
அம்மா கொஞ்சம் நில்லு எனக்கு  பசிக்குது
போனமாதம் நடைபெற்ற  ’தாய்மை’   என்ற தலைப்பில் போட்டோ கேட்ட தமிழில் புகைப்படக்கலை போட்டிக்கு அனுப்ப பட்ட படம் ஆல்பத்தில் இடம்பெற்று மகிழ செய்தது
அம்மா கொஞ்சம் நில்லு எனக்கு  பசிக்குது
சகல ஜீவராசிகளுக்கும் தாய்மை உணர்வு உண்டு தானே! 
அன்பை அனைத்து ஜீவராசிகளும் ஒவ்வொரு வழியில் வெளிப்படுத்துகிறது. அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்று வாழ்வோம்.

வாழ்க வளமுடன்!
-----------------

தேடி வந்த பறவைகள்

$
0
0

                                                                            மணிப்புறா


புல் புல் பறவைகள்
செண்பகப் பறவை
செண்பகப் பறவை 
பெண்குயில்
பெண்குயில்
மணிப்புறா

கருங்குயில்
பெண்குயில்
கருங்குயில்
காகம்
கருங்குயில்கள்
பெண்குயில்


மணிப்புறா
வளைத்து வேப்பழத்தை தின்ன முயல்கிறது
உண்டு களித்து  பறக்க தயார்

                  வேப்பழத்தை தின்று இனிமையாகபிங் பிங் என்று பாட தயார்.

சிறு வயதில் வாரம் ஒருமுறை வேப்பம் கொழுந்து அரைத்து அம்மா ஒரு சின்ன 
உருண்டையாகக் கொடுத்து எங்களை விழுங்கச் சொல்வார்கள்.(அதிகாலையில் வெறும்
 வயிற்றில்) அப்போது கசப்பு பிடிக்காது . முகத்தை சுளித்து வேண்டாம் என்று அழுது 
அடம் செய்து இருக்கிறேன். அதன் நன்மைகள் தெரிந்து என் குழந்தைகளுக்கு கொடுக்கும்
 போது அவர்கள் வேண்டாம் என்று மறுத்தபோது வேப்பம்கொழுந்தின் மகிமைகளைச் 
சொல்லிஅவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.

அதுபோல் இந்தப் பறவைகளுக்கும் தெரிந்து இருக்கிறது. அதிகாலையில் வேப்பமரத்தில்
 வந்து அமர்ந்து வேப்பம் பழங்களை வளைத்து வளைத்து 6மணியிலிருந்து 7மணி வரை
 சாப்பிடுகிறது, அனைத்து பறவைகளும். (புல் புல், கருங்குயில், புறா, செண்பகப்பறவை, 
பெண்குயில், காகம்.) எங்கள் ஊருக்குச்சென்று இருந்த போது என் வீட்டு ஜன்னல் 
வழியாக தெரியும் வேப்பமரத்தில் அமர்ந்த பறவைகளை எடுத்தவை.

வேப்பம் காற்று உடலுக்கு நன்மை அளித்து பலநோய்களைக் குணமாக்கிறது.. வேப்பம்
 மரத்தின் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் உடையது. உடல்
 ஆரோக்கியத்திற்கு வேப்ப மரம் மருந்தாகிறது. வேப்பமரக்காற்று உடலுக்கு நல்லது 
என்று கிராமப்புறங்களில்  மரத்தின் அடியில் கட்டிலைப்போட்டுப் படுப்பார்கள்.
 குழந்தைகளுக்குத் தொட்டில் கட்டி அதில் படுக்கவைத்து விட்டுப் பெண்கள் 
வயல்வெளியில் வேலைபார்ப்பார்கள்.

 பூச்சிக் கடி, மற்றும் மனநோய்க்கு வேப்பிலை அடித்தலும் உண்டு.  வேப்பிலையால்  வீசி
 வீசி மந்திரிப்பார்கள். அந்தக் காற்றுஉடலுக்குள் சென்று நரம்புத் தளர்ச்சியை 
குணமடைய செய்யுமாம்.
  



வேப்ப மரத்தை வீட்டின் முன் வளர்த்துத் தெய்வமாய் வணங்குகிறார்கள் சிலர்.

                                                            வாழ்க வளமுடன்
                                                      ===========================

பெண்மையைப் போற்றுவோம் !

$
0
0
நாளை  சர்வதேச மகளிர் தினம்:-

//பிரான்ஸில் பிரஷ்யனில்  இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும்  ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர்.

சுமார் 226  ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் போராடிப்போராடி தங்கள் உரிமைகளை பெற்றுவருகின்றனர்.

அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ம் தேதியை நினைவு கூரும்  வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே  ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.//

நன்றி- தினகரன்.

மகளிர்தினத்தை சிறப்பு செய்யும் விதமாய் நான் சந்தித்த, படித்த சில பகிர்வுகள் இங்கு:-

போன மாதம் மதுரை போய் இருந்தேன் அப்போது  பள்ளி அருகில்  கடைவிரித்திருந்த அம்மாவை பார்த்தவுடன் என் இளமைக்கால நினைவுகள் வந்தன. அவர்களுடன் பேசியபோது  கிடைத்த சில செய்திகள் :-





பள்ளிப் பருவத்தில் குழந்தைகளுக்கு வீட்டில் எவ்வளவு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்தாலும் பள்ளி அருகில் விற்பதை வாங்கித் தின்றால் தான் மகிழ்ச்சி , திருப்தி ஏற்படும்.
பள்ளி அருகில் தான் முன்பு எவ்வளவு விற்பனைக்குக் காத்திருக்கும் ! ஐஸ்கட்டியைத் தேங்காய்ப்பூப் போல் துருவி குச்சியில் வைத்து (கலர் கலராக பாட்டில்களில் இருக்கும் கலர்களை)நாம் கேட்கும் கலர்களை அதன்மேல் ஸ்பிரே செய்து தருவார்கள். கமர்கட், தேங்காய்பர்பி, கடலைமிட்டாய், மாங்காய், நெல்லிக்காய், தேன்மிட்டாய், இலந்தவடை, குச்சிமிட்டாய், பென்சில் மிட்டாய் , சேமியா ஐஸ், பால் ஐஸ், இன்னும் எத்தனை எத்தனை வகை ஐஸ்கள்.
இப்போது சுத்தம் சுகாதாரம் என்று பள்ளி அருகில் எதுவும் விற்கக் கூடாது என்று  சொன்னதால் குழந்தைகளை இடைவேளையின் போதும் வெளியில் விடுவது இல்லை.
பள்ளியின் வாசலில் சுத்தமாக பாட்டில்களில் மிட்டாய், பொரிஉருண்டை, மற்றும் பாக்கெட்களில் உள்ள தின்பண்டங்களை வைத்துக் கடைவிரித்து இருந்த அம்மாவிடம் பள்ளி பிள்ளைகள் வாங்கத் தடை உள்ளதே ! நீங்கள் இங்கு கடை போட்டு இருக்கிறீர்களே விற்குமா? என்று கேட்டால் பள்ளிக்கு கொண்டுவந்து விடும் பெற்றோர்களுடன் வரும் பிள்ளைகள் கேட்கும் , அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பார்கள். என் பேரப் பிள்ளைகள் இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களுக்குக் காவலாக இங்கு இருக்கிறேன். தினம் 10 ரூபாய் விற்றால் போதும் அம்மா இங்கு, அப்புறம் பள்ளிவிட்ட பின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு பார்க் போய் விற்பேன் என்றார்கள்.
வயதான காலத்தில் தன் மகளுக்குப் பாரமாய் இருக்கக் கூடாது . அவளுக்கு உதவியாய் ஏதாவது சம்பாதித்துக் கொடுக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.

லட்சிய பெண்மணியைப் போற்றுவோம்.

இப்படி மகிழ்ச்சியுடன் குடும்பத்திற்கு உழைக்கும் பெண்மணியைப் போற்றுவோம்,

 வயது முதிர்ந்தாலும் வீட்டில் முடங்கிக் கிடக்கமல் தன்னால் முடிந்த உதவிகளை வீட்டுக்கு  செய்ய பனங்கிழங்கு விற்கும்  வயதான தாயை வணங்குவோம். 

கட்டிடத்தை பார்த்துக் கொள்ளும் ஒரு அம்மா - (என் போட்டோ வேண்டாம் தாயி என்று சொல்லி விட்டார்கள். )கொஞ்சம் சாமான்களை வைத்துக் கொண்டு நளபாகம் செய்து கொள்ளும் அம்மா வியக்க வைத்தார்.கட்டிடம் முடிவடைந்து விட்டது அதனால் வெளியில் சமைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்களாம். கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டு  காவலுக்குப் படுத்துக் கொள்ளும் அம்மாவின்  கஷ்டங்கள் விலகி நன்றாக இருக்க வேண்டும்.

இந்தப் படம்  ’அமுதசுரபி’ இதழ் பொன்விழா ஆண்டில் நடத்திய குறுநாவல் போட்டியில் வென்ற  ’விதைநெல்’- நாவலின் அட்டைப்படம். வயதானலும்  சுறு சுறுப்பாய் வேலை செய்யும் மூதாட்டி என்னை கவர்ந்தார்.

நம்பிக்கைக்குரிய சாதனை :_

//அடுத்தவருக்கு உதவும் மனம் கொண்டவர்கள் அரிதாகி வரும் காலம் இது. அவரவர் வாழ்க்கையைப் பார்க்கவே நேரம் போதவில்லை என அலுத்துக்கொள்பவர்களும் அதிகம். இவர்களுக்கு மத்தியில் சேவை மனப்பான்மையும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர்களுக்கு மரியாதை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது திரிபுரா ஃபவுண்டேஷன். ஆபத்தான சூழ்நிலையில் துணிச்சலாக இறங்கி பிறரைக் காப்பாற்றிய குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘ஹோப் ஹீரோ’ விருதுதான் அது. இந்த ஆண்டு விருது பெற்றவர்களில் குக்கிராமத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளும் உண்டு! சாகச சந்தானலட்சுமி!

திருச்சி மாவட்டம், ஆதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தானலட்சுமி எட்டாம் வகுப்பு படிக்கிறார். ஆற்றில் மூழ்கப் போன இரண்டு தோழிகளைத் துணிச்சலாக ஆற்றில் குதித்துக் காப்பாற்றி இருக்கிறார்! 

‘‘அன்னிக்கு ஆத்துல அதிக தண்ணி போயிட்டு இருந்துச்சு. ரெண்டு புள்ளைகள் திடீர்னு ‘காப்பாத்துங்க’ன்னு கத்துனாங்க. ஒரு புள்ள காலு சேத்துக்குள்ள சிக்கிருச்சு... இன்னொரு புள்ள அதோட தோள் மேல உட்கார்ந்துருக்கு. அங்க நல்லா நீச்சல் தெரிஞ்சவ நான்தான். யோசிக்காம குதிச்சேன். எவ்வளவு இழுத்தும் ரெண்டு புள்ளைகளாலயும் வெளிய வர முடியல... வேற வழியில்லாம, ஆழமா நீந்திப் போய் சேத்து மண்ணை விலக்கிவிட்டேன். அஞ்சு நிமிசம் அப்படி செஞ்ச பிறகுதான் கால் ரெண்டும் வெளிய வந்துச்சு. அப்படியே தூக்கிவிட்டேன்’’ என துணிச்சல் சம்பவம் குறித்து விவரிக்கும் சந்தானலட்சுமியின் ஆசை - ஐபிஎஸ் படித்து போலீஸ் அதிகாரி ஆகி சேவை செய்வது!

‘‘இன்னிக்கு நாட்டுல நிறைய வன்முறை நடக்குது. கொலை, கொள்ளை அதிகமாகிடுச்சு. இதையெல்லாம் தட்டிக் கேட்கணும்னா நான் போலீசாகணும்’’ என உறுதிபட பேசும் சந்தானலட்சுமியின் பெற்றோர் விவசாயக் கூலிகள். நீச்சல், மரம் ஏறுதல், யோகா உள்பட பன்முகத் திறமைகள் கொண்ட சிறுமியாக இவர் இருப்பதில் அம்மா பெரியநாச்சிக்குப் பெருமை... ‘‘சின்ன வயசுல இருந்தே பொறுப்பா வளர்ந்துட்டா. அடுத்தவங்களுக்கு ஏதாவது உதவின்னா முத ஆளா நிப்பா... இந்த விருது அவளுக்கு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்’’ என்கிறார் அம்மா.

பொறுப்புள்ள புவனேஸ்வரி! :=

திருவள்ளூர் மாவட்டம், முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி, அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். இவரது அத்தை மகள் சுஜாதா மனவளர்ச்சி குன்றியவர். தனியாக எந்த ஒரு அன்றாடச் செயலையும் செய்ய இயலாது. ஐந்தாம் வகுப்பு முடித்தவுடன் அவளது பெற்றோர் புவனேஸ்வரியின் வீட்டில் படிப்பதற்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அந்த நாள் முதல் சுஜாதாவின் பெறாத தாயாகவே மாறி கவனித்து வருகிறார் புவனேஸ்வரி. பேச்சு, விளையாட்டு, உணவு என எல்லாச் செயல்பாடுகளுக்கும் புவனேஸ்வரி கூடவே இருந்து கவனித்து வருகிறாள். சுஜாதாவை குளிக்க வைத்து, சாப்பாடு ஊட்டி விட்டு, சீருடை அணிவித்து பள்ளிக்குக் கூட்டிச் செல்கிறார். எந்தக் கட்டாயமும் இன்றி, மனம் விரும்பியே இத்தனை  உதவிகளையும் சுஜாதாவுக்குச் செய்கிறார். 

பள்ளியிலும் கழிப்பறைக்கு கூட்டிச் செல்வது தொடங்கி அனைத்து உதவிகளையும் செய்கிறார். ‘‘அப்பா, அம்மா ரெண்டு பேரும் வயல் வேலைக்கு கூலியா போறாங்க. சின்ன வயசுல இருந்து சுஜாதாவை பக்கத்துல இருந்து பார்த்துக்கிறேன். எனக்கு ஒண்ணும் கஷ்டமா தெரியலை. அடுத்தவங்களுக்கு உதவி பண்றத என்னிக்கும் என் லட்சியமா வைச்சுருக்கேன். அவளுக்கு இன்னும் தனியா சாப்பிடத் தெரியாது. வார்த்தைகளை உச்சரிக்கத் தெரியாது. நான் தினமும் சொல்லிக் கொடுப்பேன். இப்ப ‘அப்பா, அம்மா’ன்னு சொல்றா! நாம பேசறது அவளுக்கு புரியுது. 

பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டாங்கன்னா, இவளையும் கூட்டிக்கிட்டு பக்கத்து கிராமமான தாழ்வீடுக்கு மல்லிகைப்பூ பறிக்க போவேன். அதுக்குக் கிடைக்கிற கூலி எங்களுக்கு உதவியா இருக்கும். இந்த விருது கிடைச்சதுக்கு எங்க ஊர்ல எல்லாம் பாராட்டினாங்க...’’ என்று மகிழ்ச்சி பொங்கப் பேசும் புவனேஸ்வரியின் லட்சியம், ‘டாக்டராகி எல்லோருக்கும் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும். சாதி, மத வேறுபாடில்லாத சமூகத்தை உருவாக்க உழைக்க  வேண்டும்’ என்பதே! //

நன்றி - தின்கரன் நாளிதழ்

உலக அமைதி ஏற்படவும், பசுமைபுரட்சியை வலியுறுத்தியும்  இவர் வரைந்த ஓவியத்திற்கு  கல்வி அமைச்சரிடம் பரிசும் பாராட்டும் பெற்றார்.

--நன்றி தினமலர்.



இப்படி நம்பிக்கைகளுடன் வாழும் குழந்தைகளையும் முதியவர்களையும் நல்ல பெண்மணிகளையும் வாழ்த்தி மகிழ்வோம். மகளிர் தினத்தில். மகளிர்தின வாழ்த்துக்கள்.


வாழ்க வளமுடன்.
Viewing all 789 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>