Quantcast
Channel: திருமதி பக்கங்கள்
Viewing all 787 articles
Browse latest View live

ஓடி விளையாடு பாப்பா -2 வது பகுதி

$
0
0
பிள்ளைப் பருவம் விளையாடிக் களிக்கும் பருவம் . காலை முதல்  இரவு  தூங்கப் போகும் வரை விளையாட விரும்பும் பருவம். பாரதியார் மாலை முழுவதும் விளையாட்டு என்றார். ஆனால் எல்லா நேரமும் விளையாடத் தோன்றும் பிள்ளைப் பருவத்தில்.

என் இளமைப் பருவத்தில்   சந்தோஷமாய் விளையாடிக் கொண்டு இருக்கும்போது அம்மா கூப்பிட்டால் மூஞ்சியைத் தூக்கிக்கொண்டுதான் வீட்டுக்குள் வருவேன். இவ்வளவு நேரம் விளையாடினாய் சிரித்துக் கொண்டு -வீட்டுக்குள் வரும்போது  ஏன் இப்படி  என்று திட்டுவார்கள்.

எத்தனை எத்தனை விளையாட்டு ! ஆற்றோரம் மணல் எடுத்து அழகு அழகாய் வீடு கட்டி, தோட்டம் இட்டு செடி வளர்த்து என்ற பாட்டில் மணல் வீடு கட்டி விளையாடுவதைச் சொல்லி இருப்பார்கள்.
ஆற்று மணலை இப்போதும் வீடு கட்ட  அள்ளிக் கொண்டுதான் இருக்கிறார்கள் - நிஜ வீடு கட்ட.

நான் போகும் இடம் எல்லாம் குழந்தைகள் விளையாடுவதை ரசிப்பேன்.


டயர் வண்டி,  ஓட்டும் கிராமத்துக்குழந்தைகள் (குத்துக்கல் வலசை என்ற ஊரில் எடுத்த படம்.)


சகோதரியின் பேரனும்  அவன் நண்பனும் விஷ்ணு சக்கரம் கையில் சூழல்வதாய் விளையாட்டு
வீடு கட்டக் கொட்டி வைத்து இருக்கும் மணலில் மலை கட்டி அதில் ஏறிச் செடியை நட்டு வைத்து மகிழும் குழந்தைகள்.

இன்று "குழந்தைகளை மரம் நட வைக்க வேண்டும் அதைப் பராமரிக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுத்தால் மரத்தை வெட்டும்போது அவர்கள் வெட்டக் கூடாது என்பார்கள்'என்றார்கள், தொலைக்காட்சியில்.   மரத்தின் நன்மைகளைக்  குழந்தைகளுக்கு எடுத்துச்சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்றார்கள்.

பிஞ்சுக் கைகளால் செடி , மரம் நட வைத்து அவர்களே தண்ணீர்  ஊற்ற வைத்து துளிர்ப்பதை, மொட்டுவிடுவதை, மலர்வதை எல்லாம் ரசிக்க வைக்கலாம்,.

நாங்கள் படிக்கும் போது பள்ளி விட்ட பின் பள்ளித் தோட்டத்திற்குத் தண்ணீர் விடும் பொறுப்பு உண்டு.  குழுவாய்ப் பிரித்து இருப்பார்கள், தோட்டவேலை , கரும்பலகைக்கு  ஊமத்தை இலையும், அடுப்புக் கரியும் அரைத்து பூசுதல், மண்பானையில் தண்ணீர் எடுத்துவைத்தல்  எல்லாம் செய்வோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வோரு குழு செய்யும்.
கழுகுமலை ஊரில் தேரடித் தெருவில் குழந்தைகளின்  பம்பர விளையாட்டு


கலர் கலராய் அழகாய் மரத்தால் செய்த பம்பரங்கள்  முன்பு    இப்போது  பிளாஸ்டிக்  பம்பரம்.
குத்து வாங்காத பம்பரம் இருக்காது, அபீட் எடுத்தால் தான் பம்பரம் விடுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் அந்தப் பையனை சுற்றி நின்று பார்க்கப் பார்வையாளர் கூட்டம் இருக்கும்.
அபீட்
டாஸ் போட்டுப் பார்க்கிறார்கள் யார் முதலில்   விளையாடுவது என்று. பெரியவர்கள் விளையாட்டுக்கு ஈடாக விளையாடுகிறார்கள். நிழல் தேடி இவர்கள் விளையாட்டு இடம்பெயர்ந்து கொண்டெ இருக்கும். பெற்றோர்கள் கட்டளை வெயிலில் விளையாட கூடாது என்று. வெயிலில் விளையாடினால் டீ விட்டமின் கிடைக்கும். "வெயிலோடு விளையாடி வெயிலோடு விளையாடி " பாடல் நினைவுக்கு வருதா?

அடிக்கும் வெயில் எல்லாம் உங்கள் தலையில் தான் என்று அம்மா சொல்வது காதில் கேட்குது.
வெயில், மழை, எல்லாம் தெரியாது அடுத்து என்ன விளையாடலாம் என்ற நினைப்பு மட்டுமே இருக்கும். ஒவ்வொரு பால்கனி அருகில் நின்று குழந்தைகள் தன் சகாக்களை விளையாட அழைப்பதே பார்க்கப் பரவசமாய் இருக்கிருது..


மழையில் தான் நனைய விட மாட்டேன் என்கிறார்கள், மழை தண்ணீரிலாவது விளையாடுவோம். என்று மழைத்தண்ணீரில் விளையாடும் குழந்தைகள். முன்பு முற்றத்தில்  விழும் தண்ணீரை அண்டாக்களில் பிடித்து வைப்பார்கள் அதில் காகிதக் கப்பல் விட்டு மகிழ்வோம். அம்மா கத்திக் கப்பல் செய்து  தருவார்கள்.
.
தாத்தாவும் பேரனும் மரவீடு செய்து விளையாடுகிறார்கள்.

வித விதமாய்க்  கட்டடங்கள்  கட்டி விளையாடுகிறான்  பேரன்

அவன் வைத்து இருக்கும் விலங்குகள்   பண்ணையில் அவைகளுக்கு உணவு அளிக்கிறான்.


பக்கத்தில் உள்ள  கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது அதில் குழந்தைகள் விளையாட கார், கொடைராட்டினம் எல்லாம்  இருந்தது.  பெரிய பெரிய தீம் பார்க்கில்  மின்சாரத்தில் சுற்றுவதில் சுற்றினாலும் பழமையை நினைவூட்ட இது போன்ற கையால் சுற்றும்  விளையாட்டு சாதனங்களும் மறையாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கொஞ்சம் பொறுங்கள் இன்னும் இரண்டு  குழந்தைகள் வரட்டும்.

கொடை ராட்டினம், கார் விளையாட்டு எல்லாம் விடியோ எடுத்தேன் ஆனால் இங்கு பகிர்ந்தால் சிலருக்குத் தெரிகிறது, சிலர் தெரியவில்லை என்கிறார்கள்.


எங்கள் குடியிருப்புப் பகுதியில் காலை முதல் இரவுவரை  குழந்தைகள் விளையாடும் உற்சாகக் கூக்குரல் கேட்கிறது . இந்தக் கால குழந்தைகள்  விளையாடுவது  இல்லை  எப்போதும்  வீடியோ கேம்,  ஐபேட்,  செல்போன் கேம் தான்  விளையாடுகிறார்கள் என்பது மறைந்து குழந்தைகளை விளையாட வைத்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. உடலின் உறுதி செய்வது விளையாட்டு தானே!

பள்ளிக்கு வெளியேயும் குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
விளையாட்டில் வெற்றி தோல்வியைச் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மை,விட்டுக்கொடுத்தல், சகிப்புத் தன்மை,அடிபட்டால் முதல்உதவி செய்யும் குணம், எல்லாம் தானாக வரும். நம் கடமை அவர்கள் நல்ல குழந்தைகளுடன் பழகுகிறார்களா விளையாடுகிறார்களா என்று கவனிப்பதும்,சண்டை வந்தால் அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள் என்று நாம் தலையிடாமல் இருப்பதும் தான்.

பள்ளி விடுமுறை முடிந்ததும் இருக்கவே இருக்கிறது  வீட்டுப்பாடம்.

காலமிது காலமிது  விளையாடு  கண்ணே, காலமிதைத் தவறவிட்டால் கிடைக்காது இது போல் பொன்னாள். 

ஓடி விளையாடு பாப்பா   முன்பு எழுதிய  பழைய பதிவைப் படிக்கலாம் முன்பு விளையாடிய விளையாட்டுகளின் பேர் எல்லாம் இருக்கும்.

’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி கதவைத்திற நான்மாட்டேன் வெங்கல
புலி’(வேங்கைப்புலி),’ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’,’குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என்று பாடி விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்கள் எல்லாம் கண்ணுக்கு கைக்கு, கால்களுக்கு நல்ல பயிற்சி தரும். பாண்டி விளையாட்டும் நல்ல விளையாட்டு.

துள்ளித் திரிந்த காலம் நினைவுக்கு வருகிறதா?



                                                                வாழ்க வளமுடன்.



முத்துப்பட்டிக் கல்வெட்டுகள்- முதல் பகுதி

$
0
0








கீழக்குயில்குடி சமணமலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள குன்று முத்துப்பட்டி மற்றும் கரடிப்பட்டி, இது பெருமாள்மலை எனவும் அழைக்கப்படுகிறது.

இம் மலையில் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் , கற்படுக்கைகளும் , மகாவீரர் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் அமைந்துள்ளன.

இங்கு வாழ்ந்து வந்த சமணத் துறவிகளுக்காக மலைக்குகையில்
இருபதுக்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு படுக்கையும் வழுவழுப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன.

குகைத்தள முகப்பில் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள், தென்பகுதியில் மகாவீரர் சிற்பங்கள் அதன் கீழே வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் உள்ளன.  அருகில் இயற்கையாக அமைந்த மற்றொரு குகையினுள் உள்ள  படுக்கைக்கு மேல் கல்வெட்டொன்று உள்ளது.


"சைஅளன்  வுந்தையூர் கவிய் "என்னும் கல்வெட்டு , மலையிலுள்ள பெரிய குகைத்தளத்தின் முகப்புப் பகுதியில் மூன்று பகுதிகளைக் கொண்ட வார்த்தைகளாக வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி
முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும்.  விந்தையூரைச் சேர்ந்த சையளன்  என்பவர் இக்குகைத்தளத்தை அமைத்துத் தந்திருப்பதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.


"திடிக்காத்தான் (ம) ...னம் எய்..."-என்று  குகைத்தளத்தின்  கற்படுக்கையில் காணப்படும் இக்கல்வெட்டும் கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்தாகும். திட்டியைக்காத்தான் என்பவன் செய்வித்துத் தந்த கற்படுக்கையாக
இருக்கலாம். இக்கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது.

"நாகபேரூரதைய் முசிறிகோடன் எளமகன்"என்றமைந்துள்ளது ஒரு கல்வெட்டு. சிறுகுகைத்தளத்தில் கற்படுக்கையின் மீது தலைகீழாக இடவலமாகக் காணப்படும் இக்கல்வெட்டு  கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்தாகும் . நாகப்பேரூர் என்பது இப்பகுதியில் உள்ள நாகமலைப் புதுக்கோட்டையைக் குறிக்கும். முசிறி  என்பது சேரர்களின் துறைமுகப்பட்டினத்தைக் குறிக்கும். இன்றைய கேரள மாநிலத்திலுள்ள  முசிறியைச் சேர்ந்த இளமகன் கோடனும் ,  நாகபேரூரின் தலைவரும்  செய்துகொடுத்த   கொடை எனப் பொருள் கொள்ளலாம்.

குகைத்தளத்தில் தெற்கு நோக்கிக் காணப்படும் இரண்டு தீர்த்தங்கரர் சிற்பங்களும் ஒன்றுபோலவே காணப்படுகின்றன.  அரசமரக் கிளைகளின் கீழ் முக்குடைக்கு அடியில்  அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில்   உள்ள தீர்த்தங்கரர்  சிற்பம் உள்ளது. இருபுறமும் இருவர் கவரி வீச அழகாக தீர்த்தங்கரர்  அமர்ந்திருக்கிறார்.  அதன் கீழ் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. இவை கி.பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை  :-

முதல் கல்வெட்டு:-

"ஸ்வஸ்திஸ்ரீ பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரர்  மாணக்கர் மகாணந்தி   பெரியார் நாட்டாற்றுப்புறத்து  நாட்டார்பேரால்  செய்விச்ச திருமேனி"

.
பராந்தக  பருவதமாயின ஸ்ரீ வல்லவப் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரரின் பெரும்பள்ளிக் குறண்டி அஷ்டோபவாசி படாரரின்  மாணக்கர்  மகாணந்திப் பெரியார் என்பவர்   நாட்டாற்றுப்புறத்து நாட்டாரின்  பெயரால்  செய்வித்துள்ளார்

அந்தக்காலத்தில்   ஆவியூர்க்கருகிலுள்ள குரண்டியில் சமணர்களின் பெரும்பள்ளி இருந்துள்ளது. அப்பள்ளியில் நிறைய மாணவர்கள்  பயின்று உள்ளனர். குரண்டிமலைக்கு அக்காலப் பெயர்தான் பராந்தக பர்வதம்

 இரண்டாவது கல்வெட்டு:-

"ஸ்வஸ்திஸ்ரீ வெண்புணாட்டுக் குறண்டி அஷ்டோப வாசி படாரர்  மாணக்கர் குணசேனதேவர் மாணக்கர் கனகவீரப் பெரியடிகள்  நாட்டாற்றுப்புறத்து அமிர்தபராக்கிரம  நல்லூராயின குயிற்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி  பள்ளிச் சிவிகையார் ரக்ஷ."


இரண்டாவது  கல்வெட்டில் கீழக்குயில்குடி ஊராரின் பெயரால் கனகவீரப் பெரியடிகள் செய்வித்துள்ளார்.  இவர்  குணசேனதேவரின்  மாணக்கர் ஆவார்.  முதல்மாடத்திலிருந்த சிற்பத்தினைச் செய்வித்த மகாணந்திப்பெரியாரின் ஆசிரியர் குறண்டி அஷ்டோபவாசிப் படாரரின் மாணாக்கர் ஆவார்.

அந்தக்காலத்தில் சமணத்தைப் பின்பற்றிய மக்கள் இதை நேர்த்திக்கடன் போல் செய்திருக்கலாம்.


மேலே உள்ளவை பசுமை நடைக் குழுவினருடன் 18. 12. 2016 ல் முத்துப்பட்டி என்ற சமணகுடவறை கோவிலுக்குப் போனபோது  அவர்கள் கொடுத்த கோவிலைப்பற்றிய விவரங்கள் அடங்கிய கையேட்டில் உள்ளதை இதில் கொடுத்து இருக்கிறேன்.

பசுமைநடை அமைப்பாளர்களுக்கு நன்றி.

மலைகளை, இடங்களை, கல்வெட்டுகளை, படுக்கைகளை ,வட்டெழுத்துக்களை, பாறை ஓவியங்களை நாம் அறிந்து கொள்ள இது போன்ற  பயணம் தொடர்கிறது நமக்கு பயணம். எல்லா நேரமும்  நாம் இதில் கொள்ள முடியவில்லை.

இங்கிருந்து பசுமை நடைக் குழுவினர் பெருமாள் மலை நோக்கிப் பயணம்
பசுமைநடை  வெளியிடும் புத்தங்கங்கள்  விற்பனைக்கு -

 மலைகள், சிலைகள், ஓவியங்கள் இடையேயான வரலாற்றை அறிய பயணங்களின் தொகுப்பு 
போகும் பாதை 
ஒற்றையடிப் பாதையாகத் தொடர்கிறது

பெருமாள் மலை

சமணச்சின்னம்  அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள்

பசுமைநடை அமைப்பாளர் திரு. முத்துகிருஷ்ணன்  பேசுகிறார்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் விளக்குகிறார்
இவர் கிராமிய   பழம் பாடல்களை சேகரித்து வருகிறார் 
சமணக்குகை ஆய்வுச் சொற்பொழிவைக் கேட்கும் பசுமை நடைக் குழுவினர்

சமணப்படுக்கை உள்ள இடம்

சமணப்படுக்கையில் குழந்தை அமர்ந்து எழுத்துக்களை ரசிக்கிறது


பாறைகளுக்கு இடையே குனிந்து வெளி வருதல்


இதற்குள் சமணப்படுக்கையில் உள்ள எழுத்துக்களைப் பற்றி ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.

சமணப்படுக்கையில் பக்கவாட்டில் சமணர்கள் வட்டெழுத்துக்கள் இருக்கிறது.
நடுவில் நம்  இளைய தலைமுறைகள் கல்வெட்டில் தங்கள் பெயர்களை எழுதி வைத்து இருக்கிறார்கள்.




முக்குடைக்கு அடியில் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர்.


இன்னும் படங்கள்  இருக்கிறது. மலையின் அழகு. போகும் பாதையில் கண்ட காட்சிகள் எல்லாம் அழகு.

 சமணப்படுக்கையை கண்டு களித்தபின் காலை டிபன் இட்லி, சட்னி, சாம்பார்  அடங்கிய   பொட்டலங்கள் அனைவருக்கும் கொடுத்தார்கள். சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்து மலைக் காட்சிகளை படம் எடுத்து வந்தோம்.

அழகிய  முத்துப்பட்டி ஊரின் காட்சிகள் அடுத்த பதிவில்.
                                                             

வாழ்க வளமுடன்.


முத்துப்பட்டிக் கல்வெட்டுக்கள் - பகுதி 2

$
0
0
கீழக்குயில்குடி சமணமலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள குன்று முத்துப்பட்டி மற்றும் கரடிப்பட்டி, இது பெருமாள்மலை எனவும் அழைக்கப்படுகிறது.

மதுரையிலிருந்து 15 கி.மீ   தொலைவில் உள்ளது. 


மலையின் அழகைக் காணீரோ!


பாறையில்  வேப்பமரம்
சமணப்படுக்கையைக் காணப்போகும் வழி
கிரானைட் வெட்டப்பட்ட மலை- இப்போது தப்பிவிட்டது  

பிராமிக் கல்வெட்டு
இது என்ன விளையாட்டு என்று தெரியவில்லை
முரசு போல அமைந்துள்ள பாறை
எங்கள் வீட்டின் பக்கத்தில் சிறிய குன்று இருக்கே!



சமணப்படுக்கை
வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தாலும் நம்பிக்கை என்னும் வெளிச்சக்கீற்று தெரிவது போல பாறையின் நடுவே வெளிச்சக்கீற்று!  - நன்றி ஸ்ரீராம்



பாறையில் தான் எங்கள் விளையாட்டு
 நான் இங்கு  ஒளிந்து  இருப்பதை என் நண்பர்களிடம் சொல்லாதீர்கள்

கீழே விழுந்துவிடுமோ என்று கவலையுடன் பார்க்கும் பசுமைநடை அன்பர்

ஏய்! ரொம்ப ஓரம் போகாதே

காலை  நேர சூரிய ஒளி ரம்யமானது- நாம் மட்டும் அல்ல ,ஆடும் ரசிக்கிறது 

காலை நேர இளம் வெயில் உடம்புக்கு நல்லதாம், சூரிய ஒளிக் குளியல் செய்கிறேன்


நான் வரேன்  , மலை அழகை ரசித்தீர்களா?

அடுத்த பதிவில் எங்கள் வீடுகள் எங்களை வளர்ப்பவர்கள் வீடுகள் வருதாம் கோமதி அம்மாவின் அடுத்த பதிவில் மறக்காமல்   வந்து விடுங்கள்.

                                                              வாழ்க வளமுடன்.

முத்துப்பட்டிக் கல்வெட்டுக்கள் - பகுதி -3

$
0
0
கீழக்குயில்குடி சமணமலையின் மேற்குப் புறமாக அமைந்துள்ள குன்று முத்துப்பட்டி மற்றும் கரடிப்பட்டி, இது பெருமாள்மலை எனவும் அழைக்கப்படுகிறது.



நான்கு சக்கரம், இரண்டு சக்கர வாகனங்களை இங்கு நிறுத்தி விட்டு எல்லோரும் சேர்ந்து நடந்தோம். 

//முத்துப்பட்டி பெயரே ரொம்ப அழகாக இருக்கு. பெருமாள்மலை போகும் நடைபாதை நல்ல அழகாகவும் ஆசையாகவும் இருக்கு, ஆனா இது குரூப் ஆகத்தானே போகமுடியும்.. தனிக்குடும்பமாக போகப் பயமென நினைக்கிறேன்.//

அதிராவின் பின்னூட்டம்  முத்துப்பட்டி முதல் பகுதிக்கு. 

ஆமாம் அதிரா , குரூப்பாகத்தான் போக முடியும். தனிக்குடும்பாக போவது கஷ்டம் தான்.

 இரு புறமும் முள்காடு -  நடுவில் பாதை - -இடை இடையே வீடுகள்.


கிராமத்து அழகிய வீடுகள் -  பார்ப்போம், வாருங்கள்!


நாய், ஆடு இவற்றுடன் வீட்டின் வெளியே  பசுமை நடை மக்களைப் பார்க்கும் இல்லத்து அரசி.

//அங்கும் மக்கள் இருக்கிறார்களோ... தண்ணிக்கு கஸ்டமாக இருக்குமே..//
அதிராவின் கேள்வி
என் பதில்:-

அங்கும் மக்கள் இருக்கிறார்கள்.  ஆடு, மாடு, கோழிகள், நாய்கள் வைத்துக் கொண்டு ராஜாங்கம் நடத்தும் மக்கள் இருக்கிறார்கள். தண்ணீர் வசதியை
அரசாங்கம் அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள்.

கரையான், ஓலைக் கூறையை அரித்து இருக்க, இல்லத்தில்  ஆள் இருக்கா என்று தெரியவில்லை . ஆனால் ஆடு ஓய்வு கொள்கிறது வாசலில்
இப்போது எல்லோர் வீடுகளிலும்   மின் சாதனங்கள்  இருப்பதால் ஆட்டுக்கல் வெளியில் உருண்டு கிடக்கிறது, அம்மி திண்ணையில் ஓய்வு எடுக்குது. டிஷ்  ஆன்டெனா போட்டு இருக்கிறார்கள்.
 இரட்டைத் திண்ணை, கழிவறை, குளியல் அறை வசதி எல்லாம்  இந்த வீட்டில் இருக்கிறது.
 அழகான கூறை வீடு - மண் , சாணம் மெழுகிய தரை  - அடுப்பு எரிக்க முள் சுள்ளி, அம்மி வெளியே 
 வீட்டில் மேல் கூறை  உரச் சாக்கு போல் இருக்கிறது. காற்றில்  பறந்து விடாமல் இருக்கக் கயிறால் கட்டி வைத்து இருக்கிறார்கள்.
  
தூரத்திலிருந்து படம் எடுத்தேன்,  அவர்கள்  அனுமதியுடன் , 
வீட்டையும் அவர்கள் வெளியில் சமையல் செய்வதையும் படம் எடுத்தேன் , அவர்கள் பூரி செய்து கொண்டு இருந்தார்கள்,  
அன்புடன்,"சாப்பிட வாங்க "என்று எங்களைக் கூப்பிட்டார்கள்..
அந்த கிராமத்தில் இவர்கள் வீடுதான் கொஞ்சம் பெரிது , டெரேஸ் பில்டிங் 
கிட்டிப்புள் விளையாடிக்
 கொண்டு இருந்த  சிறுவன்  அவனை படம் பிடிக்கச் சொன்னான் 
ஆங்காங்கே  தண்ணீர் குட்டைகள், அதில் கல்லைப் போட்டு தண்ணீர் வட்டமிடும் அழகை ரசிக்கும் சிறுவன்.  எங்கள்பயணக்குழுவில்  உடன் வந்த சிறுவன்.



இயற்கையாக அமைந்த  நீர்த் தேக்கத்தின் கரையில் அமர்ந்து  பேசுவது இனிமைதான். (அலைபேசியில் எடுத்தபடம்)

பாறைகளுக்கு நடுவில் நீர்த் தேக்கம்.


                                                      தண்ணீர் வசதி இருக்கிறது.


பழுது அடைந்த வீட்டிலும் கல் திண்ணை.

பன்றிகளும் உண்டு
 ஆடு மேய்ப்பவர்கள் நாங்கள் வீடு திரும்புவதை வேடிக்கை பார்க்கிறார்கள்.

 கிராமத்துத் தெய்வம் (ஊதுவத்தி  பொருத்தி வைத்து இருக்கிறார்கள்)
தெய்வத்தின் பாதமே சரணம் என்று இருக்கும் ஆடுகள். தாயின் மடியைக்  குழந்தைகள்   அசுத்தம் செய்தால்  தாய்க்குக் கோபம் வராது தானே!

கிராமத்துக் குல தெய்வம் போல ! பொங்கல் வைத்து வழிபட்டு இருக்கிறார்கள்.


இந்த கிராமத்து வீடுகளில் ஆடு, கோழி,   வான்கோழி, நாய் வளர்க்கிறார்கள், மாடு யாரும் வைத்துக் கொள்ளவில்லை. 


குட்டி நாய்க்கு அந்த செருப்பிடம் கோபமா? பயமா? ( குட்டி நாய்கள் செருப்பைக் கடித்துத் தூக்கிக் கொண்டு போய் எங்காவது போட்டு விடும்)
                             

                                     சமத்தாய் என் பின்னாலேயே வாருங்கள்!.




எல்லோர் வீடுகளிலும் இரவு கோழியை அடைக்கும் கூடு உண்டு.
திண்ணை இல்லா வீடே கிடையாது. 
திண்ணை கட்டவில்லையென்றாலும் செங்கலை  வைத்து அதன் மேல் கற்பலகையை வைத்து திண்ணை தயார் செய்து இருந்தார்கள் சில வீடுகளில்.

அந்தக் காலத்தில்  மட்டும் அல்ல இப்போதும்  திண்ணை இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்பு திண்ணையில் உட்கார்ந்து ஊர்க் கதைகள் பேசி மகிழ்வார்கள். ஊருக்குள் யார் வந்தாலும் தெரிந்து விடும் எந்த வீட்டுக்கு போகிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று திண்ணையில் உட்கார்ந்து இருக்கும் பெரியவர்களிடம் சொல்லாமல்  கடந்து போய்விட முடியாது.
இப்போதும் வீட்டு வாசலிருந்து நம்மைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

பக்கத்தில் கடைகண்ணி கிடையாது வெகு தூரம் வந்து தான்  பொருட்கள் வாங்க வேண்டும். கோவில்கள் பக்கத்தில் இல்லை , இருந்தாலும் அவர்கள் வீட்டுக்கு அருகில் அமைத்துள்ள தெய்வங்களை வணங்கி திருப்தி அடைகிறார்கள்.

எவ்வளவு வசதிகள் இருந்த போதும் மனதில் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும் சிலருக்கு (என்னையும் சேர்த்து தான்)  இங்கு உள்ளவர்கள் குறைந்த வசதியிலும் மன மகிழ்ச்சியுடன்   வாழ்வதைப் பார்த்தால்  நாம்  எவ்வளவு வசதிகளுடன் மனக்குறையுடன் வாழ்கிறோம் என்று வெட்கம் ஏற்படுகிறது.

"மனம் இருந்தால் பறவைக்  கூட்டில் மான்கள் வாழலாம்." என்ற பாடல்  நினைவுக்கு வருது.

முத்துப்பட்டிக் கல்வெட்டுக்கள் தொடர்கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது. 

                                                                வாழ்க வளமுடன்!


பாடிப் பறந்த பறவை ( புல் புல்)

$
0
0

காகங்கள்  விடாமல்  கரைந்து கொண்டு இருந்தன. என்ன என்று பால்கனி வழியாக எட்டிப்பார்த்தால் புல்புல் பறவை கீழே இறந்து கிடந்தது. 

அன்று காலையில் கூட பறந்து பறந்து தன் இணையுடன் குதூகலமாய் விளையாடிக் கொண்டு இருந்தது. எதிர்வீட்டு மாடிக்கு வருவதும், கேபிள் ஒயரில் அமர்வதும் எங்கள் வீட்டில் வைத்து இருக்கும் உணவைக் கொத்தி விட்டுச் செல்வதும்  என்று குதூகலமாய்ச் சுற்றிப்பறந்த புல்புல் பறவை தரையில் விழுந்து கிடப்பதைப் பார்த்து வருத்தமாய் இருந்தது.




                                                 பூச்சியை பிடித்து செல்கிறது.


மைனாக்கள் புல்புல் பறவையைக் கொத்திக் கொத்தி இழுத்துச் சென்றது. வளாகத்தைக் கூட்டும் பெண் அந்தப்  பறவையை ஓரமாய் ஒதுக்கி அதன் மேல் பழைய துணியைப் போட்டு மூடி வைத்தவுடன் காகம், மைனா எல்லாம் சிறிது நேரத்தில்  அந்த இடத்தை விட்டுச் சென்றன.

நேற்று வரை என்னை மகிழ்வித்த பறவை இன்று இல்லை என்று நினைக்கும் போது மனம் கனத்துப் போகிறது. ஏன் இப்படி ஆச்சு என்ற கேள்விகள் மனதில் . இணையைப் பிரிந்த மற்றொரு புல்புல் பறவையை இரண்டு நாளாகக்  காணோம்.

மாயவரத்தில் இருக்கும்போது புல்புல் பறவை நான் மொட்டைமாடியில் வைக்கும் உணவை எடுக்க வரும். அதிகாலை முதல் மாலை வரை அதனைப்பார்க்கலாம். பக்கத்து வீட்டு தென்னைமரத்தில் ஊஞ்சல்  ஆடும்.
கொடிக் கம்பியில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும். எங்கள் குடியிருப்பில் மற்றொரு பக்கம் இருந்த மாடிப்படியின் அருகில் கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து குஞ்சுகளுக்கு உணவூட்டுவதை, காத்திருந்து காத்திருந்துஎன்று பதிவு போட்டு இருந்தேன் .அப்போது எல்லாம் சின்ன காமிரா. அதிக தூரம் ஜூம் செய்ய முடியாது.


அதிகாலையில் 
மதிய வேளையில்
மதியம் 
மதியம்
மாலை நேரம் தென்னை மர ஊஞ்சல்
மாலை நேரம் உல்லாசமாய் ஊஞ்சல் ஆடும்   புல்புல் 

வாழ்க வளமுடன்

குன்றத்தூர் உதயகிரீசுவரர் கோயில்

$
0
0
மதுரையிலிருந்து சிவகங்கை சாலையில்  25 கி.மீ தூரத்தில்  இருக்கிறது குன்றத்தூர். போன வருடம் (2016) போய் இருந்தோம்.  தொல்லியல் துறை பொறுப்பில் உள்ளது. குன்றத்தூர்  உதயகிரீசுவரர் கோவில் அருகில்   உள்ள மலைக்குகைகுள் இருக்கும்  பைரவர் பற்றிக் கேள்விப்பட்டு  தேய்பிறை அஷ்டமிக்கு பைரவர் தரிசனம் செய்யலாம் என்று போனோம்.  அங்கு சமணப்படுக்கையும்,  பிராமிக் கல்வெட்டுக்கள், முருகன் கோவிலும் இருக்கிறது.

நாங்கள் போன போது  நிறைய கூட்டம் வந்து இருந்தது , எல்லோரும் மதுரையிலிருந்து ஒரு  குழுவாய்  சேர்ந்து வந்து இருந்தார்கள்.

இக் கோவிலைப்பற்றி  மேலும் விவரம் தெரிந்து கொள்ள டாக்டர் சுபாஷினி அவர்களின் காணொளியைப்  பார்க்கலாம்.(Dr.K. Subashini)



கிழக்குத் திசை நோக்கி இருக்கும் சிவன்- வாயிலில் துவாரபாலகர்கள் 
நந்தி பிற்காலத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.. தூணில் தாமரைப் பூ விரிந்த நிலையில் இருக்கிறது.

இவர்தான் இந்த கோவில்களைப் பார்த்து கொள்கிறார், மேலே இருப்பவர்களைப் பற்றி கடைசிக்கோவில் போகும்போதுதான் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.

சதுர வடிவ ஆவுடையாருடன்   சிவலிங்கம்

இரண்டு கைகளுடன் நின்ற நிலையில் விநாயகர் சிலை -முற்றுபெறவில்லை
பக்கத்தில் இயற்கை சுனை நீர்
சமணக்குகை செல்லும் பாதை

உள்ளே சமணப்படுக்கை
மலைக் குகைக்குள்
கீழே குனிந்து போக வேண்டும்
சமணப்படுக்கைகளில் இப்போது சாமான்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த கோபாலன் போல் என்னவர்
நாங்கள் அமர்ந்து இருக்கும் இடத்தில் ஆடுபுலி ஆட்டம், பாதங்கள் எல்லாம் வரையப்பட்டு இருக்கிறது.
மலைக்குகைகுள், பைரவர், முருகன், பெருமாள், சிவன் எல்லோரும் இருக்கிறார்கள்


இந்தக் கோவிலுக்கு வரும் பாதையில் அழகான மரக் குகை  போன்ற தோற்றம் அளிக்கும் மரக்கூடாரம்.

மலைக்குகைக்குள் இருக்கும் தெய்வங்கள்  பற்றி அடுத்த பதிவில்.
                                                           வாழ்க வளமுடன்!

அஸ்தகிரீசுவரர் கோயில் - குன்றத்தூர்

$
0
0



மலைக்குகைக்குச் செல்லும் பாதை

ஜூலை 1ம் தேதி  குன்றத்தூர் உதயகிரீசுவரர் கோயில்  பகுதியின்  தொடர் பகுதி - குன்றத்தூர் உதயகிரீசுவரர் அருகில் உள்ள சமணக் குகைக் கோயிலில் உள் இருக்கும்தெய்வங்கள்.


"சிவலிங்கத்திற்கு பூஜை செய்யுங்கள் சார்"என்று தீபத் தட்டைக் கொடுத்தார் , உள்ளே இருட்டு -தீபஓளியில் சிவன் அழகாய் தரிசனம் தந்தார் வெண்பட்டில்.


பைரவர்
பைரவருக்கும் பூஜை செய்யச்  சொன்னார் குருக்கள்
முருகன்
சித்தர்

அடுத்து அஸ்தகிரீசுவரர் கோயிலுக்கு எங்களை அழைத்துப் போனார் குருக்கள்.  கொஞ்ச தூரம் பயணிக்க வேண்டும்  குகைக் கோயிலுக்கு ப்பின்புறம் இருக்கிறது  அஸ்தகிரீசுவரர் கோயில் .  

போகும் பாதையோரம் தாமரைக்குளம்


கிராம காவல் தெய்வங்கள்
பொன் ஊர்காவலன் சுவாமி
சப்த கன்னியர்கள்



அஸ்தகிரீசுவரர்
அழகிய நந்தி 
குருக்கள் எங்களுடன். காரில் வந்தார் அடுத்த கோவில் காட்ட.
அது மலைமேல் அமைந்துள்ளது, இரண்டு பக்கமும் மலைகளை வெட்டி எடுத்து விட்டதால்   கிடங்கு போல் காட்சி அளித்தது அதில் மழைத் தண்ணீர்  சின்ன ஏரி போல் காட்சி அளித்தது.  மலைக் குகை அருகில் தாமரைக்குளம் அழகாய் காட்சி அளித்தது. இவை எல்லாம் அடுத்த பதிவில்.

அங்கு  உதயகிரீசுவரர் கோவிலில் பார்த்த அன்பர்களை மீண்டும் பார்த்தோம் அவர்கள் யார் என்று அறிமுகபடுத்திக் கொண்டார்கள். மதுரையை சேர்ந்த வக்கீல்கள்.  அவர் அவர் குடும்பத்தினருடன் வந்து இருந்தார்கள்.

அவர்களும் பசுமை நடை போல் ஒரு இயக்கம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். முக்கியமான சமணகுகைகள், படுக்கைகள் உள்ள இடங்களை   ஆவணப்படுத்திக் கொண்டு இருக்கிறோம் என்றார்கள்.


வாழ்க வளமுடன்.




திருநீலகண்டேசுவரர் திருக்கோவில் - குன்றத்தூர்

$
0
0
குன்றத்தூர் கோவில் -  நிறைவுப் பகுதி.

பழைய பதிவுகள் படிக்க வேண்டும் என்றால் படிக்கலாம்.

மதுரையிலிருந்து  சிவகங்கை செல்லும் சாலையில் 25  கி.மீ தூரத்தில் இருக்கிறது.

அஸ்தகிரீசுவரர்  கோவிலிருந்து   1. கி.மீ தூரத்தில் இருக்கிறது திருநீலகண்டேசுவரர் கோவில்.  மலைப்பாதையில் ஏறிப் போனால் சிறிது தூரத்தில் கொஞ்சம் படிகள் சிமெண்டில் கட்டி இருக்கிறார்கள்.

முந்தின பதிவில் சொன்ன வக்கீல்கள் அவர்கள் குடும்பத்தினர்களுடன் அங்கு இருந்தார்கள்.
"நீங்கள் யார் சொல்லி வந்தீர்கள்?"என்று எங்களிடம் கேட்டார்கள். "யார் சொல்லியும் வரவில்லை, கணினியில் பார்த்துப் பார்க்க வந்தோம் "என்றவுடன் இந்த மாதிரி இடங்களுக்குத் தனியாகவா என்று ஆச்சரியப் பட்டார்கள்.  அங்கு இருக்கும் அமைதிக்கு ஆள் அரவம் இல்லாமல் இருப்பதற்கு, அவர்களைப்போல் போல் கூட்டமாய் வந்தால் தான் நன்றாக இருக்கும், பாதுகாப்பும் கூட.
பெரிய பாறையை கிரானைட்டுக்காக வெட்டி எடுத்து  விட்டதால் இரு பக்கமும் அகழியும் நடுவில் வழித்தடமும் போல் இருக்கிறது.


வழித்தடத்தைக் கடந்து வந்தால் பாறைகளுக்கு நடுவில் அழகான தாமரைக் குளம்.

தாமரைகள் மலர்ந்து மகிழ்ச்சியாக  வரவேற்றது
மழைத் தண்ணீர் சிறிய ஆறு போல்
மலை வெட்டப்படுவது தடை செய்யபட்டதால்  மலைகளுக்கு நடுவில் ஆறு வளைந்து சென்றது போல் காட்சி அளிக்கிறது இதிலும் தண்ணீர் இருந்து இருந்தால் பார்க்க மிகவும் அழகாய் இருக்கும்.

இது அழகாய் இருக்கிறது தானே?

தாமரைக் குளத்தைத் தாண்டிப் போனால் கொஞ்சம் சிமெண்ட் படி இருக்கிறது
 கோவிலுக்கு போகும் பாதையின்  இரு மருங்கிலும் எலுமிச்சம்புற்கள் வளர்ந்து இருக்கிறது.
கல்லாலான  தொட்டி - பக்கவாட்டில் சிறிய ஓட்டை வேறு இருக்கிறது 
பெரிய பாறையை ஒட்டி கட்டுமானம் பாதியில் நிற்கிறது.
என்ன துவாரம் என்று தெரியவில்லை ஏதாவது சிலை வைக்க ஏற்பாடு ஆகி இருக்குமோ தெரியவில்லை
கோவில் வெளி வாசல் இரு புறமும் திண்ணை கட்டி இருக்கிறார்கள்.
இவர்கள் தான் புதிதாக கட்ட உதவியவர்கள் 

வலஞ்சுழி விநாயகர் - கைவிரல்கள் எல்லாம் அழகாய்த் தெரிகிறது 
முருகர்
திருநீலகண்டேசுவரர்

துவாரபாலகர் வித்தியசமாய் இருக்கிறார், காலில் வெட்டுப்பட்டு இருக்கிறது,   
வித்தியாசமான துவார பாலகர்
நந்தியும் வேறுபாடாய்த் தெரிகிறார்

                                                            காமாட்சி அம்மன்


வேப்பமரத்தின் அடியில் நாகங்கள் மஞ்சள்  பூசி, பொட்டு வைத்து இருக்கிறது . கிராமத்து மக்கள் வருவார்கள் என்று தெரிகிறது.
சப்த கன்னிகள்

காலை உணவு கையில் கொண்டு வந்து இருந்தார்கள்,பொங்கல், வடை, கேசரி, இட்லி  கொண்டு வந்து இருந்தார்கள். எங்களைச்  சாப்பிடச் சொன்னார்கள். நாங்கள் ஞாயிறு காலையில் எப்போதும் விரதம் -.சாப்பிடுவது இல்லை, மிகவும் அன்புடன்  கேட்டுக் கொண்டதால்   மதியம் சாப்பிடுகிறோம் என்று  வாங்கிக் கொண்டோம் .

 சாப்பிட்டு முடித்தவுடன் வந்த இடத்தின் வரலாற்றைப் பற்றிப் பேசுவார்களாம்,  அடுத்துப் போவதைப் பற்றியும் பேசுவார்களாம். இருக்க ச்சொன்னார்கள் ஆனால் வீட்டுக்கு விருந்தினர் வருவதாய் போன் வந்ததால் அவர்களிடம் விடைபெற்று வந்தோம்.  அவர்கள் மெயில் முகவரி, எல்லாம் கொடுத்தார்கள். வீடு மாற்றத்தில் எங்கோ   தொலைந்து விட்டது.

அவர்களிடம் விடை பெற்று அமைதியான  அழகான மூன்று கோவில்கள் தரிசனம்   செய்து வந்தோம்.

தொடர் பயணத்தில் தொடர்ந்து வந்த அனைவருக்கும் நன்றி.

                                                            வாழ்க வளமுடன்

பயணத்தின்போது கண்ட காட்சிகள்

$
0
0
மாறுதலாக ஒரு பதிவு. ஸ்ரீராம், வெங்கட்.  இருவரும் இன்று போட்ட பதிவைப்பார்த்தவுடன் நான் எடுத்த படங்களை மட்டும் போட்டால் என்ன என்ற ஆசை வந்து விட்டது. பயணங்கள் போது எடுத்த படங்கள்.
இந்த படங்களில் கடைசியில் நான் எடுத்த படங்கள்தான்  என்பதை உறுதிப்படுத்துவது போல் ஒரு குறிப்பு  இருக்கிறது. சொல்லுங்கள் பார்க்கலாம் பார்த்து.


மரத்தின் நிழல்  தெரிகிறதா ? மதில் மேல்

  கோவில் மதில்  மேல்   வயதான குரங்காரார் அமர்ந்து   மனிதர்களை வேடிக்கை பார்க்கிறார். 
திருப்பரங்குன்றம்  மதில் மேல் அமர்ந்து இருக்கும் குரங்காரார்

அணிலே! அணிலே ! அழகு அணிலே என்ன வேலை செய்கிறாய்?


பறித்துப் பறித்துக்காய்களைக் கொறித்துக் கொறித்துக் தின்கிறேன்
(பரங்குன்றம் மலை)


ஏதாவது தரமாட்டாயா? என்ற பார்வை. 


அம்மி, ஆட்டுக்கல்லில் அமர்ந்து அரைக்க  மரப்பலகை 
பாரதியாரைப் போலீஸ்காரர் படம் எடுக்கும் போது தலையைக் குனிந்து தலைப்பாகையை  மட்டும் காட்டுவார். அது போல் வாத்து தலையை தன் முதுகில் மறைத்துக் கொண்டது.
முகம் காட்டி விட்டேன் இப்போது திருப்தியா?

பூவும் எறும்பும்


உச்சிக் கொம்பில் அமர்ந்து பார்க்கும் புல் புல் (பரங்குன்றம்)


பெளர்ணமி பால்குடம், காவடி பரங்குன்றம் முருகனுக்கு

மைசூரு - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் 

'ஊரெங்கும்  என் தயவு வேண்டி இருக்கிறது வருணபகவான் வரவில்லாமல்'என்கிறதோ தண்ணீர் லாரி.
இதன் வரவு குறைய  வருணபகவான் மழையைக் கொடுக்க வேண்டும் உயிர்கள் தழைக்க!


வாழ்க வளமுடன்.


திடியன் மலை

$
0
0
திடியன் மலை
திடியன் மலை மதுரையிலிருந்து  தேனீ பாதையில் 31 கி,மீ தொலைவில் உள்ளது.

                  
                
                           விழாவிற்கு சமைத்துக் கொண்டு இருப்பவர்கள் 

போன ஞாயிறு (02/07/2017) திடியன்  என்ற ஊருக்குப் போனோம்.
 (காலை 6 மணிக்கு கிளம்பினோம்).  அங்குள்ள  ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில்  உள்ள  தட்சிணாமூர்த்தியைப்பற்றி இணையத்தில் படித்து அவரைப் பார்க்கப் போனோம். தட்சிணாமூர்த்தி 14 சித்தர்களுடன் நந்தியின் மேல் அமர்ந்து இருப்பார், மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் என்று படித்தோம். நாங்கள் போன போது கோவில் நடை திறக்கவில்லை. பக்கத்தில்  இருந்த சமுதாயக்கூடத்தில்  ஏதோ விழாவிற்குச்  சமைத்துக் கொண்டு இருந்தவர்கள் குருக்கள் 7மணிக்கு வந்து விடுவார், 10 மணி வரை இருப்பார், அதற்குள் மேலே போய் வந்து விடுங்கள் என்றார், மேலே உள்ள மலைக் கோவிலைக் குறிப்பிடுகிறார் போக முடியுமா? என்ற கேள்வியை அங்கிருந்த பெரியவரிடம் கேட்டோம்.  அவர் போகலாம், படிகள் இருக்கு , பிடித்துக் கொண்டு ஏறக் கம்பி இருக்கு போய் வாங்க பயமில்லை மேலே போலீஸ் இருக்கிறார் என்றார்.

பெரியவர் சொன்னால் பெருமாள் சொன்னது போல என்பார்கள். மேலேயும் பெருமாள் தான் இருக்கிறார், போய் வந்து விடுவோம் என்று கிளம்பினோம். அன்று நவமி வேறு . மலையின் பேரும் ராமர் மலை என்கிறார்கள். ராமருக்கு நவமி விஷேசம் இல்லையா?
அவர் அழைக்கிறார் போய் வருவோம் என்று  கிளம்பினோம்.

 அவன் இன்றி அணுவும் அசையாது, எல்லாம் அவன் விருப்பம்,  நடப்பது எல்லாம் நாராயணன் செயல் என்பதை உணர்ந்த கணம். கைலாசநாதரைப் பார்க்க வந்தோம், அவர் முதலில் பெருமாளைப் பார்த்து வா என்கிறார்.

"மலைகள் என்னை அழைக்கின்றன நான் போயே ஆக வேண்டும்"   ஜான்முய்ர் சொன்னது போல் நான் மலைக்கோவில் போக வேண்டும் என்று நினைக்கவில்லை   ஆனால் மலையில்  உள்ள மலையப்பர்   அழைத்து விட்டாரே ! 

//மலைகளின் அழைப்பு
"மலைகள் என்னை அழைக்கின்றன. நான் போயே ஆக வேண்டும்."என்பது ஜான் முய்ரின் மிக பிரபலமான வாசகம். மலையேற்ற ரசிகர்களின் காயத்ரி மந்திரமாக விட்டவை இவ்வரிகள்.
மலைகள் தன் உச்சிகளிலும் மடியிலும் பல ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கின்றன. மலைகள் மேல் கொள்ளப்படுவது பெருங்காதல். தீராக் காதல். குறிஞ்சி நிலமே எண்ணற்ற கவிஞர்களை உருவாக்கியது. சங்க காலம் தொட்டு, மலைகள் படைப்பூக்கத்தை விருத்தி செய்யும் ஒரு லாகிரியாக இருப்பது.
நமது பண்பாட்டில் மலைகளுக்கு பெரிய ஆன்மிக முகம் உண்டு. இமயத்தில் சிவன், மலையாஜல புத்ரி பர்வதராஜகுமாரியான பார்வதி, ஏழுமலைவாசி பெருமாள், குன்று தோறாடும் குமரன், உச்சிப் பிள்ளையார், சபரிமலை ஐயப்பன் என்று இறையில்லங்களாய் மலைகளே இருக்கின்றன.
மலையேற்றம் நம்மை உடைக்கின்றது. இயற்கையின் முன்னர் நாம் எத்தனை சிறியவர்கள் என்று உணர்த்துகிறது. மலையுச்சியைத் தொட்டு, சாதித்து விட்டதாய் நாம் நிமிரும் போது, தோள் மேல் பிள்ளையை ஏற்றி மகிழும் தகப்பனைப் போல் இறுமார்ந்து நிற்கிறது.//

மோகன்ஜி அவர்கள் முகநூலில் அவர் போன ஆஸ்திரியப் பயணக் கட்டுரையில் மலைகளின் அழைப்பை குறிப்பிட்டு இருந்தார். 
பதிவுக்கு பொருத்தமாய் உள்ளதால்  இங்கு பகிர்ந்து இருக்கிறேன்..

மலைக்கு  சீக்கீரம் போய் திரும்ப வேண்டும் என்று கிளம்பிய வேகம் சுற்றுப்புறம் கவனத்தில் இல்லை, மலை மேலேயே கவனம்  முழுவதும்.  கைலாசநாதரைத்  தாண்டி வந்தால் வல்லப கணபதி, அதற்கு அடுத்து  தாமரை குளம் - காய்ந்து கிடக்கிறது, வேண்டுதலுக்குக் கலர் மீன்களை இந்த தாமரைக் குளத்தில் விடலாம், நேர்த்திகடனாய் என்று  அறிவிப்புப் பலகை இருக்கிறது அதை வந்து  போட்டோ எடுத்துக் கொள்ளலாம், என்று அதை எல்லாம் நின்று கவனிக்காமல்  எங்கள்  பயணம் தொடர்கிறது.

இந்த  அலங்கார தோரண வாயிலைக் கடந்து போனால் ஆலமரத்தடியில் விநாயகர்  இருக்கிறார். அவரையும் கடந்து போகிறோம்.

அடுத்து, பிள்ளையார் ,மூஞ்சூரு,  கல் விளக்குத் தூண் இருக்கிறது அவரையும் ஒரு நிமிடம் நின்று கும்பிடவில்லை  மலைப் பாதை கண்ணில் தெரிகிறதா? என்று மட்டும் கவனம்

. மலையடிவாரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன்  பெருமாள் இருக்கிறார்

மடப்பள்ளி
கோவிலுக்கு போகப் படிகள்
கோவில் உள் வாசல்
மூலஸ்தானம்

குழலூதும் கண்ணன் இரு பக்கமும் நாகர்கள்.

விஷ்ணு அமர்ந்த நிலையில்,ராமானுஜர், நம்மாழ்வார் என்று நினைக்கிறேன். சொல்ல பட்டர் இல்லை.கதவு திறந்து இருந்தது. எல்லா தெய்வ விக்கிரங்களுக்கும் தைலக்காப்பு செய்து இருந்தார், தண்ணீர் எடுக்கச் சென்று இருந்தார் போலும்.
கருடாழ்வார்

 மலையில் உள்ள பெருமாளைத் தரிசனம் செய்து வந்தபின் தான் பார்த்தோம். இவர்களை, விநாயகரை பார்க்காமல் மேலே போய் வந்ததற்கு அவர் விளையாடிய விளையாட்டை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

நீங்கள் மலைக் கோவில் போகும் முன் விநாயகரை வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள பெருமாளை வணங்கி பின் மேலே போய் வாருங்கள் அதற்குதான் முதலில் அவர்கள் படத்தையும், செய்தியையும் பகிர்ந்து இருக்கிறேன்.

                        
பெருமாளே !  என்று  வணங்கி மலை மேல் சிமெண்ட்டால் கட்டப்பட்டு இருந்த படிகளில்  ஏற ஆரம்பித்தோம். படி நன்றாக இருக்கிறது இல்ல என்று பேசிக் கொண்டே .
  
ஒரு பையன் மலையேறும் பயிற்சியில் இருப்பவர் போலும் கீழ்ப் படியில் அலைபேசியை வைத்து விட்டுப் படிகளில் ஓடி ஏறிக்  கொண்டும்  இறங்கிக் கொண்டும் இருந்தார் 

ஓ! எளிதாக இருக்கும் போல இருக்கே ! என்று எண்ணிய எண்ணம்  சரியா?
அடுத்த பதிவில்.

என் கணவர் வரைந்த அனிமேஷன்  கார்ட்டூன் படம்.



வாழ்க வளமுடன்.

திடியன் மலை- பகுதி-2

$
0
0
கணவர் வரைந்த படம்

திடியன் மலை ஏற ஆரம்பித்தோம். இவ்வளவு வேகமாய் இல்லை  மெதுவாய்.

நேற்று இதன் முதல் பாகம்படிக்க  முந்திய பதிவில் சொன்னது போல் 
ஓ! எளிதாக இருக்கும் போல இருக்கே ! என்று எண்ணிய எண்ணம்  சரியா?

சிமெண்ட் படி முடிந்து விட்டது

வீடு கட்டும் கம்பியை வளைத்து ஒன்றுடன் ஒன்று கோர்த்து கைப்பிடிக்கு வைத்து இருந்தார்கள்.
பாறையில் செதுக்கிய படிகள். பத்துப் பத்து படிகள் ஊர்க்காரர்கள் உபயம்.
தொடர்ந்து போக முடியுமா இதில் என்று பயம் வந்து விட்டது, சிமெண்ட் படியில் ஓடி ஓடி இறங்கிக் கொண்டு இருந்த பையனிடம் கோவில் இன்னும் எவ்வளவு தூரம் என்றேன் அந்த பையன் சிரித்துக் கொண்டே ஒன்றும் சொல்லாமல் கீழே இறங்கி விட்டார்.

அவர் சொல்லி இருந்தால் நான் மேலே ஏறிப் போய் இருப்பேனா என்பது சந்தேகமே! படிகள் ஒழுங்கற்று இருந்தது. படியின் விளிம்பு   கீழ் நோக்கி சரிந்து இருந்தது.  என் கணவரிடம் என் கைப்பையைக் கொடுத்து விட்டு அலைபேசியை  போட்டோ எடுக்கும்போது மட்டும் வாங்கி எடுத்து விட்டு அவர்களிடம் கொடுத்து விடுவேன். 'ராம ராம'என்று சொல்லி ஏற ஆரம்பித்தோம். 7 மணிக்கு  ஏற ஆரம்பித்தோம். ஐயப்ப பக்தர்கள் சொல்வது போல் ஏற்றிவிடப்பா  ராமா ராமா என்று ஏற ஆரம்பித்தோம். இனி படிகளைப்பற்றி  தெரிந்து கொண்டுதான் மலை ஏற வேண்டும் என்று சொன்னேன்.

வாய் உலர்ந்து போனது. மலைக்கோவில் போகும்போது நெல்லிக்காய் கொண்டு போக வேண்டும் என்று தெரிந்து இருந்தது, ஆனால் இந்த மலைக் கோவில் திடீர் என்று அமைந்த பயணம்.(திடியன் மலைக்குத் திடீர்ப் பயணம்.) முன் ஏற்பாடு இல்லையே! அதனால் கொண்டு போகவில்லை. ஒரு பாட்டில் தண்ணீரைக்  கொஞ்சமாய்க் குடித்துக் கொண்டோம்.

வேறு சிந்தனை இல்லாமல் ராம நாமத்தை மட்டுமே சொல்லி ஏறினோம்.

உடைந்த கல் படியில் கொஞ்சம் சிமெண்ட் பூச்சு  , அடுத்து சின்ன சின்னதாய் வெட்டிய படிக்கட்டுக்கள்

மீண்டும் கொஞ்சம் சிமெண்ட் பூச்சுப் படிக்கட்டுக்கள்
அப்புறம்  செதுக்கிய படிக்கட்டுக்கள் கைப்பிடி மிகவும் தள்ளி இருந்ததால் கம்பி என்கைக்கு  எட்டவில்லை
 நான் இரண்டு கைகளால் தவழ்ந்தபடி 
 ஏற ஆரம்பித்தேன்.
மேலே இருந்து பார்த்தால் ஊர் தண்ணீர் இல்லாததால் காய்ந்து கிடக்கும் வயல்கள். காமிரா மறந்து விட்டதால் அலை பேசிதான். காமிரா கொண்டு போய் இருந்தாலும் எனக்கு எடுப்பது கஷ்டம் தான் காற்று வேறு தள்ளுகிறது.


படியில்லாமல் சிறிது தூரம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கோவிலைப் பார்க்க முடியவில்லை.
கொஞ்சம் படிகள் தெரியுது
கோவில் தெரியுது வந்து விட்டது என்று   மகிழ்ந்தோம்
மீண்டும் கொஞ்சதூரம் சிமெண்ட்     நடை பாதை
என்னை முன்னாலே  போகவிட்டு அவர்கள் 'பின்னால் மெதுவாய் ஏறு கீழே பார்த்து வா'என்று சொல்லியே வந்வர்களைப் போட்டோ எடுப்பதற்காக முன்னாலே       போக வைத்தேன்.
இன்னும் சிறிது தூரம் தான் வந்து விட்டோம்  என்ற நிம்மதி

கோவிலும்  டவரும் தெரிகிறது 
வந்து விட்டோம் என்று நினைத்தால் இன்னும் போகிறது
நாங்கள் மேலே ஏறிப் போகும் வரை வெயில் வரவில்லை 
சூரியபகவான்  கருணை காட்டினார்.
கீழே இருக்கும் கைலாச நாதர் கோவில்  தீபத்திருநாள் அன்று கார்த்திகை மாதம்    ஏற்றும்  இடமும் கோவிலும் தெரிகிறது
கீழிருந்து   மேலே போக எங்களுக்கு  ஒன்றே   கால் மணி நேரம் ஆச்சு. நாங்கள் மேலே போகிறவரையில் யாரும் அங்கு வரவில்லை.

(மொத்தப்படிகள் 1100.அது தவிர படிகள் இல்லாமல் ஏற்றமான பாதையும் (ரேம்ப்) உண்டு.மேலே ஏறும்போது  படிகளை      எண்ணவில்லை. நாம ஜபம் மட்டும் தான். கீழே இறங்கும்போது தான் படிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டோம்.)

இவ்வளவு கஷ்டப்பட்டு  இறைவன் அருளால் ஏறி வந்தோம். நாமா ஏறினோம் என்ற மலைப்பு ! நாமா ஏறினோம் ! மலையப்பன்  அல்லவா ஏற்றிவிட்டார்.

 கீழ் இருந்து பார்த்த எனக்கு  பூட்டிய கதவு  அருகில் என் கணவர் நின்றதைப் பார்த்து   ஏமாற்றமாய் இருந்தது.

 வா வா சாமி தெரிகிறது  என்று கணவர்  அழைத்தை கேட்டு   எல்லையற்ற மகிழ்ச்சி . ராமர் மலை என்றார்கள். உள்ளே இருந்தது   என்ன சாமி? ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இருக்கிறமாதிரி இருக்கிறதே ! என்று  கேட்டுக்  கொண்டே  கணவரின் பக்கம் போய் பூட்டிய கதவு வழியாக பார்த்தேன்.

உள்ளே யார் இருந்தார்?  என்பதை அடுத்த பதிவில்.

                                                               வாழ்க வளமுடன்.

திடியன் மலை நிறைவுப் பகுதி

$
0
0
கூகுள் படம் - திடியன் மலை (நன்றி)

 திடியன் மலை  உயரம் 320 மீட்டர்-  கூகுள் - உதவி  (நன்றி)

//வா வா சாமி தெரிகிறது  என்று கணவர்  அழைத்ததைக்   கேட்டு   எல்லையற்ற மகிழ்ச்சி . ராமர் மலை என்றார்கள். உள்ளே இருந்தது   என்ன சாமி? ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இருக்கிறமாதிரி இருக்கிறதே ! என்று  கேட்டுக்  கொண்டே  கணவரின் பக்கம் போய் பூட்டிய கதவு வழியாகப் பார்த்தேன்.

உள்ளே யார் இருந்தார்?  என்பதை அடுத்த பதிவில்.//

போன பதிவில்  உள்ளே யார் இருந்தார் என்று  அடுத்த பதிவில்  சொல்கிறேன்  என்றேன், உள்ளே பெருமாள் நான்கு கரங்களுடன் இருந்தார். வெண்பட்டில் அழகாய்  இருந்தார். கண்குளிரப் பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் அமர்ந்து  அவரை நினைத்து ஜபம் செய்து விட்டு மழைக்காக "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி"திருப்பாவை பாடினேன். மலையைச் சுற்றி ஒருகாலத்தில் செழுமையாக இருந்திருக்கிறது.. இப்போது புற்கள் காய்ந்து கிடக்கிறது.

பெருமாளுக்கு முன்புறம் இருந்த கருடாழ்வாருக்குக் கொண்டு போன பூவைச் சார்த்தி வழி பட்டோம்.  அவர் பெயரைக் குறிப்பிட்டு இருக்கலாம், பெயர் தெரியவில்லை.தெரிந்துகொள்ள பட்டரும் அங்கு இல்லை. பேர் தெரியவில்லை என்றால் என்ன? 

வெண்கலமணிகள் நிறைய கட்டி இருக்கிறது.வேண்டுதல் நிறைவேறித்தானே இவற்றைப்
பெருமாளுக்குக் கொடுத்து இருக்கிறார்கள்,கேட்டதைக் கொடுப்பவர் தான். வரங்களைக் கொடுப்பவரை வரதராஜபெருமாள்  என்று அழைத்துக் கொண்டேன்.

உள்ளே பெருமாள் நான்கு கரத்துடன் 
 இருந்தார்.அழகான துவாரபாலகர்
தரை  நவீனப்படுத்தியிருக்கிறார்கள்
அலைபேசியில் இவ்வளவு தூரம் தான் ஜூம் செய்ய முடியும்.
கோவில் சுவர்களில் எல்லாம் வந்தவர்கள்  
தங்கள் பெயர்களை  எழுதி வைத்து இருக்கிறார்கள்.
 நானும் இவ்வளவு தூரம் ஏறிப்பார்த்து இருக்கிறேன் என்பதை நினைத்துக் கொள்ள ஒரு படம்.


கருவறை விமானம்
மழை மேகம்

கருடாழ்வாருக்கு நாங்கள்  வாங்கிப் போன பூக்களைச் 
சார்த்தி  வழிபட்டோம்.
நட்சத்திரக் கல்வெட்டு வலது பக்கச் சுவரில்இருக்கிறது நடுவில் ஓம் என்று இருக்கிறது

கோவிலைச் சுற்றி வந்து இயற்கைக் காட்சிகளை ரசித்தோம்.
(கணவர் வரைந்த படம்)

 போலீஸ் தகவல் தொடர்பு (சிக்னல்) டவர் இருக்கிறது . 

நாங்கள் கீழே இறங்கி வரலாம் என்று நினைக்கும்போது ஒருவர்  வந்தார், வேர்க்க விறுவிறுக்க, சட்டையைக் கையில் சுருட்டி வைத்துக் கொண்டு, தண்ணீர் பாட்டில், உணவு எல்லாம் கொண்டு வந்தார் கையில். அவரிடம் பேசினோம். அவர் தன்னைத் தொலைத்தொடர்புக் காவலர் என்றார்.

 இன்னும்  இரண்டு பேர் இருக்கிறார்கள்,  வருவார்கள்  என்றார். ஒரு நாள் ஏறி வருவதே எங்களுக்குக் கஷ்டமாய் இருக்கிறதே! உங்களுக்குக்  கஷ்டமாய்  இருக்குமே என்றதும் என்ன செய்வது வேலை இங்கு தானே என்றார்.  

அவரிடம் கூட்டம் வருமா? என்று கேட்டோம் பெளர்ணமிக்கு நல்ல கூட்டம் வரும் என்றார். கார்த்திகை தீபத்திற்கு தீபம் ஏற்ற வருவார்கள் என்றார். பெளர்ணமிக்குக் கிரிவலம் வருவார்கள் என்றும் கூறினார்.

அவரிடம் விடைபெற்று கீழே இறங்க ஆரம்பித்தோம். கீழே இறங்கும்போது கவனம் மிகத் தேவை. படி கீழே வழுக்கி விடும். சில இடங்களில் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து இறங்கினேன்.

  
 கீழே இறங்க ஆரம்பித்தோம்.
இன்னொரு காவலரும் வந்தார். வெயில் ஆரம்பித்து விட்டதால் சட்டையை 
தலைக்குப் போட்டுக்கொண்டு, மதிய உணவை வாங்கிக் கொண்டு ஏறுகிறார். என்னைப்பார்த்து கவனமாய் இறங்குங்கள் அம்மா என்றார். 


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் ஏறிக்கொண்டு இருந்தார்கள்  ஒரு பையன் மட்டும் மேலே வேகமாய் வந்து விட்டார்.

ஒருவர் மலையில் காய்ந்த  மஞ்சள் புற்களை அரிந்து மூட்டையாகக் கட்டி மலைப் பகுதியில் கொஞ்ச தூரம் படிகள் இல்லாத பக்கம் வருகிறார். பிறகு சிமெண்ட் படியில் இறங்கிப் போகிறார்,  அங்கு ஒரு பெண் வாங்கிக் கொண்டு இறங்குகிறார். மீண்டும் மலைப் பாதையில்  ஏறுகிறார், அங்கு ஒரு அம்மா புற்களை அரிந்து தருகிறார்.  மலைப் பக்கம் இருக்கும் ஆண், பெண் இருவரின்  உடல் வலிமையும், உழைப்பும்  வியக்க வைக்கிறது.    தினம் மலை ஏற வேண்டும் என்றால்   மன உறுதியும்  வேண்டும்.
எவ்வளவு தூரம் இன்னும் ஏற வேண்டும்!  அதற்குள் அமர்ந்து விட்டார்கள்.

கைக் குழந்தை, புதிதாக திருமணமான ஜோடி ஒன்று, ஒரு வயதான அம்மா, இரண்டு சிறு பெண்கள் என்று அந்த குழுவில் 
இருந்தார்கள் , மேலே என்ன சாமி இருக்கு? திறந்து இருக்கா? தண்ணீர் இருக்கா? என்ற கேள்விகளைக் கேட்டார்கள். தண்ணீர் இல்லை இன்னும் 700 படி ஏற வேண்டும், குழந்தையை வைத்து இருக்கிறீர்கள் தண்ணீர் இருக்கா? என்று கேட்டேன் கொஞ்சம் இருக்கிறது என்றார்கள். நீங்கள்  வெள்ளனவே ஏறிப் போனீர்களே பார்த்தோம் என்றார்கள், கைலாசநாதர் கோவிலிருந்து உங்களை பார்த்துவிட்டுத் தான் நாங்களும் வந்தோம் என்றார்கள். இதற்கு முன்பு வந்தது இல்லையாம்.
வரிசையாக ஏற ஆரம்பித்தார்கள், மேலே முன்பே போன பையன் போன் செய்து படி சரியில்லை கவனமாய் வாங்க  என்று எச்சரிக்கை செய்தார்.
மலையிலிருந்து கைலாச நாதர் கோவிலும், தாமரைக்குளமும்.சுற்றிவர ஆலமரங்களும்.
  தாமரைக் குளமாய்க் காட்சி அளித்து இப்போது ஒரு சொட்டு நீர் இல்லாத இடமாக ஆகிவிட்டது



இன்னும் இரண்டு  பக்தர்கள் ஏறி வந்தார்கள் , அவர்களிடம் முதல் தடவையா? என்று. இல்லை இரண்டாவது தடவை என்றார்  அவர்களுக்கு நல்ல மன உறுதி என்று நினைத்துக் கொண்டேன், அவர்களும் திறந்து இருக்கா? கோவில்  என்று  கேட்டார்கள் 
கீழே இறக்கி விட்டு விட்டார் மலையப்பன் ஏற்றி விட்டது போலவே பத்திரமாய்.

அதன் பிறகு அருள்மிகு கோபாலசுவாமி திருக்கோவில் போனோம் அந்த கோவில்தான் முதல் பதிவில் வந்தது. முதலில் இவரைப் பார்த்து விட்டுத்தான்
மேலே ஏறுவார்கள் என்று நினைக்கிறேன் அதுதான் முதல் பதிவில் அவரைப்பற்றி  பதிவிட்டேன்.

                       திடியன் மலைக் கோவில் நிறைவு பெற்றது.

வழியில் இருக்கும் விநாயகரை வணங்காமல் வந்ததற்கு அவர் விளையாடிய விளையாட்டையும், நாங்கள் முதலில் வணங்க வந்த  அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதரைத் தரிசனம்  செய்தோமா என்பது எல்லாம் அடுத்த பதிவில்.


                                                                வாழ்க வளமுடன்.


அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் - திடியன்

$
0
0
வழியில் இருக்கும் விநாயகரை வணங்காமல் வந்ததற்கு அவர் விளையாடிய விளையாட்டையும், நாங்கள் முதலில் வணங்க வந்த  அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதரைத் தரிசனம்  செய்தோமா என்பது எல்லாம் அடுத்த பதிவில். என்றேன்  முந்திய பதிவு திடியன் மலைக் கோவில்  நிறைவுப் பகுதியில்.

மலைக் கோவிலை விட்டு இறங்கிய பின் மலையடிவாரத்தில் உள்ள கோபாலசாமி கோவிலைப் பார்த்துவிட்டுச்   சரிவில் இறங்கி வந்தால் விநாயகர் மேடையோ, மரமோ இல்லாமல் தரையில் ஒரு வீட்டின் பக்கம் காட்சி தருகிறார்.

விநாயகரை பார்த்து போட்டோ எடுத்து விட்டு இவரை வணங்கி விட்டுத் தான் மேலே ஏற வேண்டும் போல,  நாம் இப்போது பார்க்கிறோம் என்று சொன்னேன். என் கணவர் சீக்கிரம் ஏறு கைலாசநாதர் கோவில் போக வேண்டும் என்றார்கள் . ஒரு நிமிடம் இருங்கள் என்று சொல்லி விட்டு   வேப்பமரத்தடியில் இருக்கும்  பசு மாடுகளைப் பார்த்து  ஒரு கும்பிடு போட்டு போட்டோ எடுத்துக் கொண்டேன், அப்புறம் கிராம வறுமை ஓழிப்பு சங்க அலுவலகத்தையும்   போட்டோ எடுத்துவிட்டு   கைலாசநாதர் கோவில் போனோம். 

போய்ப் பார்த்தால் நடை சார்த்தி இருந்தது.   ஆலமரத்தடியில் காவி வேஷ்டி காவித் துண்டு போட்டுக்கொண்டு ஒருவர் உட்கார்ந்து இருந்தார் அவரிடம் "கோவில் இனி எப்போது திறக்கும்?"என்று கேட்டோம். அதற்கு அவர்,"இனி நாலு மணிக்குத் தான் திறப்பார்கள். நானும் சிவனடியார் தான் கிரிவலம் வந்தேன், விபூதி தருகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள்"என்றார். அவரிடம் விபூதியை   வாங்கிப்  பூசிக் கொண்டு "சரி போகலாம், இன்னொரு முறை வரலாம்"என்று கிளம்பினோம்.

அன்று ஞாயிறு ஆனதால் காலை உணவு இரண்டு பேருக்கும் கிடையாது விரதம், அதனால் , காப்பி, பால், பிளாஸ்கில் எடுத்து வந்ததைக்  குடித்து விட்டு கிளம்பலாம் என்று நினைத்தோம் , அதன் படி  குடித்து விட்டுக் கிளம்பும் போது நான்கு ஆலமரங்கள் இருப்பதைப் போட்டோ எடுக்கலாம்   என்ற எண்ணம் வந்து அலைபேசியை  எடுக்க கைப்பையைப் பார்த்தால் அதில் இல்லை காரிலிருந்து  கீழே இறங்கிப் பார்த்தாலும் இல்லை. 

 கடைசியாகப்  பிள்ளையாரையும்,  பசுமாடுகளையும் எடுத்தோமே ! அங்கு விழுந்து இருக்கலாம் அங்கு போய்ப் பார்ப்போம் என்று போய்ப் பார்த்தோம், அங்கு தேடுவதைப் பார்த்துவிட்டு இரண்டு மூன்று பெண்கள், ஆண்கள் எல்லாம் "என்ன தேடுகிறீர்கள்?"என்றார்கள். "செல்போன்"என்றேன். ஒருவர் ,"நீங்கள்   கோபாலசாமி கோவிலை போட்டோ எடுத்ததைப் பார்த்தேனே" என்றார், ஒரு அம்மா பசுமாட்டை கும்பிட்டுவிட்டுப் போட்டோ எடுத்தார்கள் பார்த்தேன் என்றார்கள்,   ஒரு பெண் உங்கள் போனுக்கு அழைத்துப் பாருங்கள் என்றார்கள். என் கணவரின் செல்லில் இருந்து அழைத்தால் ,   "சுவிட்ச் ஆப்   செய்யப்பட்டுள்ளது "என்று வருகிறது. 

அங்கிருந்த  ஒரு அம்மா "காருக்குள் நன்கு தேடுங்கள்  நீங்கள் பக்தியாக இப்படி கும்பிட்டு வந்து இருக்கும்போது கிடைக்காமல் போகாது"என்று சொன்னார்கள். (அந்த அம்மா இஸ்லாமிய பெண்மணி) . மீண்டும் விநாயகரை வணங்கிவிட்டுக் காரில்  தேடினோம். காரில்  சீட்டுக்கு அடியில் கிடந்தது. 

எத்தனை முறை தேடினோம் கண்ணுக்கு தெரியவில்லை,  விநாயகருக்கு வேண்டுதல் தெரிவித்துத் தேடியவுடன் கிடைத்தது. மறைத்துக் காட்டி விளையாடிய விநாயகருக்கு நன்றி சொன்னேன்.  அங்கு எங்களுக்கு ஆறுதலாகப் பேசியவர்களுக்கு  நன்றிகள் சொல்லிக் கிளம்பும் போது ,  "எந்த ஊரிலிருந்து  வருகிறீர்கள்? "என்று கேட்டார்கள். "நாங்கள் மதுரையிலிருந்து வருகிறோம், கைலாசநாதர் கோவிலுக்கு வந்தோம்- பூட்டி இருந்தது அதற்குள் மலைக்கோவில் போய் வரலாம் என்று போனோம். வர நேரமாகி விட்டதால் நடை சாற்றி விட்டார்கள். பார்க்க முடியவில்லை"என்று சொன்னோம்.

எங்கிருந்து  வருகிறீர்கள் ? என்று கேட்ட பெண், "என் வீட்டுக்காரர் தான் குருக்கள்"என்று சொன்னார்கள் "போன் நம்பர் தருகிறேன், போன் செய்தால் வருவார்கள், பூட்டி உள்ளதே திறந்து காட்ட மாட்டார்கள் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் , எப்போது வந்தாலும் போன் செய்யுங்கள் "என்று போன் நம்பர் கொடுத்தார்.

போன் செய்தோம் குருக்களுக்கு.  அவர் வருவதாய்ச் சொன்னார். குருக்களின் மனைவி,"கோவில் வாசலில் போய் இருங்கள் வருவார், இங்கு வந்தால் நான் அங்கு அனுப்பி வைக்கிறேன்"என்றார்.  

வெங்கட்ராமன் குருக்கள் போன் நம்பர் - 9791994805 .

விநாயகரைக் கும்பிடாமல் மலைக்கோவில் ஏறியதற்குச் செல்போனை மறைத்துக்  கொஞ்சம் மன சஞ்சலத்தைக் கொடுத்துப்  பின் அவரே அதை சரி செய்தார்.   (மனசஞ்சலத்திற்குக் காரணம் அந்த போன் மகன் வாங்கித்தந்தது. பேரன் படங்கள், எல்லோரது( நட்பு, சுற்றம்) போன் நம்பர்கள் அதில்தான்.மலைக்கோயிலில் எடுத்த படங்கள் எல்லாம் போச்சே என்று) 


கைலாசநாதரை பார்க்காமல் போகக் கூடாது என்று எங்களை மீண்டும் அவர் அருகே வரவழைத்து   குருக்கள் மனைவியைப் பார்க்க வைத்து  எப்படி விளையாடி இருக்கிறார்  !

கோவில் வாசலில் விபூதி கொடுத்த சிவனடியாரும் வந்துவிட்டார். "செல் போன் கிடைத்ததா? "என்று கேட்டுக் கொண்டு.  அவரிடம் விபூதி வாங்கி அணிந்து கொண்டதும் நல்லதே செய்தது.

குருக்கள் வந்தார்  கோவிலைத் திறந்து  கோவில் வரலாறு சொல்லி சிறப்பாகப் பூஜை செய்து வைத்தார். கோவிலுக்குப் பக்கத்தில் சமுதாயக்கூடத்தில் விழாவிற்கு வந்தவர்களும் எங்களுடன் வந்து வணங்கினார்கள்.



அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திடியன் மலை (உசிலம்பட்டி) – மதுரை மாவட்டம்.

சுவாமி  பெயர்:      கைலாசநாதர் , 
அம்மன் பெயர்:   பெரிய நாயகி,
தலவிருட்சம்:        நெய்கொட்டாமரம்.
தீர்த்தம்:                  பொற்றாமரைக்குளம்.

மதுரையிலிருந்து தேனி சாலையில் 31 கி.மீ தொலைவில் உள்ளது.

1000, 2000 வருடத்திற்கு முன்பே உள்ள பழைமையான கோவில் இது என்கிறார்கள் இந்தக் கோவில் 'தென்திருவண்ணாமலை'என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை போய் கிரிவலம் வர முடியாதவர்கள், இங்கு  கிரிவலம் வந்தால் திருவண்ணாமலையில் செய்த புண்ணியம் கிடைக்குமாம். 

அகஸ்தியர் பூஜை செய்த தலம்.

ராமர், அசுவமேத யாகம் செய்யும்போது குதிரை எங்கெல்லாம் ஓய்வு எடுக்கிறதோ அங்கெல்லாம்  காசிலிங்கம் வைத்து வழிபடுவாராம்.
இங்குள்ள பொற்றாமரைக் குளத்தின் அருகே ஓய்வு எடுத்ததால்  அங்கு காசிலிங்கம் வைத்து வழிபட்டாராம்.  வெகுகாலத்திற்குப் பின் இங்கு ஆண்ட மன்னர்  ஒருவர் இங்கு கோவில் கட்டினார் என்று சொன்னார்,குருக்கள்.

தட்சிணாமூர்த்தி இங்கு 14 சித்தர்களுடன் நந்தியின் மேல் அமர்ந்து காட்சி தருவது மிகவும் விஷேசம் என்றார்.  மற்றொரு சிறப்பு காசியிலிருந்து கொண்டு வரப்பட்டது. தட்சிணாமூர்த்தியை 16 முறை வலம் வந்து வணங்கி பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் கைகூடுமாம் .


தலவிருட்சம்

மலைக்கோவில் மேலிருந்து எடுத்த படம் கைலாச நாதர் கோவிலும், பொற்றாமரைக் குளமும்




நந்தி மண்டபத்தின் தூண்களில்  அடியார்களின் சிலைகள் வடிக்கப் பட்டுள்ளது.
கோவிலைக் கட்டிய மன்னர் பக்கத்தில் தன் தேவியுடன்
சுவாமி சன்னதி வாசல் மேல் இருந்த வாசகம்  

 இரண்டு புறமும் நாகங்களுடன் நடுவில் முக்குறுணி விநாயகர்  இவருக்குப் பின்னால் கடைசியில் ஈசான பிள்ளையார் இருக்கிறார்.
. பொட்டு வைத்துக் காட்டி உள்ளார்கள் 14 சித்தர்களை.
.
சுவாமி சன்னதி  விமானம்
 
தலவிருட்சத்தின் பக்கத்தில் முருகன் - வள்ளி தெய்வானையுடன்.


அஷ்டபுஜதுர்க்கை
அம்மன் சன்னதி விமானம்

சுவாமி விமானம், அம்மன் விமானம்
கோவிலிருந்து திடியன் மலை தெரிகிறது.
                                              
                                                                  நவக்கிரக சன்னதி

அதன் அருகில் பைரவர்

என்ன விழா என்று தெரியவில்லை   

கைலாசநாதரைப் பார்க்க வந்த போது கோவில் நடை சாத்தி இருந்தது, இங்கு இருந்த பெரியவர்தான் மேலே மலைக்கு போய் வாருங்கள், அதற்குள் குருக்கள் வந்து விடுவார் என்று சொன்னார். அவரிடம் விடைபெற்று வரப் போனபோது இன்னும் கொஞ்ச நேரத்தில் விழா முடிந்து விடும் சாப்பிட்டு   விட்டுப் போகலாம்  என்று உபசரித்தார்.  அன்பாய் சொன்னவரிடம் விடைபெற்று கிளம்பியபோது  ஐஸ் வண்டி வந்தது. விழா வீட்டுக் குழந்தைகள் வாங்கினார்கள். அதைப் பார்த்து  நாங்களும் குழந்தைகளாகி ஐஸ் வாங்கிச்  சுவைத்தோம். வெயிலுக்கு இதமாய் இருந்தது. ஐஸ் சாப்பிட்டுப் பல வருடங்களாகிவிட்டன.

நாங்கள் கைலாசநாதரை வணங்கிய மகிழ்ச்சியுடன்  அன்று பெளர்ணமி என்பதால் காரிலேயே கிரிவலம் வந்தோம்.  கிரிவலத்தில் நிறைய கோவில்கள் இருக்கிறது.  அங்கு பார்த்த அருள்மிகு நல்லூத்து கருப்பண்ணசாமி கோவில் அடுத்த பதிவில். மிக அழகிய கோவில்.

கைலாசநாதர் கோவிலுக்கு இன்னொரு முறை வரவேண்டும். விநாயகருக்கு வேண்டுதல் இருக்கே! நம்மை மீண்டும் அவரைப் பார்க்க வைத்ததும் அவர் விளையாட்டு தானே!
வாழ்க  வளமுடன்.

படம் சொல்லும் செய்திகள்

$
0
0
இன்று ஆடிக் கிருத்திகை என்று பழமுதிர்சோலைக்குப் 
போன போது கண்ட காட்சி.

மூடி இருக்கும் பாட்டிலில் உள்ள தண்ணீரைக்    குடிக்க முயலும் குரங்கு வெகு நேரம் போராடி  முடியாமல் கீழே போட்டு விட்டது. நான் போய் மூடியை திறந்து வைத்துவிட்டு  நகர்ந்தவுடன் வேகமாய் மரத்திலிருந்து இறங்கி மட மட என்று குடித்து விட்டது, பாவம் அதில் கொஞ்சம் தான் தண்ணீர் இருந்தது அதனால் எங்களுக்கு  வைத்து இருந்த தண்ணீரைக் கொடுத்தவுடன்  வேக வேகமாய் ஓரே மூச்சாய் குடித்து விட்டது. தண்ணீர் தாகம்   தீர்க்க தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கலாம் மலையில். ஒரே ஒரு இடத்தில் மட்டும் பிளாஸ்டிக் தொட்டி சின்னதாய் இரும்பு சங்கிலியில் மரத்தோடு இணைத்து கட்டி வைத்து இருந்தார்கள். அதில் தண்ணீர் இல்லை.


இன்னொரு குரங்கு காரில் உட்கார்ந்து கொண்டு இருந்தது
காருக்குள்ளே என்ன இருக்கு என்று பார்வை

போன மாதம் போன போது எடுத்த படம்  தாயும், சேயும்

குரங்கின் குட்டியானது தன்னுடைய  முயற்சியால் தாயின் வயிற்றைப் பற்றிக் கொள்கிறது, அதுபோல பக்தன் தன்னுடைய முயற்சியால் இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைச் சொல்வது 'மர்க்கட நியாயம்'  என்பார்கள். 

பிரதோஷத்தன்று கோவிலுக்குப்
போனபோது அங்கு ஒரு வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தைச் சுற்றி ஆசனங்கள் அமைத்து இருந்தார்கள் அதில் ஒரு பெண் குழந்தை செப்பு சாமான் வைத்து சமைத்து விளையாடுகிராள்.


இன்னொரு பக்கம் திண்ணை அமைத்து இருந்தார்கள். மாலை நேரம் வேப்பமரக் காற்று வாங்கிக் கொண்டு  திண்ணையில் இளைப்பாறலாம்.
என் அம்மாவின் கல்சட்டி ,  கல்சட்டியை  மூடி  வைக்கும் மரத்தட்டு
இப்போது தம்பி வீட்டில் கோலப்பொடி போடும் பாத்திரமாய்

கடைசியாக ஆசைப்பட்டு வாங்கிய வெள்ளைக் கல்லில் செய்த மருதமலை ஆட்டுக்கல், அம்மி  கோவையில் இருக்கும் போது வாங்கியது இப்போது மூலையில்- கிரைண்டர் வந்து விட்டதால்.
திருவெண்காடு கோவிலில் துவாரபாலகருக்கு அருகில் மின் விசிறியைப்
பார்த்தவுடன்
 எடுக்கத் தூண்டியது. (முருகன் சன்னதி)

கள்ளன் ஒளிந்திருக்கும் வாழைப்பூ - கிச்சன் கார்னர்


காணாமல் போன கனவுகள் என்று வலைத்தளம் வைத்து இருக்கும் ராஜியின் செய்முறைப்படி செய்தேன்.  வாழைப்பூப் புட்டு. நான் துவரம்பருப்பும், கடலைப்பருப்பும் சேர்த்து  அரைத்தேன். தேங்காய்ப் பூ போட்டேன். இது தான் கொஞ்சம் மாறுதல்.

வேக வைக்கும் முன்
வெந்தபின்

புட்டு ரெடி.

பஞ்சு மிட்டாய்  பஞ்சு மிட்டாய்!
பால்கனியிலிருந்து  எடுத்த படம்

அன்பாய் தலைகோதி

'சாதம் வைத்து விட்டாயா , அம்மா' என்று கேட்கும் காகம். (எங்கள் வீட்டு பால்கனி).

வாழ்க வளமுடன்.

மீண்டும் வசந்தம் !

$
0
0








மீண்டும் வீட்டைச் செப்பனிடும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.

மீண்டும் வசந்தம் வரப் போகிறது !  குஞ்சுகளின் 'கீச் கீச்'கேட்கப் போகிறது !

முன்பு மூன்று மாதங்களுக்கு முன் குருவிகள் கூடு கட்டி குஞ்சுகளுக்கு உணவு அளிப்பதைப் பதிவு போட்டு இருந்தேன். 

வாழ்க வளமுடன்
---------------


அருள்மிகு சாந்தநாயகி உடனுறை அருள்மிகு புனுகீசுவரர் திருக்கோயில்

$
0
0
புனுகுப் பூனை பூஜை செய்கிறது ஈஸ்வரனை
போன ஞாயிறு (16/07/2017) அன்று மயிலாடுதுறை அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரசுவாமி திருக்கோயிலில்
 மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

புனுகீசுவரர்
 சுவாமி விமானம், கீழே சண்டேசுவரர்
சுவாமி விமானத்திற்கு கும்பாபிஷேகம்



குருக்கள் குடத்தில்   
இருக்கும் புனித நீரைக் கீழே பார்த்துக்கொண்டு இருப்பவர் மேல் தெளிக்கிறார்.

கோவில் வரலாறு:-

அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரர்சுவாமி திருக்கோயில், புண்ணிய நதியாம் காவிரிக்குத் தென்பால், கூறைநாட்டில் அமைந்து உள்ளது. சிவபெருமானை மதியாமல் தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட தேவேந்திரன் சாபம் பெற்று, இத்திருக்கோயிலில் எழுந்தருளிய சிவபெருமான் மகிழும் வண்ணம் புனுகுப் பூனை உருவெடுத்துப் பூஜித்து சாப விமோசனம் அடைந்து , இழந்த இந்திர பதவியை மீண்டும் பெற்றார் என்பது இத்தல வரலாறு .

கோயில் சிறப்பு:-

சனிபகவான் திருநள்ளாரில் இருப்பதைப் போன்று கிழக்கு நோக்கி தனி விமானத்துடன் கூடிய கருவறையில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. சனிப்
பெயர்ச்சி விழா, வாராவாரம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடக்கும்.


35 வருடங்களுக்கு மேலாய் மயிலாடுதுறையில்  இருந்தோம். அந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஞாயிறும் வாரவழிபாட்டுக்குப் போவோம்., பிரதோஷம் மற்றும் அனைத்து விழாவிற்கு அங்கு போவோம். வாரவழிபாட்டு
ஆண்டுவிழா புரட்டாசி மாதம் நடக்கும். அதற்குக் காலையில்  சிவபூஜை நடைபெறும்.  பின் அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று பெரியபுராணம் ஊர்வலமாக வரும். மாலையில் பக்திச் சொற்பொழிவு நடைபெறும் . அதில்   என் கணவரும்  பேசுவார்கள்.

தை மாதம்  கடைசி வெள்ளிக்கிழமை லட்ச தீபவிழா நடைபெறும் , இரவு சொற்பொழிவு நடைபெறும். திருவாடுதுறை ஆதீனம்  கலந்து கொண்டு தொண்டு செய்பவர்களுக்குப் பொன்னாடை போற்றி கெளரவம் செய்வார்கள்.

விளக்கேற்று விளக்கேற்று வெள்ளிக்கிழமை  என்ற பதிவில் இந்த கோவிலில் நடக்கும் லட்சதீபம் பற்றிப் போட்டு இருக்கிறேன். 2014 ல் நடந்த விழாவைப் போட்டு இருக்கிறேன். இதில் சார் வரைந்த படங்களும் இடம் பெற்று இருக்கும். குருக்கள் செய்த அழகான சந்தனக்காப்பில் சாந்தநாயகி அழகிய படம் இடம்பெற்று இருக்கும். பார்க்க வேண்டும் என்றால் பார்க்கலாம்.  








ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உழவாரப் பணி செய்பவர்களால்  பள்ளி அறை பூஜை நடைபெறும்.   

கும்பாபிஷேக முதல் நாள் படம் எடுத்தேன். வேலை நடந்து கொண்டு இருந்தது பள்ளியறையில். புது வெல்வட் ஊஞ்சல்  , சுற்றிவரக் கண்ணாடிகள்.
நடராஜருக்கு வருடத்தில்  ஆறு அபிஷேகங்கள் சிறப்பாய்  நடக்கும்
புனுகீஸ்வரர் சுவாமி சன்னதி

கணவர் வரைந்த ஓவியம்
கும்பாபிஷேகம் ஆகும் முன் காலையில் எடுத்த படம்
சாந்தநாயகிக்கு ஆடி வெள்ளி, தைவெள்ளி, நவராத்திரி விழாக்களில் செய்யப்படும் சந்தனக்காப்பு அவ்வளவு அழகாய் இருக்கும்.
கும்பாபிஷேகத்திற்குப் பத்திரிக்கை அனுப்பி அன்புடன் அழைத்தார்கள் கூறைநாடு சாலியர் பெருமக்கள். அவர்களும் மெய்யன்பர்களும்  
யாகசாலையை மிகவும் சிறப்பாய் அமைத்து இருந்தார்கள். ஒரு வாரமாய் சிறப்பாய் நடத்தி இருக்கிறார்கள். நாங்கள் கும்பாபிஷேகத்துக்கு
முதல் நாள் தான் போனோம், ஒரு வாரம் முன்பே வந்து இருக்க வேண்டியது தானே ?  . வீடா இல்லை ,எத்தனை வீடு இருக்கு   தங்கிக் கொள்ள   என்று கடிந்து கொண்டார்கள்-
பல வருட நட்பு !

  அவர்கள் வீடுகளில்  நடைபெறும்  நல்லது கெட்டதுகளில்  கலந்து கொள்வோம்.

அவர்கள் குடியமர்ந்த நான்கு தெருவிலும் பிள்ளையார்கள் உண்டு. பெரிய சாலிய தெருவில் உள்ள  காஞ்சி விநாயகர் பற்றியும் அவருக்கு நடந்த கும்பாபிஷேகம் பற்றியும் முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.

வடக்கு சாலிய தெருவில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு (அவர் பெயர் "செல்வ விநாயகர்") செவ்வாய் வார வழிபாட்டுக்குப்போவேன் (துர்க்கை வழிபாடு) ஆடிசெவ்வாய்  ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் 
ஒவ்வொரு அலங்காரம்.  ஆடிமாதம் அல்லவா? நினைவு அங்கேதான்.

தெற்கு சாலிய தெரு விநாயகர், "வெற்றி விநாயகர்". அவரை வணங்கித்தான்
 எங்கும் போவோம். தெருவின் நடுவில்  டிராபிக் போலீஸ் போல் இருந்தார். மக்களைச் சரியாக வழி நடத்திக் கொண்டு. அவரை சாலையை அகலப்படுத்த மக்கள் தடுத்தும் கேட்காமல் ஓரம் கட்டி விட்டார்கள். ஆனால் முன்பை விட தாராளமான - அவருக்கு சொந்தமான இடத்தில் இப்போது
அழகாய் அமர்ந்து  அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார். 

சாலியர்களுக்கு சொந்தமான கோவில்கள்: 

1.முதன்மையான் கோவில் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வந்த விநாயகர் கோவில் ஸ்ரீ காஞ்சி விநாயகர் ஆலயம்
2.கீழஒத்தசரகு சித்தி புத்தி விநாயகர்
3.வடக்கு சாலிய தெரு ஸ்ரீ செல்வவிநாயகர்
4செங்கழுநீர் விநாயகர் ஆலயம்
5.ஸ்ரீ வெள்ளந்தாங்கி  ஐயனார் ஆலயம்
6.கல்லக்குறிச்சி ஸ்ரீ மாரியம்மன் ஆலயம்
7.காவிரிக்கரை காசி விஸ்வநாதர் ஆலயம் (கூறைநாடு)
8.குருக்கள் பண்டாரத்தெரு, ஸ்ரீ கனக மாரியம்மன் ஆலயம்
9. தனியூர் சாலியதெரு தாமோதர விநாயகர் ஆலயம்
10. தெற்கு சாலியதெரு ஸ்ரீ வெற்றி விநாயகர்.

ஆண்டு தோறும் எல்லாக் கோயில்களிலும் விழாக்கள் நடக்கும்.

எல்லா விழாக்களுக்கும் அழைப்பு உண்டு.   

புனுகீஸ்வரர் கும்பாபிஷேகம் மட்டும் அல்லாமல்  நட்புகளைப் பார்த்து வந்ததும் ஆனந்தம். மயிலாடுதுறையை விட்டு வந்து  ஒரு வருடம் தான் ஆச்சு ஆனால் பல வருடங்கள் கழித்துப் பார்ப்பது போல  ஒரு நினைவு.  அவர்களின் அன்பின் மழையில் நனைந்து இறைவனை வணங்கி வந்தோம்.



அறுபத்துமூவர் உற்சவம் நடைபெறும்.  உழவாரத் திருப்பணி அன்பர்களால் புதிது போல் ஜொலிக்கும்   பஞ்சலோக சிலைகள்
கல்லில் வடித்த அறுபத்து மூவர் சிலைகள்
உற்சவ  சுவாமிகள்.
இங்குள்ள உற்சவ முருகன் கையில் வில் வைத்து இருப்பார்.
மூலவர் முருகன்
ஒரு காலத்தில் தண்ணீர் இருந்த தெப்பக்குளம் - இப்போது  நீர் வற்றி உள்ளது.
புறாக்கள் தங்கிக் கொள்ள அதற்கு வீடு மதில் மேல் அமைத்து உள்ளார்கள்.

ஆண்டு தோறும் பங்குனி ரோகிணியில் நேசநாயனாருக்குச்  சிறப்பாகக் 
குருபூஜை செய்வார்கள்.

துர்க்கைக்கு ராகுகால வழிபாடு,

ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பாய்  நடைபெறுகிறது..

தட்சிணா மூர்த்திக்கு வியாழன் வழிபாடு சிறப்பாய் நடைபெறும்


நவகிரகங்களுக்கு
  புதிதாகக் கூண்டு அமைத்து உள்ளார்கள் , 
மக்கள் விளக்கேற்றுகிறார்கள் சுவாமி பக்கத்தில் -அதைத் தடுக்க 
சுவாமி விமானம், சண்டேசுவரர் விமானம்,
  ராஜ கோபுரம்,  நடராஜர் விமானம் , தலவிருட்சம் -பவளமல்லி.

சகஸ்ரலிங்கம்,  நர்த்தன விநாயகர் , பைரவர், சூரியன், காசி விஸ்வநாதர், கஜலட்சுமி,  இருக்கிறார்கள். ஐயப்பன், அனுமன் பஞ்சலோகத்தில் இருக்கிறார்கள். ஐயப்பனுக்கு மாதா மாதம் உத்திரத்தில் பூஜை 
நடைபெறும்.
அனுமனுக்கு அமாவாசை விஷேட அபிஷேகம் உண்டு. புரட்டாசி மாதம் அனுமன் விக்கிரகத்தைத்திருப்பதிக்கு எடுத்துப் போய் வந்து பெருமாளுக்குச் சனிக்கிழமை தளிகை போடுவார்கள் சிறப்பாய்.

இப்படி எல்லா விழாகளும் சிறப்பாய் நடக்கும் கோயில்  

                                                                 வாழ்க வளமுடன்.

காட்சிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் !

$
0
0
ஊமத்தம்பூ- மொட்டும் மலரும்

ரேடியோ பூ என்றும் சொல்லுவோம். கிராமபோன் ஸ்பீக்கர் போல் இருப்பதால் இந்த பேர்.


வேம்பும், அரசமரமும் -நாகர்கள் மரத்தடியில் -மரத்தின் உள் பகுதியை உற்றுப் பார்த்தால் ஐந்து தலை நாகம் கண், மூக்குடன் இருப்பது போல் இருக்கிறது. தெரிகிறதா என்று பாருங்கள்.
காய்ந்த மொட்டை மரத்தைத் தழுவிப் படர்ந்து  மொட்டை மரத்திற்குப் பசுமையைக் கொடுத்து மயில்களை வரவேற்று இருக்கிறது பசுமைக் கொடி.

புல் புல் பறவை   மாடிப்படிக்கு அடியில் கேபிள் ஒயர்களை சேர்த்துக் கூடு கட்டி குஞ்சு பொரித்து, குஞ்சுக்கு உணவு அளிக்கிறது. காத்திருந்து  காத்திருந்து பதிவில்.
மாயவரம் வீடு.

 இங்கு  (மதுரையில்) கேபிள் ஒயர் உள்ள சுவற்றின் பொந்துக்குள் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி இருக்கும் படத்தைப் போட்டபோது எல்லோரும் பயந்தார்கள்.  இறைவன்  பறவைகள் கூடு கட்டும் போது   பயமில்லா வரத்தை அளித்து இருப்பார் போலும்.


கோவையில் அத்தை வீட்டில்  மொட்டைமாடியில் வேண்டாம் என்று தூக்கிப் போட்ட கட்டைக்கு அடியில் தூங்கு முஞ்சிமர இலைகள் விழுந்து கிடக்கும் குப்பையில்  குடைபிடித்து இருக்கும் காளான்கள்

நான் வித்தியாசமானவன் என்று தனித்திருக்கும் காளான்!
கற்றாழைப்பூ-
பூ மேல் நோக்கிப் பூக்காமல் கீழ் நோக்கிப் பூத்து இருக்கிறது  


கீரைக் கடைசல், வத்தக் குழம்பு  செய்த கல்சட்டி,
அரைக்கீரை, வத்தக்குழம்பை  இந்த சட்டியில் சுண்ட வைத்த சுண்டக் கறி அத்தனை ருசியாக இருக்கும். இப்போது கீழாநெல்லி முளைத்து கேட்பாரற்றுக் கிடக்கிறது மொட்டைமாடியில்.
ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டவை , இன்று மூலையில்!


  எங்கள் தோட்டத்தில் நந்தியாவட்டைச் செடியின்
 தண்டில் பச்சோந்தி .
நிறம் மாறுவதினால் இதனை அப்படித்தானே சொல்வார்கள்.


மாயவரம் வீட்டில் தொட்டிகளில்   நிறைய பூச்செடிகள் வைத்து இருந்தேன்,  அரளிச் செடி முதன்முதலில் பூத்த போது

மேய்ச்சல் நிலம் கண்ணுக்கு எட்டிய தூரம் இல்லை வெகு தூரம் போகணும் அண்ணே !  அதுதான் ஆட்டோ சவாரி!

"நம்ம ஊர் போல வருமா? "பாடலில்  இந்தக் குளியலைப் பற்றி வரி வருது சொல்லுங்களேன்

இது எதற்கு என்று தெரியும் தானே?

பழமையான கோயிலில்  கோபுரத்தில் இருந்த கதை சொல்லும் சிற்பங்கள் இந்தக் கதை தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். குழந்தை யார் என்று?  எங்கள் பிளாக்புதிர் போல இருக்கா?

                                                               வாழ்க வளமுடன்!

ஆடிப்பெருக்கு

$
0
0

//அன்னையின் அருளே வா வா வா
 அன்னையின் அருளே வா வா வா
 ஆடிப் பெருக்கே வா வா வா//

கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய பாடல் ஆடிப்பெருக்கு என்றால் நினைவுக்கு வரும் பாடல்.
Image may contain: indoor
ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
மீனாட்சி அன்னை பச்சை பட்டுப் புடவைக் கட்டி, கிளி வாகனத்தில் வருகிறார்.
அன்னையின்  அருளால்  மழை பொழிய வேண்டும்.

மதுரையில் மக்கள் தண்ணீருக்கு கஷ்டப்படுவதைப் பார்த்தால்  கஷ்டமாய் இருக்கிறது. இரண்டு நாட்களாய் நல்ல  மழை இங்கு.  ஆடி என்றால் அடைமழை பொழியும் என்பார்கள், "ஆடி பட்டம் தேடி விதை" என்று சொன்னது போல்  ஆடி மாதம் விதை விதைத்து  எங்கும் பசுமையாக 
நாடு செழித்தால் நல்லது.

எங்கள் பழைய வீட்டில் பழுது பார்க்கும் வேலை நடக்குது.  அதற்கு 
லாரி தண்ணீர் வாங்கிதான் வேலைப்பார்க்கிறோம். 
கார்ப்பரேஷன் தண்ணீர் நினைத்தால் வருகிறது.

மகன் வீட்டில் இருக்கிறோம்.  இப்போது தண்ணீர் கஷ்டம் இல்லை .  எல்லோரும் தண்ணீரை சிக்கனமாய் உபயோகப்படுத்த சொல்லி அறிக்கை அனுப்புகிறார்கள். இன்னும் போக போக மழை இல்லை என்றால் கஷ்டம் தானே!

மயிலாடுதுறையில் இருக்கும்  போது ஆடிப் பெருக்குசமயத்தில் காவேரிக்கரையில் பூஜை செய்வோம், அது  போல்  மதுரை வைகை கரையில் பூஜைகள் உண்டா தெரியவில்லை.  


ஒரு முறை மயிலாடுதுறையில்  காவேரிக் கரையில் தண்ணீர் இல்லாமல் படித்துறையின்  படி மேலேயே கொண்டு போன காதோலை,கருவளையல் , காப்பரிசி பழங்களை வைத்து வணங்கினேன். ஆற்று மண் எடுத்து பிள்ளையார் பிடித்து வணங்குவார்கள் . இன்று .
வீட்டிலே  சின்ன பித்தளைக்குடத்தில் தண்ணீர் பிடித்து வைத்து காவேரியை நினைத்து வணங்கி கொண்டேன்.   என் பழைய பதிவுகளை படித்துப் பார்த்தேன். நீங்களும் படித்துப் பார்க்கலாம்.




இன்று தினமலரில் வந்த ஆடிப்பெருக்கு விழா செய்தி :-

*// நன்மை அனைத்தும் பெருகும் இந்த நல்ல நாளில் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும். நாட்டில் மழை வளம் பெருகும். 

* 'பெருக்கு'என்பதற்கு 'சுத்தம் செய்தல்'என்றும் பொருள் உண்டு. ஆடிப் பெருக்கில் வெள்ளம் ஓடும் போது ஆற்றிலுள்ள அசுத்தங்கள் அடித்துச் செல்லப்பட்டு தூய்மை உண்டாகும். அது போல, மனதிலுள்ள தீய எண்ணத்தை பக்தி என்னும் வெள்ளம் பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதை இந்த நாள் உணர்த்துகிறது.

 தங்க நகை வாங்க ஏற்ற நாள் இன்று. வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வாங்கலாம். செய்யும் நற்செயலால் புண்ணியம் பெருகுவது போல இன்று செய்யும் சேமிப்பு பலமடங்காக பெருகும். தொழில் தொடங்கினால் லாபம் பெருகும்.

* திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு பகுதிகளில் மக்கள் ஆற்றில் புனித நீராடுவர். ரங்கநாதர், விநாயகர், அகத்தியர் ஆகியோருடன் சம்பந்தம் கொண்ட புனித காவிரியில் நீராடினால் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் உண்டாகும். மாங்கல்ய பலம் பெறவும், விளைச்சல் பெருகவும் காவிரித்தாயை வழிபடுவர்.

* இன்று லட்சுமி தாயாருக்கு பால், தேன், தானியம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பூஜை செய்தால் மனம் குளிர்ந்து அருள்வாள். பாலை குழந்தைகளுக்கும், தேனை பெண்களுக்கும், தானியத்தை பறவைகளுக்கும், பொங்கலை ஏழைகளுக்கும் தானம் அளிக்க வேண்டும். மாலையில் விளக்கேற்றும் முன், வாசலில் கோலமிட வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி நித்ய வாசம் செய்வாள்.//


. - நன்றி தினமலருக்கு.


இன்றைய காலண்டரில் தேதி கிழிக்கும் போது படித்த செய்தி, ஆடி பதினெட்டாம் பெருக்குவிழா, புதுவருடக்காலண்டர்கள் பூஜையுடன் தொடக்கம் என்று.

நம்பிக்கைகள் வாழ்க!





  




மயிலாடுதுறை காவேரி , வீட்டுக் குப்பைகள் கிடக்கிறது.

வீரநாராயண ஏரி

  வீராநாரணயப் பெருமாள் வேதபுஷ்கரணி, காவேரி நதி (2014)


காவேரிப் படித்துறை (மயிலாடுதுறை) இரண்டு வருடங்களும் முன் தண்ணீர்  இல்லை. இப்போது இருக்கா என்று தெரியவில்லை. ஆற்றை சுத்தம் செய்து காவேரிவரக் காத்து இருக்கிறார்கள்.


கிணற்றிலும் நீர் இல்லை

Image may contain: tree, plant and outdoor
ஏற்றம்  மாடல் பழமையை நினைவு படுத்த  அமைத்து உள்ளார்கள். கும்பகோணம் பக்கம் உள்ள ஒரு விடுதியில்.

புதுக்கோட்டை  பக்கம் உள்ள ஒரு கிராமத்தில் மழவராயன்பட்டியை சேர்ந்த கருப்பன் என்ற கருப்பையா  அவர்கள்  (வயது 90) .
30 ஆண்டுகளாக ஏற்றத்தின் உதவியுடன் கிணற்றுப் பாசனம்  செய்த விவசாயி .இப்போது வறட்சியால் ஏற்றம் முடங்கி கிடப்பதாய்  வருத்தப்பட்டதை பத்திரிக்கையில் படித்தேன்.
.

சிறுவர்கள் சப்பரம் செய்து இழுத்து செல்வார்கள் ஆடிப் பெருக்கு விழாவில்.
மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், மீண்டும் அந்த மகிழ்ச்சி வர வேண்டும்.
நீர் நிலைகள் நிரம்பி வழிய வேண்டும்.
Image may contain: one or more people, people standing, tree, plant and outdoor
 ஆற்றிற்கு  சிறு தேர் உருட்டி செல்லும் சிறுவன்



நீரின்  பெருமையை, மதிப்பை மனதால் உணர்ந்து  அதை போற்றி வணங்குவோம்.

ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.


”மாரி மழை பொழிய வேண்டும்,மக்கள் சுற்றம் வாழ வேண்டும்
காடு கரை நிறைய வேண்டும்,மக்கள் கஷ்டம் தீர வேண்டும்.”


ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய்ப் பொழிய   வாழ்த்துவோம்.

                                                                வாழ்க வளமுடன்.

அகிலமெல்லாம் போற்றும் அம்மன் அருள்.!

$
0
0
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த  மாதம்.  ஆடிச்  செவ்வாய், ஆடி வெள்ளி எல்லாம் மிக சிறப்பாய் வீடுகளில், ஆலயங்களில் பூஜைகள் நடை பெறும். பண்டிகைகள் ஆரம்பிக்கும் மாதமும்  ஆகும். கோயில்களில் விழாக்கள் நடைபெறும் அம்மனுக்கு.

தொலைக்காட்சி சேனல்கள் போட்டிக் கொன்டு அம்மன் படங்கள், விழாக்களை ஒலிபரப்பிக் கொண்டு இருக்கிறது.

பதிவுகளில் ஆடிச் சிறப்பு   அம்மன்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

பக்திமணம் கமழும் ஆடி மாதத்தில்  நான் மயிலாடுதுறையில் இருக்கும் போது எடுத்த அம்மன் படங்கள் உங்கள் பார்வைக்கு.


மயிலாடுதுறை அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீசுவரசுவாமி திருக்கோயிலில் ஆடி வெள்ளி அன்று செய்யும்  சந்தனகாப்பு அலங்காரம்.

 
                                               சாந்த நாயகி

Image may contain: 3 people
மயிலாடுதுறையில் இருந்த போது அங்கு உள்ள  கள்ளக்குறிச்சி ஸ்ரீ மகா மாரியம்மன்.
No automatic alt text available.
அம்மனின் பின் அலங்காரம்.


புனுகீசுவரர் கோயில் துர்க்கை அம்மன் வெள்ளிக் கிழமை ராகு கால பூஜை சிறப்பு   அலங்காரம் புஷ்பபாவாடை.
புனுகீசுவரர் கோவில் துர்க்கை அம்மன்

ஆடி வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை சமயம்  குத்து விளக்கை அம்மனாக அலங்காரம்.

மயிலாடுதுறை செல்வ விநாயகர் கோயில் ஸ்ரீ சிவதுர்க்கை ஆடி மாதம் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளில்  ஒவ்வொரு அலங்காரம்
கஜலட்சுமி அலங்காரம்

பாம்பு புற்றில் அம்மன் இருப்பது போல்
 அலங்காரம்
சிவதுர்க்கை
தேங்காய் பூவால் அலங்காரம்.
சிவதுர்க்கை அம்மன்  பழ அலங்காரம்.
சிவதுர்க்கை மீனாட்சி  அலங்காரம்.
சமயபுர மாரியம்மன் படம் வைத்த காவடி.

                                           
அம்மனை தாயின் தோளில் அமர்ந்து  பார்க்கும்  பச்சைக்கிளி

இன்று பக்கத்து வீட்டில் வரலட்சுமி அம்மன் விழாவிற்கு அழைத்தார்கள்  போய் அம்மனை வணங்கி தாம்பூலம் வாங்கி வந்தேன்.

அனைவருக்கும் வரலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும்.

                                                              வாழ்க வளமுடன்.

நினைவோ ஒரு பறவை! விரிக்கும் அதன் சிறகை!

$
0
0
என் கணவர் வரைந்த படங்களை என் வலைத்தளத்தில் ஒரு இடத்தில் சேகரிக்கலாம் என்று  சேமிக்க ஆரம்பித்தேன், அப்புறம் பார்த்தால் அதில் சக பதிவர்களின் அன்பு அழைப்பின் பேரில் எழுதிய பதிவுகள் வந்தன. 

//முன்பெல்லாம், போட்டிகள், தொடர்பதிவுகள் என கொண்டாட்டமாக இருக்கும்! எத்தனை தொடர்பதிவுகள் – ஒரே தொடர்பதிவுக்கு பலரிடமிருந்தும் அழைப்பு வரும் அளவிற்கு இருந்ததும் உண்டு. இப்போதெல்லாம் எழுத யாருமே இல்லையோ என்ற ஐயம் வந்திருக்கிறது! சக பதிவர்களை அவ்வப்போது உற்சாகப்படுத்த விருதுகள் அளித்து மகிழ்ந்ததும் நடந்திருக்கிறது. விருதுகள் மூலம் பணங்காசு கிடைக்காது என்றாலும், நாம் எழுதுவதையும் மதித்து சக பதிவர் ஒருவர் விருது அளிக்கிறாரே என்ற மகிழ்ச்சி நிச்சயம் கிடைத்திருக்கும் – விருது பெற்ற ஒவ்வொரு பதிவருக்கும்!//

இப்படி சொன்னவர் யார் என்று தெரிந்து இருக்கும்  உங்களுக்கு. வெங்கட் நாகராஜ்  தான்.
சமீபத்தில் வெங்கட் தன் 1400 வது பதிவில் குறிப்பிட்டுச் சொல்லி ஆதங்கப்பட்டு இருந்தார்.

வெங்கட்  பதிவைப் படித்தவுடன்  எனக்குத் தொடர் பதிவுகளை (நான் எழுதிய ) படிக்க ஆசை வந்து விட்டது.  படித்தேன், இங்கு பகிர்ந்த பதிவுகளில் நான் எழுதிய சில தொடர் பதிவு இருக்கிறது. எவ்வளவு மகிழ்ச்சியான காலங்கள்!

இன்னும் நிறைய தொடர் அழைப்புகள்  பதிவுகள் இருக்கிறது.  இந்த பதிவில் கணவர்
படம் வரைந்த தொடர் அழைப்பு பதிவுகள் மட்டும் இங்கு இருக்கிறது. படத்துக்கு கீழே
பதிவுகளில்  எழுதியவைகளை கொஞ்சமாய் பகிர்ந்து இருக்கிறேன்.


என் கேள்விக்கென்ன  பதில் ? என்ற தொடர் பதிவில்

அம்பாளடியாள் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள்.  10 கேள்விகள் அதற்கு பதில் அளிக்க வேண்டும். மதுரைத் தமிழன் அவர்கள் அம்பாளடியாளை அழைத்து இருந்தார்கள். அம்பாளடியாள் கேள்விகளுக்கு மிக அழகாய் பதில் அளித்து இருந்தார்கள். 



தீபாவளி வாழ்த்துக்கள்மலரும் நினைவுகள் பதிவுக்கு வரைந்த படம்
இந்தப் பதிவும் தொடர் அழைப்பு தான்.

ராக்கெட் விட, பாட்டில்கள் தயார் செய்து வைத்துக் கொள்வோம். சரம் வைக்கும் போதும், லட்சுமி வெடி வைக்கும் போதும், ”திரியைக் கிள்ளி வை !இல்லையென்றால் வெடிக்காது”என்று அண்ணன் சொல்வதைக் கேளாமல், பற்ற வைத்து விட்டுஓடி வருவேன். ”நுனியில் கொஞ்சம் தீக்கொழுந்து கனன்று வரும் போது தான் ஓடி வரவேண்டும்” என்று அண்ணன் சொல்லித் தந்தான்.  வைத்து விட்டு வெடி பற்றுவதற்கு  முன்பே ஓடிவந்தால் ஒரே சிரிப்பு.  சில நேரம் திரியில் தீப்பொறி வரவில்லை என்று பக்கத்தில் பார்க்கப் போனால் டபாரென்று வெடித்து நம்மைப் பயமுறுத்தும்.அவை எல்லாம் அற்புதமான நேரங்கள். திரும்பி வராத காலங்கள்.






ஆசியா அவர்கள் தொடர் பதிவுக்கு  அழைப்பு விட்டு இருந்தார்கள்.

-நீங்கள் வெகு காலமாய் பாதுகாத்து வைத்து இருக்கும்  பொருளைப்பற்றி -என்று கூறியிருந்தார்கள்.  அந்த பொருளின் படமும் போடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்கள். என் அப்பாவைப் பற்றிக்கூற எனக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய ஆசியாவிற்கு நன்றி. நான் எட்டாவது படிக்கும்போது என் அப்பா வாங்கி கொடுத்த பாரின்
வாட்சைப்பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

அம்மாவின் சிங்கப்பூர் வாட்ச் சில்வர் கலரில் வெள்ளைகல் சுற்றி பதித்த , மூடி
போட்டது. அந்த வாட்சை பெரும்பாலும் நான் தான் கட்டி செல்வேன்.

பள்ளியில் தோழிகள் மணி கேட்டால் பெருமையாக அதை திறந்து மணி சொல்வேன். எல்லோரும் அதை திறந்து மூட ஆசைப்பட்டு மணி கேட்பார்கள்.
ஒரு பொருட்காட்சிக்குச் சென்றிருந்த போது அந்த வாட்ச், கூட்டத்தில் எங்கோ விழுந்துவிட்டது.  பொருட்காட்சி முழுவதும்  நானும் என் அண்ணனும் தேடினோம்.



காலை எழுந்துகொள்ள வேண்டும் என்றுஅலாரம் வைத்துக் கொண்டு படுப்பவர்கள் கூட அது அடிக்கும் போது அதன் தலையில் தட்டிவிட்டு மறுபடியும்  போர்வையை முகம்  முழுதும் மூடிக் கொண்டு  தூங்குவது உண்டு. 


அபிராமி அன்னைக்கு அழகிய அங்கிஎன்ற பதிவுக்கு அபிராமி பட்டர் வரலாறு

அந்த அங்கி பலகோடி ரூபாய் மதிப்புடையதானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு. அம்மனுக்குச் சாற்றுமுன் இத்திருவுருவத்தை திருக்கோயிலினுள்ளும் திருவீதிகளிலும் எழுந்தருளி திருஉலா செய்தனர். அதுவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆதீனகர்த்தர்கள்,பக்தர்கள் முன்னிலையில் அம்மனுக்கு அங்கி சார்த்தும் வைபவம் நடைபெற்றது.





சித்தன்னவாசல் பதிவுக்கு வரைந்து தந்த படம்.

அண்மையில் 'கழுகுமலை'பதிவு போட்ட போது- சமணர் படுக்கை பற்றி குறிப்பிட்டு எழுதிய போது,  அந்த பதிவுக்கு பின்னூட்டம் கொடுத்த G.M. பாலசுப்பிரமணியம் சார்,

 //புதுக்கோட்டைக்கு அருகில் ஓவியங்களுடனும் கல் படுக்கைகளுடனும் சிற்பங்களுடனும் ஒரு இடம் பார்த்திருக்கிறேன். பெயர் நினைவுக்கு வரவில்லை. வாழ்த்துக்கள் // 

என்று  சொல்லி இருந்தார்கள். அவர்களுக்கு நான் ”அந்த ஊர் பெயர் சித்தன்னவாசல் , அங்கு மகள் மருமகனுடன் சென்று வந்தோம், அதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்”  என்று பதில் அளித்தேன். சாரால் மற்றொரு பதிவு போட வாய்ப்பு கிடைத்து விட்டது.


பொங்கலோ பொங்கல் !  பதிவுக்கு  வரைந்து தந்த வாழ்த்து அட்டை

பொங்கல் திருநாள் இந்த ஆண்டு  முன்பு போல்   இல்லை.  பயிர் பச்சை செழிப்பாக வளரவில்லை.  தண்ணீர் இல்லை, மழை இல்லை என்று மக்களின் மனக்குறை. இதைப் போக்க என்ன வழி என்று தானே பார்க்க வேண்டும்.

திருநெல்வேலியில் சமீபத்தில் ஜானகி ராம் ஓட்டலில் தங்கி இருந்தோம். அவர்கள் வைத்து இருக்கும் மாருதி ஓட்டலில் தான் உணவு உண்டோம். அங்கு எழுதி இருந்த ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது
துணிப்பை என்பது எளிதானது.
            தூரஎறிந்தால் உரமாவது
            பிளாஸ்டிக் என்பது அழகானது
           விட்டு எறிந்தால் விஷமாவது 

என்று எழுதி வைத்து இருந்தார்கள்.
   பெய்யும் மழை பூமியில் சென்று ,தங்கி, நிலத்தடி நீராக மாறினால் தான் மக்களுக்குப் பயன்படமுடியும்.  மழை நீரை நிலத்துக்குள் புக விட மாட்டேன் என்கிறது பாலிதீன் பைகள்.   அதை அரசு தடை செய்தாலும் , மக்கள் பயன்படுத்துவது குறையவில்லை.  சில கடைகளில் பிளாஸ்டிக் பை கிடையாது, தயவு செய்து வீட்டில் இருந்து பை கொண்டு வரவும் ,என்று போட்டு இருக்கிறார்கள்.

-----------------


பொங்கலோ பொங்கல் -பாகம்-2 


வீட்டில் மூலை முடுக்கு எல்லாம் சுத்தம் செய்வது.  வீட்டை வெள்ளை அடித்து சுத்தம் செய்வது.  பரணில் இருக்கும் வேண்டாததை வெளியே எறிந்து வேண்டியவைகளைச் சுத்தம் செய்து எடுத்து வைப்பது  என்று எவ்வளவு வேலை.

சீன வாஸ்து சொல்கிறது வேண்டாதவை என்று நாம் எடுக்காத பொருட்களில் கெட்ட சக்திகள் வந்து குடி கொண்டு விடும் என்று.  இயந்திரமோ, மனித உடலோ உபயோகிக்காவிட்டால்  அப்படித்தான் ஆகி விடும்.
                                                                     ----------


மாட்டுப்பொங்கல் பதிவுக்கு வரைந்து தந்த படம்

 உழவுக்கும், தொழிலுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும், வீரத்திற்கும் உதவியாக இருக்கும் மாட்டுக்கு இன்று மரியாதை செய்யும் நாள் ,மாட்டுப் பொங்கல். கடுமையாக உழைக்கும் பெண்ணையும் ஆணையும் மாடாய் உழைக்கிறார் என்று சொல்லி மாட்டுக்குப் பெருமை சேர்க்கிறோம்.
                                                                 --------------------------


இளமையின் ரகசியம் தீரா கற்றல் பதிவுக்கு வரைந்த படம்.

வயதானவர்கள் நிறைய எழுதுகிறார்கள், இணையத்தில். வயது ஆக ஆக  ”மெமரி லாஸ் ” பிரச்சனை வரும் என்கிறார்கள்  மருத்துவர்கள்  அதற்கு நிறைய புத்தகங்கள் படிக்கச் சொல்கிறார்கள்.  நாளைடைவில் இந்த பிரச்சனை சரியாகி விடும் என்கிறார்கள் அதற்கு இணையம் கை கொடுக்கும், அவர்களுடம் பேச ஆள் இல்லை என்றால் அதற்கு இணையம் ஒரு நல்ல துணை. ஏதாவது கதை,கட்டுரை தன்  வாழ்க்கையில் கிடைத்த அனுபவம், தனக்குத் தெரிந்த சமையல் கலை, தையல் கலை, மற்றும் தனக்குப் பிடித்த புத்தகங்கள், சினிமா விமர்சனம் , பயணக்கட்டுரை எல்லாம் எழுதுகிறார்கள். அதைப் படித்து கருத்து சொல்பவர்கள் நண்பர்கள் ஆகிறார்கள். பாராட்டு ஒரு நல்ல டானிக். அது அவர்களை நாள் முழுவதும்  உற்சாகத்தோடும் மனபலத்தோடும் வாழவைக்கும் மருந்து ஆகிறது.  மெமரி லாஸும் போய் சிறு வயது நினைவுகள் எல்லாம் வருகிறது. பலருடன் தன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்வாய் இருக்கிறார்கள். நண்பர்களிடமிருந்து நாள்தோறும் ஏதாவது புதிதாய்க்  கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். தன்  உடல்  குறையையே எப்போதும் கூறிக்  கொண்டு இருக்காமல்  குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறார்கள்,  தனக்கு தெரிந்த கைவைத்தியம், உடலோம்பல் முறைகள் எல்லாம் எல்லோருக்கும் சொல்கிறார்கள். பிறர் சொல்வதைக் கேட்கிறார்கள்.

சித்திரை  முதல் நாளில்  ’ பண்புடன் ’  இணைய இதழுக்காக  நான் எழுதிய  கட்டுரை.
---------------------------------------




இன்ப மழை பெய்ய வேண்டும்என்ற பதிவுக்கு வரைந்து தந்த படம்.

இயற்கை விஞ்ஞானி  நம்மாழ்வார்  அவர்கள் ஒரு தொலைக்
காட்சியில் சொன்னார்: //தண்ணீர் உபயோகத்திற்கு  ,நம் தந்தைக்கு அவருடைய அப்பா குளம், ஏரியைக் காட்டினார்,   நம் தந்தை,
குழந்தைகளுக்கு கிணற்றைக் காட்டினார், நாம் நம் குழந்தை
களுக்கு பைப்பைக் காட்டினோம்., நம் குழந்தைகள் அவர்களின் குழந்தைகளுக்குப் பாட்டிலைக் காட்டுகிறார்கள். //

வருங்காலத்தில் நிலைமைஎன்னவாகும்?

 மண்ணுக்கு மழைத்துளி, நமக்கு உயிர்த்துளி. பறவைகள் கூட மழை
எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள வானிலை அறிக்கையை எதிர்பார்க்கிறதாம்.

எங்கள் பிளாக்’  ஆசிரியர்
குழுவில் உள்ள ஸ்ரீராம் அவர்கள்  இன்று பகிர்ந்து கொண்ட கற்பனைக் கவிதை பாருங்கள்.

//வானிலை அறிக்கையைக்
கொஞ்சம்
சத்தமாக வையுங்கள்
ரமணன் சொல்கேட்டு
மழை வரும் நாள்
அறிந்து
ஆடுகிறேன்..//

எப்படி இருக்கிறது  மயில் சொல்லும் கவிதை ? மழை பெய்து பறவைகளும்,
விலங்குகளும் ஆடட்டும்.

                                                           ---------------------------






திருப்பூவண உலா பதிவில்  அப்பர் தேவாரத்திற்கு வரைந்த படம்.

வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும்
       கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
             காதில்வெண் குழையோடு கலந்து தோன்றும்
    இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
             எழில்திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
                      பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

                                                                  ----அப்பர் தேவாரம்

--------------------------------------



மின்சாரமே! மின்சாரமே! பதிவுக்கு வரைந்து  தந்த படம்.

சாத்தூர் பஸ்நிலையத்தில் ஒரு  அறிவிப்புப் பலகை பார்த்தேன்.  அதை
உங்களுடன் பகிர எழுதி வைத்துக் கொண்டேன்.  போட்டோ எடுக்க காமிரா
அப்போது கையில் இல்லை.

காணவில்லை
ஊர்- தமிழ்நாடு
வயது- 200 ஆண்டுகள்
பெற்றவர்- பெஞ்சமின் பிராங்களின்
அடையாளம்- - மிகவும் பிரகாசமாக இருப்பார், தொட்டால் ஷாக் அடிப்பார்.
அருமை மின்சாரமே! உன்னை காணாமல் நாங்கள் வெகு நாட்களாய் அல்லல்
படுகிறோம். எப்போ நீ வருவாய் ? கண்ணில் நீரோடு காத்திருக்கிறோம்.
--இப்படிக்கு தமிழ்நாட்டு மக்கள்.

-எப்படி இருக்கு அறிவிப்பு!
நிலமை இப்படி ஆகிவிட்டது!
                                                   --------------------------

அம்மா என்றால் அன்பு  அன்னையர் தின பதிவுக்கு வரைந்து தந்த படம்

அம்மா என்றால் அன்பு.   அன்பு என்றால் அம்மா. சொல்லச் சொல்ல இனிக்கும், அம்மா என்னும் அழைப்பு. அவரவர்களின் அம்மா அவரவர்களுக்கு என்றுமே சிறப்புதான்.(உயர்த்திதான்)

அன்னையர் தின சிந்தனை பதிவு.
                                                   -------------------------



கழுகுமலை பதிவுக்கு வரைந்து தந்த படம் (வெட்டுவான் கோயிலை படம் பிடிக்கும் காட்சி)

.

                            ------------------------


ஜலீலாவின் பேச்சிலர் சமையல் குறிப்பு போட்டிக்கு வரைந்து தந்த படம்.

ஆஹா  உருளை!
இந்த சமையல் குறிப்புகளை ஜலீலாவிற்கு  பேச்சிலர் சமையலுக்கு அனுப்பி இருக்கிறேன்.

உருளைக்கிழங்கு காரக்கறி

தக்காளி சாதம்

தனியா பொடி(கொத்தமல்லி விதை பொடி)

ஆப் பாயில் உருளை.

இந்த போட்டியில் திரு. வை.கோபாலகிருஷ்ணன் சார் வெற்றி பெற்றார்.  
அடடா --- என்ன அழகு!
அடையைத் தின்னு பழகு!


என்  கணவர் என் பதிவுகளுக்கு வரைந்து தந்த படங்களும்  பதிவுகளின் சுட்டியும். இன்னும் இருக்கிறது அது அடுத்த பதிவில்  பார்க்கலாம்.
பழைய பதிவுகளில் எவ்வளவு பதிவர்கள் ! வந்து பின்னூட்டம் கொடுத்து இருக்கிறார்கள் .  நினைத்துப் பார்த்து, படித்துப் பார்த்து மகிழ்கிறேன்.
நினைவு பறவை சிறகை விரித்துக் கொண்டு போய் கொண்டே இருக்கிறது ஆனால் அதை அடக்கி   கொஞ்ச நினைவுகள் மட்டும்.


//பதிவுலகம் முன்பிருந்த நிலையும் இப்போது இருக்கும் நிலையும் மனதில் தோன்ற, அந்த எண்ணங்களை அப்படியே பதிவிட்டேன். பதிவுலகம் மீண்டும் புத்துணர்வோடு இயங்கும் நாளை எதிர்நோக்கி நானும்…..// 


வெங்கட் சொன்னது போல் நானும் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறேன்.
                                                 வாழ்க வளமுடன்.

Viewing all 787 articles
Browse latest View live