நலம் விசாரித்தல்:
”நலமாக இருக்கிறீர்களா? செளக்கியமா? எப்படி
இருக்கிறீர்கள்? சுகம் தானே! ”இப்படி எல்லாம் கேட்பது
ஒரு மரபு .
ஊரில் தான் இருக்கிறீர்களா? எங்கே ஆளயே காணோம்
பெண் வீட்டுக்கா, மகன் வீட்டுக்கா? கோயில் குளமா?,
அல்லது அத்தை மாமாவைப் பார்க்க போனீர்களா?
ஊரிலேயே இருப்பு இல்லையே என்பது தான்
ஊர்க்காரர்கள் கேட்கும் கேள்வி.
கோவில் கும்பாபிஷேகம், உங்களை பார்க்கவில்லையே!
ஊரில் இல்லையா? பிரதோஷத்தில் பார்க்கவில்லையே!
என்று விசாரிப்புக்கு பதில் சொல்லிக் கொண்டே
வரவேண்டும். என் மகள் சொல்வாள் ”உன் கூட வந்தால்
தேர் நகர்வது போல் தான் வரவேண்டும்.
விசாரிப்புக்களுக்கு நின்று நிதானமாய் பதில் சொல்லி
வருவாய், பின் நீ நலம் விசாரிப்பாய் ”என்பாள்.
இப்போது சொந்தம், பந்தம், ஊர்க்காரர்கள், மட்டும்
இல்லாமல் பதிவுலக அன்பர்களும் கேட்கிறார்கள்.
எங்கே உங்களை வெகு நாட்களாய் காணோம்? பதிவுகள்
வரவில்லையே என்று அக்கறையாகக் கேட்கும் போது
அளவில்லா ஆனந்தம் ஏற்படுகிறது.
நான் இந்த பதிவுலகம் வந்தது 2009 ஜூன் 1ஆம் தேதி .
ஏதோ எனக்கு தெரிந்த மாதிரி எழுதி வருகிறேன். எழுத
ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இந்த பதிவு
என் 100 ஆவது பதிவு. என் பதிவுகளை வாசித்துத் துணை
நிற்கும் நட்புகளுக்கு நன்றி.
இன்று நான் எழுத எடுத்துக் கொண்ட தலைப்பு:-
’மெளனம்’.
நான் 15 வருடங்கள் விடாமல் வாராவாரம் சனிக்கிழமை
மெளனம் இருந்தேன்., ஞாயிறு காலைதான் பேசுவேன்.
மகளுக்கு மாப்பிள்ளை பார்த்தது, (மாப்பிள்ளை
டெல்லியிலிருந்து விடுமுறையில் வந்து இருப்பதால்
சனிக்கிழமை பார்க்க முடிவு செய்யப்பட்டது) மகனுக்கு
பெண் பார்க்க போனபோது எல்லாம் மெளனத்தில் தான்.
என் சித்தி ஒருவர் வியாழக்கிழமை மெளனம்
இருப்பார்கள். அதை சிறுவயதில் பார்த்ததால் ஆசை வந்து
விட்டது எனக்கும். என் சித்தியின் கண்ணும், கையும்
பேசும். பார்க்கவே நன்றாக இருக்கும்.
நான் மெளனம் இருந்த போது பெற்ற அனுபவங்கள், என்
மெளனத்தால் என் வீட்டார் பெற்ற அனுபவங்கள்,
அவஸ்தைகள் எல்லாம் சொல்கிறேன், அடுத்த பதிவில்.
நீங்களும் மவுனமாய் அதுவரை காத்து இருங்கள்.
மெளனத்தைபற்றிப் பெரியவர்கள், ஞானிகள் என்ன
சொல்கிறார்கள் ?
”எல்லா நேரங்களிலும் பேசிக் கொண்டே இருக்காமல்,
மெளனமாக இருக்கும் பண்பை வளர்த்துக்
கொள்ளவேண்டும். மெளனத்தை விட பெரிய ஆயுதம்
எதுவும் இல்லை ”-- அன்னை.
”தண்டிப்பவர்கள்பால் நான் செங்கோல்;
வெற்றிவேண்டுபவரிடத்து நான் நீதி;
ரகசியங்களுள் நான் மெளனம்;
ஞானிகளுடைய ஞானமும் நானே.”
‘ஸ்ரீமத் பகவத்கீதையில் --- ஸ்ரீ கிருஷ்ணன்.
”ஓசை யொடுங்குமிடம் ஓங்காரத் துள்ளொளிகாண்
பேசாதிருக்கும் பிரமமிது என்றாண்டி.”---- பட்டினத்தார்.
சிவ மோனம்
”பொங்கிநின்ற மோனமும்
பொதிந்துநின்ற மோனமுந்
தங்கிநின்ற மோனமுந் தயங்கிநின்ற மோனமுங்
திங்களான மோனமுஞ் சிவனிருந்த மோனமே.”
--சிவவாக்கியர்
”சும்மா இரு சொல்லற ” ,
”பேசா அநுபூதி பிறந்ததுவே.”---அருணகிரிநாதர்
சும்மா இரு
---------------------
சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்று
எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே.
சும்மா இருக்கச் சுகம்சுகம்
என்று சுருதியெல்லாம்
அம்மா நிரந்தரஞ் சொல்லவுங்
கேட்டும் அறிவின்றியே
பெம்மான் மெளனி மொழியையுந்
தம்பியென் பேதைமையால்
வெம்மாயக் காட்டில் அலைந்தேன்
அந்தோ! என் விதிவசமே.
------தாயுமானவர்
தாயுமானவரை சின்னஞ்சிறு வயதிலேயே
ஆட்கொண்டவர் ஒரு முனிவர் .அவர் பேசுவது மிகக்
குறைவு. இரண்டொரு வார்த்தைகளுக்கு மேல்
அவருடைய வாயினின்று சொற்கள் வெளியே வரமாட்டா.
ஆதலால் அவரை மெளனகுரு எனக்கருதி தாயுமானவர்
அவருக்கு சிஷ்யர் ஆகி தன் ஐயங்களை அகற்றிக் கொண்டார்.
அவருக்கு குரு உபதேதித்தது “சும்மா இரு” என்பது
தான்.இந்த உபதேச மொழிதான் தாயுமானவரின்
பாடல்கள் பலவற்றிலும் பீஜமந்திரமாய் அமைந்து
இருக்கிறது.
ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும்
அல்லது ஆண்டு தோறும் இருப்பிலுள்ள பொருள்களை
கணக்கெடுப்பது போல் எல்லோருமே மாதத்திற்கு ஒரு
நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுக்கிக்
கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மெளனநோன்பு
அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.
மெளனநோன்பு இருவகைஉண்டு. 1. ஒரு செயலைச்
செய்து முடிக்க வேண்டுமென்று மன உறுதியோடு
சங்கற்பம் செய்து கொண்டு அவ் வேலை முடியும்
வரையில் பேசமால் இருப்பது. இது மனதையும்
உடலாற்றலையும் சிதறாமல்காத்து, தான் விரும்பும்
செயலை வெற்றியோடு முடிக்கத் துணை செய்யும்.
2. ஆன்ம தூய்மைக்காக குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கி
வைத்துக் கொண்டு , குடும்பம், பொருளாதாரம், வாணிபம்,
இவைகளிலிருந்து விலகி கொண்டு மெளனமாக இருந்து
அகத்தாய்வு செய்து கொள்ளுதல்.
----------வேதாத்திரி மகரிஷி.
சஷ்டி விரதம் இருப்பவர்கள் உண்ணாநோன்புடன்
மெளனநோன்பு இருப்பார்கள்.
இயற்கை வைத்தியத்தில் மெளன சிகிட்சை என்று ஒன்று
உண்டு. மெளன கட்டளைக்கு மதிப்பு அதிகம், மகான்கள்
சித்தர்கள் கட்டளையிட்டே நோய்களை விரட்டி உள்ளனர்.
எல்லா மதங்களை சேர்ந்தவர்களும் மெளனத்தை கடைபிடிக்கிறார்கள்.