திருக்கடையூரில் என்றும் பதினாறாய் இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றதுபோல் சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற தலம்,
பரங்கிப்பேட்டையில் உள்ள ஆதிமூலேஸ்வரர் கோவில்
இறைவன் -ஆதிமூலேஸ்வரர்
இறைவி -அமிர்தவல்லி
தல மரம் -வில்வம், வன்னி
தீர்த்தம் -வருண தீர்த்தம்
புராண பெயர் -வருண ஷேத்திரம்
கிராமம்/நகரம் -பரங்கிப்பேட்டை
மாவட்டம் -கடலூர்
மாநிலம்-தமிழ்நாடு
காஷ்யப முனிவர் ஒரு முறை சிவனை எண்ணி யாகம் நடத்தினார். அந்த யாகத்தை நிறுத்த வருணன் மழையை ஏற்படுத்தினான். இதனால் முனிவர் வருணனை சபித்தார். வருணன் சக்தி இழந்தான். பின் அவன் சிவபெருமானை வணங்கி சாபம் தீர்ந்தான். வருணன் சிவபெருமானை இததலத்திலேயே இருந்து அருளும்படி வேண்டினான். அப்படி இங்கே தங்கியுள்ள அந்த இறைவனுக்கு ஆதிமூலேஸ்வரர் என்று பெயர்.
வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம் என்கிறார்கள் .நாமும் மழை வேண்டி இப்போது அவரை வணங்குவோம்.
சித்திர குப்தர் 12 வயதில் இறந்து விடுவார் என்று விதி இருந்தது. அவரது தந்தை வசுதத்தன் மிகவருந்தியபோது, சித்ரகுப்தன் இததலத்து சிவனை வழிபடுவோம் என்று தன் தந்தையிடம் சொன்னார். ஆதிமூலேஸ்வரரை வழிபட்டார்கள்.
மார்க்கண்டேயரை சிவபெருமானே வந்து காப்பாற்றினார். இத்தலத்தில் தன் துணைவியைப் பெருமைப்படுத்த அம்பாளை விட்டு எமனை தடுக்கச் சொல்கிறார். அம்பாள் எமனிடம், ”சித்திரகுப்தன் சிறந்த சிவபக்தன் -அதனால் அவனை விட்டுவிடு ” என்கிறார். சிவபக்தர்களை அவ்வளவு சீக்கிரம் எமன் நெருங்கமாட்டார் என்பார்கள்.
மார்க்கண்டேயனை கொல்ல வந்த எமனை சிவன் இடது காலால் உதைத்தார் ,அந்த இடது பாகம் பார்வதி தேவியுடையது என்பார்கள். சேய்க்கு இரங்கும் குணம் தாய்க்குத்தான் உண்டு என்று மார்க்கண்டேயர் வரலாறும், சித்திர குப்தன் வரலாறும் சொல்கிறது. சிவனின் ஆணைப்படி சித்திரகுப்தனை எமன் கொல்லாமல் விட்டதுடன் தன் உதவியாளராகவும் ஏற்றுக் கொண்டார்.
இக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு எதிரில் சித்திரகுப்தன் சன்னதி உள்ளது.
இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அமிர்தம் போல் அருளை அள்ளி வழங்குவதால் அம்பாள்,அமிர்தவல்லி என்று அழைக்கப்படுகிறார். அம்மன்சிலைக்கு கீழ் ஸ்ரீசக்கரம் உள்ளதாம் . சித்திரை மாதம் சிவன், அம்பாள் இருவர் மீதும் சூரிய ஒளி படுமாம் . அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெறுமாம்.
இங்கு ஆயுள் விருத்தியடையவும், மரண பயம் நீங்கவும் , நோய் தீரவும் மிருத்யுஞ்சய ஹோமம் செய்கிறார்கள், சஷ்டிஅப்தபூர்த்தி, சதாபிஷேகம், செய்து கொள்கிறார்கள். ஞானம், மோட்சம் தரும் கேது பகவானுக்கு அதி தேவதை சித்திரகுப்தர் ,அதனால் சித்திரகுப்தரை வணங்கினால் இவ்விரண்டும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். சிவன் கோவில்களில் அர்த்தஜாமபூஜை முடிவில் பைரவருக்கு பூஜை நடக்கும். இந்த கோவிலில் சித்திரகுப்தருக்கும், பைரவருக்கும் பூஜை செய்து நடை சார்த்தப்படுகிறது. அர்த்தஜாமத்தில் சிவனுக்கு சித்திரகுபதர் பூஜை செய்வதாக ஐதீகம். சிதராபெளர்ணமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆயுள்விருத்திக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்கிறார்கள்.
![]() |
சுண்ணாம்பு கலப்பதற்காகச் செய்யப்பட்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்ட பாத்திரம் |
![]() |
விமானம் |
![]() |
தெற்குப் பிரகாரம் |
![]() |
துர்க்கையை வலம் வந்து வணங்கலாம் |
![]() |
சித்திரகுப்தர் திருவுருவம் |
திருநள்ளாறில் கிழக்குப் பார்த்துகொண்டு நின்று சனீஸ்வரர் அருள்வது போல் இங்கும் இருக்கிறார்.
![]() |
![]() |
மேடையில் கிழக்கு நோக்கிய சனீஸ்வரர் சந்நிதி |
இக் கோவிலை தரிசிக்கும் நேரம் காலை 7 மணி முதல், 11 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு எட்டுவரை. நாங்கள் போனபோது 11மணி பக்கம். குருக்கள் வேறு ஏதோவிழாவுக்கு வெளியே போய் விட்டார். போவதற்கு முன் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து விட்டு போய் இருந்தார்.
காஞ்சி மகாபெரியவரின் தந்தையார் சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆசிரியராகப் பணியாற்றிய ஊர் இது என்று சொல்கிறார்கள்.
நாங்கள் பரங்கிப்பேட்டை கோவில்களை தரிசித்து விட்டு அப்படியே சிதம்பரம் போனோம். அங்கு அம்மன் சந்நிதி பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் இருக்கும் சித்திரகுப்தரையும் தரிசித்தோம்.
![]() |
சிதம்பரம்-அம்மன் சந்நிதி |
![]() |
ஆயிரக்கால் மண்டபமும் சிவகங்கைத் தீர்த்தமும் |
![]() |
சிதம்பரம் -வடக்குக் கோபுரம் |
என்றும் 12வயதாய் இருக்கும் சிவபக்தராகிய அவரை வணங்கினால் நமக்கும் நல்லது நடக்கும் நம்பிக்கையில் வணங்குகிறார்கள் என நினைக்கிறேன்.
ஒருமுறை அபிஷேகம் பார்த்து இருக்கிறோம். அண்டா அண்டாவாக அனைத்து அபிஷேகங்களும் இருக்கும், இந்த முறை ஏகப்பட்ட தீபங்கள் ஏற்றி வழிபட்டார்கள். பக்தர்கள் தங்கள் கணக்கை சித்திரகுப்தர் நல்லபடியாக எழுதவேண்டும், எமதர்மராஜாவிடம் நம்மைபற்றி நல்லவிதமாக சொல்ல வேண்டும் என்று எடுக்கும் முயற்சி போலும்!. நல் எண்ணம், நற்செயல், நற்பண்புகளுடன் நாம் வாழ்ந்தால் அவர் நல்லபடியாக நம்மைப் பற்றி நாலுவார்த்தை நல்லதாய் எழுதப் போகிறார்.
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே’
என்பது தேவாரம். திருஇன்னம்பர் என்ற பாடல் பெற்றதலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மனிதர்கள் செய்யும் நற்செயல்கள், தீயசெயல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வார் என்று திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் கூறுகிறது. சித்திரகுப்தர் அதற்காக நியமிக்கப்பட்டவர் போலும்!
’பரங்கிப்பேட்டைக் கோயில்கள்’ தொடர்கட்டுரை நிறைவடைகிறது. வாழ்க வளமுடன்.
------------