
என் தங்கை, கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று கடந்த வாரம்
குடும்பத்துடன் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். நிறைய கோவில்களுக்கு தங்கையின் குடும்பத்துடன் சென்று வந்தோம்.
மார்கழி மாதம் என்றாலே கோவில் வழிபாடு சிறப்பு அல்லவா!
எங்கள் அம்மா மார்கழி என்றால், அதிகாலை நீராடி , விளக்கு ஏற்றி, திருப்பாவை திருவெம்பாவை பாடல் பாடி , கோவிலுக்கு சென்றுவருவதை எங்கள் எல்லோருக்கும் வழக்கப்படுத்தி இருந்தார்கள். நானும் என் தங்கையும்
அதிகாலை எழுந்து வண்ணக் கோலம் போட்டும் , கோவிலுக்குப் போயும் எங்கள் பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டோம்..
முன்பு, ’என் அம்மாவின் பொக்கிஷங்கள்’ என்று அம்மா எழுதி வைத்து இருந்த பாடல்களை பகிர்ந்து கொண்டேன்.
இந்தமுறை - என் அம்மா குமுதம் பத்திரிக்கையில் 1960, 61, 63 , வருடங்களில்
வந்த அறிஞர்களின் பொன்மொழிகளை தொகுத்துத் தைத்து வைத்திருந்த பழைய புத்தகத்திலிருந்து சிலவற்றைப் புத்தாண்டுச் சிந்தனைகளாய்ப் பகிர்ந்து கொள்கிறேன்.
1. நல்ல கருத்துக்களை, உயர்ந்த பண்புகள் முதலியவற்றைப் பற்றி அடிக்கடி
சிந்தனை செய்தால்தான் அவற்றிடம் ஈடுபாடு உண்டாகும். ஈடுபாடு, உண்டானால் தான் அவற்றுக்காக ஏங்குவோம். ஏங்கினால் தான் தேடுவோம். தேடினால் தான் அழகும் அருளும் நம் வாழ்க்கையில் புகுந்து அவை நமக்கு சொந்தமாகும்
.------- வேன் டைக்.
2. மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?
உங்களுடன் சேர்ந்து வாழ்பவர்களுடைய நற்குணங்களை -- உதாரணமாக
ஒருவருடைய சுறுசுறுப்பு, இன்னொருவருடைய அடக்கம், மற்றொருவருடைய கொடை, இவை போன்றவற்றை கண் முன் நிறுத்திக் களிப்படைவதில் இருக்கிறது.
---- மார்கஸ் அரீலியம்.
3. உற்சாகம் இழந்து விட்டீர்களா?
அதைத் திரும்ப அடைய ஒரு ராஜபாட்டை இருக்கிறது. உற்சாகமாக எழுந்து
உட்காருங்கள். உற்சாகமாக நடந்து கொள்ளுங்கள். உற்சாகமாகப் பேசுங்கள்,
துணிச்சலை வரவழைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியானால் துணிச்சல்
உள்ளவர் போல் நடியுங்கள். முழுமனத்தோடு, உறுதியுடன் நடியுங்கள் குலைநடுக்கத்துக்குப் பதில் வீராவேசமும் உண்டாகும்.
-------- வில்லியம் ஜேமஸ்.
4. இருக்கிற செல்வம் போதுமென்று திருப்தியடைவது சரிதான். ஆனால் இருக்கிற திறமை போதும் என்று திருப்தியடைவது சரியல்ல.
---------- மாகின் டாஷ்.
5. தோல்வி எதை நிரூபிக்கிறது?
வெற்றி அடைய வேண்டும் என்ற நமது தீர்மானத்தில் போதிய வலு
இருக்கவில்லை என்ற ஒன்றை மட்டும் தான்.
--------- பெர்வீ
6. எல்லா சக்தியும் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் எதையும் சாதிக்கலாம்.
எல்லாவற்றையும் சாதிக்கலாம். நம்புங்கள். நாம் பலவீனர்கள் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்
-------- விவேகானந்தர்.
--------எமிலி கூவே.
8. செயலை விதையுங்கள்
பழக்கம் உருவாகும்
‘பழக்கத்தை விதையுங்கள்
குணம் உருவாகும்
குணத்தை விதையுங்கள்
உங்கள் எதிர்காலம் உருவாகும்.
--------- போர்டுமன்.
9. தன் கடமை எது என்பதை உணர்ந்தவன் அறிவாளி ; கடமையை எப்படி செய்ய வேண்டும் என்பதை அறிந்தவன் திறமைசாலி ; கடமையை செய்பவன் நல்லவன்.
---------ஜோர்தான்.
10.எல்லா இடத்திலும் கடவுள் இருக்க முடியாது ஆகவே தாயைப் படைத்தார். --
- ------- யூதர்.
**********
![]() |
அம்மாவும் நானும் |
உலகத்தில் இந்த (2012)வருடத்தில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் இனி
நடக்காமல் இருக்கவும், வரும் காலம் எல்லோருக்கும் மகிழ்ச்சியும். மனநிறைவும் தரும் நாட்களாய் இருக்கவும் நாம் எல்லோரும் பிராத்தனை செய்வோம்.
வலை உலக அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்!
________________