அலங்காரத்திற்கு முன்
வெள்எருக்கம்பூவையும் நீலஎருக்கம்பூ மாலையையும்,
மல்லி, சாமந்தியையும் சூடி இருக்கிறார்.
வாசனை திரவியப்பொடி அபிஷேகம்
மஞ்சள் பொடி அபிஷேகம்
பசும்சாணி பொங்கலுக்கு பிடித்தது பலவருடங்கள் ஆனபின் அதில் பிள்ளையார் உருவம் வந்து விட்டது, அந்த பிள்ளையார் , வெள்ளை எருக்கு பிள்ளையார், வெள்ளிப் பிள்ளையார்.வெண்கலப் பிள்ளையார்(வலஞ்சுழி), மாக்கல் பிள்ளையார் (சந்தனலங்காரத்தில் இருக்கிறார்.)
பிள்ளையார் கொலுவீற்று இருக்கிறார்
பிள்ளையாருக்கு பிரசாதங்கள்
பிள்ளையார் அணி வகுப்பு
எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் காஞ்சி விநாயகர் தேர்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
ஆற்றம் கரையின் ஓரத்தில்அரசமரத்தின் நிழலிலே
வீற்றீருக்கும் பிள்ளையார் வினைகள் களையும் பிள்ளையார்
அவல் பொரி கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும்
கவலையின்றித் தின்னுவார் கண்ணைமூடித் தூங்குவார்.
சிறு வயதில் என் மகள் இந்த பிள்ளையார் பாடலைப் பாடி முதல் பரிசு வாங்கிவந்தாள். இன்று அவளது மகள் (பேத்தி)பாடல்கள் பாடிப் பரிசுகள் வாங்கி வருகிறாள். இன்று அந்தப்பேத்தி எங்கள் வீட்டுப் பிள்ளையாருக்கு ஸ்கைப் மூலம் "கஜவதனா கருணாசதனா" பாடினாள்.
பேரன், அம்மா பாட்டி வீட்டுக்குப் போய் இருக்கிறான். இங்கு இருந்தால் அவனும் பாடுவான். மதுரையிலிருந்து பிள்ளையாரைப் பார்த்தான் ஸ்கைப்பில்.
எப்போதும் பிள்ளையார் ஐந்து நாள் அல்லது மூன்று நாள் இருப்பார். இந்த முறை ஒரு நாள் தான் இருக்கப் போகிறார். சில வருடங்களாய் ஒரே நாளில் எல்லா பிரசாதங்களையும் செய்யாமல் தினம் ஒன்றாய் செய்து வணங்கி வருகிறேன். என் அம்மா பிள்ளையார் சதுர்த்தி என்றால் நிறைய பிரசாதங்கள் செய்வார்கள். மெதுவடை, ஆமவடை, (பருப்புவடை) இனிப்புப் பிடிகொழுக்கட்டை, பொரிவிளங்கா, சுண்டல், மோதகம் , எள்ளுருண்டை, அப்பம், புட்டு, இட்லி என்று மெனு நீண்டு கொண்டு இருக்கும். இப்போது அவ்வளவு செய்தால் சாப்பிட ஆள் இல்லை. செய்யவும் முடியவில்லை, தனியாக .
போன வருடம் பிள்ளையார் சதுர்த்தி அன்று இரவு திருக்கயிலாயம் புறப்பட்டோம், அப்போது சென்னையில் என் கணவரின் அண்ணன் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடினோம்.
இந்த வருடம் திருசெந்தூர்ப் புட்டுஅமுது, இனிப்புப் பிடி கொழுக்கட்டை, தேங்காய் பூரணம் வைத்த மோதகம், கறுப்பு கொண்டைக்கடலை சுண்டல், எள்ளு உருண்டை, அவல் பொரிகடலை , வடை , பழங்கள் வைத்துப் பிள்ளையாரை வணங்கினோம்.
அவருக்கு பிடித்த பழங்கள் என்று இந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை வைப்போம். இந்த முறை நாவல் பழம் கிடைக்க வில்லை. பேரிக்காய் கிடைக்கவில்லை.
பிள்ளையார் மிகவும் எளிமையானவர், பசும் சாணம் பிடித்து வைத்து அல்லது ஒரு அச்சு வெல்லத்தை பிள்ளையார் என்று வைத்து வணங்கலாம். வணங்குவதற்குப் பூக்களும் எளிமையான எருக்கம் பூ போதும்.
பிரசாதங்கள் என்று அவல் பொரி, கடலை போதும். ஏற்றுக் கொள்வார் !
எங்கள் வீட்டுப் பிள்ளையாரைத் தரிசனம் செய்தீர்களா? பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்கள்.
பிள்ளையாரை இன்று இரவு வீட்டிலேயே கரைத்து செடிகளுக்கு ஊற்றி விடுவோம். நீர் நிலைகள் ஓடாமல் குட்டையாய் நிற்கிறது. நீரும் அசுத்தமாய் இருக்கிறது. பலகாலமாய் இப்படிதான் செய்கிறோம்.
எல்லோருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
இந்த படங்களையும் பாருங்கள் என் மகன் வீட்டு பிள்ளையார் சதுர்த்தி விழா.
என் மகன் அவனே செய்த பிள்ளையார்
மருமகள் செய்த பிரசாதங்கள்
மருமகள் இந்தியா வந்து இருப்பதால் என் மகன் இந்த முறை பழங்கள் வைத்து வணங்குவான் . இது போனவருட பிள்ளையார் சதுர்த்தி படங்கள்.