"பசுமை நடை"இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம்.
திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது.
நேற்று(15.07.2018) காலை ஆறு மணிக்குத் திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்திற்கு வரச் சொன்னார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அங்கு போனோம். பசுமைநடை இயக்கத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் எங்களைப் பேருந்து நிலையத்திற்கு வெளியே ஒரு கடை முன் காத்து இருக்கச் சொன்னார். 7 மணிக்கு அங்கிருந்து அனைவரும் தென்பரங்குன்றம் பயணித்தோம். 10 நிமிடத்தில் மலையடிவாரம் வந்தது. வாகனங்களை நிறுத்தி விட்டுச் சிறிது தூரம் நடந்தால் குடைவரைக் கோயில்.
கி.பி 8-9 ஆம் நூற்றாண்டில் இக்கோயில் எடுக்கப்பட்டு இருக்கலாம்.
படிக்க முடிகிறது அல்லவா?
படித்து விட்டு வாருங்கள், குடைவரைக் கோயிலுக்குப் போய்ப் பார்க்கலாம்.
போகும் பாதையில் பசுமை நடை இயக்கத்தைச் சேர்ந்தவர் நிறைய மரம் புதிதாக நட்டு இருக்கிறார். அரசமரம், ஆலமரம், வேப்ப மரம், பூவரசு போன்ற மரங்கள் வழி நெடுகிலும் நடப்பட்டுள்ளன. அடுத்துப் போகும்போது அவை வளர்ந்து நிழல் தரும் .
கொஞ்சம் படிகள் இருக்கிறது
விழுதுகளாய்ப் பரப்பிக் கொண்டு படிக்கட்டுகளின் இருபுறமும் ஆலமரம் அழகாய்க் காட்சி தருகிறது.
90 பேர் வந்து இருப்பார்கள்.
ஆலமர விழுதுகள் நிறைய ஒன்றாகச் சேர்ந்து நல்ல தடிமனாக இருக்கிறது. வெட்டி விட்டதால் அப்படி இருக்கிறது, ஒரு கிளையை வெட்டிய பகுதி நாய் தன் முகத்தைத் தூக்கிப் பார்ப்பது போல் இருக்கிறது அல்லவா?
படிக்குப் பக்கத்தில் நிறைய வேப்பமரம் வளர்ந்து கொண்டு இருக்கிறது பார்க்க அழகு, பச்சை பசேல் என்று.
படியேற சிரமம் இல்லை. ஒரு வாரமாய்க் கொஞ்சம் கால்வலி(கணுக்கால் வலி) இருந்ததால் ஏறமுடியுமா என்று சந்தேகம். அங்கு போய்ப் பார்த்தபோது ஏறலாம் கால்வலிக்காது என்ற நம்பிக்கையோடு ஏறினேன் அங்கு எல்லோரையும் பார்த்த மகிழ்ச்சி , புதிய இடம் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி. கால்வலி தெரியவில்லை, வீட்டுக்கு வந்தவுடன் வலி தெரிந்தது வெந்நீருக்குள் கால்களை வைத்து அதற்கு நன்றி சொல்லியாச்சு. இன்னும் இரண்டு மூன்று நாள் அதற்குச் சேவை செய்ய வேண்டும். வலி இருக்கிறது.
![]()
படியேறி மேலே போனதும் கோயில் வாசல்
வாசலின் வலது பக்கம் தேவாரம் பாடிய மூவரின் சிற்பங்களும்,
பைரவர் நாய்வாகனத்துடன் செதுக்கப்பட்ட சிற்பமும் உள்ளன.
நடுவில் இருக்கும் திருஞானசம்பந்தர், ஆடும் கோலத்தில் இருப்பார். அதற்கு சாந்தலிங்க ஐயா சொன்ன விளக்கம் நன்றாக இருந்தது. திருஞானசம்பந்தர் சின்னப்பிள்ளை என்றும், நம் வீட்டில் இருக்கும் சின்னப்பிள்ளையை
கடைக்குப் போய்வா என்றால் என்ன செய்யும் ஆடிக் கொண்டே ஓடிக் கொண்டே தான் போகும் . அது போல் அவர் ஆடிக் கொண்டு இருக்கிறார். அவரை அது போல் வடித்து இருக்கிறார்கள். என்றார். என் கணவர் அதை மிகவும் ரசித்தார்கள், அவர்களது அம்மா கடைக்கு போய் ரவை வாங்கி வா என்றால் ஆடிக் கொண்டு ஓடிப் போய் வாங்கி வந்து விடுவார்களாம், அவர்கள் அம்மா என்னடா இவ்வளவு சீக்கீரம் வந்து விட்டாய் என்பார்களாம்.
மேலே கடைசியில் உள்ள பைரவர் தெரியவில்லை என்பதால் மீண்டும் தனியாக அவரது படம். கைகள் தான் பின்னப்படுத்தி இருக்கிறது எல்லாச் சிலைகளிலும்
கோவில் வாசல் வலது பக்கத்தில் பிள்ளையார். இரண்டு துறவியர் சிற்பங்கள்.
கோயிலுக்குள் நடுவில் நடராஜர் பக்கத்தில் உமை இருந்தார்கள். இருட்டில் எடுத்ததில் விடுபட்டு இருக்கிறது. இரண்டு கைகளும் இல்லாமல் இருந்தது. நடராஜர் பாதமும் முயலகன் மேல் இருக்கும் காலும் இல்லை. இன்னும் இரண்டு கைகளும் இல்லை , இரண்டு கைகள் மட்டுமே இருக்கிறது. உடுக்கை ஏந்திய கையும் கொஞ்சம் உடைந்து இருக்கிறது.
நடராஜர் கால் அருகில் நான்கு கரங்களுடன் தெரியும் உருவத்தைப்பார்த்தால் நரசிம்மர் போல் இருக்கிரார்.
மேல் பகுதியில் ஒரு புறம் பெரிய விநாயகர் - அவரைச் சுற்றிச் சின்னச் சின்ன விநாயகர்கள்
மற்றொரு புறம் மரத்தின் மீது அழகாய் மயில் வாகனத்தில் முருகன் இருக்கிறார்.
வள்ளி, முருகன், தேவசேனா
குடவரைக் கோயில் பற்றிய அறிவிப்புப் பலகை
கல்வெட்டுக்கள்.
இரு கல்வெட்டுக்கள் உள்ளே இருக்கின்றன
முன் அறை : தரையில் நிறைய விளையாட்டுக்குரிய வரைகோடுகள் வரையப் பட்டு இருக்கின்றன.
"ஆடு -புலி"ஆட்டம்
மெலிந்த யானையின் ஓவியம்
இது என்ன விளையாட்டு என்று தெரியவில்லை
"தாயக்கட்டம்"போல் இருக்கிறது
படி ஏறி வரும்போது பக்கத்தில் உள்ள திண்ணையில் பாதங்களும் எழுத்துக்களும் காணப்படுகின்றன.
கோயிலில் மேல் பகுதிச் சிற்பங்கள் எல்லாம் சிதைந்து இருக்கின்றன.
"பசுமை நடை"யின் தலைவர் திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள் பேசுகிறார். அவருக்கும் இந்த இடத்திற்கும் 30 வருட பந்தம் உள்ளது என்றார். இதை சுற்றுலா ஸ்தலமாக என்ன முயற்சி செய்யமுடியுமோ அதைச் செய்ததாகவும், செய்து கொண்டு இருப்பதாகவும் கூறினார்.
தொல்லியல் துறை அறிஞர் திரு சாந்தலிங்கம் அவர்கள் பேசுகிறார்.
வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார். இந்த இடத்தின் வரலாற்றைச் சொல்கிறார்.
முதலில் குடவரைக் கோயிலைப் பார்த்து வந்த பின் அவர் பேச்சின் மூலம் மேலும் சில விஷயங்கள் தெரிந்துகொண்டு மீண்டும் போய்ப் பார்த்து வந்தோம் அனைவரும்.
இந்த இடத்தைப் பாதுகாத்துக்கொண்டு இருக்கும் பெருமாள் என்பவரையும் அவரது உதவியாளரையும் பாராட்டிப் பரிசு வழங்கப்பட்டது. (புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு வேலி ஓரத்தில் இருப்பவர் தியாகராஜன் . இங்கு 30 வருடங்களாய் தொடர்ந்து வருகிறார் அவருக்கும் புத்தகம் நினைவு பரிசாக வழங்கபட்டது. அவர் பக்கத்தில் இருப்பவர்தான் பெருமாள் அவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பெருமாளின் உதவியாளர் இந்த இடத்தையும், சுற்றுப்புறத்தையும் பாதுகாத்து வருபவர்.
பசுமை நடை சாந்தலிங்கம் அவர்கள் பேசியதை இந்தச் சுட்டியில் கேட்கலாம்.
அருவிகள், சிங்கம், புலி, கரடி , மயில்கள் போன்றவைகள் அங்கு இருந்தன என்று இலக்கியங்கள் கூறுகின்றன, இப்போது இவை எல்லாம் எங்கே என்றும் கேள்விகள் கேட்டார்.
மலேஷியாவிலிருந்து வந்த எழுத்தாளர் மலர்விழி அருமையாகப் பேசினார். ("கடாரம்' என்ற நூலை எழுதி இருக்கிறார். ராஜேந்திர சோழனைப்பற்றி என்று சொன்ன நினைவு)
"தமிழ்மொழி தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியாவில் எல்லாம் பரவி இருந்தது . 'ரொம்ப காலமாக 'பாரதம் , பாரதம்'என்று குறுகிய வட்டத்தில் சிந்தனை இருந்தது, கொஞ்ச காலமாய் தான் உலகளாவிய சிந்தனை (குளோபல்) வந்து இருக்கிறது'என்கிறார்கள், ஆனால் சோழர்கள் காலத்திலேயே கம்போடியா, சீனா, இந்தோனேசியா, போன்ற கீழை நாடுகளுடன் பரந்த அளவில் எல்லாத் துறைகளிலும் தமிழ்நாடு உலகளாவிய தொடர்பு உடையதாக இருந்தது "என்று சில சான்றுகளுடன் தெரிவித்தார்.
அவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது, அதற்கு அமீரகத்திலிருந்து வந்து இருந்த இஸ்லாமிய சகோதரரை அளிக்கச் சொன்னார்கள்.
உள் அறையில் இருந்த அர்த்தநாரி சிற்பம் .
காளைமாடு பின்புறம் இருட்டுக்குள் இருக்கிறது
மற்றவர்களின் அலைபேசியின் வெளிச்சத்திலும், என் கணவரது டார்ச் லைட் வெளிச்சத்திலும் எடுத்த படம்.
தலைக்கு மேலே அசோகமரத்தின் கிளைகள் காணப்படுகிறது.
தேவாரம் பாடிய மூவர்
விலங்குகளுக்கு தண்ணீர்த் தொட்டி அமைத்து இருக்கிறார்கள். புதிதாக நிறைய மரங்கள் நடப்பட்டு உள்ளன, பசுமை நடை அமைப்பின் மூலம்
மலை அருகில் விலங்குகள் தண்ணீர் அருந்தத் தொட்டி வைத்து இருக்கிறது. ஒரு அன்பர் நிறைய மாம்பழங்களைத் தண்ணீர்த் தொட்டியின் மேல் வைத்துச் சென்றார்.
கிணறு வெகு ஆழமாய் இருக்கிறது. இப்போது அதில் நீர் இல்லை. கம்பித் தடுப்பு போட்டுப் பூட்டப்பட்டு இருக்கிறது .
உணவு இடைவேளையில் வந்து இருந்தவர்கள் விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.
கல்மேல் அமர்ந்து இங்கு என்ன கூட்டம் என்று பார்க்கிறது.
முகம் சிவந்து இருக்கிறது.
நான் இன்னும் வளர்ந்தால்தான் மரத்தைக் கட்டிப்பிடிக்க முடியும் என்று நினைக்குது போல!
மரத்தடியில் நிறைய குரங்குகள், மரத்தின் மீதும் குரங்குகள் சண்டையிட்டுக் கொண்டு இருந்தன.
எல்லாம் பார்த்து முடித்தவுடன் 8.30 மணிக்குக் காலைச்சிற்றுண்டி வழங்கப்பட்டது. இட்லி, தக்காளிச் சட்னி, தேங்காய்ச் சட்னி, சாம்பார் என்று. வழக்கம் போல் ஞாயிறு என்பதால் நாங்கள் விரதம், சாப்பிட முடியாது 12 மணிக்கு மேல்தான் மதிய உணவு என்றதும் வைத்துக் கொள்ளுங்கள் வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுங்கள் என்று கொடுத்தார்கள்.
குழந்தை வாங்கி வரும் போது போட்டோ எடுக்க நினைத்ததும் அந்த குழந்தை வேண்டாம் என்றாள் உன் தட்டை மட்டும் எடுத்துக் கொள்கிறேன் என்றேன் சரியென்றாள்.
மயில் எல்லாம் நிறைய இருந்தது என்று சாந்தலிங்க ஐயா சொன்னது உண்மை என்பது போல் மயில் அகவும் சத்தம் கேட்டது , போட்டோ எடுக்க
ஆவலாகப் போனேன். "மயில் குயிலாச்சு அக்கச்சி"என்பது போல் மயிலைக் காணோம். குயில் நின்றது.
அதுவும் முகம் காட்ட மறுத்து விட்டது.
அடுத்து நாங்கள் வாகனம் நிறுத்தும் இடம் போனபோது அங்கு ஒரு விழா நடந்தது அது என்ன விழா யார் யாருக்கு நடத்தியது என்பதை அடுத்த பதிவில்.
வாழ்க வளமுடன்.