Quantcast
Channel: திருமதி பக்கங்கள்
Viewing all 739 articles
Browse latest View live

திருக்கேதாரத் தலப்பயணம் - பகுதி 9

$
0
0


                             பகுதி-9


                        தேவப்பிரயாகை
                                                            DEV PRAYAG

19.05.2012

இன்று காலை 6.30 மணிக்கு நக்ராசு என்னும் இடத்தில் இருந்து புறப்பட்டோம். 10.30 மணியளவில் தேவப்பிரயாகை வந்தோம். 
தேவப்பிரயாகையில் அலக்நந்தா ஆறு

தேவப்பிரயாகை நகரம்
ஒருகரையில் இறங்கி கோயிலை வணங்கி பாலம் கடந்து ஏறி மறுபுறம் வந்தோம். பஸ் அங்கு எங்களை ஏற்றிக் கொண்டது.



                                                                கண்டங்கடி நகர்
                                                              KANTANKATINAGAR

தேவப்பிரயாகையில் உள்ள கோயிலை ரகுநாத்ஜி மந்திர் என்று அழைக்கிறார்கள். இது பெரியாழ்வாரால்  பாடப்பெற்ற கண்டங்கடிநகர் என்னும் திவ்ய தேசமாகும்.

கோயிலுக்கு இறங்கிச்செல்ல நிறைய படிகள் உள்ளன. மூலஸ்தானத்தில் பெரிய உருவத்தில் பெருமாள் .பெரிய பெரிய கண்கள். சந்நிதி திருமுன்பு திவ்யபிரபந்தப்பாடல்கள் எழுதப்பட்டுளளன. அந்த பாடலை படம் பிடிக்க கூடாது என்று சொல்லி விட்டார் பூஜாரி.  திருக்கோயிலைச் சுற்றி வலம் வந்தோம். பிரகாரத்தில் சந்நிதிகள் உள்ளன. அனுமனுக்கு சந்நிதி உள்ளது. ராமன் அமர்ந்த இடம் என்ற ஓர் இடம் உள்ளது. அங்கு ஒரு இருக்கை உள்ளது. ஒரு பெரிய மரத்தின் கீழ் இவ்விடம் உள்ளது. 

கோயிலின் முன்னர்
சந்நிதி நுழைவாயில்
வடதிசைமதுரை   சாளக்கிராமம்  வைகுந்தம்துவரை  அயோத்தி
இடமுடைவதரி  யிடவகையுடைய  எம்புருடோத்தமன்   இருக்கை
தடவரையதிரத்  தரணிவிண்டிடியத்  தலைப்பற்றிக்  கரைமரம்சாடி
கடலினைக்கலங்கக்  கடுத்திழிகங்கைக்  கண்டமெனும்கடி  நகரே

என்று பெரியாழ்வார் இத்தலத்து இறைவனைப்பாடியுள்ளார்.




விமானம்

இராமன் அமர்ந்த இடம்
கோயில் திறந்திருக்கும் நேரம் -குளிர்காலம்:7-12,5 -9      வெயில் காலம்-6 -12,4 -8



கோயிலுக்குச் செல்லப் படிகள்


நகரின் நடுவே

அலக்நந்தா ஆற்றுடன், பாகீரதி ஆறு சேரும் இடம் தேவப்பிரயாகை. இந்த இடத்திலிருந்து கங்கையாறு என்ற பெயரைப் பெறுகிறது. சங்கமத்திற்கு சிறிது தூரம் நடந்து சென்று பிறகு நிறைய படிகள் இறங்கி காணவேண்டும்.




சங்கமம்






அலக்நந்தா பச்சை கலரிலும், பாகீரதி வேறு கலரிலும் நன்கு தெரியும். அங்கு தட்டில் குங்குமத்தை வைத்துக் கொண்டு நம்மிடம் காசு வாங்குபவர்கள் ஆண்கள், பெண்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள். அங்கு ஒரு கல்லில் அனுமன் பாதம் இருக்கிறது. அதற்கு சிந்துரம் பூசி வைத்துக் கொண்டு நம்மிடம் காணிக்கை வாங்க ஒரு பூசாரி இருக்கிறார்.
மறுகரையிலிருந்து தோற்றம்


சனி பகவானுக்கு அங்கு தர்மராஜன் என்று பெயர் . எருமை வாகனத்தில் இருக்கும் அவரது சிலையின் முன்பு,  இருப்புச் சட்டியில் எண்ணெய்க்குள் சில நாணயங்களை போட்டு வைத்துக் கொண்டு கறுப்பு வஸ்திரம் அணிந்து உட்கார்ந்து கொண்டு காசு வசூல் செய்கிறார்கள்.


பாலம் கடந்து நம் பஸ்ஸை அடையும் இடத்தில் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க நடந்து வருபவரின் களைப்பைப் போக்க சர்பத் ம்ற்றும், குளிர் பானங்கள், வெள்ளரிக்காய் போன்றவைகளை விற்கிறார்கள். நாங்களும் தாகசாந்தி செய்து கொண்டோம்.


.பின்னர் பஸ் ஏறி மாலை 3 மணியளவில் ரிஷிகேசம் புறப்பட்டோம். வழியில் ஒரு விடுதியில் சாப்பிட்டோம். அந்த விடுதியருகே கண்டகாட்சி! உருண்டு விழுந்திருந்த காரும் லாரியும்!

 மாலையில் ரிஷிகேஷ் அடைந்தோம். அங்கு ஒரு இடத்தில் பஸ்ஸை நிறுத்தி விட்டு  சிவானந்தா ஆசிரமம் சென்றோம். 
சிவானந்த ஆசிரமத்தைப் பற்றி விளக்குகிறார் அங்குள்ள கைடு(நீலச்சட்டை)
வழிபாட்டு நேரம்

விஸ்வநாதர் சந்நிதி
சுவாமி சிவானந்தரின் சமாதி

சமாதி
சுவாமி சிவானந்தரின் திருவடிகள்

ராம் ஜூலா

சிவன் கோயில், நூலகம், புத்தகவிற்பனை நிலையம், சிவானந்தர் சமாதி ஆகிய இடங்களுக்குச் சென்றோம். கங்கையின் வடகரையிலிருந்து ராம் ஜுலா வழியாக நடந்து தென்கரை வந்து சேர்ந்தோம். 
ராம் ஜூலாவில் போக்குவரத்து நெரிசல்
சூரிய அஸ்தமன வேளையில் கங்கை
படகு சவாரி
அங்கு கீதாசிரமம், சொர்க்காசிரமம் பார்த்தோம். படகில் ஏறி மீண்டும் வடகரை வந்தோம். மாலை 7 மணியளவில் ஹரித்வார் விடுதி அடைந்தோம். அங்கு இரவு தங்கினோம். சார்தம் யாத்திரை முடிவுற்றது எனலாம்.


20.05.2012

இன்று காலை 7 மணிக்கு ஹரித்துவாரிலிருந்து இரயில் மூலம் டில்லி புறப்பட்டோம். .

எங்களுடன் வந்தவர்களிடம் ரயில் ஏறும் முன்பு விடை பெற்றுக் கொண்டோம். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு பெட்டி. பார்த்துக் கொள்ள முடியவில்லை.
ஹரித்வார் ரயில் நிலயத்தில்

இனி ஊருக்குத் திரும்ப வேண்டியது தான்

திரும்பிவரும் போது போகும்போது இருந்ததை விட மிக கஷ்டமான பயணம். எங்களை அழைத்து சென்றவர் தனி பஸ் வசதி செய்து ஹ்ரித்வாரிலிருந்து அழைத்து சென்று இருக்கலாம், அல்லது எல்லோருக்கும் ஏஸி கோச்சில் வசதியாக அழைத்து சென்று இருக்கலாம். ரயிலில் முன் பதிவு செய்து அழைத்து போனாலும் முன் பதிவு செய்யாதவர்கள் வந்து அமர்ந்து கொண்டு நமக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்பது கஷ்டமாய் உள்ளது. நான்கு இளம் வயது பையன்கள் எங்களுக்கு உதவி செய்து உட்கார இடம் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். 

டெல்லியில் இறங்கும் போது மிகவும் கஷ்டம் . நாம் இறங்குவதற்குள் ஏறுகிறார்கள். ரயில் சிறிது நேரம் தான் நிற்கும். அந்த பைய்ன்கள் ’நீங்கள் இறங்குங்கள் சாமான்களை எடுத்து தருகிறோம்’ என்று எடுத்துக் கொடுத்தார்கள் அவர்களுக்கு நன்றி சொன்னோம். 

சில கஷ்டங்கள் இருந்தாலும்  சார்தம் யாத்திரை  திருவருள் துணையோடு  இனிது முடிந்தது.


டில்லியில் அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள்  21.05.2012 அன்று காலை 7 மணியளவில் டில்லியிலிருநது விமானம் மூலம் தமிழ்நாடு திரும்பினோம்.


திருக்கேதாரத் தலப்பயணக்கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது.


                  -----------------------





பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

$
0
0

அலங்காரத்திற்கு முன்


வெள்எருக்கம்பூவையும் நீலஎருக்கம்பூ மாலையையும், 
மல்லி, சாமந்தியையும் சூடி இருக்கிறார்.





வாசனை திரவியப்பொடி அபிஷேகம்

மஞ்சள் பொடி அபிஷேகம்





பசும்சாணி பொங்கலுக்கு பிடித்தது பலவருடங்கள் ஆனபின் அதில் பிள்ளையார் உருவம் வந்து விட்டது, அந்த பிள்ளையார் , வெள்ளை எருக்கு பிள்ளையார்,  வெள்ளிப் பிள்ளையார்.வெண்கலப் பிள்ளையார்(வலஞ்சுழி), மாக்கல் பிள்ளையார் (சந்தனலங்காரத்தில் இருக்கிறார்.)




பிள்ளையார் கொலுவீற்று இருக்கிறார்

பிள்ளையாருக்கு பிரசாதங்கள்

பிள்ளையார் அணி வகுப்பு








எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் காஞ்சி விநாயகர் தேர்




        பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
         ஆற்றம் கரையின் ஓரத்தில்அரசமரத்தின் நிழலிலே 
               வீற்றீருக்கும் பிள்ளையார் வினைகள் களையும் பிள்ளையார்
           அவல் பொரி கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும் 
கவலையின்றித் தின்னுவார் கண்ணைமூடித் தூங்குவார். 

சிறு வயதில் என் மகள் இந்த பிள்ளையார் பாடலைப் பாடி முதல் பரிசு      வாங்கிவந்தாள்.   இன்று அவளது மகள் (பேத்தி)பாடல்கள் பாடிப் பரிசுகள் வாங்கி  வருகிறாள்.  இன்று அந்தப்பேத்தி எங்கள் வீட்டுப் பிள்ளையாருக்கு ஸ்கைப் மூலம் "கஜவதனா  கருணாசதனா" பாடினாள். 

பேரன், அம்மா  பாட்டி வீட்டுக்குப் போய் இருக்கிறான். இங்கு இருந்தால் அவனும் பாடுவான். மதுரையிலிருந்து பிள்ளையாரைப் பார்த்தான் ஸ்கைப்பில். 

எப்போதும் பிள்ளையார் ஐந்து நாள் அல்லது மூன்று நாள் இருப்பார். இந்த முறை ஒரு நாள் தான் இருக்கப் போகிறார். சில வருடங்களாய் ஒரே நாளில் எல்லா பிரசாதங்களையும் செய்யாமல் தினம் ஒன்றாய் செய்து வணங்கி வருகிறேன். என் அம்மா  பிள்ளையார் சதுர்த்தி என்றால்  நிறைய பிரசாதங்கள் செய்வார்கள்.  மெதுவடை, ஆமவடை, (பருப்புவடை) இனிப்புப் பிடிகொழுக்கட்டை,  பொரிவிளங்கா, சுண்டல், மோதகம் , எள்ளுருண்டை, அப்பம்,  புட்டு, இட்லி என்று மெனு நீண்டு கொண்டு இருக்கும். இப்போது அவ்வளவு செய்தால் சாப்பிட ஆள் இல்லை. செய்யவும் முடியவில்லை, தனியாக .

போன வருடம்  பிள்ளையார் சதுர்த்தி அன்று இரவு திருக்கயிலாயம் புறப்பட்டோம், அப்போது சென்னையில் என் கணவரின் அண்ணன் வீட்டில் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடினோம்.

இந்த வருடம்  திருசெந்தூர்ப் புட்டுஅமுது,  இனிப்புப் பிடி கொழுக்கட்டை, தேங்காய் பூரணம் வைத்த மோதகம்,  கறுப்பு கொண்டைக்கடலை சுண்டல்,  எள்ளு உருண்டை,  அவல் பொரிகடலை , வடை , பழங்கள் வைத்துப் பிள்ளையாரை வணங்கினோம்.

அவருக்கு பிடித்த பழங்கள் என்று இந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை வைப்போம்.  இந்த முறை நாவல் பழம் கிடைக்க வில்லை.   பேரிக்காய் கிடைக்கவில்லை.  

பிள்ளையார் மிகவும் எளிமையானவர்,  பசும் சாணம் பிடித்து வைத்து அல்லது ஒரு அச்சு வெல்லத்தை பிள்ளையார் என்று வைத்து வணங்கலாம். வணங்குவதற்குப் பூக்களும் எளிமையான எருக்கம் பூ போதும்.

பிரசாதங்கள் என்று அவல் பொரி, கடலை  போதும்.  ஏற்றுக் கொள்வார் !

எங்கள் வீட்டுப் பிள்ளையாரைத்  தரிசனம் செய்தீர்களா? பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்கள்.


பிள்ளையாரை இன்று இரவு வீட்டிலேயே கரைத்து செடிகளுக்கு ஊற்றி விடுவோம்.  நீர் நிலைகள் ஓடாமல் குட்டையாய் நிற்கிறது.  நீரும் அசுத்தமாய் இருக்கிறது. பலகாலமாய் இப்படிதான் செய்கிறோம்.


எல்லோருக்கும் பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

இந்த படங்களையும் பாருங்கள் என் மகன் வீட்டு பிள்ளையார் சதுர்த்தி விழா.


என் மகன் அவனே  செய்த பிள்ளையார்






மருமகள் செய்த பிரசாதங்கள்


மருமகள் இந்தியா வந்து இருப்பதால் என் மகன்  இந்த முறை  பழங்கள் வைத்து வணங்குவான் . இது போனவருட பிள்ளையார் சதுர்த்தி படங்கள்.




             

புரட்டாசி மாதமும் பேபி அக்காவும்.

$
0
0



புரட்டாசி மாதம் என்றால் பக்தி சிரோன்மணிகளுக்கு எல்லோருக்கும் திருமலை கோவிந்தன் நினைவு வரும். எனக்கு கோவிந்தன் நினைப்பும் பேபி அக்கா நினைப்பும் வரும். அவர்களுக்கும்  எங்கள் குடும்பத்திற்கும் உள்ள நட்பு மிக அழகானது ,ஆழமானது. என் மாமா பெண்ணின் (மதினி) பக்கத்து வீட்டு  இனிய தோழி ,எங்கள் குடும்பத்திற்கும் நட்பானார்கள். என் மதினி  வீட்டுக்கு விடுமுறைக்குப் போகும் போதேல்லாம்  அவர்கள் வீட்டில் தான்  பொழுதைக் கழிப்போம்  நல்ல கை வேலைகள் செய்வார்கள். நானும் என் அக்காவும் நிறைய அவர்களிடம் கற்றுக் கொண்டோம்.


எங்கள் அப்பாவிற்கு எந்த ஊர் மாற்றல் ஆனாலும் அந்த ஊருக்கு வருவார்கள்.
அவர்களுடன் அந்த ஊர்க் கோவில்கள் , சினிமா என்று அவர்கள் வந்தால் பொழுது மகிழ்ச்சியாக  போகும்.   அம்மாவிற்கு பின் எங்கள்  சகோதர சகோதரி வீடுகளுக்கும்  அவர்களின் வரவு தொடர்ந்தது.அவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள். அதனால் ’உங்கள் வீட்டுக்குப் புரட்டாசி மாதம்  தான் வரவேண்டும், இல்லையென்றால் கத்திரிக்காய் , வாழைக்காய் போட்டு நாக்கு செத்து  விடும் என்பார்கள்.   புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் பெருமாளுக்கு விரதம் இருந்து  தளிகை படைத்து அக்கம் பக்கத்தில் எல்லோரையும் தன் வீட்டுக்கு அழைத்து சாப்பிடச் சொல்வார்கள்.

நாங்கள் மதினி வீட்டுக்குப் போனால், அவர்கள் சப்பாத்தி, குருமா, பூரி மசால், புட்டு, ஆப்பம்,   குழிப்பணியாரம் என்று கொண்டு வந்து கொடுத்து அன்பாய் நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்து  மகிழ்வார்கள். குழந்தைகள் என்றால் மிகவும் ஆசை. ஆனால் இறைவன் அவர்களுக்கு  அருளவில்லை. எப்படி அருள்வான் அவன் வேறு முடிவு செய்து இருக்கும் போது! நிறைய பக்கத்துவீட்டு குழந்தைகளை வளர்த்தார்கள். ஆனால் அவை தங்களின் அம்மா வந்தவுடன்
இவர்களை விட்டுப்போய்விடுவார்கள். அதனால் அக்கா மனம் சோர்ந்து  போய் வேறு முடிவு எடுத்தார்கள். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் சென்று எந்த குழந்தை தன்னைப் பார்த்து மகிழ்ச்சியாக கையை பிடித்துக்  கொள்கிறதோ அதை எடுத்துவந்து வளர்ப்பது என்று முடிவு செய்து அது போல் தன்னைப்  பார்த்து சிரித்த பெண் குழந்தையை  எடுத்துவந்து வளர்த்தார்கள்.  பெண் குழந்தை வேண்டாம்  என்று பெற்ற  தாய் விட்டுச் சென்ற குழந்தையை எடுத்து வளர்க்க எவ்வளவு பெரிய மனம்  வேண்டும்!  அந்தப் பெண்ணைப்  படிக்க வைத்து ,திருமணம் செய்து அவளுக்கு பிறந்த குழந்தைகளை வளர்த்து மகிழ்ச்சியாக இருந்தார்கள்

இறைவன் தன் பக்தைக்கு  பிடித்த மாதத்திலேயே அவர்களை அழைத்துக் கொண்டான்.  போன செப்டம்பரில்,மகிழ்ச்சியாக  தன் மகள் வீட்டுக்கு  கிளம்பி பஸ்ஸுக்கு காத்து இருக்கும் போது காரில் வந்த எமன் அவர்களை அடித்துச் சென்று விட்டான். அவர்கள்   இறந்து விட்டார்கள். அப்போது அவர்களைப் பார்க்க வந்தவர்களில், அவர்கள் வளர்த்த அக்கம் பக்கத்து குழந்தைகள், நட்பு வட்டம் தான் அதிகம்.  அவர்கள் இறந்ததற்கு நான் போனபோது எல்லோரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். மதுரைப் பிள்ளைகள் வந்து விட்டார்களா? கீரனூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா? கோயமுத்தூர் பிள்ளைகள் வந்து விட்டார்களா? அம்பிகாபுரத்திலிருந்து எல்லோரும் வந்து விட்டார்களா  என்று .   மதுரைப் பிள்ளைகள் எங்கள் குடும்பம்.  குழந்தைகள் இல்லையென்றால் என்ன ?அன்பால் பெற்றுக் கொண்ட  குழந்தைகள் எவ்வளவு? அவர்கள் நினைவுகளில் அவர்கள் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள் . போன சனிக்கிழமை அவர்களின் முதல்வருட நினைவு நாள்.

காது கேட்காத குறை இருந்தாலும் அதைக் குறையாக எண்ணாமல் பத்து நாட்களுக்கு  ஒருமுறை ’கோமு எப்படி இருக்கே? தம்பி நல்லாருக்கா? என்று கேட்டுவிடுவார்கள். நீ சொல்வதை இவளிடம் சொல் கேட்டுக் கொள்கிறேன் ”என்று யாரையாவது பக்கத்தில் வைத்துக் கொண்டு பேசிவிடுவார்கள்.
அவர்கள் நட்பு வட்டத்தில் நமக்கும் இடம் உண்டு.  எல்லோரிடமும் நம்மைப்பற்றி சொல்லி அவர்களைப் பற்றி நம்மிடம் சொல்லி    நெடுநாள் பழக்கமானவர்கள் மாதிரி ஆக்கி விடுவார்கள்.  சின்ன டைரியில்  போன் நம்பர் அவர்களுக்கு வேண்டியவர்கள் வீட்டு முகவரி வைத்துக் கொண்டு தனியாக எந்த ஊருக்கும் சென்று விடுவார்கள். முன் பின் தெரியதவர்களும் அவர்களின் அனபான பேச்சால் அவர்கள் வசம் இழுக்கபட்டு விடுவார்கள்.

அன்பு  அன்பு அதைத் தவிர அவர்களுக்கு வேறு மொழி தெரியாது.
அன்பே தெய்வம்!
அன்பே அனைத்தும்.
அன்பு இருக்கும் இடமெல்லாம் பேபி அக்கா இருப்பார்கள்.



தீபாவளி வாழ்த்துக்கள்

$
0
0





அன்பு வலை உலக அன்பர்களுக்கு வணக்கம். நலமா? வெகு நாட்களாய் வலைப் பக்கம் வரவில்லை நான். எல்லோரும் இறைவன் அருளால் நலமாய் இருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த மாதம் முதல்  இணையத்துடன்  இணைவேன் என நம்புகிறேன்.  எல்லோருடைய பதிவுகளையும் அப்போது படிக்க வேண்டும். உங்களுடம் பகிர்ந்து கொள்ள விஷயங்கள் நிறைய உள்ளன.  பகிர்ந்து கொள்வேன்.

இந்த முறை சிறப்பு தீபாவளி -- எங்களுக்கு. மகன்,  மருமகள்,பேரன் ஊரிலிருந்து வந்து இருப்பதால். அவர்களுடன் வழக்கம் போல் கோவை போய்  எங்கள் மாமனார் வீட்டில் . தீபாவளி கொண்டாடப்  போகிறோம்.

மேலும்  இந்த ஆண்டு  இன்னும்  சிறப்பு என்னவென்றால்  எங்கள் மாமனார், மாமியார் அவர்களுக்கு 75 வது திருமண நாள். இதுவரை  அவர்கள் திருமண நாள் கொண்டாடியது இல்லை அவர்கள் அந்தக் கால மனிதர்கள். பேரன், பேத்திகள் ஆசையாக அவர்கள் திருமண நாளை விழாவாக எடுக்கப்  போகிறார்கள் 12ம் தேதி.

மறுநாள் தீபாவளிக் கொண்டாட்டம். குடும்பத்தினருடன். அதற்கு மறுநாள் 14ம் தேதி  மாமாவுக்கு 104  வது  பிறந்த நாள். மாமாவின் ஆசிர்வாதங்கள் உங்கள் எல்லோருக்கும்.

எல்லோருக்கும் தீபாவளித்  திருநாள் நல் வாழ்த்துக்கள்! 

வாழ்க வளமுடன்.


வந்தேன் , வந்தேன்

$
0
0

வந்தேன், வந்தேன் ,

நலமா எல்லோரும்.

ஆகஸ்டு மாதம் முதல்  பேரனின் வரவால்  இணையத்திற்கு இடை இடையே தான்வர முடிந்தது.  என் மகன்  ’போன வருட கொலுவைவிட அடுத்த ஆண்டு கொலுவை சிறப்பாக கொண்டாடுவோம். நாங்கள் வருவோம்’ என்று சொல்லி இருந்தான்.  அது போலவே  வந்து சிறப்பித்தார்கள். தான் வரும்முன் தன் மனைவியையும், மகனையும் அனுப்பிவிட்டான்.  அவர்கள் வந்த இந்தவருடம் ,இரண்டு கிருஷ்ணஜெயந்தி வந்தது . அதனால் இரண்டாவது கிருஷ்ண ஜெயந்தியில் கலந்து கொண்டான் பேரன்.  பின் நவராத்திரியும் அவர்கள் வரவால் சிறப்பாகக்   கொண்டாடப்பட்டது.   மகன், மருமகள், பேரனின் கை வண்ணத்தில் நவராத்திரி  மேலும் சிறப்பானது. அதை  இன்னொரு பதிவில் பகிர்கிறேன்.

பல ஊரு தண்ணீர் குடித்து , சூறாவளி சுற்றுப் பயணம்  செய்ததில் உடம்பு கொஞ்சம் சரியில்லை.  பேரன் வருகையால் நடைமுறை வாழ்க்கையே மாறி விட்டது.  உடல், பொருள்,  ஆவி,  நேரம்,  காலம் எல்லாம்  அவனைச் சுற்றித் தான் ஓடியது.  இப்போது அவன் ஊருக்குப் போய் விட்டான். வீடு வெறிச் என்று இருக்கிறது. அவனுடன் இருந்த நாட்களை மனச்சுரங்கத்தில் இருந்து எடுத்து அசை போட்டு கொண்டு இருக்கிறோம். அடுத்த விடுமுறைக்கு அவன் வரும் நாளை எதிர்பார்த்து.

தீபாவளி வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் . மகன் ,மருமகள், பேரனை வழி அனுப்பி வைத்து விட்டு  26 ஆம் தேதி தான் ஊரிலிருந்து வந்தேன்.  கார்த்திகைப் பண்டிகை முடிந்தவுடன் மறுபடியும் ஊர்ப் பயணம்,  குடும்ப விழாக்களில் கலந்து  கொண்டு  11ஆம் தேதி தான் வந்தேன்.

தீபாவளி சிறப்பாக நடந்தது . அதற்கு முன்பு எங்கள் மாமா, அத்தை திருமணநாள் மற்றும் பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தது.

தீபாவளி வாழ்த்து சொன்ன ஹுஸைனம்மா ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள்.  அந்த கேள்வியும் அவர்களுக்குப் பதிலும் கீழே:

//மாமனார்-மாமியார் 75 ஆண்டு திருமண வாழ்வு, சதம் தாண்ட என் பிரார்த்தனைகள். இதுவரை திருமண தினம் கொண்டாடியதில்லை என்பது ஆச்சர்யம்தான். சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் இவையெல்லாம் செய்ததில்லையா?  நூறு வயதில் செய்வது கனகாபிஷேகம்தானே? அதுவா இப்போது செய்யப்போகிறீர்கள்?//


என்று ஹுஸைனம்மா கேள்வி கேட்டு இருந்தார்கள். அவர்களுக்கு :

சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் , கனகாபிஷேகம் எல்லாம்  முன்பே நடந்து விட்டது. அதை எல்லோரும் சேர்ந்து நடத்தி விட்டோம்.

சஷ்டியப்தபூர்த்தி என்பது - 60 வயது பூர்த்தி ஆனவுடன் செய்வது. சதாபிஷேகம் என்பது - 80 பூர்த்தியானவுடன் செய்வது,
கனகாபிஷேகம் என்பது - மகனுக்கு பேரன் பிறந்தால் பேரன்  கையால் தங்கக் காசுகள், தங்கப்பூ, வெள்ளிப்பூ போட்டு  கனகாபிஷேகம் செய்து வணங்குவது.

நான் இதுவரை திருமண நாள்கொண்டாடவில்லை என்றது முதன் முதலில் திருமணம் செய்த தேதியை வைத்து அடுத்த வருடம் திருமண நாள்  கொண்டாடுகிறோமே அதை. அப்படி பார்க்கும் போது அவர்கள் திருமணம் செய்து 75 ஆண்டுகள் ஆகி  விட்டது. அந்த நாளைத்தான் பேரன், பேத்திகள் கொண்டாடினார்கள்.

ஹுஸைனம்மாவின் ஆர்வமான  கேள்விக்கு மகிழ்ச்சி. அவர்களுக்கு இதில் பதில அளித்து விட்டேன்.

12.11.2012 ல் திங்கட்கிழமை  கோவையில் ’அன்னபூர்ணா உணவகம் ’கங்கா கலைஅரங்கத்தில்’ குடும்ப உறுப்பினர்களும்,  மற்றும் உள்ளூர் சொந்தங்கள் மட்டும் வைத்து எளிமையாக விழா  நடந்த்து.
விழா அறிவிப்புப் பலகை


விழா நாயகர்


காலை தேவார இன்னிசை கச்சேரி - என் மாமாவிடம் தேவாரம் கற்றுக் கொண்டவர்கள் தன் ஆசிரியரின் மணவிழாவிற்கு  மகிழ்வோடு பாடினார்கள்.

தேவார இன்னிசை

  மச்சினர் பேத்தி பாட்டு பாடினாள். என் தோழி  சில பாடல்கள் பாடினாள்.  பிறகு  கேக் வெட்டி மாமாவின் பிறந்தநாளும் 75 வது திருமண நாளும் கொண்டாடப்பட்டது.  வந்தவர்களுக்கு விழா நாயகனும், நாயகியும் வாழ்த்தி ஆசீர்வாதம் செய்தார்கள்.

பிறந்தநாள் கேக்

மணமக்கள் மாலை மாற்றல்
பிறகு என் கணவர் வந்தவர்களுக்கு நன்றி உரை சொன்னார்கள்.  மதியம் விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

தீபாவளி 13ஆம் தேதி சிறப்பாக நடந்தது.   காலை மருமகள் மூவரும்( என் மருமகளும், மற்ற இரண்டு மருமகளும்)  சேர்ந்து  வடை, பஜ்ஜி எல்லாம் செய்தார்கள்.
வடை ரெடியாகுது

பெரிய மருமகள் தீபாவளி கோலம் வரைந்தாள்.  இளைய தலைமுறைகள் பொறுப்பை எடுத்துக் கொண்டது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாய் இருந்தது.

கோலம்
                                                         

மத்தாப்பு சுட்டு சுட்டு



சுழலும் தரைச்சக்கரம்
அன்று வீட்டுக்குப் பக்கத்தில்    உள்ள  பிள்ளையார் கோவிலுக்கு போய்  அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தோம்.  பேரனுடன் கொண்டாடும் முதல் தீபாவளி.  மழலை மொழியால் எல்லோருடனும் கலந்து உறவாடி  தீபாவளியை சிறப்பித்தான். எல்லோருக்கும் மத்தாப்புக்களையும், புஷ்வாணம்,  தரைச்சக்கரம்  எல்லாம் எடுத்துக் கொடுத்து அவர்கள்  வைப்பதை  ஆசையாய் பார்த்து மகிழ்ந்தான் .ஆனால் அவன் வைக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான்.


                                               பூப் பூவாய் சிதறும் புஸ்வாணம்

புத்தாடைகளும் ,பலகாரங்களும் 
புத்தாடை அணிந்து மாமா அத்தையிடம் ஆசீர்வாதம்

14ம் தேதி மறு நாள் மாமாவின் நட்சத்திர பிறந்தநாள்.  அதற்கு கோனியம்மன் கோவில் போய் சாமி கும்பிட்டு வந்தோம்.

அன்று இரவு நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் திருநெல்வேலி சென்றோம்.
எங்கள் பேரனை அழைத்துக் கொண்டு  குலதெய்வத்தை வணங்கி வர.

குலதெய்வம் இருக்கும் இடம் இயற்கையின் கொடை என்றுதான் சொல்லவேண்டும்.  அவசியம் பார்க்க வாருங்கள் என் அடுத்த பதிவில்.



எங்கள் குலதெய்வம்

$
0
0


                                                                 எங்கள் குலதெய்வம்.




எங்கள் குலதெய்வம் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் மடவார் விளாகம் எனும் இடத்தில்  இருக்கிறது.   ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாடு அவசியம் செய்ய வேண்டும் என்பார்கள் முன்னோர்கள்.   வீட்டில் என்ன  விசேஷம் நடந்தாலும் முதன் முதலில் குலதெய்வத்திற்கு  அந்த விழா சிறப்பாய் தடை இல்லாமல் நடைபெற ஒரு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்து குலதெய்வத்தை வேண்டிக் கொள்வார்கள்.   குழந்தைகளுக்கு , அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றாலும், உடம்பு சரியாகவேண்டுமென்று  காசு முடிந்து வைத்து  பிரார்த்தனை செய்து கொள்வார்கள். 


 என் மகளின் மகனுக்கு உடல் நிலை சரியில்லை.  இப்போது அவன் இறைவன் அருளால் நலம் பெற குலதெய்வத்தை வேண்டி மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்துள்ளேன். அவர் அவனை நல்லபடியாக காப்பார். 

சனிக்கிழமை, திங்கள் கிழமை  குலதெய்வ வழிபாடு மிக விசேஷம் என்பார்கள்.  மற்ற நாட்களும் மிக நல்ல நாள் தான். 

வீட்டில் ஏதோ குறையோ, மனக் கஷ்டமோ என்று சிலர் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோசியரிடம் போனால் அவரும் முதலில் சொல்வது குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் எல்லாம் சரியாகி விடும் என்பது தான்..  

இப்போது  தொலைக்காட்சிகளிலும் எங்கள் குலசாமி, என்று பிரபலங்களின் குலதெய்வ வழிபாட்டை ஒளிபரப்புகிறார்கள். பத்திரிக்கைகளில் முக்கிய பெரிய மனிதர்களின் குலதெய்வம், வீட்டுப் பூஜை அறை முதலியவற்றை காட்டுகிறார்கள்.

ஒவ்வொருவரும் தன் தாய், தந்தையருக்கு அடுத்தபடியாக குலதெய்வ வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும்.

மாதா மாதம் குலதெய்வத்திற்கு பணம் எடுத்து வைத்து விடுவேன். அதில் தான்  நாங்கள் கோவில் போகும்போது செய்ய வேண்டிய, அபிஷேகம், வஸ்திரம் சாற்றுவது ஆகிய செலவுகளுக்கு பயன்படுத்துவோம். 


வருடா வருடம் பங்குனி உத்திரத்தின் போது அங்கு போகிறவர்கள் இருக்கிறார்கள் . அன்று மிகவும் கூட்டமாய் இருக்கும்.. எங்கள் வீடுகளில்  கல்யாணம் முடிந்தவுடன் மாப்பிள்ளை, பெண்ணை அழைத்துக்கொண்டு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வருவோம்.  பின், குழந்தை பிறந்தால் போய் வருவோம்.. அது தான் இப்போது முடிகிறது. அப்படிப் போகும் 
போது குடும்பத்தினர் மட்டும் போவதால் நின்று நிதானமாய் வழிபாடு செய்து குடும்பத்தினர் எல்லோரும் கலந்து பேசி , பொங்கல் வைத்து உறவோடு  சேர்ந்து உண்டு மகிழ ஒரு வாய்ப்பு.

போன மாதம் 14 ம் தேதி  இரவு நாகர்கோவில்  விரைவு ரயிலில் திருநெல்வேலிக்குப்  பயணம் செய்து .நான் , என் கணவர்,  என் மகன், மருமகள்,  பேரன் ஆகியோர்  குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வந்தோம்.  பொங்கல் வைக்க வேண்டும் என்று  ஆசை.  ஆனால்  எங்கள் குடும்பமே ஒன்றாய்ச் சேர்ந்து தான் பொங்கல் வைத்து இருக்கிறோம்.  தனியாக வைத்தது 
இல்லை.  அதனால் குருக்களை பிரசாதம் செய்து கொண்டு வரச்சொல்லி, சின்ன அளவில் அபிஷேகம் செய்து, சாமிக்கு  வஸ்திரங்கள் சார்த்தி வழிபட்டு வந்தோம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று. பிராத்தனை செய்து  
கொண்டோம்.

எங்கள் குல்தெய்வத்திற்கு களக்கோடி சாஸ்தா என்று பெயர்.  அவர் இருக்கும் இடத்தைச்  சுற்றிலும் வயல் வெளி,  அறுவடையின்போது நெற்கதிர்களை அங்கு தான் போட்டு அடித்து நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வார்கள். களத்துமேட்டுக்குக் கடைசியில் உள்ளதால் களக்கோடி சாஸ்தா என்ற பெயர்.
இந்த படம்  மட்டும் ஆகஸ்டு மாதம் (போன முறை )எடுத்தது

பக்கத்தில் ஏரி, வயல்கள், கோவிலின் அருகே ஆலமரங்கள்  என்று மிகவும் ரம்மியமாக இருக்கும். 
வயல்வெளி

ஏரியில் அந்த அந்த பருவத்திற்கு ஏற்ற மாதிரி பறவைகள்  வரும்.. கறுப்பு ஹெரான், பெரியவாய் பெலிக்கன் போன்ற அபூர்வ பறவைகள் அங்கு பார்த்தோம். 

பெலிக்கன்
ஏரியில் முன்பு குளித்து விட்டு ஈர உடையுடன் பொங்கல் வைப்பார்கள்.  ஏரியில்  மீன்கள் நிறைய இருக்கும். பறவைகளுக்கு  வேண்டிய உணவுகள் கிடைப்பதால் ஏரியைச் சுற்றி நிறைய பறவைகள் வரும் பார்ப்பதற்கு  ரம்மியமாய் மனது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாய் இருக்கும்.

 ””கொக்கு பறக்கும் அந்த குளக்கரையில் -வண்ணக்
    குருவி பறக்கும் அந்த வனத்துறையில்
   கோழி பறக்கும் தன் குஞ்சை நினைந்து 
   மதுரை மீனாட்சி  கொடி பறக்கும் உனை நினைந்து -
   அம்மா உனை நினைந்து.;;

என்ற  பாடல் நினைவுக்கு வந்து சென்றது .

 முன்பெல்லாம் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து செல்லும்போது , என் கணவரின் அத்தை வீட்டிலிருந்து  துவையல் அரைத்து,  அப்பளம் பொரித்து, எல்லாக் காய்களும் போட்டு, சாம்பார் வைத்து  எடுத்துச் செல்வோம். , அங்கு சுவாமிக்கு வெண்பொங்கல். அம்மனுக்கு அரிசியும், பாசிப்பருப்பும் சேர்த்து பாயசம்  வைப்போம். பனை ஓலை, சிறு குச்சிகள் வைத்து. கல் கூட்டி. வெண்கலப் பானையில் பொங்கல் வைப்போம். சாமி கும்பிட்ட பின் அனைவரும் குதூகலமாய் அங்கேயே இலை போட்டு  உண்போம்.. வயலில் வேலை பார்ப்பவர்கள் , ஆடு மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் கோவில் 
மணி அடித்தால் வந்து விடுவார்கள். அவர்களுக்கும் கொடுத்து உண்டு வருவோம்.

பங்குனி உத்திரம் அன்று கூட்டம் நிறைய இருக்கும்.  கூட்டம் இல்லாத நேரம்  நாங்கள் போனதால் குருக்கள் வரும் வரை,  பேரன் கோவில் வெளிப்புறம் நன்கு விளையாடினான். ஆலமரத்தின் இலைகளைக் கைகளாலும், குச்சிகளாலும் தள்ளித் தள்ளி விளையாடினான். கோவிலைச் சுற்றி சுற்றி வந்து சந்தோஷமாய் விளையாடினான். ஆடுகள் மேய்வதையும் மேய்ப்பவர்களையும் பார்த்து மகிழ்ந்தான்.   





                  

ஸாதிகா என் பேரனின் படம் கேட்டு இருந்தார்கள் .  அவர்கள் விருப்பத்திற்காக அவன் படம் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். அவனை வாழ்த்துங்கள். மாதாஜி ஸாதிகா!..

 காலையில் 10 .30 மணியிலிருந்து காத்துக் கிடந்தோம் குருக்களின் வருகைக்காக. ஆடு , மேய்ப்பவர்கள், மற்றும் வயலில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம்  ”போன் செய்து விட்டீர்களா  குருக்களுக்கு ? அவர் 10 கோயிலுக்கு மணி அடிக்க வேண்டும், மெதுவாய்த் தான் வருவார் ”.  என்றார்கள். மதியம் 12 மணிக்குத் தான் வந்தார். 

பின் அபிஷேகம், அர்ச்சனை செய்து குலதெய்வத்தை வணங்கினோம். வழிபாடு முடிய பிற்பகல் இரண்டு மணி பக்கம் ஆகி விட்டது.  அங்கு உள்ளவர்களுக்கு பிரசாதங்களை கொடுத்து விட்டு  நாங்களும் சாப்பிட்டு குருக்களுக்கு நன்றி சொல்லி, குலதெய்வத்தைப் பிரிய மனம் இல்லாமல் பிரிந்து வந்தோம்.

முருகன் கோயில்


அதன் பின் குலதெய்வம் கோவிலுக்கு அருகேயே ஒரு மலைக் கோவில் இருக்கிறது.. எங்கள் கோவிலில் இருந்து பார்த்தால் தெரியும். ஆனால் சரியான பாதை இல்லை, வரப்பில் நடந்து தான் போக வேண்டும். குழந்தையை தூக்கிக் கொண்டு வரமுடியாது என்பதால் என் மருமகள் வரவில்லை. மகனும், நானும், என் கணவரும்  போனோம். பல வருடங்களாக 
அந்த மலைக்கோயிலுக்குப் போக வேண்டும் என்று நினைத்து அது இந்தமுறைதான் கைகூடியது.  

என் கணவர்,’ நீ வரப்பில்  நடப்பாயா ?செருப்பில்லாமல் நடக்க வேண்டும்’ அது இது என்று சொன்னார்கள். எனக்கு வயற்காட்டில் வரப்பில் நடக்க ஆசை. அருமையான அனுபவம்.

சில இடங்களில் வரப்பு காய்ந்து இருக்கும் சில இடங்களில் அப்போது தான் மண் அணைத்து புதிதாக வரப்பு கட்டி இருப்பார்கள் அதில் மாட்டின் குளம்பு அழுந்தி இருப்பதை வைத்து அதன் ஆழத்தை கவனித்துக் கொள்ளலாம்.  அதை லாவகமாய் கடந்து போனோம்.  அந்த உயரமான வரப்பு சில இடங்களில்  குறுகியும் சில இடங்களில் அகலமாயும் இருந்தது.. பச்சைப் பசேல் என்று மஞ்சள் செடிகள், மற்றும்  மரவள்ளி கிழங்கு என்று நினைக்கிறேன், பயிர் செய்து இருந்தார்கள். 





ஒரு கிலோ மீட்டர் வரப்பில் நடந்து போனால் மலைக்கோவில்.  அதன்பின் பாதை இல்லை,  மலைப் பாறை வழியாக ஏறிச் சென்று அந்தச்சிறுகோயிலை அடைந்தோம். கோயிலின் சிறிய கதவுகள் மூடியிருந்தன. பூட்டிய கதவின் சிறு துவாரத்தின் வழியாக முருகனை வழி பட்டோம். அங்குள்ள முருகனுக்கு சரவணன் என்று பெயர்.. அருகில் ஒரு பாறையில் சுனை இருந்தது. 

வள்ளி சுனை
அங்கிருந்து பார்த்தால் மலையைச்சுற்றி  கண்ணுக்குக் குளுமையாய் தென்னைந் தோப்பும், வயல்களும் அழகாய் தெரியும். ’கடவுளே இந்த இடம் இயற்கை மாறாமல் இப்படியே இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டேன். 

வெகு நாள் ஆசை  என் மகனால் நிறைவேறியது. அவன்தானே அங்கு போக வேண்டும் என்றான்... என் மகனுக்கு நன்றி.








ஆஹா உருளை !

$
0
0

நான் சமையல் குறிப்பு எழுதியதே இல்லை. சமையல் அட்டகாசம்  தளம் வைத்து வித விதமான சமையல் செய்து அசத்தும்

சகோதரி ஜலீலா அவர்கள்சமையல் போட்டிஅறிவித்து ஒருமாதம் ஆகி விட்டது. என்னையும் அழைத்து இருந்தார்கள்

நான் ஊருக்கு போய் விட்டு வந்ததால்  அவர்கள் அழைப்பை தாமதமாகத்தான் பார்த்தேன். நான் வலைச்சரத்தில் எனக்கு பிடித்த பதிவுகளை குறிப்பிடும் போது அவர்களுக்கு அவர்கள் சமையலை புகழ்ந்து  சமையல் ராணி என்று பட்டம்  கொடுத்தேன். அவர்கள் சமைப்பது போல் எல்லாம் என்னிடம் எதிர்பார்க்க  மாட்டார்கள். நான் இப்போது அனுப்பி இருக்கும்

சமையல் குறிப்பை பார்த்து விட்டு இனி மேல் சமையல் குறிப்பு கேட்க மாட்டார்கள் என நினைக்கிறேன். முதலில் சமையல் குறிப்புக்கு அளவு சரியாக சொல்லத்தெரியவேண்டும். என் அம்மா கண் அளவு சொல்லிக் கொடுத்தார்கள் . என் மாமியார் டம்ளர் அளவு சொல்லிக் கொடுத்தார்கள். ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணீர்.  கலந்த சாதம் செய்யும் போது ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு.தண்ணீர் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

முன்பெல்லாம் ஆண்களுக்கு சமைப்பது கஷ்டம் இப்போது எல்லாம் எளிதாக எல்லாம் கிடைக்கிறது.  என் கணவர்  கல்யாணம் ஆவதுக்கு முன் சமையல் செய்து சாப்பிட்டு இருக்கிறார்கள். கணேஷ் ராம்  777  என்ற திடீர் தயாரிப்புக்கள்
வாங்கி சமைப்பார்களாம், ஈகிள் சாம்பார் பொடி, புளியோதரை பொடி வாங்கி சமைத்து இருக்கிறார்களாம். அவர்கள் எல்லாம் நன்றாக சமைப்பார்கள் இருந்தாலும்  திருமணம் ஆனவுடன் சமைப்பதையே விட்டு விட்டார்கள்.  நான் ஊருக்கு போனால் பெண், மகன் எல்லாம் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் எனக்கு  செய்து கொடுத்தது இல்லை.


திருமணம் ஆகாத ஆண்கள் தாங்களே சமைத்துக் கொள்ள எளிதாக  இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. சமைக்க வேண்டும் நினைக்கும் ஆண்கள் எப்படியும் சாதம் குக்கரில் வைக்க தெரிந்து இருக்கும்.
அவர்களுக்கு  அம்மா அல்லது உடன் பிறந்தவர்கள், சாம்பார் பொடி, புளிக்காச்சல் , பருப்புப் பொடி, மற்றும்  பொடி வகைகளை எப்படியும் செய்து கொடுத்து இருப்பார்கள். எதுவும் சமைக்க பிடிக்கவில்லை என்றால் சாதம் வைத்து  பொடிகளை போட்டு, நெய்யோ, நல்லெண்ணெயோ விட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். அவர்கள் கொடுத்த பொடிவகைகள்  தீர்ந்து விட்டால் எளிதாக அவர்களே வறுத்து பொடி செய்து கொள்ளலாம். அப்படி ஒரு பொடி வகையை சொல்கிறேன்.

தனியா(ய்) இருப்பவர்களுக்கு உடலை நன்கு வைத்துக் கொள்ள:

தனியாவில் உடல் செல்களை பாதுகாக்கும் ஆண்டி ஆக்சிடண்ட் உள்ளது.

தனியா பொடி:
----------------------
உளுத்தம்பருப்பு  -அரைக்கரண்டி,
கடலைப்பருப்பு   -அரைக்கரண்டி
தனியா          - 1 கரண்டி(வரக்கொத்துமல்லி )
மிளகு           -கால்ஸ்பூன்.
வற்றல் மிளகாய் - 3 { காரம் வேண்டும் என்றால் மேலும் ஒன்றோ, இரண்டோ சேர்த்துக் கொள்ளலாம்.)
உப்பு-             அரை ஸ்பூன்(தேவைக்கேற்ப)
பெருங்காயம்    -சிறிது அளவு. (கால்ஸ்பூன்) கட்டி வறுத்து போட்டால் வாசம் கம கம என்று இருக்கும் ஆண்களுக்கு      அதை உடைத்து போட நேரம் இல்லை என்றால்  பெருங்காயப் பொடி கால் ஸ்பூன் போட்டுக்                  கொள்ளலாம்.

மேலே உள்ள் சாமான்கள் எல்லாவற்றையும்  வாணலியில் சிறிது  நல்லெண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு  சிறிது சிவப்பாய் (கருகாமல்)
ஆறியவுடன்  பொடி செய்து கொண்டு  பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் சூடான சாதத்தில் நெய்விட்டு பிசைந்து  சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

தொட்டுக் கொள்ள உருளை காரக்கறி செய்து கொள்ளலாம். அரிசி வைக்கும் பாத்திரத்திற்கு மேலயே வேறு பாத்திரத்தை  வைத்து  உருளையை நன்கு கழுவி விட்டு  அதில் போட்டு வேக வைத்து எடுத்து தோலை உரித்து நான்காக வெட்டிக் கொண்டு, கடுகு,, உளுந்தபருப்பு தாளித்து உருளையை போட்டு, கொஞ்சம் மிளகாய் தூள், கொஞ்சம், மஞ்சள் தூள்,  கொஞ்சம் உப்பு போட்டு  பிரட்டி, சிறு தீயில்  அவ்அப்போது  கிளறி விட்டால் முறு , முறு உருளை மசாலா கறி ரெடி. (நினைவு இருக்கட்டும் சிறு தீயில்)
சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் உருளை கிழங்கு என்றால் பிடிக்கும் தானே!
(என் கணவர் வரைந்த படம்)



வெங்காயமும் போட்டு செய்யலாம், வெங்காயம் இல்லாமல் இருந்தால் நல்ல முறு முறு என்று இருக்கும்.

தக்காளி சாதம் எளிதாக செய்து கொள்ளலாம்.
அரிசி அரை கப்.
தக்காளி பழம் 2 பெரியது.
பெரிய வெங்காயம் 1
பச்சை பிளகாய் 2
கடுகு கால்ஸ்பூன்
உளுந்தபருப்பு - அரை ஸ்பூன்.
சாம்பார் பொடி அரைஸ்பூன்.
ஒரு கப் சாதத்திற்கு இரண்டு கப் தண்ணீர் சிறிது நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு விட்டால்  உதிரி உதிரியாக சாதம் ஒன்னோடு ஒன்று ஒட்டாமல் வரும்.

சாதத்தை நல்ல உதிரி உதிரியாக வேகவைத்து  ஒரு தட்டில் போட்டு  ஆறவைத்துக் கொள்ளவேண்டு.வாணலியில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடு, உளுந்து தாளித்துக் கொள்ளலாம், சிறிது  பட்டை, சோம்பு , கிராம்பு
வேண்டும் என்றால் போட்டு கொள்ளலாம், பிடிக்காதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டாம். பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி கொண்டு (சிறிது உப்பு போட்டு வதக்கினால் சீக்கிரம் வதங்கும்) பின் தக்காளியை போட்டு வதக்கி கொண்டு  சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கி பின் ஆறவைத்த சாதத்தைப் போட்டு கிளறி  இறக்கினால் தக்காளி சாதம் ரெடி. அதன் மேல் பச்சை கொத்துமல்லியை நன்கு கழுவி சிறிதாக வெட்டி போட்டு அலங்கரிக்கலாம். சிறிது நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து போட்டால் நல்லசுவையாக
இருக்கும் தக்காளி சாதம்.

இதற்கு தொட்டுக் கொள்ள உருளைக் கறியும்,   உருளை சிபஸ், வடகம், வத்தல்  எல்லாம் நன்றாக இருக்கும்.

இன்னொரு உருளை சமையல் குறிப்பு:

உருளைக்கிழங்கை நன்கு கழுவிக் கொண்டு பொடி பொடியாக தோலோடு வெட்டிக்கொண்டு அதை வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து மஞ்சள் பொடி, மிளகாய் தூள், உப்பு போட்டு சிறு தீயில் வதக்கினால் அருமையான உருளை பொரியல் கிடைக்கும்.

மற்றுமொரு சமையல் குறிப்பு:
உருளையை கொஞ்சம் கனமாய்  வட்டமாய் வெட்டிக் கொண்டு அதை எண்ணெயில் பொரித்து  எடுத்து மிளகுத்தூள், உப்புத்தூள் போட்டும் செய்து சாப்பிடலாம். (ஆப் பாயில் உருளை என்று சொல்வார்கள்)  என் அப்பா ,என் கணவர்,  என் குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.







இந்த சமையல் குறிப்புகளை ஜலீலாவிற்கு  பேச்சிலர் சமையலுக்கு அனுப்பி இருக்கிறேன்.
சமையல் குறிப்புகள் கொடுத்தது இல்லை. இந்த சமையல் குறிப்பு    பேச்சிலருக்கு தெரிந்த சமையலாககூட  இருக்கலாம்.

புத்தாண்டு சிந்தனைகள்

$
0
0




என் தங்கை,  கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்று  கடந்த வாரம்
குடும்பத்துடன் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள்.  நிறைய  கோவில்களுக்கு  தங்கையின் குடும்பத்துடன் சென்று வந்தோம்.

மார்கழி மாதம் என்றாலே கோவில் வழிபாடு சிறப்பு அல்லவா!

எங்கள் அம்மா மார்கழி என்றால், அதிகாலை நீராடி , விளக்கு ஏற்றி, திருப்பாவை திருவெம்பாவை பாடல் பாடி , கோவிலுக்கு சென்றுவருவதை  எங்கள்  எல்லோருக்கும் வழக்கப்படுத்தி இருந்தார்கள். நானும் என் தங்கையும்
அதிகாலை எழுந்து  வண்ணக் கோலம் போட்டும் , கோவிலுக்குப் போயும்  எங்கள் பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டோம்..

முன்பு, ’என் அம்மாவின் பொக்கிஷங்கள்’ என்று அம்மா எழுதி வைத்து இருந்த பாடல்களை பகிர்ந்து கொண்டேன்.

இந்தமுறை -   என் அம்மா குமுதம் பத்திரிக்கையில் 1960, 61, 63 , வருடங்களில்
வந்த அறிஞர்களின் பொன்மொழிகளை தொகுத்துத் தைத்து வைத்திருந்த பழைய  புத்தகத்திலிருந்து சிலவற்றைப் புத்தாண்டுச் சிந்தனைகளாய்ப் பகிர்ந்து கொள்கிறேன்.






1. நல்ல கருத்துக்களை, உயர்ந்த பண்புகள் முதலியவற்றைப் பற்றி அடிக்கடி
சிந்தனை செய்தால்தான் அவற்றிடம் ஈடுபாடு உண்டாகும். ஈடுபாடு, உண்டானால் தான் அவற்றுக்காக ஏங்குவோம். ஏங்கினால் தான் தேடுவோம். தேடினால் தான்  அழகும் அருளும் நம் வாழ்க்கையில் புகுந்து அவை நமக்கு சொந்தமாகும்
                                                      .------- வேன் டைக்.

2. மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?
உங்களுடன் சேர்ந்து வாழ்பவர்களுடைய நற்குணங்களை -- உதாரணமாக
ஒருவருடைய சுறுசுறுப்பு,  இன்னொருவருடைய அடக்கம்,  மற்றொருவருடைய கொடை, இவை போன்றவற்றை கண் முன் நிறுத்திக் களிப்படைவதில் இருக்கிறது.
                                                      ---- மார்கஸ் அரீலியம்.


3. உற்சாகம் இழந்து விட்டீர்களா?
அதைத்  திரும்ப அடைய ஒரு ராஜபாட்டை இருக்கிறது.  உற்சாகமாக எழுந்து
உட்காருங்கள்.  உற்சாகமாக நடந்து கொள்ளுங்கள்.  உற்சாகமாகப் பேசுங்கள்,
துணிச்சலை வரவழைத்துக் கொள்ள வேண்டுமா?  அப்படியானால் துணிச்சல்
உள்ளவர் போல் நடியுங்கள்.  முழுமனத்தோடு,  உறுதியுடன்  நடியுங்கள் குலைநடுக்கத்துக்குப் பதில் வீராவேசமும் உண்டாகும்.

                                                  --------  வில்லியம் ஜேமஸ்.

4. இருக்கிற செல்வம் போதுமென்று திருப்தியடைவது சரிதான். ஆனால் இருக்கிற  திறமை போதும் என்று திருப்தியடைவது சரியல்ல.

                                                      ---------- மாகின் டாஷ்.

5. தோல்வி எதை நிரூபிக்கிறது?

 வெற்றி அடைய வேண்டும் என்ற நமது தீர்மானத்தில் போதிய வலு
இருக்கவில்லை என்ற ஒன்றை மட்டும் தான்.

                                                         --------- பெர்வீ

6. எல்லா சக்தியும் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் எதையும் சாதிக்கலாம்.
எல்லாவற்றையும் சாதிக்கலாம்.  நம்புங்கள்.  நாம் பலவீனர்கள் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்
                                                     --------  விவேகானந்தர்.


7.என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை உங்களால் வரவழைத்துக் கொள்ள முடிந்தால்,  எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் சரி, அதை கண்டிப்பாகச் சாதித்து விடுவீர்கள்.  மிக எளிய காரியமாக இருந்தாலும் அதை உங்களால் செய்ய  இயலாது என்ற கற்பனை செய்து கொள்வீர்களேயாகில்,  செய்ய முடியாமலே போய்விடும். கறையான் புற்றுக் கூடக் கடக்க முடியாத மலையாகிவிடும்.

                                                      --------எமிலி கூவே.

8. செயலை விதையுங்கள்
பழக்கம்  உருவாகும்
‘பழக்கத்தை விதையுங்கள்
குணம் உருவாகும்
குணத்தை விதையுங்கள்
உங்கள் எதிர்காலம் உருவாகும்.
                                                     --------- போர்டுமன்.

9. தன் கடமை எது  என்பதை உணர்ந்தவன் அறிவாளி ; கடமையை எப்படி செய்ய வேண்டும் என்பதை அறிந்தவன் திறமைசாலி ;  கடமையை செய்பவன் நல்லவன்.
                                                      ---------ஜோர்தான்.


10.எல்லா இடத்திலும் கடவுள் இருக்க முடியாது  ஆகவே தாயைப்  படைத்தார். --
-                                                      ------- யூதர்.

                                                 **********
அம்மாவும் நானும்

                                                     
 உலகத்தில்  இந்த (2012)வருடத்தில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் இனி
நடக்காமல் இருக்கவும், வரும் காலம் எல்லோருக்கும் மகிழ்ச்சியும். மனநிறைவும்  தரும் நாட்களாய் இருக்கவும்   நாம் எல்லோரும் பிராத்தனை செய்வோம்.

 வலை உலக அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..

                                                             வாழ்க வளமுடன்!


                                                                   ________________


கன்னியாகுமரி

$
0
0



எங்கள் மகனுடன் குலதெய்வம் கோவிலுக்குப்  போய் விட்டு, பின் நாங்கள்
 கன்னியாகுமரிக்கு  டாக்ஸியில். பயணம் புறப்பட்டோம். என் மகன் பாபநாசம் நீர்வீழ்ச்சி, மணிமுத்தாறு அணை எல்லாம் போக ஆசைப்பட்டான். ஆனால் டாக்ஸி டிரைவர் அங்கு தண்ணீர் இல்லை , டேம் திறக்கவில்லை என்றார்.  அதனால் நேரே கன்னியாகுமரிக்குப் போனோம்.

 நான் சிறு வயதில் நாகர் கோவிலில் இருந்த போது   உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வரும் போது கன்னியாகுமரிக்கு அடிக்கடி போவோம்.  அப்போது காந்தி மியூஸியம் மட்டும் தான் உண்டு.  விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை கட்டிய பிறகு போகவே இல்லை.  இப்போது தான் நேரம் வாய்த்தது.






அங்கு போய் சேர்ந்த போது  விவேகானந்தர் பாறைக்கு மட்டும் தான் போட் போகும், திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்திற்குப் போகாது, சீக்கிரம் போங்கள், 4 மணிக்கு மேல் டிக்கட் கிடையாது என்றார்கள்.   நாங்கள் மாலை  சூரியன் மறைவதையும் பார்க்க நினைத்தோம்.  அதற்கு ஏற்ற மாதிரி போனோம்.

மாலை மூன்று மணி சமயம் டிக்கட் வாங்கி வரிசையில் நின்று பின் போட்டில் போய்  ஏறினோம்.  லைஃப் ஜாக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். அழுக்கு அடைந்து பார்க்கவே அசிங்கமாய் இருந்தது  அதை கையில் எடுத்துக் கொண்டு போய் அமர்ந்தோம். ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவ, மாணவிகள் மலையாளம் கலந்த தமிழில் பேசி அந்த சூழலை கலகலப்பாக்கினார்கள்.  ஐயப்பபக்தர்களும்  நிறைய இருந்தார்கள்.  படகு போகும் போது தாழப் பறந்த கிருஷ்ணபருந்துகள் மிக அழகாய்  இருந்தன.  அலைகளின் ஆர்ப்பரிப்புக்கு மேல் மக்களின் பேச்சு சத்தம் நிறைந்து இருந்தது..


 1892ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ பாத பாறை என்னும்  இந்த இடத்திற்கு நீந்தி வந்து  தியானம் செய்தாராம். அதனால் இந்த  இடத்தில் விவேகானந்தர் மண்டபம் கட்டப்பட்டது.



விவேகானந்தர்   மண்டபத்துக்குள் போனவுடன்  மக்கள் அமைதி காத்தனர்.  ஏனென்றால் அங்கு அமைதி காக்க சொல்லிப் போட்டு இருந்ததுதான். ஒரு பக்கத்தில் சாராதாதேவி படமும், இன்னொரு  பக்கத்தில்  ராமகிருஷ்ணர் படமும் சிறு மண்டபம் போல் தோற்றமளிக்கும் இடத்தில் இருந்தது.

மண்டபத்தில்  நடு நாயகமாய் கம்பீரமாய்க் கைகளைக் கட்டிக் கொண்டு நெடிய அழகிய தோற்றத்தில் ஒளி பொருந்திய கண்களால் நம்மைப் பார்த்துக் கொண்டு நின்றார் விவேகானந்தர்.

 மண்டபத்தின் கீழ்ப்பகுதியில் மக்கள் தியானம் செய்ய ஒரு இடம் இருக்கிறது. உட்கார்ந்து தியானம் செய்யலாம்.

தியான மண்டபத்திற்கு  நேரே  கன்னியாகுமரி அம்மன் பாதம் அழகாய் அங்கு இருக்கிறது. பாதங்களில் நகங்களுக்கு சிவப்பு வண்ணம் தீட்டி இருப்பது மேலும் அழகூட்டுகிறது.  கண்ணாடித்  தடுப்பு வழியாக அம்மன் பாதத்தை தரிசிக்க வேண்டும்.

எல்லா மொழிகளிலும் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிடும் புத்தகங்கள் கிடைக்கிறது.  நான் ” வாழக் கற்றுக்கொள்! !” என்ற புத்தகமும் ”அருள்நெறிக் கதைகள்” என்ற புத்தகமும் வாங்கினேன். நினைவுப் பரிசுகள் விற்பனை செய்யும் கடையும் அங்கு இருக்கிறது.

விவேகானந்தர் பாறையின் ஒருபுறத்தில் மழை நீர் சேகரிப்பு செய்வதற்கு ஒரு குளம்போல் கட்டி  இருந்தார்கள் .அது நிறைய கொள்ளளவு  கொண்டது.
அந்த நீர் சேகரிப்பில் காற்று அடிக்கும் போது அலை அடித்தது  நீர்ப் பரப்பில் அந்த அலைகளைப் பார்கக மிக அழகாய் இருந்தது. அந்த இடத்தில் த்ண்ணீர் தேவையை மழை நீர் சேகரிப்பு பூர்த்தி செய்கிறது.

மழை நீர் சேகரிக்கும் பகுதி

விவேகானந்தர் பாறையில் இருந்து கன்னியாகுமரி நகரின் தோற்றம்

குமரி அம்மனை நாங்கள் தரிசிக்க முடியவில்லை.  விடுமுறை ஆனதால் கூட்டம் நிறைய இருந்தது.  நீண்ட வரிசை இருந்தது.  இரவுக்குள் திருநெல்வேலி செல்லவேண்டியிருந்ததால் காத்திருக்க நேரமில்லை.

 சூரியன் மறைவு பார்க்க போன இடத்திலும் ஏமாற்றம். அங்கு மேகம் மறைத்துக் கொண்டே இருந்தது. பேரன் மட்டும் மணலில் எந்த எதிர்ப்பார்ப்பு இன்றி மகிழ்ச்சியாக விளையாடினான். நமக்கு தான் அம்மன் தரிசனம் இல்லை, சூரியன் கடலில் மறைவதை பார்க்க வில்லை என்ற  ஏமாற்றமும்  வருத்தமும் ஏற்பட்டது.. அந்த நேரம் பேரனைப் பார்த்து போது நாமும் குழந்தையாக இருந்தால் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இப்படி மணலில் விளையாடி  மகிழ்ச்சியாக இருப்போம் அல்லவா என்ற   எண்ணம்  எழுந்தது  உண்மை.

எங்கள் கார் கடல்   மணலில் மாட்டிக் கொண்டது . பக்கத்தில் இருந்த மீனவர்கள் வந்து உதவி செய்தபின் எங்கள் பயணம்  மீண்டும் திருநெல்வேலியை நோக்கி தொடர்ந்தது. ( கார்  மணலில் இருந்து ரோட்டுக்கு வரும் வரை பேரனுடன் மண்ணில் விளையாடினேன்.)

அடுத்த முறை கன்னியாகுமரி  அம்மனை எப்படியும் தரிசிப்போம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டோம்



----------------

பொங்கலோ பொங்கல் !

$
0
0

பொங்கல் வாழ்த்து படம் வரைந்தவர் என் கணவர்


பொங்கிடுவோம்  உயிர் உணர்ந்து  புலனடக்க வாழ்வு பெற்றுப்
பொங்கிடுவோம்  நாடனைத்தும்  பொறுப்பாட்சி  வளம் கண்டு
பொங்கிடுவோம்  சமுதாயப் பொருள் துறையில் நிறைவு கண்டு
பொங்கிடுவோம்  மக்கள் குலம் போர் ஒழித்து அமைதி பெற.

                                                        ---வேதாத்திரி மகரிஷி

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

                                                      ---- திருவள்ளுவர்.


முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச்சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கும் முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

                                                       ------திருவெம்பாவை

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

                                                    ------- திருப்பாவை 

இந்த இரு பாவைப்பாடல்களைப் பாடினால் மழை பொழியும்
என்பது நம்பிக்கை.


பொங்கல் திருநாள் இந்த ஆண்டு  முன்பு போல்   இல்லை.  பயிர் பச்சை செழிப்பாக வளரவில்லை.  தண்ணீர் இல்லை, மழை இல்லை என்று மக்களின் மனக்குறை. இதைப் போக்க என்ன வழி என்று தானே பார்க்க வேண்டும்.

திருநெல்வேலியில் சமீபத்தில் ஜானகி ராம் ஓட்டலில் தங்கி இருந்தோம். அவர்கள் வைத்து இருக்கும் மாருதி ஓட்டலில் தான் உணவு உண்டோம். அங்கு எழுதி இருந்த ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது.

அது :  துணிப்பை என்பது எளிதானது.
            தூரஎறிந்தால் உரமாவது
            பிளாஸ்டிக் என்பது அழகானது
           விட்டு எறிந்தால் விஷமாவது 

என்று எழுதி வைத்து இருந்தார்கள்.

   பெய்யும் மழை பூமியில் சென்று ,தங்கி, நிலத்தடி நீராக மாறினால் தான் மக்களுக்குப் பயன்படமுடியும்.  மழை நீரை நிலத்துக்குள் புக விட மாட்டேன் என்கிறது பாலிதீன் பைகள்.   அதை அரசு தடை செய்தாலும் , மக்கள் பயன்படுத்துவது குறையவில்லை.  சில கடைகளில் பிளாஸ்டிக் பை கிடையாது, தயவு செய்து வீட்டில் இருந்து பை கொண்டு வரவும் ,என்று போட்டு இருக்கிறார்கள்.

தரிசு  நிலங்களில் கொண்டு போடும் குப்பைகளில் பெரும்பாலும் பாலிதீன் பைகள் தான்.   மரம், செடி கொடியெல்லாம் பிளாஸ்டிக் பூ பூத்தது போல்  இருக்கிறது. இந்த கவர்கள் தான் மரம் ,செடி, கொடிகளை அலங்கரிக்கிறது.

தூர் வாரப்படாத குளம், குட்டைகளில் குடிநீர் பாட்டில்களும்,  பாலீதீன் கவர்களும்தான் மிதக்கிறது.  அல்லியும்,  தாமரையும் வளர வேண்டிய குளத்தில் பாலீதீன் பைகள் நிரம்பிக் கிடக்கிறது.
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில்  ஒரு பெரிய கிணறு இருக்கிறது அதில்  முன்பெல்லாம் மீன்களுக்குப் பொரி   போட்டுவிட்டு அந்தகவரை அப்படியே அதில் போட்டு விடுவார்கள்.  அப்படியே குடிநீர் பாட்டிலையும் போட்டுவிடுவார்கள். இந்த ஜனவரி 1ஆம்தேதி அங்கு போனபோது  அந்த



கிணற்றை பச்சை துணி வலையால் போட்டு மூடி  இருந்ததைப் பார்த்தோம்..  தண்ணீர் தூய்மையாக இருந்தது. அதைப் பார்த்தவுடன்  நீர் நிலைகளை இப்படிதான் காப்பாற்றவேண்டுமோ என்ற எண்ணம் வந்து விட்டது.

 நீர் ஆதாரத்தை பெருக்க, பாலீதீன் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவோம்.

மழைக்காக கூட்டு பிராத்தனைகள்  ,. மழை தவம் எல்லாம் நடக்கிறது.
இறைவனின் கருணை மழை பொழிந்து  உழவர்களின் கஷ்டங்கள் நீங்கி
மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும்.

உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் இனிமை சேர்த்து, இன்பம் பெருக செழிப்புடன் வாழ்க வளர்க! வாழ்க வளமுடன்!

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
                                                                ________

பொங்கலோ பொங்கல் -பாகம்-2

$
0
0
திண்ணையில் நான்  வரைந்த கோலம்

பொங்கல், பொங்கல் என்று ஒரு வழியாக நல்லபடியாக பால் பொங்கியது.
உங்கள் வீடுகளில் நல்லபடியாக பால் பொங்கியதா?  தீபாவளி என்றால் பலகாரங்கள் செய்வது., பொங்கல் என்றால் வீட்டைசுத்தம் செய்வது.

 வீட்டில் மூலை முடுக்கு எல்லாம் சுத்தம் செய்வது.  வீட்டை வெள்ளை அடித்து சுத்தம் செய்வது.  பரணில் இருக்கும் வேண்டாததை வெளியே எறிந்து வேண்டியவைகளைச் சுத்தம் செய்து எடுத்து வைப்பது  என்று எவ்வளவு வேலை.
(கார்ட்டூன் -கணவர் வரைந்தது)

 சீன வாஸ்து சொல்கிறது வேண்டாதவை என்று நாம் எடுக்காத பொருட்களில் கெட்ட சக்திகள் வந்து குடி கொண்டு விடும் என்று.  இயந்திரமோ, மனித உடலோ உபயோகிக்காவிட்டால்  அப்படித்தான் ஆகி விடும்.

நம் அம்மா காலத்தில் (திருநெல்வேலி பக்கம்) பழைய வீடுகளில் அட்டாலி என்று பொருட்கள் வைக்கும் பலகையால் ஆன தட்டு இருக்கும். அதைக் கூட விடாமல் கழட்டி அதைக் கழுவி சுத்தம் செய்து அதில் எல்லாம் கோலம் போடுவார்கள். அதுவும் புது சுண்ணாம்பு வாங்கி, அதை வெந்நீரில் போட்டு பின் அதை மாக்கோலம் போடுவது போலவே கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு  துணியைச் சுண்ணாம்பு தண்ணீரில் நனைத்து அழகாய் கோலம் போடுவார்கள்.  (நான் தேங்காய் நாரை பிரஷ்  மாதிரி செய்து அதைக் கொண்டு கோலம் போடுவேன் )

 சுண்ணாம்புக் கோலம் அழியாமல் இருப்பது மட்டும் அல்ல- நல்ல கிருமி நாசினியும் கூட. அதனால் வீட்டின் எல்லா அறைகளிலும் பெரிது பெரிதாய் சுண்ணாம்புக் கோலம் போடுவார்கள். அப்போது உள்ள தரையில் கோலம் பளிச் என்று தெரியும்.  பொங்கல் அன்று  முற்றம் அல்லது முன் வாசலில்   நாலு பக்கம் வாசல் மாதிரி பட்டை அடித்து அதன் ஒரங்களில் காவிப் பட்டை அடித்து  நடுவில் மாக் கோலம் போட்டு சூரியன் சந்திரன் எல்லாம் வரைந்து  அதில் கட்டி அடுப்பு வைத்து பொங்கல் வைப்பார்கள்.

அடுக்குமாடி குடியிருப்புகள் வந்தபின் கேஸ் அடுப்பில் பொங்கல்  வைத்து விளக்கு முன் சாமி கும்பிட்டு என்று மாறுகிறது காலம்.

புதிதாக வந்த காய்கறிகள், புத்தரிசியில் பொங்கல், கரும்பு, மஞ்சள் இஞ்சி என்று உடலுக்கு பலமளிப்பது எல்லாம் தை மாதத்தில்  .கிடைக்கிறது.





மஞ்சள் கொத்து எங்கள் வீட்டு
தோட்டத்து தொட்டியில் விளைந்தது.
 நமக்கு உணவளிக்கும் உழவர்களுக்கு நன்றி சொல்லவும்,  பயிர் வளம் பெருக நமக்கு உதவும் சூரியனுக்கு நன்றி சொல்லவும் இந்த நாளைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

நாங்கள் கொண்டாடிய பொங்கல் படங்கள் சில உங்கள் பார்வைக்கு.





                                      மொட்டை மாடியில் சூரிய பூஜை





 



                                          பொங்கும் மங்களம் எங்கும் தங்குக

                                                              வாழ்க வளமுடன்!

                                                                   -------------------

மாட்டுப்பொங்கல்

$
0
0

தைபிறந்தால் வழி பிறக்கும் என்பது முன்னோர் வாக்கு.  இரண்டு பேர் பேசிக் கொண்டால் உனக்கு , பெண் இருக்கிறாளே மாப்பிள்ளை பார்க்கிறாயா என்று கேட்டு விட்டு  அவரே சொல்வது, தை பிறந்தால் வழி பிறக்கும் .இப்போ பார்க்க ஆரம்பித்தால் நல்லது நடக்கும் என்பது தான் .

என் அம்மா சேர்த்து வைத்த பழைய சினிமாப்பாடல் தொகுப்பிலிருந்து எடுத்த பாடல்களை சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

தைபிறந்தால் வழி பிறக்கும் படத்தில் பாடலாசிரியர் மருதகாசி அவர்கள் எழுதிய பாடல் மிக நன்றாக இருக்கும். செளந்தராஜன் அவர்களும், பி. லீலா அவ்ர்களும் பாடி இருப்பார்கள்.

தை பொறந்தால் வழி பொறக்கும்  தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல்விளையும்         தங்கமே தங்கம்
ஆடியிலே வெத வெதைச்சோம்     தங்கமே தங்கம்
ஐப்பசியில்  களை எடுத்தோம்         தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு                  தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சு        தங்கமே தங்கம்
கன்னியரின் மனசு போல                  தங்கமே தங்கம்
கல்யாணம் ஆகுமடி                             தங்கமே தங்கம்
வண்ணமணிக் கைகளிலே               தங்கமே தங்கம்
வளையல்களும் குலுங்குமடி           தங்கமே தங்கம்
முத்துச் சம்பா நெல்லுக்குத்தி           தங்கமே தங்கம்  
முத்தத்திலே சோறு பொங்கி            தங்கமே தங்கம்
குத்துவிளக்கேத்தி வச்சு                     தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்        தங்கமே தங்கம்


தை பிறந்தும் விவசாயிகள்  விதைத்த விதை வீடு வந்து சேராமல்  அவ்ர்கள் அரசாங்கம் கொடுக்கும் நிவாரண உதவியை நாடும் அவல நிலை உள்ளது. கார்த்திகையில் கதிராகி, கழனியெல்லாம் பொன்னாவிளைந்த நெல்மணிகள் வீடு வந்து சேர்ந்தால் இந்த பாட்டில் உள்ளது போல் எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்து இருப்பார்கள். விவசாயிகளில் சிலருக்கு மகிழ்ச்சி: பலருக்கு கஷ்டம்.

மழை பொழிந்து விளைச்சல் அதிகமாகி, விவசாய மக்கள் வாழ்வு உயர வேண்டும்.

அந்தக் காலத்தில்  கிராமத்தில் உழவு மாடு இரண்டு, வண்டி மாடு இரண்டு ,பசு மாடு இரண்டு  என்று எல்லா வீடுகளிலும் பெரும்பாலும்  இருக்கும். ஏர் பிடித்து உழ காளைமாடு, இரண்டு  இருக்கும்




 பசு மாடு   இரண்டு இருக்கும். அதன் பால் வீட்டு தேவைகளுக்கும்  மிகுதியான பாலை அக்கம் பக்கம் கொடுத்தால் ,அந்த பணத்தில் அதுகளுக்கு தீனி போட உதவும் என்பார்கள். பசு மாட்டுக்கு லட்சுமி என்று பெயர் வைத்து அதை அன்போடு வளர்ப்பார்கள்.



பக்கத்தில்   அங்கும் இங்கும் போய் வர வண்டியும் இரண்டு மாடுகளும் இருக்கும். வயலுக்கு உரம் அடிக்க   அதற்கு தனி வண்டியும் வண்டி மாடுக்ளும் இருக்கும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில்  அண்ணனும் ,தங்கையும்  தன் குடும்ப உறுப்பினர் ஆகி விட்ட வண்டி மாடுகளிடம் தன் மனதில் உள்ளதை வண்டியில் போய்க்கொண்டே பாடுவது போல்  பாட்டை மருதகாசி அவர்கள் எழுதி இருப்பார்கள்.

அண்ணன் தம்பி உறவு  எப்போதும் உண்டு .தன் சகோதரிகளுக்கு சீர் கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். சில வீடுகளில் பொங்கல் சீர்வரிசையை வண்டிகட்டிக் கொண்டு வந்து கொடுப்பார்கள். வயலில் விளைந்த  புத்தரிசி, கரும்பு, பனங்கிழங்கு, காய்கறிகள், வெற்றிலை பாக்கு, பழம், என்று பொங்கல் சீர்  இறக்கி, புகுந்தவீட்டில் பெண்ணின் பெருமையை  உயர்த்துவார்கள்.

வட மாநிலங்களில் ராக்கி அன்று ரட்சை சகோதரனுக்கு கட்டி அவரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வது போல் காலம் எல்லாம் சகோதரனின் பங்களிப்பு மிக முக்கியம்.

 எனக்கும் என் தம்பி பொங்கலுக்குப் பணம் அனுப்பி விடுவார். 

இந்த பாட்டில் கவிஞர் மருதகாசி ,சீரைப் பற்றி எல்லாம் எழுதி இருப்பார். கேளுங்கள்.

வண்டி மாடு பாட்டு:

அண்ணன் : சொல்லட்டுமா ? சொல்லட்டுமா?
ரச்கசியத்தை       சொல்லட்டுமா? 
துள்ளியோடும்    காளைகளா
உள்ளபடி                சொல்லட்டுமா?

அருமையாக வளர்த்தாலும்
வரிசை வம்மை கொடுத்தாலும் 
புருஷன் வந்த கையோட 
பொறந்தவீடு மறந்து விடும்.

ஏரில் காளைகள்பூட்டி பாடும் பாட்டு:
’மகாதேவி’ படத்தில் :

ஏரு பூட்டுவோம் - நாளை 
சோறு ஊட்டுவோம் -இந்த
ஏழைகளெல்லாம் ஒன்றாக சேர்ந்து
கொடியை நாட்டுவோம்- வெற்றி கொடியை நாட்டுவோம்.
வாழப் பிறந்தவன் வாழ்ந்திடவும் 
வறுமைப்பிணியாவும் நீங்கிடவும் 
வானம் மாரி பொழிந்திடவும் 
மானாபி மானமே -தானாக - ஓங்கிட
பாடு பள்ளு பாடு -துணிஞ்சி துள்ளி ஆடு- என்றும்
பால் போல் பொங்க வேணும் நம்பநாடு
நல்ல காலம் வந்ததாலே- இனி 
எல்லை-மீறி - இன்ப வாழ்வு - என்று ஓங்கவே

அந்தக் காலத்தில் முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள்  ஏறுதழுவுதல்   என்ற வழக்கம் இருந்தது.  அதில் வெற்றி பெறும் ஆணுக்குப் பெண்ணை மணம் முடிக்கும் பழக்கம்  இருந்தது.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் :

 அஞ்சாத சிங்கம் என் காளை -இது
பஞ்சாய் பறக்க விடும் ஆளை 

என்று  பாட்டு வரும்.


இப்படி உழவுக்கும், தொழிலுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும், வீரத்திற்கும் உதவியாக இருக்கும் மாட்டுக்கு இன்று மரியாதை செய்யும் நாள் ,மாட்டுப் பொங்கல். கடுமையாக உழைக்கும் பெண்ணையும் ஆணையும் மாடாய் உழைக்கிறார் என்று சொல்லி மாட்டுக்குப் பெருமை சேர்க்கிறோம்.




இன்று திருவள்ளுவர்  தினம்  தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம்.

வள்ளுவர் வகுத்து கொடுத்த வாழ்க்கை நெறிப்படி வாழந்தாலே நாம் அவருக்கு செய்யும் சேவை.

 உழவைப் பற்றி திருவள்ளுவர்  சொன்ன குறள்:

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

என்று உழவு தொழில் சிறந்தது என்கிறார்.மேலும் அவர்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் 
தொழுதுண்டு பின்செல்பவர்.

என்றார்

விளைநிலங்களை துண்டு போட்டு விற்காமல் விவசாயம்  செய்தால் நாடு நலம் பெறும் -வீடும் நலம் பெறும்.




                                                          வாழ்க வளமுடன்


                                                                   ---------------

கழுகுமலை

$
0
0

என் கணவர் சிறு வயதில் பள்ளி விடுமுறையின்போது  தன் சித்தப்பா  வசித்த
கழுகுமலைக்கு அடிக்கடி போவார்களாம்.  அங்குள்ள வெட்டுவான் கோவிலுக்கு சித்தப்பாவின் மகன்களுடன் போவார்களாம். கல்லூரி ஆசிரியரான பிறகு மாணவர்களை அழைத்துக்கொண்டு அங்கு சுற்றுலா போயிருக்கிறார்கள்.  எப்போதும் எங்களிடம் அந்த கோவிலைப்பற்றி சொல்லி எங்களுக்கும்  கழுகுமலையைப் பார்க்கும் ஆசையை  ஏற்படுத்திவிட்டார்கள்.

இந்தமுறை என் மகன் அதற்கும் பயணத்திட்டம் வகுத்து இருந்தார்.  நாங்கள் அங்கு போனோம்.

திருநெல்வேலி  அருகே உள்ள கோவில்பட்டியிலிருந்து  சங்கரன் கோவிலுக்குச் செல்லும் வழியில் இருபது கி.மீ தூரத்தில் இவ்வூர் உள்ளது.

கழுகுமலையில் முக்கியமாகப் பார்க்கவேண்டியவை

1. அருள்மிகு கழுகாசலமூர்த்தி  திருக்கோயில்
2.வெட்டுவான் கோயில் என்று கூறப்படும் குடைவரைக் கோயில்
3.சமணதீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்,சமணர் கல்வெட்டுக்கள்

 வெட்டுவான் கோயில் கி.பி எட்டாம் நூற்றாண்டிலிருந்து 9ஆம்
நூற்றாண்டுக்குள் வெட்டப்பட்ட இந்து கோயிலாகும். மகாபலிபுரம் போல
பாறையைக்  குடைந்து செய்யப்பட்ட குடைவரை கோவிலாகும். இது மலைமீது உள்ளது. இப்போது  தொல்லியல் துறையின் பாதுகாப்பின் கீழ் உள்ளது.

 முதலில் இதைப் பார்க்கப் படிகள் ஏறிப் போய் விட்டோம். அங்கு வேலி போட்டு பூட்டுபோட்டு பூட்டி இருந்தார்கள்.  ஏமாற்றத்துடன் தூரத்தில் இருந்தே பார்த்தோம். சில பள்ளிச் சிறுவர்கள் மலை மீது ,ஊசி வெடி வெடித்துக் கொண்டு இருந்தார்கள்.சில  சிறுவர்கள் கம்பி வேலியின் அடிவழியாகப் படுத்துக்கொண்டே உள்ளே போய் சாதனை புரிந்த மாதிரி பார்த்து வந்தார்கள்.



வெட்டுவான் கோயில்- தூரப்பார்வையில்
 பாதுகாப்பற்ற பழைய இறங்கும் வழி













வெட்டுவான் கோவில் - ஓவியம் :- என் கணவர்.

நாங்கள் சற்றுமேலே உள்ள மலையில் செதுக்கப்பட்ட சமணர் உருவச்சிலைகளைப் பார்க்கப் போனோம்.

கழுகுமலைப் பாறைகளில் சமணதீர்த்தங்கரரின் உருவச்சிலைகள் வெட்டப்பட்டுள்ளன.


தீர்த்தங்கரர்கள்


தலைக்கு மேற்பகுதியில் குடைகளுடன் தீர்த்தங்கரர்கள்  பத்மாசனத்தில் வீற்றிருக்கும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன.




  பார்ஸ்வநாதர் ,  கோமடேஸ்வரர், பத்மாவதி, அம்பிகா  ஆகியோருக்கு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. 




                                                        கோமடேஸ்வரர்

பழங்காலத் தமிழ்க் கல்வெட்டுக்கள் இங்கு  காணப்படுகின்றன 



சமண முனிவர்கள் பயன்படுத்திய கல் படுக்கைகள் இங்கு உள்ளன  

உள்ளே கல் படுக்கைகள்

சமணர் குகைக்குச்செல்லும்வழி




அதன் அருகில் ஒரு அம்மன்  கோவிலும், சாஸ்தா கோவிலும் உள்ளன.



சுவாமிக்கு முன்பு யானை வாகனச்சிலை உள்ளது, பெரிய உருவத்துடன்  கதாயுதத்தை வைத்துக் கொண்டு ஒரு உருவச்சிலை உள்ளது. குதிரையில் சாஸ்தா உட்கார்ந்து இருப்பது போல்  உருவச்சிலை உள்ளது. உள்ளூரில் சபரிமலைக்கு மாலை போட்டிருந்த ஒருவர் தன் இரு குழந்தைகளுடன் வந்து சூடம் ஏற்றி கும்பிட்டார்,

அக்கோயிலின் அருகே கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தோம். இந்த இடத்திற்கு மேலே மலை உச்சிக்குப் போகும் வழி உள்ளது. மலைக் குன்றின் உச்சியில் சிறிய பிள்ளையார் கோவில் உள்ளது.,

இதற்கு என் கணவரும் மகனும் மட்டும் போய் வந்தார்கள். உச்சிக்கு செல்ல படிக்கட்டுக்கள் சில இடங்களில் கட்டி இருக்கிறார்களாம்,  சில இடங்களில் பாறைகளில் வெட்டப்பட்டு  உள்ளனவாம்.  சில இடங்களில் பாதை வழுக்குப் பாறையாக இருக்குமாம்,

மலைவழி


உச்சிப்பிள்ளையார்

உச்சிக் கோவிலுக்கு நாள்தோறும் வழிபாடு இருப்பது போல் தெரியவில்லையாம் .வழியில் குரங்குகள் நிறைய இருக்கின்றனவாம். எங்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டு என் கணவ்ரும், மகனும் மட்டும் போனதால் அவர்கள் வரும் வரை நானும் என் பேரனும் சமையல் சாமான்கள் வைத்து சமைத்து சாப்பிடும் விளையாட்டு விளையாடினோம். அவர் பருப்பு சாதம், தோசை, சப்பாத்தி  செய்து கொடுத்தார். மிக்ஸியில் ஜூஸ் போட்டு கொடுத்தார்.  நான் சஷ்டி விரதம் இருந்தாலும் குழந்தை கற்பனையில் செய்து தந்த உணவை வேண்டாம் என்று சொல்லமுடியவில்லை. ரசித்து உண்டேன். காற்று சுகமாய் வீசியது. அருமையான இயற்கை சூழல். எல்லாம் மனதுக்கு  மிக  மிக ரம்மியமாக இருந்தது.



பாறை நிற்கும் அழகை பார்த்தால் அதை தள்ளி உருட்டி விளையாட எண்ணம் வரும்.    தள்ள முயற்சிப்பது -- மருமகளும், மகனும்.


வெட்டுவான் கோவிலை பார்க்க முடியாத வருத்ததோடு இறங்கினோம்.
 அப்போது கீழே இருக்கும் சுற்றுலாப் பூங்காவைப்  பார்த்துக் கொள்ளும் பணியாளரிடம் ‘பூட்டி இருக்கிறதே’ என்று கேட்ட போது, அவர் தொல்லியல் துறை வழிகாட்டியின்  செல் நம்பரைக்  கொடுத்து உதவினார் .அவருக்கு போன் செய்தபோது  அவர்  பஸ்ஸில் வந்து கொண்டு இருப்பதாய் சொன்னார்.

அவர் வரும் வரை நான் பேரனை   அழைத்துக் கொண்டு அங்குள்ள குழந்தைகள் பூங்காவில் விளையாடினேன். சீ-ஸா  பலகையில் உள்ளூர் குழந்தையும் பேரனும் விளையாடினார்கள்.அந்தப்பக்கம்  அந்தக் குழந்தையின் அருகில் அதன்அப்பாவும், இந்தப்பக்கம்பேரனுக்கு  அருகில் நானும் இருந்து கைகளால் பலகையை அழுத்தி அவர்கள் விளையாட உதவினோம். இரண்டு குழந்தைகளும் ரசித்து சிரித்து விளையாடினார்கள்.



பின் தொல்லியல் துறை வழிகாட்டி வந்தார், மீண்டும் படிகளில் ஏறி வெட்டுவான் கோவிலுக்குச் சென்றோம்.

இந்த இடத்திற்கு செல்வதற்கு புதிதாக படிகள் வெட்டப்பட்டுள்ளன.
படிகளுக்கு கைப்பிடிக் கம்பிகள் வைத்து இருக்கிறார்கள். முன்பு இங்கு
செல்வதற்கு வழி  ஆபத்துக்குரியதாக இருந்ததாம்.

நேரே இருந்து தோற்றம்


குடைவரைக்கோயில் பிள்ளையார்

 கோவிலிலின் உள்ளே . ஒரு விநாயகர் சிலை இருக்கிறது.  முன்பு அந்த இடத்தில் சிவலிங்கம் இருந்தாகக் கூறுகிறார்கள். கோவிலின் விமானத்தில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவிலை சுற்றி வந்தால் சிற்பங்கள் காணலாம். கோவிலின் உள்ளே இருந்த பிள்ளையாருக்கு, வழிகாட்டி பூஜை செய்து காண்பித்தார்.

சிவன் மான், மழு தாங்கிய தோற்றம்.


விமானம்

வழிகாட்டியுடன்
குன்றின் அடிவாரத்தில் ஒரு ஊருணி இருக்கிறது.

ஊருணி


மலையின் தென்புறத்தை ஒட்டி அருள்மிகு கழுகாசல மூர்த்தி (முருகன்)  திருக்கோவில் உள்ளது. அருணகிரி நாதர் இத்தலத்து முருகன் மேல் திருப்புகழ் பாடி இருக்கிறார். கழுகாசல மூர்த்தி விபூதி  அலங்காரத்தில்  சிரித்தமுகத்தோடு காட்சி அளித்தார். முருகனுக்கு நேரே நிறைய  பெண்கள் அமர்ந்து திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் எல்லாம் பாடிக் கொண்டு இருந்தார்கள்..நாங்கள் அங்கு சென்ற அன்று கந்தசஷ்டியின் 5ஆம் நாள். அங்கு 6 நாளும் சூரசம்காரம் நடைபெறுமாம்.  காகிதம், மூங்கில் கொண்டு செய்த -சூரர்கள் போல்  தோற்றம் கொண்ட கவசத்துக்குள்  மனிதர்கள் இருந்தார்கள்.
நான்கு சூரர்கள் இருந்தார்கள் அவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன.











அங்கு திரண்டு இருந்த மக்கள் எங்களை சம்காரம் பார்த்து விட்டுப் போங்கள் என்றார்கள் .நாங்கள் இரவுக்குள்  மதுரை போக வேண்டும் என்பதால் அதைப்
பார்க்க முடியவில்லை. திருவிழாவுக்கு கடைகள் நிறைய போட்டு இருந்தார்கள்.

இளநீர் வாங்கி குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

என் மகன் , மருமகள் இருவரும் காமிராவில் ஆசை தீர படங்கள் எடுத்தார்கள். அவ்வளவையும் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைதான். . ஆனால் பதிவு நீண்டு விடும்.
கல்வெட்டு, கோமடேஸ்வரர், சமணகல்படுக்கை,  சாஸ்தா கோவில் உச்சிபிள்ளையார் , சீசா-பலகை படங்கள் எல்லாம் என் கணவர் செல்லில் எடுத்தது.

 கழுகுமலை ! பார்க்க வேண்டிய இடம் .

                                                       _________________________

சித்தன்னவாசல்

$
0
0


அண்மையில் 'கழுகுமலை' பதிவு போட்ட போது- சமணர் படுக்கை பற்றி குறிப்பிட்டு எழுதிய போது,  அந்த பதிவுக்கு பின்னூட்டம் கொடுத்த G.M. பாலசுப்பிரமணியம் சார்,

 //புதுக்கோட்டைக்கு அருகில் ஓவியங்களுடனும் கல் படுக்கைகளுடனும் சிற்பங்களுடனும் ஒரு இடம் பார்த்திருக்கிறேன். பெயர் நினைவுக்கு வரவில்லை. வாழ்த்துக்கள் // 

என்று  சொல்லி இருந்தார்கள். அவர்களுக்கு நான் ”அந்த ஊர் பெயர் சித்தன்னவாசல் , அங்கு மகள் மருமகனுடன் சென்று வந்தோம், அதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்”  என்று பதில் அளித்தேன். சாரால் மற்றொரு பதிவு போட வாய்ப்பு கிடைத்து விட்டது.

 தங்கை மகள்  புதுக்கோட்டையில் இருக்கிறாள்,  அவளுடைய குடும்பத்துடன் ஒருமுறை நான் மட்டும் சித்தன்னவாசலுக்கு சென்று இருக்கிறேன்,  மிகவும் அருமையான இடம்.  அப்போது நினைத்துக் கொண்டேன்,  மறுபடியும் குடும்பத்துடன் வர வேண்டும் என்று. போன ஜுனில் விடுமுறைக்கு வந்த  மகள், மருமகன் , பேத்தி, பேரனுடன் நாங்கள் காரில்  சித்தன்னவாசல் சென்றுவந்தோம்.







புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டையிலிருந்து   அன்னவாசல் செல்லும் வழியில் 16 கிலோ மீட்டர் அருகில் சித்தன்னவாசல் உள்ளது.


சமணர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைதியான சூழல்களில் தங்கள் இருப்பிடத்தை வைத்திருந்திருக்கிறார்கள்







 இங்குள்ள மலை மீது சமணர்களின் படுக்கைகளும்,  குடைவரை ஓவியம் வரையப்பட்ட  இடங்களும் உள்ளன.  ஏழடி பாட்டம் என்ற இடத்தில் இயற்கையாக அமைந்த குகையில் 17 கல் சமணர் படுக்கைகள் உள்ளன. இப்படுக்கைகளில்  வழுவழுப்பாய் தலையணை போல உள்ளன





கி.மு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி கல்வெட்டு இங்கு காணப்படுகிறது.  குடவரை ஓவியங்கள் மூலிகையால் தயார் செய்யப்பட்ட வண்ணங்களால் வரையப்பட்டது. இப்போது  கொஞ்சம் அழிந்து விட்டது. அங்கு முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் வண்ண ஓவியங்களில் தாமரைக் குளத்தில் மலர் பறிக்கும் துறவிகள்,   விலங்குகள் , அன்னம், மீன்கள் ,  அல்லி மலர்கள் எல்லாம் அழகாய் வரையப்பட்டு இருந்தது.  தூண்களின் மேல் புறம் ராஜா, ராணி  நடன் மங்கை ஓவியங்கள் உள்ளன.  முன் மண்டபத்தின் சுவரில் தீர்த்தங்கரர்களில் ஒருவரான பார்சுவநாதர் சிலை இருக்கிறது.  கருவறையில்  மூன்று சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் உள்ளன.   படம் எடுக்க அனுமதி இல்லை.

குடவரைக்கு செல்லும்  முன் கீழே  தமிழ்நாடு அரசு நுழைவு டிக்கட்  வாங்க வேண்டும்.  மேலே தொல்பொருள் ஆராய்ச்சி துறை வழங்கும் டிக்கட் வாங்க வேண்டும்.

முன்பு நான் போன போது படிகளுக்கு கைப்பிடி கிடையாது. இந்த முறை போன போது அழகிய கைப்பிடிகள் வைத்து இருந்தார்கள்.   ஏறுவதற்கு மிக வசதியாக இருந்தது.

போகும் பாதையில் கல் ஆசனம், சோபா போல் இருந்தது.  அதில் நான், என் மகள், பேத்தி, பேரன் எல்லாம் உட்கார்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோம்.  என்னை பேத்தி மகாராணி போல் கால் மேல் கால் போட்டு அமருங்கள் என்றாள். நானும் அப்படியே உட்கார்ந்து,” மாதம் மும்மாரி பொழிகிறதா? ” என்று ராஜா கேட்பது போல்  கேட்டேன். ஒரே சிரிப்பு தான்.

 ஒரு குகை மாதிரி இருந்த பாறையின்  உள்ளே போய் வந்தோம்.  என் பேரன் அந்த சமயம் மொட்டை அடித்து இருந்தான்.  அவன் ஒரு பாறை மேல் அமர்ந்து தவம் செய்வது போல் அமர்ந்தான்.  “ஆஹா! சின்னம் சிறு  பாலகன்  தவம் செய்கிறானே என்று மகிழ்ந்து இவனுக்கு   வரம் தாருங்கள், சுவாமி!”  என்றதும்  அவனுக்கு  ஒரே சிரிப்பு !

 சமணர் படுக்கை இருக்கும் இடம் போகும் பாதை, மலையின் பின் பகுதியில்  கீழே இறங்கி குறுகலாய் போகிறது. அது திகைக்க வைக்கும்(திகில் ஊட்டும்) பாதைதான்.  அதில் கீழே விழுந்து விடாமல்  இருக்க தடுப்பு போட்டு இருக்கிறார்கள்.











மலை மீது இருந்து பார்க்கும் போது இயற்கைக் காட்சி அழகாய் இருக்கும். மயில் அகவிய ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் மயில் கண்ணுக்கு தெரியவில்லை.





கல் படுக்கைகளை வேலி போட்டுத் தடுத்து வைத்து இருக்கிறார்கள் வெளியிலிருந்து தான் பார்க்க வேண்டும். சமணர் படுக்கை இருக்கும் மலை இடுக்குகளில் வவ்வால்கள் தொங்கி கொண்டு இருந்தது.






பின்பு கீழே இறங்கி இன்னொரு இடத்தில் இருந்த குடவரைக் கோயிலுக்குச் சென்றோம்

குடவரை ஓவியத்தை பார்க்க தனியாக அனுமதி சீட்டு வாங்க வேண்டும்.  அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு உள்ளே முதலில் எங்கள் குடும்பத்தை மட்டும் விட்டார்கள்.

குடைவரை ஓவியங்கள் உள்ள இடம்

  உள்ளே சிறு இடம் தான்.  அங்கு இருந்த தொல்லியல் துறை கைடு நல்ல விளக்கம் சொன்னார். மேல் விதானத்தில் எத்தனை சாமியார் பூக்குடலை வைத்துக் கொண்டு பூப்பறிக்கிறார்கள், அன்னப்பறவை, மற்ற விலங்குகள் எத்தனை என்று நம்மிடம் கேள்வி கேட்டு, பின் அவர் தெரிவித்தார். நமக்கு அவர் சொன்னபிறகு  எல்லாம் பளிச்சென்று தெரிகிறது.

பிறகு உள்ளே மூன்று சமண தீர்த்தங்கரர்கள் சிலை இருக்கும் இடத்தில்  நம்மை நடுவில் நிற்க வைத்து விட்டு ,அவர் அந்த அறையின் மூலையிலிருந்து வாயை அசைக்காமல் தொண்டை வழியாக கைடு சத்தம் செய்கிறார் . அது அந்த அறை முழுவதும் எதிரொலிக்கிறது. மிக அருமையான அதிர்வு ஏற்படுகிறது. அதில் அவர் தேர்ச்சி பெற்றவர் என்பதை உறுதிப்படுத்த, நம்மையும் அதுபோல் செய்து பார்க்க சொல்கிறார், நம்மால் முடியவில்லை. உடனே முகமெல்லாம் பூரிப்பாய் மலர்ந்து சிரிக்கிறார்.

அங்கு அருகில் ஒரு பூங்கா இருக்கு. அங்கு கொண்டு போன உணவுகளை  சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுக்கலாம் என்று பார்த்தால் அங்கு  உணவு உட்கொள்ளக் கூடாது என்று அறிவிப்புப் பலகை வைத்து இருக்கிறார்கள்.  பொது  இடத்தை நாம் சுத்தமாக் வைத்துக் கொண்டு இருந்தால் அப்படி அறிவிப்பு வைத்து இருக்க மாட்டார்கள்.

பார்க்கில் அழகான சிலைகள் வைத்து இருந்தார்கள். மகாவீரர் சிலை. புலியை முறத்தால் துரத்திய வீரப்பெண்மணி சிலை, மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகன், முல்லைக்கு தேர் கொடுத்த பாரி,   அன்ன ரதம் ஆகியவை இருந்தது.














அன்ன ரதத்தில் ஒவ்வொருவரும் அமர்ந்து படம் எடுத்துக் கொண்டோம்.



மாயாபஜார் படத்தில் அன்னப் படகில்,” ஆஹா இன்ப நிலாவினிலே, ஒஹோ ஜெகமே  ஆடிடுதே  - மகிழ்ந்து ஆடிடுதே என்ற பாடலை நினைத்துக் கொண்டேன்.



அங்கு குழந்தைகள் விளையாட  சறுக்கு , ஊஞ்சல், சீஸா பலகை எல்லாம்  இருந்தன.   குழந்தைகள் விளையாடினார்கள்.  மரங்களில் நிறைய  குரங்குகள் இருந்தன.





 தண்ணீர் தாகம் எடுத்த குரங்கு தண்ணீர் டியூப்பில் நீர் கசிவு இருந்த இடத்திலிருந்து நீர் பருகியது.  சரியாக வரவில்லை என்று  டியூபில் ஒட்டி இருந்த டேப்பை விலக்கி குடித்தது.

சித்தன்னவாசல்  புகைப்படங்கள் மகள் எடுத்தது. கார்ட்டூன் படம் கணவர்.
இருவருக்கும் நன்றி.

வேறு  இடத்த்தில் மரநிழலில் அமர்ந்து உணவை உண்டு ஓய்வு எடுத்து  ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
                                               ---------------------------------------


வாழ்க்கைப் பயணம்

$
0
0




இன்னாருக்கு இன்னார் என எழுதி வைத்தானே தேவன் அன்று என்று சொல்வார்கள்.  திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்பார்கள்.
இவளுக்கு என்று ஒருவன் பிறக்காமலா இருப்பான் என்பார்கள், யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்து இருக்கிறாரோ என்பார்கள்.

சமீபத்தில் ஒரு இல்லத்தில் நடந்த திருமணவிழாவில் ஒரு புத்தகத்தை திருமணத்திற்கு  போனவர்களுக்கு தாம்பூல பையில் போட்டுக் கொடுத்தார்கள்.

என். பாலச்சந்திரசிவாச்சாரியார் என்பவர் தன் அன்பு மகள் இந்திரா பிரியதர்ஷினியின் திருமணத்தின் போது  இதை வெளியிட்டு எல்லோருக்கும் கொடுத்தார். புத்தகம் வேதகாலம் முதல், தற்காலம் வரை உள்ள திருமணங்களை ஆய்வு செய்து இனிய இல்லறம் என்று தலைப்பிட்டு இல்லறத்தின் மேன்மையை பல கட்டுரைகளாகச் சொல்கிறது.  எல்லா  மத திருமணங்களும், சடங்கு முறைகளும்,  எல்லாபிரிவு திருமணங்களும் இந்த புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது.


1.வேதம் சொல்லும் திருமணம் -- தி.ஸா.ஷண்முக சிவாசார்யர்
2. தமிழகத்தின் திருமணச்சடங்குகள் ---- பூசை. ச. அருணவசந்தன்
3.  தமிழர் திருமணம் -- புலவர் ஷேக் அலாவுதீன்
4. சமண பெளத்தத் திருமணங்கள் ----- புலவர் கோ. தட்சிணாமூர்த்தி
5. கிறிஸ்தவத் திருமணம் ------ பேரா. டாகடர். மு. ஆல்டெபனஸ் நதானியேல்
6. இஸ்லாமிய மணக் கோட்பாடுகள் ------- அ.ஹொலால் முஸ்தபா
7. இந்திய இல்லற்ச்சட்டவிதிகள் ------- இந்திராணி செல்வகுமார்

                             இல்லறம் நல்லறமாக

1. இல்லறம் சிறக்கத்  தியானம் செய்!--------- Dr. விஜயலட்சுமி பந்தையன்
2, எவருக்கு எவர் துணை?----- தமிழ்வாணன்
3. தாம்பத்திய தந்திரங்கள் ------  லேனா தமிழ்வாணன்
4. மனநலமும் ,தேகபலமும் ---- குருபர தேசிக வைத்தியர்
5. காலநிலை மாற்றமும் , கவனிக்கவேண்டிய பிரச்சினைகளும் --- தேன்தமிழ்
6. இல்லறத்தில் ஆன்மீகம் === புலவர் தில்லை. கலைமணி
7. திரைப்படங்களில் இல்லறக் கண்ணோட்டம் --- வீ. நா. பகவத்சிங்
8. குடும்பம் ஒரு கோயில் --- தமிழ்ப் பொறியாளன்
9,  இல்லறத்தில்மூவர் சாதித்த இனிய நல்லறங்கள் === கா. விஜயராகவன்
10. இல்லறத்தில் காதல் ---- கிருத்திகா.
 இவ்வளவு பேர் எழுதியதை தொகுத்தது தான் இந்த புத்தகம்.

’இனிய இல்லறம்’   புத்தகம் பெயர்.
தொகுப்பாசிரியர் பெயர் தேன்தமிழ், M.A. M.Phil.,
பதிப்பாசிரியர்  லேனா தமிழ்வாணன் , M.A., (Dip.in.journalisam)
மணிமேகலைப் பிரசுரம்.
இலவசமாக வெளியிட்டதால் விலை போடவில்லை.

புத்தகத்தில் படித்ததில் சில  பகுதி :

//நாம் ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு செல்வதானால் நாம் பயணம் செய்ய வேண்டிய நாள், நேரம் பயணிக்கும் வழி, எதில் பயணம் செய்கிறோம் போன்றவற்றை அறிந்தே புறப்படுகிறோம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் குறை இருந்தால் கூட நாம் பயணிக்க மாட்டோம். திருமணம் ஒரு மிகப்பெரிய வாழ்க்கைப் பயணம். அதனால் இந்நிகழ்வுக்கு அபரிமிதமான தெய்வபலமும், நன்னெறிகளும்  தம்பதிகளுக்கு மிக அவசியம். திருமணம் என்பதை விவாஹம் எனக்கூறுவர்.  ’வஹ்’ எனில் தாங்குதல், தெரியப்படுத்துதல், ப்ரயாணம் செய்தல் என்று பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.’வி’என்னும் எழுத்தை முன்னர் சேர்த்தோமானால் “விவாஹகம்” அதாவது நன்றாக தாங்குதல், நன்றாக பயணித்தல் என்று பொருட்படும். ஆம் இல்வாழ்க்கை சுகம் துக்கம் இரண்டும் கொண்டது. இதைக் கடப்பதற்கு நமக்கு ஒரு நல்ல துணையை நமக்கு அமைத்துக் கொடுக்கும் நிகழ்வே , நல்வாழ்க்கை எனும் பயணத்தின் முதல் அடியே திருமணம். இதையே பெரியோர்கள் “இல்லறமே நல்லறம் எனக்கூறினர்.

புது மணத் தம்பதியருக்கு ;  வாழ்வின் ஒவ்வொரு அடியையும் வாழ்க்கை துணையோடு நிதானத்தோடும் , நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் அடியெடுத்து வையுங்கள். இல்லற வாழ்க்கை தேனாக இனிக்கும்.

உணர்வுகளின் பரிமாற்றமும், புரிதலும், விட்டுக் கொடுத்தலும் கொண்ட காதல் இல்லறம் என்றும் வளம் பெறும் ,இனிய இல்லறம் என்றும் சிறக்கும்.

இளமை சக்தி மிக்கது. முதுமை அனுபவச் சாட்டையை கையில் பிடித்திருப்பது ,இரண்டும் அதனதன் பணியை சரியாக செய்தால் குடும்பத்தேர் உல்லாச வலம் வரும்.

வாழ்வு என்ற வண்டிக்கு இருவரும் சக்கரங்கள். அவற்றுள் எந்த சக்கரமாவது சரிவர ஓடவில்லை என்றால் வணடி ஓடாது! காதலிலும், கவர்ச்சியிலும் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து  சமபங்காளிகள் என்ற உணவர்வோடு குடும்ப வண்டியை உருளச் செய்ய வேண்டும்.
இருவரும் ஓருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் தன்மையில்தான் குடுமபம் நன்றாக நடைபெறும் விதம் அடங்கி இருக்கிறது.

விட்டுக் கொடுத்தலும், பகிர்தலும், அன்பின் எல்லையற்ற அரவணைப்பும் தம்பத்தியமும் சங்கமிப்பது தான் இல்லறம்.

அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்து அற்று.//


இப்போது இதை ஏன் சொல்கிறீர்கள் என்கிறீர்களா?

எங்களுக்கு நாளை (07/02/2013) திருமண நாள். திருமண வாழ்வின்  40 வது ஆண்டு நிறைவடைகிறது.


                                                மலரும் நினைவுகள் - படங்கள்



















 40 ஆண்டு அனுபவத்தில் ஏற்பட்ட அனுபவங்களை சொல்லாமல் வேறு புத்தகத்திலிருந்து அனுபவம் சொல்கிறீர்கள்-  உங்கள் அனுபவம் என்ன? என்று கேட்பவர்களுக்கு :நாங்கள் இன்றும் குழந்தைகள் போல் சண்டையிட்டுக் கொள்வோம். பின் குழந்தைகள் போல் சமாதானம் ஆகி விடுவோம். கோபத்தை நமக்கு வேண்டியவர்களிடம் காட்டாமல் வேறு எங்கு காட்டுவதாம், அவர் வெளியில் கோபப்படாத நல்ல பண்பாளர், புன்னகை ததும்பும் முகத்தினர். நானும் அப்படித்தான்.   கருத்து வேற்றுமைகளை உடனுக்கு உடன் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.  எங்களுக்கு ஏற்படும் கருத்து வேற்றுமை கேட்டால் சிரிப்பு வரும். காய்கறி  நன்றாக இல்லை, பார்த்து வாங்க தெரியவில்லை  என்றும் பொருட்களை எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கவில்லை அது இது என்று தான். உறவினர் வீட்டு திருமணம், விசேஷங்களுக்கு (நல்லது கெட்டதுகளுக்கு) விடுமுறை இல்லை என்று பல்லவி பாடுவது அப்படி போனாலும காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டது போல் ஓடி வருவது  அதுதான் எனக்குப் பிடிக்காதது, அவர்களிடம். அப்போது நேரமில்லை ஓய்வு பெற்ற பின்னாவது ஆற அமர போய் வரலாம் என்றால் இப்போதும் வேலையில் சேர்ந்து கொண்டு விடுமுறை இல்லை என்பது தான்., என்ன செய்வது! பள்ளிக் குழந்தைகள் போல் விடுமுறையை எதிர்பார்த்து காத்து இருந்து எங்கும் போக வேண்டும்.

காலம் ஓடுகிறது. நாங்களும் அதனுடன் ஓடுகிறோம். கடவுள் துணையோடும், பெரியவர்களின் ஆசிகளோடும்.

எல்லோரும் நலமாக வாழ்க்கைத்துணையோடு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.




டிக் டிக் கடிகாரம் , அன்பைக்கூறும் கடிகாரம்!

$
0
0

                                                                                                                                                                                             
ஆசியா அவர்கள் தொடர் பதிவுக்கு  அழைப்பு விட்டு இருந்தார்கள்.
-நீங்கள் வெகு காலமாய் பாதுகாத்து வைத்து இருக்கும்  பொருளைப்பற்றி -என்று கூறியிருந்தார்கள்.  அந்த பொருளின் படமும் போடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்கள். என் அப்பாவைப் பற்றிக்கூற எனக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய ஆசியாவிற்கு நன்றி.

நான் எட்டாவது படிக்கும்போது என் அப்பா வாங்கி கொடுத்த பாரின்
வாட்சைப்பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.




\

                                                        அப்பா வாங்கி தந்த வாட்ச்

அப்பாவிற்கு நாங்கள் எல்லோரும் செல்ல குழந்தைகள்தான்.  இருந்தாலும் என் தங்கைகள் சிறுமியாக இருந்ததால் என் அக்காவிற்கும், எனக்கும் வாட்ச் வாங்கி தந்தார்கள்.  என் அக்கா பியூசி படித்துக் கொண்டு இருந்தார்கள்.  அப்பா வாங்கி வந்த  இரண்டு வாட்சில்  ஒன்று  வட்டம், மற்றொன்று சதுரம். அப்போது அந்த காலக்கட்டத்தில் - , சதுரம் தான் பேஷன்.  என் அக்கா சதுர வாட்சை எடுத்துக் கொண்டார்கள்.  எனக்கு வட்ட வாட்ச் வந்தது ஆனால் எனக்கு வட்டம்  பிடிக்கவில்லை.  அப்பாவிடம் எனக்கும்  சதுரமே வேண்டும் என்று கேட்டேன்.  இப்போது பாரின் சாமான்கள் எளிதாக கிடைப்பது போல் அப்போது கிடைக்காது. அப்பாவின் நண்பர்- பாரினுக்கு போனவரிடம் சொல்லி வைத்து வாங்கி  கொடுத்தார்கள். அதை மாற்ற முடியாது என்பதால் அதற்கு அப்பா. என் மனம் நோகாமல்  அந்த வாட்சை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுமாறு  எனக்கு நிறைய ஐஸ் வைத்து என்னிடம் கொடுத்து விட்டார்கள்.  அது என்னவென்றால் உன் கைக்கு இந்த வட்டம் தான் நன்றாக இருக்கும்,  அக்கா கைக்கு அந்த சதுரம் தான் நன்றாக இருக்கும்,  உன் வாட்ச் எல்லா  காலங்களிலும் போட்டுக் கொள்ளலாம், அக்கா வாட்ச் இந்த சதுர பேஷன்  இருக்கும் போது மட்டும் தான் போட முடியும்.  அப்புறம் வேறு மாடல் பேஷனாகி  விட்டால் இது பழைய பேஷனாகி விடும். வட்டம் அன்றும், இன்றும், என்றும் நீ போட்டுக் கொள்ளலாம் என்று எல்லாம் சொல்லி என்னை சமாதானப்படுத்திவிட்டார்கள்.

அக்காவின் வாட்ச் கறுப்பு ஸ்ட்ராப், என் வாட்ச் தங்ககலர் ஸ்ட்ராப்.
அம்மாவின் சிங்கப்பூர் வாட்ச் சில்வர் கலரில் வெள்ளைகல் சுற்றி பதித்த , மூடி
போட்டது. அந்த வாட்சை பெரும்பாலும் நான் தான் கட்டி செல்வேன்.

பள்ளியில் தோழிகள் மணி கேட்டால் பெருமையாக அதை திறந்து மணி சொல்வேன். எல்லோரும் அதை திறந்து மூட ஆசைப்பட்டு மணி கேட்பார்கள்.
ஒரு பொருட்காட்சிக்குச் சென்றிருந்த போது அந்த வாட்ச், கூட்டத்தில் எங்கோ விழுந்துவிட்டது.  பொருட்காட்சி முழுவதும்  நானும் என் அண்ணனும் தேடினோம்.








 போகிறவர்,  வருகிறவர்கள் மிதித்து ,மூடி உடைந்து வாட்ச் மட்டும் கிடைத்தது.  அம்மாவிடம் திட்டு வாங்கினேன். வாட்சை பத்திரமாக வைக்க தெரியாதவளுக்கு எதற்கு வாட்ச் என்று  அம்மா வேறு அப்பாவிடம் சொல்லிக்  கொண்டு இருந்தார்கள்.  அது ஒரு காரணம் அப்பா வாங்கி கொடுத்த வட்ட வாட்சை நான் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டதற்கு.

 என் திருமணத்தின் போது நல்ல தங்க கலர் ஸ்ட்ராப் வாங்கி அதில் மாட்டி வைத்துக் கொண்டேன்.  குடித்தன்ம் வைக்க திருவெண்காட்டிற்கு காரில் அழைத்துப் போகும்போது திருவெண்காட்டை சேர்ந்த  நண்பர் வீட்டு சிறு பெண் மடியில் படுத்துக் கொண்டு வந்தாள்/  அவள் தலை மேல் என் கையை வைத்துக் கொண்டு இருந்தேன் நான்.  அவள் திடீரென்று எழுந்ததில் அவள் தலைமுடியில் வாட்ச்  ஸ்ட்ராப் மாட்டிக் கொண்டு அறுந்து போனது.  எனக்கு அழுகை ஒருபக்கம் . அதை வெளிக்காட்டக் கூடாது அல்லவா புகுந்த வீட்டார் முன் ? அடக்கிக் கொண்டேன்.  என் கணவர் அப்புறம் கலர் கலராய் ஸ்ட்ராப்  வாங்கித் தந்தார்கள், மாற்றி மாற்றி போட்டுக் கொள்ளலாம் என்று. சென்னை பர்மா பஜாரில் அரக்கு கலர், கறுப்பு கலர் ஸ்ட்ராப்புகள்  வாங்கித் தந்து தங்ககலர் ஸ்ராப்பை விட இதுதான்  உனக்கு நன்றாக இருக்கும் என்று வேறு சொல்லி கொடுத்தார்கள். என்ன செய்வது? வாங்கி கொண்டேன்.

இரண்டு முறை அப்பா வாங்கித் தந்த வாட்ச் ரிப்பேர் செய்யப்பட்டது. ஒருமுறை வாட்ச் கடைக்காரரின் மகன், இது மிகவும் பழைய மாடலாய் இருக்கே . இதை ரிப்பேர் செய்ய முடியாது என்றார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த  அவருடைய  அப்பா,  கொடுங்கள் . என்ன வாட்ச்? டிட்டோனியா ?நல்ல வாட்ச் அல்லவா ! என்று சொல்லி, நான் ரிப்பேர் செய்து தருகிறேன் என்று ரிப்பேர் செய்து தந்தார், பழைய ஆட்களுக்கு தான் பழமையின் மதிப்பு தெரியும். இப்போது குழந்தைகள் இத்தனை வருடம் உழைத்து விட்டதா? ரிப்பேர் எல்லாம் செய்ய வேண்டாம் வேறு வாங்கி கொள்ளுங்கள் என்கிறார்கள்.


எனக்கு, மருமகன் அவர்கள் சிங்கப்பூர் சென்ற போது தங்க கலரில் கறுப்புடயல் வாட்ச் வாங்கி வந்தார் -ஓவல்ஷேப்பில்.  அது ஒரு முறை டெல்லியில் ஒருகடையில் சாமான் வாங்கப்போனபோது  பர்ஸோடு அந்த வாட்சையும் அந்த கடைமேசையில்  மறந்து வைத்து விட்டேன். (வாட்ச் செல் மாற்ற வேண்டும் என்பதால் பர்ஸில் வைத்து இருந்தேன். ) டெல்லியிலிருந்து சென்னை கிளம்ப ரயிலுக்கு போகும் போதுதான் நினைவு வந்தது. மகளிடம் சொன்னேன். அது எங்கே இருக்க போகிறது பார்க்கிறேன் என்றாள். நாங்கள் ஊருக்கு வந்து விட்டோம்.

மகளிடமிருந்து போன்.-- வாட்ச் கிடைத்து விட்டது என்று.

டெல்லியில் வெயிலினால் எனக்கு  அலர்ஜி வந்த போது ஒரு ஹோமியோபதி டாக்டரிடம் போயிருந்தோம். அந்த டாக்டர் கொடுத்த மருந்து  சீட்டு எனது பர்சில் இருந்திருக்கிறது. அந்த மருந்து சீட்டைப் பார்த்த கடைக்காரர் அதில் குறித்திருந்த டாக்டருக்கு  போன் செய்து கேட்டு இருக்கிறார். டாக்டர் தெரியாது என சொல்லிவிட்டார்.  ,இப்படி கடைக்காரர்  உடைவர்களிடம் பொருளை சேர்த்துவிட முயற்சிப்பது பெரிய விஷயம் இல்லையா!  எனது மகள் கடைக்குச் சென்று பர்சையும் வாட்சையும வாங்கி வந்து விட்டாள். கடைக்காரருக்கு நன்றி சொல்லி.

நல்ல மனம்வாழ்க என்று வாழ்த்த தோன்றுகிறது அல்லவா!

அவள் வாங்கி வந்த அந்த வாட்ச் மறுபடியும் என்ன ஆச்சு என்பதை   சொல்கிறேன் . என்னாச்சு!     அடுத்த பாராவுக்கு வாருங்கள்.

 மகன், மருமகள், உறவினர்களுடன் கங்கைகொண்ட சோழபுரம் போவதற்கு
கிளம்பினோம் .  என் மாமியார் நான் வீட்டில் இருக்கிறேன்.  நீங்கள் எல்லோரும் போய் வாருங்கள் என்று சொல்லி விட்டார்கள்.  போகும் வரை வேலை சரியாக இருந்தது . வளையல், வாட்ச்  எல்லாம் காரில் போகும் போது மாட்டிக் கொள்ளலாம் என்று எடுத்து சென்றேன். காரில் வளையலை மாட்டிக்கொண்டு வாட்சை கட்ட ஆரம்பிக்கும் போது போன் வந்தது வீட்டிலிருந்து அத்தை காலில் வெந்நீரை விட்டுக் கொண்டார்கள் என .
அப்புறம் பாதியிலேயே திரும்பி டாகடர்  இருக்கிறாரா என்று பார்க்க காரை விட்டு இறங்கி போய் பார்த்து வந்தேன். அவர் இருந்தார், வீட்டிற்கு வந்து அத்தையை டாகடரிடம் காட்டி மருந்து போட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டோம். பின் , அத்தை எங்களிடம் நீங்கள் கோவிலுக்கு என்று கிளம்பிவிட்டு போகாமல் இருக்க வேண்டாம் போய் வாருங்கள். என்று சொன்னார்கள்

 மறுபடியும் காரில் ஏறும்போதுதான் நினைவுக்கு வந்தது -வாட்ச்.  காரைவிட்டு இறங்கி டாக்டர் இருக்கிறாரா என்று பார்க்கும் போது மடியில் இருந்த வாட்ச் விழுந்து  விட்டிருக்கிறது . நான் கவனிக்கவில்லை.  மறுபடியும் டாகடர் வீட்டு வாசலில் போய் பார்த்தால் கிடைக்கவில்லை. அங்கு போக்குவரத்து அதிகம் உள்ள இடம்.  யாரோ அதிர்ஷ்டசாலிக்கு அன்று இறைவன் அதைப் பரிசளித்து விட்டார்.

’வாட்சை பத்திரமாக வைக்கத் தெரியவில்லை அவளுக்கு எதற்கு வாட்ச். என்று என்  அப்பாவிடம் அம்மா கேட்டது  நினைவுக்கு வந்தது.


எனது மகன் எங்கள் 60 கல்யாணத்திற்கு இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி  சில்வர் கலர் வாட்ச் பரிசு அளித்தான். அது இருக்கிறது ,இப்போது.






அமெரிக்கா போன போது  மறுபடியும் கறுப்பு டயல்  உள்ள தங்க கலர் வாட்ச் வாங்கி தந்தார் கணவர்.  உனக்கு தங்கத்தில் வாட்ச் வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தார்கள் .  பார்ப்போம் எப்போது வரும் என்று.

 எத்தனை இருந்தாலும் என் அப்பா முதல் முதலில் வாங்கி கொடுத்த வாட்ச் போல்  ஆகுமா! அந்த வாட்ச என்றும்   அப்பாவின் நினைவை சொல்லிக் கொண்டு என்னுடன் இருக்கும்..

யாருக்கு விருப்பமோ அவர்கள் இந்த தொடரில் பங்கு கொள்ளுங்கள்.
பாதுகாத்து வரும் பொருளைப்பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.
========================================================================                                                                    
                                                    வாழ்க வளமுடன்!




அபிராமி அன்னைக்கு ஓர் அழகிய அங்கி

$
0
0



திருக்கடவூர்த் தலச்சிறப்பு:
சிவபெருமானது அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாக திகழ்வது திருக்கடவூர். இப்போது திருக்கடையூர் என்கின்றனர். இக் கோவில் தருமபுர ஆதீனத்தை சேர்ந்த்து.  திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகி மூவரால் தேவாரம் பாடப்பட்ட சிறப்பு உடைய பாடல் பெற்ற ஸ்தலம்.பிஞ்சிலம்,(ஒருவகை முல்லைகொடி) ,வில்வமரம் ஆகியவற்றைத் தல விருட்சமாக கொண்டது. தேவர்களும்அசுரர்களும்  பாற்கடல் கடைந்த போது வினாயகரை வழிபடாத காரணத்தால் வினாயகர் இந்த தலத்தில் அமிர்தகுடத்தை மறைத்து வைத்துவிட்டாராம். அந்த அமிர்தகுடமே சிவலிங்கமான காரணத்தால் இங்குள்ள மூலவருக்கு அமிர்தம்+ கடம்= ”அமிர்தகடேஸ்வரர் ‘ என பெயர்.

அமிர்தகுடத்தை மறைத்தவிநாயகர் கள்ளவாரண பிள்ளையார் என்று
அழைக்கப்படுகிறார். இவர் மீது அபிராபி பட்டர் பாடல் பாடி இருக்கிறார்.

மஹாவிஷ்ணுவின் தியானத்தில் உண்டான சக்தியே அபிராமி அம்மை.

சிவபக்திக்காக தனது பக்தன் மார்க்கண்டனுக்கு என்றும் 16 வயது சிரஞ்சீவி வரம் அளித்து தனது இடது பாதத்தினால் எமனை உதைத்து சமஹ்காரம் செய்தார், பின்   பூமாதேவிக்காக எமனை அனுக்ரஹம் செய்த சிறப்பு ஸ்தலம்.

காலன் எமனை சம்ஹரித்த சிறப்பால், மிருத்யுஞ்ஜெயமூர்த்தியாக விளங்கும்இந்த சுவாமியை தன் 59 வயது பூர்த்தி 60 வயது ஆரம்பமான “உக்ரரத சாந்திக்கும் “60 வய்து பூர்த்தி 61 வயது ஆரம்பமான “சஷ்டியப்தபூர்த்தி” வைபவத்திற்கும் 69 வயது பூர்த்தி 70 வயது ஆரம்பமான “பீமரதசாந்தி” வைபவத்திற்கும் , 80 வயது  ஆரம்பமன “சதாபிஷேகம் “மற்றும் “ஆயிஷ்ய ஹோமம்”  ஜாதகரீதியான  மிருத்யுஞ்ஜெய ஹோமங்களுக்கு கலசங்களில் பூஜை செய்து ஹோமங்கள் செய்து  நலம் பெறுவது சிறப்புடையது.

சரபோஜி அரசர் காலத்தில் தனது பக்தனுக்கு தை அமாவாசை அன்று முழு
பெளர்ணமியாக்கி “அபிராமி அந்தாதி “ அருளச் செய்த சிறப்புடையது.
63 நாயன் மார்களில் குங்கிலிய நாயனார் காரிநாயனார் சிவத்தொண்டு ஆற்றி
அருள் பெற்ற ஸ்தலம்.

கார்த்திகை மாதத்தில்  வரும் (திங்கள்கிழமை) சோமவாரத்தில் 1008 சங்குகளால்  அபிஷேகம் நடைபெறுவது மிகச்சிறப்புடையது.

சித்திரை மாதம் மகநட்சத்திரத்தில் கால் சம்ஹார பெருவிழாவும், சித்ரா
பெளணமியில் தீர்த்த வைபவமும் இத் தலத்தில் நடைபெறும்.

ஒருமுறை சரபோஜி அரசர் கோவிலுக்கு வந்தாராம், அபிராமி அம்மனை தரிசிக்க. அப்போது அம்மன் கோவிலில் இருந்த அம்மன் மேல் மிக பிரியம் உள்ள அபிராமி பட்டர் என்பவர் இந்த உலகை மறந்து அம்மன் நினைவில் கண்மூடி இருந்தார். அப்போது ராஜா தான் வந்ததுகூட தெரியாமல் இப்படி இருக்கிறாரே என்று கோபப்பட அங்குள்ளவர்கள் அவர் அம்மன் நினைவில் தியானத்தில் இருக்கிறார் என்று சொல்ல, இன்று என்ன திதி என்று அரசர் கேட்க, அதற்கு அவர் மெய் மறந்த நிலையில் பெளர்ணமி என்று சொல்ல, அவர் இன்று அமாவாசை அல்லவா இவர் பெளர்ணமி என்கிறரே இன்று பெளர்ணமியைக் காட்டவில்லை என்றால்  தண்டனை என்ற போது அபிராமி பட்டர் தன்னை சொல்லவைத்தது  அன்னைதான் அவளே கதி என்று அபிராமி அந்தாதி பாட, தாய்  காட்சி கொடுத்து தன் காது தோட்டை எடுத்து வானத்தில் வீசி அமாவாசையை பெளர்ணமி ஆக்கினார் என்பது வரலாறு.




 தன் குழந்தைக்கு ஒரு கஷ்டம் என்றால் அன்னை இறங்கி வருவாள்
இல்லையா? வந்தாள்  அருளும் தந்தாள். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை  நாளன்று அனனை  அற்புதம் செய்த அந்த நாள் இங்கு கொண்டாடப்படுகிறது.

அன்னையின் நந்தவனம்


அன்னையின் நந்தவனம்


நேற்று. (09/02/2013) தை அமாவாசை ஆனதால் அந்த விழா அங்கு நடைபெற்றது. நேற்று மாலை நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.

அபிராமி சந்நிதியில் மலர் விதானம் அமைக்கும் பணி

அந்த விழாவில் 1000 குடத்திற்கு மேல் மக்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு
அபிஷேகம் செய்தார்கள். விளக்கு பூஜை நடந்தது. நவசக்தி அர்ச்சனை, இரவு
நடைபெறும் என்றார்கள். அம்மன் சன்னதியில் மலர் விதானம் அமைக்க பட்டது.நேற்று அற்புத காட்சியாக  அபிராமிஅம்மைக்கு  நவரத்தின அங்கி புதிதாக   செய்திருந்தார்கள். அம்மன் போன்ற உருவம் செய்து அதற்கு அந்த நவரத்தின  அங்கியை அணிவித்திருந்தார்கள். கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
நவரத்தின அங்கி அலங்காரம்-புறப்படுமுன்


நவரத்தின அங்கியுடன் புறப்பாடு

கண்கொள்ளாக் காட்சி

திருவீதி உலா

பலகோடி ரூபாய் மதிப்புடையதானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு. அம்மனுக்குச் சாற்றுமுன் இத்திருவுருவத்தை திருக்கோயிலினுள்ளும் திருவீதிகளிலும் எழுந்தருளி திருஉலா செய்தனர். அதுவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆதீனகர்த்தர்கள்,பக்தர்கள் முன்னிலையில் அம்மனுக்கு அங்கி சார்த்தும் வைபவம் நடைபெற்றது.

வாழ்க வளமுடன்.


மின்சாரமே ! மின்சாரமே !!

$
0
0

சாத்தூர் பஸ்நிலையத்தில் ஒரு  அறிவிப்புப் பலகை பார்த்தேன்.  அதை
உங்களுடன் பகிர எழுதி வைத்துக் கொண்டேன்.  போட்டோ எடுக்க காமிரா
அப்போது கையில் இல்லை.

காணவில்லை
ஊர்- தமிழ்நாடு
வயது- 200 ஆண்டுகள்
பெற்றவர்- பெஞ்சமின் பிராங்களின்
அடையாளம்- - மிகவும் பிரகாசமாக இருப்பார், தொட்டால் ஷாக் அடிப்பார்.
அருமை மின்சாரமே! உன்னை காணாமல் நாங்கள் வெகு நாட்களாய் அல்லல்
படுகிறோம். எப்போ நீ வருவாய் ? கண்ணில் நீரோடு காத்திருக்கிறோம்.
--இப்படிக்கு தமிழ்நாட்டு மக்கள்.

-எப்படி இருக்கு அறிவிப்பு!
நிலமை இப்படி ஆகிவிட்டது!

பூம்புகார் கல்லூரி முன்னாள்  முதல்வர் பேராசிரியர் ஆர்.எஸ்.மூர்த்தி அவர்கள் , தான்  எழுதிய ’வலைகள்’ என்ற புதுக்கவிதை தொகுப்புப் புத்தகத்தை என் கணவருக்குப் பரிசளித்தார்கள்.  (கவிதைத்  தொகுப்பு வெளியிட  பட்ட  ஆண்டு 1979) அந்தத் தொகுப்பில் மின்சாரத்தைப்பற்றி எழுதிய கவிதையை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். .  அவர் கல்லூரி அருகில் மேலையூரில்தான் வசித்து வந்தார். மின்சாரம் இல்லாமல் ஒருநாள் யார் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தார் என்று கவிதை எழுதி இருக்கிறார் பாருங்கள்!

உதவி
----------
மின்சாரக் கோளாறால்
மேலையூர் முழுவதும்
முக்காடு போட்டது போல்
இரவு மூடிக் கொண்டது
இருளால்
விண்மீன்கள் தெரியாமல்
மேகத்திரை வானில்
விரிந்தது எங்கும்
வழி தெரியவில்லை                        
                                                      ஓவியம்- அரசு
ஒளித்துளி
ஒன்று
வேலி ஒரம்
உட்கார்ந்திருந்தது
பனித்துளிப்போலப்
பளிச்சிட்டது
பக்கத்தில் சென்றுபார்த்தேன்
மின்மினிக் கண்மணி
மெல்லநகைத்தது
அன்னை இயற்கை
அளித்த மின்மினி அதனால்
மெல்ல நடந்து
இல்லம் அடைந்தேன்
மின்மினியின்
உதவிக்கு
                                                                                      என்னவிதம் நன்றி சொல்வேன்!

இன்னொரு பாட்டில்  மின்மினிகளைப் பாடுகிறார்:

மின்மினிகள்
மின் மினிகள்
மினி மின்னல்கள்
இரவை அலங்கரிக்க
இறைவன் செய்த
சின்னஞ் சிறிய
சீரியல் பல்புகள்!

என்று சொல்கிறார்.


பேராசிரியர்.ஆர்.எஸ். மூர்த்தி


சார் சொல்வது போல் மின்மினி பூச்சிகள் நாங்கள் முன்பு இருந்த திருவெண்காட்டிலும் நிறைய பறக்கும். சில சமயம் வீட்டுக்குள் வந்து விடும்.
நியூஜெர்சி போனபோது தோட்டத்தில் மின் மினி பூச்சியை பார்த்தபோது எனக்கு  திருவெண்காடு நினைவுக்கு வந்து விட்டது.  அங்கு ,இரவு  வீட்டுக்கு வெளியே தோட்டத்தில் கூட்டம் கூட்டமாய் அழகாய்ப் பறந்தது  இருட்டில் அந்த சின்ன சிறிய  மின் மினி பூச்சிகள் பறந்தது கண் கொள்ளாக்காட்சிகள்.

 ’நட்சத்திர இரவு’என்ற  பாடலில் மின்வெட்டைப் பற்றி அவர் கவிதை  பாடுகிறார்.

நட்சத்திர இரவு
இரவு மணி பத்து
மின்வெட்டால்
மின்விசிறி ஓடவில்லை
இயற்கை காற்றும்
இயங்கமறுத்தது
வெளியில் வந்து
விண்ணை நோக்கினேன்
என்ன அழகான
நட்சத்திர இரவு!
நீலமலையில்
வணண  மலர்காட்சி  போல்
வானமெங்கும்
நட்சத்திரங்கள்
பூத்துக் கிடந்தன
அப்பொழுது
ராக்கெட்டு ஒன்று
விரைந்துசென்று
மறைந்தது
நட்சத்திரங்களைப் பார்த்து
நான் கேட்டேன்;
“விஞ்ஞானிகளைப் பற்றி
நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்/ என்று
பிரதிநிதியாக
ஒருநட்சத்திரம் பேசிற்று:
“நவீன  விஞ்ஞானிகளா
அந்த ராக்கெட்டு ரவடிகளா?
அவர்கள் அரசியலுக்கு
அடிமைகளாகி
சுதந்திரமில்லா
துரும்புகளானார்கள்
அழிவுத் தொழிலுக்கு
ஆயத்தமான
ஆற்றல்கள் பெற்றார்
மக்களை மக்களால்
மக்களுக்காகப் பெருக்கி
மண்ணுலகை வீணாக்கிய
மனிதர்களை
விண் வெளிக் கோளங்களுக்கு
ஏற்றுமதி செய்ய
இந்த விஞ்ஞானிகள்
இறுமாப்போடு முயன்றதை
முன்னதாகவே உணர்த்த
இறைவன்
‘மக்களுக்கு வேண்டிய காற்று
மற்றக் கிரங்களுக்கு
இல்லாமல் போகக் கடவது’
என்றார்.
இனிமேல்
மண்ணுலகிலும் காற்று
மலிவாக கிடைக்காது
மின்சாரவிசிறிகளே மிஞ்சும்1
மெஷின்களின் அடிமைகள்
ஆண்டவனுக்கு எதிராக்
ஆர்ப்பாட்டம் செய்வதை
நாங்களும் விரும்பவில்லை
நாங்கள் நடத்தும்
நட்சத்திர இரவு
நன்கொடைக்காக அல்ல
தெய்வீக நன்மைக்காக’

மீண்டும் வந்தது

மின்சாரம்

நட்சத்திரங்களுக்கு
நன்றி சொல்லி
வீட்டிற்குள்  வந்து
விழுந்தேன் படுக்கையில்
நான்
நீரோடையில்
மிதப்பது போல்
நிம்மதியாக
உறங்கினேன்.
                                                                             ***

திருவெண்காட்டில் இருக்கும் போது அடிக்கடி மின்சாரம் போகும் இரவு
மின்சாரத்தை விவாசாயத்திற்கு மாற்றி விடுவார்கள் என்பார்கள். நான் 11வது
படிக்கும் போது அடிக்கடி மின்சாரம் தடை படும். மெழுகுவத்தி, சிம்னி
விளக்கின் உதவியுடன் படிக்க வேண்டும்.

திருவெண்காட்டிலில் இருந்து மேலையூர் 4 கிலோ மீட்டர். நகரத்திற்கு மாலை
முதல் இரவு  ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வயலுக்கு பம்புசெட்போட மின்சாரம் கொடுத்து விடுவார்கள். அப்போது கிராமத்து பெரியவர்கள் கரண்ட்
மாற்றுவதற்குள் வேலைகளை பார்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். 1981ல்
மாயவரம் வந்தோம் அப்போது தான் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது.  இங்கும் மழை விடாமல் பெய்யும் காலங்களில் மின்சாரத்தை தடை செய்து  விடுவார்கள். இப்போது மறுபடியும் மின்வெட்டு!  மின்சார தேவைகள் நமக்கு  அதிகமாக அதிகமாக இதைத் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது.

முன்பு எல்லாம் நெல் குத்தி புடைத்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள் ஆட்டுக்கல், அம்மிக்கல் ஓரளவு  பயன்பாட்டில் இருந்தது, இப்போது அவை எல்லாம் காட்சி பொருட்கள்.

வைத்திஸ்வரன் கோவிலில் ஓட்டல் சதாபிஷேகத்தில் கல்வெட்டு மாதிரி செய்து உரலில் குத்துவது திருகைக் கல்லில் அரைப்பது எல்லாம் ஓவியமாய் வரைந்து வைத்து இருக்கிறர்கள்,இக்காலக் குழந்தைகள் பார்க்க.







எங்கள் வீட்டிலும் ஒருநாள் மிக்ஸியில் தேங்காய் சட்னிக்கு அரைத்துக் கொண்டு இருந்தேன் ,கரண்ட் போய் விட்டது. வெகு நேரம் ஆகியும் வரவில்லை. மிக்ஸியில் உள்ளதை எடுத்து சின்ன ஆட்டுக்கல்லில் (இடிப்பதற்கு வாங்கியது) அரைத்தேன் சரி வரவில்லை   பிறகு சின்ன அம்மிக்கல்லில் ஒருவழியாக அரைத்து முடித்தேன்.





 பழைய காலத்து  மனிதர்கள் எப்படித்தான் மின்சாரம் இல்லாமல் சந்தோஷமாய் வாழ்ந்தார்கள் என்று தெரியவில்லை.
மின்சாரம் இல்லையென்றால் கண் போனது போல- கை ஓடிந்து போனது போல - எல்லோரும் தவித்துப் போகிறோம். தேவை இல்லாமல் மின்சாரம் வீணாவதைக்  குறைத்து மின்சாரத்தைச் சிக்கனமாய்ப்  பயன்படுத்தி மகிழ்வோம்.

                                                             வாழ்க வளமுடன்!

                                                       _______________________

மெல்ல மெல்ல விடியும் வைகறைப் பொழுது.

$
0
0

                                
                                        காலைப் பொழுது ---  நான் எடுத்த புகைப்படங்கள்
-



காலைப்  பொழுது மிகவும் ரம்மியமாய் இருக்கும்.  அதிகாலையில் எழுந்துகொள்வது கஷ்டம். ஆனால் எழுந்துகொண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.அதிகாலை  நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள். அந்த நேரம் செய்யும் பிரார்த்தனைகள் , ஜப, தவங்கள்,  உடலுக்கு சக்தி அளிக்கும் உடற்பயிற்சிகள் என்று எல்லாமே நன்மை பயக்கும்.

 ஆனால் காலையில் எழுந்து கொள்ள வேண்டுமே!

 காலை எழுந்துகொள்ள வேண்டும் என்றுஅலாரம் வைத்துக் கொண்டு படுப்பவர்கள் கூட அது அடிக்கும் போது அதன் தலையில் தட்டிவிட்டு மறுபடியும்  போர்வையை முகம்  முழுதும் மூடிக் கொண்டு  தூங்குவது உண்டு. 




இப்போது செல்போனில் அலாரம்  வைத்துக் கொண்டு படுப்பவர்கள், அது அடிக்கும் போது கை அனிச்சையாக  அணைத்துவிட்டு சுகமாய் தூங்குவது உண்டு.

என் மகன் காலையில் எழுப்பிவிடு அம்மா என்று சொல்லிப் படுப்பான்,
காலையில் எழுப்பினால்,  ’ அம்மா!   கொஞ்சம் நேரம் கழித்து ,
கொஞ்சநேரம் கழித்து ” என்பான். “ நீ தானே எழுப்ப சொன்னாய்!” என்றால் ,
நீங்கள் எழுப்பும் போது இன்னும் கொஞ்சம் தூங்க ஆசையாக இருக்கிறது,
அப்போதுதான் சுகமாய் தூக்கம் வருகிறது ” என்பான். அவன் எழுந்து
கொள்ளவேண்டிய நேரத்திற்கு முன்பே அவனை எழுப்ப
ஆரம்பித்துவிடுவேன்.  அவன்  எந்த நேரம் எழுந்து கொள்ள நினைத்தானோ
அந்த நேரம் சரியாக இருக்கும். அவனுக்கும் அது தெரிந்துவிட்டதால்
சிறிது நேரம் படுத்துக்கொண்டுவிட்டுதான் எழுந்துகொள்வான்.

முன்பு குழந்தைகள், கணவர் எல்லோரும்  எழுந்துகொள்வதற்கு முன், நான்
எழுந்து   தியானம், உடற்பயிற்சி, மற்றவேலைகள் என்று பம்பரமாய் சுற்றிய   உடம்பு கொஞ்சம்  மக்கர் செய்கிறது. செல்லில் நாலுமணிக்கு அலாரம் வைத்தால்,  அதைக் கேட்டு எழுந்து கொள் என்கிறது மனம்,  கொஞ்சம் படுத்துக் கொள் என்கிறது உடல்.  சில நேரம் மனம் சொல்வதை கேட்டு சுறுசுறுப்பாய் எழுந்துகொள்வேன். சில நேரம் உடல் சொல்வதை கேட்டுப் படுத்துக் கொள்வேன். எப்படி என்றாலும் ஐந்து மணிக்கு மேல் படுத்திருக்க முடியாது.  தொட்டில் பழக்கம் என்பார்களே அப்படி .என் அம்மா காலை எழுந்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

காலையில் மொட்டை மாடியில் என் வரவுக்குக்  புள்ளினங்கள் காத்திருக்கும்., காக்கா, புறா, தவிட்டுக்குருவி, புல்புல், மைனாவுடன் மற்ற ஜீவராசிகள் அணில், எறும்பு எல்லாம் காத்து இருக்கும்.  முதல்நாள் உணவை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து இருப்பேன்.  அதை விடியற் காலையில் பறவைகளுக்கு வைப்பேன். விடியற்காலையில் பறவைகள்  கூட்டில் தன் குஞ்சுகளை விட்டுவிட்டு, அதற்கு இரை தேடிப் பறந்து வரும்- அந்தநேரம்  உணவு அதற்கு மிகவும்  மகிழ்ச்சி அளிக்கும் .






ஒரு மண் பாத்திரத்தில் தண்ணீரும் வைத்து இருக்கிறேன். காலையில் கொஞ்சம் நடந்து கொண்டே பறவைகள் உண்ணும் அழகைப் பார்ப்பேன். அண்டங் காக்கா வந்தால், மற்ற பறவைகள் அது சாப்பிட்டுப் போகும் வரை பக்கத்தில் வராது,  காக்கா சாப்பிட்டு முடித்தால் புறா வரும். 


அதுவும் எந்த பறவையையும் பக்கத்தில் விடாது. கீழே சிந்துவதை சாப்பிடலாம் என்றால் அதையும் விடாது .கீழேயும்  வந்து துரத்தும். இக்காட்சியை என் கணவர் வீடியோ எடுத்துத் தந்தார்கள்.



                                           


 அப்புறம் அணில் , தவிட்டுக்குருவி, மைனா வந்து சாப்பிட்டது  போக மீதி இருக்கும் பருக்கைகளை எறும்பு இழுத்துப் போகும். சிறிது நேரத்தில் அந்த இடம் சுத்தமாகி விடும் !

மெல்ல மெல்ல சூரியன் வெளிக் கிளம்பும் அழகைப் பார்ப்பது மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கும்.  வானம் விடியல்காலையில் பார்க்க மிக ரம்மியமாய் இருக்கும்.

வானம் எனக்கு ஒரு போதி மரம் !
 நாளும்எனக்கு ஒரு செய்தி சொல்லும்” 

காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது -நீலக்
 கடல் அலையில் மயில் எழுந்து நடனம்புரியுது”

என்ற பாடல்கள் என் மனதில் ஓடும்.    கிளிக்கூட்டம் பறக்கும் ’கீச் கீச்’ என்ற சத்தத்துடன், கொக்கு வரிசையாய் பறக்கும்.  கிருஷ்ணபருந்து பறக்கும்,  மீன் கொத்தி, மரக்கொத்தி, வாலாட்டும் குருவி, கறுப்புக்குருவி., தேன்சிட்டு எல்லாம் பறக்கும். காலைப் பொழுது அருமையானது. அதை எல்லாம் பார்த்து மகிழ கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும் நாளும்.
மாணிக்கவாசகரும், ஆண்டாளும் பாடிய காலைப் பொழுதுப் புள்ளினப் பாடல்கள் எல்லோருக்கும் தெரியும், மாறுதலாய் காலை அழகைப்பற்றிய வாணிதாசன் கவிதை ஒன்றை இங்கு பகிர்கிறேன்.

       காலை அழகு

வெள்ளி முளைப்பினிலே - அழகு

துள்ளுது வான்பரப்பில்!-சிறு
புள்ளின ஓசையிலே - அழகு
பொங்கி வழியுதடி!

காலைப் பிறப்பினிலே - அழகு

கண்ணைக் கவருதடி! - சிறு
சோலைக் கலகலப்பில் - அழகு
சொரியுது உள்ளத்திலே!

சேவல் அழைப்பினிலே - அழகு
சிந்தையை அள்ளுதடி! - மன
ஆவல் அழித்துவிட்டால் - அழ
கானது நம்முடைமை!

தாமரை மொட்டுக்குள்ளே - அழகு
தங்கிக்  கிடக்குதடி! - கதிர்
சாமரை வீச்சினிலே - விரிந்து  
சஞ்சலம் போக்குதடி!

வீடு துலக்கும்பெண்கள் - குளிர்முகம்
வீசும் ஒளியழகில் - வான் 
நாடு விட்டு நகரும் - முழுமதி
நாணி முகம் வெளுத்தே!

பாரதியார் ’காலைப் பொழுது’என்று   பாடியுள்ளார்.

பாரதிதாசன் அதிகாலை பற்றிப்பாடி இருக்கிறார்.

பாரதியார் அக்கவிதையில் ஒற்றுமையைக் காண்கிறார் . பாரதிதாசன்  தன் பாடலில் உழைப்பைப் பற்றி  பாடுகிறார்.

இப்போது பரீட்சைக்கு படிக்கும் குழந்தைகள் காலை எழுந்து படித்தால் நல்லது , இரவு சீக்கீரம் தூங்கப்போய் அதிகாலை எழுந்து படித்தால், படித்தவை நினைவில் நிற்கும்.  நான் நன்கு படிப்பேன், நான் படிப்பது என் நினைவில் நிற்கும் ,நான் சிறப்பாய்த் தேர்வு எழுதுவேன், நல்ல மதிப்பெண்கள் பெறுவேன்என்று நாளும் மனதுக்குள் சொல்லிவிட்டுக் காலையில் படித்தால் படித்தவை  நினைவில் நின்று நன்கு தேர்வு எழுதமுடியும். எல்லா குழந்தைகளும் நன்கு படித்து நல்ல குழந்தைகளாய் வளர வாழ்த்துக்கள். குழந்தைகள் எல்லாம் அன்பும் கருணையும் நிறைந்து வாழ வேண்டும்.

நல்ல எண்ணத்தைக் காலையில் நினைத்தால் அது அப்படியே பலிக்கட்டும் என்று வானத்தில் உள்ள தேவதைகள் வாழ்த்துவார்களாம்!  நாமும் நாளும் வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் ! என்று நினைக்கலாம். வையகம் அமைதியாய் அன்பாய் இருந்தால் நாமும் அப்படியே இருக்கலாம் இல்லையா!.

                   
                                               வாழ்கவளமுடன்.


                                                    ---------------------

பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

$
0
0

மார்ச் 8ஆம் தேதியை மகளிர் தினமாய் நாம் கொண்டாடுகிறோம்.  சமுதாயத்திற்கு சேவை செய்த  சிறந்த பெண்மணி பத்மஸ்ரீ  கிருஷ்ணம்மாள் அவர்களை இந்த கட்டுரையில் வாழ்த்த விரும்புகிறேன்.








நாங்கள் கயிலைக்கு  புனிதப்பயணம் ஆரம்பித்தபோது 31.08.2011 அன்று நாங்கள் மயிலாடுதுறையிலிருந்து காலை 11 மணிக்கு சோழன் விரைவு ரயில் வண்டியில் சென்னைக்குப் புறப்பட்டோம்.    ரயிலில்  எங்கள் இருக்கைக்கு போகும் முன்பு ஒரு வயதான பெண்மணி இருந்த இருக்கையை தாண்டி போக நேரிட்டது. அவர்களை எங்கோ பார்த்தமாதிரி இருந்தது , அவர்களை ஏதோ பத்திரிக்கையில்(மங்கையர் மலர், அல்லது சிநேகிதி  என்று நினைக்கிறேன்) படித்து இருக்கிறேன் என்று என் கணவரிடம் சொல்லிக் கொண்டு இருந்த போது எனக்கு நினைவு வந்து விட்டது. அவர்கள்  சுதந்திர போராட்ட  வீராங்கனை, சமூக சேவகி  பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் ஆவார்.
கீழ்வெண்மணி கிராமத்து விவசாய  மக்களுக்கு அவர் தெய்வம் போல் என்று படித்தது நினைவு வந்தது.

அவர்கள் சில வெளி நாட்டு அன்பர்களுடன் வந்து இருந்தார்கள். செங்கல்பட்டுக்கு போகிறேன்  என்றார்கள்.  நாங்கள்  அவர்களை வணங்கி உங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி என்றோம்.  எவ்வளவு உயர்ந்தவர்கள் அவர்களுடன் நின்று பேசுவதே பெரிய பாக்கியம். அவர்கள் அவர்களைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை கொடுத்தார்கள் அதைப்படித்த போது அவர்கள் எவ்வளவு விருதுகள் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள், எவ்வளவு துன்பங்கள் பட்டு இருக்கிறார்கள் என்பது எல்லாம்  தெரிந்தது.

நிறைய விருதுகள் பட்டங்கள் எல்லாம் வாங்கியும் பெருமை கொஞ்சமும் இல்லாமல் மிக எளிமையாக நிறைகுடம் போல் ஒளிர்ந்த அவர்களை  போட்டோ எடுத்துக் கொள்கிறேன் என்று அவர்களை மட்டும் போட்டோ
எடுக்கப் போனேன். அவர்களுடன் வந்து இருந்த அயல்நாட்டுப் பெண்மணி நீங்கள் சேர்ந்து நில்லுங்கள், நான் எடுக்கிறேன் என்று அன்பாய்   எடுத்துக் கொடுத்தார்கள். அவர்களை பார்த்து வந்தபின் அடிக்கடி பொதிகை தொலைக்காட்சியில் அவர்கள் பேட்டி வைத்தார்கள். நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டேன். இதை முன்பே பார்த்து இருந்தால் அவர்களிடம் உங்களை பொதிகையில் பார்த்தேன் என்று சொல்லி இருக்கலாம். மன உறுதி நிறைந்த  சமூகசேவையை உயிர் மூச்சாகச் செய்த பெண்மணியை சந்தித்தது பற்றி  இந்த மகளிர் தினத்தில்  பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

”நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ” என்று தினமலர் குறிப்பிட்டு இருக்கிறது. படித்து இருப்பீர்கள். இருந்தாலும் இந்த பெண்கள் தினத்தில்  வீரமிக்க  பெண்மணிக்கு வணக்கம் சொல்ல மறுபடியும் படிக்கலாம் அல்லவா!

//"அந்த கூட்டத்தில் கல்யாண வயதில் இருந்த அந்தப் பெண் மட்டும் கழுத்தில், காதில், மூக்கில் என்று பொட்டு தங்க நகைகூட இல்லாமல், சாதாரண கைத்தறி புடவை அணிந்த நிலையில் எளிமையின் வடிவமாக காணப்பட்டார்'' என்று சுதந்திர போராட்ட தியாகியான ஜெகந்நாதனால் கைப்பிடிக்கப்பட்டவரும், தலித் சமூகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்தவரும், பூமிதான இயக்கத்தின் ஆணிவேராக இருந்தவரும், நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் சுவீடன் நாட்டால் வழங்கப்படும் "வாழ்வுரிமை விருது” பெற்றவரும்' இன்றைக்கு 94 வயதானாலும் தளரா மனஉறுதியுடன் காணப்படுபவருமான கிருஷ்ணம்மாளை இந்த கட்டுரை படம் பிடிக்கிறது

திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையில் 1926 ம் ஆண்டு பிறந்தவரான கிருஷ்ணம்மாள்தான் தமிழக தலித் இனத்தின் முதல் பட்டதாரி எனலாம்.கல்லூரியில் படிக்கும் போது எதிர்பாரதவிதமாக காந்திக்கு உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.,இதன் காரணமாக காந்தியத்தை கடைபிடிக்கத் துவங்கியவர், சர்வோதய இயக்கத்தில் பணியாற்றியவர், காந்தியவாதியான ஜெகந்நாதனை திருமணம் செய்துகொண்டவர்.

இந்த நிலையில் நாகை,கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்ட விவசாயிகள் எரித்துக்கொன்ற சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து நாகை வந்தவர் , பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற வேண்டி நாகையில் தங்கியவர் பின்னர் நாகை வாசியாகவே மாறிவிட்டார்.

அப்போது விநோபாவே நாடு முழுவதும் பூமிதான இயக்கத்தை நடத்திக்கொண்டு இருந்தார். இருப்பவரிடம் இருந்து நிலத்தை பெற்று இல்லாதவருக்கு வழங்கும் இந்த பூமிதான திட்டத்தை தமிழகத்தில் நடத்திச் சென்றவர் கிருஷ்ணம்மாளாவார். தமிழகத்தில் மட்டும் 1 லட்சம் ஏக்கர் நிலத்தை பெற்று ஏழைகளுக்கு வழங்கினார்.

எவ்வளவுதான் உழைத்தாலும், எத்தனைகாலம் உழைத்தாலும் அரைப்படி நெல் கூடுதலாக கிடைத்தால் அதிசயம் என்று எண்ணியிருந்த உழவர்களுக்கு, சொந்தமாக உழைத்த மண்ணே கிடைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இந்த விஷயத்தை அசாதாரணமாக கிருஷ்ணம்மாள் நடத்திக்காட்டினார்.

நில மீட்பிற்காக தொடங்கப்பட்ட "லாப்டி' இயக்கத்தை விரிவுபடுத்தி விவசாய தொழிலாளர்களின் குடும்பத்தினர் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளுதல், பாய் நெய்தல், மேல்படிப்பு படித்தல் என்று வலுவான,வளமான வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.

இதை எல்லாம் செய்யும் நாங்கள் தேவதூதர்கள் அல்ல,கொள்கைகளை மட்டுமே உதிர்க்கும் அரசியல்வாதிகளும் அல்ல, காந்திய சிந்தனையில் ,விநோபா வழியில் கிராமங்கள் உயர கிராமமக்கள் விழிப்புணர்வு பெற எங்களால் முடிந்த அளவு முயற்சிக்கிறோம்.,இந்த முயற்சி ஆங்காங்கே பலரால் மேற்கொள்ளப்பட்டால், நம் தேசம் ஏழைகளும், கோழைகளும் இல்லாத நல்ல கொள்கைப் பிடிப்புள்ள தேசமாகும் என்பதே எங்களது நம்பிக்கை, அந்த நம்பிக்கையை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறோம் எனும் கிருஷ்ணம்மாளின் பாதையில் தடைக் கற்களும்,முட்களும் மிக அதிகம், உடம்பிலும்,மனதிலும் பட்ட காயங்கள் இன்னும் அதிகம்.,ஆனால் இதையெல்லாம் சொல்லி எந்த நிலையிலும் பச்சாதாபத்தை பெற விரும்பாதவர் இவர்.

நாடி நரம்பு தளர்ந்து கயிற்றுக்கட்டிலில் எழுந்து உட்காரக்கூட ஆள் துணை தேடும் 82வயதில்தான் இவர்,விளைநிலங்களை உப்பளங்களாக மாற்றும் இறால் பண்ணையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் மேற்கொண்டார். இதற்காக இவர் குடியிருந்த வீடு தீவைத்து எரிக்கப்பட்டது, கூட இருந்தவர்கள் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். இப்படி சொல்லமுடியாத சிரமங்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சுப்ரீம் கோர்ட்வரை சென்று போராடியவர்.

விவசாய மண்ணையும்,விவசாய மக்களையும் இவர் நேசித்த அளவிற்கு நாட்டில் யாரும் நேசித்து இருப்பார்களா என்பது சந்தேகமே,இதனால் அனைவராலும் "அம்மா' என்றழைக்கப்படுபவர்.

கத்தியின்றி,ரத்தமின்றி சாதிக்கமுடியும் என்பதன் அடையாளமே கிருஷ்ணம்மாள் என்று வெளிநாட்டு எழுத்தாளர் ஒருவர் இவரைப்பற்றி எழுதிய புத்தகத்தில் வியந்து பாராட்டி எழுதியுள்ளார்.

தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக இல்லாத விவசாயிகளுக்கு நிலம், வீடு, கல்வி, வேலைவாய்ப்பு என்று நிகழ்காலமாகவும்,எதிர்காலமாகவும் விளங்கும் கிருஷ்ணம்மாளுக்கு சுவீடன் அரசு தனது நாட்டின் மிக உயர்ந்த விருதான "வாழ்வுரிமை விருது' வழங்கி கவுரவித்துள்ளது.

சிலருக்கு விருதால் பெருமை
சிலரால் விருதிற்கு பெருமை
கிருஷ்ணம்மாள் சந்தேகமில்லாமல் இரண்டாவது ரகம்.
-எல்.முருகராஜ்.//


இரு காந்திகள்
இக் கட்டுரை ஜெயமோகன் எழுதி இருக்கிறார்.


இந்த லிங்கில், கத்தியின்றி ரத்தமின்றி ! என்ற புத்தகத்தின் மதிப்புரை வந்திருக்கிறது.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்- சுதந்திர போராளியின் வீரவரலாறு இதில் கூறப்படுகிறது.

திருமதி . கிருஷ்ணம்மாள்  அவர்களின் கணவருக்கு  நினைவாற்றல் குறைந்து வருவதாகவும்   உடல் நலிவுற்ற கணவரை அன்பாக  பார்த்துக் கொண்டார்  என்று பத்திரிக்கை மூலம் அறிந்து கொண்டேன்.
போன மாதம் பிப்ரவரி 12ம் தேதி திரு ஜெகந்நாதன் அவர்கள் மறைந்தார் அப்போது அவருக்கு வயது 100 . திரு ஜெகந்நாதன் அவர்களின் புகழை விவசாயிகள் காலம் முழுவதும்  சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

திருமதி. கிருஷ்ணம்மாள் அவர்கள் மனம் தளராமல் தன் பணியைத் தொடர இறைவன் அவர்களுக்கு மனபலத்தையும், உடல் நலத்தையும் அருளவேண்டும்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.


                                                       ----------------------------
Viewing all 739 articles
Browse latest View live